Skip to content
Post Views: 23
கண்ணாமூச்சி – 9
“என்னது உன் ஃபிரண்டு பேரு நிலாவா?” என்று அனன்யா சொன்ன அடுத்த கணமே சென்னையின் சோல்மேட் ஆய்வகத்தில் இருந்த பிரவீன் அதிர்ந்து போய் நாற்காலியில் நிமிர்ந்தான்.
“ஆமா சார்… நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேனே, என் காலேஜ் ஃபிரண்ட் நிலாதான் நம்மளோட ரெண்டாவது பீட்டா டெஸ்டர்,” என்றாள் அனன்யா சாதாரணமாக.
பிரவீனின் மூளைக்குள் மின்சாரக் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டது போன்ற ஒரு பேரதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு நொடி அவனது சிந்தனைகள் அனைத்தும் அப்படியே ஸ்தம்பித்து நின்றன. விஷ்வா சில நிமிடங்களுக்கு முன்பு உருகி உருகி விவரித்த அவனது விர்ச்சுவல் கேர்ள்ஃபிரண்டின் பெயரும் இதுதானே!
Advertisement
எல்லாம் மிகச் சரியாகப் பொருந்திப் போவதைக் கவனித்த அவனது உள்ளுணர்வு, ஏதோ ஒரு விபரீதம் அங்கே நிகழ்கிறது என்று எச்சரித்துப் பதறியது. ஆனால், அடுத்த விநாடியே அவனுள் இருந்த தீவிரமான அறிவியல் பகுத்தறிவு அந்த எண்ணத்தை அடியோடு மறுத்து, பலமாகத் தலையாட்டியது.
‘என்ன ஒரு முட்டாள்தனமான எண்ணம்! பிரவீன், நீ ஒரு சாஃப்ட்வேர் சயன்டிஸ்ட். ஒரு டெக்னாலஜிஸ்ட் இப்படி அர்த்தமில்லாம யோசிக்கலாமா?” தன்னைத்தானே சாடிக் கொண்டான் பிரவீன்.
“விஷ்வாவோட அல்காரிதத்தில் இருக்குற நிலா, அவனோட ஆழ்மனசு ஆசைகள், ரசனைகள், ஒரு துணைக்கு ஏங்குற அவனோட தனிமைக்குத் துணையா அவனோட மூளையே அவனுக்காக கற்பனை பண்ணுன குணாதிசயங்களை வாரித் திரட்டி, ‘சோல்மேட்’ சிஸ்டமே உருவாக்கிக் குடுத்திருக்குற ஒரு அதிநவீனக் கற்பனை அவதார். ஆனா அனன்யாவோட ஃபிரண்ட் நிலா, இந்த நிஜ உலகத்தில் ரத்தமும் சதையுமா வாழுற ஒரு பொண்ணு! இரண்டு பேருக்கும் பேர்ல தற்செயலான பொருத்தம் இருக்கலாமே தவிர, வேற என்ன தொடர்பு இருக்க முடியும்? ஒரு விர்ச்சுவல் பிம்பமும் நிஜப் பெண்ணும் எப்படி ஒண்ணா இருக்க முடியும்?” என்று தனக்குத்தானே மிகத் தீவிரமாகச் சமாதானம் சொல்லிக் கொண்டான்.
Advertisement
தொழில்நுட்ப விதிகளின்படி இது சாத்தியமே இல்லை என்று தன் பயத்தை மழுங்கடித்தவன், தன் இதயத்தின் படபடப்பை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டு, அனன்யா நிலாவின் அனுபவம் குறித்து வழங்கப் போகும் ரிப்போர்ட்டுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான்..
Advertisement
அதே நேரத்தில், கிராமத்திலிருந்து சென்னைக்கு தேசிய நெடுஞ்சாலையில் கார் விரைந்து கொண்டிருக்க, நிலாவின் மொபைல் போன் மெல்ல அதிர்ந்தது. திரையில் அனன்யாவின் பெயர் மின்னியதைக் கண்டதும் நிலாவின் இதயம் ஒரு கணம் லேசாகத் திடுக்கிட்டது.
காருக்குள், முன் இருக்கையில் அவளது அப்பா ரங்கநாதன் சாலையின் மீது கவனமாகக் காரை ஓட்டிக் கொண்டிருந்தார். பின் இருக்கையில் அவளது அம்மா தங்கம்மாவும், பாட்டி கோமதியம்மாளும் அமர்ந்திருந்தனர். இத்தகையதொரு இக்கட்டான சூழ்நிலையில், அனன்யாவிடம் அந்தப் புதிய மெய்நிகர் செயலி குறித்தோ, விஷ்வாவைப் பற்றியோ, எல்லாவற்றிற்கும் மேலாக அவனுடன் நேர்ந்த சந்திப்புகளைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேச முடியாத ஒரு இறுக்கமான சூழ்நிலை அங்கே நிலவியது.
நிலா தன் தொண்டையைச் லேசாகச் சீராக்கிக் கொண்டு, யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் வராதபடி தன் குரலை முற்றிலும் இயல்பான, பொதுவான ஒரு தொனிக்கு மாற்றிக் கொண்டு அழைப்பை ஏற்றாள்.
Advertisement
“ஹே அனன்யா சொல்லுடி… நாங்க இப்போதான் ஊர்ல இருந்து சென்னைக்குக் கிளம்பி வந்துட்டு இருக்கோம்,” என்றாள் நிலா.
மறுமுனையில் அனன்யா தன் லேப்டாப் திரையில் இருந்த சிக்னல் வரைபடங்களை உற்று நோக்கியபடியே மிகவும் ஆர்வமாகக் கேட்டாள். “ஹே நிலா! கிளம்பிட்டீங்களா? சூப்பர். இப்போ நீ ஃப்ரீதானே? அந்த நியூரல் ஹெட்பேண்ட் எக்ஸ்பீரியன்ஸ் இப்போ எப்படி போயிட்டு இருக்குன்னு கொஞ்சம் சொல்றியா? யூசர் இன்டர்ஃபேஸ் எல்லாம் ஓகேவா? முக்கியமா உன்னோட அலைவரிசையில சிஸ்டம் ஏதாவது அப்நார்மலா பிஹேவ் பண்றதைக் கவனிச்சியா?”
நிலா தன் அம்மாவின் பார்வை தன் மீது பதிகிறதா என்று ஓரக்கண்ணால் கவனித்தபடி, மிகவும் சுருக்கமாகப் பதிலளித்தாள். “ஆமா அனன்யா… எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு. எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆப் ரொம்ப ஸ்மூத்தா, நாம ஆரம்பத்துல பிளான் பண்ண மாதிரியே கரெக்டா ஒர்க் ஆகுதுடி, மீதியை வீட்டுக்கு வந்தப்பறம் சொல்றேன்” என்று மழுப்பலாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள் நிலா.
அந்த செயலியின் காரணமாக தன மனதுக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் குமுறல்களை அனன்யாவிடம் மட்டுமே அவளால் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இப்போது சூழ்நிலை சரியாக இல்லாததால், சொல்ல நினைத்த எதையும் தன உயிர்தொழியிடம் சொல்லாமலே மறைத்துவிட்டாள்.
நிலா வீட்டில் இருப்பவர்களுக்குச் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காகச் சொன்ன அந்த “எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருக்கு” என்ற வார்த்தையை, அனன்யா முற்றிலும் ஒரு தொழில்நுட்பக் கோணத்தில் தவறாகப் புரிந்துகொண்டாள். நிலாவின் மனநிலை அல்காரிதத்தால் எந்தப் பாதிப்பும் அடையவில்லை என்றும், சிஸ்டம் எந்தவித அப்நார்மல் பிழைகளும் இல்லாமல் சீராக இயங்குகிறது என்றும் அவள் தவறான ஒரு முடிவுக்கு வந்தாள்.
உடனடியாக அவள் பிரவீனைத் தொடர்பு கொண்டு, “சார், நான் இப்போதான் நிலாகிட்ட பேசினேன். அவளோட எக்ஸ்பீரியன்ஸ்ல எந்தப் பாதிப்பும் இல்லைன்னு சொல்றா. சிஸ்டம் கிராஃபா இருக்கட்டும், அவளோட ஃபீட்பேக்கா இருக்கட்டும்… எல்லாமே ரொம்ப நார்மலா இருக்கு சார். ஆப்ல எந்த பிராப்ளமும் இல்லை,” என்று மிகவும் நம்பிக்கையுடன் தன் இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்தாள். நிலாவின் அந்த ஒரு வார்த்தை, இருவேறு துருவங்களில் வெடிக்கக் காத்திருந்த அந்தப் பேராபத்தை அப்படியே பிரவீனின் கண்களிலிருந்து தற்காலிகமாக மறைத்துவிட்டது!
அனன்யாவின் அந்தத் தீர்க்கமான அறிக்கையைக் கேட்ட பிறகுதான் பிரவீன் ஒருவாறு நிம்மதியடைந்தான்; அவனது நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்த அந்தப் பெரும் பாரம் சட்டென்று இறங்கியது போல இருந்தது. நாற்காலியில் லேசாகச் சாய்ந்தவன், தலையின் பின்னால் தன் கைகளைத் கோர்த்துக்கொண்டு தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினான்.
“அப்படின்னா இது ‘சோல்மேட்’ ஆப்ல இருக்குற குறைபாடோ, அல்காரிதத்துல இருக்குற தப்போ இல்லை; இது மொத்தமா விஷ்வாவோட மனநிலை சம்பந்தப்பட்ட தனிப்பட்ட சைக்கலாஜிகல் பிரச்சனை மட்டும்தான். அனன்யாவோட ஃபிரண்டுக்கு எந்தப் பாதிப்பும் இல்லன்னா, சிஸ்டம் சரியாத்தான் வேலை செய்யுதுன்னு அர்த்தம். ஆனா விஷ்வாக்கு, இந்த பிரம்மாண்டமான இமேஜூக்குப் பின்னால இருக்குற தீராத தனிமையும், யாரும் இல்லாத அந்த ஏக்கமும்தான் இதுக்கெல்லாம் காரணம். அந்த வெறுமையைத் தற்காலிகமாக நிரப்பின அந்த விர்ச்சுவல் பிம்பத்து மேல அவன் தன்னோட கட்டுப்பாட்டை இழந்து, ஒரு தீராத ஈர்ப்பை வளர்த்து வைச்சிருக்கான்!” என்று பிரவீன் முற்றிலும் தவறாகக் கணக்கிட்டான்.
தொழில்நுட்பத்தின் பின்னால் இருக்கும் மனித உணர்வுகளின் விபரீதத்தை அவனது அறிவியல் மூளையால் அந்தத் தருணத்தில் துல்லியமாகக் கணிக்க முடியாமல் போனது. மேலும், இப்போது ஐஸ்லாந்தில் இருக்கும் விஷ்வாவிடம் தொலைபேசி அழைப்பின் வழியே இதைப் பற்றி விவாதித்தால், அது அவனது பிடிவாதத்தையும் கோபத்தையும் இன்னும் அதிகமாக்குமே தவிர எந்தப் பயனையும் தராது என்பதை அவன் உணர்ந்தான்.
விஷ்வா தன் ஐஸ்லாந்து படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியதும், அவசரப்படாமல் அவனை நேரில் சந்தித்து, ஒரு நண்பனாக அவனுக்குப் புரிய வைத்து இந்தப் பிரச்சனையைச் சுமுகமாகக் கையாள்வதுதான் ஆகச்சிறந்த புத்திசாலித்தனம் என்று பிரவீன் தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தான்.
ஆனால், அந்தத் தற்காலிக அமைதிக்கு பின்னால் ஒரு மாபெரும் புயல் இருவரையும் அடியோடுச் சுருட்டி விழுங்கக் காத்திருக்கிறது என்பதை அவன் அப்போது அறிந்திருக்கவில்லை!
சென்னைக்கு வந்து சேர்ந்த நிலாவிற்குள், ஒரு மாபெரும் பிரளயமே வீசி ஓய்ந்திருந்தது. அந்த நீண்ட பயணத்தின் களைப்பை விட, மனதிற்குள் நிகழ்ந்த போராட்டத்தின் வடுக்கள் அவளை அடியோடு சோர்ந்து போகச் செய்திருந்தன. இரவு உணவை முடித்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தவள், வெளி உலகத்தைத் துண்டிப்பதைப் போலக் கதவை அவசரமாகத் தாழிட்டு, அதன் மீதே சில நொடிகள் அசைவற்றுச் சாய்ந்து நின்றாள். பின்னர் மெதுவாக நடந்து வந்து, தன் மேஜை மீது ஒரு அச்சுறுத்தலான ஆயுதத்தைப் போலக் கிடந்த அந்த நியூரல் ஹெட்பேண்டையே வெறித்துப் பார்த்தாள்.
அவளது எதார்த்த புத்தி இம்முறை எந்த ஒரு சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், மிகவும் தீர்க்கமாகவும் இரக்கமின்றியும் அவளுக்குள் பேசி அவளது இதயத்தைக் கிழித்தது.
“இனி இந்த ஹெட்பேண்டை நீ தொடவே கூடாது நிலா! உன்னோட விரல்கள் இனிமே இது மேல படவே கூடாது.” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.
“நீ ஒரு பெரிய்ய பொய்யை, வெறும் கானல் நீரை நிஜம்னு நம்பி உன்னோட இதயத்தை நீயே கொடூரமா ஏமாத்திட்டு இருக்கே.” எச்சரிக்கை செய்துகொண்டாள். “
“அங்க அந்த விர்ச்சுவல் உலகத்துல விஷ்வா என்கிட்ட காட்டுற அந்த உன்னதமான அன்பு, அவரோட கண்களில் தெரியுற காதல், அந்தத் தவிப்பு எல்லாமே வெறும் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்! அல்காரிதங்கள் எழுதி வச்ச ஒரு போலி நாடகம். அதை அப்பட்டமான நிஜம்னு நம்பி, என் முகத்தைப் பார்த்தே என் மனசைப் படிக்குற என் அம்மாவும் அப்பாவும் உன் மேல வச்சிருக்கற அந்தப் புனிதமான நம்பிக்கைக்கு என்னால துரோகம் பண்ண முடியாது.”
“இந்த விர்ச்சுவல் வாழ்க்கையோட தாக்கம் என் நிஜ வாழ்க்கையை, என் நிம்மதியை, என் சுயத்தை அடியோடு சிதைச்சுடும். இத்தோட… இந்த விநாடியோட இந்த நாடகத்தை, இந்த வேஷத்தை நான் நிரந்தரமா நிறுத்திக்கணும்!’ என்று தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மிகவும் உறுதியாக ஒரு முடிவெடுத்தாள்.
ஆனால், அறிவு சாட்டையைச் சுழற்றி எடுத்த அந்தத் தீர்க்கமான முடிவை ஏற்க, அவளது காதல் வயப்பட்ட பேதை இதயம் அடியோடு மறுத்துக்கொண்டு உள்ளே ரத்தக் கண்ணீர் வடித்து மன்றாடிக் கொண்டிருந்த்தாது.
இரவு பத்து மணி… வழக்கமாக அவள் தன் அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு, விஷ்வா என்னும் மாய உலகத்திற்குள் லாகின் செய்யும் அந்த மாயாஜால நேரம் நெருங்க நெருங்க, அவளது இதயம் அவளது கட்டுப்பாட்டை மீறி விஷ்வாவிற்காகக் கதறத் தொடங்கியது.
நெஞ்சு கூடு கிழிந்துவிடுவது போன்ற ஒரு தவிப்பு அவளை ஆக்கிரமித்தது. “வேண்டாம் நிலா… லாகின் செய்யாதே, அந்தப் பாழாய்ப்போன ஹெட்பேண்டை தொடாதே” என்று அவளது புத்தி ஆக்ரோஷமாகத் தடுக்க…
“ஒரே ஒரு முறை… அவர்கிட்ட சொல்லிட்டு வந்துடலாம். ஒரு கடைசி வார்த்தை, ஒரு கடைசி பார்வை பார்த்துட்டு எந்த உலகத்தை விட்டே வந்துடலாம்’ என்று அவளது இதயம் மண்டியிட்டுக் கெஞ்சியது.
அறிவிற்கும் உணர்வுக்கும் நடுவே நடந்த அந்தப் பயங்கரமான போரில், நிலா தன் அறைக்குள் பித்துப்பிடித்தவள் போலத் தவித்து நிலா நிலைதடுமாறி நின்றிருந்த அந்த விநாடியில், மேஜை மீது கிடந்த அவளது மொபைல் போன் ‘டிங்’ என்று மெலிதாக அதிர்ந்தது.
ஐஸ்லாந்தின் உறைபனிக் குளிரின் நடுவிலிருந்து, நிலா உண்மை என்று உணராத, அவளது கற்பனைக்கும் எட்டாத, அவளது ஆதர்ச நாயகன் விஷ்வா தன் ‘சோல்மேட்’ செயலியை ஆன் செய்து, அவளுக்காக மெய்நிகர் உலகிற்குள் லாகின் செய்துவிட்டான் என்பதற்கான அந்த நோட்டிபிகேஷன் சத்தம், இருண்ட அந்த அறைக்குள் இடியைப் போல ஒலித்தது.
செயலியில் இருந்து வந்ததாக நிலா நம்பிய அந்த ஒரு சிறிய சலனம், நிலா அதுவரை ஒட்டுமொத்த எதார்த்த புத்தியையும் திரட்டித் தனக்குள் கட்டியெழுப்பியிருந்த அத்தனை கட்டுப்பாட்டுச் சுவர்களையும் ஒரே அடியாக இடித்துத் தவிடுபொடியாக்கியது. காதலின் அதீத தவிப்பில் விளக்கை நோக்கிப் பாயும் விட்டிலைப் போல, முற்றிலும் ஒரு தன்னிச்சையான, கட்டுப்படுத்த முடியாத தூண்டுதலில் நிலா பாய்ந்து சென்று, நடுங்கும் கரங்களால் அந்த நியூரல் ஹெட்பேண்டைக் கையில் எடுத்தவள், தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்ளும் இறுதி முயற்சியாக,
“கடைசியாக ஒரே ஒரு முறை… இனிமேல் நான் வரமாட்டேன் என்று அவரிடம் நேருக்கு நேராகச் சொல்லிவிட்டு, இந்த நாடகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நிரந்தரமாக விலகிவிடலாம்” என்று தன் உணர்வுகளுக்கு ஒரு முடிவை வழங்கிவிடும் தவிப்போடும், விஷ்வாவை ஒருமுறை பார்த்தே தீர வேண்டும் என்ற தீராத வேட்கையோடும் அதைத் தன் நெற்றியில் மாட்டிக்கொண்டாள். அடுத்த விநாடி, அவளது உணர்வுகள் அலை அலையாகப் பாய்ந்து அந்த மெய்நிகர் உலகிற்குள் அவளை இழுத்துச் சென்றன.
கண்கள் திறந்தபோது, சென்னை அறையின் இருள் மறைந்து, ஐஸ்லாந்தின் பனி படர்ந்த விர்ச்சுவல் மலைச் சூழல் அவளைச் சூழ்ந்தது. காற்றில் பனியின் குளிர்ச்சியும், விஷ்வாவின் காத்திருப்பின் கனமும் கலந்திருந்தன.
அங்கே, நிலா தன் கண்முன் தோன்றிய அடுத்த விநாடியே, பனிப்புயலையும் பொருட்படுத்தாமல் விஷ்வா அவளை நோக்கி ஓடிவந்தான். அவளது மெலிதான கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான். அவனது கண்கள் சிவந்திருக்க, முகம் முழுக்க ஏமாற்றத்திலும், சொல்ல முடியாத தவிப்பிலும் அப்படியே வாடிப் போயிருந்தது. இந்தியாவின் மாபெரும் சூப்பர் ஸ்டார், ஒரு சாமானியக் காதலனைப் போல அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு நடுங்கினான்.
“நிலா! வந்துட்டியா? உனக்காக நான் எவ்வளவு நேரம், எத்தனை மணிக்கணக்கா இங்க தனியா காத்துக்கிட்டு இருக்கேன் தெரியுமா? உன்னைப் பார்க்கம இருந்த அந்த ஒவ்வொரு செகண்டும் எனக்கு நரகத்தை விடக் கொடுமையா இருந்தது நிலா! நீ என்னை விட்டுட்டுப் போயிட்டியோன்னு நினைச்சு என் உயிரே போயிடுச்சு…” என்று உடைந்த குரலில் தன் தவிப்பைச் சொன்ன விஷ்வா, தன் இரு கரங்களாலும் நிலாவின் முகத்தை ஆராதனையோடு ஏந்திக் கொண்டான். அவனது கைகளின் வெதுவெதுப்பும், அவனது கண்களில் தெரிந்த அந்த உண்மையான காதலின் தவிப்பும், விடைபெற்றுப் போக வந்த நிலாவின் நெஞ்சை அடியோடு உலுக்கியது.
நிலா தன் முகத்தை ஏந்தியிருந்த விஷ்வாவின் கரங்களை மெதுவாக, ஆனால் மிகவும் தீர்க்கமாக விலக்கினாள். அவளது செய்கையில் இருந்த அந்த அந்நியத்தன்மை விஷ்வாவைச் சுட்டது. அவளது அழகிய கண்களில் கண்ணீர் திரண்டு, குளமாய்த் ததும்பி நின்றது.
“விஷ்வா… ப்ளீஸ், நான் சொல்றதைக் கொஞ்சம் தயவுசெஞ்சு கேளுங்க. நாம இங்க இப்படி மீட் பண்றது, பேசுறது, பழகுறது எல்லாமே ஒரு அப்பட்டமான, அக்மார்க் பொய் விஷ்வா! இது வெறும் சயின்ஸ் பண்ற மாயாஜாலம்… கானல் நீர்! இங்க நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து உருகி உணர்ற இந்த உணர்ச்சிகள், இந்தக் காதல், இந்தத் தீராத ஏக்கம் எல்லாமே ஒரு சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர்ல கிரியேட் பண்ணின ஒரு கட்டுக்கதை. நிஜத்துல இல்லாத ஒன்றை இருக்கிறதா நம்பி, நாம ரெண்டு பேரும் ஒரு பெரிய்ய பொய்யை நிஜம்னு நெனச்சு நம்மள நாமே ஏமாத்திக்கிட்டு இருக்கோம்!” என்று நிலா தன் நெஞ்சை அடைத்த அழுகையை மீறி, வெடித்த குரலில் கத்தினாள்.
விஷ்வா மின்னல் தாக்கியது போல அதிர்ந்து ஒரு அடி பின்னால் நகர்ந்தான். அவனது கண்கள் இமைக்காமல் அவளையே பார்த்தன. “என்ன பேசுற நிலா நீ? என் காதல் பொய்யா? நீ என் பக்கத்துல இருக்குறப்போ, என்னோட கை கோர்த்து நடக்குறப்போ, என்னோட பசியறிஞ்சு எனக்கு சாப்பாடு குடுத்தப்போ என் நெஞ்சுக்குள்ள அடிச்சுக்கிட்ட இந்த இதயத் துடிப்பு பொய்யா? எனக்காக உன் கண்ணுல வர்ற இந்தக் கண்ணீர் பொய்யா நிலா?” என்று துடித்தான்.
“ஆமா விஷ்வா, இது பொய்தான்! இந்த டெக்னாலஜி நாடகம் இனிமேலும் ஒரு செகண்ட் கூடத் தொடரக் கூடாது. இது நமக்கும் நல்லது இல்லை, நம்மள சுத்தி இருக்குற நிஜ மனிதர்களுக்கும் நல்லது இல்லை.”
“என் அம்மாவும் அப்பாவும் என் மேல உயிரையே வச்சிருக்காங்க. அவங்க கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டு வளர்ந்த பொண்ணு நான். எங்கோ இருக்குற ஒரு விர்ச்சுவல் பிம்பத்துக்காக, வெறும் சாஃப்ட்வேர் இமேஜுக்காக அவங்க என் மேல வச்சிருக்கற அந்த நம்பிக்கையை என்னால உடைக்க முடியாது விஷ்வா. நாம இப்போவே, இந்த விநாடியே இந்த பொய் நாடகத்தை அடியோட நிறுத்திக்கணும்!” என்று நிலா பிடிவாதமாகத் தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் தன் கைகளால் துடைத்துக் கொண்டாள்.
“நிலா! பைத்தியம் மாதிரி ஏதேதோ பேசாதே!” என்று விஷ்வா ஆக்ரோஷமும் தவிப்பும் தாங்காமல் பாய்ந்து வந்து அவளது இரு தோள்களையும் பற்றி உலுக்கினான். அவனது அத்தனை கம்பீரமும் சரிந்து, குரல் நடுக்கத்தில் சுக்குநூறாக உடைந்திருந்தது.
“என் நிஜ வாழ்க்கையில நான் பார்த்த அத்தனை மனிதர்களும் போலியானவங்க நிலா, அவங்க என் மேல காட்டுன அன்பு, பாசம் எல்லாமே என் பணத்துக்காகவும் புகழுக்காகவும் நடிச்ச போலி வேஷம்! ஆனா, இந்த விர்ச்சுவல் உலகத்துல நீ என் வாழ்க்கைக்குள்ள வந்த அப்புறம்தான் என் பல வருஷ காலத் தனிமை மறைஞ்சது. நரகமா இருந்த என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே கிடைச்சது நிலா. நீ இல்லாம… உன்னோட இந்த அருகாமை இல்லாம இனி ஒரு வாழ்க்கையை இந்த விஸ்வநாத்தால நினைச்சுக்கூட பார்க்க முடியாது. ப்ளீஸ்… இப்படியெல்லாம் பேசாத, என்னை விட்டுப் போயிடாதே நிலா!” என்று கோடிக்கணக்கான ரசிகர்களால் ஆராதிக்கப்படும் அந்த மாபெரும் சூப்பர் ஸ்டார், ஒரு அநாதைக் குழந்தையைப் போல அவளது கைகளைப் பிடித்துக் கெஞ்சினான்.
விஷ்வாவின் அந்தத் தீனமான தவிப்பைக் கண்ட நிலாவின் இதயம் அப்படியே சுக்குநூறாக உடைந்து சிதறியது. மெய்நிகர் உலகமாகவே இருந்தாலும் நிலா உயிர் போல் நேசித்தவனின் இந்த நிலையை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவளது அகம் அவனோடு அங்கேயே தங்கிவிடத் துடித்தது. ஆனால், அவளது அறிவு எதார்த்த விதிகளையும், பெற்றோரின் முகத்தையும் காட்டி அவளை எச்சரித்துக் கொண்டே இருந்தது.
“ஸாரி விஷ்வா… என்ன மன்னிச்சிருங்க. இதுதான் நம்மளோட கடைசி சந்திப்பு,” என்று விம்மியவள், விஷ்வா அவளைத் தடுத்து நிறுத்த முயலும் முன்பே, அவனது மார்பில் பாய்ந்து அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். அவளது கண்கள் வடித்த கண்ணீர் விஷ்வாவின் தோள்களை நனைத்தது.
அடுத்த கணமே விலகியவள், அவனது முகத்தை ஏந்தி, விஷ்வாவின் இதழ்களில் தன் இறுதி விடைபெறல் முத்தத்தை அழுத்தினாள். அந்த முத்தத்தில் அவளது தீராத காதலும், பிரிய மனமில்லாத பிரிவின் துயரமும், நிஜ உலக எதார்த்தத்தின் அசாத்திய வலியும் ஒன்றாகக் கலந்திருந்தது.
அவளது இதழ்களின் ஈரம் அவனுள் இறங்கிய அடுத்த விநாடி, விஷ்வா திடுக்கிட்டு அவளைப் பற்றித் தடுத்து நிறுத்த கைகளை நீட்டுவதற்குள், நிலா தன் நிஜ உலக அறைக்குள் இருந்தபடியே தன் நெற்றியில் இருந்த அந்த நியூரல் ஹெட்பேண்டைக் கழற்றித் தரையில் எறிந்தாள். நிலாவின் விர்ச்சுவல் உலகம் அப்படியே கணப் பொழுதில் இருண்டு மறைய, விஷ்வாவின் உலகிலிருந்து நிலாவின் அலைவரிசை நிரந்தரமாக மறைந்துபோனது!
error: Content is protected !!