Skip to content
Post Views: 13,657
விஷ்ணுவின் செயலில் இவள் மலங்க விழிக்க, “என்ன?” என்றவனுக்கு பிறகுதான் தனது செயல் புரிய, “எதுக்கு முழிக்கிற? சின்ன வயசுல உனக்கு ஊட்டிவிட்டுட்டு நிறைய முறை சாப்பிட்டிருக்கேன். எனக்கு பிரச்சனை இல்ல. சாப்பிடு” என்று சாதாரணம் போல் சொல்லி உணவில் கவனம் வைத்தான்.
அன்று அனல் தெறிக்க பேசியவளின் கண்களை பூஜிக்கத் தோன்றிய விஷ்ணுவிற்கு, இன்று அவளின் தந்தையோடு கண்களால் கத்தி சண்டை போட்டவளின் கண்களுக்கு வாழ்நாள் முழுதும் பாதுகாவலனாய் இருக்கத் தோன்றியது.
அப்படி நினைத்த கணத்தில் அதிர்ந்தவனுக்கு அந்த நொடியே, இவள் தன்னை உதவிக்கு அழைத்ததால் இப்படி நினைத்திருப்பேன். தவிர இச்சிறு வயதில் அன்னைக்காக யோசிக்கும் அவளின் பக்குவம் தன்னை அவள்பால் ஈர்க்கிறது.
நான் பார்த்து வளர்ந்தவள். வயதுக்கு மீறிய பிரச்சனைகளை சந்திப்பதால் துணை நிற்க நினைக்கிறோம் என்று தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டான்.
Advertisement
சற்று நேரத்திற்கு பிறகு விஷாலினி சிரமமப்பட்டு உண்பது புரிய, “இது பிடிக்கலையா? வேற ஆர்டர் பண்ணட்டுமா?” என்றான்.
“இல்ல நல்லாத்தான் இருக்கு, ஆனா அம்மாகிட்ட இதெல்லாம் மறைக்கிறோம்னு நினைக்கும்போது சாப்பாட்டை முழுங்கினாலும் உள்ள போகமாடங்குது” என்று கலங்கினாள் பாவமாக.
இன்று நடந்த நிகழ்வால் பெரிதாய் பாதிக்கப்பட்டிருக்கிறாள் எனப்புரிந்து, “சரி… ஜுஸ், ஐஸ்க்ரீம் இப்படி எதாவது சாப்பிடலாம் வா” என்று எழுந்தான்.
Advertisement
“இல்ல, நீங்க சாப்பிடுங்க” என்று இவள் அக்கறையாய் சொல்ல, “உன்ன முன்னாடி வச்சிக்கிட்டு நீ சாப்பிடாம நான் மட்டும் எப்படி சாப்பிடறது?” என்றதும் “இல்ல நான் ட்ரை பண்றேன்” என்று உண்ண ஆரம்பித்தாள்.
Advertisement
“ப்ச் வேணாம் வா. எனக்கும் பசி இல்ல, நீ மதியம் சாப்பிட்டிருக்கமாட்டேனு தோணுச்சு, உனக்காகத்தான் ஆர்டர் செய்தேன்” என்று எழுந்தான்.
உண்மையில் விஷாலினியால் உணவை உள்ளே தள்ளவே முடியவில்லை. வேறு ஏதும் சாப்பிடும் மனநிலையும் இல்லை. ஆனாலும் ஐஸ்க்ரீமையும் மறுத்தால் கோபப்படுவாங்க என்று “இங்கையே ஐஸ்க்ரீம் ஆர்டர் பண்ணுங்க” என்றாள்.
“இங்கயிருந்தா மைன்ட் ஃப்ரீ ஆகாது. வா” என்று கட்டளைபோல் சொல்லி முன்னே நடந்தான்.
Advertisement
விஷாலினிக்கு தற்போது தனிமைதான் தேவைப்பட்டது. ஆனால் விஷ்ணுவின் கட்டளையை மறுக்க முடியாமல் அவனோடு சென்றாள். ஐந்து நிமிடத்திற்கு மேல் பயணமாகிக்கொண்டேயிருக்க, “இதோ இங்க இருக்கு ஐஸ்க்ரீம் கடை” என்றாள்.
“இங்க நல்லாயிருக்காது” என்று மேலும் ஐந்து நிமிடம் பயணித்தவன் ஓரிடத்தில் நிறுத்தி ஐஸ்க்ரீமை வாங்கிக்கொண்டு, “உக்காரு” என்று மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்து அதிக கூட்டமில்லாத பூங்கா ஒன்றினுள் நுழைந்து, “இறங்கு” என்றான்.
பின்னே அங்குள்ள சிமென்ட் பெஞ்சில் அமர்ந்து அவளிற்கான ஐஸ்க்ரீமை நீட்டி, “உருகிடப்போகுது, சாப்பிடு” என்றான்.
விஷாலினி உண்ண ஆரம்பிக்க, விஷ்ணுவிற்கு அழைப்பு வந்தது தந்தையிடமிருந்து. அழைப்பை ஏற்றதும், “அம்மாவை ஸ்வீட் செய்ய சொல்லிட்டு எங்கடா போன?” என்றார் கோபத்தோடு.
“இங்க விஷாலினியோட இருக்கேன்ப்பா” என்று சொல்லிவிட, இவள் கையிலிருந்து ஐஸ்க்ரீம் நழுவியது. “விஷாலினியோடவா? எதாவது பிரச்சனையா விஷ்ணு?” எனப்பதறினார் கோபாலன்.
“பெரிய பிரச்சனையில்லப்பா, ஃப்ரண்ட்ஸ் ரேகிங் பண்ணியிருக்காங்க, பயந்துட்டா. பேசிட்டிருக்கேன், வந்திடறேன்”
“விஷாலினிகிட்ட கொடு” என்றார் கோபாலன்.
இவன் மொபைலை நீட்ட, இவள் மறுக்க, “பேசு, இல்லைனா அம்மாகிட்ட எதாவது உளறுவார்” என்றான் சன்னக்குரலில்.
“மாமா” என்று குரல் கமறியவளுக்கு கண்ணீர் வெளிக்கிளம்ப, “விஷாலினி எவ்வளோ தைரியமான பொண்ணு… இதுக்கெல்லாம் பயப்படலாமா?” என்றார் பெருமையாக.
“ம்ஹும்” என்றாள் அழுகையை அடக்கியபடி.
“போதும் கொடு” என்று வாங்கியவன், “அழறாப்பா, இதெல்லாம் கடந்து வரனும்னு சமாதானம் செய்துட்டு, ரேகிங் செய்தவனுங்களை மிரட்டிட்டு பத்து நிமிஷத்துல கிளம்பறேன்” என்று இணைப்பை துண்டித்தான்.
“எதுக்கு அழற? இந்தாள் வந்தது ஆன்ட்டிக்கு தெரிஞ்சாலும் ஒன்னும் ஆகாது, உன் அம்மாவை அவ்வளோ ஈஸியா நினைச்சிட்டியா?” என்றான்.
“என் அம்மா ரொம்ப ஸ்ட்ராங்… ஆனா தப்பானவனை காதலிச்சதுக்கு நாம தண்டனை அனுபவிக்கலாம், என் பொண்ணு ஏன் இதெல்லாம் அனுபவிக்கனும்னு என்னை நினைச்சு வருந்துவாங்க” என்றாள் வேதனையாக.
“எனக்கு இதெல்லாம் பிரச்சனையில்லம்மானு ஆன்ட்டிக்கு நீ தைரியம் சொல்லு. அப்போ வருத்தப்படமாட்டாங்க” என்றான்.
“அப்படியேது நினைச்சு என் அம்மாகிட்ட சொல்லிடாதிங்க” என்று பதறி எச்சரித்து, “அத்தனை பெரிய துரோகம் செய்தவரை சின்னதா கூட தண்டிக்காம, தன்னோட வாழ்க்கையிலயிருந்து அந்தாளுக்கு விடுதலை கொடுத்து, அவரை கட்டிக்கிட்ட பாவத்துக்கான மொத்த தண்டனையையும் இவங்க ஏத்துக்கிட்டாங்க.
இன்னைக்கு வரைக்கும் ரோசத்தோட வாழ்றாங்க, தன்மானத்தோட இருக்காங்க. இதுல மாற்றமில்ல. ஆனா சந்தோசமா வாழலையில்ல? அதுக்கு காரணம் இந்தாள்தானே? இவரோட வரவு அவங்க மனசை நிச்சயம் ரணமாக்கும். ஆனா வெளில காட்டிக்கமாட்டாங்க” என்றாள் வேதனையாக.
அன்னை மீதான இவளின் புரிதலில் மீண்டும் பிரம்மித்த விஷ்ணுவர்தன், இவளின் வேதனையை போக்க நினைத்து, “விஷாலினி” என்று அவளின் கையைப் பிடித்தான் ஆதரவாக.
விஷ்ணு தன்னோடு இருப்பது பெரும் தைரியத்தை கொடுத்தது. ஆனால் இப்படி தொடுகை சிறு அவஸ்த்தையை கொடுக்க, மெல்ல கையை உருவப்பார்த்தாள்.
விஷாலினியின் செயலில்தான் தனது செயல் புரிந்தது விஷ்ணுவிற்கு. பட்டென கையை விடுவித்தவன், “ஊஃப்” என தலையை நீவிக்கொண்டான் அழுத்தமாக.
எல்லாம் இவளால் வந்தது… அண்ணானு கூப்பிட்டி பழகியிருந்தா இப்படி அன்னீஸியா தோணியிருக்காது, நானும் இயல்பா இருந்திருப்பேன் என மனதோடு கடிந்து, “நீ ஏன் என்னை அண்ணானு கூப்பிடறதில்ல?” என்றவன், அடுத்த நொடியே எங்கே அப்படி அழைத்திடுவாளோ என்றும் பதறினான்.
“வாங்க போங்கனு பேசக்கூடாது, அண்ணா சொல்லனும்னு அம்மாவும் சொன்னாங்க, ஆனா நீங்க அன்னைக்கு அப்படி சொல்லக்கூடாதுனு சொன்னதுலயிருந்து எனக்கு அப்படி கூப்பிட வரமாட்டேங்குது” என்றாள் பாவமாக.
இவளின் பதிலில் பெரிதாய் மகிழ்ந்தவன் “நான் சொன்னேனா? எப்போ?” என்றான் புரியாமல்.
“சின்ன வயசுல தோசை சாப்பிடலனு சொன்னதுக்கு திட்டுனிங்க” என்று அன்றைய நிகழ்வை விளக்கினாள் ஆற்றாமையோடு.
“தம்மாத்துண்டு பிள்ளை… அவங்கம்மா பேச்சு கேட்டு சாப்பிடாம போறாளேன்ற கோபத்துல சொல்லியிருப்பேன், அதுக்காக இப்போவரைக்கும் வாங்க போங்கனு பேசுவியா?” என்று மனதின் சந்தோசத்தை மறைத்தபடி கடிந்தான்.
விஷாலினி தவிப்பாய் பார்க்க, எங்கே முயற்சித்து அண்ணா சொல்லிவிடுவாளோ என்று, “கோபத்துல சொன்னாலும் சரியாத்தான் சொல்லியிருக்கேன், ஆன்ட்டி எங்கப்பாவை கூடப்பிறந்த அண்ணனா பார்க்குறாங்க. உனக்கும் உன் கோபால் மாமானா ரொம்ப பிடிக்கும். அப்படிப் பார்த்தா உன் மாமன் மகன் எப்படி உனக்கு அண்ணனாக முடியும்? அதனால அண்ணானு கூப்பிடாத. விஷ்ணுனு கூப்பிடு” என்றான் இன்முகத்தோடு.
“பேர் சொல்லியா?” என இவள் கண்களை அகல விரிக்க, ‘இப்போ இந்த ஆராய்ச்சிலாம் தேவையாடா விஷ்ணு? ஏன்டா இப்படி சொதப்புற?’ என தன்னைத்தானே கடிந்து, “ஹ்ம்…” என பெருமூச்சிழுத்து, “இனி அந்தாள் உன்கிட்டயோ, இல்ல ஆன்ட்டி பக்கமோ கண்டிப்பா வரமாட்டான். அதுக்கு நான் கியாரண்டி. இதை நினைச்சிட்டு படிப்புல கோட்டை விட்டுடாத” என அறிவுறுத்தினான் பொறுப்பாக.
நிம்மதியோடு தலையசைத்தவள், “இவங்களையெல்லாம் நினைச்சாதான் இன்னும் வெறியா படிக்கத் தோணும். படிப்புல எப்போவும் கவனமா இருப்பேன்” என்றாள்.
‘முட்டைக்கண்ணி… கருத்தா பேசியே கவுத்துடுவா போல’ என்று மனதோடு சிலாகித்து, “இவ்வளோ பேசுற… ஒரு ஜடை கூட சரியா பின்னத் தெரியாதா? தினமும் இப்படித்தான் கிறுக்கி மாதிரி காலேஜ்க்கு போறியா?” என்றான் அவளின் ஒழுங்கற்ற பின்னலைப் பார்த்து.
விஷ்ணுவிடம் இப்படி பேச்சுகளை எதிர்பார்க்காத விஷாலினி மலங்க விழிக்க, “என்ன முழிக்கிற? கேட்டது புரியலையா?” என்றான்.
“அது முடி ரொம்ப அடர்த்தியா இருக்கு. எல்லா முடியையும் பின்னுக்கு வாரி, ஒன்னா பிடிச்சு, அப்புறம் மூனா பிரிச்சி பின்னப்போகும்போது கீழ் முடியெல்லாம் சிக்குமாட்டிக்குது, அதை பிரிச்சு பின்னல் போடுறதுக்குள்ள கையே ஓஞ்சி போய்டுது” என்றாள் மலைப்பாக.
‘ஒத்த ஜடை போட என்னென்ன சொல்றா’ என்பதாய் விஷ்ணு பார்க்க, இவங்களும்தான் மாமா திட்டினாலும் கேட்காம நிறைய முடி வளர்த்திக்கிட்டு தாடி வளர்த்துட்டு இருந்தாங்க, இப்போ பெரிய்ய போலீஸ் போல ஹேர்கட் பண்ணி சேவ் பண்ணவும் நம்மளை குறை சொல்றாங்க என நினைத்தபோதும் “சரியா பின்ன பழகிக்கிறேன்” என்றாள்.
“ம்” என மெச்சுதலாய் தலையசைக்க, விஷாலினிக்கு அழைப்பு வந்தது அன்னையிடமிருந்து. “போச்சு மாமா அம்மாகிட்ட சொல்லிட்டாங்க போல, இப்போ என்ன சொல்றது?” என்று பதட்டமாய் கேட்க, “எதுக்கு பதறுற? அப்பாகிட்ட நான் ஏதும் சொல்லல, ரேகிங் பிரச்சனைனுதான் சொல்லியிருக்கேன், அதைப்பத்திதான் கேட்பாங்களாயிருக்கும். பயப்படாம பேசு” என்றான்.
அழைப்பை ஏற்றவள், “அம்மா” என்க, “விஷ்ணு பக்கத்துல இருக்கானா?” என்றார்.
ஆமாம் என்பதாய் இவள் தலையசைக்க, “லூசு, தலையசைச்சா போன்ல தெரியுமா? பதில் பேசு” என்றான்.
“ஆமாம்மா” என்றாள்.
“ரேகிங் பிரச்சனைலாம் ஒரு பிரச்சனையா? அதுக்கு அவ்வளோ தூரம் தம்பியை அலைய விட்டுருக்க… தினமும் ரேகிங் நடக்கும், அப்போ தினமும் வந்திட்டிருக்க முடியுமா? இதெல்லாம் நீயேதான் சமாளிக்க கத்துக்கனும்” என கடிந்து, “வேலை கிடைச்ச சந்தோசத்தை கூட அனுபவிக்க விடாம பண்ணிட்டிருக்க. இங்க அண்ணா அண்ணிலாம் விஷ்ணுக்காக காத்திட்டிருக்காங்க. சீக்கிரம் அனுப்பி வை” என்று இணைப்பை துண்டித்தார் மேகலை.
“உங்களுக்கு வேலை கிடைச்சிடுச்சா?” என்றாள் பெரும் மகிழ்வோடு.
“ம்” என்று தலையசைத்தவன், “ஃப்ரண்ட்ஸ்க்கு காட்டுறதுக்காக போட்டோ எடுத்தேன்” என்று தனது மொபைலில் உள்ள ஆர்டர் காப்பியை காண்பித்தான்.
“நிஜமாவே “DSP யா?” என்றாள் பெருமையாக.
“அதென்ன நிஜமாவே DSP யானு கேட்குற?” என்றான் புருவம் சுருக்கி.
கொஞ்சம் முன்ன பெரிய்ய போலீஸ்னு நினைச்சதை சொன்னோம்…. அவ்வளோதான் என பயந்தவள், “சரி கிளம்புங்க, அத்த மாமா உங்களுக்காக வெய்ட் பண்ணிட்டிருக்காங்களாம்” என்றாள் தப்பிக்கும் நோக்கோடு.
“ஒரு வாழ்த்து சொல்ல மாட்டியா?” என்று இவன் கோபப்பபட, இனி நெஞ்சுவலியோட மாமா வேலைக்கு போக வேண்டாம் என்று நினைத்த விஷாலினியின் மனம் ஆனந்தத்தில் மிதந்தது.
“ஒரு வாழ்த்து என்ன? ஓராயிரம்… இல்லயில்ல லட்சம், கோடி வாழ்த்துக்கள். என் மாமா இனி கட்டிடத்துக்கு போய் கஷ்டப்படத் தேவையில்லயில்ல” என்றாள் பெரும் மகிழ்வோடு.
“எனக்கு வாழ்த்து சொல்ல சொன்னா உன் மாமாக்கு சொல்ற… சரி வாழ்த்துதான் சொல்லல, எதாவது வாங்கிக்கொடு. சாப்பிட்டு கிளம்பறேன்” என்றான் விஷாலினியை உண்ண வைக்கும் நோக்கோடு.
பக்கத்தில் ஏதேனும் இனிப்பு கடை இருக்கிறதா என்று விஷாலினி ஆராய, “நீயும் சரியா சாப்பிடலயில்ல, எதாவது ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு போலாம். வா” என்று பைக்கை நோக்கி நடந்தான்.
விஷாலினி தயங்க, “எனக்கு வேலை கிடைச்சதுக்கு சின்ன ட்ரீட்னு நினைச்சிக்கோ. பத்து நிமிஷத்துல சாப்பிட்டு கிளம்பிடலாம்” என்றான் பிடிவாதமாக.
ஐந்து நிமிடத்தில் ஹோட்டலுக்கு வந்தனர். விஷாலினிக்கு பல் கட்டியிருப்பதால் சைவம் ஆர்டர் செய்து, உண்ண சொல்ல, விஷ்ணுவிற்கு வேலை கிடைத்த மகிழ்வோடும், அந்த சந்தோசத்தை அத்தை மாமாவோடு கொண்டாட, சீக்கிரம் அனுப்ப வேண்டும் என்ற நினைப்போடும் வேகமாய் உண்டாள்.
“விக்கிக்க போகுது, மெல்ல சாப்பிடு” என்று அதட்டி, “இன்னும் மூனுநாள்ல ட்ரைனிங் கிளம்பிடுவேன், இங்க சென்னையிலதான் ட்ரைனிங், ஆனா நினைச்ச நேரம் வரது கஷ்டம். அதுக்காக எதாவதுனா கால் பண்ணாம விட்டுடாத. கண்டிப்பா பண்ணு, நான் எடுக்கலைனா அப்பாக்கு பண்ணு. தைரியமா இருக்கனும்” என்று அறிவுறுத்திக்கொண்டே உண்டான்.
பிறகு கல்லூரிக்கு அழைத்து வந்து, “ஆன்ட்டியை நினைச்சு கவலைப்படாம படிப்புல கவனம் செலுத்து. ஆன்ட்டியை பார்த்துக்க அப்பா நான்லாம் இருக்கோம்” என்று எடுத்துரைத்து கிளம்பினான் வீட்டிற்கு.
error: Content is protected !!