Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை அச்சம் நாணம் 21.1

அத்தியாயம் 21

அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்திருந்தாள் விஷாலினி. விஷ்ணுவைப் பார்க்க உறங்கிக்கொண்டிருந்தான். அறைக்கதவை திறந்து வெளியேற, ஹாலில் கீழே மெத்தையை போட்டு கோபாலன் மற்றும் இராமன் உறங்கிக்கொண்டிருந்தனர்.

வீட்டிற்கு சென்று குளித்து வரலாமென முன்கதவை திறக்கவே, சத்தத்தில் விழித்துக்கொண்டார் கோபாலன். “எங்கமா போற?” என்றார்.

“மாமா” என்று திரும்பியவள், “வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வரேன் மாமா” என்றாள்.



Advertisement

“இங்கையே குளிக்க வேண்டியதுதான? இரு அத்தையை எழுப்பறேன்” என்று எழுந்தார்.

“வேணாம் மாமா, அத்தை தூங்கட்டும், என் டிரஸ்சும் இங்க இல்ல, சீக்கிரம் குளிச்சிட்டு வந்திடறேன்”

வெளியே வந்த பிரபாவதி, “உன் ரூம்லயே போய் குளி. அங்க கபோர்ட்ல உன் டிரஸ் வச்சிருக்கேன். மேகலை கூப்பிடும்போது வீட்டுக்கு போய்க்கலாம்” என்றார்.

Advertisement

சரியென தலையசைத்து அறைக்குள் சென்று குளித்து வந்த பின்னேயும் விஷ்ணு உறங்கிக்கொண்டிருக்க, மெத்தையை சுத்தம் செய்ய நினைத்து அதன் மீதிருந்த பூக்களை எடுத்தபடி, “தேவையில்லாம எதுக்கு இந்த டெகரேஷன்? வீணா போச்சு காசு” என்று புலம்பினாள்.

Advertisement

சிரித்தபடி எழுந்தமர்ந்தவன், “என் வாழ்க்கையே வீணா போச்சு, டெகரேஷன் வீணா போனதுதான் வருத்தமாயிருக்கா?” என்றான் பொய்யான முறைப்போடு.

எழுந்துட்டானா? என்று அதிர்ந்தாலும், “என்னது? வாழ்க்கை வீணா போச்சா?” என்று கேட்க, இவளின் பாவனைக்கு இங்கிருந்தால் எதாவது செய்திடுவோம் என்று குளியலறைக்குள் புகுந்தான்.

இவள் அறையை சுத்தம் செய்தபின்னும் வெளியேறாமல் விஷ்ணுவிற்காக காத்திருக்க, பிரபாவதி அழைத்தார். விஷாலினி வெளியே வர, “விஷ்ணு எழுந்துட்டானா?” என்றார்.

Advertisement

“குளிக்க போயிருக்கார்த்த”

“சரி வா, டீ குடிச்சிட்டு அவனுக்கும் எடுத்துட்டு போவ” என்று கிச்சன் செல்ல, பின்னோடு சென்றவள், “நான் டீ போடவாத்த?” என்றாள்.

“வேண்டாம், நான் போடுறேன்” என்று அடுப்பை பற்ற வைத்தபடி மருமகளை ஆராய, புதுப்பெண்ணிற்கான நாணம் இல்லாமல், இயல்போடு இருந்தாள் விஷாலினி.

காவ்யாவைப் பற்றி எதாவது கேட்டு சண்டையாகியிருக்குமோ என்று, “காவ்யா பத்தி எதாவது சொன்னானா?” என்றார்.

“இல்லத்த” என்றாள் வருத்தமாக.

“காவ்யா பத்தி யோசிச்சு அவனோட சண்டை போடாத”

சரியென்பதாய் தலையசைக்க, சற்று நேரத்தில் டீ யை கொடுத்து, விஷ்ணுக்கும் போய் கொடு” என்றார்.

இவள் டீயோடு உள்ளே போக, அப்பொழுதுதான் குளித்து வந்தான் விஷ்ணு. இவன் துண்டோடு இருப்பதெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை விஷாலினிக்கு. “வாழ்க்கையே வீணாகிடுச்சுனு சொல்றிங்க, அப்படி என்ன பண்ணிட்டேன்?” என்றாள் ஆற்றாமையோடு.

துண்டையும் கழட்டிட்டு நின்னா கூட, இவளுக்கு இவ பிரச்சனைதான் முக்கியம் என கிண்டலாய் நினைத்தபடி, அவள் கையிலிருந்து டீயை தானாக எடுத்துக்கொண்டவன், “டீ குடி, ஆறிடப்போகுது” என்றான்.

இவங்களே தூங்க சொல்லிட்டு வாழ்க்கை போச்சாம்ல? என்று கோபமாய் நினைத்தவள் “நான் அத்தையோட போய் குடிக்கிறேன்” என்று வெளியேறினாள்.

காவ்யா அறை திறந்திருந்தது. பிரபாவதியும் அங்கே இருக்கவே, விஷாலினியும் அங்கே சென்றாள். “ஹே விஷாலினி, வா வா” என்றவள், “விஷ்ணுவோட டீ குடிக்கவேண்டியதுதான?” என்றாள் செல்ல முறைப்போடு.

சின்ன சிரிப்போடு விஷாலினி அமர, “நைட் என்னை பத்தி பேசுனியா?” என்றாள் விசாரணையாக.

“இல்லையே” என்றாள்.

விஷாலினி சொல்வது பொய்யில்லை என்று புரிய, இதற்குமேல் எப்படி கேட்பது என்பதாய் அன்னையைப் பார்த்தாள் காவ்யா.

“எதுக்கு இவ்வளோ சீக்கிரம் எழுந்து குளிச்ச?”

“முடி காய லேட் ஆகும்க்கா, காலேஜ் போகனும்ல? அதான் சீக்கிரம் எழுந்து குளிச்சேன்”

“எது? காலேஜ் போறியா? கல்யாணத்துக்குனு இரண்டு நாள் கூட லீவ் போடலையா நீ?”

“ம்க்கூம், உங்கண்ணனே இன்னைக்கு காஞ்சிபுரம் போறாங்களாம், நான் மட்டும் படிப்பை கெடுத்து எதுக்கு இருக்கனும்?”

“ஓ… அப்போ விஷ்ணு இருந்தா லீவ் போடுவேனு சொல்லு” என்றாள் புன்னகையோடு.

சிரித்தவள், “நைட் ரொம்ப அழுதிங்களாக்கா? கண்ணெல்லாம் வீங்கியிருக்கு?” என்றாள் அக்கறையாக.

இல்லையென்பதாய் காவ்யா தலையசைத்தாலும், காவ்யாவின் முகம் வாடிட “கவலைப்படாதிங்கக்கா, எதாவது யோசிப்போம்” என்றாள் ஆறுதலாக.

விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்திட்டதை நினைத்து கண்கள் கலங்கியது காவ்யாவிற்கு. “அழாத காவ்யா, உங்கப்பாவே டென்ஷன் இல்லாமத்தான் இருக்கார். அப்படினா உனக்கு பிரச்சனையில்லைனுதான் அர்த்தம். இரண்டாவது கல்யாணத்துக்கு அப்பாவும் சம்மதிக்கமாட்டார், அப்பாக்கு பிடிக்காததை விஷ்ணு செய்யமாட்டான்” என்றார் ஆறுதலாக.

“சித்தார்த் பொண்ணு கேட்டதாலதான் இப்படி முடிவெடுத்திருக்கானு தோணுது. இல்லனா நாலு வருசமா பேசாம இருந்தவன், இப்போ எதுக்கு பேசனும்? திவாகரை டிவோர்ஸ் பண்ண வைக்கத்தான் பேசியிருக்கான். நினைச்சதை நடத்தி காட்டாம விடமாட்டானோனு எனக்கு ரொம்ப பயமா இருக்குமா” என்றாள் வேதனையோடு.

“அவர் எப்படி திட்டம் போட்டாலும் உங்களுக்கு பிடிக்காததை நடக்க விடமாட்டேன்க்கா, நீங்க கவலைப்படாதிங்க” என்றாள் மிகுந்த அக்கறையோடு.

“நான் திரும்பவும் சொல்றேன்… என்னைப் பத்தி விஷ்ணுகிட்ட பேசி உங்க சந்தோசத்தை கெடுத்துக்கக்கூடாது, கண்டிப்பா எனக்கு அது சந்தோசத்தை தராது. என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன், விஷ்ணு தனியா இருப்பான், நீ போ” என்றாள் காவ்யா.

பாவமாய் பார்த்தாள் விஷாலினி. ட்ராக் டீ சர்ட்டோடு வெளியே வந்தவன் இவர்களை கவனித்தும் கண்டுகொள்ளாமல் வெளியேறினான். “அவங்க ஜாகிங் கிளம்பிட்டாங்க, இப்போவாவது உங்களோட இருக்கலாமா?” என்றாள் உரிமையாக.

“இருக்கலாம், ஆனா நான் இப்போ குளிக்க போகனுமே” என்று இலகுவாய் சொல்லி குளிக்க ஆயத்தமாக, “நீயும் போய் முடியை காய வை விஷாலினி” என்று கிச்சனுக்கு சென்றார் பிரபாவதி.

மகள் விஷ்ணுவோடு ஒன்றிப்போனாளா என்றறியும் ஆர்வத்தோடு அதிகாலையிலேயே எழுந்த மேகலை, மகள் மருமகனை மறு வீட்டிற்கு அழைக்கும் தகவலை சொல்லும் நோக்கோடும் கோபாலன் வீட்டிற்கு வந்தார்.

முடியை உலர்த்த அறைக்குள் செல்ல எத்தனித்த விஷாலினி, மேகலையை கண்டதும் “ம்மா” என்று இயல்பான மகிழ்வோடு அழைத்தாள்.

மகளை பார்த்ததுமே அறிந்துகொண்டார் ஏதும் நடக்கவில்லை என்று. ஏமாற்றம்தான் என்றாலும், “பார்டா, குளிச்சிட்ட போல” என்றார் மெச்சுதலாக.

“வா மேகலை” என்று கோபாலன் வரவேற்க, “உள்ளே வந்தவர், “இன்னைக்கு அங்க சாப்பிட்டுக்கலாம்ண்ணா, மறு வீட்டு விருந்து மாதிரி” என்றார் சங்கடத்தோடு.

மேகலைக்கு அத்தனை ருசியாய் சமைக்க வராது என்பதால் இந்த தயக்கம் என்றுணர்ந்து, “சாப்பிட்டா போச்சு மேகலை, இரண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்” என்றார் பிரபாவதி.

மருமகனிடம் விருந்துக்கு வர சொல்ல வேண்டுமே என்று மேகலை விஷ்ணு அறையைப் பார்க்கவே, “விஷ்ணு ஜாகிங் போயிருக்கான்ம்மா” என்றார் கோபாலன்.

“சரிண்ணா. நான் போய் மளிகை வாங்கிட்டு வந்திடறேன், அவசரம்னு சாப்பிடாம கிளம்பிடப்போறாங்க” என்று மார்கெட் கிளம்பினார் மேகலை.

எட்டு மணிபோல் விஷ்ணு வரவும், “மேகலை அங்க சாப்பிட கூப்பிட்டிருக்கு விஷ்ணு” என்றார்.

“எதுக்குப்பா ஆன்ட்டிக்கு கஷ்டம்?” என்று விஷ்ணு சொல்ல, “அம்மாக்கு கஷ்டமில்ல, உங்களுக்குத்தான் அம்மா சமையலை சாப்பிடறது கஷ்டம்” என்றாள் சிரிப்போடு.

“ஹே லூசு… அப்படிலாம் ஒன்னுமில்ல, ஆன்ட்டி முன்னாடி இப்படி பேசி வைக்காத” என்று அதட்டி, “சீக்கிரம் ரெடியாகு. சாப்பிட்டதும் உன்னை கூட்டிட்டு போய் காலேஜ்ல விட்டுட்டு நான் கிளம்பறேன்” என்று அறைக்குள் சென்றான்.

இன்று காவ்யாவோடு இருக்க வேண்டும் போல் இருக்கவே, விஷ்ணுவிடம் சொன்னால் அனுமதிக்கமாட்டான் என்று “அத்த… இன்னைக்கு லீவ் போட்டுக்கறேன்” என்றாள் பிரபாவதியிடம்.

வெளியே வந்தவன், “நேத்து போகனும்னுதான சொன்ன? இப்போ எதுக்கு லீவ்? கிளம்பு” என்றான்.

“நேத்து கல்யாணம் ஆகி இன்னைக்கே காலேஜ் போனா ஃப்ரண்ட்ஸ் கிண்டல் பண்ணுவாங்க” என்றாள் பாவம் போல்.

“ஃப்ரண்ட்ஸ் கிண்டலுக்கு அசறுற ஆளா நீ?” என்று முறைத்து, “எந்த சாக்குபோக்கும் சொல்லக்கூடாது. இன்னைக்கு உன்னை காலேஜ்ல விட்டுட்டுத்தான் நான் கிளம்புவேன். போய் ரெடியாகு” என்று கட்டளையாய் சொல்லி அறைக்குள் சென்றான்.

பிரபாவதியும், மேகலையும் சமையலை முடித்த பின்னே மேகலை உணவுண்ண அழைத்தார். காவ்யா வர மறுக்கவே, காவ்யாவிற்கு இங்கே கொண்டு வந்து கொடுத்த மேகலை, மற்ற அனைவருக்கும் தனது வீட்டில் விருந்து வைத்தார்.

விருந்தை முடித்ததும் தனது ராயலில் மனைவியை அழைத்துச் சென்றான் கல்லூரிக்கு. “எதுக்கு இப்படி பறக்குறிங்க? மெதுவா ஓட்டுங்க, எனக்கு பயமாயிருக்கு” என்றாள்.

“மணி எட்டேமுக்கால், இந்த ஸ்பீட்ல போனாதான் ஒன்பதரைக்கு காலேஜ்க்கு போக முடியும், பயமாயிருந்தா என்னை பிடிச்சுக்கோ”

‘நேத்து நைட் நான் பக்கத்துல நெருங்கியும் இவர் என்னை பிடிக்கமாட்டாராம், ஆனா இவர் சொன்னதும் நான் இவரை பிடிச்சுக்கனுமாம்’ என்று முணங்கி “கீழ விழுந்தாலும் உங்களை பிடிக்கமாட்டேன்” என்று பைக்கை இறுகப்பற்றினாள்.

இவள் முணகலை கண்ணாடியில் பார்த்தவன், சிரித்தவாறே பைக்கை செலுத்தினான் சற்றே வேகம் குறைத்து. கல்லூரிக்கு வந்ததும், இவள் இறங்க, சற்று தூரத்தில் நின்றிருந்த வகுப்பு தோழிகள் “இன்னைக்கே வந்துட்டியா? தூங்காம க்ளாஸ் கவனிப்பியா?” என்று கோரசாய் சொல்லி சிரித்தனர்.

ஒற்றை விரலைகாட்டி தோழிகளை மிரட்டும் பாவனைகாட்டிய விஷாலினி, “வீட்டுல இருந்திருந்தா காவ்யா அக்காவுக்காவது ஆறுதல் சொல்லியிருப்பேன், கெஞ்சிக்கேட்டும் பிடிவாதமா கூட்டிட்டு வந்து விட்டுட்டிங்கள்ல? கிளம்புங்க” என்றாள் ஆதங்கமாக.

இதையை நினைத்துக்கொண்டிருப்பாள் என்று “இப்போவும் காவ்யா மேல உள்ள கோபம் எனக்கு கொஞ்சமும் குறையல. கோழைத்தனமா யாருக்கும் தெரியாம கல்யாணம் செய்தவனையும் என்னைக்கும் மன்னிக்கமாட்டேன்.

ஆனா என் அப்பாம்மா நிம்மதிக்காக பார்த்தாக வேண்டியதாயிருக்கு. என் அப்பாம்மா நிம்மதிக்காக அவ வாழ்க்கையை சரி பண்ணத்தான் நினைச்சிருக்கேன். காவ்யா பத்தி கவலைப்படாம படிப்பை கவனி. இது விசயமா காவ்யாகிட்டயோ, என் அம்மாகிட்டயோ ஒத்த வார்த்த பேசக்கூடாது” என்றான் தன்மையாக.

“நிஜமாங்களா?” என்று கண்களை அகல விரித்து ஆர்ப்பரித்தவள், “என்ன ப்ளான் பண்ணியிருக்கிங்க?” என்றாள் ஆர்வமாக.

“இது உனக்கு தேவையில்லாத விசயம். கிளம்பு” என்றான் தன்மையாகவே.

“நான் காவ்யாக்காகிட்ட சொல்லமாட்டேன், ப்ளீஸ் சொல்லுங்களேன், என்னால சஸ்பண்ஸ் தாங்க முடியாது” என்றாள் கெஞ்சலாக.

“பெருசா ஒன்னும் ப்ளான் இல்ல. அவனா வந்து மரியாதையா கூப்பிடுவான். கூப்பிடலனா கூப்பிட வைப்பேன்” என்றான் சிரிப்போடு.

“அத்தை மாமாவோட மரியாதையோட வேற என்ன வேணும்? செய்ங்க… செய்ங்க… நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்” என்று சந்தோசமாய் சொல்லி, “நேத்து நைட்டே சொல்லியிருக்கலாமில்ல?” என்றாள்.

“சொல்லியிருந்தா?”

“சொல்லியிருந்தா சந்தோசப்பட்டிருப்பேன்” என்றவள், “டைட் ஹக் கொடுத்து உங்களையும் சந்தோசப்பட வச்சிருப்பேன்” என்றாள் சன்னக்குரலில்.

“க்ளாஸ்க்கு டைமாச்சு… போடீ” என்று சிரித்தபடி பைக்கை கிளப்பினான் விஷ்ணுவர்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!