Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

21. சுபகீதா - ஆகாயமே என் ஆதாரமே

ஆகாயமே என் ஆதாரமே 21

ஆகாயமே என் ஆதாரமே 21

அந்த வார புதன்கிழமையில் காலை ஒன்பது மணி வாக்கில் சீதா கார் பார்க்கிங் ஏரியாவில் ரகுவரனுக்காக காத்துக்கொண்டிருக்க ரகுவரன் தனது மகள் பூமாவுடன் வந்து சேர்ந்தான். அவனை பார்த்தவுடன் முகம் காட்டிய மலர்ச்சியை சீதா மறைக்க முயலவில்லை. இன்று இருவருமாக பள்ளிக்கு செல்லப் போகிறார்கள் என்பது ராதாவுக்கு இன்னமும் தெரியாது.சொல்லவும் சீதாவுக்கு விருப்பம் இல்லை.



Advertisement

இருபது வயது பெண்ணாக இருந்தால் அம்மா சொல்வதை கேட்டுக்கொண்டு இருக்கமுடியும். நாற்பது வயதிலும் அம்மாகோண்டாக இருக்கமுடியுமா?உட்கார்ந்தால் ,நின்றால் அம்மாவின் முகத்தை பார்த்து அனுமதி வாங்கி செய்ய முடியுமா?அலுவலகத்தில் எவ்வளவு பெரிய நிருவாக பொறுப்பில் இருக்கும் பெண்,இன்னமும் தனது வாழ்க்கையை பெற்றவள் கையில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறாள் .அதுவும் 2026ல் என்று சொன்னால் ஜென்ஜீ கிட்ஸ் எல்லாம் சிரித்துவிடுவார்கள்.ஆனால் அந்த பெண்ணின் வாழ்க்கை அப்படிதான் சென்று கொண்டிருக்கிறது.

சீதா வெளியில் மௌனமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் இருக்கும் கொந்தளிப்பு அது என்று வெளியே வரலாம் என்றுதான் காத்துக்கொண்டு இருக்கிறது.இருவரும் ரகுவின் காரிலியே பள்ளிக்கு சென்றார்கள்.அங்கே தலைமை ஆசிரியை சீதாவை பார்த்ததும் எழுந்து வந்து கட்டிக்கொண்டாள் .

Advertisement

Advertisement

“ஹௌ ஆர் யு மை சைல்ட்?” என்று அவர் நெகிழ்ந்து கேட்டதில் உள்ளார்ந்த அன்பு தெரிந்தது. இந்தப் பெண் பள்ளியில் நிச்சயம் நல்ல மாணவியாக இருந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான் ரகுவரன்.

பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு ,லேசான தயக்கத்துடன் “இந்த குழந்தைக்கு நம்ம ஸ்கூல்ல சீட் வேணும் மாம் “என்று கெட்டுவிட்டாள் . அவர் லேசாக தயங்கினார்.பிறகு,” சீட் கிடைச்சுடும் சீதா.ஆனா, இவருக்கு சென்ட்ரல் கவர்மெண்ட் வேலை. அடிக்கடி மாற்றல் ஆகும். அப்படி இருக்கும் பொழுது கேந்திரிய வித்யாலயா மாதிரி ஸ்கூல்ஸ்ல போட்டா குழந்தைக்கு எஜுகேஷன் டிஸ்டர்ப் ஆகாது. இங்கே போட்டா,நிச்சயம் அடுத்த இடத்துக்கு ட்ரான்ஸ்பெர் ஆகும்பொழுது இங்கே டிசி கேப்பாரு.அது தான் யோசனையா இருக்கு”என்று ரகுவின் முன்னாலேயே சொல்லியும் விட்டார்.

Advertisement

ரகுவுக்கு ஒரு மாதிரி இருந்தது. இதென்னடா வம்பா போச்சு.இவங்களுக்கு எல்லாம் சர்விஸ் செய்ய மட்டும் கவர்மெண்ட் ஆளுங்க வேணும். ஒரு ஸ்கூல் சீட் குடுக்க கூட இவ்ளோ யோசிப்பாங்க”என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

“சீதா விடுவதாக இல்லை. அது சரிதான் மேம்.பட் , நம்ம ஏரியாவுல நம்மளை விட பெஸ்ட் யாரும் இல்லை .அண்ட் இவளும் அப்பா ஆபீஸ் போகிற நேரத்துல டே காரிலே இருக்கணும். அதுக்கு சேப்டியும் முக்கியம்.இங்கே நீங்க இருக்கீங்கன்னு தைரியத்துல கூட்டிட்டு வந்தேன்”என்றுவிட்டாள் .

சீதாவை ஒரு ஆதூரத்துடன் பார்த்தவர் “உனக்காக நிச்சயம் சீட் கொடுக்குறேன் டியர். உன்னோட கல்யாண பத்திரிக்கை எப்போ குடுக்க போறே. நா ரிடையர் ஆகுறதுக்குள்ள உன்னோட குழந்தைக்கு அட்மிஷன் போடணும் seetha”என்றார் சிரித்துக்கொண்டே.

உண்மையில் திருமண விஷயம் பேசினாலே சீதாவுக்கு முகம் சிறுத்துவிடும்.அதிலும் இப்போது ரகுவரனின் முன்னால் பேசியதில் சீதாவுக்கு இன்னுமே சஞ்சலமாக இருந்தது. சோர்ந்த மனதை இழுத்துப் பிடித்து லேசாக சிரித்து வைத்தாள் . அதற்க்கு பிறகு எல்லாம் சக்கர வேகம் தான்.

அன்றே பூமாவுக்கான சேர்க்கை சம்மந்தமாக விஷயங்கள் முடிந்தது . பள்ளியில் சேர்வதற்கு பணமும் கட்டிவிட்டான் ரகுவரன். குழந்தையின் பர்த் செர்டிபிகேட் ,ஆதார் கார்டு காப்பி , புகைப்படம்,இவனது ஆதார் கார்டு என்று எல்லாவற்றையும் வரும்பொழுது கொண்டு வந்திருந்தான்.அதனால் வேலை எளிதாக முடிந்து விட்டது.

வேலை முடியும் வரை சீதா கிளம்பவே இல்லை.உடனிருந்து எல்லாவற்றிருக்கும் உதவி செய்தாள் . கிளம்பும் முன் ரகு தன்னை மீறி அவளது கைகளை பிடித்துகொண்டு நன்றி சொன்னான். இவ்வளவு சீக்கிரம் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஏற்கனவே , ரகுவரன் அலுவலகத்திற்கு அரைநாள் விடுப்பு எடுத்திருக்க, சீதாவுக்கோ மதியம் ஒரு மணிக்கு அலுவலகத்தில் லொகின் செய்தால் போதும்.இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். குழந்தையை டேகாரில் விட்டுவிட்டு சீதாவுடன் வீடு வந்து சேர்ந்தான் ரகு .சீதா தனது வீட்டுக்கு நேராக சென்றுவிட ரகு கார்பார்க்கிங்கில் தனது காரை பார்க் செய்துவிட்டு தனது போர்ஷனுக்கு சென்றான்.

மகள் எங்கோ வெளியே சென்றுவிட்டு வரவும், எதிர்த்த வீட்டு பையன் சற்று நேரத்திற்கு எல்லாம் வந்து சேர்வதும் பார்த்த ராதாவுக்கு எதுவும் சரியாகப் படவில்லை. மகளை நேரடியாக கேட்கவும் அவளுக்குள் ஏதோ தடுத்தது. ஒருவேளை ஒன்றுமில்லாத விஷயத்தை தனது கற்பனைகளால் நடத்திவிடுவோமோ என்ற அச்சமாக கூட இருக்கலாம். வீட்டுக்குள் நுழைந்த சீதா நேராக அடுக்களைக்கு சென்று உணவை தட்டில் எடுத்துவைத்துக் கொண்டு தமது அறைக்கு சென்றுவிட்டாள்.வெளியே அமர்ந்துகொண்டு சாப்பிட்டால் அம்மா எதையாவது கிளறக்கூடும்.அதற்கெல்லாம் பதில் சொல்லும் நிலையில் சீதாவின் மனம் இப்போது இல்லை.அவளது ஆசிரியை பள்ளியில் கூறியவை மட்டுமே மீண்டும் மீண்டும் அவள் காதுகளுக்குள் ஒலித்தது.பசியோடு வந்து சாப்பிட உட்கார்ந்தவளுக்கு ஒரு கவளம் உணவுகூட உள்ளே இறங்கும் வழியை காணும்.கண்களில் நீர் கரையிட்டது.

அன்று சுதா அத்தை பேசும் பொழுது இவளிடம் கேட்டது தான்,”உங்கம்மா அப்பா காலத்துக்கு பிறகு நீ என்ன செய்ய போறே சீதா?உங்க அக்கா,அத்தான் , உங்க அக்காவோட பசங்க எல்லாரும் என்னிக்கோ ஒரு நாள் எட்டிப் பார்ப்பாங்க. வரும்பொழுது பழங்கள் ஏதாவது வாங்கிட்டு வருவது தான்.பிறகு கிளம்பி போயிருவாங்க.

இப்போ நடப்புல,சொத்து வச்சிருக்கிற பெத்தவங்களையே பிள்ளைகள் பாக்குறது இல்ல. உங்க அக்கா அத்தான் அவங்களையே பாரு.ஜானகி உங்க அப்பா அம்மாவை பார்க்கல. ரகவானோட அம்மாவுக்கு சொத்து சுகத்துக்கு குறைச்சல் இல்ல.ஆனாலும்,பிள்ளையோட இருக்க முடியாம பொண்ணுகிட்ட இருக்காங்க. அவ்வளவு ஏன்,உங்க அப்பாவும் அம்மாவும், எங்க பெத்தவங்களை வச்சி பார்க்கல.உங்கம்மா வீட்டுல இடம் போதாதுன்னு சொல்லி ஊருல தங்க வச்சிட்டா அவங்க ரெண்டுபேத்தையும் . இதுதான் நிதர்சனம்.

இன்னிக்கு உன் கையில காசு நல்லா புழங்குது சீதா. உனக்கும் வயஸு ஆகும். புது டெக்னோலஜி வரும்பொழுது அதை கத்துக்கிட்டு வேலை செய்யுறதுல ஆர்வம் குறையும் .வேலையை விட்டு வீட்டுல உக்காந்தா சாப்பாட்டுக்கு ஒன்னும் பிரச்சனை வராது.அதே சமயம் தனிமைல சமைக்கவும் பிடிக்காது. முதியோர் இல்லம் போய் இருந்தாலும் மனஸு வெறுமை விடாது.

யோசிடா..இப்போவும் நேரம் கடக்கலை. உன்னோட ரேஞ்சுல இல்லாம சாதாரண இடமா பாருங்க.பையன் உன்னை நல்லா பார்த்துக்கறவனா இருந்தா போதும். சொத்து..அது உன்கிட்டேயே நிறைய இருக்கு. இதுக்கு மேல தள்ளி போடாம சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கிட்டு,கையோட ஒரு குழந்தையை பெத்துக்கோ.அப்போதான் உனக்கு வாழ்க்கை மேலே பிடிப்பு வரும்.”

ராதா எங்கோ வெளியே சென்றிருந்த நேரத்தில் கிருஷ்ணனை வைத்துக்கொண்டே தான் அத்தை இவ்வளவு பேசியது. அந்த வார்த்தைகளில் இருக்கும் ஒரு விஷயமும் பொய் இல்லை. தனிமையில் தான் துவண்டு போகிறோம் என்பது சீதா அறியாத ஒன்றும் இல்லை.அவள்தான் இரண்டாம் தாரமாக,ரெடிமேடு வாழ்க்கையாக இருந்தாலும் பரவாயில்லை என்கிறாளே! குழந்தை இருப்பவனாக இருந்தாலும் பரவாயில்லை என்று அம்மாவிடம் சொல்லி விட்டேனே!என்றெல்லாம் யோசித்துக்கொண்டு பருக்கைகளை எண்ணிக்கொண்டும் இருக்கும் பொழுதே ரகுவரனின் முகம் மனதில் மின்னியது.

அதேசமயம் அம்மா கொஞ்சம் வித்யாசமாக நடந்து கொள்வதின் அர்த்தமும் புரிகிறது. லேசாக சிரித்துக்கொண்டாள் சீதா. அம்மாவின் பயம் நியாயமானது தான். ரகுவும் பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கிறார் என்று யோசித்துக்கொண்டே சாப்பிட்டு முடித்தவளுக்கு,”ரகு குணத்திலும் மோசமானவராக தெரியவில்லை ‘என்றும் தோன்ற,”தான் எதை பற்றி யோசிக்கிறோம்’என்று தனது யோசனைகள் செல்லும் போக்கை திகைப்புடன் உணர்ந்தாள் சீதா. போதாத குறைக்கு அவளது மனம் சீதா -ரகுவரன் என்று பெயர் பொருத்தம் வேறு பார்த்து சந்தோசம் கொண்டது வேறு கதை.இதே எல்லாம் யாராவது சென்று ராதாவிடம் சொல்லி விடாதீர்கள் மக்களே! சீதா நிலைமை அவ்வளவு தான்.

பெயர் பொருத்தம் பார்த்து மகிழ்ந்த பெண்ணுக்கு யார் சொல்வது,அவனது இறந்து போன மனைவி பெயர் மைதிலி.இருவரும் காதலித்து மணந்தவர்கள்.இன்னமும் அவன் மனதில் மைதிலித்தான் என்று.

மகள் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் கிளம்புவதை வாய் திறக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தாள் ராதா. ராதா மனதில் யோசனைகள் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.ஒரு முடிவுக்கு வந்தவளாக சீதா காதில் விழும்படியாக யாருக்கோ அழைத்து சீதாவின் ஜாதக பொருத்தம் பற்றி பேசினாள் .நடுவில் சீதா கவனிக்கிறாளா என்றும் பார்க்க தவறவில்லை.

சீதா எதையும் கண்டுகொள்ளாமல் அலுவலகம் கிளம்பி சென்றாள் . கார்பார்க்கிங் ஏரியாவில் ரகுவை பார்த்துவிட்டு ஒரு அறிமுக புன்னகை சிந்தியவாறே தனது காரில் ஏறிக்கொண்டாள்.ரகுவும் தனது காரில் அலுவலகம் புறப்பட்டு சென்றான்.

அடுத்தடுத்து வந்த நாட்களில் பெரியதாக மாற்றங்கள் எதுவும் இல்லை. சீராக சென்று கொண்டிருந்தது. வார இறுதியில் சீதா காரில் புறப்பட்டு பாண்டிச்சேரி வந்துவிட்டாள் .மனதை அவளால் கட்டுப்படுத்தி ஒருநிலையில் இருக்க முடியவில்லை. அங்கே ஆஸ்ரமத்தில் தங்கி மனதை கட்டுக்குள் கொண்டுவர முயன்றாள் .தியானம் செய்து பார்த்தாள் .அம்மனதில் அமைதிக்கு பதில் தவிப்பு கூடியது. என்ன செய்தால் சரியாக இருக்கும் என்று புரியவில்லை. இப்படியே இருந்தால் மனநிலை பாதிக்கப் படலாம் என்று பயம் வந்துவிட்டிருந்தது. இவள் குழுவில் தோழிகள் எல்லோரும் கல்யாணம் ஆகி குழந்தைகளுடன் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது இவளால் அவர்களுடன் பழக முடியவில்லை. அவர்கள் ஒருவருடன் ஒருவர் அந்தரகங்கம் பேசி சிரிக்கும் சமயங்களில் இவளுக்கு என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை.

ஆண் பெண் உறவு தெரியாதவள் அல்ல சீதா. லியோவின் நினைவு இருந்த இடத்தில இப்போது ரகுவரன் வந்து தொல்லை செய்கிறான். அவனது முகம் மீண்டும் மீண்டும் வந்து இவளை இம்சை செய்கிறது. இத்தனைக்கும் அவனோடு அதிகம் பேசியது கூட இல்லை.அவனை அதிகம் தெரியாது.அவன் குழந்தையோடு இருக்கும் சமயங்கள் தவிர வேறு நேரத்தில் சிரித்துக் கூட பார்க்க முடியாது.இத்தனைக்கும் மேல் எப்படி அவன் மீது ஒரு அபிப்ராயம் வந்தது.தான் அவ்வளவு பலவீனமானவளா..என்றெல்லாம் யோசித்து தன்னையே குழப்பிக் கொண்டாள் . ஞாயிறு மதியம் கிளம்பி மீண்டும் சென்னை வந்தவளுக்கு வீட்டில் கதவை திறக்கவும் பயமாக இருந்தது.தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று திகைத்தாள். கிருஷ்ணன் மகளின் மனம் எதற்கோ சஞ்சலம் கொள்கிறது என்பது வரை புரிந்து கொண்டார். அவருக்கு மகளுடன் நிச்சயம் தனியாக பேச வேண்டும் .மனைவி எங்காவது வெளியே செல்லும் நேரத்தில்,மகள் வீட்டில் இருந்தால் அது சாத்தியம் . மகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவரது கண்களில் படாமல் இல்லை.தக்க சமயம் எப்போது வரும் என்றுதான் தெரியவில்லை.

தங்கை பேசிவிட்டு சென்ற பிறகு கிருஷ்ணனுக்கும் மனது பிசைய ஆரம்பித்துவிட்டது.தங்களது காலத்துக்கு பிறகு இந்த பெண்ணின் நிலை என்ன என்று கவலை அதியமானது. ஜானகியின் திருமணம் முடிந்த கையோடு இந்த பெண்ணுக்கும் வழி செய்திருக்க வேண்டும்.தனது உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் தொய்வும் , மனைவியிடம் சீதாவின் திருமண விஷயத்தை ஒப்படைத்துவிட்டு விட்டது எவ்வளவு பெரிய தவறு என்று மருகல். ஆனால் ,சீதாவின் திருமண விஷயத்தை பொறுத்தவரை ஆரம்பம் முதலே யாரையும் தலையிட ராதா அனுமதிக்கவில்லை,கணவர் உட்பட. அது என்னவோ சீதாவின் விஷயத்தில் எப்போதுமே ராதா பொஸசிவ் தான்.அதற்க்கு தகுந்தபடிக்கு முன்பெல்லாம் சீதா தனது அம்மாவுடன் அவ்வளவு நெருக்கம். கிருஷ்ணனுக்கு யோசிக்கவே அலுப்பாக இருக்கிறது.இதற்கெல்லாம் என்ன தீர்வு என்றுதான் தெரியவில்லை. சுதாவும் தனக்கு தெரிந்தவர்கள் யாராவது வரன் பற்றி பேசினால் சீதாவுக்கு தகுந்தவாறு இருக்குமா என்று பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.அவளது கணவரும் முகநூல் குழுக்கள் மூலமும் இவளுக்கான வரன்களை தேடுகிறார்.வேறென்ன செய்ய முடியும்.தகுதியான வரன்களை கொண்டுவந்தாலுமே ராதா ஏதாவது காரணம் சொல்லுகிறாள்.

சுற்றியிருப்பவர்களுக்கு கடுப்புதான். ஆனாலும்,பெண்ணை பார்க்கவே பாவமாக இருக்கிறது. வயதுக்கு தகுந்தபடிக்கு சீதாவிடமும் நிறைய மாற்றங்கள். இருபதில் இருப்பதுபோல நாற்பதில் இருக்க முடியாது.அதிலும் அவளுக்கு கவலைகள் அதிகமாகிவிட்டது.இன்னமும் இந்த பெண்ணின் தலையில் என்னதான் எழுதி இருக்கிறதோ .பாவம் என்று தான் யோசித்தார்கள்.

சுதாவும் அவளது கணவரும் நல்ல ஜோசியரிடம் சீதாவின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சென்று காண்பிக்க,”இந்நேரம் இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகியிருக்கணுமே!இன்னுமா ஆகலைன்னு சொல்றீங்க?அதோட இந்த பொண்ணு ஜாதகத்துபடி இவளுக்கு முதல் கல்யாணம் நாள் கணக்குலத்தான் இருக்கும். ரெண்டாவது கல்யாணம் தான் நிலைக்கும். இப்போ இந்த ஜாதகருக்கு கல்யாணம் நடக்குற நேரம் தான். அந்த பொண்ணுகிட்ட விசாரிங்க”என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

சுதாவுக்கும் அவள் கணவருக்கும் ஜோசியர் சொன்னதில் அதிர்ச்சி ஒருபுறம் என்றாலும், அவர் சொன்ன விஷயங்கள் அவர்களால் நம்ப முடியவில்லை.அவர்களுக்கு அண்ணன் மகள் சீதாவை நன்றாகவே தெரியுமே! ஆனால் ,அவர்களுக்கு லியோவுடன் இவள் காதலும், அதில் வாழந்து பார்த்துவிட்ட வாழ்க்கையும் தெரியாதே! அதை சீதா யாரிடமும் சொல்வதாகவும் இல்லை. அது அவள் திருமணம் செய்து கொள்ளும் நபராக இருந்தாலும் சொல்லவேண்டாம் என்று ஏற்கனவே தோழி அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்ட பிறகும், எதையாவது உண்மையை சொல்கிறேன் பேர்வழி என்று சொல்லிவைத்து திருமண வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் அழித்துக்கொள்ள சீதா முட்டாள் இல்லை.

சீதாவின் காதல் நிஜம்.லியோவை சீதா தனது கணவனாக ஏற்றுக்கொண்டதில் தான் அவர்களது உறவு மலர்ந்தது. அதில் எதுவும் தவறு இருப்பதாக இந்த நொடிவரை சீதா நினைக்கவில்லை. சமூகம் ,உறவுகள் ஏன் பெற்றவர்களால் கூட அவள் தரப்பு நியாயத்தை ஏற்க முடியாது என்பதுதான் பிரச்சனை.

சுதா மனம் தாங்காமல் கணவரிடம் புலம்பினாள். ஜோசியர் இப்போது சீதாவுக்கு திருமண யோகம் வருகிறது என்பதை அவர்கள் இருவருமே கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. சீதாவின் மனம் அழகிய ரகுவரனிடம் சிக்க ஆரம்பித்திருப்பதையும் யாரும் புரிந்துகொள்ளவில்லை.

ரகுவரனுக்கு கூட தான் ஒரு பெண்ணின் மனதில் பதிய ஆரம்பித்துவிட்டோம் என்று தெரியாது. தெரிந்தாலும் அவன் என்னவிதமாக நடந்துகொள்வான் என்று தெரியாது. அவனுக்கு இன்னொரு திருமணம் பற்றிய எண்ணங்களே இல்லை. அப்படி இருக்கும் பொழுது அவன் எப்படி சீதாவை புரிந்துகொள்ள முடியும்? அவன் சீதாவை வெறும் எதிர் வீட்டு தூரத்து உறவு பெண் என்ற அளவில் தானே பார்க்கிறான்.

தினமும் காலையில் சீதா தினசரியை எடுப்பதற்கு வாசல் கதவை திறக்கும் பொழுது ரகுவும் பால் பாக்கெட்டுகளை எடுப்பதற்காக வெளியே வருவது.அப்படி varumpozhudhu பார்க்க நேர்ந்தால் ஒரு புன்னகை.அவ்வளவுதான்.

‘பார்த்த முதல் நாளே,உன்னை பார்த்த முதல் நாளே’பாடல்கள் ஏதும் அங்கே ஒலிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!