Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயம் எழுதும் கவிதை நீ

இதயம் எழுதும் கவிதை நீ 1

இதயம் எழுதும் கவிதை நீ

அத்தியாயம் 1

வைகறை 5:30.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள
முந்த்ரா துறைமுகம் இன்னும் இருளில் குளித்துக் கொண்டிருந்தது. கிழக்கு வானத்தில் சிவப்புக் கோடு மெல்லத் தெரிந்தது. அந்த இருளுக்குள்
‘ஷூ…வ்…’ என கடலலைகள் கரையைத் தொட்டுச் சென்றனர்.



Advertisement

சுமார் ஐநூறு டன் எடை கொண்ட கனமான பாரத்தை தாங்கி நின்றது, கிராலர் கிரேன். அதன் அருகில் பைலிங் மெஷின் பூமியைத் “தக்… தக்… தக்…” என குத்திக் கொண்டிருந்தது.

கான்கிரீட் பம்ப் பைப்புகள் வழியாக தேவையான இடத்திற்கு சிமெண்டை அனுப்பிக் கொண்டிருந்தது.மஞ்சள் நிற ஜேசிபி மண்ணை வெட்டி, பக்கத்தில் குவித்துக் கொண்டிருந்தது. கண்டெய்னர் லாரிகள் வரிசையாக நின்று, பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மஞ்சள், நீலம், வெள்ளை நிற சேஃப்டி ஹெல்மெட்கள் அணிந்தவாறு பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்தனர். சில சூப்பர்வைசர்கள் கைகளில் வாக்கி டாக்கிகளோடு  கத்திக் கொண்டிருந்தார்கள்.

Advertisement

இந்த இரைச்சலுக்கு நடுவே,”மேலே… ஸ்லாப் ரெடி… லிப்ட் பண்ணுங்க!” “க்ரேன் ரைட் சைட் ஷிப்ட் பண்ணுங்க!” என்ற கட்டளைகளை பிறப்பித்த வாறே கண்டெய்னர்களின் நடுவே நடந்து வந்தான் ராஜீவன்.

Advertisement

சிவப்பு நிற சேஃப்டி ஹெல்மெட்டின் கீழ் அடர்த்தியான முடி.ஆறடிக்கு சற்றே குறையாத உயரம்.கடற்காற்றும், வெயிலும் தினமும் தீண்டுவதால் அவனின் மாநிறம் மேலும் கம்பீரமாகத் தெரிந்தது. எப்போதும் வேலை பற்றிய சிந்தனையிலேயே இருப்பதால் கண்களில் ஒரு தீவிரம்.அவனது அகன்ற தோள்களும், நிமிர்ந்த நடையும், உறுதியான உடற்கட்டும் அவன் நடந்து வரும் போதே மற்றவர்களை வழிவிடச் செய்தது. வேலை நேரத்தில் தேவையில்லாமல் ஒரு சிரிப்பை கூட சிந்தாத இறுக்கமான முகம்.அவன்தான் இருபத்தியேழு வயது நிரம்பிய சிவில் என்ஜினியர் ராஜீவன்.

அவனுடைய கண்கள்… சைட்டின் ஒவ்வொரு மூலையையும் அங்குலம் அங்குலமாக ஸ்கேன் செய்தன. ஒரு குட்டி வீடு கட்டினாலும், முழு வீட்டையும் கண்ணும் கருத்துமாக பார்த்து பார்த்து கட்டியெழுப்புவான். இப்போது அவன் கட்டிக் கொண்டிருப்பது ஒரு பிரமாண்டமான கப்பல் துறை.

ஒரு லேபர் அவனருகே ஓடி வந்து, “சார்… இந்த பைல் அலைன்மென்ட் கொஞ்சம் மாறியிருக்கு.”என்றான்.

Advertisement

ராஜீவன் மெல்ல குனிந்து, அதை சரிபார்த்தான்.பின் ஒரு வினாடி கூட யோசிக்காமல், அதன் அலைன்மென்ட்டை மாற்றி அந்த பிரச்சனையை சரி செய்தான்.

அடுத்து கான்கிரீட் பம்புகள் சிமெண்ட்டை அனுப்பி கொண்டிருந்த பகுதிக்கு வந்தான். அங்கு கொட்டப்பட்ட கான்கீரிட்டில் இருந்து ஒரு சிறிய க்யூப் எடுத்து….அதன் தரத்தை சோதனை செய்ய அனுப்பி,ஏழு  நாளைக்குள் ரிசல்ட் வேணும்,” என்று சொல்லிவிட்டு அடுத்த இடத்திற்கு நகர்ந்தான்.

அவன் நடந்து செல்லும் போதெல்லாம், தொழிலாளர்கள் அவனை மதிப்புடன் பார்த்தார்கள். இவனோடு வேலை செய்தால் நிறைய கற்றுக் கொள்ளலாம் என எண்ணினர். அந்த நம்பிக்கை அவர்கள் கண்களில் தெரிந்தது.

திடீரென ஒரு பிரம்மாண்டமான கார்கோ ஷிப் ஹார்பருக்குள் நுழைந்தது. அதன் மாபெரும் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக கடலின் மீது மிதந்து மெதுவாக முன்னேறியது.

அதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ராஜீவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை மலர்ந்தது. உடனே அருகில் இருந்த தனது டீமை கைதட்டி அழைத்தான்.

“அந்த கப்பலை பாருங்க… இன்னைக்கு அது தூரத்துல நிக்குது. ஆனா இன்னும் ரெண்டு மாசத்துல… அது நேரா நம்ம ஜெட்டி(கப்பல்கள் நிற்கும் தளம்) யில்தான் வந்து நிற்கப் போகுது.

நம்ம நாட்டோட ஏற்றுமதி, இறக்குமதில பெரிய பங்கு இந்த துறைமுகம் மூலம்தான் நடக்குது. ஆனா ஜெட்டிகள் (கப்பல்கள் நிற்கும் தளம்) போதுமான அளவு இல்லாததால, பல கப்பல்கள் கரைக்கே வர முடியாம கடலுக்குள்ளேயே நின்று சரக்குகளை மாற்றி விட்டு கிளம்ப வேண்டிய நிலை இருக்கு.

அதனால்தான் இப்போ நாம்ம கட்டிட்டு இருக்க புதிய ஜெட்டி அவ்வளவு முக்கியம். இது வெறும் கான்கிரீட்டும், இரும்பும் சேர்த்து கட்டுற கட்டிடம் மட்டும் இல்லை… இந்தியாவின் வர்த்தக வளர்ச்சிக்கான இன்னொரு வாசல்.

இன்னும் ரெண்டு மாசம்… அதுக்குள்ள இந்த ப்ராஜக்ட்டை முடிக்கணும். அதுக்கு நான் மட்டும் போதாது… நம்ம எல்லாரும் சேர்ந்து வேலை செய்யணும்.எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. நம்மளால கண்டிப்பா முடியும்.”என்று அவனது டீம்மை ஊக்கப்படுத்தினான்.

இரவு ஒன்பது மணியை கடந்திருந்தது. சைட் ஆபிஸ் கேண்டீனில் அவனுக்காக இரண்டு சப்பாத்தியும் அதற்கு ஒரு கிண்ணத்தில் தாலும், சூடான சோறும், குஜராத்தி கட்லெட்டும், தயிரும் என எளிய இரவு உணவு காத்திருந்தது.
ஆனால் இவற்றை ருசிக்காகவோ பசிக்காகவோ உண்ணும் எண்ணம் அவனிடம் துளியும் இல்லை.வாழனுமே அதற்காகவாவது உண்போம் என்ற எண்ணமும் இல்லை.

ஏதோ வெறுமை… அழுத்தம்…. வாழ்க்கையில் மிக மிக மோசமாக தோற்றதை போன்ற அவமானம்..

அந்த கேண்டீனில் அமர்ந்திருந்த மற்ற தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக சிரித்து பேசியபடி உணவை அருந்திக் கொண்டிருந்தனர்.அவர்களின் சிரிப்பை  பார்த்தவுடன் ஏன் நம்மால் இப்படி சிரிக்க முடியவில்லை? என்ற கேள்வி அவன் இதயத்தில் கனமான வலி வந்ததை போன்று தோன்றியது.

வேண்டாம் மனமே எதையும் நினைக்காதே!பழைய நினைவுகளை அசை போட்டால் அதனால் கசப்பு… அவமானம்…வலி… மட்டுமே மிஞ்சும் என வழக்கம்போல வேக வேகமாக உணவை உள்ளே தள்ளி விட்டு அறையை நோக்கி போனான்.

சைட்டில் அவனுக்காக ஒதுக்கப்பட்ட அறை…இரும்பு கதைவை திறந்து அந்த சிறிய அறையினுள் நுழைய ஒருவர் மட்டுமே படுத்து தூங்கக்கூடிய சிறிய மரத்தாலான கட்டில்…அதன் பக்கவாட்டில் சிறிய மரப் பீரோ, அதன் மீது கட்டுமானம் சம்பந்தபட்ட சில  ஆங்கில புத்தகங்கள்…அதையடுத்து பாத்ரூம்…கட்டிலின் நேர் எதிரே சிறிய மேசை… அதன் மீது கட்டிட மாதிரி வரைபடங்களும்… லேப்டாப்பும்… சில பேனாக்களும் கிடந்தனர்..டேபிளின் இடது புறம் பால்கனி கதவு அதைத் திறந்தால் முந்தரா துறைமுகத்தின் மொத்த அழகையும் ரசிக்க முடியும்…

அந்த இரவில் நிலவொளியில் அந்த துறைமுகத்தை பார்த்தபடி நின்றிருந்தான் ராஜீவன்.இப்படி அவன் நிற்பது இன்று நேற்றல்ல.. கடந்த இரண்டு வருடங்களாக இப்படிதான் அவன் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

எங்கே கொஞ்சம் அசந்தாலும் அந்த பழைய நினைவுகள் தன்னை கொன்று தின்று விடுமோ என்ற பயத்தால் வேண்டுமென்றே அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுச் செய்து கொண்டிருக்கிறான்.

இந்த பிரமாண்ட கப்பல்துறை…இந்த கடல்… இந்த கப்பல்கள்…எல்லாமே அவனுடைய திருமண வாழ்க்கையில் இருந்து  தப்பித்தலுக்கான வழிகள். வீட்டிற்கு சென்றால் மீண்டும் அந்த வாழ்க்கைக்குள் தன்னைப் பிடித்து வைக்கப் பார்ப்பார்கள் என கடலுக்குள்ளேயே அவன் தன்னை மறைத்துக் கொண்டான்.

சிறிது நேரம் அந்த கடற்கரையை வெறித்து பார்த்துவிட்டு உள்ளே வந்து லேப்டாப்பை எடுத்து…அடுத்த கட்டுமானத்திற்கான வரைபடத்தை வரைய ஆரம்பித்தான்.மணி சரியாக இரவு பத்து…அவனது ஃபோன் ஒலித்தது…எடுத்துப்பார்கக அவன் அம்மா…

கடந்த இரண்டு வருடங்களாக ஊரில் இருந்து ஃபோன் வந்தால் யோசிக்காமல் உடனே எடுத்து பேசுவது அவன் அம்மா அம்பிகாவின் அழைப்பு மட்டுமே…அந்த அளவிற்கு அக்மார்க் அம்மா பையன்.வேறு யார் அழைத்தாலும் எடுக்காமல் தவிர்ப்பான். அப்படியே எடுத்தாலும் தனக்கு பிடிக்காது செய்து வைத்த திருமணத்தை பற்றி பேச ஆரம்பிக்கும் முன்னே…வேலை இருக்கு என ஃபோனை வைத்து விடுவான்..

இன்றைக்கு அவன் அம்மா அழைப்பு வர சிறு யோசனை.. ஏன் இந்த இரவில் அழைக்கிறார்?.அவரை பொருத்தவரை, “இரவு பத்து மணி என்பதெல்லாம் நடு இரவு ஆயிற்றே” என்ற யோசனையோடு ஃபோனை எடுத்து..”சொல்லும்மா” என்றான்.

ராஜீவா,நான் ஜெகன் பேசறே…

சொல்லுங்க அண்ணா…

“ராஜீவா…அது வந்து…என தயங்கியபடியே… அப்பா தவறிட்டாரு…” என்றான் ஜெகன்.

“என்ன அண்ணா சொல்றீங்க…?” என்றான் அதிர்ச்சியாக…

ஆமா ராஜீவா சித்தப்பா நெஞ்சு வலினு சித்திகிட்ட சொல்ல…அவங்க உடனே என்னை கூப்பிடாங்க..நான் அஞ்சு நிமிஷத்துல வீட்டுக்கு போய் அவரே ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துட்டே… ஹாஸ்பிடல் உள்ளே போகும்போது கூட எனக்கு ஒன்னுமில்ல சரியாயிடு.. நீங்க எல்லா கவலைப்படாதீங்கனு எங்ககிட்ட சொல்லிட்டுதான் உள்ளே போனாரு…

ஆனா அவரே காப்பாத்த முடிலேனு டாக்டர் சொல்லிட்டாங்க…அவருக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி இருந்தே லேசான நெஞ்சு வலி இருந்து இருக்கும் போல.. ஆனா அவரு அதை சாதாரணமா விட்டுடாரு… என கவலை நிறைந்த குரலில் கூறினான், ராஜீவனின் பெரியப்பா மகன் ஜெகன்.

அண்ணா இப்போ எங்கே இருக்கீங்க?அம்மா எங்கே? யார் எல்லாம் கூட இருக்காங்க?

நம்ம வீட்டு பக்கத்துல இருக்கறே ஏஎம்சி ஹாஸ்பிடல்லே இருக்கோம்..சித்தி இங்கதான் இருக்காங்க..ரொம்ப அழுகறாங்க..அவங்க முகத்தை என்னாலே பாக்க முடியலே…

நீ கவலைப்படாத நாங்க எல்லாம் பக்கத்துல இருக்கோம்.ரஞ்சிதா சித்தியே பாத்துக்கும்.உன் பையன் சித்தார்த் கூட பக்கத்துலதான் இருக்கான்.நீ வர வரைக்கும்  இவங்க மூனு பேரையும் நான் பாத்துக்கறேன்.

நீ உடனே வீட்டுக்கு கிளம்பி வா.நாங்க பெரியப்பாவை வீட்டுக்கு எடுத்துட்டு போறோம்…

“எடுத்துட்டு போறோம்…”அந்த இரண்டு வார்த்தைகள் ராஜீவனின் காதுகளில் விழுந்த அடுத்த நொடியே, உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பு ஓடியது.

“வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்…”இந்த வார்த்தை… உயிரோடு இருக்கும் மனிதர்களுக்கானது.

“வீட்டுக்கு எடுத்துட்டு போறோம்…”இந்த வார்த்தை… உயிர் பிரிந்தவர்களுக்கானது.

வெறும் ஒரு எழுத்து மாற்றம்தான். ஆனால் அந்த ஒரு எழுத்து ஒரு மனிதன் உயிரோடு இருப்பதற்கும், உயிரற்ற உடலாக மாறுவதற்கும் இடையிலான எல்லையைச் சுட்டிக் காட்டின.

அந்த உண்மை மின்னல் போல ராஜீவனின் மனதைத் தாக்கியது.

“அப்பா…!”என உள்ளுக்குள் அலறினான். இதயம் வேகமாகத் துடித்தது. கைப்பேசியைப் பிடித்திருந்த விரல்கள் நடுங்கின. இதுவரை நம்ப மறுத்த மனம், அந்த ஒரு வார்த்தையைக் கேட்டவுடன் மெதுவாக உண்மையை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது.

“அப்பா இனி…என்னோடு இல்லை.. அவரது கண்டிப்பு நிறைந்த முகம்..கணீர் குரல்… கள்ளங்கபடமில்லாத சிரிப்பு… அனைவருக்கும் உதவும் குணம்… இவையெல்லாம் இனி காற்றோடு காற்றாக கலந்து விட்டது…என்ற அந்த எண்ணமே அவன் நெஞ்சை இறுக்கிப் பிடித்தது. மூச்சு விடுவதற்குக் கூட சிரமமாக இருந்தது.

ஹலோ…!ஹலோ…! ராஜீவா நான் பேசறது கேக்குதா?என்றான் ஜெகன்…

“அண்ணா நான் இப்போவே ஊருக்கு கிளம்பறே” என ஃபோனை வைத்து விட்டான்.

நொடியும் தாமதிக்காது….ட்ரெயின் டிக்கெட்டை புக் செய்தான்.பின் ஒரு பேக்கை எடுத்து அதில் லேப்டாப்பை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஓடி வந்து ரயிலை பிடித்து அமர்ந்தான்.. லேப்டாப்பை ஆன் செய்து மேலதிகாரிக்கு விடுமுறையை மெயில் அனுப்பினான்.பின் அமைதியாக அதை அணைத்து வைத்தான்.

இரவு நேரம் “தடக்-தடக்”என அதிவேக ரயில் குஜராத்தில் இருந்து கோவையை நோக்கி விரைந்தது. பெரியவர்கள்… ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் தூங்கியபடி வந்து கொண்டிருந்தனர்.

ஆனால் ராஜீவனுக்கு மட்டும் தூக்கம் கண்களை தீண்டவில்லை.ஜன்னல் வழியாக வெளியே பார்வையைச் செலுத்தினான். கண்கள் நீரை கீழே விடவா?என அவனிடம் அனுமதி கேட்டு நின்றனர்..

“அப்பா இறந்து விட்டார்.அம்மா அழுகிறார்.ரஞ்சிதா அவர் பக்கத்தில் உள்ளாள்.உன் மகன் சித்தார்த்உம் உடன் உள்ளான்.”என்ற ஜெகனின் வார்த்தைகள் அவனின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

கடந்த இரண்டு வருடங்களாக முந்த்ரா துறைமுகத்தில் அவனை அவனே  தொலைத்து  மறைந்து வாழ்ந்து வந்ததற்கான காரணம் அவன் மனைவி ரஞ்சிதா…

–கவிதை எழுதும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!