Skip to content
Post Views: 14,585
மேகலையும் விஷாலினியும் செய்வதறியாது தவித்திருந்தனர். ஜெகதீசனைப் போல் சுலபமாய் உதறிவிட முடியாதே தனது பாட்டியை. தினம் ஒரு கதையென்று வாழ்க்கையின் மேடு பள்ளங்களையும், நிதர்ஷனத்தையும் விஷாலினிக்கு எடுத்துரைத்து வளர்த்தவர் அல்லவா?
இனிவரும் காலத்தில் உன் அன்னையை யார் இழிவாக பேசினாலும் நீதான் துணை நிற்கனும். எத்தனை பிரம்மாண்டமான கோவிலாக இருந்தாலும் கர்பகிரகத்துல தெய்வம் இல்லைனா கோவிலுக்கு மதிப்பில்ல. உன் அம்மாதான் உனக்கு தெய்வம். உனக்காக அத்தனை சந்தோசத்தையும் இழந்தவ என்று மகளுக்காக பேத்தியிடம் அத்தனை எடுத்துரைத்து கிளம்பியிருந்தார் மேகலையின் அன்னை.
எட்டு வருடங்களுக்கு முன் வயது மூப்பு காரணமாக உடல் நிலை சீர் குலைய, பிடிவாதமாய் தனது மனைவியை அழைத்து சென்றிருந்தார் மேகலையின் தந்தை. அன்னையை அழைத்து செல்ல வந்த போது நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகு மேகலையிடம் பேசினார். பெரிதாய் எல்லாம் ஏதும் பேசவில்லை. “வாங்கப்பா” என்ற மேகலையின் வரவேற்பிற்கு “ம்” என்று சொன்னார் அவ்வளவே.
விஷாலினி பள்ளி நேரத்தை கணக்கிட்டு மனைவியை அழைக்க வந்திருந்தார். அதை மேகலையும் உணர்ந்துதான் இருந்தார். ஆனால் வேதனை அடையவில்லை.
Advertisement
இத்தனை காலம் உருண்டோடிவிட்ட பின்னே இனி உறவிருந்தால் என்ன? இல்லையென்றால்தான் என்ன? என்ற வருத்தம் இருக்க, தற்போதும் கூட மகளை விசாரிக்காத தந்தை மீது வருத்தம் இல்லை மேகலைக்கு.
சாந்தி (மேகலையின் அண்ணி) எண்ணிலிருந்துதான் மேகலைக்கு அழைப்பு வரும். ஆனால் மேகலையின் அண்ணி பேசமாட்டார். அதற்கு காரணமும் மேகலைதான்.
வேலவன் (மேகலையின் அண்ணன்) வீட்டில் இல்லாத நேரம் சாந்தி மேகலைக்கு அழைத்து பேசுவார். ஓரிரு முறை பொறுத்த மேகலை, அண்ணன் அப்பாக்கு தெரியாம பேசவேண்டாம் அண்ணி. என்னால உங்களுக்கு பிரச்சனை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
Advertisement
அதிலிருந்து சாந்தியும் மேகலையோடு பேசுவதில்லை. ஆனால் மருமகளிடம் சொல்லி அழைப்பு விடுத்து மகளோடு பேசுவார் மேகலையின் அன்னை.
Advertisement
மேகலையின் அன்னை சென்ற பின்னே இதுதான் வழக்கமாக இருக்க, இன்றும் சாந்தி எண்ணிலிருந்து அழைப்பு வந்த்து. மேகலை ஆவலோடு அன்னை நலம் விசாரிக்க, “அத்தையால பேச முடியல மேகலை. ரொம்ப முடியாம இருக்காங்க. உன்னையும் உன் பொண்ணையும் நேர்ல பார்க்க ஆசைப்படுறாங்க” என்றிருந்தார் சாந்தி.
மேகலைக்கு என்ன செய்வதென புரியவில்லை. தற்போதும் கூட தந்தையோ, அண்ணனோ பேசவில்லை. அம்மாவோட ஆசையை அண்ணி வெளிப்படுத்தியிருக்காங்க, நேர்ல போனா உள்ள விடுவாங்களா தெரியாது. நாமன்னா பரவால்ல. விஷாலினியை அவமதிக்கும் நிகழ்வை தன்னால் எப்படி ஏற்படுத்திக் கொடுக்க முடியும்? என்ற வேதனையில் உழன்றார் மேகலை.
விஷாலினி ஆழ்ந்தெல்லாம் யோசிக்கவில்லை. சற்று நேரம் தவித்தாள் அவ்வளவே… பாட்டியின் நிலையை அன்னை சொன்னதும் பாட்டியை காண செல்லவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாள். “ம்மா, நாம போய் பாட்டியை பார்த்துட்டு வரலாம்” என்றாள் விஷாலினி.
Advertisement
அதிர்ந்த மேகலை, “வேணாம் விஷாலினி, அங்க போனா உன்னை” என்று கண்கலங்க, “என்னை என்னம்மா செய்திடுவாங்க? ஜெகதீசன் பொண்ணுனு கேவலமா பேசுவாங்க. அவ்வளோதானே? ஆனா நான் அவர் பொண்ணில்லை. உன் பொண்ணு. நம்ம பாட்டிக்காக இதை தாங்கிக்கமாட்டேனா? கிளம்பும்மா போலாம்” என்றாள் தன்மையாகவே.
“இல்ல விஷாலினி, மத்தவங்க யாரும் என்னை கூப்பிடல, அண்ணிதான் கூப்பிட்டாங்க, இல்லயில்ல பாட்டியோட ஆசையை சொன்னாங்க” என்றார் தவிப்பாக.
“நம்ம பாட்டியை பார்க்க யார்ம்மா கூப்பிடனும்? கிளம்பு போலாம்” என்றாள் மீண்டும்.
இங்கிருந்து காஞ்சிபுரத்தில் இவர்கள் வீட்டிற்கு செல்ல மூன்று மணிநேரம்தான் ஆகும். ஆனால் இதுவரை யாரும் வந்திராதவர்கள் வீட்டிற்கு செல்ல விஷாலினிக்கும் விருப்பமில்லைதான். ஆனால் பாட்டியின் ஆசையை நிறைவேற்றாமல் போனால் தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்றுணர்ந்திருந்தாள்.
“ம்மா, உக்கார்ந்துட்டேயிருக்காத. எழுந்து கிளம்பு, இப்போ கிளம்பினாத்தான் நைட்க்குள்ள வீட்டுக்கு வர முடியும்” என்றவள், “நாம போகாம விட்டு பாட்டிக்கு எதாவது ஆகிடுச்சுனா…” என்று கலங்கியவள், “அங்க இருக்கவங்களுக்கு நம்மளை பிடிக்கலனாலும், பாட்டிக்கு அவங்களை பிடிக்கும்தானே. அவங்க நம்மளை எதாவது சொன்னாலும் பாட்டிக்காக சகிச்சுக்கலாம். கிளம்பும்மா” என்றாள் தன்மையாக.
கண்ணீரோடு மகளை அணைத்துக்கொண்டு பின்னே தன்னை சரிசெய்து கிளம்பினர்.
“அண்ணா” என்று மேகலை அழைக்க, “அவர் வெளில போயிருக்கார் மேகலை” என்றார் பிரபாவதி.
விசயத்தை சொல்லவும், “இரண்டு பேரும் போறிங்களா? விஷாலினியை விட்டுட்டு நீ மட்டும் போலாம்ல? அங்க நிலவரம் தெரிஞ்ச பின்ன விஷாலினியை அழைச்சிட்டு போலாமே” என்றார் யோசனையாக.
“இல்ல அத்த, அம்மாவை தனியா அனுப்ப எனக்கு விருப்பமில்ல. அதோட பாட்டியை நானும் பார்க்கனும்” என்றாள்.
“சரி மேகலை, பத்திரமா போய் வாங்க. இவர் மதிய சாப்பாடுக்கு வரும்போது சொல்றேன்”
“பூ கொண்டு வர பையனுக்கு போன் செய்தேன், அவன் எடுக்கல, மதியம் பூ கொண்டு வந்தான்னா இன்னைக்கு கட்ட முடியாதுனு சொல்லி அனுப்பிடுறிங்களா?”
“சொல்லிடறேன் மேகலை”
“சரி அண்ணி கிளம்பறோம்” என்று கிளம்ப எத்தனிக்க, “இடையில அவசரம்னா அவருக்கு போன் செய் மேகலை, அதோட விஷ்ணு காஞ்சிபுரத்துலதான் இருக்கான். பயப்படாம போ, உன் அம்மாவை நானும் விசாரித்ததா சொல்லு” என்றார் அக்கறையாக.
சரியென தலையசைத்து மகளோடு காஞ்சிபுரம் கிளம்பினார் மேகலை.
காஞ்சிபுரத்திற்கு பேருந்தில் வந்து பேருந்து நிலையத்திலிருந்து டேக்ஸியில் வந்தார்கள் விஷாலினியும் மேகலையும். பேருந்தில் ஏறியதுமே விஷ்ணுவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள் விஷாலினி.
ஆனால் முக்கிய பணியில் இருக்கும் விஷ்ணு இன்னும் அதை பார்க்கவில்லை. பிறந்து வளர்ந்த வீட்டின் கேட் முன்னே சில நொடி யோசனையோடு நின்று, பிறகு கேட்டை திறந்தார் மேகலை.
போர்டிகோவில் அன்னை உடல்நிலை குறித்து மருத்துவரிடம் அலோசித்துக்கொண்டிருந்த மேகலையின் அண்ணனும் தந்தையும் இவர்களை கண்டதும் விதிர்த்தனர், வியந்தனர்.
“ஏன்ம்மா நின்னுட்ட? வா” என்று அன்னையின் கையை பற்றிக்கொண்டு முன்னேறினாள் விஷாலினி.
மேகலையின் தந்தைக்கும் வேலவனிற்கும் விஷாலினி பெரிய பெண்ணானாள் என்ற செய்தி கேட்டதுமே மேகலை மீதிருந்த கோபமும் வருத்தமும் குறைந்திருந்ததுதான். ஆனால் மேகலையோடு உறவு கொள்ளும் அளவிற்கு இன்னும் மனம் முன்னேறாமல் போக, வருத்தம் இருந்த போதும் விலகியே இருந்தனர்.
விஷாலினியை முதல்முறையாக பார்க்கிறார்கள் வேலவனும் அவனின் தந்தையும். அன்னைக்கு அரணாக கைகோர்த்து முன்னேறும் பேத்தியை வியந்து பார்த்தார் மேகலையின் தந்தை.
“நீங்க சொன்னிங்களாப்பா?” என்றான் வேலவன்.
“இல்ல, சாந்தி சொல்லியிருக்கும். காலைல உன் அம்மா மருமககிட்ட இவங்களை பார்க்கனும் சொல்லிட்டிருந்தா” என்றார்.
மேகலையின் அண்ணன் இவர்களை வரவேற்கவும் இல்லை, வரவை மறுக்கவும் இல்லை. உள்ளே சென்று, “சாந்தி… மேகலை வந்திருக்கா பாரு” என்று குரல் கொடுத்தார் ஆர்பாட்டமில்லாமல்.
பரபரக்க சமையலறையிலிருந்து வெளியே வந்த சாந்தி “வா மேகலை” என்றார் தழுதழுப்பாக.
“இதான் உன் பொண்ணா?” என்று பேரன்போடு விஷாலினியை பார்க்க, தலைகுனிந்த விஷாலினி, “ம்மா பாட்டி எந்த ரூம்ல இருக்காங்க கேளு” என்று அன்னையிடம் முணுமுணுத்தாள்.
“உன் ரூம்லதான் அத்தையை வச்சிருக்கோம்” என்று சாந்தி சொல்ல, “வா” என்று அறைக்குள் அழைத்துச் சென்றார் மகளை.
வேலவனின் அண்ணன் மகன் கிருஷ்ணராஜும், மகள் ராகப்ரியாவும் தற்போது வீட்டில்தான் இருந்தனர். “கிருஷ்ணா… ப்ரியா” என்று தன் மக்களை உரக்க அழைக்க, பாட்டிக்குத்தான் ஏதோவென்று இருவரும் பதட்டத்தோடு வெளியே வந்தனர்.
“உன் அத்த வந்திருக்கா, போய் பேசுங்க” என்று ஆர்பரிப்போடு சொல்ல, “ஊஃப்… இவ்வளோதானா? நான் பயந்தே போய்ட்டேன்ம்மா” என்று அன்னையை கடிந்த கிருஷ்ணராஜ் தங்கையோடு பாட்டி இருக்கும் அறைக்குள் சென்றான்.
மேகலை அன்னையருகே கட்டிலில் அமர்ந்திருக்க, கீழே தரையில் முட்டிபோட்டு பாட்டியின் தலையை கோதியபடி நெற்றியிலும் இரு கன்னங்களிலும் கண்ணீரோடு முத்தமிட்டுக் கொண்டிருந்தாள் விஷாலினி.
பாட்டி மீது கிருஷ்ணன் மற்றும் ப்ரியாவிற்கும் மிகுந்த அன்புள்ளதுதான். வீட்டில் அனைவரும் நன்றாக பார்த்துக்கொள்வார்கள்தான். ஆனால் விஷாலினியின் அன்பு தங்களை விட இன்னும் மேலோங்கியிருப்பதாய் தோன்றியது கிருஷ்ணனிற்கு.
விஷாலினியின் நிறமே சிவந்த நிறமா? இல்லை அழுவதால் வெண்மை நிறம் சிவப்பிற்கு மாறியதா என்ற ஆராய்ச்சியில் இருந்த கிருஷ்ணனால், அவளின் காதோரத்திலும் நெற்றியிலும் படர்ந்திருந்த பூனைமுடிகளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
அழுகையை கட்டுப்படுத்தும் முயற்சியில் தோல்விகண்டு கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பவளின் அகன்ற விழிகளில் தொலைந்து போக ஆசை கொண்டது கிருஷ்ணன் மனது.
கால் மணிநேரம் ஆகியும் இன்னும் இவர்கள் வந்தது தெரியவில்லை மேகலையின் அன்னைக்கு. விஷாலினியின் செயலால் கன்னத்தில் மெண்மையான உணர்வு தோன்ற, கண்மூடிய நிலையிலேயே “சாந்தி” என்று குரல் கொடுக்க, “ம்மா” என்ற மகளின் குரலில் முயன்று கண்திறந்தார் மேகலையின் அன்னை.
மகளின் குரல் கேட்டதும் பரவசமாகி, “மேகல” என்றவரின் குரல் காற்றோடு கரைய, எத்தனை அறிவுரைகள் சொல்லிய குரல் இன்று நொடிந்து ஒலிப்பதை கேட்டவளின் மனம் பாரமாகிட “பாட்டிம்மா” என்று என்றழைத்தாள் மொத்த அன்பையும் குரலில் தேக்கி.
பேத்தியும் வந்திருக்காளா என்று உணர்ச்சி பெருக்கோடு பார்வையை விஷாலினி புறம் திருப்பினார்.
ஆறுமாதம் முன்பு கூட வீடியோ காலில் பேசினார். ஆனாலும் பல வருடம் கழித்து நேரில் பார்க்கும்போது தங்கசிலைபோல் பாட்டிக்கு காட்சியளித்தாள் விஷாலினி. பேத்தியை ரசித்து பார்த்து, “மகராசியா பொழைப்படா கண்ணு. அம்மாவை விட்டுடமாட்டேனு தெரியும். இருந்தாலும் சொல்றேன். என் மகளை பத்திரமா பார்த்துக்கோ” என்றார் உணர்ச்சிப்பெருக்கோடு.
வார்த்தைக்கு வார்த்தை இடைவெளி விட்டு மிகவும் சிரமப்பட்டுதான் பேசினார் மேகலையின் அன்னை. “பார்த்துக்குவேன் பாட்டிம்மா” என்றவள், பாட்டியின் கையை தன் கைக்குள் மெண்மையாய் அடக்கிக்கொண்டு “உனக்கு ஒன்னும் ஆகாது பாட்டிம்மா, இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்து உக்காரப் போற பாரு” என்றாள் குழந்தைக்கு சொல்லும் பாவனையில்.
“என் தங்கமே” என்றவருக்கு கண்ணீர் வர, “என் கடமை முடிஞ்சதுடாம்மா… இனி எனக்கு என்ன வேலை? என்னை நல்லபடியா அனுப்பி வச்சிட்டுதான் நீங்க இங்கயிருந்து போகனும்” என்று காற்று பாதி வார்த்தை பாதியாக திணறி திணறி பேச, அழுகையை அடக்க முடியாமல் பாட்டியிடமிருந்து விலகி, சுவற்று மூலையில் திரும்பி நின்றாள் விஷாலினி.
சற்று நேரம் பேசியதும் மேகலையின் அன்னைக்கு சோர்வாகிட, கண்மூடிக்கொண்டார்.
“அத்தை இவ்வளோ பேசினதே பெரிய விசயம், திரும்பவும் பேச ஒரு மணிநேரமாவது ஆகும். அதுக்குள்ள வந்து சாப்பிடு மேகலை” என்றவர், விஷாலினியிடம் “அங்க உள்ள போய் முகம் கழுவிட்டு வா கண்ணு” என்றார் சாந்தி.
இங்கு யாரிடமும் பேச விருப்பமில்லை விஷாலினிக்கு. ஆனாலும் தனது பாட்டியோடு பேச உதவிய ஒரே ஜீவன் என்பதற்காகவும், கட்டிலோடு கழிவுகளை வெளியேற்றும் நிலையில் உள்ள பாட்டியை அன்போடு பார்த்துக்கொள்பவர் என்பதற்காகவும் “எனக்கு பசியில்லங்க” என்றாள் பணிவாகவே.
“சென்னையிலயிருந்து இங்க வர மூனு மணிநேரம் ஆகியிருக்கும், பாட்டி விசயம் கேட்டு காலைலயும் சரியா சாப்பிட்டிருக்கமாட்டிங்க. எப்படி பசியில்லாம போகும்? ஃப்ரஸ்ஸாகிட்டு வா. சாப்பிடலாம்” என்று உரிமையோடு சொன்னான் கிருஷ்ணன்.
சாந்திக்கு பதிலளித்ததுபோல் கிருஷ்ணனுக்கு ஏதும் பதில் சொல்லவில்லை விஷாலினி. முகமும் தாழ்ந்தேயிருந்தது. இவர்கள் தங்களை மறுத்திருந்தாலோ, அவமதித்திருந்தாலோ கூட ஏற்றிருப்பாள். அப்படியான உறவோடுதான் அன்னை மனம் கசந்து இங்கிருந்து கிளம்பியது.
இவனின் அன்பு உண்மையானதென்றால் இத்தனை வருடங்கள் எப்படி பேசாமல் இருக்க முடியும்? இது எதோ காரண காரியத்திற்காக திடீரென முளைத்த பொய் அன்பு என்று மனம் எடுத்துரைக்க கோபம்தான் வந்தது விஷாலினிக்கு.
ஆனாலும் இவனும் தனது பாட்டியின் பேரனல்லவா? இவனை பேசினால் பாட்டிக்கு வலிக்குமே என்று அமைதிகாத்திருந்தாள் விஷாலினி.
விஷாலினியின் அமைதியில் “என் பேர் கிருஷ்ணராஜ், இது என் தங்கை ராகப்பிரியா, உன் மாமன் மகன் நான்” என்று அறிமுகம் செய்துகொண்டவன், “பசியில்லனா பரவால்ல, ட்ராவலிங் டையர்ட் போக டீ காபி எதாவது குடிக்கலாமே” என்றான்.
“தேவைப்படும்போது குடிப்பேன்” என்று பாட்டியோடு சென்றமர்ந்தாள்.
மாலை ஏழுமணிபோல் கோபாலனிடமிருந்து விஷாலினிக்கு அழைப்பு வர, தான் அனுப்பிய குறுஞ்செய்தியைப் பார்த்து விஷ்ணுதான் அழைத்திருப்பான் என்று மொபைலை எடுத்தவளுக்கு கண்ணீர் வெளிக்கிளம்பியது.
தனது துக்கத்தை பகிர்ந்து கொள்வதற்கு உரிமையானவர்கள் என்ற நினைப்பில் வந்த கண்ணீரா தெரியவில்லை. அழைப்பை ஏற்றவள் “மாமா” என்றாள் கமறிய குரலில்.
அந்த நேரம் அங்கே வந்த வேலவன் தங்கை மகள் தன்னைத்தான் அழைக்கிறாளோ என்று உள்ளே வந்தார் ஆவலோடு.
விஷாலினி மொபைலில் பேசவும் ஏமாற்றமாகிட வாடிய முகத்தோடு அவ்விடம் விட்டு நகர்ந்தார் வேலவன்.
முக்கிய குற்றவாளி ஒருவனை இரண்டு நாள்களாக தேடி கண்டுபிடித்து, சட்டப்படி விசாரணை நடத்த நீதிபதியிடம் அனுமதி வாங்கி, சிறைச்சாலைக்கு அழைத்து வந்து விசாரணயை முடித்து அதிகாலை மூன்று மணிக்குமேல் வீட்டிற்கு வந்த விஷ்ணுவர்தன், அடுத்தநாள் மதியம்தான் விஷாலினியின் குறுஞ்செய்தியைப் பார்த்தான்.
பதறியவனாய் விஷாலினிக்கு அழைக்க அவள் அழைப்பை ஏற்கவில்லை. மேகலைக்கு அழைக்க அவரும் ஏற்கவில்லை. தந்தைக்கு அழைத்தான். அழைப்பை ஏற்ற கோபாலன் “இங்க காஞ்சிபுரத்துலதான்ப்பா இருக்கேன்” என்று விசயத்தை விளக்கினார் வருந்திய குரலில்.
error: Content is protected !!