Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

21. சுபகீதா - ஆகாயமே என் ஆதாரமே

ஆகாயமே என் ஆதாரமே 18

ஆகாயமே என் ஆதாரமே 18

இதுவரை நீ இங்கே வந்ததே இல்லையே என்பது போன்ற எந்த பேச்சுக்களும் அங்கே இல்லை. சுதாவின் இரு மருமகள்களும் அன்று வீட்டிலிருந்து வேலை செய்வதால் அவரக்ளும் கூட நடுவில் இடைவெளி எடுத்துக்கொண்டு வந்து கிருஷ்ணனுடனும் ஜானகியுடனும் பேசிகொண்டு இருந்துவிட்டு சென்றார்கள். கலகலப்பான மனதை உறுத்தாத இருவரின் பேச்சும் அவர்கள் மீது ஜானகிக்கு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியிருந்தது.

சுதாவும்,சுதாவின் கணவரும் கேட்பதா வேண்டாமா  என்று கொஞ்சம் யோசித்துவிட்டு,’யாராவது பேசித்தான் ஆகவேண்டும்’என்று முடிவு செய்து, சீதாவின் திருமணம் பற்றி பேச ஆரம்பித்தார்கள். வேறு வழி இல்லை. சுதாவின் கணவர் சீதாவுக்கு அத்தையின் கணவர் மட்டுமல்ல.சொந்த தாய்மாமனும் கூட.தங்கள் இரு பிள்ளைகளுக்கும் திருமணத்தை சரியான நேரத்தில் நடத்திவைத்து இப்போது பேரன் பேத்திகளும் எடுத்துவிட்டு நிலையில் இன்னமும் தங்கையின் பெண்களில் ஒருத்தி திருமணம் நடக்காமல் நின்று கொண்டு இருப்பது அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

கிருஷ்ணனை பார்க்கவென்று அவர்கள் வீட்டுக்கு சென்ற நேரங்களில் புது மெருகு கலையாத குத்துவிளக்கு போல சீதா அப்படியே மனதில் படிந்திருந்தாள் .சீதாவின் திருமண விஷயத்தை எப்போதாவது இவர்கள் பேசினால் சீதா எரிந்து விழுகிறாள். அவளிடம் வாய் திறக்க முடியவில்லை. சுதாவும் அவளது கணவருமாக மிக நல்ல வரன்களை பார்த்து சொல்லி இருக்கிறார்கள்.அதென்னவோ இவர்கள் கொடுத்த எந்த ஜாதகமும் சீதாவுடைய ஜாதகத்துடன் பொருந்தவில்லை. சுதாவின் கணவர் கூட ராதையிடம் சொல்லி பார்த்தார்.,



Advertisement

“ஏடி ராதே!,இப்போவே நம்ம சீதாவுக்கு வயசு முப்பத்தஞ்சை தாண்டியாச்சு.இன்னமும் என்னத்த ஜாதகம்,ஜோசியம்னு. பையனுக்கும் பெண்ணுக்கும் பிடிச்சிருந்தது,மனப் பொருத்தம் இருக்கான்னு பாக்குறோம் அப்டின்னு நீ சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கு.ஜாதகம் பொருந்தலைன்னா இப்போ என்ன குடிமுழுகி போவுது?” என்று சத்தம் போட்டதற்கு ராதா,

“உங்களுக்கு என்ன வலிக்குது?போதோட பசங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டு இப்போ அக்கடான்னு இருக்கே.  காசு ,பணத்துக்கு குறைச்சல் இல்ல.சுதாவும் நீயும்  ஆரம்பம் முதலே நல்ல வேலை.என்னை கல்யாணம் செஞ்சு இந்த மனுஷனுக்கு கொடுக்கும் பொழுது இவர் சிஏ படிச்சிட்டு இருந்தாரு. நா வேலைக்கு போனதுக்கு நீங்க அத்தனை பேரும் சேர்ந்து கரிச்சு கொட்டினீங்க .அம்மா கூட என்னோட பொண்ணுங்களை பார்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டா. அப்போவெல்லாம் இந்த நியாயம் ,கத்திரிக்கா எல்லாம் எங்கடா அண்ணா போச்சு?

இதோ, கம்ப்யுட்டர் அறிவு இல்லன்னா வேலை போயிரும்ன்னு இந்த மனுஷன் வந்து நின்னப்போ, நான்தானே என்னோட சம்பள பணத்தை வச்சி படிக்க வச்சேன். வீட்டு வேலைக்கு கூட ஆளை நிறுத்தி,நா பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. நீயும்,உன்னோட பொண்டாட்டியும் எங்களுக்கு ஏதாவது பணம் குடுத்து உதவி செஞ்சேங்களா…இன்னிக்கு வெத்து நியாயம் பேசிட்டு வரே .இதோ இந்த பொண்ணு சீதா வேலைக்கு போன பிறகுதானே எங்களுக்கு இந்த வாழ்க்கை?அவ நல்லபடியா கல்யாணம், குழந்தைன்னு வாழ எனக்கு மட்டும் ஆசையாய் இல்லையா? ஏதோ குத்தம் சொல்றே மாதிரி பேசுற?”

Advertisement

ராதா  அன்று கேட்ட கேள்வியில் சுதாவும்,அவள் கணவரும் அசந்து தான் போனார்கள்.அதில் உண்மையும் இருக்கிறதே!அதனால் அவர்களால் வேறு பேச முடியவில்லை. நல்லவேளையாக அன்று ராதை தவிர அவர்கள் வீட்டில் வேறு யாரும் இருந்திருக்கவில்லை. கிருஷ்ணனை அழைத்துக்கொண்டு சீதா மருத்துவமனை சென்றிருந்தாள் .

Advertisement

இந்த சம்பவத்திற்கு பிறகு, மனது கேட்காமல் இப்போது நேராக கிருஷ்ணனிடமே கேட்டார் சுதாவின் கணவர்.

“மச்சான்,கேக்குறேனேன்னு தப்பா எடுக்கதேங்க ..இப்போவே நம்ம சீதாவுக்கு வயசு முப்பத்தஞ்சு தாண்டியாச்சு.இன்னும் அவளுக்கு ஒரு குடும்ப வாழ்க்கையை ஏற்படுத்தி தராம வீட்டுல வச்சிருக்கீங்க.இதுல ஏதாச்சும் நியாயம் இருக்கா? அந்த பிள்ளைக்கு காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்க தெரிஞ்சிருந்தா கூட பரவாயில்லை.நாம செஞ்சு வைப்போம்னு நம்ம முகத்தை பார்த்துட்டு நிக்குது. பாவம்யா..பெண் பாவம் பொல்லாதது. சில விஷயங்களை பிள்ளைங்க நம்மகிட்டே வாய்விட்டு சொல்லதுங்க.ஏக்கம் இருக்கும். நாமதானே அதையெல்லாம் புரிஞ்சுக்கணும் ?  நாமளும் அந்த வயசை தாண்டித்தானே வந்தோம்?”

மச்சினனின் கேள்வி சுருக் என்று கிருஷ்ணனை தைத்தது.அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இப்போது எல்லாமே ராதாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.வயது காரணமாகவும், உடல் உபாதைகள் தொடர்ந்து இருப்பதாலும் அவரால் வேறு எதையும் யோசிக்கவே முடியவில்லை.போதாத குறைக்கு தான் படிப்பை முடிப்பதற்குள் திருமணம் செய்துகொண்டு ராதை வாழ்க்கையை பிரச்சனையாக மாற்றிவிட்டதாக வேறு குற்ற உணர்ச்சி. தனக்கு அவள் பணம் கொடுத்து தான் கணினி பயின்று வேலையை தக்க வைத்துக்கொண்டதில் நன்றி உணர்ச்சி என்று அவரால் கம்பீரமாக மனைவியிடம் பேச முடியவில்லை.

Advertisement

திருமணம் முடிந்து இத்தனை வருஷங்கள் கழித்து அப்பாவின் வார்த்தைகள் அற்ற மௌனத்தை ஜானகியால் புரிந்து கொள்ள முடிகிறது.அவளால் என்ன செய்ய முடியும் என்றுதான் தெரியவில்லை.

ஏதாவது எடுத்து பேசினால்,ராதா வேறு “இவ்ளோ வருஷமா பெத்தவங்களையும்,தங்கச்சியையும் யோசனை செஞ்சியா..இப்போ நீ வந்து புடுங்க எந்த ஆணியும் இல்ல.எங்க குடும்ப விஷயத்தை நாங்களே பார்த்துப்பம்.வந்தியா…பொறந்தவீட்டுல பிள்ளைகளோடு வந்து தங்கி சீராடினியா …போயிட்டே இருக்கணும் .எங்க வீட்டு விஷயம் நீ பேச கூடாது. எனனோட பொண்ணுக்கு ராஜாவாட்டம் உசந்த மாப்பிள்ளையை நானே தேடுவேன்.மூச்…””என்று சொல்வதில் ஜானகியின் மனம் அடிபடுகிறது.கூடவே குற்ற உணர்ச்சி.

இவர்கள் இனத்தில் இருக்கும் அநேக மாப்பிளைகளை பார்த்து விட்டாச்சு.எங்கிருந்து வருவான் ராஜாவாட்டம் மாப்பிள்ளை…இனி பிறந்து வந்தால் கூட பெண்ணுக்கு வயது அதிகம் என்றுவிட்டு சென்று விடுவான். ஜானகிக்கு திருமணம் முடிந்த உடன் சீதாவுக்கு முடித்திருந்தால் அனேகமாக இப்போது எட்டு வயதிலாவது குழந்தை இருந்திருக்கும்.

கிருஷ்ணனின் மனதில் ‘ஒருவேளை சீதா விரும்பிய அந்த பையனை திருமணம் செய்து வைத்திருந்தால் இப்போது நல்லபடியாக வாழ்ந்திருப்பாள்’ என்று பொங்கியது.கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.லியோ இப்போது தனது குடும்பத்துடன் நன்றாகவே இருக்கிறான்.சீதாவின் நிலைமைதான் கவலைக்கிடம்.

பெண்கள் நன்றாக படித்து ,முன்னேறி, வாழ்க்கையில் அடித்து பிடித்து முன்னுக்கு வந்தாலும் கூட பிரச்சனைதான் என்று புரிந்து கொள்கிறேன்.இப்போது அவளது அதிக சம்பளமும் ,சொத்துக்களும் தான் அவளது வாழ்க்கைக்கு விரோதியாகி ,தனியாக நிற்க வைத்திருக்கிறது.அதிகம் படிக்காத, பண பலம் இல்லாத பெண்கள் கூட இருப்பதை வைத்து கணவன் குடும்பம் குழந்தை செல்வம் என்று அமோகமாக வாழ,திருமணம் செய்து கொள்ளும் ஆசையை வைத்துக்கொண்டு இந்தப்பெண்ணை தத்தளிக்க வைப்பது என்னவென்று உங்களுக்கும் புரிந்திருக்கும்.

சீதா திரும்பவும் ஒரு முறை தனது அம்மாவிடம் பேசும்பொழுது கேட்டுப் பார்த்தாள் ,”ம்மா..இன்னும் எதுக்கு இந்த ஜாதகம் பார்க்கணும்?பேசாம நல்ல பையனா இருந்தா போதும்னு பாக்கலாமே! ரெண்டாவது மனைவியா, ரெடிமேடு குடும்பமா இருந்தா கூட பார்க்கலாமே. எனக்கும் வயசு ஏறுது .என்னோட கூட படிச்ச பொண்ணுங்களுக்கு எல்லோருக்குமே கல்யாணம் ஆகி ஆல் ஆர் வெல் செட்டில்டு.நா மட்டும் தனியா நிக்கிறேன். உங்களுக்கு புரியுதா இல்லையா… இப்போ என்னுடைய பணம்தான் பிரச்சன்னைன்னா… “

பெண் பேசி முடிப்பதற்குள் மஹாகாளி அவதாரம் எடுத்துவிட்டாள் ராதா. “அப்போ,உன்னுடைய சம்பாத்தியத்துல நாங்க வாழறோம்.அதனாலதான் உன்னோட கல்யாணத்தை தடுக்குறோம்,அதானே ?”

அம்மாவின் கேள்வியில் பதில் என்ன சொல்வது என்று ஜானகிக்கு புரியவில்லை. அவள் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளும் அளவில் அவளின் அம்மா இல்லாதது அவளது துர்பாக்கியம் இன்றி வேறென்ன?

அன்று இரவு ராதா உறங்கியபிறகு மகளின் அறைக்கு வந்தார் கிருஷ்ணன்.இன்னமும் அவருக்கு உறக்கம் வரவில்லை.ஜானகி தன்  அப்பாவிடம் நிறைய பேசியிருந்தாள் .”அவளுக்கு யாரையாவது விருப்பம் இருக்கான்னு கேளுங்கப்பா.பாவம்ப்பா அவ. இங்கே நம்ம வீட்டுல புத்திசாலியாகவும்,பணம் சம்பாரிக்கும் அறிவு இருக்குற பெண்ணாகவும் பிறந்தது அவ தப்பில்லப்பா .அப்படியே அந்த பெண்ணை நிக்க வச்சிறாதீங்க . உங்க காலத்துக்கு பிறகு அந்த பொண்னுக்குன்னு யாரு இருக்கா?என்னால தூர வச்சி பார்த்துக்க முடியும்.வீட்டுக்குள்ள ஒரு குடும்ப நபரா சேர்த்துக்க முடியாது.  அவளுக்குன்னு ஒரு குடும்பம் நிச்சயம் வேணும்.யோசியுங்க.”

மூத்த மகள் நேரடியாகவே தேங்காய் உடைப்பது போன்ற நிதர்சனத்தை சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். ஆரம்பம் முதலே அவள் இங்கே கொஞ்சம் ஒதுக்கம் தான். மாப்பிள்ளைக்கும் அவளுக்கும் நன்றாகவே ஒத்துப் போகிறது.அவள் தனது கூட்டில் தங்கையை அனுமதிக்க மாட்டாள். அப்படி இருக்கும் நிலையில் இவ்வளவுக்கும் பிறகு தங்களின் காலத்துக்கு பிறகு சீதாவின் நிலை?”

இவ்வளவு காலம் கழித்து இவற்றையெல்லாம் யோசிக்கும் பெற்றவருக்கு தூக்கம் எங்கிருந்து வரும்? இன்னமும் சீதாவின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. படுக்கையில் அமர்ந்து கொண்டு பாகவதம் புத்தகத்தின் ஆங்கில பதிப்பை படித்துக் கொண்டு இருந்தாள் .பெற்றவருக்கு மனம் கனத்துப் போனது.

” சீதா … “அப்பாவின் அழைப்பில் மெல்ல தலையை புத்தகத்திலிருந்து மீட்டு ,படித்துக் கொண்டிருந்த பக்கத்தில் ஒரு புக்மார்க் சொருகிவிட்டு என்னவென்று பார்வையாலேயே அப்பாவிடம் கேட்டது பெண்.

பெற்றவருக்கு பேசுவதற்கு நா எழவில்லை.எப்படியோ தன்னை சுதாரித்துக்கொண்டவராக,”நீ யாரையாவது விருப்பப் பட்ட சொல்லுடா..அந்த பையனையே உனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கிறேன். அம்மாவை பத்தியெல்லாம் கவலை பட வேணா.”

அப்பா சொன்னவற்றை கேட்ட மகளுக்கு அவரது கூற்றில் அவ்வளவு ஆச்சர்யம் தெறித்தது. அவள் கண்ணால் கேட்ட கேள்வி கிருஷணனை கூறுபோட்டு விட்டது.அவர் செய்த தவறு இப்போது பெரியதாக பயமுறுத்தியது.

“எல்லா வெளிநாட்டுகாரங்களும் பாதியில குடும்ப வாழ்க்கை விட்டு விவாகரத்து வாங்குறது இல்லப்பா..லியோவுக்கு இப்போ கல்யாணம் ஆகி மூணு குழந்தைகள் இருக்காங்க.அவங்க அம்மாவும் அப்பாவும் கல்யாணம் செஞ்சு நாற்பது வருஷமா விவாகரத்து எல்லாம் வாங்கல .ஒத்துமையா நல்ல நிறைஞ்ச வாழ்க்கை வாழறாங்க.”

அவள் குரலில் இருக்கும் வேதனையில் கிருஷ்ணின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.”மன்னிச்சுக்கோடா… இப்படி நீ தனியா நிக்க வேண்டி வரும்னு அப்பாவுக்கு தெரியாது டா. ” அவரின் குரல் நெகிழ்ந்து ஒலித்தது.

‘பறவையில்லப்பா’என்று சொல்வதற்கு சீதாவுக்கும் ஆசைதான்.ஆனால் அவளது இழப்பு பெரியது. இவ்வளவு வருஷங்கள் கழித்தும் அது தந்த வலி நெஞ்சில் உண்டு.தன்னை பெற்றவர்கள் தாம் இந்த திருமணம் நடக்காமல் போனதற்கு காரணம் என்பதை சீதா எப்போதோ புரிந்துகொண்டு விட்டாள் .வாய்திறந்து இவ்வளவு வருஷங்களாக அவள் கேட்கவில்லை.கேட்டால்தான் ஏதாவது மாறிவிடுமா! என்றுதான் அமைதியாக இருந்தாள் .இன்று தந்தை வந்து பேசவும் அவளையும் அறியாமல் வார்த்தைகள் வந்துவிட்டது.அது பெற்றவரை “உங்களை நான் கண்டு கொண்டுவிட்டேன்’ என்று மறைமுகமாக உணர்த்தியதில் கிருஷ்னன் நொறுங்கியது நிஜம். அந்த வருத்தம் இன்னமும் கூட ராதாவுக்குள் இல்லை என்பது தான் ஆச்சர்யம்.

அறையிலிருந்து வெளியே செல்ல இருந்த அப்பாவிடம் இன்று தனது மனதில் இருப்பதை சொல்லியே தீருவது என்று முடிவு எடுத்தவள் போல ,”ப்பா… எனக்கு திரும்பவும் யாரையாவது காதலிக்க கூட பயமா இருக்குப்பா. இதுக்குமேல எதையும் தாங்கும் தைரியமும்,தெம்பும் சத்தியமா எனக்கு இல்ல.”

சீதாவின் வார்த்தைகளில் திகைத்த கிருஷ்னன் தனது கண்களை துடைத்துக்கொண்டே  வெளியே வந்தார்.அன்று இரவே அவருக்கு இருதயம் வலி கண்டது.

ஆயிற்று! கிருஷ்னன் இப்போது முன்பைவிட இன்னமும் நலிந்து போனார்.ராதாவின் மனதின் பயமும் இன்னமும் கூடியது. ஜானகியும் ,ராகவனும் இங்கே வந்திருந்த பொழுது சீதா யோசிக்காமல் நேரடியாகவே ராகவனிடம் சொல்லிவிட்டாள்

“அத்தான் ,இவ்ளோ வருஷம் உங்க விருப்பத்துக்கு நீங்க ஊர் ஊரா வேலை செஞ்சீங்க. பட் ,இப்போ நா இருக்குற நிலைமைல என்னால தனியா சமாளிக்க முடியல.நீங்க சென்னைல வேலை தேடிட்டு வந்திருங்க.இல்ல..உங்க மனைவியை குழந்தைகளோட சென்னை அனுப்பிட்டு நீங்க எங்க வேணும்னாலும் வேலை பாருங்க. இதோ,இவ்ளோ வருஷமா என்னோட வாழ்க்கையை தியாகம் செஞ்சாச்சு. காவி கட்டிட்டு சன்யாசம் மட்டும் வாங்கல .உங்க பொண்டாட்டிக்கும் பொறுப்பு இருக்கு .”

சீதாவின் குரலில் இருந்த தீவிரத்தில் அசந்து போனான் ராகவன்.ஜானகிக்கும் தங்கையின் வார்த்தைகளில் இருக்கும் நியாயம் புரிந்தது. ஒரு தலையசைப்புடன் ராகவனின் குடும்பம் அங்கிருந்து கிளம்பியது.ராகவன் எதிர்பார்த்த சம்பளத்தில் சென்னையில் வேலை அமையவில்லை. குழந்தைகளின் படிப்பு வேறு ஒருபுறம் இருக்கிறது.அதையும் யோசிக்க வேண்டும்.மனைவி,குழந்தைகள் இல்லாமல் தனியாக அவனாலும் அதிக நாட்களுக்கு இருக்க முடியாது. அன்று பேசியபிறகு சீதா ரகவானையோ,ஜானகியையோ இங்கே வருவது பற்றி எதுவும் கேட்கவில்லை. மாதங்கள் கரைந்தது. சீதாவின் முப்பத்தியேழாவது பிறந்த நாளும் வந்தது.

இனியாவது அவளது வாழ்வில் ஏதாவது மாற்றங்கள் வருமா என்று காத்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!