Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ19 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் – 19

 

 

உரிமைகள் பலவிதம்!



Advertisement

 

சிலரிடம் சட்டென்று அதிக உரிமை வந்துவிடுகிறது. அதனால் அவர்களோடு பேசத் திக்கவோ திணறுவதோ இல்லை. சிலரிடம் உரிமை இருக்கும்.. ஆனால் பேச்சு வாராது.

 

Advertisement

“என்ன டி பண்ணிட்டு இருக்க இந்த இருட்டுல நின்னு?”

Advertisement

 

பார்க்கும் காட்சியை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை மாதவனால்.

 

Advertisement

“.. ண்ணா”, ஒற்ற வார்த்தை வெளிவரத் திக்கியது நகுநாவிற்கு!

 

எந்த அண்ணனுக்குத் தான் சகிக்கும் ஒதுக்குப்புறத்தில் நின்று தங்கை புகைப்பிடிக்க பழகுவது?

 

“நகுநா!?”, அப்படி ஒரு கோபம் மாதவன் உச்சரிப்பில்.

 

“அவங்க தான் ண்ணா..”, பெண் பயத்தில் உளறி கொட்டினாள்.

 

மாதவன் என்று தெரிந்து தான் வினோ நகுவோடு விளையாடினான். ஆனால் இப்படிச் சிறு பெண் அவனை கோர்த்து விடுவாள் என்று நினைத்தானில்லை. அவள் இன்னும் உலகமறியாத சிறுமி என்று யார் அவனிடம் கூறுவது. அது தான் அவனை அவளிடம் ஈர்த்தது என்றாலும்.. இது?

 

“அவங்கன்னா? யாரு டி..”, பல்லைக் கடித்து வார்த்தையை துப்பினான் அதன் இடுக்கின் வழியே.

 

“ண்ணா..”, பெண்ணிற்குத் தவறு செய்து பழக்கமில்லை. இப்படி கையும் களவுமாகப் பிடிபட்டும் பழக்கமில்லை. பழகி இருந்தால் இருட்டில் அத்தானைத் தேடி வந்திருக்க மாட்டாள்.

 

கையிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கி கீழே போட்டு நசுக்கும் வேகமே பெண்ணுக்குக் கீலி பரப்பியது.

 

“யாருடி அந்த கொழுப்பெடுத்தவன்?”

 

“நான் விரும்பறேன்னா.. அது தான்..”

 

பட்டார் என்று பின்னந்தலையில் ஒன்று விழுந்தது.

 

“வயசு பொண்ணாச்சேன்னு பாக்கறேன்… எனக்கு வரக் கோபத்துக்கு..! எந்த கழிசடை அவன்?  சின்ன பொண்ணுக்கு சிகரெட்ட பழக்கறவன்.. எவன் அவன்..”, பல்லைக் கடித்தான் தமையன்.

 

“இல்ல.. ண்ணா. சும்மா விளையாட்டுக்குத் தான்..”

 

“இது ஒரு விளையாட்டா? பொறுக்கி! யாரு அவன்னு நான் கேட்டுட்டு இருக்கேன்! நீ வாய திறக்க போறியா இல்ல என் கோவத்த கிளறிட்டே இருக்க போறியா?”, இப்படி எல்லாம் கூட அண்ணனுக்குக் கோபம் வருமா? இன்று தான் பார்க்கிறாள்! தங்கை என்றால் பாசமும் வரும் கோபமும் வரும் பெண்ணே!

 

“அத்தான்! அத்தான் ண்ணா.. ப்ளீஸ் ண்ணா அவங்கள ஒன்னும் சொல்லாத…”

 

ஒரு நிமிட அமைதி. “எந்த அத்தான்?”, புருவம் வளைந்து நெளிந்தது. உள்ளுக்குள் அவனுக்கு உதறல். சின்ன பெண்ணிடம்  விளையாடுகிறானா? தப்பானவனாக இருக்கக் கூடாதே என்ற வேண்டுதல்.

 

“வினோ த்தான்!”

 

ஒரு ஓரத்தில் நிம்மதி! இருந்தும் அவனிடம் கேட்க வேண்டும். இது விளையாட்டா இல்லை உண்மையிலுமே காதலா என்று!

 

“அவன் சொன்னானா உன்ன விரும்பறதா?”

 

“ம்ம்” மண்டை படு வேகமாக ஆடியது.

 

“அவன் ஊருக்கு வந்தே மூனு நாள் தான் ஆகுது. நீ எப்போ பார்த்த?”

 

“நிச்சயம் போதே சொல்லிட்டாங்க!”, அழகாக ஒப்பித்தாள்.

 

“ஓ..”

 

“ண்ணா..”

 

“ம்ம்?”

 

“அம்மாட்ட மாட்டி விட போறியா?”

 

சிரிப்பை அடக்க முடியவில்லை. “ஏன் சொன்னா என்ன?”

 

“ண்ணா..?”

 

“போடி.. நேரா ரூம்க்கு போ! நீ இங்க சுத்தறது சித்திக்கு தெரியணும்… கால உடச்சு கையில குடுத்துடுவாங்க!”

 

“ண்ணா..”

 

“நாளைக்கு மட்டும் உன்ன அவனோட பாத்தேன்… ஜாக்கறத!”

 

“அம்மாட்ட சொல்லப் போறியா?”

 

“நீ ஒழுங்கு மரியாதையா போய்டு.. இல்ல இப்போவே சொல்லிடுவேன்..”

 

பெண் ஓட்டம் பிடித்தாள்.

 

மாதவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

 

 

அர்ச்சனா வெட்ஸ் சுரேந்தர்:

 

மணமேடையில் மாப்பிள்ளை மட்டுமே அமர்ந்திருந்தார், மந்திரத்தை ஐயரோடு கூறிக்கொண்டு. பெண் புடவை மாற்றச் சென்றிருந்தாள். எப்பொழுதும் போல் வசந்தியும் நகுநாவும் அர்ச்சனாவோடு! அண்ணன் கண்களில் தென்படாத போது நகுவின் விழிகள் வினோத்தைத் தேடியது. அவன் அவளைப் பார்க்கும் வேளை மட்டும் மறக்காமல் முறைத்தாள்.

 

வரவேற்பில் அம்பிகாவின் சொந்தத்திலிருந்த இரண்டு பெண்களோடு அலர்விழியும் நின்றிருந்தாள். அதிக பழக்கமில்லை என்றாலும் பழகிக் கொண்டனர்.  மாப்பிள்ளை தோரணையில் சுற்றி கொண்டிருந்த மாதவனை வஞ்சனை இல்லாமல் ஒருத்தி சைட் அடிக்க… புது தோழிக்கு உதவ எண்ணி.. “ண்ணா.. இங்க வாயேன்..”, என்று மாதவனை இழுத்துவிட்டாள் அலர்.

 

“என்ன அலர்..”, வந்து வரவேற்பு மேசை முன் நின்றவன் சட்டையின் முகுது பகுதியைத் தளிர் கரம் ஒன்று இழுத்தது.

 

“அலர் இங்க வாயேன்..”, சத்தம் கேட்ட திசை நோக்கி அலர்விழி சென்றுவிட, மாதவன் மெல்லத் திரும்பிப் பார்த்தான். குட்டி தேவதை ஒன்று பொக்கை வாய் காட்டி சிரித்தது. தேவதையே தான்.. அம்மாவின் பளிங்கு தோளில் ஜொள்ளை ஊற்றிக் கொண்டு நான்கு மாதமே ஆன புத்தம் புது இளம் சிவப்பு ரோஜாவாய், குட்டி தேவதை. ஒற்றை கை முஷ்டி வாய்க்குள் போய் வர.. மற்றது காற்றில் அலைந்தது.. எதிரில் இருப்பவனை தொட.

 

யாருக்கு ஆசை வராது அந்த குட்டி ரோஜாவைப் பார்த்து? கை நீட்டினான் மாதவன். விரலைப் பிடித்துக் கொண்டாள் குழந்தை. ஏதோ அவனுக்குள் ஒரு தாக்கம். விரலை விட்டுக் கொடுத்தான்.. பட்டென்று இழுத்து வாயிலிட்டு சூப்பவும் இனம் தெரியாத உணர்வு. சிரித்தாள் குட்டி ரோஜா. அவன் விரல் வழி எச்சில் பாய்ந்தது. “கை அழுக்கு டா தங்கம்” என்று மெல்ல உருவ.. அந்த குட்டி செவ்விதழ் பிதுங்க ஆரம்பித்தது.

 

அதற்குள் அவனுக்கு முதுகைக் காட்டி நின்றவள் திரும்பினாள். குழந்தை ஏன் குட்டி தேவதையாகத் தெரிந்தாள் என்பது புரிந்தது.

 

“அபிகேல்?”, வாடாமல்லி நிற பட்டில்.. வாடா அழகோடு மிளிர்ந்தவளைக் கண்டதும் அலர்விழி வாய் முணுமுணுத்தது.

 

“ஹாய்.. அலர்விலி..”, வெண்முத்துகள் பளிச்சிட அழகாய் சிரித்தாள் பெண்.

 

“ப்லெசன்ட் சர்ப்ரைஸ். பொண்ணு வீடா.. மாப்பிள்ளை வீடா?”

 

“டோன்ட் நோ..”, உதடு பிதுக்கினாள் அபி.

 

அவர்கள் இரண்டு வார்த்தைகள் பேசிக்கொள்ளும் முன், “வா மா அபி.. உள்ள போலாம்..”, என்றார் கூட்டி வந்த பெண்மணி.

 

“ஹாய் பாப்பு குட்டி..”, குழந்தைக்கு மாதவன் மட்டும் தான் கண்களில் தெரிந்தான் போலும்! இவள் அழைப்பைக் காதில் வாங்கினாள் இல்லை.

 

“நீங்க உள்ள போய் உக்காருங்க.. கொஞ்ச நேரத்தில வரேன்..”. – அலர்விழி, அபிகேலிடம்.

 

அவள் நடந்து போக.. மாதவன் பார்வை முழுவதும் நீல விழியோடு இவனையே பார்த்துக் கொண்டிருந்த அந்த பௌர்ணமி நிலா முகத்தின் மேல் தான்.

 

“யாரு அலர் அது? வெள்ளகாரி மாதிரி இருக்கா? உனக்கு எப்பிடி பழக்கம்?”

 

மனோவை பற்றி இன்னும் அண்ணனிடம் கூறவில்லையே… என்னவென்று கூறுவாள். “ஃப்ரெண்டோட ஃப்ரெண்டுண்ணா..”

 

“ஒஹ்ஹ்”

 

“அண்ணா..”

 

“ம்ம்?”

 

“உன்னட்ட அப்புறம் ஒரு விஷயம் சொல்லணும்..”

 

“சரி டா… பேசுவோ..”, அவன் வாக்கியத்தை முடிக்கவில்லை. “தம்பி… இங்க கொஞ்சம் வா டா..”, என்று கையோடு அழைத்து செல்லப்பட்டான்.

 

மருத்துவன் வந்தான். நிச்சயத்தன்று பார்த்தது. அதன் பின் இன்று தான் பார்க்கிறாள். கண்ணிற்குத் தெரியாத சிறு சிறு வெள்ளை நிற கோடுகள் நிறைந்த ஆகாய நீல லினன் சட்டை அவன் நிறத்தை இன்னும் கூட்டிக் காட்டியதா இல்லை அவன் தான் மிளிர்கின்றானா? முப்பதை நெருங்க நெருங்க ஆண்களுக்கு வனப்பு கூடும் போலும்! வாட்ட சாட்டமாக ஆறடிக்கு ஓங்கி உயர்ந்து ஆளை அசத்தும் தோற்றம்.

 

அவள் விரிந்த புன்னகையளித்து பன்னீர் தெளிக்க.. மெலிதான புன்னகையோடு தலையசைத்து உள்ளே சென்றான்.

 

சற்று நேரத்திற்கெல்லாம் மணப்பெண் மேடைக்கு வர, வரவேற்பில் நின்ற பெண்களும் உள்ளே சென்றுவிட்டனர்.

 

தேன் நிறத்தாள் தேன் நிற பட்டில் சுற்றி கொண்டிருக்க.. ஒருவன் பார்வை அலர்விழியை அவள் அனுமதியில்லாமலே மேய்ந்தது.

 

“ஹலோ மாமா.. எப்பிடி இருக்கீங்க..”, என்று அவன் அமர்ந்ததோ தியாகராஜன் அருகில்.

 

“எப்பிடி அத்த இருக்கீங்க?”. அளந்து பேசினான். ஆனால் கொள்ளையடித்தான் அவன் இயல்பான நடத்தையால். அத்தை-மாமாவிற்கு இவனை பிடிக்காமல் போனால் அவர்களுக்குக் கண்ணில்லை என்று அர்த்தம்.

 

வயது வித்தியாசம் இல்லாமல் பலர் அவனைத் தேடி வந்து பேச.. எழுந்து நின்று கைக்குலுக்கினான். நடிப்பெல்லாம் இல்லை.. அது தான் அவன். இனிமையான குணம் தான்.. ஆனால் ஒருத்தியிடம் மட்டும் அவன் தன்மை மாறிப்போனது. ‘ஆசைப்பட்டது தடையில்லாமல் தனக்கு மட்டுமே வேண்டும்’ என்ற எண்ணமாயிருக்கலாம்… அவன் ஆசையில் தன்னலம் சற்று அதிகமாகிப் போனதின் விளைவாயிருக்கலாம். சாதாரண மனித இயல்பு தானே!

 

அலர்விழி அம்மாவைக் காண வர… இம்முறை சௌந்தரியா இவனைப் பார்ப்பது தெரிந்தே அலர்விழியை பார்த்து அமர்ந்திருந்தான். அலர்விழி இவனைப் பார்க்க.. கண் பார்த்து மெல்லிய புன்னகை சிந்தி அத்தைக்கு தன் விருப்பத்தை உணர்த்தினான். பெண்ணின் மனம் அவளிடம் இல்லை என்பதால் அவன் பார்வையும் புரியவில்லை அவன் புன்னகையும் புரியவில்லை! புருவம் உயர்த்தி அழகாய் சிரித்து வைத்தாள் அலர்விழி. பெற்றவள் மனம் குளிர்ந்தது. மகளுக்கு இப்படி ஒரு மணாளன் கிடைத்தால் எந்த தாய்க்குக் கசக்கும். மனம் நெகிழ்ந்து போனார் சௌந்தரியா.

 

பிரவீன் மனம் அறிய எவரும் தனியே சைக்காலஜி பயின்றிருக்க அவசியமில்லை! பூனைக்கு யார் மணியைக் கட்டுவது என்பது மட்டும் தான் இன்றைய கேள்வி! இவன் கேட்டு பெண் வீட்டார் சரி என்பார்களா? இல்லை அவர்கள் வாயாலேயே ‘அம்மாவா பேச சொல்லுங்க’ என்பார்களா? அது தான் இன்றைய நிலை! மாலை வரை அவர்கள் பார்வையில் அவன் இருந்தாலே போதும்.. இரண்டாமவது நடந்துவிடும்! அதுவும் உடனடியாக!

 

“கெட்டி மேளம் கெட்டி மேளம்..”

 

மேளம் கொட்ட.. செல்வி.அர்ச்சனா, திருமதி.அர்ச்சனாவாக மாறியிருந்தாள். அடுத்தடுத்து சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆரம்பித்தது. விழா எந்த குறையுமின்றி நடந்து கொண்டிருந்தது.

 

“டேய் மாதவா…”, அந்த பக்கமாக இரண்டு நிமிடம் அமர்வோம் என்று அமர்ந்த மகனைப் பிடித்துக் கொண்டார் பாக்கியா.

 

“என்ன மா..?”

 

“அண்ணி ரூம்ல இத வச்சுடு. பத்திரம் தம்பி பையில பணமிருக்கு.. ரூம் சாவி இந்தா. பூட்டி சாவிய அம்பிகாட்ட குடுத்துட்டு அப்புறம் வந்து உக்காரு”, என்று கிளப்பி விட்டார்.

 

கீழ்த் தளத்தில் உணவு அறை.. முதல் மாடியில் திருமணம்.. இரண்டாம் மாடியில் தங்கிக் கொள்ளும் அறைகள் இருக்க.. இரவு அம்பிகா தங்கியிருந்த அறை நோக்கிச் சென்றான்.

 

“உன்னை தானே நானும் பார்த்தே கரைந்தேனே 

கேக்காமல் கால்கள் உந்தன் பின்னே செல்கிறதே 

மெய்தானோ.. பொய் தானோ என்னை 

நானே கேட்டேனே ஹே 

பெண்ணே அடி பெண்ணே என்ன வசியம் செய்தாயோ..”

 

மண்டபத்தை நிறைத்து வழிந்தோடிக் கொண்டிருந்த பாடலை பாடிக்கொண்டே சாவியிட்டு பூட்டியிருந்த கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவன் வாய் மூடிக் கொண்டது.

 

வாடாமல்லி புடவை மாராப்பிற்குளிருந்து வெண்மேகத்தை அப்பொது தான் வெளியே எடுத்தாள்.

 

நுழைந்தாயிற்று.. அவளும் இவனை பார்த்தாயிற்று! ஏசி அறை என்பதால் கதவும் சாத்திக் கொண்டது! அடுத்து என்ன செய்ய? இருபுறமும் பூட்டவும் திறக்கவும் செய்லாம் என்ற பூட்டு! அதனால் வந்த வினை!

 

வாயிலிருந்து பால் வழிய பச்சிளம் குழந்தை மீண்டும் தொண்டை கிழிய வீறிட ஆரம்பித்தாள்.

 

“சாரி.. உள்ள ஆளிருப்பாங்கன்னு நினைக்கல…”, என்று அவன் ஆங்கிலத்தில் கூற..

 

“பர்வால..”, என்றாள் தமிழில்.

 

குழந்தை வீறிட்டுக் கொண்டிருந்தாள். அழுகை இப்பொழுது ஆரம்பித்தது போல் இல்லை! விட்டு விட்டு அழுத்து கொண்டிருப்பதின் அறிகுறியாய் முகம் அடர் சிவப்பாய் மாறியிருக்க.. இவளும் சலிக்காமல் ஒரு மணி நேரமாக இருக்கைகளிலும் ஏந்திக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறாள். சிறு குழந்தை என்றாலும் ஏந்துபவளுக்கு கையும் முதுகும் வலித்தது. இறக்கி வைக்க மகள் பாரமில்லையே… பத்து மாதங்கள் முடிந்தும் தானே சுமந்து திரிகிறாள்.

 

“பாப்பா.. அழறாளே..”

 

“ம்ம்.. ஏன்னு தெரியல! இந்த ப்ளேஸ் ரொம்ப சூடு! அதுக்கு தாங்கல! அது தான் இங்க. பட் இன்னும் அழுது”, என்று அறையை ஸ்விஸ் ஆக்கியிருந்த ஏசியை நோக்கி முகம் உயர்த்தி காட்டினாள்.

 

“பசிக்குதோ.. பாதியில நான்… சாரி நான் எதிர்பாக்காம..”, திணறினான் வார்த்தை கிடைக்காமல். நம்மூரில் வளர்ந்தவள் என்றால் அவளும் திணறியிருப்பாள் நடந்த சம்பத்திற்கு. ஆனால் இவளுக்கு அப்படி எல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை. அதெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல் பதிலளித்தாள்.

 

“இப்போ தான் 20மினிட்ஸ் முன்ன ஃபீட் பண்ணினேன்.. நிறுத்தமா அழுவுது! இப்போ குடுத்தா குடிக்கல! வயிறு ஃபுல். சோ பசியில்ல… என்கு தெரியல”, ஏதாவது செய்து அழுகையை நிறுத்த முடியாதா என்ற தவிப்பு அவளிடம்.

 

“நான் தூக்கட்டா..”, என்று கையை நீட்டிவிட்டான்.

 

“அது யார் கிட்டயும் போவாது.. ஆம்பள அதுக்கு பிடிக்காது. நான் மட்டும் தான் தூக்க விடும்”, என்றாள்.. பெண்ணின் முகத்தில் வலியின் சாயல். அவளும் எத்தனை மணி நேரம் தான் தனியே போராடுவாள். பிள்ளை உண்டானதிலிருந்தே தனி தானே… ஆனால் இன்று பாரம் அழுத்தியது. புது இடமும்.. தூக்கமின்மையும்.. தனிமையும்.. குழந்தை பிறந்த அன்றிலிருந்தே அவள் மட்டும் தானே. அழாமல் இருப்பதே தெய்வச் செயல்.

 

மூச்சு முட்டும் தனிமை. எபி என்ற ஒருவன் இல்லாமல் போயிருந்தால் அவள் கண்மூடிய இடத்தில் புல் முளைத்திருக்கும்.

 

அவள் கூறி முடிக்கும் முன் குழந்தை அவன் விரலை பிடித்துக் கொண்டு அவன் பக்கம் புரண்டது.  அவன் அதற்கு மேல் ஒன்றும் தயங்கவில்லை. தூக்கி தோளில் போட்டுக் கொண்டான்.

 

“இத போட்டுக்கோ”, என்று ஒரு துண்டை அவன் தோளில் போட்டுவிட்டாள். அவன் தட்டிக் கொடுக்க.. அடைத்து நின்ற பாலை கக்கியது குழந்தை. வீறிட்ட அழுகை கொஞ்சம் கொஞ்சமாக நின்றது.

 

விசும்பல் மட்டும் நின்றபாடில்லை. அவன் தட்டிக் கொடுத்துக் கொண்டே அறைக்குள் நடக்க.. சட்டையை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தவள் கை மெல்லப் பிடி தளர ஆரம்பித்தது. தூங்க ஆரம்பித்தாள் சங்கமித்ரா.

 

அவன் ஏதோ ஆங்கில பெயர் எதிர்பார்க்க.. சங்கமித்ரா என்றாள் அபிகேல்.

 

“அம்மா நேம்.. அவங்க க்ராண்ட் பேபிக்கு”, என்றாள்.

 

வெள்ளைக்காரி ஏன் பட்டுப்புடவையில்.. சென்னையில் என்று கொஞ்சம் விளங்கியது. ஆனால் பெண் யாருமற்றவள் என்று தெரிய நியாயமில்லை.

 

உறங்கிய  மித்ராவை படுக்க வைக்கத் தாயிடம் கொடுக்க பார்க்க.. அவளும் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த நாற்காலியில் சாய்ந்து கண்ணயர்ந்திருந்தாள். தலை பின்னோக்கி தொங்கிக்கொண்டிருக்க வாய் குட்டியாய் திறந்திருந்தது. ‘பச்! எவ்வளவு அசதி!’ என்று நினைத்தான்.

 

நான்கு நாட்களில் இன்று தான் நிம்மதியான உறக்கம் என்பதும் அவனுக்குத் தெரியாது.

 

குழந்தையை படுக்க வைத்தவன், சுற்றி தலையணை வைத்து.. மெல்ல அதன் தலையை வருடி.. நெற்றியில் பட்டும் படாமலும் முத்தம் பதித்தான். புதிதாய் பூத்த ரோஜா இதழை இதழ் வருடியது போன்ற உணர்வு.

 

அங்கிருந்த பட்டுப் புடவை ஒன்றை சுருட்டித் தொங்கிக்கொண்டிருந்த இவள் தலைக்கடியில் வைத்துவிட்டு வந்த வேலையை முடித்து.. வந்த வழியே சத்தம் எழுப்பாமல் கதவைப் பூட்டி சென்றுவிட்டான்.

 

சென்றவன் மனம் முழுவதும் பால் மணம். சங்கமித்ரா! மனம் ஆர்ப்பரித்தது. அப்படி எல்லாம் எளிதில் சங்கமித்ராவை மறக்க முடியும் என்று தோன்றவில்லை. அந்த எச்சில் வாயும்.. பொக்கை சிரிப்பும்.. ரோஜா இதழ் மென்மையும்.. கடலில் மிதக்கும் நீல மீன் போன்ற விழியும் ஆயுசுக்கு மறக்க முடியாது!

 

கீழே வர, கூட்டம் கலைந்திருந்தது. மேடையில் மணமக்கள் நின்றிருக்க… புகைப்பட வல்லுநர், “இப்படி நில்லுங்க.. அப்பிடி நில்லுங்க.. இந்த குடைய மேடம்க்கு பிடிங்க சார்.. கொஞ்சம் கிட்ட… ஆமா அப்பிடி தான்… இல்ல கைய இடுப்புல குடுங்க..”, என்று இருவரையும் பாடாய் படுத்திக் கொண்டிருந்தார்.

 

சிலர் அடுத்த பந்திக்காக மேடை முன் கிடந்த நாற்காலியில் காத்திருந்தனர். அபியோடு வந்த பெண்மணி அம்பிகாவோடு பேசிக் கொண்டிருந்தார். அபியின் ஒன்றுவிட்ட பெரியம்மா போலும்! பெண் ஏதோ சொத்து விஷயமாய் வந்திருப்பதாக பேசிக் கொண்டிருந்தார். இவன் கவனம் அதில் இல்லை. அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை. சாவியைக் கொடுத்து விட்டால் சென்றுவிடுவான்.

 

“யாரோ ஃப்ரெண்டு அமெரிக்கால இருக்கானாம். இங்க அவன் வீட்டுல தான் மூனு வாரமா இருக்கா. இவளுக்கு யாருமில்லன்னு நூத்தம்பது ஏக்கர் சொத்த ஏமாத்த பாத்தாங்க.. அந்த பையன் அப்பா தான் இவளுக்கு வக்கீல் வச்சு பாத்துக் கொடுக்குறார். கோர்ட்டுக்கு போகாம முடிச்சுடலாம்னு சொன்னாங்களாம்!

 

மூனு நாளா தான் எங்க கூட இருக்கா. அந்தம்மா வெளியூர் போயிருக்காங்கன்னு பத்து நாளுக்கு இருக்க வந்திருக்கா.”

 

“சொந்தம் யாரும் இல்லியாக்கா?”

 

“இருந்தா இப்பிடி தனியா சீரழியுமா? பொண்ணு இந்த சின்ன வயசிலேயே பட்டமரமா.. நாதியத்து  தன்னந்தனியா அமெரிக்கால பாடா படுது! இங்கேயே இருடி நான் பாத்துக்கிறேன்னு சொன்னா.. இவளும் மாட்டேனுட்டா!

 

என் மருமக கூட நான் இருக்கதே பெரிய விஷயம்.. அதுனால ஒன்னும் சொல்றதுக்கு இல்ல! மருமகளோட விட்டுட்டு வர முடியாது அம்பிகா.. ஏதாவது சொல்லி பொண்ண நோகடிச்சுடுவா! அது தான் போற இடத்துக்கு எல்லாம் கூட்டிட்டே அலையறேன். பாவம் சின்ன பிள்ளைக்கு எதுவும் ஒத்துக்கல! சட்டுனு அதுவும் துவண்டு போயிடுது! வந்த வேலையும் இவளுக்கு முடிய மாட்டேங்குது!

 

அப்பன் ஆத்தா இல்லாத பொண்ணு என்ன பண்ண போதோ? அந்த சின்னதும் அவள உக்கார விட மாட்டேங்குது! எந்நேரமும் ஒரே அழுக.. இந்த நாலு நாளா  நானும் பாக்கிறேன்.. அபி பொண்ணு ஒழுங்கா நாலு வாய் சாப்பிட மாட்டேங்குது! சாப்பாட விடு அம்பிகா.. அந்த பொண்ணு நம்மதியா என்னைக்கு தூங்கிச்சோ?

 

நான் சாப்பிட்டுட்டு அவள சாப்பிட கீழ அனுப்பணும் அம்பிகா! கிளம்பட்டா? என்னவோ.. ஆண்டவன் என்ன இதுங்க ரெண்டத்துக்கும் எழுதி வச்சிருக்கானோ? பெத்ததும் பொம்பள பிள்ளையா போச்சு! அழகு பொம்ம மாதிர் இருக்குங்க.. அனாதையா நிக்கணும்ன்னு தலையில எழுதி இருக்கு போல! கண்டவன் கையில மாட்டி ரெண்டும் சீரழியாம போனா சரி.”

 

அவர் புலம்ப.. மாதவன் அப்படியே அமர்ந்துவிட்டான். குழந்தையை மட்டுமே மனதில் பதித்திருந்தவன் கண்கள் மூட, வாடாமல்லி நிற பட்டில்.. கைகளில் குட்டி தேவதையை ஏந்தியிருந்த அபிகேல் மங்கலாய் தெரிந்தாள். அபியின் வலிக்கூடிய விழிகள் இவனை ஏதோ செய்தது. ‘அப்பா இல்லையா என் தங்கத்துக்கு?’ பிள்ளையின் பால் மணமும்.. எச்சில் ஒழுகும் பொக்கை வாய் சிரிப்பும்.. ஏதோ செய்தது. ‘கண்டவன் கையில மாட்டி ரெண்டும் சீரழியாம போனா சரி’ உள்ளுக்குள் பிசைந்தது.

 

“மாதவா.. சாப்டியா டா?”, பாக்கியா வந்தார். அம்மாவைப் பார்த்தவன் சிந்தனை தடைப்பட்டது, நீண்ட பெருமூச்சொன்றை விட்டான்.

 

வாழ்க்கை ஓர் வினோத பயணம். பயணப்படும் பாதை எவருக்கும் தெரிவதில்லை. ஏதோ ஒன்று பின்னோடு துரத்தும்… இல்லையேல் ஏதோ ஒன்று முன்னே தெரியும்… அதனால் நம் ஓட்டம் தடைப்படுவதில்லை. ஓட காரணங்கள் இருக்கும் வரை ஓடிவிடும் மனம், ஓட காரணம் இல்லாமல் போகும் போது.. கண்கள் மூட துணிந்து விடுகிறது!

 

 

 

 

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!