Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

21. சுபகீதா - ஆகாயமே என் ஆதாரமே

ஆகாயமே என் ஆதாரமே 12

ஆகாயமே என் ஆதாரமே 12

ராகவனின் அம்மா கொஞ்சநாட்கள் மகளுடன் இருந்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு ,பெண்ணின் வீட்டுக்கு பெங்களூருவுக்கு சென்றுவிட்டார். உண்மையில் மருமகள் ஜானகிக்கு தன்னுடன் இருப்பதற்கு அவ்வளவு சுகமானதாக இல்லை என்பது அவருக்கு வருத்தம் தான்.திருமணத்திற்கு பிறகான மகனது மாற்றங்களை அவரால் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை.

எப்போதுமே மகன் அமைதி தான்.இப்போது இன்னமும் பேசுவதை குறைத்துக் கொண்டான்.மருமகளும் எளிதாக பழகக்கூடிய பெண்ணாக இல்லை. எப்பொழுதுமே அவள் பத்தடி  தூர நிற்பது ராகவனின் அம்மாவுக்கு புரியாமல் இல்லை. இனி ராகவனது வாழ்க்கை அந்த பெண்ணுடன் தான் என்னும்பொழுது வேறு எதையும் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளவேண்டாம் என்று தானும் தள்ளி நிற்க பழகிக் கொண்டாள் .

நடுவில் ராகவனின் தங்கையும் கூட தனது அண்ணியிடம் பேசுவதற்கும்,நட்பு பாராட்டவும் முயற்சிகள் செய்தாள் .ஆனால் ஜானகிக்கு இதெல்லாம் சுத்தமாக பிடிக்கவில்லை. அவளிடம் ஜானகி ஒரு வரியில் பதில் சொல்வதை பார்த்து அந்த பெண்ணுக்கும் ,தானே வலிய சென்று ஜானகியிடம் பேசுவதற்கு  அவ்வளவாக பிடிக்கவில்லை.    பிறகு தானே அண்ணியிடம் பேசுவதை நிறுத்தியும் விட்டாள் . ராகவனிடம் அடிக்கடி பேசினாள் அவனது தங்கை.



Advertisement

ஜானகியிடம் ராகவன் தனது தங்கையிடம் பேசியது பற்றி சொல்லும் பொழுது அவள் முகத்தில் பெரியதாக விருப்பம் காண்பிக்கவில்லை.அதிலேயே ராகவனுக்கு

இனிமேல் ஜானகியிடம் தனது தங்கை பற்றி எதுவும் பேசிக்கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்து கொண்டவன் தங்கையிடமும்   அதிகமாக முன்புபோல் பேசுவதில்லை .

ராகவனின் அம்மா பெங்களூருவிலிருந்து மீண்டும் கோவைக்கு வர விரும்பவில்லை. தேவை இல்லாத மனக் கசப்புகள் வேண்டாம் என்று மீண்டும் சென்னைக்கு வந்துவிட்டார், ஜானகியும் தனது வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே   இருக்க ஆரம்பித்துவிட்டாள்.திருமணம் முடிந்து ஒரு வருஷம் ஆகி இருந்தது. ஜானகி ராகவனுக்காகதான் தனது வேலையை ஜானகி விட்டது.

Advertisement

ராகவன் இரவு வீட்டுக்கு வருவதற்க்கே நேரம் அதிகமாக எடுத்தது. அவனை கவனித்து அவனுக்காக இரவு உணவை சூடு செய்து அவனை சாப்பிட வைத்து என்று  செய்துவிட்டு மீண்டும் இரவு தூங்கி காலையில்  எழுந்து வீட்டு வேலைகளை செய்துவிட்டு மருத்துவமனைக்கு  சென்று வேலையை செய்துவிட்டு ..அவளால் முடியவில்லை.

Advertisement

வெறும் பதினைந்து ஆயிரம் தான் அவளது சம்பளம். அதற்க்காக நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு திரும்ப வந்து வீட்டில் வேலைகள், கணவனை கவனித்து என்று நிச்சயம்  அவளால் முடியவில்லை. தூக்கம் வேறு கெடுகிறது. வேலையா,குடும்பமா என்று யோசிக்கும் பொழுது கணவன் மீது இருக்கும் ஆசை தான் வென்றது.

ராதாவும் கிருஷ்ணனும் நடுவில் இரண்டு முறை கோவைக்கு வந்து பார்த்துவிட்டு சென்றார்கள். மாமியாரை தங்களுடன் வைத்துக் கொள்ளாமல் சென்னைக்கு அனுப்பிவிட்டது கிருஷ்னனுக்கு சுத்தமாக பிடிக்க்கவில்லை.அதைப் பற்றி ஜானகிக்கு கவலையும் இல்லை. அவளுக்கான கூடு இது.இதில் வேறு யாரையும் அனுமதிக்க ஜானகி தயாராக இல்லை.அவளை பொறுத்தவரையில்,அன்று பாட்டியும் தாத்தாவும் ஊரில் சென்ட்ட்று  தனியாக வாழ வேண்டி இருக்கும்பொழுது,அம்மா அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காத பொழுது இதே அப்பா அமைதியாகத்தான் இருந்தார்.இப்போது மட்டும் என்னுடைய குடும்ப விஷயத்தில் அபிப்பிராயம் சொல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்று அவள் உறுதியாகவே இருந்தாள் . திருமண வாழ்க்கை பொறுத்தவரை அவளுக்கு நன்றாகவே சென்று கொண்டிருந்தது.

சென்னை வரும் சமயங்களில் ராகவன் தனது அம்மாவை பார்த்துவிட்டு அவர்களுடன் இருந்துவிட்டு வருவான்.இதை எல்லாம் ஜானகிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.தங்களுடன் வைத்துக் கொள்வதில் தான் பிரச்சனை.

Advertisement

சீதாவுக்கு அங்கே பிரான்ஸ் வந்து ஒன்னரை வருஷங்கள் ஆகிறது.இன்னமும் ஆறு மாதங்களில் மீண்டும் இந்தியா செல்லவேண்டும்.அங்கே பிரெஞ்சு பேசவும் கற்றுக்கொண்டாள் . அவளிடம் நிறைய மாற்றங்கள் வியாபித்திருந்தது. ஆடைகளில் மட்டுமல்ல அவளிடமே நிறைய சொல்லிக்கொள்ளும் அளவுக்கான மாற்றங்கள் .மனதில் இருக்கும் ஒரே அழுத்தம் வீட்டை விட்டு இங்கே தனியாக இருப்பதுதான். அதற்கும் தீர்வாக ஒருவன் கிடைத்தான். அவன் லியோ.

அவனது அம்மா அனிதா பஞ்சாபை சேர்ந்தவர். அப்பா பிரெஞ்சுக்காரர்.ஆங்கில ஆசிரியையாக பிரான்சுக்கு வந்தவர் லூயிஸ்  அவரின்பால் ஈர்க்கப்பட்டு,பிறகு காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார்கள். லூயிஸ் ஒரு மருத்துவர். முதலில் அனிதா வீட்டில் ஒப்புக் கொள்ளவில்லையாம். பிறகு லியோ பிறந்த பிறகு ஏற்றுக் கொண்டார்களாம். திருமணம் முடிந்து முப்பது வருஷங்கள் ஆகிறது என்றார் அனிதா.ஆனால் அவர்கள் இருவரின் கண்களில் மின்னும் காதல் இன்னும் புத்தம்புதியதாக தெரியக்கண்டு உண்மையில் சீதா ஆச்சர்யம் கொண்டாள் .

அனிதா தம்பதிக்கு லியோ தவிர ப்ரீத்தி என்று ஒரு பெண் உண்டு.அவள் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள்.சுத்தமான பிரெஞ்சு கலாச்சாரத்தில் ஊறியவள் ப்ரீத்தி. லியோ அப்படியே அவனது அம்மாவை போன்றவன்.

சீதாவும் லியோவும் ஒன்றாக வேலை தளத்தில் வேலை செய்பவர்கள். சரியாக சொல்லவேண்டும் என்றால் லியோவிடம் தான் சீதா தனது வேலைகளை ரிப்போர்ட் செய்யவேண்டும்.பிரான்ஸ் சென்ற சமயத்தில் அலுவலகத்தின் ஹோட்டலில் தங்கி கொண்டாள் சீதா. பிறகு அவளுக்கு அது சரிப்படவில்லை. எங்காவது ஒற்றை அறையாவது கிடைத்தாலும் பரவாயில்லை என்று தேடித் தவித்த நேரம்.

எதிர்பாராதவிதமாக லியோ தனது பெற்றவவர்களின் முப்பதாம் ஆண்டு திருமணநாளின் கொண்டாட்டத்தை ஒட்டி அலுவலகத்தில் சிலரை அழைத்திருந்தான்.இந்தியாவிலிருந்து வந்த சீதாவை பார்த்தால் அம்மா பெருமகிழ்ச்சி கொள்வார் என்று சீதாவையும் அழைத்து இருந்தான் லியோ.

அன்று நல்ல ஊதா நிற பட்டுப்புடவை உடுத்தி அதற்க்கு தோதான அணிகலன்களுடன் சீதா லியோ வீட்டுக்கு  சென்று இருந்தாள் . அனிதாவுக்கு இவளை பார்த்தவுடனே பிடித்துப் போனது. அங்கே விழாவில் சும்மா அமர்ந்து இராமல் தன்னால் ஆன உதவிகளையும் செய்து கொடுத்த சீதாவிடம் அனிதா,”நிச்சயம் இன்னொருநாள் நீ இங்கே வரணும் சீதா. உன்கிட்ட நிறைய பேசணும்னு இருக்கு.பட் ,இங்கே பங்க்ஷன் நடக்குது.என்னால உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல” என்று கூப்பிட்டவர்,தனது மகனையும் அழைத்து ,”லீ, சீதாவை  வர வாரம் வீக் எண்டுல லஞ்சுக்கு கூட்டிட்டு வரது உன்னோட பொறுப்பு”என்றுவிட்டு மற்றவர்களை கவனிக்க சென்றார்.

சீதாவுக்கு அனிதாவை அவ்வளவு பிடித்துப் போனது. வித்யாசம் பார்க்காமல் பேசுவதும்,சிரித்துக்கொண்டே இருப்பதும் சீதாவுக்குள் ஒரு பொசிட்டிவ் வைப்ரஷனை உருவாக்கி இருந்தது. அடுத்த வாரம் லியோவுடன் அவன் வீட்டுக்கு சென்றாள் சீதா. பிரீத்தாவை தவிர மற்ற மூவரும் இவளிடம் நன்றாக பேசினார்கள்.ப்ரீத்தாவுக்கு ஏனோ சீதாவை பிடிக்கவில்லை.அவளது பார்வையில் கூட ஒரு அலட்சியம் தெறித்தது.அதை சீதா பெரியதாக கொள்ளவில்லை.

மதிய உணவுக்குப் பிறகு,அனிதாவிடம் பேசுவதில் இருந்த கொஞ்ச தயக்கமும் விலகியதில்,தனது அறைக்கான தேடுதல் பற்றி சீதா சொன்னாள் .கொஞ்சநேரம் யோசித்த அனிதா,”இங்கே  நம்ம பங்களோ பின்னால ஒரு அவுட் ஹவுஸ் இருக்கு.இங்கே இருக்குற வரைக்கும் நீ அதை ஆக்குபை பண்ணிக்கோ. ரெண்ட் எவ்ளோவுன்னு கேக்காதே. உதைப்பேன்” என்று சிரித்தபடியே  எச்சரித்த அனிதாவை நன்றி பெருக பார்த்தது பெண்.

வீட்டில் தனது அம்மாவிடம் பேசும்பொழுது, அனிதாவை பற்றியும்,அவர்களது குடும்பம் ,லியோ என்று சொன்னவள் கூடவே,”ம்மா, நா இங்கே இப்போ இருக்குற ஹோட்டல் ரூமை காலி பண்ணிட்டு,அங்கே அவங்க வீட்டு அவுட்ஹவுஸ்சுக்கு போறேன்.அனிதா மாம் அங்கேயே வர சொல்லிட்டாங்க.ஒரு நல்ல நாளா பார்த்து சொல்லு. பாலை காய்ச்சிக்கறேன்”என்று சொல்ல அப்பொழுதே நாட்காட்டியில் நாள் பார்த்த ராதா, ” சீதே, நாளைக்கே நல்லா இருக்கு.இதை விட்டா வெள்ளிக் கிழமைதான்.உன்னோட தோதுக்கு பார்த்துக்கோ. கூடவே ரெண்ட் எவ்ளோவுன்னு கேட்டு கொடுத்திடு .அந்த பையன் லியோ,அவனோட ரொம்பவெல்லாம் பழக்கம் வேணா. பார்த்துக்கோ”என்று பேசிவிட்டு வைத்தார்.

அந்நிய தேசத்தில் பெண் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்று ராதாவின் மனம் தவித்தது. அடுத்தநாளே பால் காய்ச்சுவதற்கு சீதா தயக்கம் கொண்டாள் .அந்த  வார வெள்ளிக்கிழமை அன்று  செண்டு பால் காய்ச்சிவிட்டு,அதை தான் கொண்டு சென்று இருந்த சுவாமி படத்தின் முன்னே வைத்து கும்பிட்டாள் .காரணமே இல்லாமல் அவளது கண்களில் இருந்து கண்ணீர் வழிவதற்கும், அவளை பார்க்கவென்று அனிதாவும்,லூயிஸ்சும் வருவதற்கும் சரியாக இருந்தது. லியோ வரவில்லை.அவன் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதற்காக வீட்டில் பிரத்யேக ஜிம் வைத்திருக்கிறான். லட்சம் யூரோ கொடுத்தாலும் அநத பழக்கத்தை விட மாட்டான் என்று அனிதா சொல்லி சிரித்தார். இருவரும் இவள் கொடுத்த பாலை குடித்துவிட்டு ,கப்புகளை கழுவி சிங்க் அருகே கவிழ்த்து விட்டு கிளம்பினார்கள்.

அனிதா மனதில் இந்த பெண்ணை லியோ திருமணம் முடித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை ஓடியது. தனது எண்ணம் செல்லும் போக்கில் அவரே திடுக்கிட்டு போனார்.லியோ இதுவரை இரண்டு பெண்களுடன் டேட் செய்து இருக்கிறான். பள்ளி இறுதி ஆண்டு படிக்கும் பொழுது உடன் படிக்கும் மாணவியுடன்.பிறகு ,வேலைக்கு சேர்ந்த புதியதில் . அவன் வேலைக்கு செல்ல ஆரம்பித்து பத்து வருஷங்கள் ஆகிறது. அதற்குப் பிறகு எந்த பெண்ணுடனும் அவனுக்கு பழக்கம் இல்லை.இப்போது ,இதோ சீதாவுடன் நன்றாக பேசி பழகுகிறான்.அவ்வளவு தான்.

சீதாவும் பழகுவதற்கு எளிமையானவளாக இருக்கிறாள். இந்திய பெண். நன்றாக படித்திருக்கிறாள் . இருவருக்கும் பிடித்து,பெண்ணின் வீட்டில் ஒப்புக் கொண்டு திருமணம் செய்வது எல்லாம் … கண்ணைக் கட்டியது அனிதாவுக்கு.

சம்மந்தப் பட்ட இருவருக்கும் அதைப் பற்றிய யோசனைகள் எதுவும் இல்லை.அவரவர் வேலையை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். சில சமயங்களில் லியோ சீதாவை தன்னுடனேயே அலுவலகம் அழைத்து செல்வான். திரும்ப கூட்டிக் கொண்டு வருவான். இதெல்லாம் சகஜம் ஆகியது.

இருவருக்குள்ளும் புரிதலுடன் கூடிய நட்பில் ஆரம்பித்தது. பிறகு என்று காதலாக மாறியது என்று தெரியாது.காதலை முதலில் சொன்னவன் லியோ தான்.பெண்ணுக்கும் அவன் மீது காதல் வளர்ந்திருந்த நேரம்.அவனும் சொல்லவே சந்தோஷமாகவே சரி என்றாள் .அந்த நேரத்தில் அவளுக்கு தனது பெற்றவர்கள் என்ன சொல்லக் கூடும் என்றெல்லாம் யோசனை இல்லை. அவளது தனிமையை விரட்டும் தோழன் ஆனான் லியோ.

இருவருக்குள்ளும் மனம் ஒத்துப் போனது.ஒரே விதமான ரசனை சில விஷயங்களில். வெல்வேறு விதமான ரசனைகள் பல விஷயங்களில். உணவு வகைகளில் அவன் அசைவப்பிரியன். இவளோ சைவ பட்சி. தனக்கு தானே சமைத்து சாப்பிடும் வழக்கம் கொண்டவள்.வெளியே இதுவரை சாப்பிட சென்றது கூட இல்லை. கலாச்சாரம் வேறுபாடு. அதெல்லாம் கூட இருவருக்கும் பெரிய விஷயமாகவே தெரியவில்லை.

இருவருக்குமான உலகமே வேறாக இருந்தது. அவள் அங்கே இருந்த மாதங்களை சுவர்க்கம் ஆக்கினான் லியோ. இருவருமாக தனியாக ஒரு அடுக்ககத்தில் தங்கும் அளவுக்கு அவர்களின் உறவு முன்னேறி இருந்தது. சீதா மீண்டும் அடுத்த மாதம் இந்தியா கிளம்பியாக வேண்டும் என்ற நிலையில் வெகுவாக சோர்ந்து போனாள் . நிஜம் அவள் முகத்தில் அறைந்தது.

பெற்றவர்களிடம் எப்படி இதை பற்றி பேசி புரிய வைப்பது என்று யோசனை. அனிதாவும் லூயிசும் இந்தியா வந்து இவளின் பெற்றவர்களிடம் பேசுவதாக சொன்னார்கள். சீதாவுக்கு லியோவை விட்டு இருக்க முடியும் என்று தோன்றவில்லை. லியோ நிலைமை அதைவிட மோசம். இப்படி ஒரு பெண்ணை மீண்டும் சந்திக்க முடியாது என்றது அவனது மனம்.

அவளை அந்த வார இறுதியில் சர்ச்சுக்கு அழைத்து சென்று அவளது விரலில் மோதிரம் அணிவித்தான். இருவரும் மனமார செய்து கொண்ட திருமணம் அது.இறைவன் மட்டுமே சாட்சி.இந்த விஷயத்தை லியோ தனது பெற்றவர்களிடம் கூட சொல்லவில்லை.சீதா பெற்ற

வர்களின் சம்மதம் இல்லாமல் இங்கே வந்து வாழ்வது இயலாது என்று கண்ணீர் சிந்த அவளுக்கு பிரியா விடை கொடுத்து விமானம் ஏற்றி அனுப்பினார்கள் லியோ குடும்பத்தார்.

இந்தியா சென்ற சீதாவுக்கு மனதுக்குள் பெரும் போராட்டம்.எப்படி இதை பெற்றவர்களிடம் சொல்லி ஒப்புதல் வாங்குவது என்று  மனதை குழப்பிக் கொண்டாள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!