மூன்று நாட்களை மருத்துவமனையில் பூமாவுடன் கழித்துவிட்டு ஒருவழியாக குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள் சீதாவும் ரகுவரனும். நிச்சயம் செத்த மற்றும் கிருஷ்ணனின் துணை இல்லாவிட்டால் ரகுவரன் என்ன செய்திருப்பானோ தெரியாது. இன்றைய தேதியில் எல்லோரிடமும் பணம் இருக்கிறது.பலரிடம் கேர் டேகேர் போட்டுக்கொண்டு மருத்துவ மனையில் இருப்பதற்கு கூட வசதி இருக்கிறது.
ஆனால் மனம்.தைரியம் சொல்லவும், தட்டிக்கொடுக்கவும் மனதுக்கு பிடித்தமான , இதத்தை தரும் யாராவது அருகில் இருப்பது நலம்.இதோ நம் ஹீரோ கூட இத்தனை வருஷங்களாக தனியாக சமாளித்தவன் தானே! இப்பொழுது முடிந்ததா? சீதா குழந்தையை தூக்கிக்கொண்டு காரிலிருந்து இறங்கினாள் .ரகுவரன் காரில் வைத்திருக்கும் மற்ற பொருட்களை எடுத்துக்கொண்டான். கிருஷ்ணன் ரெடியாக ரகுவரனின் வீட்டை திறந்து வைத்திருக்க சீதா நேரே அந்த போர்ஷனுக்குள் நுழைவதை பார்த்த ராதாவுக்கு அடிவயிறு காந்தியது. “இதென்ன கூத்தாக இருக்கு? முதல்லே உதவி செய்யுறேன்னு பழியா கிடந்தா.இப்போ அவங்க வீட்டுக்குள்ளேயே போயிட்டா. ஏற்கனவே குடித்தனம் செய்யவும் ஆரம்பிச்சாச்சா..இல்ல ,இனிமேதானா?” என்று ராதா சமையலறையிலிருந்து ராதா கத்தியதை கேட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்த சீதா அங்கேயே கல்லாய் நின்றுவிட்டாள் .
Advertisement
Advertisement
ரகுவரன் குளிக்க சென்றிருக்கிறான்.குழந்தை தூங்குகிறாள்.கிருஷ்ணனை அங்கே குழந்தைக்கு துணைக்கு வைத்துவிட்டுத்தான் தங்கள் வீட்டுக்கு சீதா வந்தது.ஒரு குளியலை போட்டுவிட்டு அவர்களுக்கு ஏதாவது சாப்பிட கொண்டுபோய் தரவேண்டும். அவசரத்திற்கு உதவி செய்யாவிட்டால் எப்படி ‘ என்று யோசித்துக்கொண்டே உள்ளே வந்தவளுக்கு அம்மாவின் வார்த்தைகள் அமிலத்தை வார்த்ததை போல தேகமெங்கும் ஒரு எரிச்சலை தந்தது.
அம்மாவுக்கு இப்படியெல்லாம் பேச வரும் என்று மகள் தெரிந்துகொண்ட நாள் இது. உள்ளே மேற்கொண்டு எப்படி செல்வது என்று அங்கேயே நின்றுவிட்டாள் சீதா. சமையலறையிலிருந்து வெளியே வந்த ராதாவுக்கும் திடுக்கிடல் தான். சீதாவை இப்போது அவள் எதிர்பார்க்கவில்லை. கோவம் எல்லை மீற பேசிய வார்த்தைகள் தாமே தவிர அதற்க்கு பொருள் யோசித்தெல்லாம் ராதா பேசியிருக்கவில்லை.
Advertisement
அம்மாவிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சீதா தனது அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள் . அவள் மனம் அம்மா சொன்ன வார்த்தைகளிலேயே சுற்றியது. அவன் தன்னை திருமணம் செய்து கொள்ளக் கேட்டு முழுதாய் ஒருநாள் ஆகவில்லை.அதற்குள் இந்த வாழக்கை என்னை என்ன செய்ய காத்திருக்கிறது என்று தலையை பிடித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டாள் .
அடுத்து என்ன செய்யவேண்டும் என்று கூட தோன்றாமல் அமர்ந்திருந்தவளுக்கு, குழந்தையின் அழுகுரல் கேட்டது.அதைத்தொடர்ந்து ரகுவரனின் குரலும் கேட்க , அவசரமாக ஒரு குளியலை போட்டுவிட்டு கையில் கிடைத்த ஆடையை அணிந்துகொண்டவளாக ரகுவரனின் வீட்டை நோக்கி ஓடிய மகளை கையாலாகாத்தனத்துடன் வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தாள் ராதா.
அவள் எதிர்பார்க்காத சம்பவங்கள்,அவளுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் நிகழ்ந்து கொண்டிருப்பதை தடுக்க முடியாமல் பார்த்தாள் ராதா. வெகுநேரம் ஸோபாவில் அமர்ந்திருந்தவளை என்னவென்று கேட்க ஆளில்லை.இந்த நொடி அனுபவிக்கும் தனிமையை அறவே வெறுத்தாள் ராதா. மகளும் கணவ்ரும் இப்படி தன்னை ஒதுக்கிவிட்டு வேலைகளை பார்ப்பார்கள் என்று ஒருபொழுதும் ராதா யோசித்தது இல்லை. அவளது அழகான கூடு ,அதில் அவள் ,அவளது கிருஷ்ணன், பாச மகள் சீதா.வேறு யாரும் உள்ளே வர அனுமதி இல்லை’எண்டு இருந்தவளுக்கு மகள் தனக்கான கூட்டை தேடிக்கொண்டு இருப்பது பிடிக்கவில்லை.
ஜானகியை திருமணம் செய்து அனுப்பும் பொழுது ராதாவுக்கு பெரியதாக ஒன்றும் தோன்றவில்லை. என்றைக்கு இருந்தாலும் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டுயது தானே!என்று இருந்தவளுக்கு சீதாவும் திருமணம் செய்து கொண்டு சென்றால்…என்ற யோசனை கூட பிடிக்கவில்லை. கிருஷ்ணன் மதியம் போல வீட்டுக்கு வந்து படுத்து தூங்கியவர் தான். ஆனால் சீதா வீட்டுக்கே இன்னமும் வரவில்லை.
ரகுவின் வீட்டுக்கு ஆன்லைனின் பொருட்கள் ஆர்டர் செய்யப் பட்டு வருவதையும்,அதை ரகு லேசாக கதவை திறந்து வாங்குவதையும், சீதாவின் குரல் அந்த வீட்டில் ஒலிப்பதையும் ராதா பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். சீதா அந்த வீட்டில் சமைக்கும் சப்தம் கேட்கிறது.
ராதாவின் மனதில் அவளையும் அறியாமல், “இந்த பொண்ணு அங்கே போயி முதன்முதலா சமைக்குது.ஏதாவது பாயசம் செஞ்சா பரவாயில்ல. அட,குழந்தைக்கு உடம்பு சரி இல்லன்னு சொல்லிட்டு பாயசம் வைப்பாங்களா …பாலையாவது காய்ச்சினா… “என்று யோசிக்க சீதாவும் அங்கே ரகுவரன் வீட்டில் பாலை தான் காய்ச்சினாள் . அதில் லேசாக நாட்டு சர்க்கரை போட்டு குழந்தைக்கு புகட்டிவிட்டு,இவர்களும் கொஞ்சம் பாலை குடித்துவிட்டு வேலையை தொடர்ந்தார்கள்.
ரகுவரன் அவளிடம் சொல்லிப்பார்த்தான்,”சீதா ,ஐ கென் மேனேஜ். எப்போதும் சமைக்கிறது தான். ஒரு ரசம் வச்சா நானும் பூமியும் சாப்பிட்டுப்போம்.நீ வீட்டுக்கு போயி ரெஸ்ட் எடு .உங்கம்மா உனக்காக குக் பண்ணி வச்சிருப்பாங்க.”
அவன் சொன்னதை சீதாவால் ஏற்கமுடியவில்லை. அவள் தனது வீட்டிலிருந்து இவர்களுக்கு கொஞ்சம் உணவு எடுத்துக்கொண்டு வரலாம்.உடம்பு சரி இல்லாத குழந்தையை பார்த்துக்கொண்டு சமைப்பது ரகுவரனுக்கு கஷ்டம் என்று நினைக்க அம்மாவின் வார்த்தைகள் அவளை நினைத்ததை செயல் படுத்த விடாமல் செய்து விட்டது. அதனால் பிடிவாதமாக இங்கேயே இருந்து சமைத்து குழந்தைக்கும் ஊட்டிவிட்டு தானும் அங்கேயே சாப்பிட்டுவிட்டு தான் தங்கள் வீட்டுக்கு கிளம்பினாள். சீதா மீண்டும் வீட்டுக்கு வரும் வரை ராதா அந்த இடத்திலிருந்த்து நகரவே இல்லை.
மறுநாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு சீதா காலையிலே எங்கேயோ கிளம்பி சென்றாள் . கிருஷ்னன் அவர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் வரச்சொன்னார்கள் என்று சென்றவர் மாலை தான் வீட்டுக்கு வந்தார். அன்றைய பொழுது அமைதியாக கழித்தது.அடுத்தநாள் காலை சீதா வீட்டுக்கு சுதாவும் அவள் கணவரும் வந்தார்கள். கிருஷ்ணனுக்கும் ராதைக்கும் ஆச்சர்யம்.இவ்வளவு காலையில் இவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள் என்று. சீதா தான் வரச் சொன்னா…என்றாள் சுதா. சற்றுநேரத்தில் ராகவனும் ஜானகியும் வந்தார்கள் . அவர்களும் சீதா தான் வரச்சொன்னது என்றார்கள்.கிருஷ்ணனுக்கு யோசனை வந்தது என்றால் ராதைக்கு பதட்டம் வந்தது. சீதா இன்னமும் தயாராகி வெளியே வரவில்லை.அவர்கள் வீட்டு வாசலில் ரகுவரனின் குரல் கேட்கவே பயத்துடன் அவன் உள்ளே வருவதை பார்த்துக்கொண்டு நின்றாள் ராதா.அவளது வயிறு கலங்கியது.
ரகுவின் குரல் கேட்டதும் வெளியே வந்த சீதாவை மொத்த குடும்பமும் ஆச்சர்யமாக பார்த்தது. முழு ஒப்பனையில் திருமண பெண் போல வந்து நின்றாள் சீதா. அவள் பார்வை முழுவதும் ரகுவை மட்டுமே சுற்றியது.அவனுக்கு ஏதோ புரிந்தாலும் அமைதியாக இருந்தான்.
அங்கே இருப்பவர்கள் எல்லோருக்குமே ஏதோ புரிவது போலத்தான் இருந்தது. அவர்களையும் அறியாமல் முகத்தில் புன்னகை வந்துவிட்டது. ராதாவும் புரிந்து கொண்டாள் .இனி தங்கள் மகள் தங்களுக்கு இல்லை என்று. யாருமே சீதாவின் கையில் இருந்ததை பார்க்கவில்லை. முதலில் கவனித்தது ரகுவரன் தான்.அவன் புருவங்கள் அவளிடம் என்ன என்று கேட்க அவள் நிதானமாக தலை அசைத்தாள்.
அவளுக்கு ரகுவரனை பற்றி இன்னமும் தெளிவு வேண்டி இருந்தது. திருமணம் செய்து கொண்டால் அது அவளுக்கு வாழ்நாள் முழுவதுக்குமான பந்தம்.அவசரப் பட்டு முடிவு எடுத்து கஷ்டப் பட அவளால் முடியாது.
தனது கையில் இருந்த காகிதங்களை அவள் தனது பெற்றவர்களை நிற்க வைத்து அவர்களின் கைகளில் கொடுத்து நமஸ்காரம் செய்தாள் . கிருஷ்ணன் பதறினார்.”என்ன சீதா இது?ஒன்னும் புரியலையே!என்று தவிக்க ராதாவுக்கு உடல் நடுங்கியது.
“பிரிச்சு பாருங்கப்பா.பிறகு பேசலாம்”என்றாள் பெண்.எல்லோருமே ஒருவித ஆர்வத்தில் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.கிருஷ்னன் கவரிலிருந்து அந்த காகிதங்களை வெளியே எடுத்தார். இரண்டு காகிதங்கள் மொத்தம்.அதில் ஒன்று,பெற்றவர்கள் பெயரில் இருபத்தைந்து லட்சம் ரூபாய்கள் வங்கியில் பிக்சட் டெபாசிட் செய்திருந்தாள் சீதா .அதிலிருந்து மாதாந்திர வட்டிப் பணம் வரும். இன்னொன்று சீதா வாங்கியிருக்கும் வீட்டின் பத்திரம் .பெற்றவர்கள் காலத்திற்கு அதிலிருந்து வரும் வருமானம் அவர்களுக்கு மட்டும் தான். அவர்கள் வீட்டை விற்க முடியாது. அனுபவிக்கலாம்.அவர்கள் காலத்திற்கு பிறகு மீண்டும் சீதாவுக்கு அந்த வீடு வந்து சேரும்என்று எழுதி அந்த பத்திரத்தை பதிவு செய்திருந்தாள் சீதா.
அங்கே இருந்தவர்கள் அனைவருக்குமே அதிர்ச்சி தான். இதையெல்லாம் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தாங்க முடியாத மன அழுத்தத்தில் ராதா மயங்கி சாய்ந்தாள்.அவளை சீதாவும் ரகுவரனும் சட்டென்று பிடித்துக் கொண்டார்கள். தங்கள் அறையில் படுத்திருந்த ராதா ,அருகில் இருக்கும் சீதாவிடம் ,”நீ அம்மாவை புரிஞ்சுக்கிட்டது அவ்வளவு தானா சீதா.உன்னோட பணம் தான் அம்மாவுக்கு முக்கியம்னு நினைச்சியா..”என்று கதற அம்மாவின் கையை ஆறுதலாக பிடித்துக் கொண்டாள் சீதா .
“உன்னோட மனஸும் ,அதோட தேவையும் எனக்கு நிச்சயம் தெரியும் மா. அதே சமயம் ,உங்களால ஏற்க முடியாத தனிமையை உங்க ரெண்டு பேரு காலத்துக்கு பிறகு நா எப்படிம்மா ஏத்துக்க முடியும்?எனக்குன்னு நிச்சயம் குடும்பம் ,குழந்தை எல்லாம் வேணும்.இப்போவே தூரம் ஆனா முன்னே மாதிரி உடம்பு இல்ல. ரொம்பவருஷம் கம்பியூட்டர் வேலை பார்த்து மனஸும் உடம்பும் அலுத்துப் போச்சு. பணத்தை வச்சு மட்டும் எப்படிம்மா வாழ சொல்றே. தனிமை…அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா…”என்றுவிட்டாள் .
வெளியே ரகுவரன் தனது பெற்றவர்களிடம் சீதாவுடனான திருமணம் பற்றி அலைபேசியின் வாட்சப் காலில் பேசிக்கொண்டு இருந்தான்.அறைக்குள் இருக்கும் சீதாவுக்கும் ராதைக்கும் அவன் பேசுவதும் கேட்டது.
ராதாவுக்கு வார்த்தைகள் வரவில்லை. அமைதியாக கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தாள்.அவள் கண்களின் கண்ணீர் கன்னத்தை தொட்டது. தனது கையால் அம்மாவின் கண்ணீரை துடைத்து விட்ட சீதா,” உங்க காலம் வரை அப்பாவும் நீயும் என்னோட பொறுப்பு. அவருக்கு வேறே ஊருக்கு மாற்றல் ஆனாலும் ஒண்ணு உங்க ரெண்டு பேரையும் கூட கூட்டிட்டு போய்டுவேன்.இல்ல…அவர் மட்டும் ட்ரான்ஸபெர்ல போய் வேலை பாக்கட்டும்.நானும் குழந்தையும் இங்கே உங்க கண்ணு முன்னால தான்,”என்றாள் . ராதாவுக்கு லேசாக முகம் தெளிந்தாலும்,” ஆனாலும்,ரெண்டாவது தாரமா போகணுமா..” என்றாள் .
சீதாவிடம் வெறும் சிரிப்புதான்.வேறு பதில் சொல்லவில்லை.ஆனாலும் ரகுவரன் மீதான விருப்பம் அதில் தெரியவே ராதா அமைதியாகிவிட்டாள் .ரகு ஜூம் லிங்க் அனுப்ப அவனது பெற்றவர்களும்,அண்ணன் குடும்பமும்,மைதிலியின் பெற்றவர்களும்,தங்கையின் குடும்பமும் அந்த லிங்க் வழியாக இணைந்தார்கள்.சுதா தனது மகன்களுக்கு சொல்ல அவர்கள் இருவரும் குடும்பத்துடன்,பூமாலைகள், பழங்கள்,இனிப்புகள் என்று வாங்கிக்கொண்டு வந்துசேர்ந்தார்கள். கிருஷ்னன் அதற்குள் வீட்டிலிருக்கும் மாமரத்திலிருந்து இலைகளை பறித்து தங்கள் வீட்டு வாசலிலும்,ரகு வீட்டு வாசலிலும் சொருகி வைத்தார். சுதாவின் மருமகள் பூமாவை கூட்டிக்கொண்டு போய் அழகான பாட்டுபாவாடை சட்டை அணிவித்து தலையில் தென்னைமரக் குடுமி போட்டு பூவை சுற்றி அழைத்து வந்தாள் .
ராதாவும் தெளிந்து விட்டாள் . இதற்குமேலும் பிடிவாதமாக நிற்பதற்கு என்ன இருக்கிறது?காலம் கனியும் பொழுது நடப்பவை நடந்தே தீரும்.தடுக்க முடியாது என்று புரிந்தவளாக குளியலறை சென்று முகம் கழுவி புடவை மாற்றிக் கொண்டாள் .
ரகுவரன் ஏற்கனவே அலுவலகம் கிளம்பியவன்,சீதா அழைத்தாள் என்றுதான் வந்தது. இருவரும் மனையில் உட்கார சீதா மடியில் பூமா அமர்ந்திருக்க,
” செல்வி.சீதாவுக்கும் – திருவாளர் ரகுவரனுக்கும்” நிச்சயதார்தம் இனிதாக நடைபெற்றது.
ரகுவரனின் குடும்பமும், மைதிலியின் பெற்றவர்களும் அயல்நாட்டில் இருக்கும்பொழுது எப்படி திருமணம் வைக்க முடியும். அவர்கள் வரட்டும்.பிறகுதான் திருமணம் என்று சீதா சொல்லிவிட மூன்று மாதங்கள் கழித்து திருமணம் என்று ஏற்பாடாகி இருந்தது.
ரகுவரனின் தங்கை சும்மா இராமல்,”நீங்க ரெண்டு பேரும் லக்கி தெரியுமா… எதிரெதிர் வீடு.தினமும் பார்த்துப்பீங்க. பேசிப்பீங்க. லவ் பண்ண நேரம் நிறைய இருக்கு.சான்ஸே இல்ல…என்னடா பூமா குட்டி ..”என்று கேட்க குழந்தையும் அர்த்தம் புரியாமல் ஆமாம் என்றுவிட்டு போய் சீதாவின் இடுப்பை கட்டிக்கொண்டு கிளிக்கி சிரிக்க குழந்தையை அணைத்துக் கொண்டாள் சீதா.அவளின் பார்வை ரகுவரனிடம் , எதேச்சையாக அவள் பக்கமாக திரும்பிய ரகுவரனின் பார்வை சீதையிடம்.