Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kollai Thulasi Ellai Kadanthaal

அ36_1 – Shoba Kumaran’s கொல்லை துளசி எல்லை கடந்தால்

கொல்லை துளசி எல்லை கடந்தால் – 36-1

 

“முடிவ சொல்லுங்க அண்ணா. எதுனலும் இன்னைக்கே பேசி முடிச்சுடுவோம். இப்பிடியே எத்தன நாள் தான் இழுத்தடிக்கிறது? வேண்டாம்ன்னா பளிச்சுன்னு ‘எங்களுக்கு உங்க குடும்பத்தோட சம்பந்தம் வச்சுக்க விருப்பமில்ல, வேற இடம் பார்த்துக்கோங்க’ன்னு பட்டுன்னு சொல்லீடுங்க. இத்தனை வருஷமா காத்திருந்த எங்களுக்கு மனவருத்தமா இருந்தாலும் பரவால சொல்லிடுங்க! இல்ல… விருப்பம்ன்னா வேலையை ஆரம்பிப்போம்! இதுக்கு மேலையும் காலம் கடத்த காரணமில்லையே” அம்பிகா ஒரு முடிவோடே அலர்விழி பெற்றோரோடு பேசிக் கொண்டிருந்தார்.



Advertisement

 

“பொண்ணு வந்ததும் ஒரு வார்த்தை கேட்டுடுவோமே…” மகள் தங்களோடு பேசுவதை நிறுத்தி மாதம் ஒன்றாக போகிறது என்று எப்படி அம்பிகாவிடம் கூற முடியும்? பெண்ணின் மௌனத்திற்கான காரணகர்த்தாவே அவர் தான் என்று பெற்றவர்கள் அறியவில்லையே.

Advertisement

 

Advertisement

“உலகமே கைக்குள்ள அடங்கியிருக்கு. ஒரு ஃபோன் போட்டு கேட்டா ஆச்சு! இன்னைக்கு வரைக்கும் கேக்காமலா இருந்திருப்பீங்க? இன்னும் கேக்க என்ன அண்ணி இருக்கு? சின்ன பொண்ணுக்கு கல்யாணம்ன்னா கொஞ்சம் பயம் இருக்கத் தான் செய்யும். நாலு இடம் போன பொண்ணு சுதந்திரம் போயிடும்ன்னு நினைக்கலாம் இல்லையா? அதுக்காக நல்ல விஷயத்த அவ ஒருத்தி குழப்பத்துக்காகத் தள்ளிப் போட முடியுமா சொல்லுங்க?

 

Advertisement

பிரவீன பத்தி நான் சொல்லித் தான் நீங்க தெரிஞ்சுக்கணும்ன்னு இல்ல. அவனை மாதிரி ஒரு பிள்ளையை வேண்டாம் சொல்ல ஒரு காரணம் சொல்ல முடியுமா யாராலையாவது?

 

அவளுக்கு பிரவீன பிடிக்காமலா அவன் கூட பழகி ஒண்ணா ஊர் சுத்தி இருக்கா…? அவங்களுக்குள்ள அதிக நெருக்கம்ன்னு பிரவீனே சொல்றானே. நம்ப முடியலேனா இதோ இத பாருங்க உங்களுக்கே புரியும்!” அம்பிகா அவர் கைப்பேசியை நீட்ட, உள்ளிருந்த படங்களைப் பார்த்த பெற்றவர்கள் எச்சில் விழுங்கினர்.

 

அன்று கூட்டத்தோடு புகைப்படம் எடுக்கும் வேளை சற்று பின்னால் நின்றவன் ஒருவர் கண்களையும் உறுத்தவில்லை.  இன்று, படங்களில் கூட்டமும் இல்லை… பார்ப்பவருக்கு அவன் பின்னால் தள்ளி இருப்பது போலவும் இல்லை. ஒட்டிக் கொண்டு அர்ச்சனா திருமணத்தில் நிற்க ஆரம்பித்தவர்கள் சென்ற மாதம் வரை அதைத் தொடர்ந்தது போன்ற பிம்பம்.

 

“இத பாத்தீங்களா, போன மாசம் இவன் அமெரிக்கால இருந்து கிளம்பற அன்னைக்கு அவ வீட்டுல வச்சு எடுத்தது. அவ அலங்காரம் பண்ணிட்டு அவன் கூட ஒட்டிக்கிட்டு நிற்கிறதை பார்த்தா அவளுக்கு விருப்பம் இல்லாத மாதிரியா இருக்கு?”

 

பேசிக்கொண்டிருந்த அம்பிகாவிற்கு பிர்வீன் மேல் தான் கோபம். இப்படி கூடவே சுற்றிய ஒருத்தி, வேண்டாம் என்று போன பிறகு எதற்கு அவளையே நினைத்து இவன் வாழவேண்டும் என்ற கோபம்! இருந்தும் அதை எல்லாம் வெளியில் காட்ட முடியாதே. அது தாய்-மகன் இருவருக்குமான ரகசியமாயிற்றே! அவள் மேல் அவன் கொண்ட காதலால் அவன் இழந்து நிற்பதற்கு அவள் தானே பதில் கூறவேண்டும்! ‘ஆண்மை’ குறைபாட்டோடு நிற்பவனுக்கு வேறு பெண்ணிற்கு எங்குச் செல்வது?

அவன் என்று தனக்குச் சொந்தமில்லாத பெண்ணை தவறான பார்வை பார்த்தானோ அன்றே அவன் ஆண்மை குறைபட்டவனாய் மாறிப்போனானே… இது ஏன் தாய்-மகன் இருவருக்கும் புரியவில்லை?

 

இவ்வளவு நெருக்கம் காட்டி மகிழ்ச்சியோடு நிற்கும் பெண், ஏன் பிடி கொடுக்காமல் வேறு யாரையோ விரும்புவதாக கூறி சுற்றுகிறாள் என்று பெற்றவர்கள் குழம்பித் தான் போனார்கள்.

 

“இதோ பாருங்க அண்ணி… வினோக்கு கண்டிப்பா இப்போ முடிச்சே ஆகணும்ன்னு குடும்ப ஜோசியர் சொல்லிட்டார். மகன் வாழ்க்கையில ரிஸ்க் எடுக்க முடியாது. மூத்ததை வீட்டுல வச்சுகிட்டு இளையதைக் கல்யாணம் பண்ணி கொடுத்தா ஊரு என்ன பேசும்? நாளைக்குப் பின்ன அவளுக்குக் கல்யாணம் தான் ஆகுமா?

எனக்கு பிரவீன் அக்கா பையன் தான், அதனால வினோக்கு முதல்ல முடிக்கிறதைப் பத்தி கவல இல்ல. வினோவும், அண்ணனுக்கும் தனக்கும் ஒரே வீட்டு பொண்ணுங்கள பார்த்தா நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறான். எல்லாம் நம்ம நகுக்காகத் தான். பிரவீனுக்கு வரவ நம்ம நகுவ ஒன்னும் சொல்லிடக் கூடாது பாருங்க!

 

நீங்க தான் சொல்லணும்… பிரவீனுக்கும், அலர்விழிக்கும் அடுத்த மாசம் நல்ல முகூர்த்தம் வருது முடிச்சுடுவோமா?”

 

கடந்த ஒரு மாதமாக இவர்களின் வருகை சற்று அதிகமாகவும் அக்கம் பக்கம் எல்லாம் “என்னக்கா பொண்ணுங்க ரெண்டு பேரையும் ஒரே வீட்டுல கொடுக்கறீங்க போல” என்ற பேச்சு தான்.

 

சொந்தங்கள் மத்தியிலும் இதே பேச்சு தான். ஊர் எல்லாம் யார் தண்டோரா போட்டதோ தெரியவில்லை. இனி இந்த திருமணம் நடக்கவில்லை என்றால் யார் இவர்களுக்கு எல்லாம் காரணம் கூறுவது. அதன் பின் தன் பெண்களுக்கு வெளியே மாப்பிள்ளை கிடைக்க பிரச்சினையாகாதா? இரண்டு பெண்களைப் பெற்றவர் நிலை மாறவே மாறாதா?

 

காலையிலும் அலர்விழிக்கு அழைத்து கடலூருக்கு வரும் விபரம் பற்றிக் கேட்டு… பிரவீன் பற்றிப் பேச, “இன்னும் ரெண்டு வாரம் நோட்டீஸ் பீரியட் இருக்கு. ரெண்டு வாரம் கூட இருந்துட்டு  அடுத்த மாசம் வரேன். எதுனாலும் நான் வந்து பேசறேன்” என்று ஒரு மாதமாகக் கூறும் பதிலைச் சற்று மாற்றிக் கூறினாள். பெண் ஏன் இப்படி விலகிப் போனாள்? தெரியவில்லை!

 

வினோவின் உபயத்தால் நகுநா மனம் முழுவதும் அவன் தான் என்று பெற்றவர்கள் அறிந்ததே! இன்று பெரியவள் பேச்சைக் கேட்டு, அவளுக்குத் திருமணம் நடத்தாமல்  சிறியவளைக் கரை ஏற்றினால், அலர்விழி நிலை தான் என்ன? இவர்கள் இவ்வளவு இறங்கி வந்த பின், மூத்தவளைக் கொடுக்க மறுத்து இளையவளை அங்கு அனுப்பி வைத்தால்… சரி வருமா? தெரியவில்லை!

 

பெண்ணை பெற்ற பெற்றோராய் குழம்பித் தவித்தனர். பிரவீனோடு திருமணம் பிடிக்காமல் மகள் அமைதியாகி போனாள் என்று இவர்கள் நினைக்க, பார்த்த புகைப்படங்களும், பிரவீனும் வேறு கதை கூறினர்.

 

“கல்யாணத்துக்கு பின்னாடி பிரவீன் வேலைக்கு அனுப்ப மாட்டான்னு அவளுக்குச் சின்ன கோபம் போல. அவ மேல உயிரையே வச்சிருக்கான். அவ இஷ்டத்துக்குத் தடை போடுவானா என்ன? கல்யாணம் ஆனா எல்லாம் சரியா போயிடும் அண்ணி! ரெண்டு பேரும் குழந்தையும் குட்டியுமா நம்ம முன்ன நல்லா வாழுவாங்க! உங்க பொண்ணு உங்க பேச்சைத் தட்ட மாட்டான்னு நம்பிக்கை இருந்தா சொல்லுங்க  நாள் குறிச்சிடலாம்!

 

கட்டினா அலர்விழி தான்! இல்ல கல்யாணம் வேண்டாம்ன்னு பிரவீன் நிக்காட்டி அவன் உயரத்துக்கு அவனுக்கு பொண்ணு கொடுக்க ஆள் வரிசைகட்டி நிக்குது, அதுல ஒரு நல்ல பொண்ண முடிச்சிருப்போம்.

 

நீங்க சரின்னு சொன்னா, அடுத்த மாசம் அலர்விழி வந்ததும் பிரவீனுக்கும், ரெண்டு மாசம் கழிச்சு சின்னவங்களுக்கும் முடிச்சிடலாம். செலவ பத்தி கவல படாதீங்க. கட்டியிருக்க புடவையோட பொண்ணுங்கள அனுப்புங்க… எங்க பொண்ணுங்கள மாதிரி பார்த்துப்போம்… சொல்லுக்கா” என்று அபிராமியைப் பார்க்க, மகனின்  ‘நிலை’ அறிந்தபின் அவர் ஏன் பந்தா காட்டப் போகிறார்! இப்படி எல்லாம் கூட அன்பான குடும்பம் இருக்குமா என்று தோன்றுமளவு தேனாய்… பாலாய் வழிந்தார்.

 

“நீங்க முடிவ சொல்லுங்க அண்ணா…” தியாகு முகம் பார்த்து அமர்ந்திருந்தது கூட்டம்.

 

மனைவியின் உடல் நிலை மோசம் ஆகும் முன் பெண்களை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும். பெரிய மகளோ பேசவும் மறுக்கிறாள். சின்னவளுக்கு இதை விட நல்ல மனிதர்கள் கிடைப்பார்களா? சந்தேகம் தான்! பிரவீனுக்கு என்ன குறைச்சல்? வேண்டாம் என்று கூற? காதல் கண்டறாவி என்று பொய் கூறி, திருமணத்தை நிறுத்த நினைக்கும் மகள் மேல் பெற்றவருக்கு மன வருத்தம். மாதக் கணக்காகக் காத்திருந்து பொறுமையோடே பெண் கேட்கும் மனிதர்களும் நல்ல மாதிரி தான். விடவும் முடியாமல், சரி என்று கூறவும் முடியாமல் எல்லா பக்கமும் நெருக்க, மனிதனும் என்னதான் கூறுவார். தியாகு பதில் கூற முடியாமல் விழித்தார்.

 

மருமகளின் வெளிறிப்போன முகமும், மகனின் குழப்பமும்  கண்ட சகுந்தலா பாட்டி, “எங்க பொண்ணு பெத்தவங்க பேச்ச மீற மாட்டா. நாம ஆக வேண்டியதைப் பார்ப்போம்” என்றார்.

 

இவர்களின் ‘பார்ப்போம்’ற்கு முன்பதாகவே மண்டபத்திற்கு முன்பதிவு செய்து, பத்திரிக்கை முதல் அலர்விழி கட்ட போகும் புடவை வரை பிரவீன் முடிவு செய்தாயிற்று என்று இவர்களிடம் யார் கூறுவது. சித்தியிடம் காரியத்தைக் கொடுத்தபின் எந்த கவலையுமின்றி மருத்துவமனையில் அமர்ந்திருந்தான் பிரவீன்.

 

“அப்போ நாங்க கிளம்பறோம். இன்னைக்கு என்ன புதன் தானே… வர வெள்ளிக் கிழமை நாள் நல்லா இருக்கு. அன்னைக்கே தட்டு மாத்தி, ஆக வேண்டிய காரியத்தை சட்டுன்னு ஆரம்பிப்போம். நாள் ரொம்ப கம்மியா இருக்கு பாருங்க அது தான்!” என்றார் கரிகாலன் , மாப்பிள்ளையின் பொறுப்பான தகப்பனாக.

 

நல்ல இடம் தான் சந்தேகமே இல்லை பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு. இருந்தும் மகள் மனம் தான் புரியவில்லை. புரியாதா புதிரை விளக்கிவிட்டே சென்றார் அம்பிகா!

 

கிளம்பும் முன், தனியே அடுக்களையில் நிற்கும் வேளை அம்பிகா கூறிய விடயங்கள் தாயின் நெஞ்சைக் கரித்தது. மகளைப் பற்றி குறையாகக் கூறவில்லை என்றாலும் எச்சரிக்கையாகக் கூறி, மேன்மக்களாய் மகள் வாழ்வை காக்கத் துடிக்கும் அம்பிகாவும் பிரவீனும் பெண் வீட்டார் பார்வையில் உயர்ந்து தான் போனர். மகளின் மௌனத்தின் காரணம் புரிவது போல் தோன்றியது தாய்க்கு. இப்படி ஒருவனைப் பிடித்து அவனோடு வாழச் சம்மதம் கூறியபின்… வேறொருவனின் காதல் வலையிலா? நொந்தே போனார் சௌந்தர்யா? நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்க காரணமும் இல்லாமல் பெற்றவராய் தவித்துப் போனார்.

 

‘அம்மாக்கு ரொம்ப முடியல அலர்… சீக்கிரம் வா’ என்று கூறி முகம் தெரியாத மனோ என்ற வஞ்சகனிடமிருந்து மகளைச் சேதாரம் இல்லாமல் காப்பாற்றினால் போதும் என்ற எண்ணத்தோடு தக்க தருணத்திற்காகக் காத்திருந்தார் சௌந்தர்யா. மகள் தூங்கி எழுந்ததும் அவளோடு பேச வேண்டுமென்று காத்திருந்த தாய்க்கு, மகள் தூக்கத்தைத் தொலைத்து மாதம் ஒன்றாகிவிட்டது என்று தெரிய நியாயமில்லை தான்.

 

ஊரெல்லாம் உறங்கியிருக்கத் தூக்கம் தொலைத்த அலர்விழி ஜன்னல் வழி சூனியத்தை வெறித்து நின்றிருந்தாள். மாதம் ஒன்றாகிய பின்னும் வலியின் அளவு குறைவதாகத் தெரியவில்லை. மனோவோடு வாழவும் முடியாமல் பிரியவும் முடியாமல் அவளும் தவித்து அவனையும் தனிமையில் தவிக்க விட்டாள்.

 

தூக்கத்தின் இடையே புரண்டவனின் கை மனைவியைத் தேட, இன்றும் அவள் அவனருகில் இல்லை. எங்கிருப்பாள் என்று தெரியும் என்பதால் ஜன்னல் பக்கம் திரும்ப, அவன் அனுமானம் பொய்க்கவில்லை.

 

அன்று, குளியலறையில் குளியல் தொட்டி முழுவதுமாக நீர் நிறைந்து வழிய அதில் மூழ்கிக் கிடந்தவளைப் பார்த்தவன் உயிர் பிரிந்து, அவளுக்குச் சேதாரமில்லை என்றதும் தான் உயிர் மீண்டது. 

 

“ஏன் டி அப்பிடி பண்ணின? விபரீத முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி என்னைப் பத்தி ஒரு நிமிஷம் யோசிருக்கத் தோணலியா விழி? சாவு தான் முடுவுன்னா முதல்ல என்னை கொன்னுட்டு செத்து போ டீ” என்று அவன் சத்தம் போட, பெண்ணோ, “என்ன விபரீத முடிவு மனோ? தற்கொலையா? நானா?” என்றுதான் கேட்டாள்.

 

நீரில் மூழ்கிக் கிடந்தது அவளுக்கு நினைவிலில்லை என்றதும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றான். எல்லா செயலுக்கும் இன்றைய மருத்துவம் தான் ஒரு பெயரைத் தயாராக வைத்திருக்கிறதே. இதற்கும் மருத்துவர் ‘சைக்கோஜெனிக் ப்ளாகவுட்’ (psychogenic blackout) என்ற பெயரைக் கூறினார்.

 

“அளவிற்கு அதிகமான ஸ்ட்ரெஸ் ஏற்படும் போது சிலருக்கு இப்படி ப்ளாக் அவுட் ஆகும். அப்போ முழிச்சிருந்தாலும் மூளை புது மெமொரியை உருவாக்காது. அந்த வேளையில் உணர்வு இருந்தாலும் நடப்பது எதுவும் மனசில பதியாது. இதுக்கு முன்ன ஒரு முறை ஃபூட் பாய்சனிங் ஆனபோது இப்பிடி ப்ளாக் அவுட் ஆகியிருக்குன்னு சொல்றீங்க. சோ, இப்போ கூட ஒரு மாசம் முன்ன இது மாதிரி ஏதோ நடந்தது தெரியலன்னு சொல்றீங்க. நியூராலஜிஸ்ட் ரெஃபர் பண்றேன். கண்டிப்பா பாத்து ட்ரீட்மென்ட் எடுங்க. இத இப்படியே விட்டா அடிக்கடி இப்படி வர வாய்ப்பிருக்கு” என்று அனுப்பி வைத்தார் மருத்துவர்.

 

“ரெண்டு மாசத்துல என்ன ஆகப்போகுது? அப்புறம் ஊருக்குப் போனதும் பாப்போம் மனோ” என்று மருத்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.  முன்பு போல் எதிலும் நாட்டமில்லை பெண்ணிற்கு. வேலை, வீடு என்று அடங்கிவிட்டாள்.

 

இவனும் வாரத்தில் இருமுறை நியூ ஜெர்சி சென்று வந்தாலும், எதையோ பறிகொடுத்தவள் போல் இயல்பை தொலைத்தவளை மாற்ற முடியவில்லை மனோவால். இன்று மாலை அலுவலகம் முடித்து வீட்டிற்குள் நுழையும் வரையுமே அலர்விழி பாஸ்டன் வரப்போவது தெரியாது.

 

“என்ன விழி வார நடுவுல வந்திருக்க?” என்றவனிடம், “ரெண்டு நாள் வர்க் ஃப்ரம் ஹோம் போட்டிருக்கேன் மனோ. திங்கக் கிழம காலையில போறேன்.” என்றதோடு சரி. திடீர் வருகையின் காரணமெல்லாம் கூறவில்லை.

 

சுறுசுறுப்போ, ஜீவனோ இல்லாமல், நின்று இரவை வேடிக்கை பார்த்து நின்றவள் அருகில் சென்று நின்று கொண்டான்.

 

“தூங்கலையா மனோ?” என்றவளின் பார்வை திசை மாறவில்லை.

 

“எப்போவாது தான் பார்க்கவே செய்றோம். கூட இருக்கும் போதாவது ஒண்ணா இருப்போமே. ஒண்ணு என் கூட தூங்க வா. இல்ல நான் உன் கூட நின்னு, நீ வேடிக்கை பாக்கிறத வேடிக்கை பாக்குறேன். ஆனா எனக்கு ரொம்ப தூக்கம் வருது டி” என்றவனிடம் பதில் பேசவில்லை. மெத்தையில் சுருண்டாள்.

 

சுருண்டு கிடந்தது தேகம் மட்டும் அல்ல, அலர்விழியின் மனமும் தான். நினைவில் இல்லாத ஒன்றை யோசித்து யோசித்து பைத்தியம் பிடிக்காத குறை.  உண்மை அறியாமல், மகன் மேல் கொண்ட நம்பிக்கையாலும், பாசத்தாலும் அம்பிகா கூறிய அனைத்தும் மீண்டும் மீண்டும் ஒலிக்க, பெண்ணால் இயல்புக்கு திரும்பயியலவில்லை.  அண்மையில் நடந்த நினைவில்லாத செயல்களில் அவள் விழித்திருந்திருக்கிறாள். ‘அன்று? அன்று.. விழித்திருந்தேனா? போதையில் மனோ என்று எண்ணி அவனோடு உடன் பட்டேனா?’ விடுபட முடியாத சுழலில் பெண் மாட்டித் தவித்தாள். ‘நைஸ் எக்ஸ்பீரியன்ஸ்’ என்ற வாசகம் பெண்ணை உயிரோடே கொன்று கொண்டிருந்தது. 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!