Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 2.2

ஸ்டேஷன் போகனும் என்றதும், மகன் அவனின் தங்கையை விடவில்லை. கோபம் இருந்தபோதும் தேடுகிறான் என்று பிரபாவதிக்கு சற்று நிம்மதியானது.

ஆனால் கோபாலனுக்கோ அவமானத்தில் முகம் விழுந்துபோனது. இப்படி காரணங்களுக்காக காவல்நிலையல் செல்வோம் என்றெல்லாம் ஒரு நாளும் நினைத்ததில்லை. அங்கு சென்றதும் அதிகாரிகள் கேவலமாக பார்ப்பார்களோ? பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்பார்களோ? என்ற பதட்டம் வரவே செய்வதறியாது அமர்ந்திருந்தார்.

மகள் காதலிப்பாள் என்றே நினைத்துப் பார்த்திராதவருக்கு, தற்போது மகள் காதலனோடு ஓடிவிட்டாள் என்பதையே இன்னும் ஏற்கமுடியாமல் போக, இதற்கு பின்வரும் சூழல்களை எப்படி எதிர்கொள்வோம் என்ற பயம் வந்தது.

மகள் மீது தேர்வு செய்தவன் நல்லவனாக இருப்பானா? இல்லை ஏமாற்றுப் பேர்வழியா? இனி அவளின் எதிர்காலம் என்ன? என்ற தவிப்புகள் பிரபாவதி மனதை ஆக்ரமிக்க, கணவன் எப்படியாவது காவல் நிலையத்திற்கு சென்றிட வேண்டும் என வேண்டிக்கொண்டார்.



Advertisement

“ப்பா… லேட் ஆக ஆக பிரச்சனைதான். கிளம்புங்க, நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்” என தனதறைக்கு சென்றான் விஷ்ணுவர்தன்.

விஷ்ணு உடைமாற்றி வர, பிரபாவதியின் கெஞ்சலில் மனமிறங்கிய கோபாலனும் தயாராக இருந்தார். “ம்மா அப்பாக்கு சாப்பிட கொடு” என்றான்.

“ஏதும் வேணாம்ப்பா, தொண்டைக்குள்ள இறங்காது” என்றார் கரகரப்பாக.

Advertisement

“ஸ்டேஷன் போனதும்லாம் வந்திட முடியாதுப்பா, இன்ஸ்பெக்டர் வெளில போயிருந்தார்னா வரவரைக்கும் வெய்ட் பண்ணவேண்டியிருக்கும். நீங்க சாப்பிடாததுனால ஏதும் மாறிடாது. அதோட அம்மாவும் பட்டினி கிடப்பாங்க” என்றான்.

Advertisement

வருவதற்கு தாமதமாகிவிட்டால் கணவனுக்கு முடியாதே. இன்னும் டீ கூட குடிக்கலயே என்ற கவலையில் காய்ச்சி வைத்திருந்த சத்துமாவு கஞ்சியை எடுத்து வந்தார் பிரபாவதி.

“ப்ச் வேணாம் பிரபா” என்றார் வேதனையாக.

“ப்பா குடிங்க, இனி நடக்கப்போறதை சந்திக்க தெம்பு வேணும்” என்றான் கட்டளையாக.

Advertisement

தான் குடிக்காமல் சென்றால் மனைவியும் பட்டினி கிடப்பாளே என்று கோபாலன் குடிக்க, அன்னையையும் குடிக்க வைத்து தானும் குடித்து, “கிளம்புறோம்மா” என எழுந்தான்.

“நானும் வரேன் விஷ்ணு”

“வேணாம்மா, அப்பாவும் நானும் பார்த்துக்கிறோம்” என்று தந்தையைப் பார்க்க, கோபாலன் கிளம்பினார்.

இருவரும் காரில்தான் சென்றனர். “அப்பா… ஸ்டேஷன்ல் என் பேச்சுக்கு மறுப்பு சொல்லக்கூடாது” என்றான்.

கோபாலன் கலவரமாய் பார்க்க, “இப்போ நாம கம்ப்ளைன்ட் கொடுக்க போகல. ஜஸ்ட் காவ்யா நம்மளோட இப்போ இல்லைனு தகவல் சொல்லப்போறோம் அவ்வளோதான்” என்றான் இறுகிய முகத்தோடு.

“விஷ்ணு” என்றார் அதிர்வாக.

“நாம வேணாம்னுதானே போய்ட்டா… அதனால நமக்கும் அவ வேணாம். ஓடிப்போனவளை கண்டுபிடிச்சு மட்டும் என்னாகப்போகுது?” என கோபமாய் கேட்டவன், “பொண்ணுதான் தெளிவா சொல்லிட்டு போய்ட்டாள்ல? அப்புறம் எதுக்கு தேடுறிங்கனு ஸ்டேஷன்லயும் கேவலமாத்தான் பார்ப்பாங்க… பேசுவாங்க.

அதோட என் தங்கையை கண்டுபிடிச்சு கொடுங்கனு யார்கிட்டயும் என்னால கெஞ்ச முடியாது. அப்படியே கெஞ்சி கேட்டாலும் காவ்யா நம்மளோட வருவாளான்றது சந்தேகம்தான். நம்ம அவமேல வச்ச அன்பை மறந்து வீட்டை விட்டு போனவளை இனி மறக்குறதுதான் நமக்கு நல்லது. இல்லைனா அசிங்கம்” என்றான்.

ஓரிரவில் இத்தனை அதிர்வுகளை தாங்க முடியாமல் போக, மகனுக்கு பதில் சொல்ல வார்த்தையின்றி பயணித்தார் கோபாலன். பத்து நிமிட பயணத்திற்கு பிறகு காவல்நிலையம் முன்பு காரை நிறுத்தி இறங்கினான் விஷ்ணு.

“ஏய்… யாருப்பா நீ? காரை இங்கதான் பார்க் பண்ணுவியா?” என முறைத்தார் ஓர் காவலர்.

எங்கே நிறுத்துவதென விஷ்ணு இடத்தை ஆராய, “ஸ்டேசனுக்கு வந்தியா?” என்றார்.

ஆமாம் என்பதாய் தலையசைக்க, “கம்ப்ளைன்ட் கொடுக்கவா?” என்றார் மிதப்பாக.

அதற்கும் விஷ்ணு தலையசைப்பையே கொடுக்க, “துரை வாய திறந்து பேசமாட்டிங்களோ?” என்றார் நக்கலாக.

“அப்படியில்லைங்க சார். சாரி சார், காரை எங்க பார்க் பண்ணட்டும் சார்?” என கேள்விகளை தொடுத்தான் பணிவாகவே.

“ம்… அங்க பண்ணிட்டு வா” என்று உள்ளே போனார் காவலர். பின்னே காவலர் சொன்ன இடத்தில் காரை நிறுத்திவிட்டு தந்தையோடு உள்ளே வந்தான் விஷ்ணுவர்தன்.

வரக்கூடாத இடத்திற்கு வந்திருக்கும் கோபாலனின் முக பாவனையிலேயே, பெண்ணை பறிகொடுத்திருக்கிறார்… காதல் விவகாரம் எனப் புரிந்துகொண்டார் இன்ஸ்பெக்டர்.

இருப்பினும் வழக்கம் போல, “என்ன விசயமா வந்திங்க?” என்றார்.

சொல்ல முயன்ற கோபாலனுக்கு “க்கூம்” என்ற சொல்லுக்கு மேல் வார்த்தை வரவில்லை.

தந்தை கையை ஆதரவாக பிடித்து, நான் பேசுறேன் என்று கண்களால் சொல்லி, “என் தங்கை” என்றான்.

“உன் தங்கைக்கு என்ன?” என்றார் அலட்சியமாக.

“என் தங்கை என் வீட்டுல இல்ல சார், லவ் பண்ணினவனோட போய்ட்டா” என்றான்.

‘படிக்கப் போற பிள்ளைங்க படிக்கிறாங்களா? இல்ல மேயிறாங்களானு கவனிக்கறதில்ல, எவனையாவது கூட்டிட்டு ஓடின பின்ன இங்க வந்து நம்ம உசிர வாங்க வேண்டியது’ என முணுமுணுத்து, “அதுக்கு நான் என்ன பண்ணனும்?” என்றார்.

“ஏதும் பண்ண வேண்டாம் சார். அவ எங்க வீட்டுல இல்ல… இதை பதிவு செய்யத்தான் இங்க வந்தோம்” என்றான் திடமான குரலோடு.

இவனின் திடமான குரல் அதிகாரிக்கு திமிரான குரல்போல் தோன்ற, “ஓ… நீ இப்படி வரியா?” என புருவத்தை உயர்த்தி இறக்கினார்.

விஷ்ணு புரியாமல் பார்க்க, “இப்படி கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு, பொண்ணு கிடைச்சதும் கொலை பண்றதுக்கான முன்னேற்பாடா?” என்றார்.

“சார்…” என விஷ்ணு அதிர, கோபாலன் கண்கள் கண்ணீரை வெளியனுப்பியது.

தந்தை நிலையை சகிக்க முடியாமல் “அப்படிலாம் இல்லைங்க சார், காவ்யா இப்படி பண்ணினான்றதையே இன்னும் எங்கப்பாம்மாவால கிரகிக்க முடியல. கொலை பண்ற அளவுக்கு கொடூரமானவங்களா அவளை தேடிப்பிடிச்சு கொல்ல கிளம்பியிருப்போம் சார். இங்க வந்திருக்கமாட்டோம்” என்றான் வேதனையோடு.

கோபாலனின் உண்மையான வேதனை கண்டும், தந்தைக்காக வருந்தும் மகனின் வேதனை கண்டும், இவர்கள் வருத்தம் உண்மைதான் எனப்புரிந்த அதிகாரி, “நீங்க யாரு? எந்த ஏரியாலயிருந்து வரிங்கனும், உங்க கம்ப்ளைன்ட் என்னனும் தெளிவா எழுதிக்கொடுங்க” என்றார்.

விஷ்ணு எழுதிக்கொடுத்ததும், இரண்டு நிமிஷம் கூட ஆகல, அதுக்குள்ள எழுதிட்டானா என்ற யோசனையோடு படித்துப்பார்க்க, அதில்… ‘தாய் தந்தை பெயர், மற்றும் முகவரியோடு, தங்கை அவளின் விருப்பத்திற்கு சென்றுவிட்டாள். தற்போது அவள் எங்கள் பொறுப்பில் இல்லை’ என்று மட்டும் இருந்தது.

“நாளைக்கு எங்கையாவது செத்து கிடந்தா அப்போவும் எனக்கென்னனு இப்படியே இருப்பிங்களா?” என்று கேட்க, கோபாலன் சத்தமாகவே அழ ஆரம்பித்தார்.

“அப்பா” என தந்தையை தேற்றிக்கொண்டிருந்த விஷ்ணுவை வியந்து பார்த்தபடி உள்ளே வந்தார் கான்ஸ்டபிள் நாகநாதன்.

“விஷ்ணு தம்பி… என்ன இங்க?” என்றார் அக்கறையோடு.

“அங்கிள்” என்றவன் கண்கள் கலங்கியது.

“என்னப்பா?” என்றார் சற்றே பதட்டத்தோடு.

“உனக்கு தெரிஞ்சவங்களா நாகநாதன்?” என்று இன்ஸ்பெக்டர் கேட்க, “ஆமாம் சார், கோபால் அண்ணா ரொம்ப நல்ல டைப். விஷ்ணு தம்பி தங்கமான பையன்” என்றார்.

“ஓ…” என்றவர், “அவங்க பொண்ணு யாரையோ கூட்டிட்டு ஓடிடுச்சாம்” என்றதுதான்… “சார்…” என பெரிதாய் அதிர்ந்து, அப்படியா என்பதாய் விஷ்ணுவைப் பார்க்க, “ஆமாம் அங்கிள்” என்றான்.

தங்கை மீதான விஷ்ணுவின் பாசமறிந்தவராய், “இல்லப்பா… அப்படி இருக்காது, யாராவது பொய் சொல்லியிருப்பாங்க, பாப்பாவோட ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கு கால் பண்ணி பார்க்கலாம்” என்றார் நாகநாதன்.

“இல்ல அங்கிள், அவ ஓடித்தான் போய்ட்டா, எங்களை ஏமாத்திட்டா” என்றவன், அன்னையின் மொபைலுக்கு காவ்யா அனுப்பிய செய்தியை ஒலிக்க விட்டு, “ப்ராப்பரா எப்படி கம்ப்ளைன்ட் எழுதனும்னு சொல்லுங்க அங்கிள். எழுதிக்கொடுத்துட்டு கிளம்பறோம், அப்பாவால இங்க இருக்க முடியல” என்றான் கெஞ்சலாக.

விஷ்ணுவர்தன், கோபாலன் நிலையை நினைத்து வருந்தியபடி, இன்ஸ்பெக்டரிடம் வந்தவர், “சார், விஷ்ணு இல்லைனா என் மகன் யு.பி.எஸ்.சி எக்ஸாமே எழுதியிருக்கமாட்டான். இரண்டு பேரும் சேர்ந்து இரண்டு வருசமா எங்க வீட்டுலதான் படிப்பாங்க. என் வீட்டுல இரண்டு பொண்ணுங்க இருக்காங்க, கூட பிறந்த சகோதரி போலத்தான் விஷ்ணு பழகுவான்.

நல்ல பர்சன்ட்டேஜ்ல கிரிமினாலஜி முடிச்சிருக்கான். இன்னும் இரண்டொரு வருசத்துல பெரிய அதிகாரி ஆக நிறைய வாய்ப்பிருக்கு சார். விஷ்ணு ரொம்ப நல்லா எக்ஸாம் எழுதியிருக்கிறதா என் மகன் சொன்னான்” என்றார் பணிவாகவே.

தமக்காக நாகநாதன் பொய்யுரைக்கிறார் என்றெண்ணி, “இல்லைங்க… அப்படிலாம் இல்ல, என் மகன் குரூப் ஒன் எக்ஸாம்தான் எழுதியிருக்கான்” என்றார் கோபாலன்.

“அங்கிள் சொல்றது உண்மைப்பா. யு.பி.எஸ்.சி எக்ஸாமும் எழுதியிருக்கேன், எக்ஸாம்ல பாஸ் பண்ணிட்டு சர்ப்ரைஸா உங்களுக்கு சொல்லலாம்னு இருந்தேன், ஆனா குரூப் ஒன் எக்ஸாமும் எழுதியிருக்கேன்ப்பா” என்றான் விஷ்ணுவர்தன்.

கான்ஸ்டபிள் சொன்னதை கேட்டு வியந்த இன்ஸ்பெக்டர், விஷ்ணுவை மேலிருந்து கீழ் வரை பார்த்து, “ஆள் நல்லா வாட்டசாட்டமாத்தான் இருக்க… ஆனா வருங்கால உயர் அதிகாரிக்கான மனதிடம் உன்கிட்ட இல்லையேப்பா” என்றார் வருத்தமாக.

கரகரத்த குரலை “க்கூம்” என செருமி சரி செய்து, நிமிர்ந்து நின்றான் திடமாக. ஆனால் ஏதும் பேசவில்லை. “உன் தங்கையோ மொபைல் கொடு, எதாவது க்ளூ கிடைக்கும்” என்றார் இன்ஸ்பெக்டர்.

“அவ மொபைலை எடுத்துட்டு வரலைங்க சார். இது எங்கம்மாவோட மொபைல். எங்களுக்கு அவ எங்க இருக்கா? யாரை கல்யாணம் செய்துக்கிட்டானு எதுவும் தெரிய வேணாம். ஏற்கனவே என் அப்பாம்மா மனசு உடைஞ்சி போயிருக்காங்க.

அவ மொபைலை ஆராய்ந்து, அதுல அவனோட இருக்கிறதை பார்த்தா இன்னும் நொருங்கிடுவாங்க. இனி அவளுக்கு எது ஆனாலும் நாங்க அதுக்கு பொறுப்பில்லைன்னு பதிவு பண்ண மட்டும்தான் வந்தோம்” என்றான்.

“பொதுவா பொண்ணுங்க ஓடிப்போனா, பொண்ணை பெத்தவங்க கண்ணை கசக்கிட்டு வருவாங்க, என் பிள்ளைக்கு ஒன்னும் தெரியாது, அவன்தான் எதோ பண்ணிட்டானு சொல்வாங்க. ஆனா நீ கொஞ்சம் வித்யாசமா இருக்க. ஆனாலும் இப்படி சொன்னா வழக்கமா எங்க போலீஸ் புத்தி உங்களையும் சந்தேகப்படும்.

நம்ம நாகநாதனே உங்களைப் பத்தி உயர்வா சொல்றார்ன்றதால உங்களை நம்பறேன். ஓடினவளை நினைக்காம உன் வாழ்க்கையை வாழு. கொழுப்பு குறைஞ்சதும் தானா தேடி வருவா” என்றார்.

சரியென்பதாய் தலையசைத்து, “ப்ளீஸ் சார்… கண்டிப்பா கேஸ் பைல் செய்திருங்க” என்று பணிவாக சொல்லி, நாகநாதனுக்கும் நன்றி சொல்லி இருவரும் கிளம்பினர் வீட்டிற்கு.

வீட்டினுள் நுழைந்ததும், “ஏங்க காவ்யா எங்க இருக்கானு எதாவது தெரிஞ்சதா?” என தவிப்போடு விசாரித்தார் பிரபாவதி.

காவல் நிலையத்தில் நடந்ததை மனைவிக்கு விளக்கவே, “அவன்தான் கோபத்துல இருக்கான்னா நீங்களும் இப்படி இருக்கலாமா? எப்படிங்க அப்படியே விடறது?” என கண்ணீர் விட்டார் பிரபாவதி.

வழக்கம்போல் தனது வீட்டு ஜன்னலிலிருந்து கோபாலன் மற்றும் பிரபாவதி பேசியதை கேட்டுக்கொண்டிருந்த விஷாலினியின் கண்களும் கண்ணீரை வெளியனுப்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!