அ21_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்
கொல்லை துளசி எல்லை கடந்தால் 21_2
அடுத்த இருபது நிமிடங்களில் அலர்விழியை ஏந்திக் கொண்டிருந்த எஸ்தரின் சில்வர் நிற மெர்சடீஸ் பென்ஸ் GLS, எபி வீட்டின் முன் வந்து நிற்க, “ஆண்டி”, என்று அழைத்துக் கொண்டே, உரிமையோடு அலர்விழி நேரே சென்றது எஸ்தரின் அறைக்குத் தான்.
Advertisement
அவள் கொண்டுவந்த சாமான் அனைத்தையும் ஓட்டுநர் உள்ளே வைத்துச் சென்றார். இரண்டு மாதமாகத் தினமும் அங்குச் சென்று சங்கமித்ராவோடு அரை மணி நேரம் இருந்து, இரவு உணவை முடித்த பின், எஸ்தர் அவரின் வண்டியில் விடுத்திக்கு அனுப்பிவிடுவார்.
“எப்பவும் ஆன்டி தானா? அங்கிள தேட மாட்டியா மா?”, பால்ராஜ் சிரித்துக் கொண்டே வந்தார். கையில் சங்கமித்ரா. எந்த அபிக்கு பயந்து தன் மகனுக்கு பெண் பார்க்க அலைந்தாரோ, இன்று அதே அபி அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக மாறி இருந்தாள். அவளின் மகள், சங்கமித்ரா.. அந்த குடும்பத்தின் உயிர்ப்பாய் மாறி இருந்தாள்.
Advertisement
Advertisement
“ரெண்டும் பேரும் எனக்கு ஒன்னு தான் அங்கிள். குட்டிமா தூங்காம என்ன பண்றா?”
“மேடம் மூணு மணிக்கே எழுந்தாச்சு! கண்ண பாரு தூக்கக் கலக்கம் கொஞ்சமாது இருக்கான்னு? அவளும் எழும்பி தாத்தாவையும் எழுப்பியாச்சு. அப்பிடி தானே பாப்பு..”, குளித்து முடித்து வெறும் டையப்பரோடு இருந்த குட்டியின் மூக்கை உரச… அவர் முகத்தை இரு கைகளாலும் தள்ளிக் கொண்டே, கெக்க பிக்க என்றாள் சங்கு பாப்பா.
Advertisement
“என்ட்ட வர சொல்லுங்க அங்கிள். நானும் ரெண்டு மாசமா ட்ரை பண்றேன்.. வரவே மாட்டேன்றா?”
“அத்த டா பாப்பு… அம்மாக்கு அடுத்து அத்த தான் உனக்கு… போ..”, அவர் கொஞ்ச… ஆறு மாத சிட்டுகுருவிக்கி என்ன புரிந்ததோ.. அத்தை முடியை இழுத்து, பொக்கை வாய் சிரித்தது.
“தலைய கலச்சாச்சா? நல்லா சிரிப்பா.. வர தான் மாட்டா.. அத்தட்ட வா டா குட்டிமா…”, கை நீட்ட முதல் முறை அலர்விழி கைக்குத் தாவினாள் செல்லசிட்டு.
பனித் துகள்களின் மென்மை.. மேகக் கூட்டத்தை ஒன்று சேர்த்து கைக்குள் அடக்கிய பரவசம். பிள்ளையை நெஞ்சோடு அணைத்து உச்சி முகர்ந்தாள். ஏகாந்த உணர்வு. நேற்று வரை எப்படியோ.. இன்று முதல் அண்ணன் மகளாயிற்றே. மீண்டும் மீண்டும் ஆசை தீரச் சின்ன சின்ன செல்ல முத்தங்களோடு கொஞ்சி தீர்த்தாள்.
குழந்தையோடு விளையாடிக் கொண்டே, “அங்கிள் எனக்கு உங்களால ஒரு வேலை ஆகணுமே”, என்று ஆரம்பித்தாள். ராஜாத்தியின் திறமையைக் கண்டு அதை வெளிக் கொணர்ந்தவள், அவள் முன்னேற ஒரு கடை வைக்க வங்கி கடன் வேண்டும் என்றாள். அப்பாவிடம் கேட்பது போல் தான் கேட்டு நின்றாள். அவரும், “அதுகென்ன மா… உனக்கு செய்யாமலா? திங்க கிழம பது மணி வாக்குல பேங்குக்கு வர சொல்லு.. என்ன செய்ய முடியும்ன்னு பார்த்து செஞ்சுடுவோம்”, என்றார்.
எஸ்தர் வந்தார். “வந்துட்டியா டா. அவளும் ஒரு வழியா வந்துட்டாளா உன்ட்ட. உள்ள அபி கூட ப்யூடிஷியன் இருக்கா.. நான் அவள பாத்துக்கிறேன். நீ பாப்பாவ கிளப்பிடு அலர். பாப்பாக்கு முடிச்சுட்டு மாமாட்ட குடுத்துட்டு வா. நீயும் ஏதாவது பண்ணிக்கணும்னா இவட்ட பண்ணிக்கோ. இப்போ.. முதல்ல உள்ள போய் யமுனட்ட இருந்து காபி வாங்கி குடி போ.”, ‘வா மா.. உக்காரு.. காபி குடிக்கிறியா’ என்ற சம்பிரதாயங்கள் எல்லாம் கடந்திருந்தனர் மூவரும்.
போகிற போக்கில், “புடவ ரொம்ப நல்லா இருக்கு அலர்.”, என்று கூறிவிட்டுச் சென்றார்.
கை காலை ஆட்டி அட்டகாசம் செய்யும் ஆறு மாத குட்டிக்கு உடுப்பை போடுவது அவ்வளவு எளிதாயிருக்கவில்லை. அலர்விழியும் பால்ராஜும் சேர்ந்து ஒரு வழியாய் போட்டுவிட்டனர். மயில் தோகையின் கண்களில் பார்க்கலாம் ஒரு வித அழகிய பச்சையை.. கூடவே அதில் ஆகாய நீலம் கலந்திருக்கும். அப்படி ஒரு பச்சை நிற ஜரிகையை நெஞ்சில் வைத்து, நீல நிற பட்டு துணியைப் பாவாடையாக ஜரியோடு சேர்த்துத் தைத்திருந்தார் ராஜாத்தி.
தலை அலங்காரமாக மண்டையைச் சுற்றி ஹேர் பேண்ட், அதில் வான் நீல பூக்கள். கொண்டுவந்த வளையலும் கொலுசும் மகள் கை கால்களில் கிலுங்கியது. வெண்ணெய் மேனியும்.. நீல கண்களுமாக.. நீல அலங்காரத்தில், மனதைக் கொள்ளைக் கொண்டாள் சங்கமித்ரா.
“என் கண்ணே பட்டுமே என் செல்லத்துக்கு..”, கண்ணிலிருந்து மை வழித்து புருவ முடிவில் பொட்டிட அது அழகிற்கு அழகைச் சேர்த்தது. “என் பட்டுக் குட்டிய உங்க அப்பா இன்னைக்கு பார்த்தா.. தரையில விடுவாங்களா..? மாப்பிள்ளையையும் பொண்ணையையும் யாரும் கண்டுக்க மாட்டாங்க.. எல்லார் பார்வையும் உன் மேல தான் இருக்கும் பாரு! என் செல்ல குட்டிக்கு இன்னைக்கு ஃபங்கஷன் முடியவும் சுத்தி போடணும்.”. அவள் கொஞ்சி கொஞ்சி பேச.. கட்டிலில் படுத்துக் கொண்டு கையையும் காலையும் ஆட்டிக் கொண்டு சிரித்தது குழந்தை. கொலுசு ஓசை எழும்ப, குட்டி மகளின் கைகளும் கால்களும் படுத்த வாக்கிலேயே ஓட்டம் எடுத்தது.
சில பல விடியோக்களும், செல்ஃபிக்களும் மாதவன், மனோ கைப்பேசிகளை நிறைத்தது. குழந்தைகள் என்றாலே அழகு.. அவர்கள் மழலை மனதிற்கு நிறைவு. இரண்டையும் தன்னை சுற்றியிருப்பவர்களுக்கு திகட்டத் திகட்ட சங்கு பாப்பு கொடுத்தாள்.
மணப்பெண்னோடு அலர்விழியையும் தாங்கிக் கொண்டு எளிமையாக ஆனால் மிகவும் நேர்த்தியான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்த மனோவின் கேமரி புறப்பட, பின்னோடு எஸ்தர் குடும்பம் ஏழு நபரை சுமக்கக் கூடிய SUV வகையை சேர்ந்த அவர் பென்சில் கிளம்பினர். எஸ்தர் அல்லது பால்ராஜ் இருந்தால் போதும் ஒருவரையும் சங்கமித்ரா தேடுவதில்லை என்பதால் எப்பொழுதும் பிள்ளை அவர்கள் கைகளில் தவழ்ந்தாள். முன்போல் அதிகம் அழுவதில்லை.
இங்கு இவர்கள் கிளம்பியிருக்க மாதவனுக்காக பால்ராஜின் BMW (7 series) காத்திருந்தது. ஆல்மெண்டீன் மெடலிக் ப்ரௌன், வாகனத்திற்கு அழகென்றால்… அதில் விரிந்தும் விரியாமலும், அலங்கரிக்கப்பட்டிருந்த இளம் சிகப்பும், வெண்ணிற ரோஜாக்களும் பார்ப்பவர் இமையைக் கண்டிப்பாக விரிய வைக்க தவறாது. குட்டி குட்டி சில்வர் கம்பி இதயங்கள் ஆகட்டும்… மலரின் வண்ணத்திற்கு ஒத்த சேட்டின் ரிப்பனாகட்டும் எல்லாம் கைதேர்ந்தவரால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மச்சானுக்காக பார்த்துப் பார்த்து அனைத்தையும் குறையில்லாமல் செய்திருந்தான் ஒருவன். தோழனின் வலது கையாய் மாறியது ஹம்ரிஷ். பால்ராஜுக்குமே புரியவில்லை மகன் எதற்காக இத்தனை ஈடுபாடு காட்டுகிறான் என்று! மாதவனை இப்பொழுது தான் பழக்கம் என்று தெரியும்! அதனால் இது கண்டிப்பாக அவனுக்காக இல்லை! அலர்விழியின் அண்ணன் என்பதற்காகவா? இல்லை அபிகெயில் அத்தனை நெருங்கிய தோழியா? கேள்விகள் உள்ளுக்குள் இருந்தாலும் தகப்பன் மகனிடம் கேட்கவில்லை. என்றாவது அவன் வாய் திறந்து தானே ஆகவேண்டும் என்று இன்று அவர் வாய் திறக்கவில்லை.
ஹம்ரிஷ் வந்ததை அறிவித்ததும், “அம்மா நான் அண்ணாவோட கிளம்பறேன்”, என்று ஓட்டம் பிடித்தாள் வசந்தி. மகள் சிரத்தையோடு கிளம்புவதைப் பார்த்தார் தான். ஆனால் தடுக்கவில்லை பாக்கியா. அவர் பேச்சு இந்த வீட்டில் எடுபடுமா என்ற யோசனை.
நேரம் செல்ல செல்ல.. பெற்ற மனம் அடங்க மறுத்தது. மார்பிலும் தோளிலும் போட்டு வளர்த்த மகனின் அடுத்த கட்ட வாழ்க்கை. அதில் அவர் பங்கு எங்குமில்லை. என்னவெல்லாம் கனவு கண்டிருந்தார்.. தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. வைத்தியநாதன் கோபம் ஒரு சதவீதம் கூட குறையவில்லை. மகன் தன்னை செல்லாக்காசாக்கி விட்டான் என்ற கோபம். வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை அவருக்கு. விடிந்து முற்றத்தில் தெளித்த நீர் காயும் முன்னே அலுவலகம் செல்வதாய் கிளம்பியிருந்தார்.
“மா..”, மீண்டும் மகன் வந்து நின்றான் தாய் முன். வெண்பட்டில் மாப்பிள்ளை தோரணையில் மகன் கண்களை நிறைத்தான். இருவருக்கும் கண்கள் பனித்திருக்க.. ஒன்றும் கூறாமல் பூஜை அறைக்குச் சென்று கண் மூடி நின்றார். மகனுக்கு திருநீறு வைத்தவர்.. அவர் அறைக்குள் சென்றுவிட்டார்.
ஜன்னல் வழி மகன் வெளியே போவதைப் பார்த்து நின்ற தாயின் கால்கள் மெல்ல நடுங்கியது. ஏனோ தந்தையை போல் தாயால் இருக்க முடியவில்லை. கைப்பிடித்து நடத்திய மகன், தானே நடக்க ஆரம்பித்துவிட்டான்.. ஆனால் பிடியை விட மாட்டேன் என்றது தாய் உள்ளம். இறுகப் பிடித்தால் பிள்ளை உதறிவிடும் என்ற உண்மை உரைக்க இத்தனை வருடங்கள் பிடித்தது தாய்க்கு! ஏற்கவில்லை என்றாலும் அவனுக்காக சென்றிருக்க வேண்டுமோ..? சென்றிருக்க வேண்டும் என்றது தாயுள்ளம்.
அவர் கர்வத்தையும் தாண்டி கண்களிலிருந்து நீர் வழிந்தது. தனக்கு பிடித்தமோ இல்லையோ மகன் நன்றாக வாழ வேண்டும் என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு திரும்ப மாதவன் அறைவாசலில் நின்றிருந்தான்.
‘என்ன’ என்பது போல் பார்த்தார்.
“வாங்க போலாம்..”, என்றான்.
அவர் முறைக்க.. “நீங்க என்ன வேணுமோ சொல்லி திட்டுங்க. வாங்கிக்கிறேன். ஆனா விட்டுட்டு போக மாட்டேன். நீங்க இல்லாம சத்தியமா தாலி கட்டுறதா ஐடியா இல்ல. வாங்க”, என்று மெத்தையில் அமர்ந்து கொண்டான்.
“போடா வெளியில..”, கூறும் போதே அவர் தொண்டை அடைத்தது.
“அப்பிடி எல்லாம் போக முடியாது. வாங்க”, என்று மகன் அடம்பிடிக்க, தாய்க்குச் சற்று பெருமை ஏறிக்கொண்டது. மகன் இன்னும் தன்னை எதிர்பார்க்கிறான் என்ற மகனைப் பெற்ற தாய்க்கே உரியப் பெருமை.
“ம்மா .. வாங்க மா. போற வழிலயே எனக்கு ஏதாவது ஆச்சுன்னு வைங்க.. மகன் கடைசி ஆசைய நிறைவேத்தலன்னு மனசு கடந்து அடிச்சுக்கும்… வாங்க ம்மா..”
“மாதவா.. என்ன பேச்சிது?”
“நெருப்புன்னு சொன்னா வாய் சுடுமா? நீங்க வாங்க. நீங்க வராட்டி.. வாய் சுடும்!”
‘இவன் மட்டும் எமோஷனல் ப்ளாக்மெயில் செய்வானாமா?’ அவன் வீம்புக்கென்று பேசுகிறான் தெரியும். அமைதி காத்தார்.
“அவள அனாதைன்னு சொல்லிட்டு என்னை தனியா விட்டுடீங்க மா. அப்பாக்கு என் மனசு புரியல. என்னால அத ஒத்துக்க முடியுது. ஏன்னா அவருக்கு இந்த வீட்டுல என்ன நடக்குதுன்னு கூட தெரியாது! ஆனா நீங்க? ஏன் மா என்னை விட்டுடீங்க? யாருமில்லா அவளுக்குக் கூட ரெண்டு குடும்பம் வருது மா. ஆனா எனக்கு? தாய் பாசத்த மிஞ்ச ஒன்னும் இல்லன்னு நினைச்சதெல்லாம் பொய்யாமா?”
என்ன நினைத்தாரோ.. காதில் இரத்தம் வழிய ஆரம்பிக்கும் முன், அலுவலகம் செல்ல கட்டியிருந்த கரை வைத்த மெல்லிய காட்டன் புடவையோடே கிளம்பினார். அவர்கள் பின்னால் விஷ்வா குடும்பமும் கிளம்பியது.
மாதவன் கேட்டிருந்த கோவிலில் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடும் நடந்திருந்தது. மகன் கூறியது போல் அவன் தனித்தெல்லாம் விடப் படவில்லை!
கண்டிப்பாக, அண்ணன் இட்ட கோட்டை தாண்டாத, தியாகு குடும்பத்தை எதிர்பார்க்கவில்லை. பெற்றவர்கள் ஸ்தானத்தில் நின்றிருந்தனர், தியாகுவும் சௌந்தர்யாவும். அதிர்ச்சி முடியும் முன் அவர் அண்ணனும், அண்ணன் மனைவியும், அவர்கள் மகள் மற்றும் மருமகனோடு வந்து நின்றனர். போதாக் குறைக்கு எதிலும் அதிகம் கலந்துகொள்ளாத பிரவீன் வந்திருந்தான்.
“அலர்விழிக்கு அவ அண்ணன் ரொம்ப முக்கியம் பிரவீன். அவ இன்னைக்கு கண்டிப்பா வருவா. அவ கிட்ட பேசு பிரவீன், முதல்ல அவளுக்கு உன்ன பிடிக்கணும்! அவ மனச முதல்ல தெரிஞ்சுட்டு அவ வீட்டுல பேசுவோம். எல்லாம் சரியா நடந்தா மாதவன் உன் மச்சான். அவனுக்கு நீ, உனக்கு அவன்னு ஒரு உறவு வேணும் புரியுதா? வினோ இங்க இல்ல… ஆனா மாதவன் கூட தொடர்புல இருக்கான். நீயும் எல்லார் கூடவும் நல்லவிதமா பழகணும் டா… ஒதுங்கி நிக்காத!”, என்று அம்பிகா கூறியிருக்க பிரவீன் வந்திருந்தான்.
பாக்கியாவை ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. அவரைக் கண்டதும் சற்று தயங்கினாலும் ஒருவரும் அவரை கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. பாக்கியாவிற்கு இது பேரிடி.
அக்னி குண்டம் முன் பெண்ணும் மாப்பிள்ளையும் அமர்திருக்க… அவர்கள் சொந்தமும் நண்பர்களும் அவர்களை சூழ்ந்திருந்தனர். அனைவருமே சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, மகனுக்காக மகிழ்ச்சியடைய வேண்டிய பாக்கியாவின் கவனமோ அவரை சுற்றியிருந்தவர்கள் மேல். ஆக… தாங்கள் இல்லை என்றாலும் மகனைத் தாங்க மற்றவர்கள் இருக்கிறார்கள். மகன் தங்களிடம் கை ஏந்தி நிற்கப் போவதில்லை!
தாங்கள் ஒன்றுமில்லையா என்ற கேள்வி எழ.. உள்ளுக்குள் எள்ளும் கொள்ளுமாக வெடித்துக் கொண்டிருந்த பாக்கியா, குடும்பமே தன்னை ஏமாற்றியது போல் உணர்ந்தார்.
“நம்ம பையனை விடமுடியுமா பாக்கியா?” என்ற கேள்வி வேறு!
இருந்தும், மணமகனின் தாய் என்ற கெத்தை காட்டினார். ‘நான் இல்லாமல் திருமணம் நடக்காது’ என்ற கர்வம் முகத்தில் வந்து அமர்ந்துகொண்டது.
பெண் வீட்டுச் சார்பாக, அபியின் பெரியம்மாவும், அவளுக்கு ஓடி ஓடி உழைக்க எபியின் நண்பர்களும், பெற்றோர் சார்பாக எஸ்தர் குடும்பமும் வந்திருந்திருக்க… பெண்ணும் தனியே இல்லை.
பெண் வீட்டார் அனுப்பி வைத்த வாகனம்.. அவர்கள் வந்த வாகனம் என்று எல்லாமே பாக்கியாவின் கவனத்தை ஈர்த்தது. எஸ்தரைச் சுற்றி வந்த அலர்விழியோடு அவர்களுக்கு என்ன சம்பந்தம்? வெள்ளைக் காரி இவளுக்கு எப்படி தோழமை? அலர்விழியால் தான் மாதவனுக்கு அபிகெயில் அறிமுகமோ என்று தோன்றவும், முழு பொலிவோடு நின்றிருந்த அலர்விழி மேல் ஏகத்திற்கும் கோபமும், வெறுப்பும்!
முன்பே.. பார்த்தால் நடுத்தர கும்பத்தை சேர்ந்தவள் போல் தெரியமாட்டாள்.. இப்பொழுது கேட்கவே வேண்டாம்! மகள் புடவையையும் அவள் உடுத்தியிருந்த புடவையையும் பார்த்தவர் நோந்து கொண்டார்.
“அத்தட்ட வா டா அலர்.. காலேஜ் கட்டா? நீ வருவன்னு தெரியும். மத்த யாரும் வர மாட்டாங்கன்னு நினைச்சேன். நீ வருவேன்னு உன் அம்மாக்கு தெரியுமா?”, அம்பிகா வாஞ்சையாய் பெண் கை பிடித்துப் பேச.. பிரவீன் பார்வையால் அவளை கபளிகரம் செய்ய, அவளையே நோட்டமிட்டுக் கொண்டிருந்த பாக்கியவிற்கு உள்ளுக்குள் புகைந்தது. ஒட்டு மொத்த கூட்டத்திலும் அவளைத் தனியே நிறுத்தியது அவள் புடவையும் அவள் அலங்காரமும்.
‘மினுக்கிட்டு வந்து எல்லாவனையும் அக்காவும் தங்கையுமா வளச்சு போட்டுகிறது!’, அவள் காது கேட்கவே முணுமுணுத்தார்.
எதற்கு கூறினார் யாரை கூறினார் என்று தெரியவில்லை என்றாலும் அந்த பேச்சு பிடிக்கவில்லை அலர்விழிக்கு. “யாரையும் அப்பிடி பேசாதீங்க பெரியம்மா”, என்று அவருக்கு மட்டும் கேட்கக் கூறியவள் அம்பிகா பக்கம் திரும்பிக் கொண்டாள்.
“அம்மா வரதா சொல்லவே இல்ல அத்த. நானும் அவங்கட்ட கேக்காம தான் வந்தேன். நான் இல்லாம என் அண்ணன் கல்யாணமா? யாருக்காகவும் அண்ணன் கல்யாணத்தை மிஸ் பண்ண முடியாது. தனியா மாட்டும் போது அம்மா டின்னு கட்டுவாங்க.. அதுகெல்லாம் பயந்தா முடியுமா?”, அவள் சிரிக்க, “என் தங்கம்”, என்று கன்னம் வழித்து அம்பிகா முத்தம் வைக்கப் பாக்கியத்திற்குப் பற்றிக் கொண்டு எரிந்தது.
அவர் எரிந்து கொண்டிருக்க மற்றவர் சிரித்தால் பொறுக்காதே..
“ஏன் சௌந்தர்யா.. உன் பொண்ணு சம்பாரிச்சு அவ கல்யாணத்து சேத்து வச்சுப்பான்னு பாத்தா.. அவளும் இந்த பொண்ணு மாதிரி எவனாது இளிச்ச வாய் வரதட்சணை வாங்கமா ஓசில கிடைப்பான்னு சம்பாரிக்கிற காசெல்லாம் முகத்துக்கு பூசரதுலேயும்.. புடவையிலயும்.. கையில கழுத்துல போடுற பித்தளைலயும் செலவு பண்றா போல..”, என்று குத்த சௌந்தர்யா மகளைப் பார்த்தார்.
அம்மா வருவார் என்று அவள் கனவா கண்டாள். ‘மனோ.. மாட்டி விட்டுடீயே..’, அம்மாவைப் பார்த்து இளித்து வைத்தாள்.
“அவளுக்கு வேணுங்கிறத போட்டு அவளுக்கு கல்யாணம் பண்ண பெத்தவங்க நாங்க இருக்கோம் க்கா. அவ ஆசைக்கு வேலைக்கு போற! அவ உழைப்பில வரத என்ட்ட சொல்லிட்டு அவ விருப்பம் போல செலவு பண்றா. இதுல என்ன தப்பிருக்கு? இந்த வயசுல போட்டு அனுபவிக்காம வேற எப்போ அனுபவிப்பா? நான் தான் உனக்கு பிடிச்சதா போட்டுக்கோன்னு சொல்லிட்டேன்! போற இடத்துக்கு ஏத்த மாதிரி ட்ரெஸ் பண்றதுல ஒரு தப்பும் இருக்கதா எனக்கு தோணலையே. எல்லாரும் உங்கள மாதிரி வர முடியாதில்லையா”
பாக்கியா முகம் விழுந்து போனது. பெற்ற மகனால் மானம் போனதாக எண்ணினார். அவன் அடங்கிப் போயிருந்தால் பார்ப்பவர் எல்லாம் எதிர்த்துப் பேசுவார்களா?
“இப்பிடி பேசி தான் இன்னைக்கு உன் மகன் கல்யாணத்துக்கு காட்டன் சாரில யாரோ மாதிரி வந்து நிக்குற. ஒத்த மகன் கல்யாணத்த ஊரறிய பண்ண முடியல இங்க வந்து நின்னு வாய் பேசற! பட்டும் அறிவு வரல! அடுத்து ஒரு பொண்ணு இருக்கு… இப்படியே பேசிட்டு இருந்தா அவ தான் உன் தொல்ல தாங்காம எவன் கூடவாது ஓடி போவா. வாய அடக்கு. மத்தவங்கள உதாசினப்படுத்தாத! நாம ஒன்னும் வானத்துல இருந்து குதிக்கல. இங்க இருக்க மத்த பொம்பளைங்க யாராவது இப்பிடி பேசறாங்களா? உனக்கு மட்டும் ஏன் வாய் இந்த நீளம். சத்தம் வர கூடாது சொல்லிட்டேன்.”. எச்சரித்தது உடன் பிறப்பு, திருநாவுகரசு! முன்பே செய்திருக்க வேண்டும்!
இது என்ன பார்ப்பவர் எல்லாம் கூட கூட பேசிக் கொண்டு? பாக்கியாவால் நிற்க முடியவில்லை. வாயை அடக்கவும் தெரியவில்லை!
சௌந்தர்யாவை பார்த்த எஸ்தர், “நீங்க தான் அலர் அம்மாவா? ரொம்ப நாளா உங்கள பாக்கணும்ன்னு ஒரு ஆசை. நான் எஸ்தர்..” என்று ஆரம்பித்து.. “அறிவும் அடக்கமும் திறமையும் அன்பும் அழகும்ன்னு எல்லாம் இருந்தும் துளி கர்வம் இல்ல உங்க மகட்ட. அவ எல்லா திறமைக்கு பின்னால இருக்க அம்மா அப்பாவ பாக்கணும்ன்னு ரொம்ப நாள் ஆசை இன்னைக்கு நிறைவேறிடுச்சு! பொண்ண ரொம்ப நல்லா வளத்துருக்கீங்க..”, அலர் கைப்பிடித்துக் கொண்டே புன்னகை முகமாய் பேச சௌந்தர்யாவிற்கு மனம் பூரித்துப் போனது. எஸ்தர் பாக்கியாவை வெறுப்பேற்ற கூறினாரோ.. உணர்ந்து கூறினாரோ? சௌந்தர்யாவிற்கு அது கவலை இல்லை… பாக்கியா முகம் விழுந்துபோனதே வயிற்றில் பாலை வார்த்தது!
முகத்தை திருப்பிக் கொண்ட பாக்கியா கவனம் மணமக்களிடம் சென்றது.
மணப்பெண் ஜொலித்தாள். ‘எல்லாம் கல்லுவச்ச பித்தள போட்டுட்டு வந்து உக்காந்திருக்கு! என் மானம் மரியாதை எல்லாம் குழி நோண்டி புதைச்சுட்டான்’ என்று கருவியவர் கவனம் அடுத்துச் சென்றதோ மகன் மடிமீது!
மகன் மடியில் நீல நிற மலர்க்கூட்டம் போல் அழகு பொம்மை ஒன்று மாதவன் கழுத்தைக் கட்டிக் கொண்டும் அவன் முகத்தில் முட்டி விளையாடிக் கொண்டும், மகளின் முதல் வார்த்தையான ‘டா டா’-வால், அவனை மெய்மறக்கச் செய்து கொண்டிருந்தது.
பார்த்து நின்றவர் அனைவர் முகத்தில் புன்சிரிப்பு.. மீண்டும் பாக்கிய முருங்கை மரம் ஏறினார். மகனுக்கு ஏன் புத்தி தடுமாற வேண்டும்? கணவனின் மேலதிகாரி மகளை முடித்து டன் டன்னாக வரதட்சணை வாங்கி பெருமை பீத்த நினைத்த நினைப்பில் மண்ணள்ளிப் போட்டவள் மேல் ஏகத்திற்கும் கோபம் வந்தது. அப்படி என்ன இவளிடம் கண்டுவிட்டான் என்ற கோபம். ‘வெள்ளைத் தோலை காட்டி மயக்கினாளா இல்லை கொள்ளை கொள்ளும் அழகு குழந்தை வைத்து மயக்கினாளா?’ தாய் மேல் வெறுப்பு! அவள் குழந்தை மேல் எரிச்சல்.
“எவனுக்கோ பொறந்தத இவனால எப்பிடி கூச்சமே இல்லாம கொஞ்ச முடியுது? அதுவும் இவன அப்பாங்குது!”, சத்தமாகவே முணுமுணுத்தார். மாதவன் பாக்கியாவைப் பார்த்தான். அவர் பேச்சு பிடிக்கவில்லை என்றது பார்வை.
“வாய மூடு பாக்கியா!”, அரசு உறுமினார்.
சிலர் அப்படி தான்.. அவர்களே நினைத்தாலும் அவர்களை மாற்றிக் கொள்ளமுடியாது. பாக்கிய அந்த வகையைச் சேர்ந்தவர். நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்ன? அவரவர் மரியாதை அவரவர் நடத்தையில் என்பதைப் புரிந்து கொள்ளமுடியாத வயசில்லை என்றாலும் அது அவருக்குப் புரியவில்லை தான். இப்படியே போனால் மகன் அவருக்கில்லை என்பதை உணர்வாரா?
