Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

21. சுபகீதா - ஆகாயமே என் ஆதாரமே

ஆகாயமே என் ஆதாரமே 20

ஆகாயமே என் ஆதாரமே 20

தனியாக ஆண்கள் இருப்பது அவ்வளவு சிக்கல் ஒன்றும் இல்லை. பேச்சிலர் வாழ்க்கைக்கு என்று ஒரு அர்த்தம் இருக்கிறது என்று இதிகாச,புராணங்கள் ரேஞ்சுக்கு பில்ட்அப் விடுபவர்களைக்கூட நான் பார்த்திருக்கிறேன். மனைவி ஊரில் இல்லாத பொழுது மீண்டும் கொஞ்சநாள் நா பேச்சிலர் டா என்று மீசையை முறுக்கிக்கொண்டு ஒரு இன்ஸ்டா ஸ்டேட்டஸ் வைத்திருப்பவர்களும் உண்டு.



Advertisement

நிஜத்தில் ஒருமுறை திருமண உறவிற்குள் நுழைந்து விட்டவர்களுக்கு பேச்சிலர் வாழ்க்கை அவ்வளவாக பிடிப்பது இல்லை என்பதே ,மிகப்பெரிய நிஜம்.இதை மனதார மறுப்பவர்கள் இருக்க முடியாது.

Advertisement

ஆணாகட்டும் ,பெண்ணாகட்டும் திருமணம் முடிந்து தனக்கான இணையை இணைத்துக்கொண்டு வாழ்க்கையில் பயணத்தை தொடரும் பொழுது ஒருவிதமான ஆனந்தத்தை உணர்வதை நானுமே அனுபவிக்கிறேன். இதோ இப்போது திருமணம் ஆகி நான்கு வயது பெண் குழந்தையை வைத்துக்கொண்டு ,சொல்லும் அளவுக்கு பெற்றவர்களின் ஆதரவையும் எதிர்ப்பார்க்க முடியாமல் ரகுவரன் சிரமப்படுவது பற்றி அதிகமாக நான் சொல்லியாக வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன் .

Advertisement

பொதுவாகவே கணவனை இழந்து ,குழந்தையுடன் இருக்கும் பெண்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தாலும் சரி, வெளியே வேலைக்கு சொல்லாவிட்டாலும் சரி, யாருடைய துணையும் இல்லாவிட்டாலும் சரி,எப்படித்தான் சமாளிக்கிறார்களோ…ஆண்களுக்கு அது மிகக் கடினமான விஷயம் தான்.அது 1826றோ ,அல்லது 2026றோ .மாறாத பல விஷயங்களில் இதுவும் ஒன்று.

Advertisement

இதோ இப்போது பெண் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ஆறாத மனதுடன் தனியாக போராடிக்கொண்டிருக்கும் ரகுவரனின் நிலைமையை மிக எளிதாகவே புரிந்துகொள்ளமுடியும். இன்னொரு திருமணம் செய்து கொள்ள சொல்லி அவனது மாமியார் கூட சொல்லிவிட்டார்.

“மாப்பிள்ளை,நீங்க வேலைக்கும் போயிகிட்டு,குழந்தையையும் பார்த்துகிட்டு ரொம்பவே கஷ்டம். அதிலும் விவரம் தெரிஞ்ச குழந்தையை காபந்து பண்ணுறது ஒருவித கஷ்டமான விஷயம்னா இந்த மாதிரி சின்ன குழந்தையை வளர்க்குறது வேறே மாதிரி. காலமும் கெட்டிருக்கு .புரிஞ்சுக்கோங்க”என்று சொல்லிப் பார்த்துவிட்டார்.

ரகுவின் பெற்றவர்களுக்கும் மகன் இப்படி ஒற்றையாக இருப்பது மனதிற்கு ஜீரணம் ஆகவில்லை. சொல்லிப் பார்த்து அலுத்துப் போனவர்கள் ,ஆரம்பத்தில் இவனுக்குத் துணையாகத்தான் இருந்தார்கள்.அதற்குப்பிறகு, வீட்டில் நடந்த பல நிகழ்வுகளும், ரகுவின் அம்மாவுக்கு நடந்த சத்திர சிகிச்சையும் குழந்தையை பார்த்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களால் முடியவில்லை. அதோடு,பெற்றவர்களின் துணை இருக்கும் வரை மகன் வேறு வாழ்க்கைக்கு தயார் ஆகவும் மாட்டான் என்று வேறு ஒரு எண்ணம்.இதையெல்லாம் யோசித்துதான் விலகி நிற்கிறார்கள்.

தனது எண்ணங்களில் இருந்து வெளியே வந்த ரகு அடுத்து குழந்தைக்கான பள்ளி அட்மிஷன் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டான். சீதா எவ்வளவு தூரம் இந்த விஷயத்தில் தனக்கு துணை செய்யக்கூடும் என்றும் தெரியவில்லை.அருகில் வேறெந்த பள்ளிகள் இருக்கிறது என்று கூகிள் செய்து பார்த்து ஒரு மூன்று நான்கு பள்ளிகளின் பெயரை நோட்ஸில் குறித்து வைத்து கொண்டவன் , அவர்களை தொடர்புகொள்ளவும் ஆரம்பித்திருந்தான். இரண்டு பள்ளிகளில் பேசியதில் அவனுக்கு ஒன்றும் மன நிறைவு வரவில்லை.

வெகுநேரம் யோசித்துக்கொண்டே மகளை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு தலைவலி வந்தது தான் மிச்சம். யாராவது சூடாக ஒருகப் காபி கலந்து கொடுத்தால்கூட நன்றாக இருக்கும் என்றுதான் தோன்றியது. தன்னைவிட்டு சென்ற மனைவியை நினைத்துக்கொண்டான்.இவ்வளவு வருஷங்கள் ஆன பிறகும் கூட அவளது இவன் மீதான தாக்கம் சற்றும் மட்டுப்படவே இல்லை.எப்படி தன்னை விட்டு செல்ல மனது வந்தது என்று மனம் முழுவதும் எப்போதும் அவனை ஆட்டுவிக்கும் மருகல்.

‘மைதிலி’ அவள்தான் இவனின் மனைவி பெயர். ரகுவரனுக்கு ஏற்ற மைதிலி என்று இவர்கள் திருமணம் அன்று வீட்டில் அவ்வளவு கேலிகள்.இப்போது நினைத்தாலும் வெட்கம் ஒட்டிக்கொள்கிறதே! அவள் இருந்தவரை இவனை தனியாக யோசித்து மண்டைக்காய விட்டதே இல்லை.எந்த பிரச்சனைக்கும் அவளிடம் தீர்வு இருக்கும்.நிதானமாக யோசித்து,தீர்மானமாக முடிவு செய்வாள். இவனது சரி பாதி என்பது எவ்வளவு சரியான விஷயம். நல்ல அழகும் படிப்பும் புத்திசாலித்தனமும் ஒன்றாக அமைவது கஷ்டம் என்பார்கள்.மைதிலி அப்படி அமைய பெற்றவள் தான். அந்த விதத்தில் ரகுவரன் தன்னை எப்போதும் கொடுத்து வைத்தவன் என்றே நினைத்திருந்தான்.பின்னர்தான் தெரிந்தது, அது கொஞ்ச நாட்களுக்குத்தான் என்று. பூமா பார்ப்பதற்கு அப்படியே அவளின் அம்மா தான்.அதனாலேயே குழந்தையை தன்னுள்ளே பொத்தி வைத்திருக்கிறான் ரகுவரன்.

நீண்ட நேரம் மனைவியின் நினைவுகளில் கரைந்து உருகியவன் சுயம் பெற்று எழுந்தான்.பூமா அவன் மடியிலியே உறங்கி விட்டிருந்தாள். கட்டிலில் குழந்தையை கிடத்தியவன் லேசாக சோம்பல் முறித்துவிட்டு கடிகாரத்தை பார்த்தான்.மணி எட்டு என்றது.சாப்பிட வேண்டும் என்று தோன்றவில்லை.மகளும் இரவு ஏழு மணிக்கே சாப்பிட்டுவிட்டாள் . சமையல் அறைக்கு சென்று பாலை சூடு செய்து குடித்துவிட்டு அறைக்கு வந்தவன் குழந்தையை தூக்கிக்கொண்டு கழிவறைக்கு சென்றான். மகளை சுசு செய்ய வைத்து மீண்டும் படுக்க வைத்துவிட்டு அவளை அணைத்தவாறே தானும் படுத்துக்கொண்டான்.மனைவியின் இனிமையான நினைவுகள் அவனை உறக்கத்திற்கு கொண்டு சென்றது.

மறுநாள் ஞாயிற்று கிழமைதான்.வீட்டில் பூண்டு ரசமும்,உருளை காரக்கறியும் செய்து சமையலை முடித்து மகளை குளிக்க செய்து உணவு கொடுத்துவிட்டு,தானும் சாப்பிட்டவன் பாத்திரங்களை கழுவி வைத்தவன் மீண்டும் சுதாவுக்கு அழைத்தான்.சுதா இவனிடம்,”நேத்தே நா சீதாகிட்டே பேசிட்டேன்.அவ ஹெல்ப் பண்ணுறதா சொல்லிட்டா . நீயும் அவகிட்டே நேர பேசி டீடைல்ஸ் சொல்லிடு ரகு “என்றுவிட்டு வைத்துவிட்டாள் .

ரகு இங்கே வந்ததிலிருந்து சீதா குடும்பத்துடன் ஒரு வார்த்தை பேசிப் பழகியது இல்லை.அப்படி இருக்கும் பொழுது இப்போது தனக்கு தேவை என்று வரும்பொழுது அவர்கள் வீட்டுக்கு செல்வதோ,அவர்களிடம் கேட்பதோ மனதுக்கு அவ்வளவு உவப்பாக இல்லை.ஏற்கனவே சீதாவின் அம்மா வேறு தன்னை ஏதோ வில்லனை பார்ப்பது போல பார்த்துக்கொண்டிருக்கிறார்.அப்படி இருக்கும்பொழுது எப்படி பேச முடியும் என்று வெகுவாக தயக்கம் வந்திருக்க வெகுநேரம் அமைதியாகவே உட்கார்ந்திருந்தான்.

சுதா சீதாவிடமும் இது பற்றி பேசியிருந்ததால் ஒரு பதினோரு மணியளவில் சீதாவே நேரடியாகவே ரகுவின் வீடு தேடி வந்துவிட்டாள் .அதில் அவளுக்கு எந்த தயக்கமும் இல்லை. வீடு தேடி எதிர்வீட்டு பெண் வந்திருப்பதை பார்த்த ரகுவிற்கு திகைப்புத்தான்.அதை மறைக்க விரும்பாதவனாக அவளை உள்ளே அழைத்து அமர வைத்தான்.வந்தவளுக்கு தயக்கம் எதுவும் இல்லை போலும்.

சரளமாகவே பேசினாள் .”சுதா அத்தே ஸ்கூல் பத்தி சொல்லியிருந்தாங்க. உங்களுக்கு எப்போ நேரம் கிடைக்கும்னு சொல்லுங்க. நாம நேரே போயி பேசலாம். சீட் கிடைக்குன்னுதான் நினைக்கிறேன். நீங்க பூமா பத்தி பேசிக் டீடெயில்ஸ் குடுங்க.அங்கே ஸ்கூல் போனா ,குழந்தை பத்தி ஒண்ணமே தெரியாது. பட் சீட் வேணும்னு கேக்க முடியாது ரகு சார்.” என்று நன்கு அறிந்தவர்கள் போல பேசியவளை ரகுதான் குழப்பமாக பார்த்துவைத்தான்.

அதற்குள் உள்ளிருந்து வெளியே வந்த பூமா தயங்கிக்கொண்டே தனது அப்பாவின் அருகே வந்து ,அவனை உரசிக்கொண்டே நின்றுகொண்டாள். குழந்தையை லேசாக தடவிக்கொடுத்துக்கொண்டே சீதாவிடம் பேச்சை தொடர்ந்தான் ரகு .

முதலில் குழந்தையிடம் ,”ஆன்டிக்கு விஷ் பண்ணு பூமி”என்றான். குழந்தையும் கைகுலுக்குவதற்க்காக சீதாவிடம் கையை நீட்டிக்கொண்டு ,”ஹலோ ஆன்டி, அம் பூமா. ஹவ் ஆர் யூ ஆன்டி?” என்றதில் சீதையின் புருவங்கள் உயர்ந்தது. மெத்தென்ற குழந்தையின் கையை குலுக்கியவாறே அவளுக்கான பதிலை சொன்னவள் மனதில் ‘பரவாயில்லையே, குழந்தையை வீட்டில் வச்சே நல்ல ட்ரெயின் செஞ்சிருக்காரே என்று தோன்றாமல் இல்லை

பிறகு குழந்தை கையில் கிரையன் மற்றும் வரைவதற்கான வரைப்புத்தகத்தையும் கொடுத்து ,”பூமி, நீ போய் வரைஞ்சிட்டு இரு.அப்பா வரேன்” எண்டு சொல்லி உள்ளே அனுப்பியவனை ஆச்சர்யமாக பார்த்தாள் சீதா. குழந்தை எவ்ளவு சமர்த்தாக சொல்வதை கேட்கிறாள்.நன்றாக வளர்க்கிறாரே! என்று மனதின் குரல் சீதையின் காதுகளில் விழுந்தது.

குழந்தை பற்றியும் தன்னை பற்றியும் தேவைப்படும் அடிப்படை விவரங்களை சொல்லியவன்,”இங்கே தமிழ்நாட்டுல இரண்டரை வயசுக்கே ஸ்கூல் போக ஆரம்பிச்சிடுறாங்க.எனக்கு அதிலே இஷ்டம் இல்லை.என்னால முடிஞ்சா அளவுக்கு பாடம் பேஸிக்ஸ் சொல்லித்தரேன். பட் அது போதாது.இப்போ டே கேரில் விட்டு ஆபிஸ் போறேன். வீடு வர ஆறு மணி ஆகுது. உங்க ஸ்கூல்ல ஸ்கூல் ஹவர்ஸ் முடிஞ்சா பிறகு டேகேரும் இருக்குன்னு நெட்ல படிச்சேன்.”

அவனது கூற்றுக்கு ஆமோதிப்பாக தலையசைத்தவள்,”ஓகே ஸார் ,நாம ஸ்கூல் போய் பாப்போம். அங்கே இப்போ பிரின்சி எனக்கு மேத்ஸ் எடுத்த டீச்சர் தான். நானும் மேத்ஸ்ல டாப்பர் தான்”என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு எழுந்தாள்.

“காஃபி ,டீ ஏதாச்சும் குடிக்கிறீங்களா?” அவள் கிளம்ப எத்தனிக்கும் பொழுது கேட்டவனை குறுகுறுவென்று பார்த்தவள் ,”பரவாயில்ல சார், இன்னொருநாள் பாப்போம்”என்றுவிட்டு கிளப்பிவிட்டாள் . இவள் கிளம்பும் நேரம் ராதா வீட்டில் இல்லை .கிருஷ்ணனிடம் சொல்லிவிட்டு வந்திருந்தாள் .இப்போது ராதா வெளியே சென்று இருந்தவள் வீட்டுக்கு வந்திருந்தாள் .

எதிர்வீட்டிலிருந்து சிரித்த முகமாக தங்கள் வீட்டுக்குள் நுழைந்த மகளை ஒருவித அசூயையுடன் பார்த்துவைத்தாள் ராதா.

அம்மாவின் முகத்தை பார்த்தவுடன் ஏதோ துணி கொண்டு துடைத்தாற்போல இருண்டுதான் போனது சீதாவின் முகம்.அம்மாவின் அகம் சொல்லும் செய்திகளை படிக்கவும் புரிந்துக்கொள்ளவும் இப்போது சீதா நன்றாகவே படித்திருக்கிறாள் .இப்போது அவள் அம்மா நினைப்பது மகளுக்கு அவ்வளவு நன்றாக இல்லை. எதுவும் பேசாமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் . ராதாவுக்கு மகளின் அலட்சியம் இன்னமும் கோவத்தை விசிறியது.

வரும் ஆத்திரத்துக்கு எதிர்த்த வீட்டு மனிதனிடம் சென்று சண்டை போட்டுவிடலாமா என்றுதான் வந்தது.சுதாவின் மருமகள் வழியில் உறவினன் என்ற காரணத்தால் வாயை திறக்க முடியாமல் தவித்தாள் ராதா. ஏற்கனவே சீதாவை அபகரிக்க வந்த ராவணனை பார்ப்பதுபோல் ரகுவை பார்த்தவளுக்கு இப்போது அடிவயிறு கலங்கியது.

மிஞ்சிப்போனால் நாற்பது அல்லது நாற்பத்தொரு வயது இருக்கும் .பார்க்கவும் அழகாக,நன்றாகவே இருக்கிறான். முகத்தில் பணத்தின் செழுமை தெரிகிறது. மத்திய அரசு வேலை வேறு. மகுடம் வைத்தாற்போல மனைவியும் இல்லை. இதெல்லாம் சேர்ந்து ராதையை பைத்தியமாக்கியது.ஒரு காலத்தில் மகளுக்கு நல்ல இடத்தில திருமணம் செய்து அனுப்ப வேண்டும் என்று நினைத்தவள் தாள்.இப்போது,மகளை தங்களிடமிருந்து யாராவது அபகரித்து சென்று விடுவார்களா என்று வந்தது. நேராகவே சீதாவிடம் கேட்கலாம்.அவள் ‘ஆம்’ என்றால் வம்புதான்.

நிதானம் இல்லாமல் அடுக்களைக்குள் சென்று அங்கிருக்கும் பாத்திரங்களை வேகமாக வைப்பதும், எதையோ உருட்டுவதுமாக தனது கையாலாகாதனத்தை காண்பித்தாள் ராதா.தனது அறையில் இருந்தவாறே அம்மாவின் நடவெடிக்கைகளை பார்த்த சீதாவுக்கு மனதில் பெரிய போராட்டம்தான். தான் ஒன்றும் தவறு செய்யவில்லையே!எதற்க்காக அம்மா இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று ஆற்றாமை.

இப்பொழுதெல்லாம் ,ஜானகியை போல தானும் ஏதாவது ஒரு டிகிரி படிப்பை முடித்துவிட்டு குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சென்று என இருந்திருந்தால் தானும் குடித்தனமும் குழந்தைகளுமாக இருந்திருக்கக் கூடும் என்று ஏக்கம் வர ஆரம்பித்திருந்தது. நன்றாக படித்ததற்கு கூட தன்னை நிந்தித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தாள். அவ்வளவு மன அழுத்தம் அவளுக்குள்.

மறுநாள் காலையில் வாட்ஸாப் மூலமாக,’இன்று பள்ளிக்கு செல்ல முடியுமா?’என்று செய்தி அனுப்பியிருந்தான் ரகுவரன். முதல்நாளின் மனஉளைச்சலில் இருந்து சீதா இன்னமும் வெளியே வரவில்லை. ‘புதன் கிழமை அன்று செல்லலாம். காலை ஒன்பது மணிக்கு கார் பார்க்கிங்கில் காத்திருங்கள். அங்கே வந்தவுடன் எனக்கு செய்தி அனுப்புங்கள்”என்று பதில் அனுப்பிவிட்டு அமைதியாகிவிட்டாள் .புதன் அன்று காலை பதினோரு மணிக்கு அவள் அலுவலகம் சென்று வேலை செய்ய வேண்டும். வெளியே சென்றால் அம்மா எதுவும் கேட்கப் போவது இல்லை. சம்பளம் வேண்டுமே!என்று சீதாவுக்குள் ஒரு கசப்பு பரவியது.அது நெஞ்சு வழியே உள்ளே இறங்கவும் தவறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!