Skip to content
Post Views: 2,401

அகம் 16
மறுநாள் அனைவரும் ரெசார்டிலிருந்து கிளம்பினார்கள். ராகவி அங்கிருந்து நேராக அவளது புகுந்த வீட்டிற்கு சென்று அங்கிருந்து அன்று மாலை மறுவீடு சடங்கிற்காக அவளது வீட்டிற்கு வருவதென ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
Advertisement
ஆனால் நிகர்வேலன் நயந்தினி திருமணம் திடீரென நடக்கவே, இன்னும் இரண்டு நாளில் பெங்களூரில் ராகவிக்கு திருமணப் பரிசாக கொடுக்க வேண்டிய கடையின் திறப்பு விழா நடக்கவிருப்பதால், இங்கேயும் திருநெல்வேலிக்கும் போய் வர கஷ்டமாக இருக்கும், முக்கியமாக பெரியவர்களுக்கு சிரமம்.
Advertisement
அதனால் இங்கு சாகரியின் வீடு இருந்தாலும், நிகர்வேலன் தொழில் விஷயமாக எப்போதும் சென்னையில் தான் வாசம். அதனால் அவன் தங்குவதற்காக தனியாக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கி வைத்திருக்கிறான். இப்போது தற்காலிக்கத்திற்கு அங்கே சென்றுவிட்டு அங்கிருந்து நயந்தினியை மறுவீட்டிற்கு அனுப்பலாம், பின் கடை திறப்பு விழா முடிந்ததும் திருநெல்வேலிக்கு செல்லலாம் என்று முடிவு செய்தார்கள்.
Advertisement
அதைக்கேட்ட நயந்தினியோ நிகர்வேலனை தனியாக அழைத்தவள், “எனக்கு, மறுவீட்டுக்கெல்லாம் ஒன்னும் போக வேண்டாம், எனக்காக நீங்க தான் இதை மத்தவங்கக்கிட்ட சொல்லணும்,” என்று கேட்க,
Advertisement
“இது ஒரு சம்பிரதாயம் நயா, உன்னோட அம்மா மேல உனக்கு கோபம் இருக்கலாம், அதுக்காக அது நிரந்தரமாகிடுமா? சடங்கு சம்பிரதாயத்துக்காக போலாமே,” என்று அவன் பதில் கூறவும்,
“நானும் அம்மாவும் பேசினதை கேட்டு தானே இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பமில்லைன்னு நீங்க தெரிஞ்சிக்கிட்டீங்க, அப்போ நான் என்ன பேசினேன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், நான் உங்க மனைவி. உங்க மனைவி மட்டும் தான், அவங்க பொண்ணு கிடையாது. இதில் நான் உறுதியா இருக்கேன்.” என்று அவள் பிடிவாதமாக கூறினாள்.
அந்த நேரத்திலும் அவள் சொன்ன வார்த்தை அவனுக்கு இனித்தது. போக போக அவளுக்கு அவள் அன்னையின் மீதுள்ள கோபம் போய்விடும் என்று நம்பியவன், “சரி உனக்கு எப்போ உங்க அம்மாவை மன்னிக்க தோனுதோ அப்போ மன்னிச்சிக்க, நான் ஏதாவது சொல்லி மறு வீட்டுக்குப் போறதை தடுக்கப் பார்க்கிறேன்.” என்று சமாதானம் கூறினான். பின் அனைவரும் ரெசார்ட்டிலிருந்து புறப்பட்டார்கள்.
இங்கே அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டில் அனைவரும் தங்க வசதியில்லை என்பதால் பெரியவர்கள் சாகரியின் வீட்டிற்கு சென்றுவிட்டனர். அதிலும் பேச்சியம்மாளுக்கு இந்த திருமணம் நடந்ததே பிடிக்கவில்லையே, அதனால் அவர் மகள் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டார்.
மனைவியும் உயிருடன் இல்லை, அன்னையும் வரமாட்டேன் என்றுவிட்டார். மகனுக்கும் மருமகளுக்கும் வீட்டிற்குள் செல்லும்போது யார் ஆரத்தி எடுத்து வரவேற்பார் என்று சேகரன் யோசிக்க, ராகவியுடன் உறவினர் தம்பதியரை அனுப்பி வைத்திருந்ததால் சாகரி அவர்களுடன் செல்வதாக கூறினார். சாகரியுடன் நளினியும் மற்ற இரண்டு மகள்களும் முன்னே ஒரு காரில் செல்ல, பின்னால் சேகரனுடன் நிகர்வேலனும் நயந்தினியும் மற்றொரு காரில் புறப்பட்டார்கள்.
கார் அந்த குடியிருப்பில் வந்து நின்றதும் அவர்கள் அவர்கள் வீட்டு இருந்த பகுதிக்குப் போக, அவர்களை வாசலில் நிற்க வைத்து சாகரி ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அனுப்பினார். நயந்தனி நிகர்வேலனின் மனைவியாக அந்த வீட்டில் வலது காலை எடுத்து உள்ளே நுழைந்தாள். அங்கே தனியாக பூஜை அறையெல்லாம் இல்லை. வரவேற்பறையில் ஒரு சாமி படம் மட்டுமே மாட்டியிருக்க, அங்கிருந்த விளக்கை நயந்தினி ஏற்றினாள்.
பின் பால் பழம் சாப்பிடும் சடங்கு முடிந்ததும், “சாகரி நீ வீட்டுக்கு கிளம்பு, சாயந்தரம் ராகவியும் மாப்பிள்ளையும் வீட்டுக்கு வரும்போது அங்க நீ இருக்க வேண்டாமா? முன்னமே போனா தான் அங்க எல்லாம் சரியா நடக்குதான்னு பார்க்க வசதியா இருக்கும்,” என்று சேகரன் கூற,
“மதியத்துக்கு ஏதாவது சமைச்சுட்டு அப்புறம் கிளம்பறேன் ண்ணா,” என்றார் சாகரி.
“மதியம் ஏதாவது ஹோட்டலில் வாங்கிக்கலாம், நீ கிளம்பு,” என்று தங்கையை அனுப்பி வைத்தவர்,
சாகரி சென்றதும், “சாப்பிட்டு கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் மறுவீட்டு சடங்குக்கு போகலாம்,” என்று சொல்ல,
“அப்பா, இந்த சடங்கை ரொம்ப முக்கியமா செய்யணுமா ப்பா,” என்று நிகர்வேலன் கேட்டான்.
“ஏன் நிகர் அப்படி கேட்கிற?” என்று சேகரன் கேட்க, நளினியும் அதே கேள்வியோடு அவனை பார்த்தார்.
“எங்க கல்யாணம் திடீர்னு முடிவாகி நடந்திடுச்சு, இவங்க எல்லாம் ராகவி கல்யாணத்துக்காக பத்து நாள் வந்து அங்க தங்கிட்டாங்க, பத்து நாள் ஆள் இல்லாம இருந்த வீடு, போய் வீட்டை சுத்தம் செய்யணும், இதில் அவங்க சொந்தக்காரங்களுக்கு வேற இந்த கல்யாண விஷயம் தெரியாது. இந்த கல்யாண விஷயம் கேட்டு அவங்க எப்படி ரியாக்ட் செய்வாங்களோ, எல்லாம் அத்தை தனியா சமாளிக்கணும், இப்போ உடனே இந்த சடங்கு நடக்கணும்னா அத்தைக்கு தான் சிரமம். கடைதிறப்பு விழா முடியட்டும், அப்புறம் திருநெல்வேலிக்கு போயிட்டு வந்து அதுக்குப்பிறகு நாங்க மறுவீட்டு சடங்குக்கு போறோம்,” என்று தந்தையிடம் கூறியவன்,
“நீ என்ன நினைக்கிற நயா,” என்று மனைவியிடம் கேட்க,
“இவங்க சொன்னது சரிதான் அங்கிள்,” என்றவள்,
அவன் அத்தை என்று தன் அன்னையை அழைத்ததை கவனித்தவள்,
“இவங்க சொல்றது போல இந்த சடங்கு உடனே நடக்க வேண்டாம் மாமா, நாங்க மெதுவாகவே போறோம்,” என்று அவனது கருத்தை ஆமோதித்தாள்.
“அத்தை நான் சொன்னதில் உங்களுக்கு வருத்தம் எதுவுமில்லையே,” என்று நிகர்வேலன் நளினியிடம் கேட்க,
மகள் சொன்னதிலேயே அவளுக்கு மறுவீட்டிற்கு வர விருப்பமில்லை என்பதை நளினி உணர்ந்து கொண்டவர், அவளுக்காக தான் நிகர்வேலன் இப்படி பேசுகிறான் என்பதையும் புரிந்து கொண்டவர், மகளின் கோபம் சிறிது நாட்களில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில், “ஆமாம், எல்லாம் போட்டது போட்டப்படி கிளம்பி வந்துட்டோம், போய் வீடு முதலில் எப்படி இருக்குன்னு பார்க்கணும், மாப்பிள்ளை சொல்றது போல எங்களுக்கு எந்த உதவியும் இல்லன்னாலும், கல்யாண விஷயம் எங்களை கேட்காம செய்துட்டன்னு எல்லாம் சண்டைக்கு வருவாங்க, பெரிய இட சம்பந்தம்னு எங்களையெல்லாம் மதிக்கலன்னு பேசுவாங்க, அவங்களை சமாதானப்படுத்தி ஒரு விருந்துக்கும் ஏற்பாடு செய்யணும்,” என்று நளினி அதற்கு பதில் கூறினார்.
அது ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தாலும், ஏதோ பிரச்சனை போலவும் சேகருக்கு தெரிய, ஆனால் அதை அவர் ஆராயமல் அவர்கள் முடிவிற்கு விட்டுவிட்டார்.
பின் மதியம் சாப்பிட்டு முடித்ததும், “அப்போ நாங்க கிளம்பறோம்,” என்று நளினி கூற,
“ஏன் ம்மா, அதான் மறுவீட்டு சடங்கும் இப்போ நடக்கலையே, கடை திறப்பு விழாவுக்காக பெங்களூர் போகும் வரை எல்லாம் இங்கேயே இருங்க, அப்புறம் உங்க வீட்டுக்குப் போகலாம்,” என்று சேகரன் சொல்லவும்,
“அதான் முன்னமே சொன்னேனே ண்ணா, வீட்டை போட்டது போட்டப்படி விட்டுட்டு வந்துட்டோம், அதில்லாம வேலைக்கும் பத்துநாள் தான் லீவ் போட்டேன். அதனால நாளைக்கு போய் விஷயத்தை சொல்லி தேவைன்னா லீவ் அதிகப்படுத்தணும், அதனால நாங்க இப்போதே கிளம்பறோம்,” என்றவர்,
நயந்தினி அவள் அறையில் இருக்கவும், அவளிடம் சொல்லிவிட்டு செல்வதற்காக உள்ளே சென்றார். அவரைப் பார்த்துவிட்டு அவள் வேறுபக்கம் திரும்பிக் கொள்ள, “என்மேல எவ்வளவு வேணும்னாலும் கோபமா இரு, ஆனா என்மேல இருக்க கோபத்தை நிகர் மேல காட்டிடாத, பார்த்தல்ல உனக்கு மறுவீட்டுக்கு விருப்பம் இல்லன்னதும் அதை எவ்வளவு நாசுக்கா மறுத்தான். உனக்காக இவ்வளவு செய்றான். அவனைப்பத்தி யோசி. என்னிடம் சொன்னது போல அவனோட மனைவியா நல்லப்படியா குடித்தனம் நடத்து, அதுபோதும் எனக்கு,” என்றார்.
“அக்கா, இனி நீ அந்த வீட்டுக்கு வர மாட்டீயா? ஏன் க்கா, அம்மா மேல தானே கோபம், நாங்க என்ன செய்தோம், எங்களுக்காக வா க்கா, உன்னை ரொம்ப மிஸ் செய்வோம், ப்ளீஸ் க்கா,” என்று இரட்டை சகோதரிகள் இருவரும் கெஞ்ச, அவள் அப்போதும் கோபமாகவே இருந்தாள்.
“அவ கோபம் கொஞ்ச நாளுக்கு தான், அதனால வருத்தப்படாதீங்க வாங்க,” என்று நளினி மகள்களை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
அவர்கள் மூவரும் சென்றதும் நயந்தினி வெளியே வந்து நிகர்வேலன் அருகில் அமர, அப்போது தான் ஞாபகம் வந்தவராக சேகரனோ, “நிகர், நீ வருஷத்தில் பெரும்பாலும் சென்னையில் தான் இருக்க, நீ இதுவரைக்கும் தனியா இருந்ததால அடிக்கடி சென்னைக்கு திருநெல்வேலிக்கும்னு போயிட்டு வந்துட்டு இருப்ப, ஆனா இப்போ நீ குடும்பஸ்தனா ஆகிட்ட, நினைச்ச நேரம் நீ வந்துட்டுப் போறது போல நயனியை கூட்டிக்கிட்டு அலைய முடியாது. நயனியை அங்க விட்டுட்டு நீ இங்க இருக்க முடியாது. இருக்கவும் கூடாது.
உனக்கு கல்யாணம்னு பேச்செடுக்கும்போதே நமக்கு இங்க ஒருவீடு கட்டணும்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா உன் கல்யாணம் இப்படி எதிர்பாரா விதமா நடந்திடுச்சு, இப்போ நீ இங்க சென்னையில் செட்டிலாகணும், எப்படி இந்த அப்பார்ட்மென்ட்டே ஓகேவா? இல்லை ஏதாவது வில்லா மாதிரி வாங்கிடலாமா? நீங்க ரெண்டுப்பேரும் பேசி முடிவு செய்துக்கோங்க,” என்று மகனிடம் கூற,
“ம்ம் நீங்க சொல்றது சரிதான் ப்பா, இந்த அப்பார்ட்மென்ட் ஓகே தான், ஆனா நீங்க வரப்போ தங்க இது வசதிபடாது. ஒரு ரூம் தான் பெருசா இருக்கு, இன்னொன்னு சின்னது தான், வில்லா வாங்கறதா இல்லை ஏதாவது லேண்ட் வாங்கி நாமளே வீடு கட்றதா யோசிச்சு செய்யலாம்,” என்று அவன் பேசிக் கொண்டிருக்க, அதை நயந்தினி பிரம்மிப்பாக பார்த்துக் கொண்டிருந்த போதே,
“எனக்கொரு ஐடியா ப்பா, அத்தை முன்ன இருந்த வீடு இப்போ காலியா தானே இருக்கு, நாங்க அங்க போய் இருக்கோம், நயா வீடு அங்க பக்கத்தில் இருக்கறதால அவளுக்கு அவங்களை பிரிஞ்சு இருக்கறது கஷ்டமா இருக்காது.” என்ற நிகர்வேலனின் பேச்சைக் கேட்டவள்,
“அப்படியெல்லாம் இல்லை. எனக்கு எங்க இருந்தாலும் ஓகே தான், இந்த வீட்டிலேயே இருக்கறதா இருந்தாலும் எனக்கு பரவாயில்லை. சின்ன ரூமை நாம எடுத்துப்போம், மாமா வந்தா பெரிய ரூம்ல தங்கட்டும்,” என்றவள், விறுவிறுவென்று எழுந்து போய்விட்டாள்.
“என்னாச்சு நிகர், மறுவீட்டு சடங்கு இப்போதைக்கு வேணாம்னு சொன்னப்போதே ஏதோ பிரச்சனையோன்னு நினைச்சேன். இப்போ நயனி கோபமா போறது போல இருக்கே, என்ன விஷயம்?” என்று சேகரன் கேட்டதற்கு,
“அவளுக்கு நளினி அத்தை மேல கொஞ்சம் கோபம் ப்பா, நடந்த விஷயத்தில் எந்த தப்பும் நடக்காத போதும் இவ மேல தப்பு இருக்கறதுபோல அத்தை அடிச்சிட்டாங்கல்ல, அதில் கோபமா இருக்கா,” என்று நிகர்வேலன் பதில் கூறினான்.
“நளினி மேல கோபம்னா அப்போ இந்த கல்யாணத்தில் அவளுக்கு சம்மதம் இல்லையா? அம்மா மேல மட்டும் தான் கோபமா? இல்லை உன் மேலயுமா?” என்று சேகரன் சந்தேகமாக கேட்க,
“சம்மதம்னா எப்படி ப்பா சொல்ல சொல்றீங்க, நான் மட்டும் விரும்பி சம்மதிச்சா இந்த கல்யாணம் நடந்தது. சாதாரணமாக பேசிட்டு இருந்ததை பெரிய பிரச்சனையாக்கி தாத்தா இந்த கல்யாணம் நடக்கும்னு சொல்லிட்டாரு, அதுக்கு தாத்தா மேல எனக்கு இப்போதும் கோபம் இருக்கு, ஆனா அதை நான் வெளிக்காட்டிக்கல, ஆனா நயந்தினியால் அப்படி இருக்க முடியல, அவ கோபத்தை அவ அம்மாவிடம் உரிமையா காட்றா, அப்படி எல்லா உணர்வுகளையும் உடனே உடனே வெளிப்படுத்தறதும் கூட நல்லது தான் ப்பா,
மத்தப்படி இந்த கல்யாணத்தை நாங்க ரெண்டுப்பேரும் ஏத்துக்கிட்டோம், நேத்து தானே கல்யாணம் முடிஞ்சுது, உடனே எல்லாம் சரியாகிடாது. எங்களுக்கு கொஞ்சம் டைம் தேவைப்படுது.” என்று அவன் கூற, அதில் உள்ள நியாயம் அவருக்கும் புரிந்ததால் அமைதியாக இருந்தார்.
“நயாக்கு அவ அம்மா மேல இருக்க கோபம் போகணும், அதில்லாம திடீர்னு கல்யாணம், எல்லோரையும் விட்டு வந்து இருக்கறது அவளுக்கு கஷ்டமா இருக்கும், அதனால அங்க அவங்க வீட்டு பக்கத்தில் இருந்தா அவளும் கொஞ்சம் ஃப்ரியா ஃபீல் செய்வா, அதுக்குதான் அந்த வீட்டில் போய் இருக்கறதா சொன்னோம் ப்பா,” என்று நிகர்வேலன் கூற,
“புரியுது நிகர், நான் அத்தையிடம் பேசிட்டு அந்த வீட்டை ரெடி செய்ய சொல்றேன். அதேபோல ராகவி மாதேஷ் ஹனிமூன் போகும்போது நீங்களும் போக ஏற்பாடு செய்றேன். நான் இப்போ அத்தை வீட்டுக்கு போயிட்டு நைட் வரேன். பார்த்துக்கோ,” என்று அவர்களுக்கு தனிமை கொடுப்பதற்காக அவர் சாகரி வீட்டிற்கு செல்ல நினைக்கவும்,
“அப்பா, நயா அவளோட அம்மா மேல கோபமா இருக்கறதை எல்லோரிடமும் சொல்லிட்டு இருக்க வேண்டாம், மறுவீட்டு சடங்குக்கு நான் சொன்னதையே எல்லோரிடமும் காரணமா சொல்லுங்க,” என்று சொல்ல,
“சரி நிகர், பார்த்துக்க,” என்று சொல்லிவிட்டு அவரும் கிளம்பிவிட்டார்.
தந்தையிடம் அனைத்தும் விரைவில் சரியாகிவிடும் என்று சொன்னாலும் அதுபோல் நடக்குமா? என்பது அவனுக்கே தெரியவில்லை. இப்போதைக்கு அவளின் அன்னை மீதுள்ள கோபத்தில் இவனுடன் சுமூகமாக இருக்கிறாள். அவனாகவே பிரிவைப் பற்றி பேசும்போது அப்படி நினைக்கவில்லை என்றாள். ஆனால் அது நிரந்தரமா என்றும் தெரியவில்லை. இதில் விக்கி பற்றி ரோஹன் சொன்னதை எப்படி எடுத்துக் கொள்வது? என்றும் தெரியவில்லை. குழப்பத்தை சுமந்தப்படி அவளை தேடிச் சென்றான்.
அவன் அறைக்குள் போகும்போது, நயந்தினி கட்டிலில் அமர்ந்திருந்தாள். அவன் வந்து அருகே அமர்ந்ததும், “ஏன் அந்த வீட்டுக்குப் போகலாம்னு சொன்னீங்க, நான்தான் அவங்க மேல கோபமா இருக்கறதா சொன்னேனே, அப்புறம் என்ன சமாதான தூதா?” என்று அவள் கேட்க,
“அப்படியெல்லாம் இல்லை. உனக்கு உங்க அம்மா மேல தானே கோபம். உன்னோட தங்கச்சிங்க என்ன செய்தாங்க, உன்னோட அம்மா வேலைக்குப் போயிடுவாங்க, இப்போ ரெண்டுப்பேரும் லீவ்ல இருக்காங்க, நாள் முழுக்க ரெண்டுப்பேரும் வீட்டில் தனியா இருக்கணும், நாம அங்க அவங்க பக்கத்தில் இருந்தா வசதியா இருக்கும் தானே, நீதானே வீட்டுக்கு மூத்த பொண்ணு, உன்னோட அம்மாக்குப் பிறகு நாம தானே உன் தங்கைகளுக்கு துணையா இருக்கணும், அதுக்கு தான் சொன்னேன்.” என்று அவன் விளக்கம் கூற,
அவளுக்கும் அந்தநேரம் தங்கைகள் பேசிவிட்டு சென்றது நினைவிற்கு வர, அவன் சொல்வது அவளுக்கும் சரியென்றுபடவே, “சரி, நாம அந்த வீட்டில் இருக்க ஒத்துக்கிறேன். அங்க போனதும், அம்மாவிடம் பேசு, என்ன இருந்தாலும் அவங்க அம்மா, கடவுளுக்குப் பிறகு அவங்க தான், இப்படியெல்லாம் லெக்சர் எடுக்கக் கூடாது.” என்றாள் அவள்,
அதைக்கேட்டவனோ, “என்ன நீ, நான் எது பேசினாலும் லெக்சர் எடுக்கும் ப்ரொபஸர் மாதிரியே பேசற நீ, நான் அந்த அளவுக்கா பேசறேன்.” என்று அவன் கேட்க,
“கொஞ்சம் அப்படித்தான்,” என்று அவள் தலை சாய்த்து கூற,
“அப்படித்தானா? சும்மா கேட்டா சீரியஸா பதில் சொல்ற, உன்னை என்ன செய்றேன் பாரு,” என்று சொல்லியப்படி அவள் அருகில் போகவும், அவன் செயலில் அவள் எழுந்திருக்க முயற்சிக்க,
“எங்க தப்பிச்சுப் போக பார்க்கிற,” என்று அவன் கைப்பிடித்து இழுக்கவும், மொத்தமாக அவன் மேலே வந்து விழுந்தாள். அவள் விழுந்ததில் அதை எதிர்பார்த்திராததால் அவள் எடை தாங்காமல் அவன் படுக்கையில் விழவும், அவனோடு அவளும் சேர்ந்து விழுந்தாள்.
விழுந்தவளை அணைத்துப் பிடித்தவனோ, “நிஜமாவே நான் அறுவையாவா இருக்கேன்.” என்று அவன் கேட்க,
“அறுவை இல்லை. ஆனா கொஞ்சம் அட்வைஸை அப்பப்போ அள்ளி வழங்குவீங்களோன்னு தோனுது,” என்றாள்.
“உனக்கு அட்வைஸ் செய்தா பிடிக்காதா?” என்று அவன் கேட்க,
“அம்மா அட்வைஸ் செய்யும்போது கொஞ்சம் கடுப்பா இருக்கும், ஆனா நீங்க அட்வைஸ் செய்தா அந்த அளவு கடுப்பு வரல, ஏன்னு தெரியல,” என்று உதட்டை பிதுக்கி அவள் கூற, அந்த உதட்டில் அழுத்தி முத்தமிட வேண்டுமென்று அந்தநேரம் அவனுக்கு தோன்றியது.
இன்னும் ஒரு நொடி நீடித்திருந்தால் கூட, அவன் நினைத்ததை செய்திருப்பான். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டவன், அவனை விலக்கிவிட்டு எழுந்து அமர, “என்னாச்சு?” என்று கேட்டப்படி அவளும் எழுந்து அமர்ந்தாள்.
“சாரி,” என்று அவன் கூற,
அவளுக்கு அதில் ஒன்றும் பிரச்சனையில்லை போலும், “எதுக்கு சாரி, நான்தானே உங்க மேல வந்து விழுந்தேன். அதனால பேலன்ஸ் செய்ய முடியாம ரெண்டுபேரும் விழுந்துட்டோம்,” என்று அவள் சாதாரணமாக கூறினாள்.
“இருந்தாலும், நான் கைப்பிடிச்சு இழுக்கலன்னா விழுந்திருக்க மாட்ட தானே,” என்று அவன் கூற,
“இப்படி ஒரு விஷயத்தை சட்டுன்னு பேசிட்டு விட மாட்டேங்கிறீங்க பாருங்க, அதை தான் நான் முன்ன சொன்னேன்.” என்றாள்.
அவளுக்கு அதில் பிரச்சனை இல்லை என்பதால், “சரி விட்ருவோம்,” என்றவன்,
“அப்புறம் உன்னோட படிப்புக்கு என்ன யோசிச்சு வச்சிருக்க? எப்போ அப்ளை செய்யணும்? எங்க படிக்கலாம்னு இருக்க, நான் படிச்ச யூனிவர்சிட்டியில் அப்ளை செய்யலாமா? ரோஹனும் அங்க தான் படிக்கிறான்.” என்று அவன் கேட்டதற்கு, அவளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை.
அவளும் விக்கியும் தானே இதைப்பற்றி திட்டம் போட்டு வைத்திருந்தார்கள். இப்போது விக்கியிடம் இந்த திருமணத்தைப் பற்றி கூற வேண்டும், அதைக்கேட்டு விக்கியின் பக்கமிருந்து என்ன பதில் வரவிருக்கிறதோ? அதை வைத்து தான் முடிவு செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டவள்,
“என் ஃப்ரண்ட்ஸோட டிஸ்கஸ் செய்துட்டு தான் முடிவு செய்யணும்,” என்று கூறினாள்.
“சரி யோசிச்சு முடிவெடு. இப்போ ரெஸ்ட் எடுக்கறதா இருந்தா எடு.” என்று சொல்லிவிட்டு அவன் அறையிலிருந்து சென்றுவிட்டான்.
இவளுக்கோ முதலில் திருமண விஷயத்தை எப்படி விக்கியிடம் சொல்லப் போகிறோம் என்பது தான் பெரிய விஷயமாக தெரிந்தது. ஒருவாரம் போகட்டும் பிறகு விக்கியை சந்தித்து விஷயத்தை சொல்லலாம், அதுவரை அலைபேசியை உயிர்ப்பிக்க வேண்டாமென்று முடிவு செய்து கொண்டாள்.
ஆனால் அவள் சொல்லாமல் விட்டால் விக்கிக்கு இது தெரியாமல்.போகுமா? நிகர் குழும குடும்பத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற இருப்பதே ஏற்கனவே செய்திதாள்களில் வந்திருக்க, இப்போது திடீரென நடந்த நிகர்வேலனின் திருமணமும் செய்திதாள்களில் வந்திருந்தது.
அந்த செய்தி விக்கி கண்களுக்கு படாமல் இருக்கலாம், ஆனால் நிகர்வேலன் மாங்கல்யம் சூடும்போது நயந்தினியிடம் சம்மதம் கேட்டதும், அவள் தலையசைத்து சம்மதம் சொன்ன காணொளியும் வைரலாகியிருந்தது. அதைப் பார்த்த விக்கி தற்கொலை முயற்சியில் இறங்கியதை நயந்தினி அறிந்திருக்கவில்லை.
இரண்டு நாட்களுக்குப் பிறகு பெங்களூருவில் கடைத் திறப்பு விழாவில் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தி முடித்தனர். பின் அன்று இரவே அனைவரும் சென்னைக்கு திரும்பினர். மறுநாள் திருநெல்வேலிக்கு கிளம்ப வேண்டும்,
நிகர்வேலனும் நயந்தினியும் சாகரி வீட்டில் இரவு உணவை முடித்துக் கொண்டு அவர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்துவிட்டனர். வெகு சீக்கிரம் உணவு சாப்பிட்டதால் இரவில் பசியெடுத்தால் பால், ரொட்டி இப்படி ஏதாவது சாப்பிட வாங்கி வருவதற்கு நிகர்வேலன் கிளம்பியவன், வேறு ஏதாவது நயந்தினிக்கு தேவைப்படுமா என்று கேட்க கடையிலிருந்து அலைபேசிக்கு முயற்சிக்க, அவளது பேசி அணைக்கப்பட்டு இருந்தது.
தேவையானதை வாங்கிக் கொண்டு வந்தவன், “ஆமாம் உன்னோட மொபைல் ஏன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கு நயா,” என்று கேட்க,
“அது சார்ஜ் இல்லை போல, அதான்,” என்று ஒரு காரணத்தை சொல்லி சமாளித்தாள்.
“சார்ஜ் போடு, நானும் நம்ம கல்யாணம் முடிஞ்சதில் இருந்து பார்க்கிறேன். நீ மொபைல் யூஸ் செய்றது போலவே தெரியலையே, ஏன்?” என்று அவன் கேட்க,
“அது கல்யாண விஷயத்தை எப்படி ஃப்ரண்ட்ஸ்க்கிட்ட சொல்றதுன்னு புரியல, அதான் கொஞ்சநாள் மொபைலை ஆஃப் செய்து வச்சிருக்கேன்.” என்றாள்.
“எப்படியாவது ஒருநாள் அதை சொல்லித்தானே ஆகணும், ஃப்ரண்ட்ஸ்க்கிட்ட இருந்து ஏதாவது முக்கியமான விஷயம் கன்வே செய்யணும்னா மொபைலை ஆஃப் செய்து வச்சிருந்தா எப்படி?” என்று அவன் கேட்க, அவளுக்கும் அது சரியென்று படவே,
சிறிது நேரம் அலைபேசியை சார்ஜில் போட்டுவிட்டு, பின் அலைபேசியை உயிர்ப்பிக்க, வரிசையாக விக்கியிடமிருந்து குறுந்தகவல்கள் வந்திருந்தது. ‘எப்போ அங்கிருந்து கிளம்புவ? வந்ததும் மீட் செய்யலாமா? ஏன் மெசேஜ் பார்க்க மாட்டேங்குற? ஏன் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கு, அங்க ஏதாவது பிராப்ளமா? எனக்கு உடனே உன்னை பார்க்கணும் நயன்,’ என்று வரிசையாக குறுந்தகவல்கள் வந்திருக்க,
கடைசியாக வைரலாகியிருந்த அவர்கள் கல்யாண காணொளியை அனுப்பி, ‘என்னை ஏமாத்திட்டல்ல நயன், நீ இல்லாத இந்த உலகத்தில் இனி நான் எதுக்கு இருக்கணும்? குட் பை,’ என்று குறுந்தகவல் அனுப்பப்பட்டிருக்க,
அதில் பதறிய நயந்தினியோ, உடனே விக்கி அலைபேசிக்கு முயற்சிக்க, அது அணைக்கப்பட்டிருந்தது. அடுத்து விக்கி தங்கியிருந்த இடத்திற்கு பேச, விக்கி கை நரம்பை அறுத்துக் கொண்டு அதிக ரத்தம் போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் சொல்லவும், “விக்கி,” என்று கத்தியப்படி நயந்தினி அலைபேசியை தவறவிட்டாள்.
அவள் கத்திய சத்தத்தில் அங்கு வந்த நிகர்வேலனோ, “என்னாச்சு நயா?” என்று கேட்க,
“விக்கிக்கு நம்ம கல்யாண விஷயம் தெரிஞ்சு, சூசைட்க்கு டரை செய்து, இப்போ ஹாஸ்பிட்டலில் அட்மிட்,” என்று பதட்டத்தில் அவள் விட்டு விட்டு பேச,
நிகர்வேலனுக்கு அந்த பேரே அதிர்ச்சியாக, அந்த தற்கொலை செய்தி இன்னும் அதிர்ச்சியாக்கியது. “ஆமாம் யார் விக்கி?” என்று அவன் நயந்தினியிடம் கேட்க,
“இப்போ அதை பேச நேரமில்லை. எனக்கு உடனே விக்கியை பார்க்கணும்,” என்று அவள் அழவும்,
“சரி போகலாம், நான் போய் கார் எடுக்கிறேன். நீ வீட்டை பூட்டிக்கிட்டு வா,” என்று அவன் முன்னே சென்றான்.
பின் எந்த மருத்துவமனை என்று கேட்டு காரை ஓட்டியவனுக்கோ பல யோசனைகள். ஒருவேளை ரோஹன் சொன்னது உண்மை தானோ என்றெல்லாம் சிந்தித்தப்படி வந்தவன், மருத்துவமனைக்கு சென்று நயந்தினி பேர் சொல்லி விசாரித்ததெல்லாம் கவனிக்கவில்லை.
விக்கிக்கு சிகிச்சை பார்க்கும் அறைக்கு அவளோடு சென்று நிகர்வேலன் அங்கு பார்க்க, அங்கே மயக்கத்தில் படுத்திருந்தாள் விக்கி என்றழைக்கப்படும் விக்னவி.
அகம் சேர்வான்…
error: Content is protected !!