இன்று பூம்பாறையில் மீராவின் கண்கள் மெல்லத் திறந்தன. தன் முன்னே விபூதி கலைந்து, முகத்தில் சிறு காயங்களுடன், ஆனால் தன் உயிரைக்காக்கப் போராடி நின்ற வர்மனைப் பார்த்தாள்.
Advertisement
“மீரா… ஆர் யூ ஓகே?” வர்மன் மூச்சிரைக்கக் கேட்டபடி அவளது கையைப் பற்றினான்.
தன் நிலையை உணர்ந்த மீரா, சட்டென்று அவனது பிடியிலிருந்து விடுபட முயன்றாள்.
“என்னை விடுங்க… என்னால எழுந்து நிற்க முடியும்,” என்று கோபமும் அழுகையும் கலந்த குரலில் சொன்னவள், தடுமாறி எழுந்தாள். அடுத்த நொடி, அவளது இடது கால் இடறியது.
Advertisement
“அம்மா…!” என்று மீண்டும் அலறியபடி சரிந்தவளை, வர்மன் கீழே விழ விடாமல் தாங்கிப் பிடித்தான்.
Advertisement
“மீரா! உன் கால்ல பலமான காயம்,” என்று அதட்டியவன், அவளது அனுமதிக்கு காத்திருக்காமல் அவளை ஒரு மலரைப் போலத் தன் கைகளில் அள்ளிக் கொண்டான். வர்மன் அவளைச் சுமந்து கொண்டு அந்த மலைப் பாதையில் இறங்கினான். மீரா அவனது கழுத்தைப் பிடித்துக் கொள்ளாமல் இருக்கப் போராடினாள், ஆனால் ஒவ்வொரு அடியிலும் வலி அவளை வாட்டியது. வலியால் அவளது கண்கள் சொருகின. அவனது மார்பின் கதகதப்பு அவளுக்கு எங்கோ கேட்ட பழைய தாலாட்டு போல இருந்தது. மயக்கம் அவளைச் சூழ்ந்தது.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் வர்மன் ரஞ்சனாவுக்குத் தகவல் கொடுத்தான். மருத்துவமனையின் அவசரப் பிரிவு வாயிலில் வர்மன் நின்றிருந்தான். அவன் முகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கலங்கிப் போயிருந்தது. அடுத்த இரண்டு மணிநேரத்தின் பத்தாவது நிமிடம், ரஞ்சனாவின் கார் மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. கார் முழுமையாக நிற்பதற்கு முன்பே கதவைத் திறந்து கொண்டு வெளியே குதித்தாள் ரஞ்சனா. அவளது கால்கள் தரையில் படாத வேகத்தில் ஓடி வந்தாள்.
“வர்மன்! மீரா எப்படி இருக்கா? என்ன ஆச்சு அவளுக்கு?” ஓடி வந்த வேகத்தில் மூச்சிரைக்கக் கேட்டாள் ரஞ்சனா.
Advertisement
வர்மன் அவளை அமைதிப்படுத்த முயன்று கைகளை உயர்த்தினான். “ரஞ்சனா… ரிலாக்ஸ். இப்போதைக்கு ஆபத்து எதுவும் இல்லை. மலையிலிருந்து இறங்கும்போது கால் தடுமாறி சரிஞ்சுட்டா. கால்ல பலமான அடி, இப்போதான் டாக்டர் பெயின்கில்லர் போட்டு தூங்க வச்சிருக்காங்க.”
ரஞ்சனா சட்டென்று வர்மனை ஏறிட்டுப் பார்த்தாள். “நீ கூடவே இருந்தும் எப்படி இது நடந்தது? அவளைப் பத்தி தெரியாதா? பிடிவாதமா எதாவது செய்வான்னு… நீ ஏன் அவளைக் கூட்டிட்டு போன?” என்று ஆதங்கத்தில் அவனிடமே எகிறினாள்.
வர்மன் மௌனமாகத் தலைகுனிந்தான். “சரியான நேரத்துல நான் அவ கையைப் பிடிக்கலைன்னா, இன்னைக்கு நிலைமையே வேற மாதிரி இருந்திருக்கும்,” என்றான் வர்மன். அவனது குரலில் இருந்த நடுக்கம், அவன் எவ்வளவு பயந்திருந்தான் என்பதை ரஞ்சனாவுக்குப் புரிய வைத்தது.
ரஞ்சனா நிதானத்திற்கு வந்தாள்.”சாரி வர்மன்… பதற்றத்துல கேட்டுட்டேன். நீ இல்லன்னா அவளை நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு.”
ரஞ்சனா ஒரு நிமிடம் வர்மனைத் தீர்க்கமாகப்பார்த்தாள். “நீ எதுக்காகத் தேனிக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தன்னு எனக்குத் தெரியும். மீரா இங்க கலெக்டரா ஜாயின் பண்ணப்போறான்னு தெரிஞ்சதுமே, நான் தான் அவளுக்குத் தெரியாம அந்தத் தகவலைச் சொன்னேன். ஆனா, வந்த இடத்துல இப்படி ஒரு விபத்து நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை.”
வர்மன் லேசாகப் புன்னகைத்தான். அந்தப்புன்னகையில் ஒரு வலி இருந்தது. “நீ சொல்லலைன்னா கூட நான் அவளைக் கண்டுபிடிச்சிருப்பேன் ரஞ்சனா. ஆனா அவளுக்கு என் மேல இருக்குற அந்த காட்டம், அது கோபமா பயமா தெரியல, அது மட்டும் இன்னும் குறையவே இல்ல . முசோரியில ஆரம்பிச்ச அந்த விலகல், இப்போ தேனி வரைக்கும் தொடர்ந்துட்டு இருக்கு.”
அப்போது நர்ஸ் வந்து “அவங்க கண்விழிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்” என்றவுடன் ரஞ்சனா உள்ளே நுழைந்தாள்.
கிராமத்து மருத்துவமனையின் அந்தக் குறுகிய அறையில் மீரா உறக்கத்தில் முனகிக் கொண்டிருந்தாள். அவளது ஆழ்மனதில் சிதறிய காட்சிகள் மின்னலாய் வந்து போயின..
காதை பிளக்கும் மேளச் சத்தம்… கூட்டத்திற்கு நடுவே தொலைந்து போன ஒரு சிறுமியின் அழுகை… வெறித்த கண்களுடன் தன்னைச் சூழ்ந்திருக்கும் அந்த இருட்டு உருவங்கள்… தன்னை அணைக்க வரும் அந்தப் பால் முகம்… கடைசியாக, “வீரா…” என்ற விளி கேட்டு விலகிச் செல்லும் அந்தச் சிறுவன்… ‘வீராஆஆ…’- அந்தப் பெயர் மட்டும் ரீங்காரமிட்டது.
“வீரா… வீரா…” என்று முணுமுணுத்தபடி மீரா மெல்லக் கண்விழித்தாள். அவளது நெற்றியில் வழிந்த வேர்வையை ஒரு மென்மையான கை துடைத்துக் கொண்டிருந்தது. கண் விழித்துப் பார்த்தபோது அங்கே நின்றது வர்மன் இல்லை…அவளது தோழி ரஞ்சனா.
“மீரா… பயப்படாதே, நான் தான் ரஞ்சனா,” என்று ஆறுதலாகச் சொன்னாள்.
மீரா திடுக்கிட்டு எழுந்து உட்கார முயன்றாள் .”ரஞ்சனா… நீ எப்போ வந்த? வர்மன்… அவர் எங்கே?”
“உன்னைத் தூக்கிட்டு வந்து அட்மிட் பண்ணிட்டு, வர்மன் இப்பதான் வெளியே போனாரு. பாவம் மீரா, மனுஷன் உன் கால்ல ரத்தம் வர்றதைப் பார்த்துப் பதறிப்போயிட்டாரு. அவர் உன் மேல வச்சிருக்கிற அக்கறை உனக்கு இன்னும் புரியலையா?” என்று ரஞ்சனா ஸ்பூனில் தண்ணீரை அவளிடம் நீட்டினாள்.
மருத்துவமனையின் அந்தச் சிறிய அறையில் நிலவிய நிசப்தத்தை, மருத்துவர் ரவிச்சந்திரனின் குரல் உடைத்தது. அவர் மீராவின் எக்ஸ்-ரே முடிவுகளை ஆராய்ந்துவிட்டு, கண்ணாடிக்கு மேலாக அவளைப் பார்த்தார்.
” மேடம் நீங்க அதிர்ஷ்டசாலி தான். எலும்புல முறிவு எதுவும் இல்லை. ஆனா, அந்தச் சரிவுல விழுந்த வேகத்துல இடது கால்ல ரொம்ப பலமான தசைப்பிடிப்பு (Severe Ligament Sprain) ஏற்பட்டிருக்கு. கால் வீங்கியிருக்கிறதைப் பார்த்தாலே தெரியுது, வலி ரொம்ப அதிகமா இருக்கும்,” என்றார் டாக்டர் நிதானமாக.
மீரா தன் வலியை மறைத்துக்கொண்டு, “பரவாயில்லை டாக்டர், ஒரு பெயின் கில்லர் கொடுத்தா போதும். நாளைக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு, நான் கிளம்பணும்,” என்று எழ முயன்றாள். அவள் காலைக் கீழே வைக்க முயன்ற அடுத்த நொடி, ஒரு மின்சாரம் பாய்ந்தது போன்ற வலி அவளது மூளையைத் தாக்கியது. “ஆ…!” என்று முனகியபடி மீண்டும் மெத்தையில் சாய்ந்தாள்.
வெளியே நின்று கொண்டிருந்த வர்மன், அவளது குரலைக் கேட்டதும் உள்ளே வரத் துடித்தான். “டாக்டர், இவளைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. வேலைன்னு வந்துட்டா உடம்பைப் பார்க்க மாட்டா. நீங்களே கொஞ்சம் கண்டிப்பா சொல்லுங்க,” என்றாள் ரஞ்சனா.
டாக்டர் ரவிச்சந்திரன் மீராவை நோக்கித் திரும்பினார். “பாருங்க மேடம், நீங்க இப்போ கலெக்டர் கிடையாது, என்னோட நோயாளி. இந்த ஸ்ப்ரெய்ன் சரியாகணும்னா குறைஞ்சது ஒரு வாரம் நீங்க ‘கம்ப்ளீட் பெட் ரெஸ்ட்’ எடுத்தே ஆகணும். காலைக் கீழே ஊணவே கூடாது. மாத்திரை மருந்துகளை விட, ஓய்வுதான் உங்களுக்கு இப்போ முக்கியம். நீங்க பிடிவாதம் பிடிச்சு நாளைக்கே வேலைக்குப் போனா, இந்த வலி வாழ்நாள் முழுக்கத் தொடர வாய்ப்பிருக்கு. புரிஞ்சுக்கோங்க.”
மீரா விரக்தியுடன் தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள். ஒரு வாரம் ஓய்வா? அவளது துடிப்புள்ள மனதிற்கு அது ஒரு சிறைவாசம் போலத் தெரிந்தது. டாக்டர் வெளியே சென்றதும், ரஞ்சனா அவளருகே அமர்ந்தாள். “கேட்டியா டாக்டர் சொன்னதை? ஒரு வாரம் நீ வீட்ல தான் இருக்கணும். வர்மன் சார் எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிருக்காரு. உனக்குத் தேவையான ஃபைல்ஸ் எதாவது இருந்தா கூட வீட்டுக்கு கொண்டு வரச் சொல்லலாம்னு அவர் சொன்னாரு.”
மீராவின் கண்கள் சிவந்தன. “ஏன் ரஞ்சனா… ஏன் அவர் இவ்வளவு செய்றாரு? நான் அவரைத் தவிர்க்கணும்னு நினைக்க நினைக்க, அவரே வந்து முன்னாடி நிக்கிறாரு.”
ரஞ்சனா அவளுக்குப் போர்வை போர்த்திவிட்டு வெளியே வந்தாள். அங்கே வர்மன் சுவரில் சாய்ந்து கொண்டு, எதையோ யோசித்தபடி நின்றிருந்தான். “வண்டி வந்திருக்கு… நீ அவளைப் பார்த்துக்கோ,” என்று சரேலெனச் சென்றுவிட்டான் வர்மன். மீரா பேசியதை அவன் கேட்டிருந்தான்.
ஆயிற்று நான்கு தினங்கள். மீராவுக்கு இப்போது பரவாயில்லை. மெல்ல நடக்கிறாள். ரஞ்சுவும் விடுப்பு எடுத்து கூட இருக்கையில் மனம் லேசாக இருந்தது.
“அர்ஜுனுக்கு கல்யாணம் டீ…”
“ஹே …இது எப்போ…??
“சொல்லுவான் சொல்லுவான்….” – அவர்கள் இணைந்து சிரித்தனர்.
மீரா யாருமற்றவள் இல்லை இப்போது!
சகோதரி போல ரஞ்சுவும், சகோதரனாய் அர்ஜுனும். ஆம், மீரா சிறுவயதிலேயே தாய் தந்தையை ஒரு விபத்தில் பறிகொடுத்தவள். தாய் மாமன் வீட்டில் வளர்ந்தவள். பின்னர் எட்டாம் வகுப்பு முதற்கொண்டு ஹாஸ்டலில் படித்து, முழு முயற்சியும் மன தைரியமும் இறைவனின் ஆசியுமாய் இந்த நல்ல நிலையை எட்டிப் பிடித்திருந்தாள்.
மீராவும் ரஞ்சுவும் அவர்களுக்குக் கிடைத்த ஒரு வாரத்தை அருமையாகச் செலவிட்டனர். மெய்ட் அக்கா எலும்பு சூப், பிரண்டைத் துவையல் எனப்பார்த்துப் பார்த்து செய்து கொடுக்க நன்றாகத் தேறினாள். இருவரும் சேர்ந்து ஷாரூக்கின் ‘குச்குச் ஹோத்தா ஹை’ ஐ மீண்டும் பார்த்தனர். பின்னர் “நாம அப்டேட்டட் ஜென் ஸீ கிட்ஸ் டீ” என “வித் லவ்” பார்த்தனர்.
“அனஷ்வரா அழகு இல்லடி…” என மீரா அவளிடம் சொல்ல, “நீ அந்த அனஷ்வராவோட 90’ஸ் வெர்ஷன் டீ…” என அழகாகத் தோழிகள் இருவரும் நேரம் செலவழித்தனர்.
“இங்க பாரு மீரா, கலெக்டர்னு ரொம்ப பந்தாவா சுத்துறதுனால உன்னோட இந்த நீளமான கூந்தலை நீ சரியாவே கவனிக்கிறது இல்ல. நுனியெல்லாம் வெடிச்சுப் போயிருக்கு,” என்று செல்லமாகக் கடிந்து கொண்டபடியே, காய்ச்சிய வாசனையுள்ள தேங்காய் எண்ணெயை மீராவின் உச்சந்தலையில் இதமாக வைத்தாள்.
“ஆஆ… ரஞ்சு… மெதுவாடி! ஐ.எஃப்.எஸ்-காரி கிட்ட சிக்கின காட்டுவாசி மாதிரி என்னை ஏன் இப்படி வதைக்கிற?” என்று மீரா குறும்பாகச் சிரிக்க,”சும்மா இருடி… உன்னோட இந்த 90-ஸ் ஹேர் ஸ்டைலுக்கு ஒரு அழகான ஜடை போட்டா தான், நீ அனஷ்வராவுக்கே டஃப் கொடுப்ப!” என்றாள் ரஞ்சனா.
“எனக்குன்னு ஒருத்தன் எங்கேயாவது பிறந்திருப்பான்டி மீரா… அவன் அப்படியே ஒரு வெள்ளைக் குதிரையில, செம ஸ்டைலா வந்து என்னை அப்படியே கொத்திக்கிட்டுப் போவான் பாரு!” என்று ரஞ்சு சினிமாத்தனமாகச் சொல்லிச் சிரிக்க, மீராவின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
ஆனால் அந்தப் புன்னகைக்குள்ளே, வர்மனின் நினைவு அலைகளாய் வந்து மோதியது. ரஞ்சு சொன்ன அந்த ‘ஸ்டைல்’ மீராவிற்கு வர்மனைத் தான்நினைவூட்டியது.
முசோரியில் அந்தப் பனி படர்ந்த பொழுது மீராவின் கண்களுக்குள் விரிந்தது. வர்மனை அவள் முதன்முதலில் கண்ட அந்தத் தருணம்…பயிற்சிக்காக அவன் ஓடி வரும்போது, அவனது கார்மேகக் கூந்தல் காற்றில் கலைந்து அலைபாய, அவளருகே நெருங்கி வந்த அந்த கம்பீரம், அந்தத் திமிர் கலந்த பார்வை, எல்லாவற்றிற்கும் மேலாக அவளை மட்டுமே ஊடுருவிப் பார்த்த அவனது விழிகள்…
“என்னடி மீரா… எங்கே போயிட்ட?நான் சொன்ன வெள்ளைக் குதிரை வீரன் உனக்கு யாரையாவது ஞாபகப்படுத்துறனோ?” ரஞ்சுவின் கிண்டல் குரல் மீராவை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது. நாளை ரஞ்சு கிளம்ப வேண்டும். இரவின் பனிக்காற்று இதமாய் தலை வருட மீரா ரஞ்சுவின் மடியில் கிடந்தாள். ரஞ்சனா அவள் அருகில் அமர்ந்து, மென்மையாகத் தலையை வருடிக்கொடுத்தாள்.
“ஏண்டி உன்னையே இப்படி வதைச்சுக்கிற? எனக்குத் தெரியும் மீரா… உனக்கு வர்மனைப் பிடிச்சிருக்கு. அப்புறம் எதுக்கு இந்த விலகல்?” என்று ஆதங்கத்துடன் கேட்டாள்.
” என்னால அவன ஏத்துக்க முடியலயே” மீரா… அவளது காஜல் கண்ணீரில் கரைந்து கன்னங்களில் கோடாகப் படர…. ” ஆனா அவன் தான் உன் இதயத்துல சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கான்னு எனக்கு நல்லாவே தெரியும்டி…”
“என் மனசே என்கிட்ட இல்லையேடி!”
ரஞ்சனா புரியாமல் பார்த்தாள்.”என்னடி சொல்ற? உன் மனசு உன்கிட்ட இல்லன்னா… அப்போ வர்மன்?”
மீரா ஜன்னல் வழியாகத் தெரிந்த அந்தப் பனிமூட்டமான இரவைப் பார்த்தாள். அவள் கண்கள் தாரை தாரையாக விழிநீரைச் சிந்தின. மிகமெல்லிய, ஆனால் ஆழமான குரலில் சொன்னாள்:
“He is my forbidden fruit, ரஞ்சு…வர்மன் நான் தொடக்கூடாத கனி.”
“என்ன சொல்ற மீரா?” என்று ரஞ்சனா அதிர்ச்சியுடன் அவளைப்பார்க்க…
மீராவின் கண்கள் அந்தச் சுவரில் நிலைகுத்தி நின்றன. வர்மன் ஏன் அவளது ‘Forbidden Fruit’? ஏன் அவனது காதலை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?
நிழல் நிழலாக, சுருள் சுருளாக காலம் பின்னோக்கிப் பயணித்தது. குளிர்காற்று மறைந்து, ஒரு வெயில் தாழ்ந்த மாலைப்பொழுதின் புழுதி வாசனை வீசியது. கசங்கிய காகிதங்களாய் நினைவுகள் ஒவ்வொன்றாய் விரியத் தொடங்கின.