“ஓனர் ரூமுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க. உங்கள ரெண்டு காபி எடுத்துட்டு வர சொன்னார்” என்று ரெஸ்டாரண்ட்டில் டேபிள் கிளீன் பண்ணும் பையன் அழைக்க, ஒரு கணம் யோசித்தாள் நந்தினி.
காரணம் இருந்தால் மட்டுமே அல்லது மிகவும் அவசியம் என்றால் மட்டுமே அவளையே காபி கொண்டு வர சொல்லுவார் அவர்!
காபி மாஸ்டர் ஆன அவளுக்கு வாடிக்கையாளர்களை சந்திக்க ஒரு போதும் தேவை ஏற்பட்டதில்லை!
ஒரு முறை கடைக்கு வந்திருந்த ஒரு வி.ஐ.பி பெண்மணி அவர்கள் ரெஸ்டாரண்ட் காபியை பாரட்ட, அப்போது உள்ளே இருந்த நந்தினியை அவர் ரூமுக்கு அழைத்து அறிமுகப்படுத்தி கவுரவித்தார்!
Advertisement
இன்னொரு முறை ஒரு யூடுயுப் சேனலுக்கு பேட்டி அழைத்த போது!
இப்போது அப்படி யாரும் வந்திருக்கிறார்களோ என்று பல்வேறு விதமாக எண்ணிக் கொண்டே கதவைத் தட்டி அனுமதிக் கேட்டுக் கொண்டே உள்ளே போனவள், அவள் முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தாள்.
அவர் மணல் குவாரி ஓனர் கிருஷ்ண மூர்த்தி!
Advertisement
அவர் மேலும் மஞ்சுவின் விசயத்தில் நந்தினிக்கு சந்தேகம் உண்டு!
Advertisement
ஏனென்றால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் மேல் மணல் எடுக்கிறார் என்று அவர் மேல் பல புகார்கள் கொடுத்து அவருக்கு குடைச்சல் கொடுத்து மஞ்சு தான்!
மஞ்சு காணாமல் போனதில் அவருக்கும் தொடர்பு உண்டோ என்று நந்தினிக்கு சந்தேகம்!
அதை தன் நல விரும்பியான முதலாளியிடமும் கூறியிருந்தாள், அவர் சென்ற வாரம் மஞ்சுவைப் பற்றி விசாரித்த போது!
Advertisement
மஞ்சுவின் ஸ்கூல் சீனியர் தான் அந்த ரெஸ்டாரண்ட் முதலாளி!
சீனியர் என்றால் எட்டு வயது சீனியர்!
மஞ்சு ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது எல்லாம் அவர் அவளைத் தூக்கி வைத்து கொஞ்சி இருக்கிறார் பள்ளி நாட்களில்!
“பாப்பா..பாப்பா” என்று அவருக்கு மஞ்சுவின் மேல் ப்ரியம் அதிகம்!
அவள் சொல்லி தான் நந்தினியை இங்கு வேலைக்கு சேர்த்துக் கொண்டதே!
இப்போது அவளைக் காண வில்லை என்றதால், அடிக்கடி நந்தினியிடம் விசாரிப்பார். அப்படி விசாரிக்கும் போது தான் நந்தினி தன் சந்தேகத்தை சொன்னது!
‘இப்போது முதலாளி என்ன பேசப் போகிறார்?’
அறிந்து கொள்ள மனம் துடித்தாலும், அடக்கிக் கொண்டு, காபியை டேபிளில் வைத்து விட்டு வெளியேறினாள்.
அவள் முகத்தில் மாஸ்க் போட்டிருந்ததால், வந்தவருக்கும் சரியாக அவளை அடையாளம் தெரியவில்லை!
அறையை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திற்கு எல்லாம் அவளின் ஏப்ரான் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் வைப்ரெட் ஆனது!
எடுத்துப் பார்த்தால், அவள் முதலாளி தான்!
“ஹலோ சார்” என்று இவள் பேச அந்த புறம் முதலாளி எதுவும் பேச வில்லை.
மாறாக அவர் அந்த கிருஷ்ண மூர்த்தியிடம் பேசிக் கொண்டிருந்தது கேட்டது!
நந்தினிக்குப் புரிந்து விட்டது!
ஒன்றும் பேசாமல், போனை ம்யூட்டில் போட்டு விட்டு அவர்கள் பேசுவதைக் கேட்டாள்.
பொதுவான நாட்டு நிலவரப் பேச்சுகள். அரசியல் மற்றும் ஜென் ஸி இளைஞர்களைப் பற்றிய அங்கலாய்ப்புகள், 90’s கிட்ஸ் களுக்கு இன்னமும் பொண்ணு கிடைக்காமல் இருப்பது போன்ற பொதுவான ஓரிரு நிமிட பேச்சுகளுக்கு பின் காசுவலாக மெயின் மேட்டருக்கு வந்தார் முதலாளி!
“அப்புறம்.. உங்க குவாரி பிசினஸ் எப்படி போயிட்டு இருக்கு?”
எவன் எப்ப எவன் கம்ப்ளைன்ட் பண்ணுவான்னே தெரிய மாட்டேங்குது! அதிலும் இப்ப வேற எல்லாம் ஆன்லைன் சிஸ்டம்! புகார் கொடுக்கிறவனை சட்டுன்னு கண்டு பிடிக்கவும் முடியலையே!” என்று அவர் அங்கலாய்த்தார்!
“கண்டுப் பிடிக்க முடியாம என்ன.. அதான்.. அந்த மஞ்சுவ கண்டுப்பிடிச்சு ஆளை இல்லாம பண்ணிட்டீங்க போல!” கேட்டுக் கொண்டிருந்த நந்தினி காதை நன்றாக தீட்டிக் கொண்டாள்!
“நீங்க யாரை சொல்றீங்க? எந்த மஞ்சு?”
“ஐ.. பார்றா.. தெரியாத மாதிரி கேக்குறீங்களே? அதான் அந்த எக்ஸ் கவுன்சிலரா கூட இருந்துச்சே.. அந்த மஞ்சு.. அவள தான் சொன்னேன்”.
“அவளா.. நம்ம ரகு தம்பியோட வீட்டம்மா.. யோவ்.. நீ வேற.. அது என் சொந்தக்கார பொண்ணுய்யா.. அதப் போய்.. நான்.. அது ஏதோ ஆர்வக்கோளாறுல கொடி பிடிச்சுட்டு நின்னுச்சு.
நானும் கொஞ்சம் சத்தம் போட்டேன் தான்!
அதுக்காக ஆளை தூக்குற அளவு எல்லாம் நான் போக மாட்டேன்!
நான் ஒண்ணும் அவ்வளவு பெரிய மணல் குவாரி மாபியா எல்லாம் இல்லப்பா..
சும்மா கொஞ்ச எக்ஸ்ட்ரா லோட் அடிப்பேன். அதுவும் கூட ஆபிசருங்களுக்கு படியளக்க கட்டுப்படியாகனுமேன்னு.
மத்தபடி ஆளைப் போட்டுத் தள்ளுற அளவு எல்லாம் நான் பெரிய தாதா இல்லைய்யா நீ வேற?
அவங்க அப்பா உயிரோட இருந்திருந்தா அவர் கிட்ட சொல்லி பொண்ணைக் கொஞ்சம் கண்டிச்சு வைக்க சொல்லி இருப்பேன்.
தலையிட வேணாம்னு சொல்ல சொல்லியிருப்பேன்!
ரகு தம்பியை ஊரில் பார்க்கவே முடியல. இல்லன்னா அவர் கிட்ட பேசியருப்பேன்!
நீ எதுய்யா பெரிய வில்லன் மாதிரி என்னை ஆக்குருவ போல ஊருக்குள்ள..
அந்த பொண்ணைக் காணோம்னு நானும் கேள்விப்பட்டேன். ஏதோ கள்ளக்காதல் விவகாரம்னு காதுல விழுந்துச்சு!
ஆனா எனக்கென்னமோ அப்படி எல்லாம் அந்த பொண்ணைப் பாத்தா அப்படி செஞ்சுருக்கும்னு தோணல!
கொஞ்சம் ஆர்வக்கோளாறு! எதுக்கு எடுத்தாலும் கொடி பிடிச்சுட்டு வந்து நிக்கும்!
மத்தபடி கேரக்டர எல்லாம் தப்பா சொல்ல முடியாது!
ஊருக்குள்ள என்னை மாதிரி நிறைய பேரை வம்பு இழுத்து வச்சுருக்கும்! எவன் என்ன பண்ணி வச்சானோ தெரியல!
இந்த ரகு ஏன் இன்னும் போலீஸ்க்கு போகாம இருக்குன்னு தான் தெரியல. சரிப்பா..
அப்புறம் சொன்னது ஞாபகம் வச்சுக்கோ. வர்ற தைமாசம் பூமி பூஜை போட்டுடலாம். நான் கூட இருந்து முடிச்சு தர்றேன். கொஞ்சம் பொறுமையா இரு.” என்று சொல்லி விட்டு அவர் கிளம்பி போனார்.
இதுவரை அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நந்தினி போனை கட் செய்து விட்டு வந்தவர் வெளியே செல்ல காத்திருந்து, அவர் தலை மறைந்தவுடன் முதலாளி அறைக்கு சென்று அவருக்கு நன்றி சொல்லி விட்டு, காபி கப்களை எடுத்து வந்தாள்.
வந்தவளுக்குள் மீண்டும் யோசனை!
‘இந்த ஆள் பேசுவதைப் பார்த்தால், இவருக்கும் மஞ்சு காணாமல் போனதற்கும் சம்மந்தம் இல்லாதது போலவே இருக்கு!
இவர் உண்மை தான் சொல்றாரா? இல்லை நடிக்கிறாரா?’
அவளுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது!
‘அடியே மஞ்சு நீ.. எங்க தான் இருக்க?’
அவள் போனை எடுத்து மீண்டும் ஒருமுறை மஞ்சு நம்பருக்கு அடித்தால் ஸ்விட்ச் ஆப் என்றே வந்தது. வடிவேல் நம்பருக்கும் போகவில்லை!
நந்தினியிடம் கொடுத்த தன் பழைய போனின் நம்பருக்கும் வழக்கம் போலவே போன் போகவில்லை!
அலுப்புடன் பக்கெட்டில் போனை வைத்தாள்.
———-
“ஏய்..கனி.. நீ எப்படி இங்க?” என்றபடி கவியின் வீட்டுக்குள் வந்தாள் நந்தினி.
மாலை நேர டுயுஷன் எடுத்துக் கொண்டிருந்தாள் கவி.
எல்லாம் பத்தாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்!
அவர்களுள் ஒரே ஒரு குட்டிப் பொண்ணு மீனு மட்டுமே!
அவள் கவிக்கு மிக அருகில் உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தவள் நந்தினியைக் கண்டதும் புன்னகைத்தாள்.
‘அப்பா.. இப்போ தான் கொஞ்சமாச்சும் பிள்ளை முகம் தெளிவா இருக்கு! இல்லைனா எப்ப பார்த்தாலும் தாயில்லாத ஏக்கத்தோடே தான் இருப்பா. ஏதோ கவி டீச்சர்கிட்ட கொஞ்சம் ஒட்டிகிச்சு.
அந்த ரஞ்சிதாவுக்கும் ஏதோ கவி டீச்சரைப் பிடிச்சுருச்சு போல!
அவங்கள யாருக்கு தான் பிடிக்காது!
எல்லாம் சரி தான் அந்த ரமேஷ்க்குப் பிடித்தது மட்டும் தான் விவகாரமே!
தான் முடிந்தவரை அவனை டீச்சர் கிட்ட நெருங்காம பார்த்துக்கணும்!’
மனதில் எண்ணியவாறே, உள்ளே வந்தாள்.
படிக்கும் பிள்ளைகளைத் தொந்தரவு செய்யாமல் தோட்டத்திற்கு சென்று செடிகளுக்கு தண்ணீர் விட்டாள்.
காய்ந்து இருந்த இலைகளை அகற்றிவிட்டு, நீண்டிருந்த சில கிளைகளை ஒழுங்குப்படுத்தி கட்டி விட்டு வந்தாள்.
காற்றில் கீழே விழுந்து விட்டிருந்த எலுமிச்சம்பழம், நார்த்தங்காய்களை பொறுக்கி வந்தாள்.
மாதுளை பிஞ்சுகளுக்கு அணில் கடிக்காமல் இருக்க கவர்களை கட்டி வைத்தாள்.
பின் பக்கம் போய் முகத்தில் இடிக்கும் அளவு தாழ்வாக வளைந்து இருந்த கிளையில் காய்த்து தொங்கிய முருங்கைக்காய்களைப் பறித்து கட்டி வைத்தாள்.
எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டே உள்ளே வந்தவள், கவிக்கு கொஞ்சம் எலுமிச்சம்பழம் முருங்கைக்காய்களை வைத்து விட்டு மற்றவற்றை மீனுவின் பையில் வைத்து விட்டாள்.
“வீட்டுக்கு போகும் போது எடுத்துட்டு போய் அத்தை கிட்ட கொடு” என்று சொல்லி!
ஊறுகாய் போட்டால் கண்டிப்பாக கவிக்கும் ரஞ்சிதாவே கொடுத்து விட்டு விடுவாள் என்று அவளுக்குத் தெரியும்!
நந்தினிக்கு ரஞ்சிதாவை அவ்வளவாக பிடிக்காது தான் என்றாலும் அவளின் கைப்பக்குவத்தை குறை சொல்லவே மாட்டாள்.
மஞ்சுவும் அவளிடம் தான் சமையல் கற்றுக் கொண்டாள்!
அவளிடம் மட்டுமா.. இதோ..இங்கு டுயுஷன் படிக்க வந்திருக்கும் கனியின் அத்தைப் பெண் அஸ்வினியிடம் கூட தான்!
எவர் குருவாக இருந்தாலும் சிஷ்யனுக்கும் கற்றுக் கொள்ளும் ஆர்வம், உத்வேகம் இருந்தால் தானே கற்றுக் கொள்ள முடியும்!
அந்த வகையில் மஞ்சு, யாரிடம் நல்ல விசயம் இருந்தாலும் இறங்கிப் போய் கற்றுக் கொள்வாள்!
எல்லாம் இருந்து என்ன பயன்..? இப்போது ஆள் இருக்கும் இடம் தெரியவில்லையே!
அவள் மனது மீண்டும் மஞ்சுவிடத்தில்!
நந்தினி படிக்கும் பிள்ளைகளே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
ஒரு வழியாக டுயுஷன் வகுப்பு முடிந்து மாணவர்கள் ஒருவர் ஒருவராக நன்றி சொல்லி கிளம்பிய பின், கடைசியாக வந்த கனிகாவிடம்,
“ஏய் கனி.. எங்கடி அந்த வடக்கி? அவளை ரொம்ப நாளா ஆளையே காணோம்? எங்க அவ?”
அஸ்வினியை செல்லமாக “வடக்கி” என்று தான் அழைப்பார்கள் மஞ்சுவும் நந்தினியும்!
“அவளைப் பத்தி கேக்காதீங்க. நான் அவ மேல் ரொம்ப கோபமா இருக்கேன்! “
“ஏண்டி. பெரிய பாசமலர் நீங்க ரெண்டு பேரும்! இப்ப என்ன ஆச்சு?”
“அவ என்கிட்ட சொல்லாம ஊருக்குப் போய்ட்டா. போனதும் இல்லாம போனதில் இருந்து ஒரு போன் கூட எனக்கு பண்ணவே இல்லை!
அப்பா கிட்ட மட்டும் பேசிட்டு வச்சுட்டாளாம்! அம்மாவுக்கும் அவ மேல கோபம்! அவங்க கிட்டயும் இது வரை பேசவே இல்லை!
அப்படி பார்த்துகிட்டங்க இல்ல அவள எங்கம்மா! என்னை விட அவ தான் ரொம்ப செல்லம்! அம்மா இல்லாத பொண்ணுன்னு!”
“ஓ.. சரி விடு. எங்க போய்ட போறா? போன் பண்ணினா வச்சு செஞ்சுடலாம்! ஆமா இப்ப எங்க தான் இருக்காளாம்?”
“அவங்க அப்பா வழி சொந்தக்காரங்க வீட்டுல இருந்து வேலைக்குப் போயிட்டு இருக்காளாம்.
வேலை நேரம் ரொம்ப டைட்டா இருக்காம்!
அதான் அப்பா கிட்ட மட்டும் பேசிட்டு வச்சுட்டாளாம்!”
“எந்த ஊரு?”
“நாக்பூர்!”
“ஓ..” என்றவள் “சரி.. நீ அவ மேல இருக்கிற கோவத்துல நீ படிக்காம விட்டுடாதே. கவி டீச்சர் கிட்ட நல்லா படிச்சுக்கோ!
படிப்பு ரொம்ப முக்கியம் அதுவும் பொம்பள பிள்ளைங்களுக்கு ரொம்பவே முக்கியம்! சரியா?”
“சரிக்கா” என்று அந்த கனியும் கிளம்பி விட்டாள்.
அவள் கிளம்பி போனதும் தான் நந்தினிக்கு ஒரு விஷயம் நினைவில் வந்தது.
அது..
‘சரியாக மஞ்சு காணாமல் போன நாளில் இருந்து தான் அந்த அஸ்வினியும் ஊருக்குப் போய் இருக்கிறாள்!
இவை இரண்டிற்கும் ஏதாச்சும் தொடர்பு இருக்குமா?
ஆனால் மஞ்சு தான் காணாமல் போய் இருக்கிறாள்!
அஸ்வினி அப்படி இல்லை!
சொந்தகாரங்க வீட்டுல தான் இருக்கா. அவ மாமா கிட்ட போனில் பேசியும் இருக்கா!
ஆனால் அது உண்மை தானா!
நிஜமாகவே கனியின் அப்பா அவளிடம் பேசினாரா?
நாம ரொம்ப குழம்புறோம் போல!
அடுத்த முறை கனியிடம் அஸ்வினி நம்பர் வாங்கி அவளிடம் எப்படியாவது பேசிடணும்!’ மனதுள் நினைத்துக் கொண்டு மீனுவை அழைத்துக் கொண்டு அவளை வீட்டில் கொண்டு விட கிளம்பினாள்.
ஏற்கனவே ரஞ்சிதாவிடம் மீனுவைத் தான் அழைத்து வந்து விடுவதாக போனில் சொல்லி விட்டாள்.
அவர்கள் சென்றவுடன், கவி கேட்டை மூடி விட்டு உள்ளே வந்தாள்.
அந்த வீட்டின் டிவி கேபினட் அருகில் இருந்த தன் போனை சார்ஜில் போட்டவள், அது ஏறாமல் இருக்க, ‘போச்சா.. இந்த சார்ஜரும் போயிடுச்சா’ என்று கொஞ்சம் யோசித்தவள்,
அந்த டிவி கேபினட்டின் சற்றே பின்னே சுவரோரம் இருந்த ப்ளக் பாயிண்டில் இருந்து சார்ஜரை கழற்றி விட்டு வேறு சார்ஜரை போட முயன்ற போது அவள் கண்ணில் பட்டது ஒரு தூசிகள் படிந்து அழுக்கான பிங்க் நிற கவரைக் கொண்ட போன் ஒன்று!
ஏதோ பழைய போன் போல! என்று அதைக் கண்டு கொள்ளவில்லை அவள்!
அந்த போன் கவரில் மிகவும் சிறிய தங்க நிற எழுத்தில் ஹிந்தியில் ஏதோ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது!
————
மாலை நேரம்.
கவி வீட்டின் படிகளில் சோர்வாக அமர்ந்து இருந்தாள்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் டுயுஷன் படிக்க பிள்ளைகள் வேறு வந்து விடுவார்கள்!
ஆனால் வீட்டில் கரண்ட் இல்லை! அதாவது அவள் வீட்டில் மட்டும் இல்லை!
காரணம் அந்த ரமேஷ் தான்.
அவள் பள்ளி சென்றிருந்த நேரம் அவள் வீட்டுக்கு அருகில் வந்தான்.
மதியம் மூன்று மணி!
தெருவில் அவ்வளவு மக்கள் நடமாட்டம் இல்லை!
ஒரு சிறிய மரக் கொம்பை சரியாக கவியின் வீட்டுக்கு செல்லும் ஈபி வயர் நோக்கி லாவகமாக எறிந்தான்!
விளைவு அவள் வீட்டுக்கு மட்டும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது!
‘டீச்சர் வீட்டுக்கு வந்தவுடனே, கரண்ட் இல்லை என்று அக்கம் பக்கம் விசாரிக்கும். விசாரித்து விட்டு, அவள் வீட்டில் மட்டும் இல்லை என்றவுடன் உடனே உதவிக்கு தன்னை தான் கூப்பிடும்!
நாமும் உதவி செய்கிறேன் என்று வீட்டுக்குள் போய் வரலாம்!
ஆனால் இப்பவெல்லாம் கூப்பிட மாட்டேங்குதே! எல்லாம் இந்த சனியன் பிடிச்ச பொம்பளை அன்னம் ஏதோ சொல்லி வச்சதாலே!
சொன்னா சொல்லட்டும். இப்ப மட்டும் என்னவாக போகுது! டீச்சர் ரஞ்சிதா கிட்ட சொல்லும். ரஞ்சிதா என்னன்னு பாருடான்னு என்கிட்ட தான் சொல்லி பாக்க சொல்லும்!’
வலையை விரித்து விட்டு காத்திருக்கும் வேடன் போல அவன் போனுக்காக காத்திருந்தான்.
அதே நேரம்.. கவியின் போனின் லாக் தானாக விடுபட்டது!
போன் காண்டாக்ட் லிஸ்டில் இருந்து நந்தினியின் எண்ணிற்கு தானாகவே டயல் ஆனது.
நந்தினி அப்போது வீட்டில் தான் இருந்தாள்.
சொல்லுங்க டீச்சர் என்றவளுக்கு மறுபுறம் பதில் இல்லை!
கட் ஆகி விட்டது.
அவள் திரும்ப அழைக்குமுன் மீண்டும் ஒரு அழைப்பு. மீண்டும் மவுனம்.
‘ஏதோ நெட் ஒர்க் ப்ராப்ளம் போல! என்னன்னு நேரில் கேட்டுடலாம்’ என்று அவள் தான் மொபெட்டில் போய் பார்த்தது கவலையோடு படியில் உட்கார்ந்து இருந்த கவியை!
அவளிடம் விவரம் அறிந்தவள்,
“ஒண்ணும் பிரச்சினை இல்லை டீச்சர். நான் ஈபியோட மின்னகம் நம்பருக்கு போன் பண்றேன். உள்ளே போய் ஈபி அட்டையை மட்டும் எடுத்துட்டு வாங்க” என்றாள்.
அவள் கொண்டுவந்தவுடன், “இதான் நம்பர் 94987 94987 சேவ் பண்ணி வச்சுக்கோங்க. இதுக்கு போன் பண்ணி நம்ம கன்ஸ்யுமர் நம்பரை சொன்னா அவங்க கம்ப்ளைன்ட் எடுத்துட்டு அவங்களே சம்மந்தப்பட்ட ஆள் அனுப்பி உடனே சரி பண்ணி கொடுத்துடுவாங்க. நமக்கும் எஸ் எம்எஸ் வரும்!
நீங்க நல்ல வேளை டீச்சர் அந்த ரமேஷை கூப்பிடாமல் என்னைக் கூப்பிட்டீங்க” என்ற நந்தினியை குழப்பமாக பார்த்தாள் கவி.
அடுத்த அரைமணி நேரத்துக்குள் ஒரு லைன் மேன் வந்து சரி பண்ணிக் கொடுத்தார்.
கரண்ட் வந்து விட கவி வகுப்பில் கவனமானாள்.
—–
கவி தன்னை அழைக்காமல் நேராக ஈபிக்கே போன் செய்து சரி செய்து விட்ட கோபத்தில் வீட்டுக்கு வந்தான் ரமேஷ்.
வந்து பேனைப் போட்டவன் கையில் கரண்ட் ஷாக் அடித்தது. அவன் வீட்டின் ஸ்விட்ச் போர்டில் பழுது!
கை மரத்துப் போனதில் பயந்த அவன் பக்கத்தில் இருக்கும் பெரிய கிராமத்தின் கிளினிக் ஒன்றுக்கு சென்றான்.
அந்த சிறிய கிளினிக்கில் இவனுக்கு முன்னே இரண்டு பெண்மணிகள்.
டோக்கன் போடும் பெண் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தாள்.