Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ24_2 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால் 24..

கொல்லை துளசி எல்லை கடந்தால் 24 (cont..)

 

தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவனும் கிளம்ப, இருவருமாக வசந்த காலத்தின் அழகைப் பருக ஆரம்பித்தனர். பல வகை மலர்களில்.. அதன் நிறங்களில் தன்னை தொலைத்தாள்.

 



Advertisement

தோட்டம் முழுவதும் பூத்துக் குலுங்கிய மெக்னோலியாவில் மெய் மறந்தாள். அவள் அளவிற்கு அவன் அதில் லயித்துப் போகவில்லை என்றாலும் கூட்டிக் கொண்டு ஒவ்வோரு இடமாகச் சுற்றினான்.

 

“ஏன் மனோ ரொம்ப போர் அடிக்குதா? உங்களுக்கு போதும்ன்னா வீட்டுக்கு போலாம் மனோ”

Advertisement

 

Advertisement

அவனும் பாவம் எவ்வளவு நேரம் தான் மரத்தையும் மலரையும் பார்ப்பான். பத்து முறை கொட்டாவியும் விட்டுவிட்டானே!

 

“நீ சுத்தி பாரு! எனக்கு பிரச்சினை இல்ல. இன்னும் ஒரு இடம் இருக்கு. கண் எட்டுற தூரம் வரைக்கும் சிகப்பும் வெள்ளையும் பூ இருக்கும். தலைய தூக்கினா வானமே தெரியாத அளவு கொத்து கொத்து பூவா இருக்கும்! அந்த இடத்துக்கு போலாமா?”, என்றதும் துள்ளலாய் ஆம் என்றாள்.

Advertisement

 

ஜப்பானியரால் பரிசாகக் கொடுக்கப்பட்ட ச்செரி ப்ளாசம் நிறைந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.

 

இலையில்லா மரங்கள் இடத்தை நிரப்பியிருக்க… மரத்தை நிரப்பியிருந்தது இளஞ்சிவப்பு வண்ண மலர்களும், வெள்ளை மலர்களும். அழகான சூழல். அமைதியில்லா பல இதயங்களுக்கு அங்கு அமைதி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. 

 

இடத்தை சுற்றி வரவும் யாரையோ தெரிந்தவரைப் பார்த்திருப்பான் போலும், “ஹாய் கார்த்தி” என்றான் புதியவனைப் பார்த்து.

 

இவனைப் போலவே நல்ல உயரமும் வாட்ட சாட்டமான ஆண்மகன். “ஹெ.. எபி! என்ன இந்த பக்கம்?”, என்றான் கார்த்திக் என்பவன்.

 

“என் ஃபியான்சே (financee), அலர்விழி” என்று அவனிடமும், “இவர் கார்த்திக், இவர் டானி  என் சர்ச் ஃப்ரெண்ட்ஸ். ஒரு வருஷமா பழக்கம்.”, என்று அறிமுகபடுத்தி வைத்தான்.

 

அவர்கள் மூவரும் பேச அலர்விழி டேனியேல் என்பவனின் விழியைத்தான் பார்த்து நின்றாள். நல்ல உயரமும் நல்ல களையான முகமும், வசிகரிக்கும் கண்களும்..கடல் பச்சையில் பழுப்பு கலந்த விழிகளுமாய் பார்ப்பவரை வசீகரித்தான்.

 

லிண்டா என்ற கார்த்திக்கின் மனைவி அவர்கள் குழந்தை ஜோ-வோடு வரவும், அலர்விழி பார்வை ஜோ மீது பதிந்தது. ஒன்பது மாத ஜோ, அங்கிருந்த கோடி மலர்களை விட அழகாகக் தெரிந்தான். யாரிடமும் போக மாட்டான் என்ற குழந்தை அலர்வைழியிடம் தொற்றிக்கொள்ள, கொஞ்சி தீர்த்தாள். 

 

பிஞ்சு விரல்கள் அவள் சுருள் முடியைப் பிய்த்து எடுத்தது. முடியை இழுத்து அதை வாயில் கொண்டு போன செவ்விதழ்களில் தான் எத்தனை பளபளப்பு. சிறிது நேரம் சென்றது. குழந்தை சிணுங்கவும் லிண்டா வாங்கிக் கொண்டு நகர்ந்து சென்றாள்.

 

அடுத்து என்ன செய்வதென்று அலர்விழிக்கு தெரியவில்லை. விழிகளை உருட்டி வேடிக்கை பார்க்க, அதைக் கவனித்த கார்த்தி, “கிளம்புங்க எபி. சிஸ்டருக்கு போர் அடிக்குது போல.”, என்று விடைகொடுத்தான்.

 

“அப்போ.. நாளைக்கு சர்ச்சுல பாப்போம் கார்த்தி.. பை டேனி. ஆல் தெ பெஸ். அப்பாட்ட பேசுங்க.. நானும் சொல்றேன், லோன் கண்டிப்பா கிடைக்கும்!”, என்று ஏதேதோ பேசி, அடுத்த இரண்டு நிமிடங்களில் மீண்டும் ஜோடி நடக்க ஆரம்பித்தது.

 

“அந்த ஜோ குட்டி அழகில்ல? கண்ணுலயே நிற்கிறான். அவன் கை அவ்வளவு சாப்ட். இந்த லிப்ஸ்? அது பனி படர்ந்த  பிங்க் ரோஸ் பெட்டல்ல சன் லைட் பட்ட மாதிரி ஒரு க்ளோ! எனக்கு வேணும் மனோ”

 

“அந்த லிப் கலர் ஈசியா கிடைக்கும் விழி. கடையில பாரு!”

 

“ஆஆ.. மனோ… நான் பாப்பாவ சொன்னேன்”

 

சிரித்தான். “கடையில கிடைக்காதே! அது அவர் குழந்த டி.. அத நாம எப்பிடி கேக்க முடியும்.”

 

“நக்கலு? நாமளும் பெத்துப்போம் மனோ. எதுக்கு தேவ இல்லாம நாள தள்ளிப் போட்டுக்கிட்டு?”

 

“ம்ம்.. இங்க ஒரு வேலை கிடைச்சதும், H1 வாங்கின கையோட வேலைல சேர்றதுக்கு முன்ன கிளம்பி ஊருக்கு போய் வீட்டுல பேசறேன். அம்மா அப்பாவோட உங்க வீட்டுக்கும் போய் பொண்ணு கேட்டு.. தேதி நிச்சயமானதும், நீ வா. மேரேஜ் முடிச்சுட்டு ஒண்ணா வந்திடுவோம்.

 

யாராவது ஒத்துக்காட்டாலும், நான் சொல்ற டைம்க்கு நீ வா, ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணுவோம். இது தான் என் முடிவு! இதுக்கு மேல எல்லார் பர்மிஷனுக்கும் என்னால வெயிட் பண்ண முடியாது”

 

“ரொம்ப கனவு காணாதீங்க. எங்க வீட்டுல ஒத்துக்கணும், அப்புறம் தான் கல்யாணம்! ஆமா.. நான் பாப்பா தானே கேட்டேன். அதுக்கு எதுக்கு கல்யாணம்?”, அவனை வேண்டுமென்றே வம்பிழுக்க..

 

“பேச்ச பாரு.. வாயிலேயே போட்டுறேன் இரு”, அவனும் சிரித்துக்கொண்டே கை ஓங்க..

 

துள்ளி குதித்தவள், மரத்தடியில் ஒற்றைக் காலை நீட்டி அமர்ந்திருந்தவன் மேல் விழப் போக… சட்டென்று அவளை அப்படியே இடது கையால் தூக்கியிருந்தான்.

 

“பாத்து வா விழி. அவர் மேல விழுந்திருப்ப”

 

இரண்டடி சென்றவள் திரும்பிப் பார்த்தாள்.

 

நெடியவன். உடல் கட்டமைப்பை பகிரங்கமாகப் பறைசாற்றும் இறுக்கிப் பிடித்த கருப்பு டி-ஷர்டும், நீளமான கால்களில் முட்டி தொடாத பழுப்பு ஷார்ட்ஸ் அணிந்திருந்தான். கை கொள்ளா தலை முடி காற்றில் ஆடிக் கொண்டிருந்தது. மீசையும் தாடியும் கருப்பு கண்ணாடியும் முகத்தை மறைத்திருந்தாலும் பல பெண்கள் தூக்கத்தைக் கெடுக்கும் ஆண் அழகன் என்பதில் ஐயமில்லை.

 

“நம்ம ஊர் போல. க்ரீக் காட்ன்னு சொல்லுவாங்களே அப்பிடி இருக்கார். உங்க ஆர்ம்ஸ்ச விட அவர்து சூப்பர் இல்ல?”

 

இவன் முறைக்க… “உண்மைய தானே சொன்னேன்..”

 

“போடி..”

 

“சரி நீங்க வேணும்ன்னா யாரையாவது சைட் அடிங்க.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். அதோ அந்த பொண்ணு நல்லா இருக்கா இல்ல..”

 

அவன் இன்னும் அதிகமாக முறைக்க.. “இப்போ என்ன வந்துது உங்களுக்கு? ஒருத்தரையும் நான் பாக்க கூடாதா?”

 

“நீ மட்டும் சூப்பரா இருக்கவன சைட் அடிப்பியாம் எனக்கு மட்டும் சப்ப ஃபிகர சைட் அடிக்க சொல்லுவியாம்.. போடி… நானே தேடிக்கிறேன்”

 

இருவரும் அழகி எவளேனும் கண்ணில் படுகிறாளா என்று தேட, “ஓய் பட்டு, இவள பாருடி.. செம்ம கண்ணு.. அவ கண்ணுக்காகவே அவ பாக்கலாம்.. இவள சைட் அடிச்சுக்கவா..”

 

“உவேக்.. போங்க மனோ அவ வேண்டாம்! அவ நல்லாவே இல்ல. என் கண்ணு தானே அழகுன்னு சொல்லுவீங்க..”, இவள் சிணுங்க,

 

“என் ஆர்ம்ஸ் தானே சூபர்ன்னு காலைல கூட சொன்ன?”

 

“ம்ம்.. ம்ம்ம். நீங்க தான் சூப்பர். அந்த மனுஷன் நல்லாவே இல்ல. அவரும் உவேக்! எதுக்கும் ஒரு தரம் நல்லா பார்த்துக்கிறேன்..”, மீண்டும் அமர்ந்திருந்தவன் பக்கம் பார்வை போக, பிள்ளைகளோடு ஓடிக் கொண்டிருந்த கண்ணழகி அமர்ந்திருந்தவன்  மேல் விழுந்து சில்லறை பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

 

“என்னங்க அந்த பொண்ணு அவர் மேல விழுந்துட்டா.. ரெண்டும் பேர் கண்ணும் மோதுது.. ஜோடி பொருத்தம் சூப்பர். நாம சைட் அடிக்க வேற ஆள தேடுவோம்.”

 

அடுத்த நொடி அவள் எழுந்து திரும்பி பார்த்து கொண்டே ஓடினாள். கிரேக்கச் சிலை உயிர் பெற்றது.

 

“அந்த பொண்ண பாத்ததும் அவர் முகத்த பாருங்களேன். இன்னும் அழகா தெரியராரில்ல? என்னங்க அவர் செம்ம ஹயிட்!”

 

“வழிய பாருடி!”, பொறுக்க முடியாமல் காய்ந்தான்.

 

“இவருக்கு பொறுக்காதே! எனக்கு கால் வலிக்குது மனோ.. உக்காருவோமா?”

 

இருவரும் ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டு கையிலிருந்த வேர்க்கடலையைக் கொறிக்க.. வேர்க்கடலை முடியும் முன், உயிர்பெற்ற கிரேக்கச் சிலை.. எதையோ தொலைத்தவன் போல் அங்கும் இங்கும் தேட ஆரம்பித்தான்.

 

“என்னங்க.. அவர் எதையோ தொலைச்சுட்டார் போல. தேடறார்.”

 

“நீ எதுக்கு டி அவனையே பார்த்துட்டு இருக்க?”

 

“பச்.. சும்மா இருங்க! அவர் முகம் பூர அவ்வளவு வலி. என்னத்த தொலைச்சாரோ? ரொம்ப முக்கியமானது போல! மனுஷன் பயித்தியம் பிடிச்சா மாதிரி அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டு இருக்கார். நான் போய் என்னன்னு கேக்கவா?”

 

“பேசாம இரு விழி!”

 

“அந்த பொண்ணு வேணும்ன்னே மேல விழுந்திருப்பாளோ? பிக் பாக்கெட்டா இருப்பா போல. அவ தான் திருடியிருப்பா!”

 

“லூசு அவ டேனியோட தங்க! ஏற்கனவே சர்ச்ல கார்த்தியோட பாத்திருக்கேன். அந்த ஜோ குட்டி இவள தான் ‘ம்மா’ன்னு கூப்பிடுவான்! இவ கூட தான் பல்லி மாதிரி ஒட்டிட்டு இருப்பான்!”

 

“ஓ..”

 

பேச்சு திசை மாறியது. வருவோர் போவோர் என்று அனைவரையும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க.. நேரம் சென்றது.

 

“போலாமா விழி. இருட்டாக ஆரம்பிக்குது”

 

இருவரும் நடக்க ஆரம்பித்தனர். அலர்விழி கண்ணில் மீண்டும் அதே கண்ணழகி விழுந்தாள். அவளும் எதையோ தொலைத்திருப்பாள் போலும். உடல் நடுங்க… மனம் எதையோ தேட.. அங்குமிங்கும் படபடப்போடே சென்று தேடினாள். அவனைப் போலவே அவளுக்கும் தேடியது கிடைக்கவில்லை போலும்.

 

அவள் முகத்தில் மாலை இருந்த  ஜீவனில்லை. அலர்விழிக்கு பார்க்கப் பாவமாயிருந்தது. அவன் அமர்ந்திருந்த மரத்தை வருடியவள், அவனை போலவே அதே இடத்தில் அசையாமல் அமர்ந்துகொண்டாள்.

 

திரும்பித் திரும்பி பார்த்து நடந்து கொண்டிருந்தவளுக்கு நன்கு தெரிந்தது அந்த பெண் அழுவது. ஐயோ என்றிருந்தாலும் என்ன செய்ய முடியும்? அவனைத் தான் தேடுகிறாள் என்று தோன்றியது. அவனும் இவளைத் தான் தொலைத்து விட்டு தேடினானோ?

 

அலர்விழி மனதில் ஒரு வித கனம் ஏறிகொண்டது. கார் வீட்டை நோக்கிச் செல்ல மனம் பூங்காவிலேயே நின்றுவிட்டது. வெளிவர முடியவில்லை. பிரிந்து போனால் இப்படி தான் இருக்குமோ? பூங்காவில் பார்த்த வலிநிறைந்த.. ஜீவனற்ற இருமுகங்களும் கண் முன் வந்தது. தேவையே இல்லாமல் அவர்களிடத்தில் தங்களைப் பொருத்திப் பார்க்க பயம் கவ்விகொண்டது.

 

‘சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து

வானெல்லாம் மழை

வரைந்து காட்டுகின்ற வண்ணம் இன்று

என்ன செய்ததோ பிழை

 

அடி மனதில் இறங்கிவிட்டாய்

அணுஅணுவாய் கலந்துவிட்டாய்

அடி மனதில் இறங்கிவிட்டாய்

அணுஅணுவாய் கலந்துவிட்டாய்’

 

வாகனத்தில் பாடல் நின்றது. “தூங்கிட்டியா? விழி? வீடு வந்துடுச்சு டா”, தோளில் சாய்ந்திருந்தவளை மெல்ல தட்டி எழுப்பினான்.

 

“ஏன் மனோ இந்த பாட்டுல அவன் பொண்டாட்டி செத்துடுவா இல்ல? அப்புறம் என்ன ஆகும்?”

 

“ஹீரோ வைஃப் இறந்துடுவா,, ஹீரோயின் பாய் ஃப்ரெண்ட் இறந்துட்டான்னு நியூஸ் வரும். இவங்க ரெண்டு பேரும் எப்பிடி பழைய வாழ்க்கையில இருந்து வெளி வந்து அடுத்து புது வாழ்கைய ஆரம்பிக்கிறாங்கன்னு கதை போகும்”

 

“ஏன் மனோ நான் செத்துட்டா.. வேற கல்யாணம் பண்ணிப்பீங்களா?”

 

“பின்ன? காலம் பூரா சிங்கிள்லா? ச்சான்சே இல்ல! வேணும்ன்னா என் பொண்ணுக்கு உன் பேர் வைக்கறேன்.. அலர்விழி ஜூனியர்ன்னு!”, ஏதோ விளையாட்டு போல் கேட்கிறாள் என்று அவனும் விளையாட..

 

“உங்களுக்கு ஏதாது ஆச்சுன்னா.. நான் செத்துடுவேன் மனோ! உங்க உயிர் போச்சுன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே என் உயிர நானே எடுத்துடுவேன் மனோ”, என்றவள் உள்ளே சென்றுவிட்டாள்.

 

என்னானது இவளுக்கு? அவள் முகமும் சரி இல்லை. அவள் பேச்சும் சரி இல்லை. புரிந்தது. பேச முயன்று தோற்றான். நேரம் கடந்து சென்றது. அவன் ஏதேதோ பேசினான். கேட்டுகொண்டாள். அவள் மூளையை எட்டியதாகத் தெரியவில்லை.

 

“போ விழி. படு. ரொம்ப டையர்டா தெரியற. என்ன யோசிக்கிற தெரியல. ஆனா எதையும் யோசிக்க வேண்டாம்.. போய் படு. நான் விளையாட்டுக்குத்தான் அப்பிடி சொன்னேன். உனக்கும் அது தெரியும். நீ மட்டும் தான் டி என் வாழ்க்கை. மனச போட்டு குழப்பிக்காம தூங்கு.”, என்றான்.

 

படுக்க வைத்து, அவள் உறங்கியதும் வெளியே வந்தவனுக்கு செய்ய வேலையிருக்க மடிக்கணினியோடு அமர்ந்தான்.

 

நடு ஜாமத்தில் அலர்விழிக்கு முழிப்பு தட்டியது. எழுந்து வந்தாள். வெளியே மனோ படுத்திருந்தான். அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

 

அப்பொழுது தான் படுத்தவன், மங்கிய ஒளியில் தன்னருகில் அவளைப் பார்த்ததும் எழுந்தமர்ந்தான்.

 

“என்ன டி? தூக்கம் வரலியா..?”

 

“கல்யாணம் பண்ணிக்கலாம் மனோ. நீங்க சொன்ன மாதிரி யார் ஒத்துக்காட்டாலும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் மனோ”, என்றாள், அவன் தோளில் சாய்ந்தபடி.

 

“விழி.. மணி மூணு! என்ன பேசிட்டு இருக்க? எதுனாலும் காலையில பேசிக்கலாம். தூங்கு போ..”

 

“அந்த பொண்ணு அவர தேடி வந்தா மனோ… அவர மாதிரியே அவளும் தொலச்சத தேடினா மனோ.. ரெண்டு பேர் முகத்தா பாத்தா உயிரே இல்ல மனோ அதுல. அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்கன்னு நினைக்குறேன்.”

 

“நீயா கற்பனை பண்ணாத விழி!”

 

“கற்பனையோ நிஜமோ.. பயமா இருக்கு மனோ! என்னால நீங்க இல்லாம வாழவே முடியாது மனோ. சத்தியமா செத்து போய்டுவேன்.”

 

“ஏய்… என்ன டி? உன்ன விட்டு எங்க போக போறேன்? என் உயிர் உன் கிட்ட தான் பத்திரமா இருக்கே! தேவ இல்லாம கண்டதையும் நினைக்காத டா பட்டு!”

 

“..”

 

“விழி..”, மெல்ல தலை வருடினான்.

 

“..ம்ம்..”

 

“ஏதோ கெட்ட நேரம், நான் இல்லாம போயிட்டாலும் நீ வேற கல்யாணம் பண்ணிட்டு வாழணும். உன்ன பார்த்துட்டு உன் கூடவே இருப்பேன்.”

 

தலை உயர்த்தி அவனை பார்த்து புன்னகைத்தாள். “கண்டிப்பா எங்க இருந்தாலும் சேர்ந்து தான் இருப்போம் மனோ! தனியா இருக்கவே மாட்டேன்.”, என்றாள். கேட்டவனுக்கு வலித்தது. ஏன் தன்னை குழப்பிக் கொள்கிறாள் என்று புரியவில்லை.

 

தலையை அவன் வருட, மார்பில் சாய்ந்து கொண்டவள் நிம்மதியாக உறங்க.. அன்றைய இரவு மனோவிற்கு தூங்கா இரவாகிப் போனது.

 

எது நீ எது நான்

இதயம் அதிலே

புரியும் நொடியில் பிரியும் கனமே

பனியில் மூடிப்போன பாதை மீது வெயில் வீசுமா…

இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா

 

அடி மனதில் இறங்கிவிட்டாய்

அணுஅணுவாய் கலந்துவிட்டாய்

அடி மனதில் இறங்கிவிட்டாய்

அணுஅணுவாய் கலந்துவிட்டாய்..

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!