Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 2.1

அத்தியாயம் 2

பிரபாவதியின் பார்வை தவிப்போடு மேகலையையும், விஷாலினியையும் பார்த்திருக்க, அவர்களுக்கு எதோ தெரியும் என அன்னை நினைக்கிறார்கள். ஆனால் தெரிந்தாலும் இனி என்னாகப்போகுது என விரக்த்தியாய் நினைத்தான் விஷ்ணு.

இவர்கள் இங்கிருக்கவும்தானே என ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்தவர்களை ஊன்றிப்பார்த்து, பின்னே அன்னையிடம் பார்வையை திருப்பியவன், “ம்மா எதுக்கு இப்படி உக்கார்ந்திருக்க? போனவளை நினைச்சு உடம்பை கெடுத்துக்காத, இனி அவ என்ன ஆனா நமக்கென்ன?” என்றான் அதட்டலாக.



Advertisement

தாமும் மகளும் இங்கிருப்பது விஷ்ணுவிற்கு பிடிக்கவில்லை என்றறிந்தபோதும், “பத்து நாளுக்கு முன்ன விஷாலினி சொன்னா விஷ்ணு, எதோ உளறுறானு நினைச்சேன்” என்றவர், இதுகுறித்து காவ்யாவிடம் தான் பேசியதை மறைத்து, “ஆனாலும் மனசு கேட்காம, நம்ம பிள்ளையை நம்பினாலும் அவ வயசை நம்ப முடியாது, கொஞ்சம் ஜாக்கிரதையா பாருங்கனு அண்ணிகிட்ட சொன்னேன்ப்பா” என்றார் தவிப்பாக.

இத்தனை பெரிய விஷயத்தை தன்னிடம் ஏன் சொல்லவில்லை என்பதாய் விஷ்ணு அன்னையை வருத்தத்தோடு பார்க்க, “இந்தளவுக்கு துணிவானு நான் நினைக்கல விஷ்ணு” என்றார் வேதனையோடு.

விஷாலினியின் பார்வை கோபாலன் மீது வேதனையோடு பதிந்திருக்க, கோபாலன் மேகலையை பார்க்க, “யார் என்னனு எனக்கு தெரியாதுண்ணா. உறுதியா தெரிஞ்சிருந்தா கண்டிப்பா உங்கள்ட்ட சொல்லியிருப்பேன்” என்றார்.

Advertisement

தாய் தந்தையை எப்படி சரிசெய்வது என்ற வேதனையில் இருந்த விஷ்ணுவிற்கு, விஷாலினியும் மேகலையும் ஜன்னலைப் பிடித்தவாறு தங்களையே பார்ப்பது அவமானமாகத் தோன்ற, “உங்களுக்கு வேலையிருக்கும், நீங்க பாருங்க ஆன்ட்டி” என்றான்.

Advertisement

குடும்பத்தினுள் கலந்தாலோசிப்பார்கள் என்றுணர்ந்து, “வா விஷாலினி” என்று மகளிடம் சொல்லி முன்னே நடந்தார் மேகலை.

இருவரும் விலகியதை உறுதிசெய்து, ஹேங்கரில் மாட்டியிருந்த தனது பெல்ட்டை எடுத்து தந்தையைப் பார்த்தான்.

கோபாலனின் வேதனையை நினைத்த விஷாலினிக்கு, கால்கள் முன்னேற முடியாமல் போக, மீண்டும் இரண்டடி பின்னே வந்து ஜன்னலில் பார்த்தாள்.

Advertisement

கையில் பெல்ட்டோடு கோபாலனை பார்த்திருந்த விஷ்ணுவை பார்த்தவளது மனம் பதறியது. அச்சோ யாரை அடிக்கப்போறாங்க? மாமாவையா? அவர் என்ன பண்ணினார்? எனப்பதறி தன்போல் உள்ளே வர, “காவ்யா செய்ததை நீங்க மறக்க நான் இப்படி பண்ணிக்கவாப்பா?” என்று பெல்ட்டை பலமாய் சுழற்றினான் தன்மீதே.

“விஷ்ணு” எனப் பதறி அதட்டிய கோபாலன், “என்ன காரியம்டா செய்யிற? பக்கில்பட்டு ரத்தம் வருது பாரு” என விஷ்ணுவின் கையைப் பார்த்தவாறு எழுந்தார்.

தந்தை என்ன நினைக்கிறார் என்று இன்னும் பகுத்தறிய முடியவில்லை விஷ்ணுவால். ஆனால் அன்னைக்கு மகள் எங்கிருக்கிறாளோ என்ற பதட்டம் இருப்பது புரிந்தது.

விஷாலினிக்கு நிச்சயம் தன் தங்கை எங்கிருக்கிறாள் என்பது தெரியும் என உறுதியாய் நம்பினான். ஆனால் அவளிடம் விசாரிக்க மனம் வரவில்லை. அவளிடம் மட்டுமல்லாது யாரிடமும் விசாரிக்கும் எண்ணமில்லை விஷ்ணுவிற்கு.

பெற்றோரும் இனி காவ்யாவை நினைக்கக்கூடாது. ஆனால் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்களை தன் வழிக்கு கொண்டுவரும் எண்ணத்தில் தன்னை அடித்துக்கொண்டான்.

பிரபாவதியின் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்ட, “இப்போ என்னம்மா? எழவா விழுந்துடுச்சு?” என முறைத்தபடி பெல்ட்டை மீண்டும் சுழற்ற, விஷ்ணு தன்னை அடித்துக்கொண்ட முதல் அடிக்கே விதிர்த்துப்போன விஷாலினி அடுத்த சுழற்றுக்கு அவளையறியாமல் உள்ளே வந்தாள் பதட்டத்தோடு.

(நான்காம் வகுப்பு படிக்கும்போது கணக்கு பாடத்தில் சந்தேகம் கேட்க காவ்யாவை தேடி வந்தாள் விஷாலினி. அப்பொழுது விஷ்ணு உண்டுகொண்டிருக்கவே, தயங்கி தயங்கிதான் உள்ளே வந்தாள்.

ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே காரம் தாளாமல் வாயை ஊதினாலும், ருசிக்காக அரை தோசைவரை உண்பாள். வெகு நாள்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்திருக்கிறாள் என் “உனக்கு பிடிச்ச மசால் தோசை, சாப்பிடுறியா?” என்றான் விஷ்ணு.

விஷாலினி வேண்டாம் என மறுக்க, “பாடத்துல மட்டும் சந்தேகம் கேட்டுப்ப, சாப்பிடமாட்டியா?” என முறைத்தான்.

இங்கே உண்ணக்கூடாது என்ற பாட்டியின் கட்டளைக்கு பயந்து, “இப்போதாண்ணா சாப்பிட்டேன்” என விஷாலினி சொல்ல, இவள் தோசையை மறுத்த கோபத்தில் “என் தங்கை நான் சொன்னா சாப்பிடுவா. நீ வேணாம்னுட்டல்ல? இனி அண்ணானு சொன்ன பிச்சிடுவேன்” என மிரட்டினான்.

“குழந்தையை ஏன்டா மிரட்டுற?” என மகனை அதட்டிய கோபாலன், விஷாலினியிடம்,  “உனக்கு தோசை பிடிக்கும்தான? வேணாம்னு சொல்லவும் அண்ணன் மிரட்டிட்டான். அழாத” என தேற்றினார்.

“அண்ணா சொல்லக்கூடாதாம்” என விஷாலினி அழுதுகொண்டே ஒப்பிக்க, “அப்போ மாமா சொல்லு” என்றார் சிரித்தபடி.

“அப்பா” என அதிர்ந்தவன், “ஏய்… எங்க வீட்டுல சாப்பிடலயில்ல? இனி உள்ளயே வரக்கூடாது. என்கிட்ட பேசக்கூடாது” என கண்டித்தான்.

உதட்டை பிதுக்கியபடி, “அக்கா நீ எங்க வீட்டுக்கு வா” என காவ்யாவிடம் சொல்லி சென்றவள்தான். அதன் பின்னே இன்றுதான் விஷ்ணு வீட்டினுள் நுழைந்தாள்)

பிரபாவதி பதறி மகன் அருகே வர, அன்னை மீது அடி விழாமல் இருக்க பெல்ட்டை தளர்த்தியவன், “நான் அடிச்சிக்கக்கூடாதுனா நீங்க இரண்டு பேரும் இனி அவளை நினைக்கக்கூடாது” என்றான் கட்டளையாக.

“எப்படி விஷ்ணு?” என பிரபாவதி வெம்ப, அன்னையை தள்ளி நிறுத்தியவன், பின்னால் இருந்த விஷாலினியை கவனியாது பெல்ட்டை சுழற்ற, விஷ்ணு அருகே சென்று பெல்ட்டை பிடிக்க நினைத்தவளுக்கு அது முடியாமல் போக, விஷாலினியின் இடுப்பை பலமாய் சுற்றிக்கொண்டது பெல்ட்.

திரும்பியவன் முகம் பெரும் அதிர்வுக்குள்ளானதோடு, இவள் குறுக்கே வந்ததால்தானே அடிபட்டது? தவிர தானாக கிளம்ப சொல்லியும் போகாமல், குடும்பத்தினர் என்ன மனநிலையில் இருக்கிறோம் என்றும் யோசிக்காமல் உள்ளே வந்தவள் மீது மேலும் கோபம் வர, வலிக்கிறதா என்று கூட விசாரிக்காமல் இறுகிய முகத்தோடு நின்றிருந்தான் விஷ்ணு.

இடுப்பை சுற்றிய பெல்ட் அதீத வலியை கொடுத்தபோதும், “அடிச்சிக்காதிங்க, பாருங்க எப்படி ரத்தம் வருது… டிரஸ் மேல அடிபட்டதுக்கே வலி உயிர்போகுது, நீங்க ஷாட்ஸ் பனியனோட இருக்கிங்க” என கெஞ்சினாள் விஷ்ணுவின் தோளில் கண்பதித்தபடி.

வலி தாளமுடியாமல் இடுப்பை பிடித்துக்கொண்டு கண்களில் தேங்கிய கண்ணீரோடு விஷாலினி பேசியது குற்றவுணர்வை கொடுக்க, “கிளம்புறியா முதல்ல” என்றான் கடுப்பாக.

வீட்டினுள் வரக்கூடாது என்று விஷ்ணு சிறு வயதில் சொன்னது போலவே தற்போதும் சொல்லவும் விஷாலினியின் முகம் சட்டென சுருங்கிவிட்டது.

விஷாலினி முகம் வாடவும் மனம் கரைந்த கோபாலன், “நீ பின்னாடி இருக்கிறது தெரியாம பெல்ட்டை சுழற்றிட்டான், ரொம்ப வலிக்கும், போய் எதாவது ஆயின்மண்ட் போடும்மா” என்றார்.

பிரபாவதிக்கு தன் மகள் எங்கிருக்கிறாள்? யாரை நம்பி மோசம் போயிருக்கிறாள் போன்ற தவிப்புகள் இருக்க, காவ்யா மற்றும் விஷாலினியின் தோழமையை நினைத்து யாசகமாய் பார்த்தார் விஷாலினியை.

மகளை காணோமே என்று மேகலை “விஷாலினி” என்று குரல் கொடுக்க, வீட்டிற்கு செல்ல திரும்பிவயவள் கண்ணில் பிரபாவதியின் யாசகப்பார்வை விழவே, “என் படிப்பு மேல சத்தியம்த்த, அக்கா லவ் பண்றாங்கனு மட்டும்தான் தெரியும், யாரை பண்றாங்கனு தெரியாது. இது பெரிய தப்புன்றதால அம்மாகிட்ட சொன்னேன், அம்மாவும் உங்ககிட்ட பேசினேனு சொன்னதால நீங்க சரி பண்ணியிருப்பிங்கனு நினைச்சேன்.

இரண்டு நாள் முன்ன, இரண்டு நாள்ல கல்யாணமா? முடியவே முடியாதுனு போன்ல பேசிட்டிருந்தாங்க. என்னை பார்த்ததும் கட் பண்ணிட்டாங்க.

மாமாக்கு தெரியாம கல்யாணம் செய்துக்க போறிங்களாக்கா? இது தப்புனு சொன்னேன். சும்மா தமாசுக்கு பேசினாங்க, அப்பாக்கு தெரியாமலாம் கல்யாணம் செய்துக்கமாட்டேன். அதோட பி.ஜி முடிச்ச பின்னதான் கல்யாணம் செய்துக்குவேனு உறுதியா சொன்னாங்க.

அவங்க சொன்னதை நம்பினாலும் மாமாகிட்ட விசயத்தை சொல்லாம இருக்கிறது தப்புனு தோணவும் மாமாகிட்ட சொல்ல நினைச்சேன். ஆனா மாமாவை தனியா மீட் பண்ண முடியல” என்றவள் விஷ்ணுவை காண்பித்து,

“இவங்களும் கூடவே இருக்கவும் மாமாகிட்ட பேச பயமா இருந்துச்சு. நாளைக்கு காலைல தூங்கி எழுந்ததும் சொல்லிடலாம்னு முந்தாநாள் நைட்டெல்லாம் இதே நினைப்போடதான் இருந்தேன். ஆனா நேத்து நீங்க விடியும் முன்னவே வெளில கிளம்பிட்டிங்க. சத்தியமா இன்னைக்கே இப்படி வீட்டை விட்டு போவாங்கனு தெரியவே தெரியாதுத்த” என்றாள் பாவமாக.

“போட்டோ எதாவது காட்டினாளா?”

ஆமாம்ல? போட்டா கேட்டு எப்படியிருப்பாங்கனு பார்த்திருக்கலாம். பார்த்திருந்தா இப்போ அத்தைக்கு அடையாளம் சொல்லியிருக்கலாம். பேர் கூட கேட்க தோணாம போய்டுச்சு, அக்காவும் சொல்லல, போட்டோவும் காட்டவேயில்லை என “இல்லத்த” என்றாள் வருத்தமாக.

“ம்மா அவளை அனுப்பு. ஸ்டேஷனுக்கு போகனும்” என்றான் விஷ்ணு.

ஸ்டேஷனுக்கு போறாங்களா? அப்போ அக்காவை கண்டுபிடிச்சிடுவாங்க. அத்தை மாமாவை பார்த்தா அக்கா மனசு மாறி வீட்டுக்கு வந்திடவாங்க என்ற நம்பிக்கையோடு தனது வீட்டிற்கு கிளம்பினாள் விஷாலினி.

மகள் வீட்டினுள் நுழைந்ததும், “அறிவிருக்கா உனக்கு? அவங்க எந்த சூழல்ல இருக்காங்க? இப்பயும் வேடிக்கை பார்ப்பியா?” என முறைத்தார் மேகலை.

“இல்லம்மா, வேடிக்கை பார்க்க நிற்கல. உங்க பின்னாடியே வந்தேன்னா… இரண்டாவது ஜன்னல்கிட்ட வந்தப்போ அவங்க பெல்ட்டை எடுத்துட்டாங்க. யாரை அடிக்கப்போறாங்கனு எனக்கு ரொம்ப பயமாகிடுச்சும்மா. என்னையறியாம நின்னுட்டேன். உள்ளேயும் போய்ட்டேன்” என்று அதற்கு பின் நடந்ததை விளக்கினாள் கவலையோடு.

“அச்சோ பெல்ட்ல் அடிச்சிக்கிட்டானா? உனக்கும் அடிபட்டுடுச்சா?” என மகளை ஆராய்ந்து காயத்திற்கு களிம்பு போட்டுவிட்டார் மேகலை.

அன்னையின் முகமும் வேதனையில் இருக்கவே, “கவலைப்படாதம்மா, அக்காவை கண்டுபிடிச்சிடுவாங்க. இப்போ ஸ்டேஷன் கிளம்பறாங்க” என்றாள் தேறுதலாக.

“முட்டாள்… கண்டுபிடிச்சிட்டா மட்டும் எல்லாம் சரியாகிடுமா?” என்றார் ஆற்றாமையோடு.

“சரியாகாதாம்மா?” என ஏமாற்றமாய் கேட்டு, பிறகு “சரியாகிடும்மா… அத்தை மாமாவை பார்த்துட்டா அக்கா வந்திடுவாங்க” என்றாள் நம்பிக்கையோடு.

சிறு பிள்ளை பாவனை மாறாத பதினேழு வயது மகளிடம் திருமணம் முடித்து ஓரிரவு கணவனோடு தங்கிய பின்னே, அழைத்து வந்து மட்டும் என்ன லாபம் என்று விளக்கமாக பேச முடியாமல், “சொந்த பந்தங்களுக்கு தெரிஞ்சா எவ்வளோ அசிங்கம் தெரியுமா? உனக்கு சொன்னா புரியாது. தூங்கி எழுந்ததும் நேரா அங்க போயாச்சு. போய் குளி. வாரி முடிஞ்ச கொண்டையோட இருக்க” என கடுகடுத்தார் மேகலை.

“நானே அத்தை மாமா வேதனையில இருக்காங்கன்ற கவலைல இருக்கேன், இப்போ முகம் கழுவறதுதான் முக்கியமா? போம்மா” என்றாள் சோர்வாக.

மேகலைக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது. இப்படி வாழ்வை தேர்ந்தெடுத்து வாழ்வை தொலைத்தவர் அல்லவா? காவ்யா வாழ்வு அப்படி ஆகிவிடக்கூடாது என்று எத்தனை சொல்லியும் கேட்காமல் வாழ்வை தேர்ந்தெடுத்துவிட்டாள். பெற்றோருக்கும், உடன் பிறந்தவனுக்கும் தீராத அவமானம்தான்.

ஆனாலும் இனி அதை மாற்ற முடியாது. காவ்யாவின் பேச்சிலிருந்து அவளை நன்றாக அறிந்திருந்தார் மேகலை. அவளுக்கு நம்பிக்கை கொடுத்தவன் இனி வரும் நாள்களிலும் நம்பிக்கையானவனாக இருக்கவேண்டும் என வேண்டிக்கொண்டார் உளமாற.

விஷாலினியோ… ‘காவ்யாக்கா மனசு மாறி அத்தை மாமாவோட வந்திடனும். காவ்யாக்காவோட அண்ணனால அவங்களை விட்டுட்டு இருக்கவே முடியாது. அந்த கோபத்துலதான் அடிச்சிக்கிட்டாங்க’ என அவள் வயதுக்கும் புத்திக்கும் எட்டினவரை யோசித்து இஷ்ட தெய்வங்களிடம் வேண்டிக்கொண்டாள்.

மகள் யோசனையோடு அமர்ந்திருப்பதை பார்த்து, “இதைப் பத்தி யார்கிட்டயும் பேசக்கூடாது விஷாலினி. ரொம்ப வருசம் கழிச்சு அவங்க வீட்டுக்குள்ள போயிருக்க. எதோ பதட்டத்துல போய்ட்ட. இனி அப்படி நடந்துக்காத.

அத்தை மாமா சரியாகும்வரை ஜன்னல்ல பார்க்குறது, மாமாக்கு ஆறுதல் சொல்றேன்ற பேர்ல இரிடேட் பண்றதெல்லாம் கூடாது. அவங்களுக்கு ஆறுதல் சொல்ற வயசு உனக்கு இல்லை. சரியா?” என கண்டிக்க, சம்மதமாய் தலையசைத்தாள் விஷாலினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!