Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ24_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்..

கொல்லை துளசி எல்லை கடந்தால் 24

 

கடும் குளிர் நீங்கி பனி மெல்ல மெல்ல உருகவும் வெள்ளை சட்டையை நீக்கி, அதன் பச்சையில் வண்ண பூ போட்ட சட்டைக்கு பாஸ்டன் நகரம் மாறிக் கொண்டிருந்தது.

 



Advertisement

பனியில்லை என்றாலும், சூரிய ஒளி இருந்தாலும், திறந்திருந்த கம்பியில்லா ஜன்னல் வழி தன்னை தீண்டிக் கொண்டிருந்த மிதமான குளிர் மனதிற்கு இதமாகத்தான் இருந்தது அலர்விழிக்கு.

 

வந்து சில வாரங்களிலேயே ஈஸ்டர் என்று மூன்று நாள் விடுப்பு கிடைக்கவும் பாஸ்டன் வரக்கூறிவிட்டான் எபி.

Advertisement

 

Advertisement

“எனக்கு குட் ஃப்ரைடேக்கும், ஈஸ்டருக்கும் சர்ச் போகணும் விழி. மார்க் அவன் பேரண்ட்ஸ் வீட்டுக்கு போறான். சேட்டர்டே நான் வந்து உன்ன கூட்டிட்டு பாஸ்டன் வந்திடவா?”, என்றதற்கு,

 

“நான் ஒண்ணும் பாப்பா இல்ல. நானே பஸ் பிடிச்சு வரேன். தேவ இல்லாம இங்கேயும் அங்கேயும் அலையாதீங்க”, என்றவள் வெள்ளி இரவே வந்துவிட்டாள்.

Advertisement

 

என்ன கூறியும் சோஃபா தான் சரி வரும் என்று அவன் வெளியே படுத்துவிட, காலை எழுந்து காலைக் கடனை முடித்தவள் கவனத்தை இழுத்தது, ஜன்னலுக்கு வெளியே தெரிந்த நிறங்கள்.

 

தரை முழுவதும் வண்ண வண்ண டுலிப் மலர்கள். கண்களை மேலே உயர்த்த, கண்கள் விரிந்தே நின்றது.

 

மரம் முழுவதும் பூவை மட்டும் தாங்கி நின்ற சாசர் மெக்னோலியாவை (Saucer Magnolia) பார்க்க இரண்டு கண்கள் போதவில்லை. இதழின் உள்ளே இளம் சிகப்பும், வெளியே அடர் பர்புளும் கலந்த அந்த பெரிய பெரிய பூக்கள் தாங்கி நின்ற மரத்தில் இலைகள் என்று எதுவும் இல்லை. மணம் வீசும் மலர்.. மலர்.. மலர் மட்டுமே. இரண்டு கைக்கொண்டு ஏந்திக் கொள்ளலாம் ஒற்றை மலரை.

 

மலரில் லயித்திருந்தவள் கவனம் அதில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்த மூன்று பளீர் சிகப்பு பறவைகள் மேல் விழுந்தது. கூகுள் அதை ஆண் ‘கார்டினல்’ பறவை என்றது. அது விளையாடவில்லை, தன் ஆண்மையைப் பறைசாற்றிக் கொள்ள சண்டையிட்டு கொண்டிருப்பதாய் கூகிள் விளக்கியது.

 

வெற்றி பெற்ற ஒற்றை பறவை மரத்தில் அமர்ந்து பாட ஆரம்பித்தது. இனிமையான ஒலியை எழுப்பியது. பெண் பறவையை ஈர்க்க அது படவேண்டிய பாடுகளில் ஒன்று இந்த இசை! ராகம் தாளம் பல்லவி என்று என்னவெல்லாம் உண்டோ எதுவும் பிசறாமல்.. பிழையில்லாமல் பாடிக் காட்ட வேண்டும். `கார்டினல் சாங்` என்பது நாம் அதற்குக் கொடுத்த பெயர். பிறந்த 60 நாட்களிலிருந்தே பாடல் கற்க ஆரம்பிக்குமாம்! ஒரு கோடி முறை பயிற்சி செய்தபின் தான் சரியான ஸ்ருதி வரும் போல!

 

தன் தொண்டை கிழியப் பாடிகொண்டிருந்தது கார்டினல். பளிச்சென்ற சிகப்பு அலகும், பளீர் என்ற சிகப்பு இறக்கைகளும், கரு கருத் தாடி போன்ற முகத்தை சுற்றிய நிறமும் கூட அதி முக்கியம் அதன் உடல் ஆரோக்கியத்தைப் பெண் பறவை தெரிந்த கொள்ள.

 

ஒற்றை, சாம்பலும் பழுப்பும் கலந்த சிகப்பு அலகை கொண்ட பெண் பறவைக்கு இதை சுமாராய் பிடித்துவிட்டது போலும்.. அது கிளை விட்டுக் கிளை தாவ, இதுவும் பதின்ம வயது பையன் போல் அதன் பின்னே தாவிக் கொண்டிருந்தது. அது பறக்க.. இதுவும் பறந்தது. அது அமர, இதுவும் அமர்ந்தது. கூடவே ஆண் பறவை வருமா இல்லை வேலை முடிந்ததும் பதியில் கழட்டி விட்டுவிடுமா என்ற அடுத்த சோதனையிலும் அந்த சிகப்பு கார்டினல் வெற்றி பெற்றது.

 

ஆக.. ஒரு குட்டி ஆண் பறவைக்கு, இணை கிடைக்க வேண்டிமென்றால் இத்தனை பாடுபட வேண்டும்! அதோடு நின்றால் பரவாயில்லை.. ஆண் பறவை, அதன் இணையோடே இருந்து பெண் பறவையும் அதன் குஞ்சுகளையும் காத்து போஷிப்பிக்கும் என்று நிரூபிக்க, தானியங்களை கொண்டு வந்து பெண் பறவைக்கு ஊட்ட வேண்டும். இதில் வெற்றி பெற்றால் மணமாலை சூட்டிகொண்டு அதன் அதி முக்கிய வேலையான இனப்பெருக்க வேலையை ஆரம்பிக்கலாம்.

 

மரங்களில் பறவைகளுக்காகத் தொங்க விட்டிருந்த தானிய ஊட்டியிலிருந்து (bird/seed feeder) ஒரு விதையோடு ஆண் பறவை சாம்பல் பறவையை நெருங்க, பெண் பறவை அதன் முழு அலகையும் திறந்து காட்ட.. ஆண் அலகு அதன் வாய்க்குள் நுழைய.. ‘ஆ’வென்று பார்த்து கொண்டிருந்தவள் பார்வை சட்டென்று மறைக்கப்பட்டது.

 

பார்வையை வலிய கரம் மறைத்திருக்க, காது மடலில் மீசை முடி உரைய, “என்னது இது காலையிலேயே ஷோ பார்த்து கிட்டு?”, என்றவனை அங்கு எதிர்ப்பார்க்கவில்லை என்றது அவள் திகைப்பு.

 

மலரின் வாசம் பொதிந்த குளிர் காற்று தேகத்தை வருடும் சுகம் ஒரு பக்கம், மேசை மேலிருந்து வரும் சூடான காபியின் நறுமணம் ஒரு புறம்.. வலிய உள்ளங்கையின் கதகதப்பு ஒரு புறம்.. தொட்டும் தொடாமலும்.. பட்டும் படாமலும் நின்றவன் தேக தீண்டல் ஒரு புறம் என்று பெண் ஒரு நொடி தன்னை மறந்து மயங்கி நின்றாள்.    

 

ஜன்னலின் பக்கச் சுவரில் முதுகைச் சாய்த்துக் கொண்டு அவள் முகம் பார்த்து நின்றவனுக்கு முகம் காட்ட வெட்கினாலும் காபி அருந்திக் கொண்டே கண்கள் மீண்டும் பறவையைத்தான் தேடியது.

 

“அது போயிடுச்சு..”, என்றவன் முகத்தில் மந்தகாச புன்னகை.

 

“எல்லாம் உங்களால..”, அலுத்துக் கொண்டாளாம்.

 

“நான் துரத்தலையே..”, காபியை விழுங்கி கொண்டிருந்தாலும் புன்முறுவல் நீண்டது.

 

“ம்ம்கும்…”, சிணுங்கலுக்குள் சிரிப்பை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.

 

“அம்மணிக்கு காலைலேயே நல்ல கிளுகிளுப்பா படம் பாத்த எஃபக்ட் போல..”, அவன் கேசம் கோதி சிரித்தான்.

 

பொங்கி வந்த சிரிப்பைக் கடைசி மிடரோடு விழுங்கினாள்.

 

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல. அது டெஸ்ட்ல பாஸ் ஆச்சான்னு பார்த்தேன்!”

 

டெஸ்ட் என்றதும் படிப்பாளிக்கு ஆர்வம் கூடியிருக்க வேண்டும்! “என்ன டெஸ்ட்?”, என்றான் குரலில் அந்த ஆர்வத்தைக் காட்டி.

 

அவன் ஆர்வம் பிடித்துப்போக, தான் கூகிளில் பார்த்ததை பகிர்ந்துகொண்டாள்.

 

“கார்டினல்? ம்ம்ம்…. வெரி இன்ட்ரெஸ்டிங்!”

 

“அத விட இன்ட்ரெஸ்டிங் ஒண்ணு இருக்கு. இந்த பறவை நாம இருக்க இடம் கிட்ட வந்து.. அத நாம பாத்தா, நம்ம மனசுக்கு நெருக்கமானவங்க நம்மள தேடி பாக்க வந்திருகாங்கன்னு அர்த்தமாம்

 

`ஏன் டி?` என்பது போல் பார்த்தான். “உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்ல?”

 

“இல்ல! சின்ன சின்ன நம்பிக்கை இதெல்லாம். காக்கா வந்து சாப்பிட்டா நம்ம முன்னோர் வர மாதிரி நினைச்சுக்கிறோம் இல்லையா அது மாதிரி”

 

“எனக்கு காக்கா.. காக்கா மட்டும் தான்! அதே மாதிரி கார்டினலும் கார்டினல் தான்! இந்த கதை நம்ப மாட்டேன். முன்ன சொன்னீயே அத வேணும்ன்னா நம்பறேன்.”

 

“ஆமா ஆமா அறிவாளி அறிவுபூர்வமா சொன்னா மட்டும் தான் நம்புவார்! சின்ன பறவை. அதுல கூட ஒரு பெண் பறவைக்கு எவ்வளவு அறிவு. பின்னாடியே சுத்தறான் காதலிப்போம்ன்னு போகமா.. அது அழகா இருக்கா, ஆரோகியமா இருக்கா, அது இணைக்காக அது வளத்துக்க வேண்டிய திறமைய சரி வர பிழை இல்லாம பாடுபட்டு, விடா முயற்சியோட கத்துகிச்சா, வேலை முடிஞ்சதும் ஓடி போயிடாம, கூடவே இருக்குமா? முட்டைய அடைகாக்கும் போது தனக்கும், குஞ்சு பொரிச்ச பிறகு குஞ்சுகளுக்கும் சாப்பாடு குடுக்குமான்னு பாத்து, கவனிச்சு அதோட துணைய தேர்ந்தெடுக்குது. ஆனா இவ்வளவு அறிவிருந்தும் மனுஷங்க தான் தேர்ந்தெடுக்க வேண்டிய வயசுல, வயசு கோளாருல கோட்டை விட்டுறாங்க!”

 

“மேடம் எப்பிடி? டெஸ்ட் வச்சு தேடினீங்களாக்கும்?”, புன்னகை மீண்டும் இதழில் ஒட்டிக் கொண்டது.

 

“அது தான் சொன்னேனே.. சிலர் வயசு கோளார்ல்ல, எதையாவது பாத்து மயங்கி கோட்டை விட்டுடுறாங்கன்னு..”, வாய் மூடி சிரித்தாள்.

 

மயக்கும் குரலில், “எத பாத்து மயங்கினீங்களாம்? சொல்லுங்க மேடம்”, சுவரோடு சாய்ந்து நின்றவன் எதிரில் நின்றவளை இழுத்து தன் மேல் போட்டு, இடையை கட்டிக் கொள்ள, “பச்.. என்ன இது? நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல மனோ..”, அவனுக்குத் தெரிந்ததை நினைவு படுத்தினாள்.

 

“ஹலோ.. எனக்கு எல்லா ரைட்ஸ்சும் இருக்குமா.. சும்மா நெளியாத. அப்புறம் ஏதாவது செஞ்சிட போறேன்.”

 

“தாராளமா செய்ங்க! ஆனா அதெல்லாம் கல்யாணம் நடக்கட்டும்.. அதுக்கு அப்புறமா செய்ங்க!”

 

“ஏன் டி நல்ல வரன் வந்ததும் கழட்டி விடலாம்ன்னு ப்ளானா?”

 

“ஆஹா.. சார் தான் ஓரே ரூம்ல இருக்க பயந்து ஓடுறீங்க! அப்போ அதுதான் உங்க ப்ளானா?”

 

“இந்த ரூம்ல படுக்க ஒரு கட்டில் தான இருக்கு. ரெண்டு பேரும் ஒரே கட்டில்ல? அது எல்லாம் சரி வராது விழி. இது, இந்த மாதிரி கொஞ்சல் வேற.. ஒண்ணா படுக்கைய ஷேர் பண்றது வேற. எனக்கு கல்யாணத்துக்கு முன்ன உடலுறவுல ஈடுபாடு இல்ல விழி”

 

“ஏன் மனோ.. உங்க வீட்டுல வேண்டாம் சொல்லிட்டா அப்போ, குற்ற உணர்வு இல்லாம என்னை விட்டுடலாம்ன்னு நினைச்சீங்களா?”

 

“லூசு மாதிரி உளறாத விழி. இப்போ நீயும் நானும் என்ன தான் ஒன்னுக்குள்ள ஒன்னா இருந்தாலும் நாம வெறும் லவர்ஸ் தான். ஏதோ அவசரத்துல உன் வயத்துல ஒரு பிள்ளைய குடுத்துட்டு நாலு பேர் நடுவில உனக்கு தலகுனிவு வர மாதிரி நானே நடந்துக்க முடியுமா? தாலிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு அதுக்கப்புறம் ஒண்ணா வாழ்ந்தா தான் அந்த உறவுக்கு அழகு. நமக்கும் மரியாதை.”

 

“நாம மட்டும்ன்னா நீங்க எங்கேயாது படுங்க யார் கேட்டது. பக்கத்து ரூம்ல அந்த பொண்ணு இருக்கும் போது நீங்க வெளில படுக்கிறது தான் என்னவோ போல இருக்கு மனோ. ஒரே ரூம்ல படுத்தா அது நடந்து தான் ஆகணுமா என்ன? கட்டுப்பாடுன்னு ஒண்ணு இல்லியா நமக்கு?”

 

“உனக்கு எப்பிடியோ.. சத்தியமா எனக்கு இல்ல விழி. உன்ன பக்கத்திலேயே வச்சுக்கிட்டு வேடிக்கை பாக்குற அளவுக்கு நல்லவன் இல்ல டி உன் மனோ. அதுவும் அன்னைக்கு உன்ன அப்படி பாத்த பிறகு..? ம்ம்கூம்”

 

“எப்பிடி பாத்தப்பறம் மனோ?”, பெண்ணிற்குப் புரியவில்லை.

 

‘அவுச்! உளறியாச்சு! சொன்னா சாமி ஆடுவாளே..’

 

மறைக்க எதுவும் இருப்பதாக இல்லை என்று தோன்றினாலும், “அது.. அன்னைக்கு.. எப்போவோ நடந்துது. இப்போ கேட்டா..”, உண்மையிலுமே உளறினான்.

 

“என்ன நடந்துது மனோ? என்ன பாத்தீங்க”

 

“சொல்லியே ஆகணுமா டி?”, பாவம் போல் பார்த்து வைத்தான்.

 

“என்ன மனோ? திருட்டு முழி முழிக்கிறீங்க. ஏதோ சரி இல்ல. ஒழுங்கு மரியாதையா சொல்லுங்க”

 

“அது.. மாதவன் கல்யாணத்துக்கு முந்தின நாள், நாமா பேசீட்டே இருந்தப்போ.. நீ ட்ரெஸ் மாத்துன இல்ல.. அப்போ கேமரா..”

 

அவள் கண் மூடி இதழ் கடிப்பதைப் பார்த்ததுமே அவன் கூறுவதை நிறுத்தினான்.

 

“விழி..”

 

மெல்ல அவன் மார்பிலிருந்து நகர்ந்தாள்.

 

“விழி”, தோளில் கைவைக்க, மெல்ல எடுத்துவிட்டாள். திரும்பி நின்றவளுக்கு  மூச்சு அடைத்துக் கொண்டு வந்தது. கண்ணீர் முட்டிக் கொண்டு வர, எப்படியோ போலானது.

 

அவள் முன் வந்து நின்றான். “ஏய் ஏதாவது சொல்லு டி. கோபமா?”

 

இல்லை என்பது போல் தலையாட்டினாள்.

 

“நான் தானே விழி.. நீங்கிறனால தானே. என்னை பாரேன்”

 

நாடி பிடித்து முகத்தை உயர்த்த, கட்டி நின்ற நீர் வெளி வராமலே உள்சென்றது. வேறொரு நாள் வருமாய் இருக்கும்! இன்றே வந்திருக்கலாம்!

 

“தப்புன்னு தோணவே இல்லியா மனோ?”

 

“பச்!” இல்லை என்பது போல் தலையசைத்தான்.

 

“எப்பிடி மனோ? உங்கள நம்பி தானே அன்னைக்கு…? பச்! நீங்க செஞ்சது நம்பிக்கை துரோகம் மனோ!” 

 

“நீ எனக்கு மட்டுமே சொந்தம்… சோ எனக்கு தப்பாவே தோணல! தேவ இல்லாம வார்த்தையை விடாத. நீ என்னை நம்பல! நம்பாம, ஃபோன திருப்பி வச்சுட்டு தான் போன! நீ மட்டும் நம்பி ஃபோன திருப்பாம போயிருந்த.. நான் குனிஞ்ச தலை நிமிராமலே உக்காந்திருப்பேன். எல்லாம் நீ என்னை நம்பாம போகவே தான் இப்பிடி ஆகிடுச்சு! சோ.. இது நம்பிக்கை துரோக லிஸ்ட்ல வராது போடி!”

 

“நீங்க தப்பு செஞ்சுட்டு.. என் மேல திருப்பறீங்க! துரோகம்ன்னு கூட புரியலியா? பச்.. போங்க மனோ”

 

“வேற எவளையாவது பாத்தா தான் தப்பு! அது தான் நான் உனக்கு பண்ற துரோகம்! சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசாத!”

 

அவள் அமைதியாகவும், “என்ன டி.. இன்னும் கோபமா?”

 

“இல்ல மனோ.. கோபம் இல்ல… வருத்தம். உங்கட்ட எதிர்பாக்கல.. அதுனால எப்பிடியோ போல இருக்கு”

 

“சரிக்கு சரி… பாத்துக்கோ”, சட்டையைக் கழட்ட..

 

“ஏங்க.. என்ன பண்றீங்க?”, பதறி போனாள்.

 

“நீயும் பார்த்துட்ட.. அதுக்கு இது! எல்லாம் ட்டாலி ஆகிடுச்சு! ஓக்கே தானே!?”, சமரசம் பேசினான்.

 

சிரிப்பு வந்தது. “அதுவும் இதுவும் ஒண்ணாக்கும்… மூஞ்சுயும் ஆளையும் பாரு”, கூறினாலும் கண்கள் அலைபாயத்தான் செய்தது.

 

“நல்லா இருக்கேனா டி பட்டு..?”, அவள் வெட்கம் பார்த்து புன்னகை ஏகத்திற்கும் கொப்பளித்தது.

 

“வெக்கமே இல்ல..”, பட்டென்று மார்பில் அடிக்கவும்.. மார்போடு கையை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

 

“கேட்டதுக்குப் பதில் சொல்லு.. கஷ்ட பட்டு உடம்ப, ஆர்ம்ஸ்ச எல்லாம் ஏத்தி வச்சிருக்கேன்..?”

 

“ம்ம்”

 

“என்ன ம்ம்”

 

“எல்லாம் நல்லாதான் இருக்கு.. ஆர்ம்ஸ்சும் ரொம்ப நல்லா சூப்பரா இருக்கு. இப்போ கைய விடுங்க.. கூச்சமா இருக்கு~

 

இழுத்து கட்டிக்கொண்டான்.

 

“பாத்தியா.. யாரவதுன்னா நீ கண்டுப்பியா..? பேசாம திரும்பி போயிருப்ப தான? இப்போ பார்.. நான்னதும் நின்னு பொறுமையா வெக்கமே இல்லாம பாக்குற! கைய விட சொல்லிட்டு வாகா கட்டிபிடிச்சுட்டு நிக்கற! ஏன்? உரிம தான? நானும் அப்பிடி தான்! நான் கெட்ட பையன் தான் பொறுக்கி எல்லாம் இல்ல!”

 

“ம்ம்ம்”

 

“கிளம்பு வெளியில போய் சாப்பிட்டு ஊர் சுத்துவோம்!”

 

“ம்ம்..”, சமாதானம் ஆனாலும் உள்ளுக்குள் சிறிய பொரி ஒன்று கனன்று கொண்டே இருந்தது. நாளடைவில் அணைந்தும் போகலாம், பற்றிக் கொண்டு அவனைக் காயப்படுத்தியும் விடலாம். எல்லாம் காலத்தின் கையில்.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!