ராமகிருஷ்ணனின் திருமணத்திற்கு சென்றுவிட்டு வந்தாள் சீதா. அவளுக்குள் ஏதோ சொல்ல முடியாத தவிப்பு, ஏக்கம். கண்ணுக்கு புலப்படாத இந்த உணர்வுகள் அவளை கொன்று தின்றது.யாரிடமும் சொல்லி ஆறுதல் தேடவும் மனம் இல்லை. அக்கா ஜானகிக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை கேள்விப் பட்டு ,குழந்தையை பார்க்கவென்று சென்னை சென்றாள் சீதா.அம்மாவுக்கு உதவியாக இருப்பதற்க்காக வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை கவனித்தாள் .
ஜானகி அப்பாவுடன் சகஜமாகவும்,தன்னுடன் இன்னும் கொஞ்சம் கலகலப்பாக பேசினாலும் அம்மாவை தவிர்ப்பதையும்,அதிகமாக பேசாமல் இருப்பதையும் சீதாவின் மனம் குறிப்பெடுத்துக் கொண்டது.அத்தான் ராகவன் குழந்தை பிறந்து ஒருமுறை வந்து பார்த்தார். அவர் சென்னையில் இருந்தாலும் இங்கே முன்பு போல அதிகமாக வருவது இல்லை என்றாள் அம்மா ராதா.
ராகவனின் அம்மா ஒருநாள் வந்திருந்தார்கள்.மருமகளுக்கென்று பத்தியம் சார்ந்த சில உணவு வகைகளை சமைத்து எடுத்துக்கொண்டும் வந்திருந்தார்கள். அவர்கள் கொடுப்பதை ஆசையுடன் சாப்பிடும் அக்கா அதே உணவை அம்மா தந்தால் வேண்டா வெறுப்பாக சாப்பிடுவதை பார்க்க முடிந்தது. அவர்களும் சென்னையில் தான் இருக்கிறார்கள் என்பதால் அத்தான் அங்கேயே தங்கி விடுகிறார் என்று வைத்துக் கொண்டாலும் அக்காவின் இந்த மாற்றம் எதனால் வந்தது என்று சீதாவுக்கு புரியவில்லை .ராதா எதையும் கணக்கில் எடுத்துக் கொள்வதாகவும் தெரியவில்லை.பத்துநாட்கள் கழித்து சீதா மீண்டும் பெங்களூருவுக்கு கிளம்பி சென்றுவிட்டாள்.இன்னமும் இரண்டு மாதங்கள் அங்கேதான் அவளின் வாசம்.
Advertisement
ஒரு மாதத்தில் ஜானகி கிளம்பி சென்னையில் இருக்கும் அவளது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டதில் ராதாவுக்கும் கிருஷ்ணனுக்கும் அவள் மீது அதிருப்தி கிளம்பியது.”எங்க மானத்தை வாங்கத்தானே இப்படி உங்க மாமியார் வீட்டுக்கு கிளம்பி போறே.நாங்க பார்த்து செஞ்சு வச்ச கல்யாணம் தானே.லோகத்திலேயே இல்லாத புருஷன்,மாமியார் உனக்கு. மூணு மாசம் ஆகுறதுக்கு முன்னாலே அங்கே போய் என்னத்தை சாதிக்கணும்?அப்படி என்ன புருஷனை காணாம இருக்கவே முடியாதா?என்றெல்லாம் ராதா பேச வழக்கம் போல ஜானகியிடம் மௌனம் மட்டும் தான். இன்னமும் சொல்லவேண்டும் என்றால் ராதாவின் வார்த்தைகளின் வீரியத்தில் அவளது கிரைம் ரேட் கூடிக்கொண்டே போனதை ராதா அறியவில்லை. கிருஷ்ணனும் சொல்லிப் பார்த்தார்.” ஜானு, ஒரு நாற்பத்தைஞ்சு நாளாவது ஆகட்டுமே!இப்போவே நீ அங்கே போயி நின்னா நல்லா இருக்காதுடா..”
தன்னை கொஞ்சம் சுதாரித்துக் கொண்ட ஜானகி,”அவருக்கு சுதந்திரமா தன்னோட பொண்ணு,பொண்டாட்டியோட இருக்கணும் ப்பா..இங்கே அது சாத்தியப்படாது. கல்யாணம் ஆகாத பொண்ணு வச்சிருக்கோம்…அப்படி ,இப்படின்னு அம்மா பேசிட்டா நல்லா இருக்காது. எனக்கும் அவங்க இல்லாம இங்கே இருக்குறது கஷ்டம். போன் பேசகூட தயங்குறாங்க.என்னோட மாமியார் வீட்டுல எனக்கே ஒரு சுதந்திரம் உண்டு.தேவை இல்லாம பேசவும் மாட்டாங்க. அவங்க எல்லைல என்னோட மாமியார் நின்னுப்பாங்க. குழந்தையையும் என்னையும் இங்கே விட நிச்சயம் நல்லாவே பார்ப்பாங்க.”என்றுவிட்டாள் .
அவளது பேச்சில் அவளது மனம் புரிந்தவராக கிருஷ்ணன் அமைதியாக இருந்துவிட்டார்.ஒரு ஆணாக ,ராகவனின் கஷ்டம் அவருக்கு நன்றாகவே புரிந்தது. ராதாவும் பெற்ற மகளிடம் இன்னமும் கொஞ்சம் பக்குவமாக பேசியிருந்திருக்கலாம் என்றுதான் நினைத்தார். அதனால் மேற்கொண்டு மகளை நிர்பந்தம் செய்யவில்லை.
Advertisement
பெற்றவர்களின் பேச்சை கேட்காமல் கிளம்பி செல்லும் மகளுக்கு சீர் எதற்கு செய்யவேண்டும் என்று ராதா ஒரே கரைச்சல். தாங்க முடியாமல் கிருஷ்னன் தனது இரண்டாவது மகளுக்கு அழைத்து சொல்லிவிட்டார். கூடவே அவரது தங்கை சுதாவும் அவளது கணவரும் வேறு வந்து ராதாவை சத்தம் போட்டார்கள்.சீதாவோ,”ம்மா..உனக்கு இஷ்டம் இல்லன்னா நீ எதுவும் செய்யவே வேணா.நா அப்பாவுக்கு பணம் அனுப்பி விடுறேன். அதிலே அவளுக்கும் , குட்டி பாபாவுக்கும் சீர் செஞ்சு நல்லா அனுப்புங்க”என்றுவிட்டாள் .சொன்னதோடு நிற்காமல் அப்பாவின் வங்கி கணக்கிற்கு இரண்டு லட்சம் பணமும் அனுப்பிவிட்டாள் .அவளுக்கு மனம் ஆயாசமாக இருந்தது.அம்மாவுக்கு இன்னும் கொஞ்சம் பக்குவம் வந்திருக்க கூடாதா..என்று வந்தது.
Advertisement
நன்றாகவே சீர் செய்து மகளையும் அவளது குழந்தை தீபாவையும் மாமியார் வீட்டில் கொண்டுப்போய் விட்டார் கிருஷ்னன்.ராதா தான் கண்டிப்பாக வரப் போவது இல்லை என்று சொல்லிவிட ,சுதா தான் கூட வந்தாள் .ராதாவுக்கு உடல் நலம் சரியாக இல்லை என்று கிருஷ்னன் சொல்லிவிட ராகவனும் அவன் அம்மாவும் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.ராகவன் வார இறுதி நாட்களில் சென்னைக்கு வந்து விடுகிறான் .
நல்ல ஆரோக்கியமான பத்திய ஆகாரம் கொடுத்து மருமகளை நன்றாகவே கவனித்துக் கொண்டார் ராகவனின் அம்மா.அதில் ஜானகிக்கு மாமியார் மீது கொஞ்சமாய் ஈடுபாடு வந்திருந்தது. தன் அம்மாவைவிட மாமியாருடன் இருப்பது அவளுக்கு சுலபமான விஷயம் ஆயிற்று.
நடுவில் நாத்தனார் வந்து தங்கி குழந்தையை பார்த்துவிட்டு போனாள் .ஏனோ இன்னமும் கூட நாத்தனாருடன் சகஜமாக பேசிப் பழக ஜானகிக்கு விருப்பம் வரவில்லை. அதிகமாக பழகாத அண்ணியார் மீது ராகவனின் தங்கைக்கும் மனம் ஒன்றவில்லை. அண்ணி தனக்கு நல்ல தோழியாக இருப்பாள் என்று அந்த பெண் நினைத்திருக்க நிஜம் அப்படியே எதிர்பதமாக அமைந்து விட்டது. இந்த விஷயத்தை பொறுத்தவரை,”நல்லவேளை,ராகவனின் முகத்தை பார்த்துக் கொண்டு இருக்காமல் மகளுக்கு ஏற்கனவே திருமணம் செய்து அனுப்பி விட்டோம்” என்று அவர்கள் அம்மாவுக்கு ஆஸ்வாசம் தான். ஏதோ ஒரு நெருடல் அங்கே இருக்கிறது. சரி செய்ய யாருக்கும் தெரியவில்லை.
Advertisement
உண்மையில் நல்ல அழகாக இருக்கும், பொறியியல் படித்து நல்ல பணியில் இருக்கும் நாத்தனார் மீது ஜானகிக்கு பொறாமை உண்டு. நாத்தனார் என்னதான் தன்னுடன் சகஜமாக பழக முயற்சி செய்தாலும் ஜானகி எட்டி நிற்பது இதனால் தான்.சிறு வயதில் இருந்தே சீதாவுக்கு தங்கள் வீட்டில் அம்மாவால் கொடுக்கப் பட்ட முக்கியத்துவம் ஜானகிக்கு மனதின் ஓரத்தில் ஒரு ஒவ்வாமையை தந்து விட்டிருந்தது.அதை இங்கே தனது நாத்தனாரிடமும் நடைமுறைப் படுத்தி பார்ப்பதுதான் பெரிய பிரச்சனை. இதில் ஒரு முக்கியமான விஷயம் சீதாவுக்கும் சரி, ராகவனின் தங்கைக்கும் சரி,ஜானகி மீது எந்த ஏளனமும்,காழ்புரணர்ச்சியும் கிடையாது. தேவையில்லாத எண்ணங்களை மனதில் வைத்திருப்பவள் ஜானகி தான்.ராகவனுக்கு மனைவியின் மனம் புரிகிறது.எப்படி மாற்றவேண்டும் என்று தெரியவில்லை.குறைந்தபட்சம் அவளுக்கு பிடிக்காத விஷயங்களை செய்வது இல்லை. அவன் தனது தங்கையுடன் அதிகம் பேசுவது இல்லை என்றாலும் கூட
அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே நல்ல புரிதல் உண்டு. அதை ஜானகி அறிந்திருக்க நியாயம் இல்லை.
குழந்தை பிறந்து ஆறுமாதங்கள் ஆனபிறகு ஜானகி தனது கணவன் , மாமியார் துணையுடன் மீண்டும் பூனாவுக்கு சென்றாள் . இங்கே குழந்தையுடன் வருவது ஜானகிக்கு மனதில் இனம் புரியாத சந்தோஷத்தை கொடுத்தது. மாமியாரிடம் இப்போது சகஜமாக பழக ஆரம்பித்திருந்தாள்.ஜானகியின் மனம் புரிந்து அவரும் வீட்டு விஷயங்களில் பொதுவாக தலை இடுவது இல்லை. ஜானகி அடுக்களையில் ஏதாவது உதவி கேட்டால் மட்டும் செய்வார். ஜானகி குழந்தையை பார்த்துக் கொள்ள சொன்னால் மட்டும் குழந்தையை பார்த்துக் கொள்வது.மற்ற நேரங்களில் தூர இருந்து ரசிப்பதுடன் சரி. ராகவனிடம் கூட அவர் உரிமை பாராட்டுவது இல்லை. ஜானகியின் மாதாந்திர மூன்று நாட்கள் மட்டும் அவளுக்கு பரிபூரண ஓய்வு கொடுத்து ,தான் வீட்டு வேலைகளை செய்வார். பொதுவாக அருகில் இருக்கும் நரசிம்மர் கோவில், அவர்கள் அடுக்ககம் கீழே இருக்கும் பெரிய பூங்கா, ஸ்வாமி ஸ்லோகங்கள்,தமிழ் குழுக்களில் ஏற்பாடு செய்யப்படும் கோவில் சுற்றுலா இப்படித்தான் அவரது நாட்கள் செல்கிறது.மாமியார் நடத்தையில் மருமகளுக்கு திருப்திதான். இல்லையென்று சொல்ல முடியாது. சில சமயங்களில் மாமியருடன் குழந்தை தீபாவையும் அழைத்துக்கொண்டு ஜானகி கோவிலுக்கு செல்வது உண்டு,அங்கே தனது மாமியாருக்கு இருக்கும் மதிப்பு கண்டு அவளுக்கே ஆச்சர்யமாக இருக்கும்.
நடுநடுவே கிருஷ்னனும் ,சீதாவும் கேட்டுக்கொண்டதில் விடுமுறை காலங்களில் தீபாவை அழைத்துக் கொண்டு பத்து நாட்களுக்கு சென்னை வாசம்.அந்த சமயங்களில் ராகவனின் தங்கை பூனாவுக்கு குழந்தையை அழைத்துக் கொண்டு வந்துவிடுவாள். ராகவனுக்கு தங்கையை கண்டதில் அவ்வளவு உற்சாகம் பொங்கும். அவர்களை அழைத்துக்கொண்டு விடுமுறை நாட்களில் சுற்றுவான். மறந்தும் அவர்கள் வந்திருக்கும் உற்சாகத்தை மனைவியிடம் பேசும் பொழுது காட்டிக்கொள்ளவே மாட்டான்.
ராகவனும் மனைவியிடம் காதலை பொழிந்தான். மகளிடமும் அவ்வளவு பாசம். மொத்தமாக ஐந்து ஆண்டுகள் அங்கே பூனாவில் வாசம். அதற்குப் பிறகு ராகவனுக்கு சம்பளம் மற்றும் பதவி உயர்வில் நாக்பூரில் வேலை கிடைத்தது.அதில் அந்த குடும்பம் மீண்டும் ஒரு இடப் பெயர்வு.நாகபூரின் வெப்பம் அந்த குடும்பத்தில் யாராலுமே தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் ஜானகி இரண்டாம் முறையாக கர்ப்பம் தரித்தாள் . மூத்தவள் தீபாவுக்கு நான்கு வயது. பள்ளிக்கூடத்தில் அப்போதுதான் சேர்த்திருந்தார்கள். எப்படியோ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாக இருந்தார்கள்.
சென்னையில் இருக்கும் ராகவனது வீடு வேறு மூன்று ஆண்டுகள் லீசுக்கு விடப் பட்டிருக்கிறது.நாக்பூரில் பிரசவம் பார்த்துக்கொள்ள மாட்டேன் என்று ஜானகி வேறு வெகுவாக பிடிவாதம் பிடித்தாள் .அவளது மனதுக்குள் அவ்வளவு பயம். ராதா கூட சொல்லி பார்த்தாள் ,”நா வேணும்னா அங்கே வந்து ஒரு மாசம் இருக்கேன் ஜானகி.பயப்பட வேணாம்” என்று.
அதற்க்கு ஜானகியோ,”ஏன்,உன்னோட வீட்டுல வச்சி எனக்கு பிரசவம் பாக்க மாட்டில்ல . இங்கே வந்து எனக்கு பிரசவம் பார்க்க நீ எதுக்கு? ஏற்கனவே தீபா பொறந்த சமயம் நா உன்னை மதிக்கல.அதுக்கு இப்போ பழி வாங்கணும்?”
மகளின் கூற்றை ஜீரணிக்கவே ராதாவுக்கு கஷ்டமாக இருந்தது. இப்போதுதான் சீதாவுக்கு திருமணத்திற்கு தீவிரமாக வரன் தேடுகிறார்கள். சீதா நடுவில் வேலை விஷயமாக அவ்வப் பொழுது வெளிநாடுகளுக்கு சென்று விடுவதால் உருப்படியாக வரன் எதுவும் பார்க்கமுடியவில்லை. இப்போது அடுத்த மூன்று வருஷங்களுக்கு வேறு எங்கும் போக கூடாது.திருமணம் செய்த பிறகு நீயாச்சு,உன் புருஷன் ஆச்சு” என்று ராதா சண்டை போட்டதிலும்,தனிமை தாங்க முடியாததிலும் இப்போது திருமணம் செய்து கொள்ள சீதா சம்மதம் சொல்லிவிட்டாள் .இந்த நிலைமையில் மீண்டும் ஜானகியை பிரசவத்திற்கு அழைத்து வருவதில் ராதாவுக்கு தயக்கம் இருக்கிறது உண்மைதான்!
அதை நேரடியாக மகள் சொல்லிக்காட்டும் பொழுது மனம் சுருக் என்று தைக்கிறதே. ஒரு பெருமூச்சுடன் வேலைகளை கவனிக்க சென்றாள் ராதா. நிறைய வரன்கள் வருகிறது உண்மைதான். மகள் முன்பு போல இரண்டு மடங்கு சம்பளம் வாங்குகிறாள். பெங்களூருவில் ஒரு மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். இதோ,இப்போது இருக்கும் இந்த வீடு மிகவும் பழசாகி விட்டது என்று அங்கே இருக்கும் வீட்டு ஓனர்கள் சேர்ந்து இடித்துவிட்டு மீண்டும் கட்டியதில் வீடு இப்போது மிகவும் விஸ்தாரமாக இருக்கிறது. மூன்று படுக்கை அறைகள் இவர்கள் இருக்கும் வீட்டில். அந்த வீட்டுக்கு கிருஷ்னன் தான் பணம் கொடுத்தார்,
“நாளைக்கு இந்த வீடு பத்தி வரும்பொழுது என்னோட ரெண்டு பொண்ணுங்களுக்கும் இதுல சம பங்கு இருக்கணும். அதுக்கு நான் தான் பணம் கொடுக்கணும்”என்றுவிட்டார்.அதே அடுக்ககத்தில் இன்னொரு மூன்று படுக்கை அறை வீட்டை சீதா வாங்கி இருந்தாள் அதற்க்கு வங்கி லோன் சென்று கொண்டிருக்கிறது. வெளிநாடுகளுக்கு சென்று வந்ததில் பணம் நன்றாகவே சேர்ந்து விட்டது. அப்பாவுக்காக ஒரு 800சிசி காரும்,தனக்காக ஒரு செடானும் வாங்கியிருந்தாள் . உண்மையில் அவள் இப்போது கோடீஸ்வரிதான். அதனால் அதற்க்கு ஏற்ற வரனை தேடுகிறாள் ராதா.
இந்த நிலையில்தான் இப்போது ஜானகி தனது பிரசவத்திற்க்காக சென்னை வருகிறாள்.அதிலும் அவளுடன் அவளது மாமியாரும் வருகிறார்கள்.ராதா நிச்சயமாக சொல்லிவிட்டாள் .”எனக்கும் வயசு ஏறுதுங்க .தனியவெல்லாம் சமாளிக்க முடியாது.சீதாவும்,அவங்க அப்பாவும் வேலைக்கு போயிட்டா தனியா நா எப்படி சமாளிக்க முடியும்?”
ஜானகியும் ,அவள் மாமியாரும் சீதா வாங்கியிருக்கும் வீட்டில் தங்கினார்கள். ஜானகியின் மாமியார் அவசர உபயோகத்திற்கு என்று இண்டக்ஷன் அடுப்பும்,அதற்கான பாத்திரங்களும் கொண்டு வந்ததில் ராதாவுக்கும் இவர்களுக்குமான வாக்குவாதங்கள் தடுக்க பட்டது. குழந்தை பிறந்து இரண்டாம் மாதத்தில் ஜானகியின் மாமியாரிடம் ராதா ,”தப்பா எடுக்காதீங்க அண்ணி, என்னோட ரெண்டாவது பொண்ணுக்கு ஏத்தா மாதிரி எதுவும் தகைய மாட்டேங்குது. எனக்கு கடுப்பா இருக்கு.இந்த நிலமைல ஜானுவுக்கு செஞ்சுபோட என்னால ஆகாது. நீங்க யோசிச்சு முடிவு செஞ்சா நல்லது.”
அடுத்த வந்த வாரத்தில் ஜானகியும்,அவள் மாமியாரும் இரண்டு குழந்தைகளுடன் விமானம் ஏறிவிட்டார்கள். ஜானகியின் மாமியார்,ராதா தன்னிடம் பேசியதாக எதுவம் சொல்லவில்லை.மாறாக ஜானகிக்கு பிடித்த மாதிரி பேசினார்.
“ஜானகிம்மா..அங்கே ராகவன் தனியா கஷ்டப் போடுறான்.நீயும் குழந்தைகளும் இங்கே இருக்கும்பொழுது அவனுக்கு எப்படி இருப்பு கொள்ளும்?உங்க மூணு பேரோடையும் இருக்க அவனுக்கு எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு நா சொல்ல வேணாமே! ரெண்டாவது குழந்தை தானே.உனக்கும் ஓரளவு இப்போ விஷயம் தெரியும்.நாம சமாளிச்சுக்கலாம். “மாமியாரின் கூற்றில் யோசித்தவளாக ‘சரி’ என்றுவிட்டாள் .
மகனிடம் என்னவோ சொல்லி,சமாளித்து நாக்பூருக்கு கிளம்பியாயிற்று. ரகவானால் வர முடியாத நிலை. சீதாவுக்கு அம்மா செய்ததில் உடன்பாடு இல்லை.அதனால் அவளும் அவர்களுடன் துணைக்கு கிளம்பிவிட்டாள். ஜானகி வீட்டுக்கு வருவதற்குள் ராகவன் வீட்டின் எல்லா அறைகளுக்கும் ஏசி பொருத்தி வைத்திருந்தான். இப்போது அங்கே சீதோஷ்ண நிலை கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கிறது. முதல்முறையாக சீதா தனது அக்காவின் வீட்டுக்கு வருகிறாள்.அங்கே இருந்த ஒரு வாரத்தில் ராகவன் மீதான மரியாதையும் ஆச்சர்யமும் கூடிப்போனது.பிரமிப்பு.இப்படியும் ஒரு கணவன் இருப்பானா என்று. தனக்கும் ராகவன் போல கணவன் வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவள் சென்னை திரும்பினாள்.
அங்கே அவளுக்காக காத்திருப்பது?
ராதா கை நிறைய மணமகன்களின் புகைப்படத்துடன் மகளுக்காக காத்திருந்தாள்.நிறைய படித்து வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன்கள் கூட வந்திருக்கிறது. மகள் வெளிநாடு சென்றால் ,தானும் அங்கே சென்று மகள் வீட்டில் சில மாதங்கள் தங்கலாம் என்றும் ராதாவுக்கு ஆசை உண்டு. அதை வெளியே சொல்வது இல்லை. வாழ்நாளில் ஒருமுறையாவது அயல் நாட்டு மண்ணை மிதிக்க வேண்டும் என்று விரும்பும் சராசரி மனுஷி.தப்பென்று நான் சொல்லவில்லை. மகள் அதற்க்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே! ஏற்கனவே இப்போதுதான் லியோ விஷயத்திலிருந்து வெளியே வந்திருக்கிறாள் சீதா.மீண்டும் வெளிநாடு? ‘நோ சான்ஸ் ‘ என்றுதான் நான் நினைக்கிறேன்.