Skip to content
Post Views: 144
காலம் மாறுவதை யாராலும் தடுத்து நிறுத்தவே முடியாது. முன்னேற்றங்கள் தடுக்க கூடாதவை. அப்படி தடுக்க முயன்றால் தோல்வி நமக்கு தான். காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்பவனுக்கு வாழ்வது சுலபம் ஆகிறது. எனது நண்பர் ஒருவர் சொல்லுவார்,”சுபா, பிசினெஸ் செய்யும் பொழுது அடிகளை கவனமா எடுத்து வைக்கணும்.அப்போ,பிசினெஸ் தன்னை தானே வளர்த்துக்கும்.நாம அதுக்கு சப்போர்ட் பண்ணணுமே தவிர அதோட வளர்ச்சியை நிறுத்த முயற்சிக்கவே கூடாது.அது நம்மையே திருப்பி அடிக்கும் “என்று.
உண்மையில் தொழில் நடத்துவது பற்றியெல்லாம் எனக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்வி ஞானம் மட்டுமே உண்டு. அது சரி, காலம் மாறுவது பற்றி சொல்லிக் கொண்டு இருந்தேனே!
1990களின் ஆரம்பத்தில் நிறைய வீடுகளில் தொலைக்காட்சி ஆக்கிரமிப்பு செய்து கொண்டு விட்டது வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பெரும்பாலான பெண்கள் தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்துவிடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள் காலை நேரத்தின் பரபரப்பு,அதன் பிறகான ஓய்வு நேரம் தான் டி வி தொடர்கள் என்று இருந்தது. சிலபேர் வீட்டில் மட்டுமே வண்ணத்தொலைக்காட்சி இருந்தது. இவ்வளவு வருஷங்கள் கழித்து 1996ல் இப்போது கிருஷ்ணனின் வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டி குடியேறி இருந்தது. ஜானகியும் இப்போது கொடைக்கானல் சென்று விட்டாள் .வீட்டின் பொருளாதாரம் முன்புபோல் இல்லை. கொஞ்சம் நன்றாகவே பணம் வர ஆரம்பித்திருந்தது.
கிருஷ்ணனின் பெற்றவர்களுக்கான வீடு இப்போது அவருக்கு வந்ததில் அதை வாடகைக்கு விட்டார் கிருஷ்ணன். அதன் மூலம் வரும் பணத்தை ஜானகியின் கல்வி மற்றும் ஹாஸ்டல் கட்டணம் கட்டுவதற்கு என்று எடுத்துவைத்தார்,].திடீரென்று வந்த கணுக்கால் வலியின் காரணமாக வேலையை விட்டுவிட்டாள் . அவளால் வெகுநேரம் நிற்க முடிவது இல்லை.பள்ளியில் கூட சொல்லிப் பார்த்தார்கள் ,” மிசஸ் ராதா.,வேலைக்கு கொஞ்சநாள் லீவு வேணுன்னா எடுத்துக்கோங்க. இதுக்காக வேலையை விட வேணாமே!.உங்களுக்கு டீச்சிங் முடியலைன்னா ,அட்மின் பக்கமா வந்திருங்களேன்.வேகன்சி இருக்கு.”என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ராதாவுக்கு கொஞ்சம் வீட்டில் இருக்க வேண்டும் போல இருந்தது.
Advertisement
அவள் பொழுது போகத்தான் தொலைக்காட்சி.
சீதா வழக்கம்போல பள்ளிக்கூடம் சென்று வருகிறாள்.நன்றாக படிப்பவன் ஆதலால் அவளை சிபிஎஸ்சியில் சேர்க்கவேண்டும் என்று ராதா பிடித்த பிடிவாதத்தில் கிருஷ்னன் ஒப்புக்கொண்டு சேர்த்து விட்டார்.வேறு வழி?இன்னொரு முக்கிய விஷயம் தங்களது அண்ணனின் மக்கள் இருவரும் கேந்திரிய வித்யாலயாவில் படித்தவர்கள். அதனால் அவர்களுக்கு வெளி மாநிலங்களுக்கு செல்வதில்,அங்கே சென்று படிப்பதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை.
கிருஷ்ணன் சொல்லிப் பார்த்துவிட்டு அலுத்துப் போனார்.”ஸ்டேட் போர்டுல படிச்சாலும், சென்ட்ரல் போர்டுல படிச்சாலும் நல்லா படிக்குற பசங்க முன்னுக்கு வந்துருவாங்க. இங்கே அறிவுதான் முக்கியம்” .அவர் சொன்ன எந்த விஷயத்தையும் ராதா கேட்பதாக இல்லை. சீதாவின் பள்ளி அவர்கள் வீட்டிலிருந்து ஒன்னரை கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கிறது.காலையில் வேலைக்கு செல்லும் பொழுது கிருஷ்னனும்,மாலையில் மட்டும் ஆட்டோவும் அவளை பள்ளிக்கு அழைத்து சென்று அழைத்து வரும் வேலையை செய்யவேண்டும்.
Advertisement
கிருஷ்ணன் வெளியூருகளுக்கு செல்லும் பொழுது இரண்டு பொழுதுகளிலும் ஆட்டோ வந்துவிடும்.
Advertisement
பதினேழு வயது முடிந்து பதினெட்டு வயதுக்குள் அடியெடுத்து வைத்திருந்தாள் ஜானகி.விடுமுறை எடுத்துக் கொண்டு பிறந்தநாளுக்கு சென்னை வந்துவிடும்படி ராதா எவ்வளவு சொல்லியும் மறுத்துவிட்டாள் பெண்.”நா இங்கே தோழிகளுடன் இருந்துக்கறேன்.அங்கே வந்து..ப்ச் ..இன்டெரெஸ்ட் இல்ல. விடுங்களேன்.முடிஞ்சா பொங்கல் அஞ்சு நாள் லீவுக்கு வரேன்”என்று வைத்துவிட்டாள் .பெண்ணின் நடவடிக்கைகள் பெற்றவர்களுக்கு கவலைதான். ஆனால் ஜானகி பற்றி தெரியும் என்பதால் அவர்கள் அமைதியாக இருந்து விட்டார்கள். ஹாஸ்டலில் வாரம் ஒருமுறைதான் வீட்டுக்கு பேசுவதற்கு அனுமதி. ஆரம்பத்தில் அத்தை சுதா வீட்டுக்கு அழைத்து அவர்களிடம் பேசிவிட்டு பிறகு பெற்றவரிடம் பேசுவாள் ஜானகி,
சமீப காலங்களில் அவளுக்கு அது சலிப்பை ஏற்படுத்தி இருந்தது. ஒன்று என்னதான் அத்தை வீடு என்றாலும் ,அங்கே இருப்பவர்கள் சொந்த அத்தையும் மாமனும் என்றாலும்.குறிப்பிட்ட வயது வரும் பொழுது ஏற்படும் சிறு விலகல்,அந்த சின்னப்ப பெண்ணுக்கு புரியவைக்கும் அளவுக்கு அவள் வீட்டில் யாரும் இல்லை. ஏன் என்றால் இதையெல்லாம் பெரியதாக எடுத்துக் கொண்டு, ,அதற்காக பெண்ணிடம் பேசி’என்பது எல்லாம் கருத்தில் எடுத்துக்கொள்ளப் படாத விஷயங்கள். டீன் ஏஜில் வரும் உடல்,மனம் சார்ந்த மாற்றங்கள். அவள் வீட்டிலிருந்து தனியாக இருப்பதால் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இன்னொரு பெரிய பிரச்சனை,ஹாஸ்டலில் குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே பேசுவதற்கு அனுமதி உண்டு.இவள் அத்தைக்கு ,மாமாவுக்கு என்று பேசிவிட்டு பெற்றவர்களிடம் பேசவாரம்பிக்கும் பொழுதே இவளுக்க்ங்க ஒதுக்கப் பட்ட நேரம் முடிந்தது என்பார் வார்டன்.இவள் பின்னாலேயே அடுத்ததாக பேசவென இவளது தோழி யாராவது நின்று கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் யாரிடம் சொல்ல முடியும் என்று பேசாமல் இருந்துவிட்டாள் ஜானகி.
Advertisement
பொங்கல் விடுமுறைக்கு என்று ஒருவார காலம் ஹாஸ்டெல் மூடிவிட்டார்கள்.அங்கே இருப்பவர்கள் எல்லோருமே அவரவர் வீட்டுக்கு சென்றுவிட , வேறு வழி இல்லாமல் ஒரு பிடிக்காத விஷயத்தை செய்யும் மனநிலையுடன் வீடு வந்து சேர்ந்தாள் ஜானகி. அந்த வீடே அவளுக்கு அந்நியமாக தோன்றியது விந்தை தான்.
சீதாவுடனாவது முன்பெல்லாம் விளையாடுவதும்,சண்டை பிடிப்பதுமாக இருப்பாள்.இப்போது..சுத்தம்! சீதா தானாக அக்காவிடம் பேசலாம் என்று வந்தாலும் கூட கேட்ட கேள்விக்கு பதில் .அதற்கு மேல் பேசியது இல்லை. எப்போதுமே அவள் அப்படிதான் என்று விட்டுவிட்டார்கள்.
இப்போது இருக்கும் அளவுக்கு பெற்றவர்களுக்கு அப்போது ஒருவேளை இதெல்லாம் பெரியவிஷயங்களாக தெரியாமல் இருந்திருக்கலாம். பொங்கல் விடுமுறையின் கடைசி நாளன்று தமது மூத்த மகளை மட்டும் அழைத்துக் கொண்டு வெஸ்ட் மாம்பலத்தில் இருக்கும் கோதண்ட ராமர் கோவிலுக்கு சென்றார் கிருஷ்ணன். அவள் ஏதாவது தன்னிடம் தனிமையில் பேச வேண்டியது இருக்குமோ என்ற எண்ணம்.ஜானகி எப்போதுமே தனது அப்பாவிடம் இருக்கும் அளவுக்கு கூட அம்மாவிடம் நெருக்கம் காட்டியது கிடையாது என்பதை கிருஷ்ணன் நன்றாகவே அறிவார். அவளாக எதுவும் பேசுவதாக இல்லை என்பதை திரும்ப வீட்டுக்கு வரும் வரை அமைதியாக இருந்ததில் கண்டுகொண்டவர்,”ஏண்டா ஜானு,அப்பாகிட்டே பேச, சொல்லன்னு உனக்கு எதுவும் இல்லையா… ஏதாவது தேவை … வாங்க வேண்டியது அப்படி இருந்தா நாம இப்படியே ரங்கநாதன் தெருவுக்குள்ள நுழைஞ்சிரலாம்” என்றுவிட்டார்.
ஒரு நொடி அமைதிக்குப் பிறகு,”நம்ம வீட்டுல ஒரு டெலிபோன் வாங்கிட முடியாதாப்பா…எப்போவும் அத்தை வீட்டுக்கு போன் செய்யுறது சங்கடமா ,ஒரு மாதிரி இருக்கு.ஹாஸ்டெல்லயும் வெயிட் பண்ண மாட்டேங்குறாங்க.”என்றுவிட்டாள் மெல்லிய குரலில்.சமீப காலங்களின் பெண் அதிகமாக அழைத்து பேசாததின் காரணம் புரிந்தது.
“சாரிடா கண்ணா..அப்பா இதை யோசிக்கல.நா சீக்கிரமாவே டெலிபோன் வாங்கிடறேன்” என்று முடித்துக் கொண்டார். அதற்குப் பிறகு ஜானகி அவரிடம் வேறு எதுவும் கேட்கவில்லை. கல்லூரி செல்லும் பெண் என்று கிருஷ்ணனே மகளை அழைத்துக்கொண்டு ரங்கநாதன் தெருவுக்குள் நுழைந்தார்.
“உனக்கு தேவையான சுரிதார் மெடீரில் எடுத்துக்கோ ஜானு.இப்படியே தச்சிகிட்டு போயிரலாம்.தையக்கூலி கம்மி”என்று ராதாவும்,சீதாவும் சொன்னதை வைத்து ஜானகியிடம் சொன்ன தகப்பனை குறுகுறுப்பாக பார்த்த மகளோ,”அம்மா உங்கள நல்லாவே ட்ரெயின் பண்ணியிருக்காங்க.நீங்கதான் மிஸ் பண்ணிடீங்க”என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு துணிகளை தெரிவு செய்ய கடைக்குள் நுழைந்து விட்டாள் .ஆறு செட் துணி எடுத்து ரங்கநாதன் தெருவில் பிரசித்தியான ஒரு மணி நேர தையல் கடை ஒன்றில் துணியை கொடுத்துவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள்.
‘என்ன’ என்று மகளிடம் கேட்டு விடலாம் என்று நினைத்தவர் அதை மாற்றியும் கொண்டார்.இவ்வளவு வருஷங்களாக கிருஷ்னனின் வண்டி இப்படித்தான் ஓடிக் கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
இருவருமாக பதினைந்து ரூபாய் கோன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டார்கள். வீட்டுக்கு பூ வாங்கினார்கள்.இவளுக்கான மேட்சிங் கிளிப்,தோடு என்று பார்த்து பார்த்து வாங்கி கொடுத்தார் கிருஷ்ணன். துணிகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவுடன் ,அவரின் தோளில் சாய்ந்து விட்டாள் மகள்.லேசாக அவளது கண்கள் கலங்கி இருந்தது போல கிருஷ்ணனுக்கு தோன்றியது,”என்னடா ஜானு.உடம்புக்கு ஏதாச்சும் செய்யுதா..கால் வலிக்குதா ..என்ன செய்யுதுன்னு சொன்னாத்தானே தெரியும்?ஆட்டோ பிடிக்கவா? “என்று கேள்விகளை ஏந்தி நின்றவரிடம் மகள் சொன்னது,”இப்படியே இருக்காதீங்கப்பா ..இந்த காலத்துல தலைல மிளகாய் அரைச்சு அனுப்பிருவாங்க”என்றுதான். இப்போது உறைந்து நிற்பது பெற்றவரின் முறை ஆனது.இவள் எதை சொல்கிறாள்!என்று இருந்தது அவருக்கு.
வீட்டினரிடமும், சொந்தங்களிடமும் ஜானகி அமைதியாக இருக்கிறாள் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம்.அவள் நல்ல கலகலப்பான பெண்தான்.தனக்கு ஒத்துப் போகும் வட்டத்திடம் மட்டும்.அதுபற்றி கூட வீட்டினருக்கு தெரிந்திருக்குமா என்று தெரியாது. கொடைக்கானல் திரும்பவும் வந்தவளுக்கு அப்போதுதான் முழுதாக மூச்சு எடுக்கவே முடிந்தது. ஞாயிற்றுக் கிழமை காலையிலே கிளம்பிவிட்டாள்.பொழுதோடு ஹாஸ்டலுக்குள் சென்றுவிடுவதுதான் பாதுகாப்பு என்று அவளது வீட்டிலும் சரி என்று விட்டார்கள். ஆறு மணிநேர மதுரை பிரயாணம். அங்கிருந்து இரண்டு மணிநேர பிரயாணத்தில் கொடைக்கானல். ஹாஸ்டலுக்குள் நுழையும் பொழுது மணி ஏழே முக்கால் ஆகிவிட்டது .இதோ எட்டு மணிக்கு மேலே ஆனால் உள்ளே நுழைய விட மாட்டார்கள்.
அன்றைய இரவு ஹாஸ்டலில் தரும் உணவை சாப்பிட்டுவிட்டு தன்னை போலவே லீவுக்கு சென்று விட்டு வந்த தோழிகளுடன் பேசிக்கொண்டே உறங்கியும் போனாள் ஜானகி.அவளுக்கென்று ஒரு நட்பு வட்டம் உருவாகி இருந்தது. உறக்கத்தில் அவளும் அப்பாவும் ரங்கநாதன் தெருவில் சுற்றியது வந்தது.
மறுநாளில் இருந்து அவளது வழக்கமான கல்லூரி நாட்கள் ஆரம்பமானது. தோழிகளுடன் விடுமுறை நாட்களில் கொடைக்கானலை சுற்றுவது, மதுரை சென்று மீனாட்சி அம்மன் கோவில்,அழகர்கோவில் ,ஸ்ரீவில்லிபுத்தூர் என்று சுற்றினாள் .மதுரை ஜிகிர்தண்டா அவளுக்கு பிடித்தமான ஒன்று.
சென்னையில் சீதா பத்தாம் வகுப்பிலும்,பெரியவள் ஜானகி இரண்டாம் ஆண்டு நியூட்ரிஷன் படிப்பிலும் படித்துக் கொண்டிருக்க, ஜானகிக்கு இப்போதே திருமணம் செய்து வைக்க வரன் தேடவேண்டும் அப்போதுதான் நல்ல இடமாக தகையும் என்று ராதா வீட்டில் ஒரே கரைசல். கிருஷ்ணனுக்கு விருப்பமே இல்லை.
“காலம் மாறுது ராதா.அவ முதல்ல ஒரு டிகிரி வாங்கட்டும் .பிறகு தேடலாம்” என்று வாதிட்டார். கணவர் சொல்லுவதை கேட்கும் நிலையில் இல்லை.ராதா. “பொண்ணு வெளியூர் போயி படிக்க ஒத்துக்கிட்டிங்க. பேசாம இருந்தேன். பொண்ண பெத்த அக்கறை இருக்கா உங்களுக்கு? பொழுதோட கல்யாணத்தை முடிச்சு அனுப்புவோம். அங்கே போயி,பொங்கி போடறதும்,படிக்கிறதும் மாமியார் வீட்டு சொல்படி செய்யட்டும்”என்று விதவிதமாக நச்சரிக்க தொடங்க,வேறு வழி இல்லாமல் ஜானகியின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ராதாவும் கிருஷ்ணனும் ஜோசியரிடம் சென்றார்கள்.
அவளது ஜாதகத்தை பார்த்தவரோ ,”ரொம்ப நல்ல வளமான ஜாதகம். கல்யாணம் செஞ்சுக்கறவனை தூக்கி விடும். ஆனா,இன்னும் குருபலன் வரல.இப்போ பாக்குறது உங்கள சுத்தல்ல விடும். இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகட்டுமே அப்புறமா பாருங்களேன்” என்றுவிட்டார். எப்படியோ மகளுக்கு இன்னமும் திருமணம் செய்துகொள்ளும் வயது வரவில்லை. இப்போதைக்கு கல்யாணம் பற்றிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வந்தது என்று நிம்மதியுடன் வீடு வந்தார் கிருஷ்ணன். ஏற்கனவே அன்று மகள் பேசியதுவேறு மனதை அறுக்கிறது அவருக்கு.
aபத்தாம் வகுப்பில் ஐநூறுக்கு நானூற்றி எழுவது மதிப்பெண்கள் எடுத்திருந்தாள் சீதா. ராதாவுக்கு பெருமை தாங்கவில்லை. அவளை கையில் பிடிக்கவே முடியவில்லை. மகளைக் கொண்டாடி தீர்த்தாள். பதினொன்றாம் வகுப்பில் ‘காமர்ஸ் எடுத்துகொள்ளவா’ என்று கேட்ட மகளிடம் ,”இல்ல சீதா.இனிமே கம்பியூட்டர் யுகம் தான். நீ கம்ப்யுட்டர் சயன்ஸ் பிஸிக்ஸ் மேத்ஸ் எடுத்துக்கோ.அப்போதான் நல்லா பெரிய நிலைமைக்கு வரமுடியும்”என்று மனதை மாற்றினாள் ராதா. உண்மையில் சீதாவுக்கு அப்பாவால் முடிக்க முடியாமல் விட்ட சி ஏ வை தானாவது முடிக்கவேண்டும் என்றுதான் மனதில் இருந்தது.
அம்மாவின் வார்த்தைகளுக்காக தனது ஆசையை குப்பையில் போட்டுவிட்டு பதினோராம் வகுப்பில் சேர்த்தாள் சீதா. அவளுக்குத் தெரியவில்லை இதுதான் தொடக்கம் என்று.
ஜானகி எப்போதுமே அம்மாவிடம் அதிகம் ஒட்டியது இல்லை. சீதா அப்படி இல்லை.பெற்றவர்கள் மீது அவளுக்கு பாசம் அதிகம். ஜானகி வீட்டில் இல்லாத இந்த இரண்டு வருஷங்களில் தன்னை விட்டு பிரிந்து எங்கும் செல்லாமல் ‘அம்மா….அம்மா..’என்று தன் பின்னாலேயே சுற்றும் சீதா மீது பிள்ளை பாசத்தை கடந்த ஒரு பற்றுதல் ராதா கிருஷ்னன் இருவருக்குமே உண்டாகி இருந்தது. சீதாவும் அதிகமாக பேசமாட்டாள்தான்.ஆனால், வேலைகளை செய்யும் பாங்கும் ,நறுவிசும், செய்து முடிக்கும் விதமும் கண்டிப்பாக மற்றவர்களை ஈர்த்து விடும்.
பாட்டி தாத்தா அதாவது ராதாவின் பெற்றவர்களுக்கு என்பதாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை வெகு ஆர்பாட்டமாக ஏற்பாடு செய்திருந்தார் ராதாவின் அண்ணன் . அந்த விழாவில் சீதா எடுத்துக் கட்டிக்கொண்டு வேலைகள் செய்ய வந்த உறவினர்களின் மொத்த பார்வையும் சீதா மீதுதான். வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவளது பாட்டி அவளுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டார். ராதாவுக்கு பெருமை தாங்கவில்லை.
இதெல்லாம் சேர்த்து ஜானகிக்கு இன்னமும் மனம் அழுத்தம். எல்லோரும் தன்னைவிட நான்கு வருஷங்கள் சிறியவளான சீதாவை பற்றிப் பெருமையாக பேசுவது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.அதைவிட ராதா இருவருக்கும் தானே அம்மா. சீதாவிடம் அதிக பாசத்துடன் இருப்பதாகவும் தன்னை பற்றிக் கவலை படவில்லை என்றும் வருத்தம்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் இரண்டாவதாக தேறியிருந்தாள் சீதா. பத்திரிக்கைகளில் அவளது புகைப்படம் வெளியாகி இருந்தது. ஜானகி அதை பார்த்துவிட்டு பொதுவாக நகர்ந்து கொண்டாள் .தோழிகளிடம் கூட சீதா தனது தங்கைதான் என்று அவள் சொல்லிக் கொள்ளவில்லை. வீட்டுக்கு அழைத்து தங்கைக்கு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.சீதாவுக்கு அக்கா தனக்கு வாழ்த்து தெரிவிக்காதது வருத்தம் தான்.அதைத்தான் ராதாவும் சுற்றி இருப்பவர்களும் ஈடு கட்டுகிறார்களே !
கல்லூரி மூன்றாம் ஆண்டு தேர்வுகளை வெற்றிகரமாக தேறிய ஜானகி வேறு வழி இல்லாமல் சென்னை வந்து சேர்ந்தாள்.உண்மையில் அவளால் அங்கே இருக்கவே முடியவில்லை. அப்பாவிடம் சொல்லி மீண்டும் அதே கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்ந்தது அவளது அம்மா ராதாவுக்கு பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் மகள் தங்களை விட்டு தூரம் செல்வதை அவள் மனம் ஒப்புக் கொள்ளவில்லை.கிருஷ்ணன் எதற்காக ஒப்புக்கொண்டார் என்று அவளது கோவம் முழுவதும் கணவரின் மீதுதான் திரும்பியது.
அதேசமயம் சென்னையின் பிரபல கல்லூரியில் பொறியியல் கணினி பிரிவில் சீதாவுக்கு கிடைத்தது. அதிலும் மாநிலத்தின் இரண்டாவது இடத்தில் வந்துவிட்டதால் நான்கு வருட கல்வித் தொகையும் அரசு செலுத்திவிடும். பாடப்புத்தகங்களை கல்லூரி நிர்வாகம் இவளுக்கு இலவசமாகவே கொடுத்துவிட, கல்லூரியிலிருந்து வந்துசெல்லும் பேருந்து கட்டணம் மட்டும்தான் கிருஷ்ணன் கட்டினார் .
சீதா இப்போது நன்கு ஐந்தரையடிக்கு வளர்ந்திருந்தாள் . ஆனால் ஜானகியை விட உயரம் குறைவுதான்.ஜானகி ஆறடிக்கு ஒரு அங்குலம் மட்டும் கம்மி. மற்றபடிக்கு சீதா பேரழகியாக இருந்தாள் .கொடியிடை.நீண்ட முடி. கலகலப்பான பேச்சு என்று அசத்தல் தான். சீதாவை பார்த்த ரமணியே ஒரு முறை தனது மகனுக்கு கேட்கலாமா என்று யோசித்தாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சுதாவின் இரண்டு பிள்ளைகளும் மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட ,மாமியார் மாமனாரும் ஒருவர் பின் ஒருவராக பரமபதம் அடைந்தார்கள். காலம் வெகுவாக மாறிவிட்டிருந்தது. சுதாவின் பிள்ளைகள் சேர்ந்து ஒரு நிலத்தை வாங்கி மூன்று போஷன்களாக கட்டினார்கள். திருமணம் ஆனால் ஆளுக்கொரு போஷன்,பெற்றவர்களுக்கு ஒரு போஷன் .இதுதான் கணக்கீடு.வீடு கட்டி முடித்தவுடன், இருவருக்கும் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டாள் சுதா. இருவருமே நல்ல வேலையில் இருந்ததால் ஒரே வீட்டில் இருக்கும் அக்கா -தங்கையை பார்த்து முடித்தும் விட்டாள் . ஒரு மாத இடைவெளியில் திருமணம். திருமணம் முடிந்து புது மருமகள்கள் வந்த இரண்டு மாதங்களில் அவர்களையே மனையில் உட்கார செய்து கிரக பிரவேசம். சில நாட்களில் சுதாவின் குடும்பம் தங்களது புது வீட்டுக்கு சென்று விட்டார்கள்.
அவர்கள் இருந்த போஷனை வாடகைக்கு விட்டு, பெரியவர்களின் இரண்டு படுக்கையறை போஷனை விற்றும் விட்டார்கள். இப்போது அங்கே வேறு யாரோ தங்களுக்கு சம்மந்தமில்லாத இரண்டு குடும்பங்கள் இருப்பதை ராதாவால் ஜீரணிக்க முடியவில்லை.தனியாகப் இருப்பதான உணர்வு அவளை கவ்வியது.
கிருஷ்ணனுக்கு இப்போது வரும் சம்பளத்தில் புதியதாக வீடெல்லாம் வாங்க முடியாது. இரண்டு பெண்கள் வேறு திருமணத்திற்க்காக காத்து நிற்கிறார்கள்.அவர்களையும் பார்த்தாகவேண்டும். மனதில் அவளுக்கு சோர்வு நிரம்பியது.
error: Content is protected !!