Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Mazhaiyaagi Vaa

மின்னல் மழையாகி வா – 23 (FINAL 2)

அந்த அழகிய நிகழ்வுகளில் அவள் மூழ்கியிருந்த நேரம் நிஜத்திலும் ஜோஷ்வாவின் குரல் கேட்க முதலில் தன் பிரம்மையோ என நினைத்தாள். ஆனால் மீண்டும் தெளிவாய் கேட்கவே காஃபி கப்பை மேசைமீது வைத்துவிட்டு அவசரமாய் வெளியே வந்தவள் அங்கே அனைவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த ஜோஷ்வாவை கண்டு அப்படியே தேங்கினாள். அவள் வரவை யாருமே கவனிக்கவில்லை.

“நீங்க ரொம்ப ஜோவியலா இருக்கீங்க.. ஆனால் ஜென் ரொம்ப சீரியஸ் டைப்.. உண்மையாவே நீங்க லவ் மேரேஜா சர்..”

என்று ஒருவன் கேட்க மற்றவர்களிடம் அதை அறிய ஆர்வம் தெரிந்தது.

தன் வழக்கமான சிரிப்போடு,



Advertisement

“என்ன இப்படி கேட்டீங்க.. லவ்வுன்னா லவ்வு எக்கசக்க லவ் தான்.. அதுவும் பதினாறு வருஷமா..!! உங்க பாஸ் சீரியஸ்னஸ் எல்லாம் ஆஃபிஸ்ல தான்.. மத்தபடி அவளை மாதிரி லவபுள் பர்ஷனை பார்க்க முடியாது..”

என்று பெருமையாய் சொல்ல,

“இவ்வளவு சொல்றீங்க.. ஆனால் ஆரம்பத்தில் இருந்து கேட்கும் உங்க லவ் ஸ்டோரியை மட்டும் சொல்லவே மாட்டேங்கிறீங்களே..”

Advertisement

மற்றொருவன் கேட்க ஆழ்ந்து யோசிப்பது போல் முகத்தை வைத்து,

Advertisement

“லவ் ஸ்டோரி கேட்க போய்.. லவ் ஸ்டோரியா மாறுன எங்க லவ் ஸ்டோரியை எப்படி சொல்லுவேன்..”

என்று தெளிவாய் குழப்ப, “ஒன்னுமே புரியல சர்..”

என்று அவர்கள் சொல்லவும்,

Advertisement

“நான் வேணா சொல்லவா..?”

என அழுத்தமான குரலில் சட்டென்று எல்லாரும் திரும்பி பார்க்க அங்கே கைகட்டி நின்றாள் ஜென்சி.

அவள் முறைப்பை உணர்ந்து ஜோஷ்வாவே,

“ தேவையில்லாமல் எதுக்கு அரட்டை.. எல்லாம் உங்க வேலையை பாருங்க ப்பா..” என்று ஸ்ரிக்டாய் கூறி கூட்டத்தை கலைத்துவிட்டு அவள் அருகில் வந்தவன்,

“ஹாய் ஜென்சி..” என்று புன்னகை மாறாமல் கூற சிரிப்பு வந்தாலும் வேண்டுமென்றே முறைத்து நிற்கவும்,

“சரி.. சரி.. இதெல்லாம் கண்டுக்கப்படாது…” என மெல்ல சொல்லி தோளை சுற்றி கைப்போட்டு அங்கிருந்து நகர்த்தி கூட்டிக்கொண்டு போக கண்டும் காணாமல் இருந்த மற்றவர்களுக்கும் புன்னகை அரும்பியது.

தனியே வந்ததும்,

“ஆஃபிஸ் எல்லாம் வரவே மாட்ட.. என்ன திடீர்னு வந்து இருக்கீங்க..”

என்று குழப்பமாய் கேட்டவளை முறைப்பது இப்பொழுது அவனின் முறையானது.

இடுப்பில் கையூன்றி,

“வேலைன்னு வந்துட்டால் அண்ட சராசரமும் மறந்துடும்னு உங்க அம்மா சொன்னது சரியா தான் இருக்கு.. இன்னைக்கு முதல் செக்கப் போகனும்.. மறந்தாச்சா..”

என்று ஜோஷ்வா கேட்க, “ஸ்ஸ்.. அச்சோ..” என நாக்கை கடித்தவள், “ஸாரி ஜோஷ்.. சுத்தமா ஞாபகம் இலல்..” என பாவமாய் கூற,

“இந்த சாரி எல்லாம் எடுப்படாது.. எல்லாம் கணக்குல வைச்சு வெளியே வந்ததும் உங்க அம்மாவை ஒரு கை பார்க்கணும் பேபி..”

என்று அவன் குழந்தையிடம் முறையிடவும்,

“ஹே.. ரொம்ப ஓட்டாத..  முதல்ல நாளைக்கு தானே அப்பாயின்மெண்ட் போட்டு இருந்தோம்.. அப்புறம் இன்னைக்கு  மாற்றியதை  மறந்துட்டு நாளைக்குனே நினைச்சுட்டு இருக்கேன்…”

என்றவள்,

“எப்படி தான் நீ மட்டும் எதையுமே மிஸ் பண்ண மாட்டேங்கிறியோ.. இப்படி எதாவது பண்ணியே என்னை மொத்தமா மயக்கி வைச்சு இருக்க..”

என்று வியப்பாய் கூறி அவன் பதில் சொல்லும்முன்

“டூ மினிட்ஸ்..வந்திடுறேன்..” என்று உள்ளே செல்ல இங்கே தனியாய் சிரித்து நின்றான் அவன்.

அவள் வியப்பதிலும் காரணம் இருந்தது. அவனின் நிறுவனம் பார்ப்பதும்,எட்டீயில் ஜோசஃப்பிற்கு உதவுவதும் என தொழில் ஒருபுறம் இருந்தாலும் மறுபக்கம் வித்தியாசமான கன்செப்டில் பி.ஹெச்டி பண்ணும் சில மாணவர்களுக்கு கைட்டாகவும் கூடவே தன் நிறுவனத்தின் புதிய ப்ராடெக்ஸிற்கான ஆராய்ச்சியும் என ஒவ்வொரு நிமிடமும் சுழன்று கொண்டே இருக்கும் அவன் அவளின் ஒரு சின்ன விஷயத்தை கூட எப்பொழுதும் மறந்ததில்லை. வேலை நேரத்தில் வேலை என்றும் வீட்டிற்கான நேரத்தில் அவள் மட்டுமே உலகம் என்பது போலவும் அவனின் இயல்பு அவளை வெகுவாய் இரசிக்க வைத்ததில் ஆச்சரியமில்லை. சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

காரில் செல்லும்போது,

“அம்மா கால் பண்ணாங்க ஜோஷ்.. இங்க வீட்டுக்கே வர மாட்டேங்கிறன்னு ஒரே கோபம்.. லிசாவும் காலேஜ் ஸ்டெடி ஹாலிடேஸ்ல இருக்கா.. அங்க ரெண்டு நாள் போகலாம்னு யோசிக்கிறேன்..”

என்று யோசனையாய் அவள் சொல்ல அவளும் எஸ்தரையும் லிசாவையும் அதிகம் தேடுகிறாள் என அவனும் உணர்ந்தே இருந்ததால்,

“சரிடா போயிட்டு வா..” என்றவன்,

“ஆனால் நம்ம கூட வந்து அத்தையும் லிசாவும் இருந்தால் என்ன..?? நம்ம கூடவே இருக்க தான் ஒத்துக்க மாட்டேங்கிறாங்க… இந்த நேரத்தில் ஆவது இருக்கலாம்ல.. லிசாவும் லீவ்ல தானே இருக்கா..”

என்று சிந்தித்தவன், “விடு நான் பேசிகிறேன்.” என்க அவன் இவ்வாறு சொன்னாலே நிச்சயம் அதை செய்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பான் என்று அவளுக்கு தெரியும்..!!

“நீயாச்சு உன் மாமியார் ஆச்சு..” என்றுவிட்டு,

“சரி… மாமாவை பார்க்க போகணும்னு சொன்னீயே.. ஹாஸ்பிட்டல் போயிட்டு அங்கிருந்து போகலாமா..”

என்று ஜென்சி கேட்க ரோட்டில் கண்பதித்து அமர்ந்திருந்தவன்,

“அங்க போயிட்டு தான் வந்தேன் ஜென்சி..”

என்றான் உள்ளே சென்ற குரலில்.. அவன் முகமும் நொடியில் சுணங்கிவிட்டதை உணர்ந்து எக்கி அவன் தலையை கோதியவள்,

“என்ன ஜோஷ்..”

என்று கனிவாய் கேட்க,

“டாட் இன்னைக்கும் என்னை பார்க்கவே விரும்பல.. என் முன்னால வரவே மாட்டேன்னு உறுதியா இருந்துட்டார்.. என் மேல கோபத்திலோ வெறுப்பிலோ அப்படி இருந்தால் சரி தான் போங்கனு விட்டுடுவேன்.. ஆனால் அவர் ரொம்ப கில்டியா ஃபீல் பண்றார்.. என் முகத்தை பார்க்கவே அவருக்கு ஒரு மாதிரி இருக்காம்.. என் முன்னால தோத்து போய் நிற்கிறா மாதிரி அவருக்கு அசிங்கமா இருக்காம்.. இப்படி எல்லாம் அவர் பேசுறதை கேட்டால் எனக்கு கஷ்டமா இருக்கு.. என்னோட அப்பா அவர்.. என்னை பார்த்து அவர் தலைகுனியுறது எனக்கு.. எனக்கு..”

என்று  சொல்ல முடியாமல் தடுமாறினான்.

இந்த ஒரு வருடத்தில் சந்தோஷம் மட்டுமல்ல எதிர்பார்க்காத சில அதிர்ச்சிகளும் நடந்தேறியது. அதில் ஒன்று அமல்ராஜ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது. தன் நிறுவனம் நொடித்து போனதில் அதிகம் மன உளைச்சல் அடைந்தவர் தன் உடல்நலத்தையும் மீறி புகைப்பிடிப்பதையும் அதிகரிக்க அதன் பலனாய் இடது பக்கம் முழுவதும் செயழிந்தது.

தன் தமையனின் நிழலாகவே வாழ்ந்துவிட்டாதாலோ என்னவோ அவரின்றி தனிச்சையாய் செயல்பட முடியாமல் இருதயராஜூம் தடுமாறவே இனி எட்டீயில் இருக்க மாட்டேன் என்ற தன் வைராக்கியத்தை விட்டு மீண்டும் நிறுவனத்தின் முழு பொறுபையும் தன்கையில் எடுத்து கொண்டான் ஜோசஃப். மேத்தியூ குடும்பத்தின் அடையாளமான எட்டீ அழிவதை அவனுமே விரும்பவில்லை. ஆதலால் காலம் தாழ்ந்திருந்தாலும் தளராமல் மீண்டும் நல்வழியில் தங்கள் நிறுவனத்தை கொண்டு செல்லும் முயற்சியில் முழு முனைப்போடு இறங்க அதற்கு பக்கபலமாய் துணை நின்றான் ஜோஷ்வா.

அவர் செயலிழந்து போனதில் மனதால் அதிகம் பாதிக்கப்பட்டது ஜோஷ்வா தான். அவர் தவறு செய்யும்போது அதனை மட்டுமே தடுக்க நினைத்தானே அன்றி அடிப்படையில் தந்தை மீது பாசம் இல்லாமல் இல்லை. எனவே அவரின் இந்த பாதிப்பு தான் கொடுத்த அழுத்ததால் தான் என்று அவன் வேதனையடைந்தான்.

எத்தனை சிகிச்சைகள் கொடுத்தும் பல நிபுணர்கள் மூலம் முயற்சித்து பார்த்து எந்த பயணும் கொடுக்கவில்லை. என்ன செய்வது கர்மா வலிமையானது அல்லவா..!!

அவன் மனம் அல்லாடுவதை அறிந்து,

“புரியுது.. பட் எவ்ரிதிங் டேக்ஸ் டைம்ல.. அவர் இப்ப தான் தன்னோட தப்புகளை ரியலைஸ் பண்ணுறார்.. அதெல்லாம் கடந்து வர அவருக்கு ஸ்பேஸ் கொடு ஜோஷ்.. அவரே ஹீல் ஆனாதும் உன்னை பார்க்கவும் உன்கிட்ட பேசவும் நினைப்பார்..” என்று ஆறுதலாய் கூற,

“ஐ ஹோப் ஸோ..”

என்றவன் தன் வருத்தம் அவளையும் வாட்டும் என்பதால் கருவுற்று இருக்கும் வேளையில் இந்த டென்ஷன் எதுவும் அவளை அணுகுவதை விரும்பாமல்,

“நான் போனப்ப  மெல்வீன் முழிச்சு இருந்தான்.. நான் தூக்கினதும் ஓரே சிரிப்பு தான்..  என் விரலை பிடிச்சுகிட்டு கண்ணை உருட்டி உருட்டி சிரிக்கிறான்.. அவ்வளவு அழகு தெரியுமா..!! அவனை கையை விட்டு இறக்கவே மனசு இல்ல..”

என ஜோசஃப் – அனீயின் ஒரு மாத குழந்தை மெல்வீனை பற்றி பேச்செடுக்க அவன் நினைத்தது போலவே அவள் முகத்தில் பெரியதாய் ஒரு புன்னகை மலர்ந்தது.

“அப்படியா..?? அச்சோ நான் மிஸ் பண்ணிட்டேனே.. நான் வரும்போது மட்டும் தூங்கிடுறான்..” என்று செல்லமாய் சலித்து கொண்டவள்,

“நம்ம பேபியும் மெல்வீன் மாதிரி தானே இருக்கும்.. குட்டியா க்யூட்டா..!!! நாம பேபிக்கு ப்ளான் பண்ணல தான்.. பட் கன்சீவ் ஆகியிருக்கேன்னு தெரிஞ்சதில் இருந்து ஐம் சூப்பர் எக்ஸைட்டட்.. ப்ரெக்னெசி பிரியட்.. அப்புறம் பேரண்டிங் எல்லாமே எக்ஸ்பிரியன்ஸ் பண்ண ரொம்ப ரொம்ப ஆர்வமா இருக்கேன்.. ஏன் தெரியுமா..?

என்று ஜென்சி சொல்லி அவன் பக்கம் திரும்பவும் உதட்டில் உறைந்த புன்னகையோடு,

“ஏன்..” என்று கேட்க,

“ஏன்னா.. ஜோஷ்வாவை ஒரு ஃப்ரெண்டா,ஒரு ஹஸ்பெண்டா, ஒரு குட் ஹியூமனா எல்லாமுமா பார்த்தாச்சு.. இரசிச்சாச்சு.. இப்ப ஒரு அப்பாவா பார்க்க இன்னும் ஆசையாவும் ஆர்வமாவும் இருக்கு… எனக்கு தெரியும் யூ வில் பீ அ பெஸ்ட் டாட் இன் தி வோல்ட்..”

என்று கண்கள் மின்ன ஜென்சி சொன்னதில் அவன் மனம் நெகிழ்ந்து போக வெளியே பொழியும் மழைக்கு ஈடாய் இவர்கள் மனதின் உள்ளும் காதல் மழை பெருகி வழிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!