Skip to content
Post Views: 100
ஓம் ஸ்ரீ சாய்ராம்
சாருலதாவின் உடல்நிலையை காரணம் காட்டி அந்த வாரயிறுதியை ஒப்பேற்றுவதே பெரும்பாடானது ரம்யாவிற்கு. ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே மகளை புகுந்த வீட்டிற்குச் செல்லச்சொல்லி நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்.
அன்னையிடம் காட்ட முடியாத எதிர்வினையை எல்லாம் கணவனிடம் அலைபேசியில் கொட்டித்தீர்த்தாள்.
“ரெண்டு நாளுல வழி சொல்றேன்னு இப்படி என்னை இக்கட்டான நிலையில் மாட்டிவிட்டுட்டீங்களே. இதுக்குத்தான் ஷ்ரவன் வேற ஸ்ட்ராங்கான ரீசன் யோசிக்கலாம்னு சொன்னேன்,” அவனைப் பேசவிடாமல் பொரிந்து தள்ளினாள்.
Advertisement
நூற்றிமூன்று டிகிரி காய்ச்சலிலும் சாருலதா பம்பரமாய் சுற்றி வருவார் எனக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை அவன்.
‘அது சரி! இன்னும் கட்டிய மனைவியின் குணாதிசயங்களே முழுவதும் தெரிந்திராத நிலையில், மாமியாரின் சுபாவம் எப்படித் தெரியும்,’ அசைபோட்டவன், என்ன செய்வதென்று யோசனையில் கரைந்தான்.
“லைன்ல இருக்கீங்களா இல்லையா?” வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.
Advertisement
“ஈவினிங்க் வரைக்கும் டைம் கொடு ரம்யா,” என்று மட்டும்தான் சொல்ல முடிந்தது அவனால்.
Advertisement
“என்னமோ செய்ங்க போங்க,” சிடுசிடுத்து அழைப்பைத் துண்டித்தாள்.
எரிமலியாய் கொப்பளித்துக் கொண்டிருக்கும் மனையாளை இந்த நிலையில் வீட்டிற்கு அழைத்துவந்தால், இத்தனை நாட்களாகப் பாடுபட்டு வளர்த்து வந்த அன்பும் புரிதலும் ஒரே நொடியில் பஸ்பமாகிவிடும் என அஞ்சினான். அவள் எதிர்பார்க்கும் தனிமையைத் தருவதுதான் உத்தமம் எனப் புரிந்தபோதும் அதை நியாயப்படுத்த தோதான காரணம்தான் புலப்படவில்லை.
ஆறு மணிக்கு மேலாகியும் மங்கையிடமிருந்து அழைப்பு வராமல் போக, அவள் கோபத்தின் வீரியத்தை உணர்ந்தான். உண்மைகளுக்குக் கொஞ்சம் முலாம்போட்டுப் பூசிமெழுகுவது தான் அனைவருக்கும் நல்லது என்ற முடிவுக்கு வந்தான்.
Advertisement
ஷ்ரவனின் வருகையில் சாருலதாவும் ரவிச்சந்திரனும் பூரிக்க, திடுதிப்பென்று வந்து நின்ற கணவனை விழிகளால் சுட்டெரித்தாள் அவன் தர்மபத்தினி.
“சப்பாத்தியும் குருமாவும் செய்யறேன் ஷ்ரவன். ரெண்டு பேரும் டின்னர் சாப்பிட்டுக் கிளம்புங்க. முதல்ல காபி எடுத்துட்டு வரேன்,” சாருலதா சமையலறைக்குப் பறந்தார்.
மாமியாரின் சுபாவத்தை நேரில் கண்டவனின் இதழோரம் புன்னகை தேங்கியது.
மிடறு மிடறாக காபியை ருசித்தபடி மாமனாரிடம் அலுவலக வேலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான். கணவனின் உள்நோக்கம் புரியாமல் தவித்து நின்றாள் பெண்.
குக்கர் விசல் கேட்டதும் இரவு உணவு சமைக்கிறேன் என சாருலதா விருட்டென எழுந்துகொள்ள,
“குக்கர் அணைச்சிட்டு வாங்க சாருமா. உங்க ரெண்டு பேர்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்,” நிதானத்திலும் நிதானமாகப் பேசினான்.
சாருலதாவின் முகம் யோசனையில் கரைய, ரம்யாவிற்குப் பக்பக்கென்று அடித்துக்கொண்டது. கவலையில் தோய்ந்தவளுக்கு, கண்ணசைவில் நம்பிக்கையூட்டியவன் மாமியார் மாமனார் பக்கம் திரும்பினான்.
“நீங்க எல்லாரும் என் ஹெல்த் பத்தியே யோசிக்கிறீங்களே தவிர, எனக்கு நடந்த விபத்துனால, ரம்யா எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கான்னு கொஞ்சம் கூடக் கவலைப்படவே இல்ல…” அவன் கூற,
தங்களுக்குள் நிலவும் மனஸ்தாபத்தைப் பற்றி உடைக்கவா இங்கு வந்திருக்கிறான் எனப் பதறிய ரம்யா,
“ஷ்ரவன்! இப்ப எதுக்கு அதெல்லாம்…” என முகத்தைச் சுருக்கினாள்.
“நீ பேசாம இரு ரம்யா!” அதட்டியவன்,
“நான் சொல்றது சரிதானே சாருமா,” மாமியாரிடமே கேள்வியைத் திருப்பினான்.
சாருலதாவின் முகம் வருத்தத்தில் தோய்ந்தது.
“அவளுக்கு அபார்ஷன் ஆனதுல எங்களுக்குமே வருத்தம்தான் ஷ்ரவன்,” கசந்த குரலில் உரைத்தார்.
“வருத்தப்பட்டா மட்டும் போதுமா. அவ உடல்நலத்திலும் அக்கறையா இருக்கவேண்டாமா,” சுட்டிக்காட்டினான் ஷ்ரவன்.
“அவளுக்கு உடம்புக்கு என்ன?” பதறிய சாருலதா, மகளிடம் ஓடி,
“என்னடி பண்ணறது உனக்கு. எதுவாயிருந்தாலும் வாய்திறந்து சொன்னால்தானே தெரியும்?” ஆற்றாமையில் கண்டித்தார்.
‘என் உடம்புக்கு என்ன?’ என யோசித்தவள், ‘கதை, திரைக்கதை, வசனம் இயக்கும் நீங்களே மிச்சத்தையும் சொல்லுங்க,’ என்ற ரீதியில் கணவனைப் பார்த்துக் கண்களை உருட்டினாள்.
‘அவர ஏன்டி முறைக்குற,” சாருலதா மகளை அதட்ட,
“உங்க மகளாச்சே. உடம்புக்கு முடியலன்னு வாய்திறந்து சொல்லிடுவாளா,” மனையாளைக் காப்பாற்றும் சாக்கில் மாமியாரை மடக்கினான்.
சாருலதா அழகாய் அசடுவழிய,
“ரம்யாக்கு என்னன்னு நீங்க சொல்லுங்க ஷ்ரவன்,” அக்கறையாக இடைபுகுந்தார், பாசக்கார தந்தை.
“போன மாசம் கைனீக் செக்கப் செஞ்ச டாக்டர், அவளுக்கு ஹீமோக்ளாபின், வைடமின் டி எல்லாம் அளவுக்கு மீறி குறைவா இருக்குன்னு சொல்லி, கம்ப்லீட் ரெஸ்ட்ல இருக்கச் சொன்னாரு. ஆபிஸ்க்குப் போகாதேன்னு சொன்னேன் கேக்கல; சரி, வீட்டுலயாவது என் வேலையை நானே பாத்துக்குறேன்ன்னு சொன்னேன். அதையும் கேட்க மாட்டேங்குறா. ஒரு ஸ்பூனைக் கூட நகர்த்த விடாம என்னை உள்ளங்கையில் வச்சு தாங்குறா” என்றவன் சாருலதாவிடம்,
“உங்களுக்கு உடம்புக்கு வந்ததும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. அவ பக்கத்துல இல்லேனாலும், என்னால சமாளிச்சிக்க முடியும்னு ப்ரூவ் பண்ண எனக்கு அது ஒரு நல்ல வாய்ப்பா அமைஞ்சுது,” ஒரு பேச்சுக்குச் சொல்ல,
அவன் தனக்கு ஜாடைமாடையாக குத்திக்காட்டுகிறான் என உணர்ச்சிவசப்பட்ட பெண்மானுக்கு ரோஷம் ஜிவ்வென்று ஏறியது.
அவள் அசௌகரியத்தைக் கவனிக்க மறந்தவன், “அதனால, அவ கொஞ்ச நாளைக்கு இங்கேயே இருந்து நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும் சாரும்மா,” என அறிவித்தான்.
“அவளைப் பார்த்துக்க எங்களுக்குக் கசக்குமா என்ன. அவதான் உங்களை விட்டுப் பிரிஞ்சு இருக்கவே மாட்டாளே,” நிதர்சனத்தைச் சுட்டிக்காட்டினார் சாருலதா.
‘இதுவேறயா!’ என அவன் விழிகளில் தூதுவிட,
“அதான் தனியா சமாளிச்சுக்க முடியும்னு ப்ரூவ் பண்ணிட்டாரே. நான் இங்கேயே இருக்கேன் ‘ம்மா,” வெடித்தாள் ரம்யா.
கணவன் மேலுள்ள அதீத காதலில் சண்டையிடுகிறாள் எனத் தவறாகப் புரிந்துகொண்ட ரவிச்சந்திரன்,
“உன் நல்லதுக்குத் தானே சொல்றாரு ரம்யா. நீ அவர் பேச்சைக் கேட்டிருந்தா அவர் ஏன் எங்ககிட்ட வந்து புலம்பப்போகுறாரு,” கனிவாய் பேசி, மகளைத் தன் உடல்நலத்திலும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி,
“நேரமாச்சு! ரெண்டு பேரும் டின்னர் சாப்பிட்டுக் கிளம்புங்க,” என்றார்.
பட்ட கஷ்டமெல்லாம் வீணாகிறதே என நொந்தவன், “இல்லப்பா. அவ அங்க வந்தா எங்க யார் பேச்சையும் கேட்கமாட்டா. சாரும்மா தான் அவளுக்குச் சரியான ஆளு. அவ கொஞ்ச நாளைக்கு இங்க இருந்தால்தான் என் பழைய ரம்யாவா என்கிட்ட வருவா,” தீர்மானக் குரலில் உரைத்தான்.
மாப்பிள்ளையின் பாராட்டில் உச்சிகுளிர்ந்த சாருலதா, “நான் பாத்துக்கறேன் ஷ்ரவன். நீங்க கவலைப்படாம வீட்டுக்குக் கிளம்புங்க,” என்றார்.
மாமியாரின் கைபக்குவத்தில் வயிறு முட்ட உண்டவன் வீட்டிற்குப் புறப்பட, வழியனுப்பிவிட்டு வருகிறேன் என அவனுடன் வாசலுக்கு நடந்தாள் ரம்யா.
துல்லியமாகத் திட்டமிட்டிருக்கிறாய் என மனையாள் தன்னை மெச்சி நன்றி கூறப் போகிறாள் என்ற மிதப்பில் அவன் நடக்க,
“இப்போ எதுக்கு இத்தனை கட்டுக்கதைகள் சொல்லி சிடுவேஷன காம்ப்லிகேட் பண்ணுறீங்க ஷ்ரவன்,” தேக்கிவைத்திருந்த எரிச்சலை எல்லாம் கொட்டினாள்.
அவ்வளவுதான். அவனுக்கும் கோபம் எல்லையைக் கடந்தது.
“உள்ளதையும் சொல்லக்கூடாது. பிரிஞ்சும் வாழணும்னா பொய் சொல்லித்தான் ஆகணும்,” அவனும் எகிறினான்.
“அதான் சரியான சந்தர்ப்பத்துக்குக் காத்திருக்கலாம்னு சொன்னேனே,” குத்திக்காட்ட,
“சந்தர்ப்பம் அமையலன்னு தெரிஞ்சும் காத்திருக்காம பத்துமுறை ஃபோன் பண்ணி என்ன செய்யப்போறீங்க நச்சரிச்சீனா என்னால வேற என்ன செய்யமுடியும்,” நொந்துபோனான்.
பொறுமை இழந்து பேசுவதை உணர்ந்தவள், பெருமூச்சுடன், ” சரி. உங்க மாமியாரை சமாளிச்ச அளவுக்கு என் மாமியாரை சமாளிக்குறது அவ்வளவு ஈஸி இல்லை. அம்மா கேட்டா என்ன சொல்லப்போறீங்க,” தழைந்த குரலில் வினவினாள்.
‘புகுந்த வீட்டாரைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் இவள், அந்த உறவுகளுக்கு வழிவகுத்த கணவனான என்னை மட்டும் முள்ளாய் குத்துவது ஏன்!’ என மனதளவில் நொந்தவன்,
“அங்க ஒத்திகை பார்த்த நாடகத்தைத்தான் இங்க அரங்கேற்றினேன்,” என்றான்.
“நிஜமாவா? அம்மா எந்த எதிர்கேள்வியும் கேக்கலையா,” வாயைப்பிளந்தாள் அவள்.
“அவங்களுக்குப் பேச இடம் கொடுக்கல,” இறுகிய குரலில் பதிலளித்தான்.
“அம்மா மனசு கஷ்டப்படுற மாதிரி ஏதாவது பேசிட்டீங்களா ஷ்ரவன்,” மனமுடைந்தாள் பேதை.
தன்னைத் தவிர மற்ற அனைவரின் உணர்ச்சிகளுக்கும் மதிப்பு கொடுக்கிறாளே எனக் கோபம் பொத்திக் கொண்டு வந்தது அவனுக்கு.
“இப்போ உனக்கு அங்க என்ன நடந்ததுன்னு தெரியணுமா? இல்ல என்னைவிட்டு பிரிஞ்சு இருக்கணுமா?” சிடுசிடுத்தான்.
தனிமையில் வாழ முடியும் என அவன் சற்றுமுன் சொன்னது நினைவில் வந்து உசுப்பேற்ற, எதுவாக இருந்தாலும் திலகாவிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தவள்,
“நேரமாச்சு! நீங்க கிளம்புங்க,” என முறுக்கிக்கொண்டாள்.
சண்டையிட்டுப் பிரிய மனமில்லாதவன், பெருமூச்சுடன் அவளருகில் வந்தான்.
“அவங்க மனசு கோணாதபடி தன்மையாத்தான் எடுத்துச்சொன்னேன்,”
மீதியையும் மனம்திறந்து பகிரலாமா வேண்டாமா எனத் தடுமாறியவன், ஆழ்ந்து சுவாசித்து,
“அதுமட்டுமில்ல ரம்யா. நான் சொன்ன எதுவும் கட்டுக்கதை இல்ல. ஐ ரியலி மென்ட் இட்,” என்றதும்,
அவனை வியந்து பார்த்தாள்.
“யெஸ் ரம்யா. அன்னைக்குச் சண்டையில், அடிவயிற்றில் நெருப்பள்ளி கொட்டுற மாதிரி எரியுதுன்னு சொன்னீயே. அப்பதான், உனக்கு இத்தனை நடந்தும், உன்னை ரெகுலரா டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போகணும்னு கூடத் தோணாம என் மறதி, என் ட்ரீட்மென்ட்ன்னு எவ்வளவு சுயநலமா இருந்திருக்கேன்னு புரிஞ்சுது.
உடனே உனக்குத் தேவையான போஸ்ட்கேர் ட்ரீட்மென்ட் பற்றி ப்ரௌஸ் பண்ணேன். ரெகுலர் கைனீக் செக் அப் ஆண்ட் ஸ்கேன் பண்ணிக்கணும்; டாக்டர் சொல்ற சப்லிமென்ட்ஸ் தொடர்ந்து சாப்பிடணும்னு இப்படி நிறைய விஷயம் புரிஞ்சுது.
செக் அப் அழைச்சிட்டுப் போகணும்னு மனசு துடிச்சபோதும், என்னுடைய இந்த நிலைமையில் என்னோட வர உனக்கு எம்பேரஸிங்க்கா இருக்கும்னு, வேற வழி யோசிச்சிட்டு இருந்தேன். அம்மா, உத்ராவை கேட்கலாம்ன்னா, அதை நீ எப்படி எடுத்தப்பன்னு பயம்.
இன்னைக்குக் காலையில் நீ மறுபடியும் அளவுக்கு மீறி கோபப்பட்டதும், கவலையா போச்சு. நேரடியா கேட்கவும் தைரியமில்ல; டிலே பண்ணவும் மனசில்ல; அதான் இதையே காரணமா சொல்லிட்டேன்,” என்றான்.
மனம் திறந்து பேசியும் இளகவில்லையே என வருத்தம் கொண்டவன்,
“உன்னை ஹர்ட் பண்ணற மாதிரி பேசியிருந்தா சாரி ரம்யா. என் ஆதங்கத்தை எப்படி எக்ஸ்ப்ரெஸ் பண்ணறதுன்னு எனக்குச் சத்தியமா தெரியல,” என்றான் மனமுடைந்து.
அவன் கனிவான குரல் அவள் மனத்தைப் பிசைந்தது என்பதுதான் உண்மை. இன்னும் பொறுமையாகப் பேசியிருக்கலாமே என நொந்தவள் குனிந்த தலை நிமிராமல் சிலையாக நிற்க,
“உன் ஹெல்த்த நெக்லெக்ட் பண்ணாத ரம்யா. வீட்டுக்குப் போனதும் ஃபோன் பண்ணறேன்,” என்றான் மென்மையிலும் மென்மையாக.
“விலகி இருக்கணும்னு நினைக்கிறது எல்லாத்துக்கும் பொருந்தும் ஷ்ரவன். நமக்குள்ள எந்தவித பேச்சுவார்த்தையும் வேண்…”
அவள் சொல்லி முடிக்கும் முன் வெடுக்கென்று வெளியேறினான். அதே வேகத்தில் வண்டியை உயிர்ப்பித்து புயலாய் பறந்தான்.
அவன் பொறுமை இன்னும் ஒரேவொரு கணம் நீடித்திருந்தால் “…வேண்டாமே ப்ளீஸ்,” எனக் கெஞ்சித்தான் கேட்கிறாள் என அவள் மனப்போராட்டத்தை உணர்ந்திருப்பான்.
உருகி உருகி காதலிக்கிறேன் – கணப்பொழுதில்
உக்கிர காளியாக உருமாறி கொந்தளிக்கிறேன்;
உன் அருகாமை வேண்டுமென கண்மூடி ஏங்குகிறேன்;
உன் உருவம் கண்டதும் கண்டபடி ஏசிவிடுகிறேன்;
உள்ளதை உள்ளபடிச் சொல்ல மனம் துடிதுடிக்க,
உதடுகள் உணர்வுகளில் சிக்கித் தந்தியடிக்க,
உள்ளத்தில் ஊசலாடுவது ஏனோ- விடை தேடுகிறேன்
உடையவனே! நிழலாடும் நின் நினைவில்…
error: Content is protected !!