அ21_1_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..
கொல்லை துளசி எல்லை கடந்தால் 21_1
விடிந்தும் விடியாத இளம் காலைப் பொழுது. வாசலில் வண்ண கோலமிட்டு.. குலை வாழை தோரணம் கட்டி.. வீடு முழுவதும் பல நிற மலர்ச் சரங்களால் அலங்கரிக்கப்பட்டு.. பொண்டு, பொடுசெல்லாம் தரையில் கால் பதிக்காமல் அலங்கரிக்கப் பட்ட பொம்மைகளாய் ஓர் இடத்தில் நிற்காமல் ஓடி ஆட, நிற்க நேரமில்லாமல் வீடே பரபரத்து கொண்டிருக்க வேண்டிய தருணம்! இது எதுவுமே இல்லாமல் மாதவன் வீடு பேரமைதியில்! வீட்டிலும், வீட்டில் உள்ள மனிதர்களிடமும் கல்யாண களையில்லை.
Advertisement
நான்கு மனிதர்கள் சேர்ந்து வாழ்வது குடும்பமாகாது. ‘சேர்ந்து’ வாழ வேண்டும்.. விட்டுக் கொடுத்து.. அன்பு புரிந்து.. அரவணைத்துப் போகத் தெரியவேண்டும். எதையும் கொண்டுவரவில்லை.. எதையும் எடுத்துக் கொண்டு போகப் போவதில்லை. எதை நினைத்து இன்றைய நிம்மதியைக் கெடுத்துக் கொள்கிறோம்? தாய் முகம் பார்த்து ஏங்கி நிற்கும் மகனுக்கு நிம்மதியைக் கொடுக்க முடியாமல் எது தன்னை தடுக்கிறது என்ற ஆராய்ச்சி கூட இல்லா தன்மை இருக்கும் வரை அது குடும்பமாகாது.
இன்று மாதவன் வீடு வெறும் செங்கல்லால் கட்டப்பட்டிருந்தது. வளர்ந்த மகன்.. தன் வாழ்வைத் தீர்மானிக்கச் சகல அறிவோடு நிற்கும் மகன்.. பெற்றவர்கள் முகம் பார்த்து நின்றான். மகன் விருப்பத்திற்கு விட்டுக் கொடுக்கப் பெற்றவர்களுக்கு விருப்பமில்லை. தன் விருப்பத்தை விழுங்கி, மூவரின் வாழ்வை கெடுத்துக்கொள்ள மாதவனுக்கு மனமில்லை.
Advertisement
Advertisement
மாதவன் – அபிகெயில், இருவரும் வெவ்வேறு மதம் என்பதாலும், இரு வேறு தேசம் என்பதாலும், ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட்டின் (Special Marriage Act) படி தான் திருமணத்தை பதிவு செய்யவேண்டும். கோவிலில் கட்டும் தாலி மட்டுமே சட்டப்படி செல்லாது என்பதால், அபிகெயிலுக்கு அமெரிக்கன் கான்சலேட்டிலிருந்து திருமணத்திற்கு ‘ஆட்சேபனை இல்லை’ சான்றிதழ்(No objection certificate) வாங்கி, ஒரு மாதம் முன்பே பதிவு திருமணத்திற்கான சம்பிரதாயங்கள் செய்தாயிற்று.
மாதவன் விருப்பப்படி, தாலி கட்டு கோவிலில். அதை அடுத்து திருமண பதிவு. அனைத்தையும் பெண்வீட்டார் சார்பில் எபியின் குடும்பம் எடுத்துச் செய்ய.. மாதவன் கிளம்பிச் சென்று தாலி கட்ட வேண்டும் என்பது மட்டுமே!
Advertisement
வானம் விடியலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. இன்னும் இவன் வீடு இருளில்.
“அண்ணா.. எப்படியாது என்னையும் கூட்டிட்டு போண்ணா..”, என்று இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத ஒரே ஆள் தங்கை மட்டுமே.
“என்னால உனக்கு பிரிச்சனையாகும்ன்னு நீயும் நினைக்குறியா வசு?”
“எனக்கு இன்னும் நாலஞ்சு வருஷம் ஆகும் ண்ணா கல்யாணம் பண்ண.. அதுக்குள்ள நீ பழைய நியூஸ் ஆகிடுவ! உன் கல்யாணத்த நல்ல மனசோட பாக்கத் தெரியாத ஆள் எல்லாம் எனக்கு வேண்டவே வேண்டாம்ண்ணா! சோ… இதெல்லாம் மேட்டரே இல்ல… சில் ண்ணா.. இன்னைக்கு உன்னோட டே. அத மட்டும் நினை ண்ணா”, நிலைமை புரிந்தவளாய் சின்னவள் பேசினாள்.
“அம்மா சொன்னமாதிரி நான் செல்ஃபிஷா யோசிக்கறேன்னு நீயும் நினைக்குறியா வசு?”, வீட்டை எதிர்த்து திருமணம் செய்வதில் இல்லாத வருத்தம், பெற்றவர்களின் ‘சுயநலவாதி’ என்ற வார்த்தை கொடுத்தது.
“ண்ணா… என்ன பேசற? ஒரு சுயநலம் பிடிச்சவன் செய்யறதையா நீ செய்யற?
அண்ணி வயசுக்கும்.. அழகுக்கும் வேற கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா வரவன் உன்ன மாதிரி சங்கு குட்டிக்கு அப்பாவா இருப்பானா? உங்க ரெண்டும் பேருக்கு நடுவுல ஏதோ இருக்குண்ணா.. அவ உனக்கு மகளா வரணும்ன்னு இருக்கு… இல்லேன்னா எங்கோ இருக்கவங்க இங்க வரணுமா? உன் கண்ணுல படணுமா? உன் மனச எப்பிடி பல்லில்லா பொக்கை வாய்கிட்ட பறிகொடுக்கணுமா?
உன் மேல அந்த குட்டிக்கு அப்படி என்ன ஒரு பிடிப்போ தெரியல.. உன்ன பார்த்தாலே பல்லி மாதிரி ஒட்டிக்கிறா. அண்ணியையும் நீ பாசமா பாத்துப்பன்னு எனக்கு நம்பிக்கை இருக்குண்ணா! நீ செய்யறது தன்நலமில்லாத செயல் ண்ணா. அம்மாவும் அப்பாவும் கோவத்துல பேசறாங்க. பாப்பா ஒரு தரம் அவங்கள பாத்து சிரிச்சா எல்லாம் சரி ஆகிடும்!”
தங்கைக்கு மனத்தாங்கல் இல்லை என்பது ஒருபக்க நிம்மதி என்றாலும்.. அம்மா? அப்பா? அப்பாவிடம் கேட்பதே வீண் என்று தெரியும்! அம்மாவிடம் கடைசியாக ஒரு முயற்சி செய்ய எண்ணி நேராகப் பாக்கியாவின் அறைக்குச் சென்றான்.
கட்டில் விளிம்பில் அமர்ந்திருந்தார். ஜன்னலுக்கு வெளியே விடிந்து வரும் வானைப் பார்த்து அமர்ந்திருந்தவர் அகம் போல் முகமும் சரியில்லை!
நடப்பதெல்லாம் எப்போதும் நமக்குச் சாதகமாக நடக்க வேண்டுமென்றில்லை. ஆனால் பாக்கியா? தான் வைத்தது தான் சட்டம் என்று வாழ்ந்து.. தான் நினைத்ததைச் சாதித்துப் பழகியவருக்கு… சொந்த மகனே பேரிடியைத் தலையில் இறக்கியது தாளவில்லை.
மகன் உள்ளே வருவதைப் பார்த்ததும் வைத்தி முதுகை காட்டி திரும்பி படுத்து கொண்டார். தகப்பனால் மகன் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரை சுற்றி இருப்பவர்கள் பார்வையில் ‘கீழிறங்கிப் போவேனே’ என்ற வருத்தம், அவர் கோபத்தைக் குறையவிடவில்லை.
“அம்மா..”, அருகில் அமர்ந்தவனைப் பார்க்கத் தோன்றாமல் அமர்ந்திருந்தார் பாக்கியம். அவன் பிடித்திருந்த கையை உருவவும் இல்லை.. எழுந்து செல்லவும் இல்லை. அவர் அமைதி அவனை பாதித்தது. பெற்றவர் மனம் நொந்து ஒரு வாழ்வைத் துடங்க மனம் இடறியது. சரி என்றிட மாட்டாரா?’ நல்ல மகனாய், மனம் வாஞ்சித்தது.
“தப்பு சரின்னு வாதம் செய்ய வரல ம்மா. எனக்கு நீங்க வேணும் ம்மா. உங்களுக்கு பிடிக்காத காரியம் தான் செய்றேன். தெரியும். இருந்தும் வேண்டாம்ன்னு ஒதுங்க முடியல மா.
தப்பான காரியம் இல்லியே மா. அபி மேல பரிதாபப் பட்டு கல்யாணம் பண்ணிக்க நினைச்சேனா.. என்ன நினைச்சேன்னு எனக்கு தெரியல. ஆனா இப்போ இந்த நிமிஷம் அவளைப் பிடிக்கவே தான் மனைவி ஆக்கிக்கணும்ன்னு அசை படுறேன்.
அவங்க ரெண்டு பேரோட ஒரு குடும்பம் ஏற்படுத்திக்க நினைக்கிறது அவ்வளவு பெரிய தப்பாம்மா? மத்தவங்களுக்கு நீங்க எப்படியோ… எனக்கும் வசுக்கும் ஒரு குறையும் வச்சதில்ல. இது என் வாழ்க்கை மா.. என் உயிர் பிரியற வரைக்கும் என் கூடவே வர போறவள எனக்கு பிடிச்சிருக்க வேண்டாமா. அபிய ரொம்ப பிடிக்குது மா. ரெண்டு மாசமா அவ கூட பழகறேன்.. நல்ல பொண்ணுமா. உங்களுக்கும் பிடிக்கும். பிடிவாதம் பண்ணாம வாங்க ம்மா”
“அவன இங்க இருந்து போக சொல்லு பாக்கியா.. எனக்கு மகன் இல்லன்னு நினைச்சுக்கிறேன்”, வைத்தி திரும்பாமலே கூற… அம்மா முகம் பார்த்தான். இரண்டு மாதமாக இளகாத மனம் இறங்கி விடுமா என்ன?
அவர் வாய் திறந்தார் இல்லை. மகன் வேண்டும். வாய் நீளம் என்றாலும்… மனதில் வஞ்சம் இருந்தாலும்.. கெட்ட எண்ணங்கள் கொட்டி கிடந்தாலும்.. அவரின் ஒரே மகன்! மகனுக்கு என்றுமே நல்ல தாயாகத் தான் இருந்தார்.
“அம்மா… ப்ளீஸ் மா. வாங்க மா”, கைபிடித்து வாஞ்சையாய் தாய் முகம் பார்த்து நின்றான்.
இறங்கிச் சென்று மகன் மனதில் உயர்ந்திருக்கலாம். ஆனால் அவர் கர்வம் இடம் கொடுக்கவில்லை. நான்கு பேர் நடுவில் அவருக்கு இருக்கும் பெயர்? அவர் கௌரவம்? எல்லாம் இவன் முடிவால் கேள்விக்குறியானது. வசதி வாய்ப்பில்லாமல், கேட்பாரற்ற ஊர் பேர் தெரியாத அனாதையை இவன் அழைத்து வந்தால்.. இனி யார் தன்னை மதிப்பார்கள் என்ற கேள்வி.. நிலை குலைந்து போனார் பாக்கியம்.
போதாக் குறைக்குத் திருமணத்திற்கு முன்பே அவளுக்காக வரிந்து கட்டி கொண்டிருப்பவன், இவளைக் கட்டினால் தனக்கு அடங்குவானா என்ற பயம்.. அவரை இறுகச் செய்தது. சம்மதிக்க விடவில்லை.
“ஒன்னு அவ இல்ல… நாங்க! முடிவு பண்ணிக்கோ மாதவா”, என்றார் முடிவாக.
“அபி என் மனைவி. மித்து என் மக. நீங்க என்னை பெத்தவங்க. யாரையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். தாலி கட்ட தான் போறேன். கட்டிட்டு எங்கேயும் இல்ல… இங்க தான் கூட்டிட்டு வருவேன். உங்க பையன் வாழ்க்கை உங்களுக்கு பெருசா தோணினா ஆசீர்வாதம் பண்ணுங்க!”
இப்படி முகம் காட்டுபவரோடு அபியை விட முடியாது என்பதால் மாடியில் இருக்கும் இரு வீடுகளில் ஒன்றை காலி செய்யக் கூறியவன் அதை அவர்களுக்கு ஏற்றார் போல மாற்றியிருந்தான்.
எங்குமே வைத்தியநாதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற கோபம்.. “அவள கூட்டிட்டு இந்த வீட்டு பக்கம் வர கூடாதுன்னு சொல்லிடு பாக்கியா! இந்த வீடு என் உழைப்பு! இன்னையோட இவன தல முழுகிட்டேன்னு சொல்லிடு! கைல காசில்லாம செலவுக்கு நடு ரோட்டுல நின்னு முழிக்கும் போது தான் பெத்தவங்க அருமை தெரியும்! பேச்ச மீறினா சல்லி காசு தரமாட்டேன்னு சொல்லு!”, ஜாடிக்கேற்ற மூடியாய் வாழும் தம்பதிகளின் முடிவை நூறாவது முறையாகக் கூறிவிட்டனர்.
இதற்கு மேல் என்ன கூறி சரி செய்ய என்று தெரியவில்லை. காலம் சரி செய்யும் என்று நம்பிக்கை மட்டுமே!
“ண்ணா.. லேட் ஆகுது.”, வெளியே தங்கை கிசுகிசுத்தாள்.
“இங்க தான் மா வருவோம். மாடியில தான் குடித்தனம் இருப்போம். தாத்தா சொத்த வித்து வாங்கின இடம் இது.. என்னை துரத்த முடியாது. பொண்டாட்டி பிள்ளைக்குச் சோறு போட எல்லாம் உங்கட்ட வந்து நிக்க மாட்டேன். உங்க சொத்து வேண்டாம். நல்லா இருன்னு மனசார சொல்லுங்க போதும்!”, கூறியவன், கிளம்பச் சென்றுவிட்டான்.
இரண்டு மாதமாக எபியின் வீட்டில் தங்கியிருக்கிறாள் அபிகெயில். அலர்விழியோடு இருமுறை சென்று பார்த்து வந்தான், மாதவன். அவ்வப்போது வெளியே சந்தித்துக் கொண்டனர். இவனைக் கண்டுவிட்டால் சின்னசிட்டு பறந்து இவன் கைக்குள் அடங்கிக் கொள்வாள். நேரில் பார்க்கும் அன்று மகள் உறங்கிய பின் தான் அவனால் நகர முடியும். தினமும் இரவானால் கைப்பேசியில் ‘ஆ ஈ ஊ’ என்று அவள் மழலை மொழியில் கதை அளப்பாள். இப்படி தன்னோடு உயிராய் ஒட்டிக் கொண்ட மகளை எப்படி அவனால் விடமுடியும்?
பெற்ற தாய்க்கு ஏன் தாய்மை புரியவில்லை என்பது தான் மாதவனின் விடை தெரியா கேள்வி!
அபிகெயில் அப்படி ஒன்றும் பயந்த சுபாவம் எல்லாம் இல்லை. எடுத்தெறிந்து, துடுக்குதனமாய் பேசுவதில்லை என்றாலும்.. மனம் திறந்து சிரித்துப் பேசினாள். பழக அருமையான குணம். கண்டிப்பாக மனமொத்த தம்பதிகளாய் வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.
ஷவருக்கடியில் நின்றிருந்தவன் மனம் முழு அமைதியில். எங்கும் தான் தவறவில்லை என்றது அவன் மனசாட்சி!
அவன் அமைதியாகக் கிளம்பிக்கொண்டிருக்க.. பரபரப்போடே விடுதி அறையை அளந்து கொண்டிருந்தாள் அலர்விழி!
அலர்விழி அனைத்தையும் சரி பார்த்து பையில் எடுத்து வைத்துக்கொண்டிருக்க.. எபி அழைத்தான்.
“ஹப்பா! வந்துட்டீங்களா? இன்றைக்குக் கொஞ்சம் சீக்கிரம் வாங்கன்னு சொன்னதா ஞாபகம்!”, அவசர அவசரமாய் அடுக்கிக் கொண்டே பேச்சை ஆரம்பித்தாள்.
அவளைப் போல் அவன் பரபரக்கவில்லை. வாகாக கட்டிலில் சாய்ந்தமர்ந்தவன் கண்களில் தன்னவளை நிரப்பி கொண்டிருந்தான். அழகாய் கிளம்பியிருந்தாள். அவன் ஆசை ஆசையாய் அனுப்பிக் கொடுத்த பட்டில்.
மங்கிய வெண்ணிற போட் நெக் பிளௌஸ்.. போட் நெக் என்பதால் அகலமாய் விரிந்து கழுத்து வரை மறைத்திருக்க.. காற்றோட்டமாய் இருக்க வேண்டும் என்று நினைத்திருப்பாள் போலும். கழுத்தைச் சுற்றி குட்டி குட்டியாக மழைத்துளி வடிவ ஓட்டைகள். பின்பக்கம் பார்க்காமலே ஜன்னலின் அளவை யோசித்தவன், ‘அடங்க மாட்டா இவ’ என சிரித்துக் கொண்டான்.
அழகோவியமாய் தெரிந்தவளை அள்ளிக் கொள்ளும் பேராவல் எழ, மனதை மறையாமல், “அழகா இருக்க டி பட்டு. கிட்ட இல்லாம போயிட்டேன்..”, கொஞ்சிக் கொண்டான்.
“ம்க்கும்.. காதல சொன்ன மூணாவது மணி நேரம் விட்டுவிட்டுப் போனவர் எல்லாம் பேச கூடாது. ஆமா ஏன் லேட்டுன்னு கேட்டேனே..?”, அதிகாரம் எல்லாம் தூள் பறந்தது. இருவரின் அன்னியோனியத்தை காட்டியது.
“கடைக்குப் போய் ஒரு க்ளாரிட்டின்(மாத்திரை) வாங்கிட்டு வர வழியில ‘மார்க்’க பார்த்தேன். நீ கேட்டிருந்த புக் டவுன்லோட் அவன் ஃப்ரெண்டுட்ட இருக்குன்னு சொன்னான். அவன்ட்ட போய் கையில கால்ல விழுந்து வாங்கிட்டு வர லேட் ஆகிடுச்சு.”
அருகிலோ தூரத்திலோ அவள் படிப்பு அவனுக்கு மிகவும் முக்கியம். நல்ல வேலை கிடைக்க என்னவெல்லாம் படிக்க வேண்டுமோ.. எல்லாவற்றையும் அவள் மூளைக்குள் திணித்து கொண்டு தான் இருக்கிறான்.
“தேங்க்ஸ் மனோ, யூ ஆர் தெ பெஸ்ட்.”
முகம் புன்னகையை பூசிக்கொள்ள, “தெரியும் தெரியும்..”, பெருமையை வாரிப் பூசிக் கொண்டான்.
“ஆமா.. க்ளாரிட்டின் எதுக்கு? மூக்கு இன்னும் ஒழுகுதா? காலையில வச்ச ரசம் இருக்குமே.. ரைஸ் மட்டும் சூடா வடிச்சுக்கோங்க”, ஒவ்வொன்றாய் எடுத்து வைத்துக் கொண்டே எபி முகம் பார்த்தாள். சளி சற்று அதிகமாயிருந்தது. மூக்கு சிவந்திருக்க, முகம் வாடியிருந்தது.
“அந்த ரசமா…? போடி. ஒரு மாத்திர போட்டா சரி ஆகிடும்”, ரசம் என்றதும் காலை நினைவு அவனைத் தாக்கியது. நினைவு பிடித்தது அதனால் முகம் வசீகரித்தது. ஆனால் ரசம் பிடிக்கவில்லை.
“இதுக்கெல்லாமா மாத்திர? சூடா சாப்பிடுங்க.. பெப்பர் சேர்த்துகிட்டாலே போதும் இதுக்கு. அதுக்கு தான் ஈசியா ரசத்தோட முடிக்கச் சொன்னேன். சூடா சுக்கு காபி வச்சு குடிங்க.”
“சாப்பிட்டிருப்பேன்… ஆனா நீ தான் முழுசா கிளம்பி நிக்குறியே..”, நமுட்டு சிரிப்பைச் சிரித்தான்.
எடுத்து வைப்பதை நிறுத்தி.. அவனைப் பார்த்தாள்.
“நீங்க சாப்பிடறதுக்கும் நான் கிளம்பி நிற்கிறதுக்கும் என்ன சம்மந்தம்?”, புருவம் நெளிந்தது.
“உன்ன பாத்து ரசிச்சுட்டே… சாப்பிடலாம்னு…”, குரல் ஏகத்திற்கும் குழைந்தது. மந்தகாசமாய் சிரித்தான்.
புன்முறுவலோடு தலையில் அடித்துக் கொண்டவள், “அதுக்கு எதுக்கு இந்த டோன்? வெயிட் பண்றேன். இப்போ பார்த்துட்டே… ரசிச்சு சாப்பிடுங்க, விட்ட வேலையைத் தொடர்ந்தாள்.
“விழி.. ஒரு பழைய பாட்டு! அந்த பாட்டுல ஒரு இடத்துல ‘இதழ்கள் ஊறுமடி… இதழ்…கள்…ஊறுமடி’-ன்னு வரும். எல்லா எழுத்தும் ஒன்னாயிருந்தாலும் ரெண்டுக்கும் அர்த்தம் வேற! நான் உன்ன ரசிச்சுட்டே.. சாப்பிடணும்ன்னு சொன்னேன்! நீ உன்ன பார்த்துட்டு… ரசிச்சுட்டே சாப்பிட சொல்ற! ரெண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கு தெரியுமா? கமாவ கர்க்டான இடத்துல போடு டி செல்லம்!”
“என்ன கண்டறாவியோ… நாலு வாய் சோற சாப்பிட அக்கப்போரா? ரசியிங்க ரசிக்காம போங்க.. ஆனா ஒழுங்கா சாப்பிடுங்க!”
“போடி இவளே.. மண்டையில மசலாவே இல்ல உனக்கு. நான் என்ன சொல்றேன். நீ என்ன சொல்ற? புடவையும் கட்டியாச்சு தலையும் வாரியாச்சு இதுல என்னத்த?! பச்! உன்ன வச்சுகிட்டு கஷ்டம் தான் போல!”, செல்லமாய் சலித்துக் கொண்டான்.
“என்னவோங்க நீங்க சரி இல்ல! நீங்களும் உங்கப் பார்வையும்.. சிரிப்பும்! சின்ன சளிக்கே ரொம்ப காஃப் சிரப் எதுவும் எடுத்துகிட்டீங்களா? ட்ரக் அடிச்சவன் மாதிரி உளறுறீங்க!”
“ம்ம்.. கொஞ்சம் ஹெவி போதை தான்.”, தலை கோதி சிரித்தான். “சரி அந்த பேச்ச விடு.. எல்லாம் எடுத்து வச்சுட்டியா?”, அவளுக்குப் புரிந்தால் அனல் பறக்கும் என்பதால் அந்த பேச்சை முடித்துக் கொண்டான்.
“ம்ம்.. எல்லாம் ரெடி… நானும்!”
“இன்னும் விடியக் கூட இல்ல! இருந்தாலும் நீ சமத்து டி செல்லம். இது நான் ஆன்லைன்ல ஆடர் பண்ணின புடவ தானே இல்ல வேறையா?”
“சொல்ல மறந்துட்டேன் நேத்து சாயங்கலாம் வந்துது. லாஸ்ட் மினிட் புடவைக்கு ப்ளோஸ் தைக்க ராஜாத்தி அக்கா இருக்கவே முடியுது. வெளியில குடுத்தா எவன் நைட்டோட தருவான்? ஏன் இந்த வேண்டாத வேலை உங்களுக்கு?”
“சாரி சாரி… நேக்ஸ்ட் டைம் லேட் பண்ண மாட்டேன்..”
“சொல்லுங்க.. நல்லா இருகேனா?”, புடவை மாடல் போல் இப்படியும் அப்படியும் நெளிந்து.. ஒரு சுற்று சுற்றிக் காட்டினாள்.
“மனுஷன கொல்லணும்ன்னு முடிவு பண்ணிட்ட.. நடத்து”, சிரித்தவன், “அம்சமா இருக்க விழி. கலர் வேற மாதிரி தெரியுது..”, என்றான், புடவைக்கு பார்வையை மாற்றியவனாய்.
“ஆன்லைன்ல வாங்கினா கொஞ்சம் அப்பிடி இப்பிடி தான் இருக்கும்! பட் இந்த ஆஃப் வயிட், பர்புள் காம்போ நல்லா இருக்கு மனோ. கேக்கணும்ன்னு நினைச்சேன்.. ‘ப்யோர் டஸ்சர் ஜார்ஜெட் சில்க் பனாரஸ் ஹேன்லூம்’-ன்னு பெரிய கதையே அந்த ஸ்லிப்புல எழுதி இருந்துது. ஃபினிஷிங் பாத்தாலே ஏகப்பட்ட விலன்னு தெரியுது. காஸ்ட்லியா வேண்டாம் மனோ. இனி மேல் என்ட்ட கேட்டுட்டு ஆடர் பண்ணுங்க.”
“ரொம்ப எல்லாம் இல்ல டி.. இவ வேற. நூறு தரம் இத சொல்லிட்ட.. நான் மறக்கல! 25 தான் ஆச்சு. உன்ட்ட கேட்டுட்டு அனுப்பினா.. அது பேரு உங்க ஊர்ல சர்ப்ரைஸ் கிஃப்டாமா? எல்லாம் நல்லபடியா நடந்திருந்தா மாதவனே உனக்கு புதுசு எடுத்து குடுத்திருப்பான்.. அவன் டென்ஷன் அவனுக்கு! இருந்த வேலையில நீ புதுசு வாங்கினியான்னு நானும் கேக்கல. நீயும் புதுசா கட்டணும்ன்னு எனக்கு தோணிச்சு.. வாங்கி அனுப்பிட்டேன். எல்லாத்தையும் உன்ட்ட கேட்டு கேட்டுச் செய்ய முடியாது விழி.”
“இப்பிடி நீங்க வாங்கி அனுப்பிட்டே இருந்தா.. நான் என்ன சொல்லி சமாளிக்கன்னே தெரியல மனோ. ரெண்டு மாசம் முன்ன அர்சனா கல்யாணத்துக்கு எதுக்கு எனக்கு வாச்? அம்மாக்கு அது விலை தெரியல ஆனா பாத்தா எக்ஸ்பென்சிவ்ன்னு கூடவா தெரியாது? அம்மா, ‘அது எப்பிடி நீ வாங்கற சம்பளத்துக்கு இவ்வளவு வாங்க முடியுதுன்னு கேள்வி கேக்கறாங்க மனோ.. இந்த புடவ பாத்தா, புடவ பத்தி தெரியாதவன் கூட கெஸ் பண்ணிடுவான் இது நல்ல தரமானதுன்னு! என்னை வம்புல மாட்டி விடுறீங்க நீங்க.”
“ஏதாவது சொல்லி சமாளி. அதுக்காக வாங்கி தராதன்னு சொன்ன.. கடுப்பாகிடுவேன் சொல்லிட்டேன்!”
“என்னவோ உங்க ரெண்டு பேருக்கு நடுவுல நான் மாட்டிக்கிட்டு அல்லாடுறேன்.” அவள் சலித்துக் கொள்ள.. அவன் ஒய்யாரமாய், “என்னை கட்டிக்கோடி பட்டு… அல்லாட வேண்டாம்.”, என்றான் அவன் ட்ரேட் மார்க் புன்முறுவலோடு.
“ரெண்டு பேரும் பக்கத்துப் பக்கத்து தெருவில, நடந்து போய் கோவில்ல தாலி கட்டிக்கிற தூரத்துல இருக்கோம். கனவு காண வேண்டியது தான்!”
“நீ முதல்ல உங்க வீட்டுல சொல்லு. லீவ் ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மாசம் முன்னாடி ஹமிட்ட சொல்லி ரெஜிஸ்டர் ஆஃபீல்ல ஃபார்ம் சம்மிட் பண்ண சொல்லிடுறேன். லீவ் கிடைச்சதும் ஓடி வரேன்.. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிப்போம். அப்புறம் நீ என்னோட வந்திடலாம். என்ன சொல்ற?”
“சகிக்கல… படிக்குற மூஞ்சிய பாரு. எப்போ பாரு வாய திறந்தா கல்யாணம் தான் சார்க்கு. படிங்க மனோ. இப்போவே கல்யாணம்.. புள்ள குட்டின்னு ஆரம்பிக்காதீங்க”
“என் கஷ்டம் எனக்கு. இப்பிடி ஃபோன் வழியே பாத்தே எத்தன நாள் ஓட்டணும் விழி? தனியா முடியல டி. பாரு சளிக்கு உருப்படியா ஒரு ரசம் கூட வைக்க முடியல! இதுல நான் படுத்துட்டேன்னா.. எனக்குக் கஞ்சி கூட நானே வச்சுக்கணும்! என் அவஸ்த உனக்கு காமெடியா இருக்கில்ல…? நீயா ‘கல்யாணம் பண்ணிப்போம் மனோ’ன்னு கெஞ்சுற வரைக்கும் இனி கேக்கமாட்டேன் போடி..”
“கோவிச்சுகிட்டீங்களா.. நானும் உருகினா தனியா இருக்க உங்களுக்கு இன்னும் ஏக்கமாகிடும்ன்னு தான் அப்பிடி சொன்னேன்… அதுக்குள்ள கொவிச்சுகிட்டா எப்பிடி..! ஆமா.. கல்யாணத்துக்கப்புறம் இப்பிடி வாங்கி தருவீங்களா..?”
“அப்புறம் எதுக்குடி.. நானே ஒரு கிஃப்ட் தானே.. போதாதா?”
“ம்ம்கும்.. எதிர்பார்த்தேன். போதாது மிஸ்டர். வாங்கி தரணும்! இத பாருங்க பாப்பா ஃப்ராக் நல்லா இருக்கா?”
விரித்து காட்டினாள். “செமையா இருக்கு. பாப்புக்கு இத போட்டு எனக்கு ஃபோட்டோ அனுப்பு. கிஃப்ட் எல்லாம் இருக்கான்னு பார்த்துக்கோ. நம்ம ட்ரைவர வர சொல்லி இருக்கேன். வந்ததும் ஃபோன் போடுவார். பாத்து போயிட்டு வா.”
“அப்பா… எப்படி தான் அங்க இருந்துட்டே இங்க இருக்க அத்தனை வேலையும் செய்யறீங்களோ? சென்டர்ல புது ரிஷப்ஷனிஸ்ட் உங்க பேர சொன்னாலே நடுங்கறா! புதுசா நேத்து ஜாயின் பண்ணின பையனுக்கு கூட உங்கள தெரியுது! திறம தான் மனோ உங்களுக்கு. எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா? சரி.. இப்போ வீட்டுக்கு தானே… இல்ல கோவிலுக்கா?”
“வீட்டுக்கு போ. அம்மா, அப்பா, யமுனாக்கா, அபி, பாப்பு, நீ.. எல்லாரும் ஒன்னா கோவிலுக்கு போங்க. ஹமி மாதவன நேரா அங்க கூட்டிட்டு வந்துடுவான்.”
