Skip to content
Post Views: 643
அலமேலுவுக்கு நினைத்ததை சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ளம் துள்ளியது. ஆனாலும் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் சோர்வாக இருப்பது போல தலையை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திருப்பி மூச்சு விட சிரமப்படுவது போல காட்டிக் கொண்டார்.
“அலமு, வசி தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானே, டிரிட்மெண்ட் எடுத்துக்கோ, வசிக்கு அப்புறம் நமக்கு ரஞ்சனி இருக்கா, அவள பத்தி யோசிக்க மாட்டியா?” நடராஜன் பேசிக் கொண்டிருந்தார்.
Advertisement
“ஆமாம்மா, நானும் அப்பாவும் பேசி வசிய கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சுட்டோம். இனிமேலாச்சும் டிரிட்மென்ட் பண்ணிக்க மாட்டேன்னு அடம்பிடிக்காதம்மா, உனக்கு எதாச்சும் ஆனா என் நிலமைய பத்தி யோசிச்சியா?” என்று ரஞ்சனி கண்ணீர் விட்டாள்.
Advertisement
“என்னங்க, நவ்யாவோட அப்பா அம்மாகிட்ட நீங்களும் சரவணனனும் லதாவ கூட்டிட்டு போய் சம்மந்தம் பேசி தட்டை மாத்திடுங்க. அடுத்து வர்ற முத முகூர்த்தத்துல கல்யாணம் நடக்கணும்” என்றார் மூச்சு திணறலுடன்
Advertisement
“சரிம்மா, நாங்க இன்னைக்கே போறாம்” நடராஜன் ஆமோதித்தார்
Advertisement
வசீகரன் சுவரோரம் சாய்ந்து கைகளை கட்டிக் கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அலமேலு கையை நீட்டி, “வசி” என்று ஹீனஸ்வரத்தில் அழைக்க, பெருமூச்சுடன் அவரருகே சென்று அமர்ந்தான்.
“அம்மா, உனக்கு நல்லது தான் செய்வேன்டா. நவ்யா உனக்கு பொருத்தமா இருப்பா, நம்புடா”
“சரிம்மா, நீ சொல்றமாதிரியே ஏற்பாடு பண்ணு, நான் நீ காட்ற பொண்ணு கழுத்துல தாலி கட்றேன்”
“இது போதும் வசி, இப்போ தான் என் புள்ள எனக்கு திரும்ப கிடைச்ச மாதிரி இருக்கு” என்று அவன் தலையை கோதிவிட்டார்.
“இன்னும் எதுக்குமா வெயிட் பண்ணனும், அண்ணன் தான் சொல்லிட்டானே, டாக்டருக்கு போன் பண்றேன், இன்னைக்கே டிரிட்மெண்ட் ஆரம்பிக்கட்டும்” என்று ரஞ்சனி பரபரத்தாள்.
“ரஞ்சு, டாக்டருக்கு நானே போன் பண்ணிக்கிறேன், உனக்கு காலேஜ்க்கு நேரமாச்சுல்ல, நீ கிளம்பு” என்றாள் லதா
“என்ன அண்ணி பேசறீங்க? என் அம்மாவுக்கு ஆபரேஷன், அதுமட்டுமில்லாம நான் ஒரு மெடிக்கல் ஸ்டுடென்ட். டிரிட்மெண்ட் நடக்கும் போது நான் கூட இருக்க வேணாமா? காலேஜ்க்கு லீவு சொல்லிட்டா போச்சு”
“பொறுப்பில்லாம பேசாத ரஞ்சனி, மெடிக்கல்ல காலேஜ்ல சீட் கிடைக்கலனு அவங்கவங்க தவம் கிடக்கறாங்க. நான் என் அப்பாகிட்ட ரெகமண்ட் பண்ணி சீட் வாங்கி கொடுத்தா, காலேஜ்க்கு லீவு போட்டா போச்சுனு சர்வசாதரணமா சொல்றே? நான், உன் அப்பா, அண்ணன் எல்லாரும் இங்கே தானே இருக்கோம்? நாங்க பாத்துக்க மாட்டோமா? நீ காலேஜ்க்கு போய் படிக்கற வேலைய பாரு”
“நீங்க காலேஜ்க்கு சீட் வாங்கி கொடுத்ததால என் அம்மா ஆபரேஷனுக்கு கூட நான் பக்கத்துல இருக்க கூடாதா? இதென்ன அநியாயமா இருக்கு?”
“ரஞ்சி, அண்ணி சொல்றத கேளு, எதிர்த்து பேசாத” என்று அதட்டினான் வசீகரன்
“என்னடா நீ கூட அவங்கள மாதிரி பேசிட்டு இருக்கே? நான் மெடிக்கல் ஸ்டுடென்ட் பக்கத்துல இருந்து இதெல்லாம் பாத்தா எனக்கும் எக்ஸ்பிரீயன்ஸ் தானே? அதுமட்டுமில்லாம எந்த தப்பும் நடக்காம நான் பாத்துக்க மாட்டேனா?”
“நீ இங்கே இருந்தா கூட உன்னை ஆப்ரேஷன் தியேட்டர்க்குள்ள அனுமதிக்க மாட்டாங்க, அப்படித்தானே அண்ணி?” என்றான் வசீகரன்
“ஆமா, வசி சொல்றமாதிரி இந்த ஹாஸ்பிட்டல்ல ஸ்டுடென்ட் எல்லாம் உள்ள விடமாட்டாங்க. நீ இருக்கறது வேஸ்ட், கிளம்பு”
“டாக்டர் வரட்டும், நான் அவங்ககிட்ட கேக்கறேன், அலோவ் பண்ணலனா காலேஜ்க்கு கிளம்பறேன்” என்றாள் ரஞ்சனி விடாப்பிடியாக
“ரஞ்சனி, அண்ணி சொல்றாங்கனா அதுக்கு காரணம் இருக்கும். தேவையில்லாம பேச்சை வளர்க்காம கிளம்பு, நானே உன்னை காலேஜ்ல டிராப் பண்றேன்” என்றான் வசீகரன்
அவளோ முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று வெளியேறினாள். வசீகரன் லதாவிடம் திரும்பி, “அண்ணி, அம்மாவ பத்திரமா பாத்துக்கோங்க. ஆபரேஷன் முடிஞ்சதும் போன் பண்ணுங்க” என்று விட்டு தங்கையின் பின்னால் சென்றான்.
அவர்கள் இருவரும் சென்றதும் தான் அலமேலுவுக்கும் லதாவுக்கும் மூச்சே வந்தது. வாயு பிரச்சனையை நெஞ்சுவலி என்று பயந்து அலமேலு வீட்டிற்குள் ஆர்பாட்டம் செய்திருந்தார். அவர்கள் அட்மிட் செய்த மருத்துவமனை லதாவின் தந்தையுடையது. கொஞ்சநேரத்திலேயே மருத்துவர் லதாவை அழைத்து இது வாயு பிரச்சனை என்று சொல்லிவிட்டார். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை வைத்து லதா திட்டம் தீட்ட அதற்கு அலமேலுவும் உடன்பட்டார்.
நடக்காத ஆபரேஷனுக்கு மெடிக்கல் ஸ்டுடென்ட் ரஞ்சனியை பக்கத்தில் வைத்து கொண்டால் ஆகிற காரியமா என்ன? ஆண்களை பற்றி கவலை இல்லை, அவர்களை வெளியே காத்திருப்போர் அறையில் உட்கார சொல்லிவிடலாம். வசியும் எந்த கேள்வியும் கேட்காமல் இருந்தது இருவருக்கும் பெரும் நிம்மதியை தந்திருந்தது.
“லதா கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன்மா”
“கவலப்படாதீங்க அத்தே, வேற பேஷன்ட்க்கு இன்னைக்கு ஹார்ட் ஆபரேஷன் நடக்குது, அது உங்களுக்கு நடந்தமாதிரி ரிப்போர்ட் ரெடி பண்ண சொல்லியிருக்கேன். ரஞ்சனி வந்ததும் அதை காட்டி சமாளிச்சிடலாம்”
“சரிம்மா, நவ்யாவோட அம்மாவுக்கு போன் பண்ணியா?”
“சாயந்திரம் உங்கள பாக்க வரதா சொல்லியிருக்காங்க, அதுவரைக்கும் ஆபரேஷன் ரூம்ல கண்ண மூடிட்டு தூங்குங்க. நர்ஸ் உங்கள வார்டுக்கு கொண்டு வந்த பின்னாடி மெதுவா கண்ண திறந்து பொறுமையா பேசுங்க”
“சரிம்மா”
அன்று மாலை லதா சொன்னது போல அலமேலு நடந்துக் கொண்டார். நவ்யாவும் அவளுடைய பெற்றோரும் பூங்கொத்துடன் வந்தனர். மருத்துவமனையே அமைச்சரின் வருகையால் அல்லோகலப்பட்டது.
“உடம்பு எப்படியிருக்கு சம்மந்தியம்மா?”
“நல்லாயிருக்குங்க, நீங்க எவ்ளோ பெரிய ஆளு, என்னை பாக்கறதுக்காக வந்திருக்கீங்களே?”
“எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் பொண்ணுக்கு அப்பனாச்சேம்மா சம்மந்திய பாக்க வரலனா எப்படி? லதாகிட்டயும் உங்க மகன் சரவணன்கிட்டயும் தாம்பூலம் மாத்திக்கிட்டோம். அடுத்த மாசம் எலக்ஷன் வருது. பத்து நாள்ல கல்யாணத்தை வச்சுக்கிட்டா எனக்கு வசதியா இருக்கும், அதுக்கப்புறம் நான் பிசியாயிடுவேன். ஆனா நீங்க இந்த நிலைமையில இருக்கறப்போ எப்படினு தான் யோசிக்கறேன்” என்று அமைச்சர் பொன்னுரங்கம் பேசவும் அலமேலுவுக்கு பெருமையாக இருந்தது
“ஐயோ நான் நல்லாதான் இருக்கேன்” என்ற அலமேலுவிடம் லதா கண்ஜாடை காட்டவும், “என் மகனுக்கும் உங்க பொண்ணு நவ்யாவுக்கும் கல்யாணம் நிச்சயமாயிடுச்சுல்ல, இனி நான் நல்லா தான் இருப்பேன். ஒரு வாரத்துல எழுந்து நடமாட தொடங்கிடுவேன். நீங்க கல்யாண வேலைய ஆரம்பிங்க சம்மந்தி. நானும் என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லி அடுத்த முகூர்த்ததுலயே கல்யாணம் நடத்தறதுக்கு எல்லா ஏற்பாடையும் செய்ய சொல்றேன்.
“நல்லதுமா, உடம்ப பாத்துக்கோங்க., நான் கிளம்பறேன். மஞ்சுளாவும் நவ்யாவும் கொஞ்ச நேரம் உங்க கூட இருப்பாங்க” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.
“லதா நீ நவ்யாவ கூட்டிட்டு போய் கல்யாணத்துக்கும் ரிசப்ஷனுக்கும் புடவை நகைனு எடுத்து கொடும்மா, உன் மாமாகிட்ட பத்திரிக்கை அடிக்க சொல்லிடு, சரவணன்கிட்ட மண்டபம் சாப்பாடு இதெல்லாம் ஏற்பாடு பண்ண சொல்லிடு” என்று அலமேலு அடுக்கடுக்காக கட்டளைகளை பிறப்பித்து கொண்டிருந்தார்.
“அத்தே, ஆபரேஷன் முடிஞ்சு வந்திருக்கீங்க, நிறைய பேச வேணாம். நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றாள் லதா நாசூக்காக
“அவருக்கு எலக்ஷன் டென்சன். அதனால தான் சீக்கிரம் கல்யாணம் வைக்க சொல்றோம், தப்பா எடுத்துக்காதீங்க” என்றார் மஞ்சுளா
“பரவால்ல சம்மந்தி, நவ்யா லதாகிட்ட வசியோட போன் நம்பர் வாங்கி பேசுமா, நான் தூங்கறேன்” என்று அலமேலு சொல்ல, “சரிங்க ஆன்ட்டி, நான் வசிகிட்ட பேசிக்கறேன், நீங்க ரெஸ்ட் எடுங்க” என்ற நவ்யா லதாவிடம் கைப்பேசி எண்ணை வாங்கி அப்போதே வசீகரனுக்கு போன் செய்தாள்.
“வசி, ஐயம் நவ்யா. இப்போ எங்கே இருக்கீங்க? மீட் பண்ண முடியுமா?”
“ஹாய் நவ்யா? நான் பிரெண்ட் கூட பேட்மிட்டன் விளையாடிட்டு இருக்கேன், உங்களுக்கு ஓகேனா இங்கேயே வாங்களேன் லொகேஷன் ஷேர் பண்றேன்”
“ஓகே வசி, உடனே கிளம்பி வரேன்” என்றவள் அங்கிருந்த மற்றவர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
சிறிது நேரம் மஞ்சுளாவும் பேசிவிட்டு கிளம்பியதும், அலமேலு எழுந்து உட்கார்ந்து கொண்டார். “லதா, வசிய மசிய வைக்கிறது ஆகாத காரியம்னு நினைச்சிட்டு இருந்தேன். உடனே அவள சந்திக்கிறதுக்கு வரசொல்லிட்டானே, என்னால நம்பவே முடியல” என்றார்.
“இதுக்குமேல நவ்யா வசிய முழுசா தன் பக்கம் சாய்ச்சிடுவா. நீங்க கவலப்படாதீங்க அத்தை. ரெண்டு நாள் இருந்துட்டு டிஸ்சார்ஜ்னு சொல்லி வீட்டுக்கு கிளம்பிடுவோம்”
“உனக்கு தாம்மா நன்றி சொல்லணும். சரியான நேரத்துல நீ கொடுத்த ஐடியாவால தான் என் மகன் எனக்கு திரும்ப கிடைச்சான். ஆறுமாசமா என்கிட்ட பேசாம இருந்தவன், நெஞ்சுவலினு நான் துடிச்சத பாத்து தூக்கிட்டு காருக்கு ஓடினான். என்ன இருந்தாலும் என் வசி பாசக்காரன் தான். அவன ஏமாத்தறமேனு தான் கொஞ்சம் குற்ற உணர்ச்சியா இருக்கு”
“அதெல்லாம் பாத்தா வேலை நடக்குமா அத்தே? இங்கேயிருந்து அந்த பொண்ணை தொறத்தி அனுப்பி என்ன பிரயோசனம்? உங்க மகன் அவ படிக்கற காலேஜ்ல கெஸ்ட் புரபசரா போய் சேர்ந்துட்டாரு. அங்கே போய் நம்மால என்ன செய்ய முடியும்? வசி ஒண்ணும் சின்ன குழந்தையில்ல, அவரை எல்லாம் மிரட்டி நம்ம வழிக்கு வரவைக்க முடியாது. இந்த மாதிரி எமோஷனலா தான் அவரை வழிக்கு கொண்டு வரமுடியும். அதுக்கு தான் நீங்க ஹாஸ்பிட்ல்ல சேர்ந்ததும் எனக்கு இப்படி ஒரு யோசனை வந்துச்சு. வசியோட பாசத்தை வச்சு தான் நம்மால மடக்க முடியும்னு நான் நினைச்சது சரியா போயிடுச்சு.
ஆனா ஒண்ணு அத்தே, இந்த விஷயம் எப்பவும் நமக்குள்ள மட்டும் தான் இருக்கும், மாமாகிட்ட உளறிடாதீங்க. ரஞ்சனி கிட்ட ஜாக்கிரதையா இருங்க, அவ மெடிக்கல் ஸ்டுடென்ட் வேற, மாத்திரையெல்லாம் கூட அவ செக் பண்ணுவா. அவள சமாளிக்கறது தான் பெரிய டாஸ்க்கா இருக்க போவுது”
“எல்லாம் பத்து நாளைக்கு தான் லதா. கல்யாணம் முடிஞ்சா போதும், நான் ரஞ்சனியை சமாளிச்சுக்குவேன். நீயும் சரவணன் கிட்ட ஜாக்கிரதையா இரு. அவனும் வசிக்கு குறைஞ்சவன் இல்ல. உண்மை தெரிஞ்சா உன்னை சும்மா விடமாட்டான்”
“ஆமா அத்தை, வசி டிரஸ் வாங்கி கொடுத்த விஷயத்தை உங்க கிட்ட சொன்னதுக்கே என்கிட்ட ஒரு வாரம் பேசாம முறுக்கிட்டு திரிஞ்சாரு. இந்த விஷயம் எப்பவும் வெளியே தெரியாம பாத்துக்கணும்”
“லதா எனக்கொரு டவுட், இந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கற டாக்டர்ஸ் யாராச்சும் போட்டு கொடுத்துட மாட்டாங்களே”
“உங்களுக்கு டிரீட்மெண்ட் கொடுக்கற நர்ஸ் டாக்டர் ரொம்ப வருஷமா இந்த ஆஸ்பிட்டல்ல வேலை செய்யறவங்க. என்னை மீறி எதுவும் வெளிய போகாது, நீங்க கவலப்படாதீங்க”
“சரிம்மா, என்னால கல்யாண வேலை பாக்க முடியாது, நீயும் சரவணனும் எல்லா ஏற்பாடையும் செய்ய ஆரம்பிங்க. வசி மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்” என்று அவர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சரவணனும் நடராஜனும் பேசிக்கொண்டு வரும் சத்தம் கேட்கவும் சட்டென படுக்கையில் சாய்ந்து உறங்குவது போல கண்களை மூடிக் கொண்டார்.
அடுத்த ஒரு வாரம் அலமேலுவுக்கு இறக்கையில்லாமல் வானில் பறப்பது போல இருந்தது. ஆளாளுக்கு போன் செய்து, “எம்எல்ஏ சம்மந்தி இப்போ அமைச்சரோட சம்மந்தி ஆக போறாங்களாமே, வாழ்த்துக்கள்” என்று வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே இருந்தது.
இன்னொரு பக்கம் லதாவும் சரவணனும் சேர்ந்து கல்யாண வேளைகளில் மும்பரமாக இருக்க, நடராஜன் மகளை அழைத்துக் கொண்டு திருமணத்திற்கு அனைவரையும் அழைக்க வெளியூர் சென்று விட்டார்.
வசீகரனும் எப்போதும் வீட்டில் இருப்பதில்லை. கல்லூரியில் விடுமுறை என்பதால் பிசினஸ்ஸில் பிசியாக இருக்கிறான் என்று சரவணன் நினைத்துக் கொண்டு, “வசி எங்கேடா இருக்கே? உனக்கு ரிஷப்சனுக்கு டிரஸ் எடுக்கணும் வர்றீயா?”
“நான் நவ்யா கூட இருக்கேன் இப்போ வரமுடியாது, நீயே நல்லதா பாத்து எடுத்துடுடா?” என்றான் வசீகரன்
சரவணனுக்கே வசீகரனின் செயல் ஆச்சரியமாக இருந்தது. லதா எதேச்சையாக மஞ்சுளாவுக்கு போன் செய்து நவ்யாவிடம் பேச வேண்டும் என்று கேட்க, “நவ்யா வீட்லயே இருக்கறதில்ல லதா, எப்பவும் வசீ கூட பேட்மிட்டன் விளையாடற இடத்துக்கு போயிடறா. ரெண்டு பேருக்கும் அங்க தான் கல்யாணம் நடத்தணும்னு நினைக்கிறேன்” என்று மஞ்சுளா சொல்ல சரவணனின் முகம் சுருங்கியது.
“ஏங்க முகம் வாடிருச்சு?” லதா கேட்க
“நான் வசீகரன் கிட்ட இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கல லதா. வேண்டாவை லவ் பண்றான்னு நினைச்சேன், ஆனா அந்த பொண்ணை பிளர்ட் பண்ணிட்டு இருந்திருக்கான்னு தோணுது”
“வசிக்கு உங்கள அளவுக்கு மெச்சூரிட்டி இல்லங்க. அந்த பொண்ணு வீட்ல இருந்ததால ஈர்ப்பு வந்திருக்கும், இப்போ அவள விட பெஸ்ட்டா நவ்யாவ பார்த்ததும் பிடிச்சு போயிருக்கும்”
“என்னமோ மனசு கேக்கல. நல்லவேளை அந்த பொண்ணு தெளிவா முடிவெடுத்திருக்கானு இப்போ தான் தோணுது” என்றான்.
திருமணத்திற்கு முதல் நாள் ரிசப்ஷன் மிக பிரம்மாண்டமான ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெற்றிப்புன்னகையுடன் அலமேலுவும் லதாவும் மண்டபத்திற்குள் நுழைந்தனர். நடராஜன், சரவணன், வசி இவர்களின் நண்பர்கள் தொழில்முறை வட்டாராங்கள், சொந்தபந்தங்கள் என அரங்கமே நிரம்பி வழிய தொடங்கியிருந்தது.
மணமகள் வரவேற்பிற்காக அடுக்கப்பட்ட தட்டுவரிசை சரியாக இருக்கிறதா என்று அலமேலுவும் லதாவும் பார்த்துக் கொண்டிருக்க, சரவணன் வசீகரனின் அறைக்கு சென்றான்.
வெண்ணிற சட்டை, கருநீல நிற பேண்ட் அணிந்திருந்தவன் விசில் அடித்தபடி, அதே நீலநிற டையை கண்ணாடியை பார்த்தபடி கட்டிக் கொண்டிருந்தான். சரவணனை கண்டதும், “டேய் அண்ணா, ஸ்கூல்ல இருந்தே இந்த டை கட்றது பெரும் பிரச்சனைடா எனக்கு. எப்பவும் போல நீயே கட்டிவிடு” என்றான்.
சரவணன் தம்பியை முறைக்க, “முடியாதுனா சொல்லேன்டா, அதுக்கேன் முறைக்கிற? விடு நானே கட்டிக்கறேன். நாளைல இருந்து என் பொண்டாட்டி கட்டி விடுவா”
“வேண்டா மனசுல ஆசைய தூண்டி விட்டுட்டு எப்படிடா உன்னால இன்னொருத்திய கட்டிக்க தயாராக முடியுது?”
“அம்மாவுக்காக தாண்டா”
“ஆனா உன்னை பாத்தா எனக்கு அப்படி தெரியல. நீ எப்பவும் அந்த நவ்யா கூட தானே சுத்திட்டு இருந்தே? என்னவோ விருப்பமே இல்லாம கல்யாணம் ஏற்பாடு ஆகற மாதிரி நடிக்காத, நீ ஜாலியா இருக்கேனு பச்சையா தெரியுது”
“தெரியுதா? சரி விடு. அப்புறம் சரவணா, காலேஜ்ல வேலை செய்யற எல்லா புரபசரும் ரிசப்ஷனுக்கு வந்துட்டாங்களா? உன்னோட ஸ்டுடென்ட்ஸ் முக்கியமா என் கல்யாணத்துக்கு உன்கிட்ட ரெகமண்ட் பண்ணாளே அந்த சின்ன பொண்ணு அவ வந்துட்டாளா?”
சரவணன் பதில் சொல்லாமல் வசியை முறைத்துவிட்டு ரிசப்ஷன் ஹாலுக்கு சென்றான். வசி சொன்னது போலவே இருவரின் நண்பர்களும், அவனிடம் பயிலும் மாணவர்களும் கூட்டமாக அரங்கத்திற்குள் நுழைந்தனர். அவர்களுக்கு மத்தியில் வேண்டாவை பார்த்ததும் மலைத்து போனான் சரவணன். முதன்முறையாக புடவை கட்டியிருந்தவள் பார்ப்பதற்கு இப்போது தான் சற்று பெரிய பெண்ணாக தெரிந்தாள்.
‘ரெண்டு பேரும் என்ன நினைச்சிட்டு இருக்காங்கனே தெரியல. லவ் பண்றாங்கனு நல்லாவே தெரியுது. இவ என்னடான்னா உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வையுங்கனு சொல்றா, இவன் என்னடான்னா சரினு தயாராயிட்டான்’ என்று மனதுக்குள் இருவரையும் திட்டிக் கொண்டு வெளியே புன்னகையுடன் அனைவரையும் வரவேற்றான்.
சின்னபொண்ணு சரவணன் அருகே சென்று, “சார் எதாச்சும் வேலை செய்யணும்னா சொல்லுங்க சார் செய்யறேன்”
“பொண்ணு வீட்டுக்காரங்க வரும் போது அவங்களுக்கு ஜூஸ், தண்ணி கொடுத்து உள்ளே வாங்கனு உபசரிக்கணும். அதுமட்டும் போதும், மத்ததுக்கெல்லாம் ஆளிருக்கு”
“சரிங்க சார்” என்றவளின் பார்வை அவனிடம் இல்லாமல் வேறு இடத்தில் இருந்தது. கருநீலநிற கோட் சூட்டி அணிந்து அறையின் சுவரின் மீது சாய்ந்து கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் வசீகரன்.
அவன் பாக்கெட்டில் அடர்சிவப்பு நிற ரோஜாப்பூ டிசைன் அழகாக தைக்கப்பட்டிருந்தது. அவன் நிறத்திற்கு அந்த கோட்சூட் மிகவும் எடுப்பாக இருந்தது. அவனும் அவளை தான் ரசித்து கொண்டிருந்தான். அவன் பாக்கெட்டில் இருந்த அடர்சிவப்பு ரோஜா நிறத்தில் தான் சின்னபொண்ணு புடவை கட்டியிருந்தாள்.
அவள் பாவாடை தாவணி அணிந்து கூட அவன் பார்த்ததில்லை. முதல்முறையாக புடவை அணிந்திருக்கவும் அவள் மீது பதித்த பார்வையை அவனாள் விலக்கி கொள்ளவே முடியவில்லை.
இருவரின் பார்வையும் காந்தம் போல ஒன்றையொன்று இழுத்துக் கொண்டிருந்தது. தன் கட்டுப்பாட்டை மீறி முகம் சிவந்து போவதை உணர்ந்தவள் சட்டென பார்வையை தழைத்துக் கொண்டு மாணவர்கள் இருந்த கூட்டத்தில் தன்னை மறைத்துக் கொண்டாள். மறந்தும் வசீகரன் இருந்தப்பக்கம் அவள் திரும்பவே இல்லை. அவனும் பெருமூச்சுடன் உள்ளே சென்றுவிட்டான். அதன்பின்பே அவளுக்கு மூச்சு வந்தது.
சரவணனனும் உள்ளே வந்துக் கொண்டிருந்த விருந்தினர்களை வரவேற்க சென்று விட்டான். லதாவின் பெற்றோர் எம்எல்ஏ குடும்பம் மற்றும் பெரிய பிரமுகர்கள் எல்லாம் வந்தனர். “சரவணா மணி எட்டாக போகுது, இன்னுமா பொண்ணு வீட்டுக்காரங்க வரல? எப்போ ரிசப்ஷன் ஆரம்பிக்க போறீங்க?” என்று அவர்கள் உள்ளே நுழையும் போதே கேள்வி கேட்க அப்போது தான் சரவணனுக்கு பெண்வீட்டார் வர தாமதமாகி கொண்டிருக்கிறது என்பதே உறைத்தது.
அவர்களை அமரச் சொல்லவிட்டு அவசரமாக லதாவும் அலமேலுவும் இருந்த அறைக்கு சென்றான். “அம்மா பொண்ணு வீட்டுக்காரங்க கிளம்பிட்டாங்களா? மணி எட்டாகுது. எப்போ பெண் அழைப்பு முடிஞ்சு, ரிசப்ஷன் ஸ்டார் ஆகறது? எல்லாரும் கிப்ட் கொடுத்துட்டு சாப்பிட்டு கிளம்பலாம்னு பாத்துட்டு இருக்காங்க”
“ஏழு மணியிலிருந்து போன் பண்ணிட்டே இருக்கேன், இதோ கிளம்பிட்டோம்னு சொல்றாங்களே தவிர இன்னும் வரலடா” என்றார் அலமேலு கவலையான குரலில்
“லதா, நவ்யா உன்னோட பிரெண்டு தானே, அவளுக்கே போன் போட்டு எங்க வந்துட்டு இருக்காங்கனு கேளு” என்றான் சரவணன்
லதா நவ்யாவுக்கு மட்டுமல்ல, மஞ்சுளா, அமைச்சர் என அனைவருக்கும் அழைத்தாள். யாருமே அழைப்பை ஏற்கவில்லை.
(தொடரும்)
error: Content is protected !!
Adipavijgala oru ponnu valkaiya kedukka ivvalavu sadhi panreengala rendu perum