‘பூனா ‘ ராகவனின் அம்மாவுக்கு வெகுவாக பிடித்து போனது.ஒரு வகையான அந்நகரத்தின் சுத்தமும், சப்தம் அதிகமாக கேட்காமல் அமைதியாக இருப்பதும் அந்த ஊரின் காலநிலையும் அவரை பிடித்து வைத்தது .மருமகள் இன்னமும் கொஞ்சமேனும் அனுசரணையாக இருந்திருந்தால் என்ற எண்ணத்தை அவரால் ஒதுக்கி தள்ள முடியவில்லை. ஒரு பிள்ளை, ஒரு பெண் எனும் பொழுது திருமணம் முடிந்து சென்று விட்ட பெண்ணுடன் அதிகம் தங்க முடியாது.அதிலும் பெண்ணோ மாமியார் மாமனாருடன் இருக்கும் பொழுது அது சாத்தியம் அற்ற ஒன்றும் கூட. பொதுவாகவே பெண்களுக்கு தங்கள் பிள்ளைகளுடன் இருக்க வேண்டும் என்று ஆசையும் இருக்கும்.
கொஞ்சமே வயதும் ஆகிவிட்ட நிலையில் மகனின் நிழலை தேடியது அந்த தாயின் மனம். கணவரும் இல்லை. வேறு ஆதரவும் இல்லை. தான் வாழ தேவையான பணத்தையும்,வீட்டையும் கணவர் விட்டு சென்றிருக்கும் நிலையில் முதியோர் இல்லம் சென்று வாழ விருப்பமும் இல்லை.
திருமணம் முடிந்த பிறகான மகனது மாற்றங்களை அவரும் அவதானிக்கிறார்.அவனுக்கான குடும்பம்,பொறுப்புகளை சுமக்கிறான் .தானும் ஒரு சுமையாக இருக்கவேண்டாம் என்று தான் தோன்றுகிறது.ஆனால் ,தனிமை? அவர் ஒன்றும் முன்புபோல் மகன் தன்னை மட்டுமே கவனிக்க வேண்டும், முப்பொழுதும் அம்மா பாட்டு பாட வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. பெற்றவகுக்காக ஒரு அறை . இவர்கள் சாப்பிடும் உணவிலிருந்து ஒரு கவளம். தனிமையை துரத்த மகன் மருமகளின் ஆதரவான பேச்சுகள்.தேவை அவ்வளவு தான்.
சென்னையில் இருந்த வரைக்கும்,தனது தம்பி ,தங்கைகள் குடும்பத்துடன் ஏதாவது கோவில்களுக்கு சென்று விடுவது வழக்கம்.இங்கும் அருகே ஒரு பார்சனில் ஒரு பெருமாள் கோவிலையும்,வீட்டின் அருகே ஒரு பிள்ளையார் கோவிலையும் பிடித்து வைத்திருக்கிறார்.
Advertisement
சில வருஷங்கள் கணவருடன் வட மாநிலங்களில் இருந்த பழக்கத்தில் ஓரளவு ஹிந்தி தெரியும். மராட்டி இவருக்கு புரியவில்லை.அதெல்லாம் ஒரு விஷயமும் இல்லை. மகன் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மனைவியை பார்க்கவென்று விமானம் பிடித்து சென்னை சென்று விடுகிறான். சில சமயங்களில் அலுவலக வேலை எண்டு சென்னை பயணம் .அவ்வாறான நேரங்களில் மாமியார் வீட்டில் தங்கி கொள்கிறான். இதெல்லாம் ஒரு சாக்கு தான்.மனைவியை பிரிந்து ராகவானால் இருக்க முடியவில்லை.
திருமணம் முடிந்ததில் இருந்து உற்ற தோழியாக இருந்தவள். மனமும்,உடலும் வெகுவாக அவளை தேடி களைத்து போகிறது. சில சமயங்களில் தாயிடம் அந்த எரிச்சலை காட்டி விடுகிறான் ராகவன்.
ராகவனின் அம்மாவும் இதுபோல வயதை கடந்து வந்தவர் தானே! மகனது நிலை புரிகிறது. அமைதியாக கடக்க பழகிக் கொண்டார். இதோ இப்பொழுதும் ராகவன் சென்னை சென்று விட்டதில் தனிமை தாங்க முடியாமல் பார்சனில் இருக்கும் நரசிம்மரை வழிபட வந்தாயிற்று.
Advertisement
சென்னையில் பிள்ளைப்பேறுக்காக வந்த ஜானகி அம்மாவின் வீட்டில் பொருந்தி இருக்க முடியாமல் தவிக்கிறாள்.’இது என்னோட அம்மா வீடு.என்னோட வீடு இல்ல.என்னோட வீடு புனேல இருக்கு’ என்று குழந்தை போல அவளது மனம் சிணுங்குகிறது.போனமுறை ராகவன் வந்துவிட்டு சென்ற பிறகு ராதா மகளிடம் கண்டித்து பேசிவிட்டார்.
Advertisement
“இங்கே பாரு ஜானு.உனக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் முடிஞ்சு போச்சு.உன்னோட புருஷன் என்னவோ நேத்து தான் கல்யாணம் முடிச்சவனாட்டம் மாசத்துல பாதிநாள் இங்கே வந்திடறாரு. வேலைக்கு போறாரு தானே? இங்கேயே இருந்தா பொழப்ப எப்படி பார்ப்பாரு . சரி ,அதை விடு.அது அவரோட பிரச்சனை.இங்கே நீங்க ரெண்டு பேரும் அன்யோன்யமா பேசுறதை சீதா பாக்குறா.கல்யாணம் ஆகாத பொண்ணு வீட்டுல இருக்கும் பொழுது உங்க ரெண்டு பேத்துக்கும் விவஸ்தை வேணாவா…
அம்பள கொஞ்சம் அப்பிடி இப்படி இருந்தாலும் பொண்ணு நீதானே அவருக்கு எடுத்து சொல்லணும்? நீ சொல்லலைன்னா நானே சொல்லிருவேன் . பார்த்துக்கோ.அடிக்கடி அவரு இங்கே வந்து போற வேலை வேணா. குழந்தை பிறந்த பிறகு சொல்லி அனுப்புவோம்.அப்போ வந்தா போதும்.”
உண்மையில் ஜானகி மனதால் இங்கே வந்திருக்கவே கூடாது என்றுதான் வந்தது.யார் கண்டுபிடித்தார்கள்…தலை பிரசவம் அம்மா வீட்டில் இருக்க வேண்டும் என்று!ஒருவேளை என்னுடைய மாமியார் இங்கே சென்னையில் இருந்திருந்தால் நான் அங்கே போயிருந்திருப்பேன்.இப்படி பேச்சு வாங்க என்ன அவசியம்? மாமியார் என்னுடைய அம்மாவைவிட ஆயிரம் மடங்கு என்னை நன்றாக பார்த்துக்கொண்டு இருந்திருப்பார் என்று தோன்ற பேச்சுகள் இன்றி அம்மாவை பார்த்துக் கொண்டு இருந்தாள் .
Advertisement
கிருஷ்ணனும் தனது மனைவி சொல்வதை கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்.அவரிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.சீதாவின் காதலை ஒன்றுமில்லாமல் செய்துவிட்ட குற்ற உணர்ச்சி அவரை இப்போதும் அமைதியாக நிற்க வைக்கிறது.
ராகவன் மதியம் வருவதாக சொன்னதில் ஜானகிக்கு வேறு நிலை கொள்ளவில்லை.அம்மா ஏதாவது சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று மனது பதறியது. அதை தவிரவும் அம்மா சொன்ன பிறகுதான்,திருமணம் ஆகாத ,அழகான ,நிறைவான தங்கை வீட்டில் இருக்கும் பொழுது கணவன் இப்படி வரலாமா என்று வேறு இடித்ததில் ஜானகி நொந்து போனாள் .
வீட்டுக்கு வந்த ராகவனிடம் , ஒர்க் பிரம் ஹோமில் வேலை செய்து கொண்டிருக்கும் சீதா கலகலப்பாக பேசவும், ராதாவின் கண்கள் ‘பார்த்தாயா’ என்று ஜானகியிடம் கேள்வி கேட்க ‘விளைவு’ அன்று இரவின் தனிமையில் ஜானகி தனது கணவனிடம் “இனிமே நீங்க பாப்பா பிறந்த பிறகு வந்தா போதும்.இப்போ வரவேணா . குழந்தை பிறந்து மூணாவது மாசம் நானும் பாப்பாவும் அங்கே உங்ககிட்ட வந்திருவோம்”என்றுவிட ராகவனின் மனம் மனைவியை பார்க்காமல் எப்படி இருக்க முடியும் என்று வாடியது.
கணவனின் அன்பும்,ஏக்கமும் புரிகிறது.ஆனாலும், சில விஷயங்களை மாற்ற முடியாது என்று அமைதியாகவே இருந்து விட்டாள் . ஜானகிக்கு தன் மீதே கோவமும் வந்தது.ஒருவேளை சீதாவையும்,ராகவனையும் சேர்த்துவைத்து யோசித்துவிட்டு மூவரது வாழ்க்கையிலும் நிம்மதியை இழக்க அவள் தயாராக இல்லை.அதற்க்கு இந்த பிரிவு அவளுக்கு சம்மதம் தான்.
மனைவி என்ன சொல்ல வருகிறாள் என்று சரியாக புரியாவிட்டாலும்,ராகவன் மனைவியின் இந்த வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க விழைகிறான். அதனாலேயே அடுத்து வந்த வாரகங்களில் அவன் சென்னை வரவில்லை.அலுவலகத்தில் பனி நிமித்தமாக அவனை ஒரு மாதத்திற்கு லண்டனுக்கு அனுப்ப ,மனைவியுடன் பேசும் நேரம் வெகுவாக குறைந்து போனது.இந்த பிரிவும் அவசியம் தான் என்று ராகவன் நினைத்திருக்க,பெண்ணின் மனமோ அதற்க்கு எதிர்மாறாக யோசித்தது. வெகுவாக கண்கள் குளம் கட்டுவதும் ,கணவனை தேடுவதுமாக ஜானகியின் பாடு வெகு திண்டாட்டம் தான் . கணவனுக்கு தன்னிடம் கோவம் என்று அர்த்தம் கொண்டு கலங்கி போனாள் ஜானகி.
சாதாரண நேரமாக இருந்தால் ஒருவேளை புரிந்து கொண்டு இருந்திருப்பாள். பிரசவ நேரம்.ஹார்மோன்களில் மாறுபாடும்,ராதாவின் கடினமான அணுகுமுறையும் ஜானகியை சோதித்து பார்த்தது.ராகவன் இல்லாத நேரத்தில் தான் மட்டும் இங்கே இருக்கவேண்டாம்.ஜானகிக்கு பிரசவ நேரம்.எதற்கும் இருக்கட்டும் என்று ராகவனின் அம்மா சென்னை வந்துவிட்டார்.வந்த வேகத்தில் மருமகளுக்கு பிடிக்கும் என்று கொஞ்சம் தின்பண்டங்களும்,இனிப்பு வகையும், வீட்டிலேயே செய்து கொண்டுபோய் கொடுத்துவிட்டு ,”வேறே ஏதாச்சும் வேணும்னாலும் தயக்கம் இல்லாம கேளு கண்ணா.. செஞ்சு எடுத்திட்டு வரேன்.முகம் சுரத்தே இல்லாம இருக்கேம்மா. நீ சந்தோஷமா இருந்தா தானே குழந்தை சந்தோசமா இருக்கும். ஆரோக்கியமாக பிறக்கும்!”என்றுவிட்டு கிளம்பினார்.
இவர்கள் இருவரும் பேசுவதை அறை வாசலில் நின்றுகொண்டு கேட்டிருந்த ராதாவுக்கு ஏனோ கோவமாக வந்தது.இந்தம்மா வந்து தான் என்னோட பெண்ணை பார்த்துக்க போறாங்களாக்கும்”என்று மனதில் நொடித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள் . ஒரு கப் காபி கொடுத்து ராகவனின் அம்மாவை அனுப்பி வைத்தாள் ராதா.
அடுத்த இரண்டாவது நாள் ராதாவுக்கும் ஜானகிக்கும் இடையே நடந்த பாச போராட்டத்தில் தனக்கு தேவையான ஒரு வாரத்திற்க்கான உடைகளை எடுத்துக்கொண்டு ஜானகி மாமியார் வீட்டுக்கு சென்றுவிட,ராதாவுக்கு கோவம் உச்சியை தொட்டது.மகளின் மீதும் ,அவளது மாமியார் மீதும் அர்த்தமற்ற கோவத்தை வளர்த்துக்கொண்டாள் ராதா.
இவையெல்லாம் நடக்கும் நேரத்தில் சீதா வேலை விஷயமாக பெங்களூருவுக்கும் ,கிருஷ்னன் சிவகாசிக்கும் சென்றிருந்தார்கள்.சீதா வருவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் ஆகும்.கிருஷ்ணன் வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும். ராதா யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்து விட்டாள் .
வீட்டுக்கு வந்த ஜானகியை பார்த்து முதலில் திகைத்த ராகவனின் அம்மா ஜானகியிடம் என்ன நடந்தது என்றெல்லாம் கேள்விகள் கேட்டு துளைக்கவில்லை.அமைதியாகவே மருமகளை வரவேற்றார். அவளுக்கு ராகவனின் அறையில் தங்கிக்கொள்ள சொல்லிவிட்டு, வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார்.
மருமகளின் முகம் சரியில்லை என்பதை வைத்தே ஜானகிக்கும் அவளது வீட்டினருக்கும் இடையே ஏதாவது மனஸ்தாபம் இருக்கலாம் என்று தோன்றவே மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.முதல் வேலையாக ராகவனுக்கு அழைத்து தினமும் முடிந்த நேரத்தில் மனைவிக்கு அழைத்து பேசுமாறு குரல் வழி செய்தி அனுப்பி வைத்தார். அதை கேட்ட ராகவன் முதலில் அம்மாவுக்கு லேண்ட்லைனில் அழைத்து விசாரித்தான்.
“எனக்கு விவரம் தெரியாது ராகவா.அவ இங்கே வந்திருக்கா. அவ இருக்குற நிலமைல அவளை சந்தோஷமா வச்சிருக்கணும். அவளோட சந்தோஷம் சந்தேகமில்லாம நீதான். “என்று விட அன்றிலிருந்து தினமும் எப்படியாவது லேண்ட்லைன் தொலைபேசியில் அழைத்து ஜானகியிடம் பேசுவதை வழக்கம் ஆக்கி கொண்டான்.
ஜானகியின் முகம் வெகுவாக தெளிந்தது. அவளது மாமியார் அவளுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துக் கொடுத்ததில் பொலிவு கூடியது. அதற்குப் பிறகு பிரசவ நேரம் வரை ஜானகி அம்மா வீட்டுக்கு போகவே இல்லை.இங்கேயே அவளுக்கு நிம்மதியாக இருக்கிறது.கணவனுடன் தினமும் பேச முடிகிறது .மாமியாரும் தனது அம்மாவை போல என் வீடு என்று நடந்து கொள்ளாமல் இதமாகவும் அனுசரணையாகவும் இருக்கும் பொழுது தேவை இல்லாமல் மனதை புண்படுத்திக் கொள்வானே!என்று இருந்துவிட்டாள் .
கிருஷ்னன் ஊரிலிருந்து வந்தவுடன் ஜானகி வீட்டில் இல்லாததை பார்த்து திகைத்துவிட்டார். பிறகு ராதா சொன்னதை வைத்து மகளுக்கு அழைத்து பேசவும் ஜானகியோ,”தப்பா எடுக்காதீங்கப்பா .அம்மாவோட வார்த்தைகள் எனக்கு நிம்மதியை தரல . இந்த நேரம்தான் மனஸு அவரை ரொம்பவே தேடுது.அவர்கிட்டே பேச கூட அம்மா முகத்தை பார்க்க வேண்டியதா இருக்கு. ஏதாவது சொல்றாங்க.சங்கடமா இருக்கு. குழந்தை பிறக்கவும் அங்கே வரேன்”என்று முடிந்துவிட்டது பெண்.
கிருஷ்னனுக்கு ஜீரணிக்க முடியவில்லை.அதேசமயம் மனைவியை கடிந்து கொள்ளவும் முடியாதே!வழக்கம் போல அமைதியாகவே இருந்துவிட்டார்.
சீதா தினமும் மாலை வேலை முடிந்து வந்துவிட்டால் அக்காவோடு பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தாள்.அவளுக்கும் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.பிரசவத்திற்கு என்று வந்து தங்கிய அக்கா இப்படி கிளம்பி சென்றது மனதிற்கு அவ்வளவு உவப்பாக இல்லை.என்ன நடந்திருக்கும் என்று தெரியாத நிலையில் சீதா என்ன செய்ய முடியும்?
தோற்றுப் போன காதல் வேறு அவளை கிழித்துக் கொன்றது.இருவரது அந்தரங்கத்தை சாட்சியாக்க தனது வயிற்றில் குழந்தையாவது வந்திருக்க கூடாதா என்று மருகினாள் .எப்படி லியோ இன்னொரு பெண்ணை ஏற்றார் ?என்ற் கேள்வி அவளை தொய்ந்து போக செய்தது. வெளியே சொல்ல முடியாத ஏக்கத்தில் தவித்தது பெண்ணின் மனம். இதையெல்லாம் புரிந்து கொள்ளவும் முயற்சிக்கவில்லை அவளது பெற்றவர்கள்.
திருமணம் என்று யாராவது சொல்லக் கேட்டால் கூட கண்களில் நீர் கோர்த்தது. இரவின் தனிமை தாங்க முடியாததாக தகித்தது.இந்த உணர்வை யாரிடம் பகிர்ந்துகொள்ள முடியும்? லியோ தவிர வேறு ஒருவர் தனது கட்டிலில் அனுமதிக்க முடியுமா என்பது அவளுக்கு அவளே கேட்டுக்கொள்ளும் கேள்வி.ராதா இப்போது தீவிரமாக மாப்பிள்ளைகளிள் ஜாதகத்துடன் ஜோசியர் வீட்டில் தவம் இருப்பது தெரிந்த விஷயம். மகளின் சம்பள அளவைக் கொண்டு மாப்பிள்ளை எனும் மீனை பிடிக்கும் கொக்கின் தவம்.
ஜானகிக்கு பிரசவ நேரம் என்பதால் ஒரு நான்கு மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருக்கிறாள். இதுவரை பார்த்திருந்த முப்பது ஜாதகங்கள் .ஒன்று கூட சீதாவுடன் ஒத்துப் போகவில்லை என்பதன் மர்மம் என்னவோ!
சில ஜாதங்கங்கள் பொருந்தவில்லை என்று ஜோசியர் சொல்லுவார்.அவர் பொருந்தியிருக்கிறது என்று சொல்லும் ஓரிரு ஜாதகங்கள் ராதாவுக்கு பிடிக்காமல் போகும். அவையெல்லாம் சீதாவின் பார்வைக்கே வராது.இதுவரை சீதா ஒரு மாப்பிள்ளை புகைப்படமும் பார்த்தது இல்லை.
ராதா வைத்திருக்கும் பட்டியலின் நீளம் வெகு அதிகம். மாப்பிள்ளை சம்பளம்,சொந்தவீடு, கார், என்று கேட்பவர்களுக்கு மயக்கம் வரும்.கேட்டால்,”என்னோட பொண்ணே இவ்ளோ சம்பாரிக்குறா.அவளை விட கம்மி சம்பளம் எப்படி முடியும்?நாளைபின்னைக்கு அவங்க ரெண்டு பேத்துக்கும் நடுவால பிரச்சனை வந்தா நல்லாவா இருக்கும்?என்று ராதா அங்கலாய்த்துக் கொண்டதை கேட்ட நானே,அதில் ஒரு நியாயம் இருப்பதாகத்தான் உணர்ந்தேன். உங்களுக்கும் சரிதான் என்று தோன்றலாம்.தவறு இல்லை.
இதற்க்கு இடையில் பெங்களூரு கிளையில் சீதாவுடன் வேலை பார்க்கும் ராமகிருஷ்ணா என்பவர் சீதாவை திருமணம் செய்துகொள்ளும் தனது விருப்பத்தை சொல்ல சீதா முடியாது என்றுவிட்டாள் .அவருக்கும் இதில் வருத்தம் தான்.அவர் கேட்டதே,’வீட்டில் பெண் பார்க்கிறார்கள்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் நான் எங்க வீட்டில் சொல்லி உங்க வீட்டுல பேச சொல்லுறேன் ‘ என்று தான். சீதாவுக்கு விருப்பம் இல்லை. லியோ விஷயம் அவளை அவ்வளவு காயம் கொடுத்திருக்க அதற்குள் இன்னொரு உறவுக்குள் நுழையும் தைரியம் அவளுக்கு இல்லை. அவரும் அதற்க்கு மேல் கேட்கவில்லை.
சீதா பெங்களூருவிலிருந்து கிளம்பும் முன்னரே அவருக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டிருத்தது. பெண் பெங்களூருவில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை. இவருக்கும் நல்ல சம்பளம் என்பதால் மனதில் பெண்ணின் வேலை பற்றிய எந்த எதிர்பார்ப்புகளும் வைத்திருக்கவில்லை என்று சொல்லியிருந்தார் ராமகிருஷ்னா . எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.
சீதா பழைய முடிந்து போன விஷயங்களை தூர போட்டுவிட்டு நடப்பிற்கு வந்தால் நல்லது என்று தோன்றுகிறது. இந்த நிலை அவளின் வருங்கால வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது. காலம் மாறுகிறது. சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை ,மனதை மாற்றிக்கொண்டு வாழ்வதுதான் புத்திசாலித்தனம்.
என்னதான் படித்திருந்து,வெளிநாடு சென்று வேலை செய்து , என்றெல்லாம் மனிதர்கள் இருந்தாலும் எல்லா சமயங்களிலும் நாம் புத்திசாலித்தனமாக முடிவுகள் எடுப்பதில்லை.இதோ இப்போது ராமகிருஷ்ணனை வேண்டாம் என்று மறுத்துவிட்டவளுக்கு காலம் என்ன வைத்துக் கொண்டு காத்திருக்கிறது என்று தெரியவில்லை.