அ17_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்
கொல்லை துளசி எல்லை கடந்தால் 17_1
எல்லாவற்றிற்கும் ஒரு காலமுண்டு. அழ ஒரு காலமென்றால்.. சிரிக்க ஒரு காலம்! மழைக்கு ஒரு காலம்… வெயிலுக்கு ஒரு காலம்! விதைக்க ஒரு காலம்.. அறுவடை செய்ய ஒரு காலம்!
Advertisement
அப்படி தான் கற்றிருந்தான் மனோவா எபினேசர். அதனால் படிக்க ஒரு காலம்.. அதில் காதலுக்கு இடமில்லை என்று தெளிவாகத் தான் இருந்தான், அலர்விழி என்ற பெண்ணை காணும் வரை.
அவன் கேட்டு வரவில்லை விழி மீதான காதல். ஆசை தான் அவளோடு பேசப் பழகி கைக்கோர்த்து சுற்ற… ஆனால் சூழ்நிலை சரி இல்லை. அவனுக்கு காதலிக்கும் வயதென்றாலும் அவள் அதற்கான வயதை எட்டியதாக அவனுக்கு அன்று தோன்றவில்லை. அன்று அவளுக்காக.. அவனுக்காக.. அவர்கள் படிப்புக்காக விலகி நின்றான். விலகி நிற்க முடியும் என்று நினைத்தான். அது சரி என்று நினைக்கக் காரணம் இருந்தது. அவர்கள் உடல்கள் மட்டுமே பிரிந்திருக்க மனம் ஒன்றியிருந்தது.
Advertisement
Advertisement
என்ன மாயமோ.. அவர்கள் உடல் விலகினாலும் அவள் அவனை மறக்கவும் இல்லை அவனால் அவளை மறக்கவும் இயலவில்லை. இருவருக்கிடையே மதில் சுவர் எழவும் எபினேசரின் எண்ணம் அடிவாங்கிப் போனது.
அன்றும்.. கடைசியாக அவள் பேச்சில் அவனைத் தள்ளி நிறுத்தவில்லையே.. யாரோ ஒருத்தர் நிச்சயத்திற்கு தானே போகப் போவதாய் கூறினாள். படுக்கப் போகும் போழுது அவள் நினைவில் தானே கண்ணயர்ந்தான். தனக்கு மறு நாள் என்றாலும் அவளுக்கு அதே நாள் தானே.. அதற்குள் அவன் யார் நடுவில்?
Advertisement
அப்படி அவர்கள் வீட்டில் திருமண பேச்சு ஆரம்பித்திருந்தால் அவள் ஒரு வார்த்தையேனும் கூறி இருக்க மாட்டாளா? அதனால் தானே அவனும் அந்த ஆடவன் பேச்சை அன்று நம்பவில்லை.
ஆனால் இரண்டு மாதங்கள்.. முழுதாய் 60 நீண்ட கொடிய நாட்கள் அவள் அவனோடு பேசவே இல்லை என்றதும் மனோவிற்கு கொஞ்சம் உதறல் எடுக்கத் தான் செய்தது. ‘அவன் கூறியது உண்மையாய் இருந்தால்?’ என்ற சந்தேகம் தான் அவனைக் கலங்கச் செய்தது!
அப்படியே அலர்விழிக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருந்தாலும் அவள் விருப்பம் கேட்பார்கள்.. அவள் மனதில் தான் இருக்க.. அவள் எப்படிச் சம்மதிப்பாள் என்று நினைக்கவும் செய்தான்.
ஏனோ அதன் பின் அவனால் தள்ளியிருக்க முடியவில்லை. தன்னை நம்பி கொடுத்த வேலையை கூட அந்தரத்தில் விட்டுவிட்டான். அன்வருக்கும் தனக்கு வேலை செய்ய வாய்ப்பு கொடுத்த நிறுவனத்திற்குச் செய்த நம்பிக்கை துரோகம் என்று தோன்றியது. இவன் விலகினால் அவர்கள் டீம்மில் இருப்பவர்களுக்கு எவ்வளவு பிரச்சினை என்று தெரிந்தே வேலையை விட்டான்.
ஜூன் இரண்டாம் வாரம் கல்லூரி திறக்கும் என்று தெரியும்.. கல்லூரி திறந்த அடுத்த மாதம் சென்னை வந்தவன்.. விழியைக் காண தவித்த தவிப்பு தான் என்ன?
தன் ஜீவனை கையில் தேக்கி அவள் வருகைக்காகக் காத்திருக்க.. அவளும் வந்தாளே கணினி மையத்திற்கு!
அவள் அவனைப் பார்க்காவிட்டால் என்ன? அவன் பார்த்தானே.. சிறுவன் போல் துள்ளிக் குதித்தானே… புதியவள் ஒருத்தியோடு பேசிக்கொண்டே வர.. கண்ணாடி தடுப்பிற்குப் பின் இருந்து கைப்பேசியில் அழைக்க.. என்ன மாயம் அவள் கைப்பேசி சிணுங்கியது அவன் காதிலும் விழுந்தது.
சில நொடிகள் அந்த திரையை அவள் வெறிக்க… அவனுக்கு இந்த இரண்டு மாத அவஸ்தை நினைவில் வந்தது. இதே எண்ணிற்கு தானே அழைத்தான்.. பத்தாயிரம் முறை. அன்றெல்லாம் எடுக்கப் படவில்லையே…
கைப்பேசியை தொலைத்திருப்பாள் என்று எண்ணித் தானே ஒரு மாதமாக புது எண்ணிலிருந்து அழைக்கவில்லை! இன்று அதே கைப்பேசி.. அதே எண்ணோடு அலர்விழி கையில்! “ஹலோ..” என்ற அவள் சத்தம் உள்ளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்திய அதே நேரம் உள்ளத்தை உடைக்கவும் செய்தது.
‘புது நம்பர்ன்னா எடுப்பாளா? நான்னு தெரிஞ்சா பேசுவாளா? மாட்டாளா’ அவன் சிந்தனையில் மூழ்கி எழுந்து.. “விழி” என்று அழைக்கும் பொழுது அவள் கைப்பேசியை அணைத்து மேசை மீது வைத்துவிட்டாள்.
‘எங்கேயோ ஏதோ தப்பு நடந்திருக்கு.. அவட்ட பேசினா தெரிஞ்சுடும்! பேசு டா..’ இரண்டு நிமிடம் நிதானித்தவன் மீண்டும் அழைக்க.. அதிகப் பிரசங்கி தோழி தான் எடுத்தாள்.
“மனோ பேசறேன்னு சொல்லுங்க”, என்று கண்ணாடிச் சுவருக்கு பின்னிருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தான். அவன் பெயர் கேட்டதும் முகம் மலர்வாள் என்று அவன் நினைக்க.. அந்த பெயருக்கே அவள் முகம் எரிச்சலைத் தத்தெடுத்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை கைப்பேசி இல்லாமலே கேட்கும் தூரத்தில் தானே அவன் நின்றது.
அவள் முக பாவம்.. அதிலிருந்த அருவருப்பு.. ‘இன்றும் இவனா?’ என்ற சலிப்பு! மனம் உடைந்து போனான். இது அவன் விழி இல்லை! கடனே என்று ஒரு சல்வார்.. கழுத்தில் அதே பழைய மெல்லிய சங்கிலி.. விரலில் ஒரு புது மோதிரம்.. அதே அலர்விழி தான்! ‘கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லு’ என்று அவ்வளவு பெரிய பொய் அவசியமா?.
‘வீட்டில வரன் பாத்துவிட்டாங்களா? அதனால தான் இந்த ஒதுக்கமா? காதல முன்னமே சொல்லி இருந்தா காத்திருப்பாளோ?’ மனம் கேள்வி மேல் கேள்வி எழுப்பி அவனைப் புரட்டி எடுத்தது.
“ஏன் விழி..? ஃப்ரெண்டா கூட வேண்டாம்ன்னு என்ட்ட சொன்னா ஒதுங்கி இருப்பேனே..”, நினைத்துக் கொண்டே வெளியில் சென்றவன் தான். அதன்பின் இன்று தான் பார்த்தான் அலர்விழியை.
அதன் பின் வந்த நாட்கள் நெருப்பைத் தொட்டு மீண்ட நாட்கள். உவப்பாய் இல்லை. அப்பா அம்மா என்ற இருவர் முகம் கண்டு கசந்த வாழ்வை இழுத்துப் பிடித்து நகர்த்திக் கொண்டிருக்கிறான் என்றால் மிகையாகாது. மனதளவில் தனித்துப் போனான்.
அவனோ அவளால் வாழ்க்கை கசந்து நிற்க, அருவருப்பைக் கொட்டிய அதே முகம் இன்று அவனைக் குற்றம் சாட்டுகிறது. இன்றைய நிலையில் எபி என்பவனுக்குக் காதலும் புரியவில்லை.. அதை அவனுள் இறக்கிய பெண்ணையும் புரியவில்லை!
இனி காலம் தான் அவன் காயத்தை ஆற்ற வேண்டும்!
நான்கு மாதங்களாக அவனை ஆக்கிரமித்த பாடல் இசைத்தது. பாடல் வரிகளின் இன்றும் அவளைக் கண்டான்.
சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ..
நான்கு மாத சோகத்தில் கண்கள் மூடி நீந்திக் கொண்டிருந்தவனை அம்மாவிடமிருந்து வந்த அழைப்பு எழுப்பி விட்டது.
“என்ன மா?”
“பெட்டி அடுக்க வேண்டாமா? எப்போ வர?”
“எதையாது எடுத்து வைங்க! காலைல 3:30க்கு ப்ளைட். ஒரு மணிக்கு தான் வர முடியும்.”
“ஏன் ஃப்ளைட்ட மிஸ் பண்ணலாம்ன்னு ப்ளானா?”
“பச்”
“பஜ்ஜி போடறேன்.. டீ குடிக்க வா டா..”
“மா…”
“சரி விடு. நைட் சாப்பிடவாது வா டா.”
“ஃப்ரெண்ட்ஸ் கூட பார்ட்டி இருக்குமா.. பன்னெண்டுக்கு வர பாக்கறேன். நீங்க படி ஏறிடாதீங்க. சாமான் ஹால்ல இருக்கட்டும்.. நான் எடுத்து பெட்டியில போட்டுக்குறேன்..”
“என்னவோ போடா. கொஞ்ச நாளா நீ நீயாவே இல்ல. உன் பிரச்சனையைச் சொல்ல முடியாத அளவுக்கா நாங்க தள்ளி இருக்கோம்? அம்மாட்ட சொன்னா.. என்னாலானத செய்ய மாட்டேனா எபி. என் மேல நம்பிக்கை இல்லியா டா? உன் சந்தோஷம் தானே எங்க நிம்மதி… அந்த அபிகெயில் பொண்ண ஏதும் விரும்பறியா? அவ தான் உனக்கு சந்தோஷம்ன்னா.. எனக்கும் சரி தான் எபி..”
“மா… மா மா மாஆஆ அவ ஃப்ரெண்டுமா! எங்களுக்குள்ள ஒன்னும் இல்ல மா. எனக்கும் ஒன்னும் இல்ல மா.. நல்லா இருக்கேன். தேவ இல்லாம கவலபட்டு உடம்ப கெடுத்துக்காதீங்க. சாப்ட்டு படுங்க. ஒரு மணிக்கு கிளம்பும் போது எழுப்பறேன்..”
கைப்பேசியை அணைத்த பின்னும் அவர் முகம் தெளியவில்லை. அனைத்தையும் கேட்டுக் கொண்டிருப்பவளுக்கும் ஒன்றும் புரியவில்லை. ஏன் இவன் தன்னையும் வருத்தி பெற்றவர்களையும் வருத்திக் கொண்டு சுற்றுகிறான்?
தன் மேல் இவனுக்கு என்ன கோபம்? இரண்டு மாதங்கள் அவன் அழைப்பை ஏற்காமல் போனதில் தப்பாக நினைத்து விட்டானோ? எங்கோ இடித்தது. ஒன்றும் விளங்கவில்லை. எஸ்தரிடம் அவன் எண்ணை வாங்கி பேசினால் என்ன என்று தோன்றியது. ஆனால் எப்படிக் கேட்க.. என்ன என்று கேட்க? ஹப்பா.. ஒருதலை காதலே இவ்வளவு கொடுமையா? இன்னும் என்னவெல்லாம் காண வேண்டுமோ என்றிருந்தது.
அவர் தேநீர் தயாரிக்க செல்லவும்.. இவனிடம் எப்படியேனும் பேச வேண்டுமே என்ற தவிப்போடு நித்திய மல்லி பந்தல் பக்கம் சென்றாள் தனிமை தேடி.
மலர தயராகிக் கொண்டிருந்த மொட்டை பறிக்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் சென்றது.
தயக்கத்தை தள்ளி வைத்து.. நடுக்கத்தை மறைத்து, “ஆண்டி உங்க செல்.. தருவீங்களா.. பேசணும்”, என்று கடித்துத் துப்பி வாக்கியம் அமைத்தாள். அவர் எதற்கு? யாரிடம் பேச என்று ஏதேனும் கேட்டுவிட்டால்? உதறல் எடுத்தது.
அவர் ஏன் என்ன என்றெல்லாம் கேட்கவில்லை. “அதோ அங்க இருக்கு எடுத்துக்கோ மா”, என்றுவிட்டார்.
“பாஸ்வர்ட் கேக்குது ஆண்டி. போட்டு கொடுங்களேன்..”, என்று அவரிடம் நீட்ட…
“ஜீசஸ்8”, என்றார்.
மற்ற நேரம் என்றால் கேட்டிருப்பாள்.. ‘இதுலயும் ஜீசஸ் தனா ஆண்டி என்று!’. ஆனால் இன்று கேட்கவில்லை.
கைப்பேசியோடு பந்தல் பக்கம் நகர்ந்தாள்.
அழைக்கவா வேண்டாமா.. பட்டி மன்றம் நடத்தினாள். நேரம் கடந்தது. தலைவர் இல்லாத பட்டிமன்றம் என்பதால் தீர்பு சொல்ல நாதியில்லை என்றதும் அழைக்கத் துணிந்தாள்.
கால் ஹிஸ்டரியில் சென்று பார்த்தாள். ‘எபி-அமெரிக்கா’விடம் தான் கடைசியாகப் பேசியிருந்தார். இந்த எண் புதிது.. அவளிடம் இல்லை! எச்சில் விழுங்கி அழைத்தாள். கை நடுங்கியது. தவறு செய்கிறேனோ? மனம் நெருடியது! ஆண்டிக்குத் தெரிந்தால் என்ன நினைப்பார்.. அணைத்துவிடலாம் என்று அவள் நினைத்து முடிக்கும் முன் அழைப்பை ஏற்றிருந்தான் மனோ!
“ம்மா..”
“..” என்ன பேச..? ஐயோ.. ஒட்டு மொத்த மூளையும் செயலிழக்கும் நேரமா இது?
“ம்மா?”
“..” எச்சில் விழுங்கினாள். கனத்த மூச்சுக் காற்று மட்டுமே வெளி வந்தது.
“விழி..?”
“..” தொண்டை அடைத்து இம்சித்தது.
நிமிட நேர அமைதி இருபக்கமும்!
“விழி..?”
“ம்..ம..னோ..”
