Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ23_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால்..23_2

 

காலை நேரம் ரசனையோடு புலர்ந்தது. மார்க், ஆட்ரேயோடு நேரம் சென்றது. மனோவும் மார்க்கும் பேன்கேக் சுட்டுக் கொண்டு வந்தனர். குட்டி குட்டி கல்தோசை போல் இருந்தாலும் கொஞ்சம் இனித்தது. அதன் மேல் ஊற்றின மேப்பிள் சிரப்பும் தேன் போல் இனித்தது. இனிப்போடு ஆரம்பித்த காலை நாள் முழுவதும் அதன் இனிப்பைத் தக்கவைத்துக் கொண்டது.

 



Advertisement

“உன் கூட கெஸ்ட் ஹௌஸ்ல இருக்க போற பொண்ணுட்ட பேசினியா? அவ எப்போ வருவாளாம்?”

 

“அவ அம்மா வீட்டுக்கு போயிருக்காளாம் மனோ. சண்டே நைட் எட்டுக்கு மணிக்குக் கண்டிப்பா வந்துடுவேன்னு மெசேஜ் பண்ணியிருந்தா. சாவி வீட்டு வாசல்ல இருக்க மூனாவது தொட்டிக்கு அடியில இருக்காம் எடுத்துக்க சொன்னா..” பேசிக்கொண்டே நகரத்தை உலா வந்தனர்.

Advertisement

 

Advertisement

“எனக்கு இந்த செடி வேணும் மனோ..”, ஒற்றை தொட்டியில் ஒரு முழ நீள செடியில் கொத்தாய் பூத்திருந்த க்ரேப் ஹாயசிந்தை கையில் ஏந்தியவள் முகத்தில் அத்தனை பூரிப்பு.

 

“அடுத்து எங்க போறோம் மனோ?”

Advertisement

 

“இது ஸ்ப்ரிங் சீசன். உனக்குத் தான் இந்த பூ பிடிச்சிருக்கே.. அது கொட்டி கிடக்கிற இடத்துக்கு. நதி பாத்திருக்கியா? வழியில பாறை இருந்தா அதை சுத்திக்கிட்டு ஓடுற நதியில, ஆயிரம் பூ கொத்தா மிதந்து வந்தா எவ்வளவு அழகா இருக்கும். அந்த மாதிரி ஒரு நிலத்தில பார்க்கலாம்”, என்றபோது கூட மலர் நதியை அவள் எதிர்பார்க்கவில்லை.

 

நதி தான். ‘பல்ப் ரிவர்’ என்றான் அந்த இடத்தை. 35000 பர்புள் நிற மலர்கள் மரத்தையும் செடிகளைச் சுற்றி நிதி பாய்ந்து வருவது போல் தோற்றம் அளித்தது. அதன் ஓரத்தில் அங்கும் இங்குமாக 1500 மஞ்சள் டஃப்படில் பூக்கள்.

 

“வாவ் மனோ… நிஜமாவே வாவ் மனோ..”, இன்பத்தில் திளைக்கவே வேறு வார்த்தை தெரியவில்லை. நேற்று தானே பார்க்க விரும்பினாள்? வோர்ட்ஸ்வொர்த் கவிஞனும் இப்படி தான் விழிவிரித்து மயங்கியிருப்பாரோ?!  மனம் நெகிழ்ந்தது. இறுக்கி பிடித்த அவன் கையை வீடு வந்த பின்னரும் விடவே இல்லை. அடுத்த நான்கு மணி நேரமும் அவன் ஒற்றை கையில் காரை ஓட்ட அவன் வலது கை அவள் இடது கைக்குள் புதைந்திருந்தது.

 

‘அவ்வளவு தானே.. விட்டுவிட்டுச் சென்று விடுவானே..’ இதயம் கனக்க பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் அதே சிந்தனையோடு, ஜெட் லாகில்(jet lag) உறங்கியும் போனாள்.

 

நான்கு மணி நேரப் பயணம், வழக்கத்திற்கு மாறாக சாலை நெரிசலால் ஆறு மணி நேரம் என்று இழுத்தடித்தது. இரவு பத்தானது அந்த அடுக்கு மாடி குடியிருப்பு வந்து சேர. கார் நிற்கவும் அவள் குலுங்கி அரண்டு போய் அமரவும் சரியாயிருந்தது.

 

அலர்விழி முகம் வெளிறிப் போயிருக்க.. “என்ன டி அச்சு? விழி.. பேசு.. என்ன?”, பதறிப் போனான்.

 

“கனவு மனோ.. அண்ணா மனோ..”, என்றாள்.

 

“அட ச்சா.. கனவுக்கா இந்த ரியாக்ஷ்ன்? நான் கூட பயந்துட்டேன்.. வா போலாம்”

 

அவள் கனவுகளின் வீரியம் அவன் அறியாதது. ஆனால் அவளுக்குத் தெரியுமே. மாதவனை அழைத்தாள். “ண்ணா.. கனவுண்ணா..”, என்றாள் பதட்டம் குறையாமல்.

 

“என்ன அலர்? கெட்ட கனவா டா?”, அதில் என்ன கண்டாளோ?

 

“ஆக்ஸிடென்ட் ண்ணா.. நீ என்ன கார் வச்சிருக்க?”

 

“மாஸ்தா. ஏன்?”

 

“அது லோகோ உருண்டைக்குள்ள v இருக்குமா?”

 

“ம்ம் ஆமா..”

 

அவளிடம் பேச்சு மூச்சில்லை. கண் குளமாக ஆரம்பித்தது. “நீ உன் வாழ்க்கையில அந்த கார ஓட்டவே கூடாது. சத்தியம் பண்ணு. நீ அண்ணி.. பாப்பு வினோ அத்தான்… யாருமே அதுல போகக் கூடாது..”

 

“சரி.. போகல. இத வித்துடுறேன். நீ அழாம என்னன்னு சொல்லு டி.”

 

“ஃபாரின் ரோடு.. தல கீழா காரு.. பத்திட்டு எரிஞ்சுதுண்ணா. ஓட்டிட்டு இருந்தவனும் உள்ள தான் இருந்தான்.. யாருன்னு தெரியலண்ணா. பயமா இருக்குண்ணா. கார் கரிஞ்சு போகவே கலர் கூட தெரியல. கருப்பா இருந்துதுண்ணா..”, கொட்டி தீர்த்தாள். “மாஸ்தா ஓட்டாதண்ணா.. ப்ளீஸ்”

 

எபி, அவள் பெட்டிகளை எடுத்து அவளுக்கான அறையில் ஒதுங்க வைத்து கொண்டிருந்தாலும் காதில் விழுந்ததை எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று அவனுக்கு தெரியவில்லை. ஒரு கனவிற்கு ஏன் இத்தனை பயம் என்று தான் எண்ணினான். அவளிடம் கேட்கவும் செய்தான்.

 

“கனவுன்னு சொல்ல முடியாது மனோ அத. ஒரு விஷன் மாதரி வரும். அது கண்டிப்பா நடக்கும்”, என்று அவள் கைப்பேசியின் மாதவனும் அபியும் ஆஸ்திரேலியா கடற்கரையில் நின்றிருந்த ஒரு புகைப்படத்தைக் காட்டினாள்.

 

“இத நான் என்னோட ஃபர்ஸ் இயர் லீவ்ல கனவா பார்த்து இருக்கேன். அண்ணா போனா வாரம் அனுப்பினாங்க. இது முதல் தரம் இல்ல… இந்த மாதிரி கனவு எப்போவாது வரும்.. என்னைக்காது ஒரு நாள் நடந்தே தீரும்! ஆனா இந்த தரம் யார் கார்.. யார் அந்த கார்ல்ல இருந்தாங்க.. ஒன்னுமே தெரியல. உள்ள ஆள் இருக்கும் போதே பத்திக்கிட்டு எரியுது. பயமா இருக்கு மனோ”, என்றவள் மனோ கைக்குள் சுருண்டாள்.

 

“ஏன் மாதவன்னு நினைச்ச?”

 

“அந்த கார் ஃப்ரண்ட் கண்ணாடி ஒடஞ்சு உள்ள இருந்த AM-ன்னு ஒரு கீ செயின் வெளில கிடந்துது. அந்த மாதிரி ஒண்ண தான் அண்ணி அண்ணாக்கு கல்யாணத்தன்னைக்கு குடுத்தாங்க. அண்ணாக்கு ஒண்ணும் ஆகதே மனோ..”. கண்டது அண்ணன் என்றே மனம் நம்பி கதறியது.

 

“ஒண்ணும் ஆகுது டா.. யாரா இருந்தாலும், கண்டிப்பா  சின்ன காயத்தோட தப்பிச்சுடுவாங்க..”, நெஞ்சோடு சாய்த்து தலை வருடி விட்டான்.

 

“தப்பிச்சுடுவாங்க இல்ல மனோ?”

 

“ம்ம் தப்பிச்சுடுவாங்க டா.. ஃபாரின்ல தானே நடக்கும்.. அங்க சட்டுன்னு போலீஸ் ஆம்புலனஸ் எல்லாம் வந்துடும்.. ஒண்ணும் ஆகதுன்னு மனசுல ஏத்திக்கோ. நல்லத மட்டுமே நினை”

 

“அண்ணான்னா எனக்கு உயிர் மனோ.. கார வித்துடுவான் தானே”.

 

“உன் நிம்மதிக்காகவே குடும்பத்துல யார் கிட்ட மாஸ்தா இருந்தாலும் வித்துடுவாங்க. நீ பயப்படாத டி.”

 

“ம்ம்”. வெகுநேரம் பிடித்தது உறக்கம் கண்களை வந்தடைய. அன்றைய இரவும், மெத்தையும் சோஃபாவுமாக கழிந்தது.

 

மறு நாள் நடந்து சென்று அலுவலக கட்டிடத்தைப் பார்த்து வந்தனர். புது கைப்பேசியும் புது எண்ணும் வாங்கி கொடுத்தான். அருகிலிருக்கும் கடைகளுக்குச் சென்று வேண்டிய உணவு வகைகளை வாங்கி அடுக்கினர்.

 

அவள் சமைக்க… நீண்ட நாளுக்குப் பின் வாய்க்கு ருசியாய் உண்டான். கடைசியாக வீட்டில் அவள் சமையலை உண்டது அதன் பின் இன்று மீண்டும் அவள் சமையல்.

 

நேரம் சென்றது.

 

“குடுக்க மறந்துட்டேன் பார்! இத படி.. கார் ஓட்ட பழகிறதுக்கு முன்ன இந்த டெஸ்ட் பாஸ் ஆகணும். பொறுமையா படி”, என்று ஓட்டுநர் உரிமத்திற்கான தேர்வு புத்தகத்தைக் கொடுத்தான்.

 

மாலை நான்கு என்று கடிகாரம் காட்ட, இருவர் முகமும் சோர்ந்து போக ஆரம்பித்தது. இனி என்று பார்க்க முடியும்? தெரியவில்லை.

 

“செலவுக்கு வச்சுக்கோ..”, என்று பணத்தையும், “இந்த கார்டையும் வச்சுக்கோ. என்ன வேணும்மோ வாங்கிக்கோ..”,  என்று க்ரெடிட் கார்டையும் கொடுத்தான்.

 

எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டாள். கொடுத்தல் வாங்கல் எல்லாம் கணக்கில் நிற்பதில்லை என்ற நிலை அவர்களிடம்.

 

“கிளம்பட்டா..?”, விழியின் விழி பார்த்து நின்றவனுக்குப் போக மனமில்லை. கேட்டு நின்றவளுக்கும் அனுப்ப மனமில்லை! அவனும் மறுநாள் கல்லூரி செல்லவேண்டுமே. என்ன சொல்ல?

 

“பத்து நிமிஷம் இருங்க மனோ. டீ குடிச்சுட்டு போலாம்..”, நேரம் கடத்த உக்தி கண்டுபிடித்தவளாய் அவன் முகம் பார்த்தாள்.

 

“மசால டீ போடேன்..”, இன்னும் ஐந்து நிமிடம் கூட எடுத்துக் கொள்ளேன் என்று நினைத்திருப்பான் போலும்.

 

அவள் அடுக்களை செல்ல.. சோஃபாவில் அமர்ந்துகொண்டவன் பார்வையும் சிந்தனையும் விழி மீது உரசி நின்றது. முதுகைக் காட்டி நின்றிருந்தாள். தள்ளி இருக்க முடியாமல் எழுந்து சென்றான்.

 

இரு தோளிலும் கை பதியவுமே.. இடி வாங்கிக் கொண்டிருந்த இஞ்சி  இளைப்பாறியது. அசைவில்லாமல் நின்றிருந்தவள் கை வழியே இறங்கிய அவன் உள்ளங்கை அவள் விரலோடு பின்னிக் கொண்டது.

 

“விழி”, என்றான், அவள் கையோடு சேர்த்து இடையைக் கட்டிக்கொள்ள, நெஞ்சோடு சாய்ந்து கொண்டாள். அவன் கன்னம் அவள் தலையில் பதிய இருவரும் சிலையாய் நின்றனர். இருவர் மனதிலும் தாகம். தணியாத தாகம்.. கூடவே இருக்க முடியாத என்ற தொடுவானத்தைத் தொடும் ஆசை.

 

அரை மணிநேரம் சென்றது. டீ கோப்பையை அடுக்களைக்குள் வைத்தவளுக்கு மனோவிற்கு விடை கொடுக்க பிடிக்கவில்லை.

 

வாசல் கதவு வரை சென்றாள். “நீ கீழ வர வேண்டாம்.. நான் கிளம்பறேன். எதுனாலும் கூப்பிடு.. என்நேரம்னாலும் கூப்பிடு. வரேன்.”, கன்னம் தட்டி பத்திரம் சொன்னான்.

 

கண்கள் பனிக்க.. “ம்ம்” என்றாள்.

 

வெளியே செல்ல கால் வைத்தவன் என்ன நினைத்தானோ.. உள்ளே வந்து அணைத்துக் கொண்டான்.

 

“பாத்து இருந்துக்கோடி..”, இதயம் படபடத்தது. தனியாக விட்டு செல்லும் படபடப்பு அது. அலர்விழியின் அம்மா, அப்பா, நகு என்று அனைவரின் தவிப்பையும் ஒன்றாய் அனுபவித்தான்.   

 

அணைத்தவனை பிரியும் பாரம் தாங்காமல் சொட்டு நீர், கட்டுபாடயும் மீறி பெண்ணவள் கன்னத்தை முத்தமிட்டது. தாகம் கொண்டவனின் உதடு சொட்டு நீர் போதாமல் அதன் இணையோடு இணைந்தது.

 

நிமிடங்கள் கரைய.. திண்ணிய மார்பிலிருந்து விலகியவள், “லவ் யூ மனோ..”, என்று விடைகொடுக்க.. நெற்றியில் மீண்டும் இதழ் பதித்துக் கிளம்பினான்.

 

இனித்த ஈர முத்தம் தந்தவன் நினைவோடு அவள் அமர்ந்திருக்க,   அந்த கட்டிடம் தாண்டி எபியின் கருப்பு நிற இன்ஃபினிட்டி (Infinity) சாலையில் நுழைந்தது.

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!