Skip to content
Post Views: 13,751
அத்தியாயம் 23
மேலும் ஐந்து மாதங்கள் முடிந்திருந்தது. விஷாலினி படிப்பை முடித்து வீட்டிற்கு வந்திருந்தாள். விஷ்ணுவிற்கும் இந்த வாரத்தில் விஷாலினி வீட்டிற்கு வந்திடுவாள் என்று தெரியும். ஆனால் விஷ்ணு வீட்டிற்கு வர முடியாத சூழலில் இருந்தான்.
ஆம்… டி.எஸ்.பி விஷ்ணுவர்தன் தற்போது ஏ.எஸ்.பி விஷ்ணுவர்தனாகியிருந்தான். சென்ற மாதம் பதவி உயர்வோடு பணிமாறுதலும் கிடைத்திருக்கவே தற்போது விழுப்புரத்தில் இருக்கிறான்.
சொத்து பிரச்சனைக்காக பங்காளிகளான அண்ணன், தம்பி இரு குடும்பமும் அரசியல் பின்புலமுள்ள ஐய்யனாரிடம் பஞ்சாயத்திற்கு செல்கின்றனர். சொத்து விபரம் தெரிந்து பிரம்மித்த ஐய்யனார் இருவருக்குமில்லாமல் சொத்தை தனக்கு எழுதித்தர கேட்டுருக்கிறான்.
Advertisement
கொடுக்க மறுத்த அண்ணன் குடும்பதில் பெரியவர் முதல் பேரன் வரை மொத்தம் பதினொரு பேர் இருந்தனர். பதினொரு பேரையும் கொலை செய்துவிட்டு, சொத்திற்காக தம்பியே அண்ணன் குடும்பத்தை கொலை செய்ததாக தன்னிடம் பஞ்சாயத்திற்கு வந்த இன்னொரு குடும்பத்தையும் சிக்க வைத்து சொத்தை தனதாக்கியிருந்தான் ஐய்யனார்.
ஊர்மக்களுக்கு ஐய்யனார்தான் செய்திருப்பான் என்று தெரிந்தபோதும் யாரும் சாட்சி சொல்ல விழையவில்லை. இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு விஷ்ணுவர்தனிடம் வரவே, ஒரு மாதமாக கூலிப்படைகளை தேடி, சென்ற வாரம்தான் கண்டுபிடித்து விசாரணையை ஆரம்பித்திருந்தான் விஷ்ணுவர்தன்.
விசாரணையில் ஐய்யனாருக்கு பக்க பலமாக அரசியல் தலைவர் இருப்பது தெரிய வரவே, அவரிடம் “ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்களை ஒரே நேரத்துல கொலை பண்ணினதால நாடே இதைத்தான் பேசிட்டிருக்கு. அந்த நாய்களுக்கு சப்போர்ட் செய்தா நீங்க மாட்டுவிங்க” என்று அரசியல் தலைவரின் மூளையை சலவை செய்து, அவரின் உதவி கொலையாளுக்கு கிட்டாமல் செய்திருந்தான் விஷ்ணுவர்தன்.
Advertisement
இப்படிபட்ட அரசியல் தலைவரிடம் இறங்கி பேசுவது பிடிக்கவில்லை என்றபோதும், தற்போது கொலை செய்தவனுக்கும், கூலிப்படைகளை ஏவிவிட்டவனுக்கும் தண்டனை வாங்கிகொடுப்பதே விஷ்ணுவின் எண்ணமாக இருக்க, எங்கே தணிய வேண்டும் என்று சிந்தித்து செயல்பட்டான்.
Advertisement
சற்று நேரம் வாயையும் மூக்கையும் அழுத்திப் பிடித்திருந்தாலே உயிரை விட்டுருக்கக்கூடிய சிறுவனையும் பெரியவர்களையும் சிறிதும் இரக்கமின்றி வாள்போன்ற பெரிய கத்தியால் குத்தி கொன்றிருந்தார்கள். சொத்திற்காக இத்தனை கொடூரமா என்று விஷ்ணுவால் தாளவே முடியவில்லை.
கொலைக்கு சம்மந்தப்பட்டிருந்த எட்டு பேர் சேர்ந்த கும்பலில் ஒருவனையும் விட்டுவிடாமல் பிடித்திருந்தான் விஷ்ணுவர்தன். குற்றவாளிகளை பிடித்து பதினைந்து நாள் ஆகியிருந்தும் அனைத்து தமிழ் சேனல்களிலும் இதுவே தலைப்பு செய்தியாக இருந்தது. கோபாலன் பிரபாவதிக்கு மிகுந்த பெருமைதான். காவ்யாவும் அண்ணனின் வீர செயலை பெற்றோரோடு கொண்டாடித் தீர்த்தாள்.
பெருமைப்படக்கூடிய, எரிச்சலூட்டக்கூடிய, என்று பத்திரிக்கையாளர்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு, ஆளுமையோடு இரத்தின சுருக்கமாய் பதில் சொல்லும் கணவனுக்கும். வீட்டில் பார்க்கும் கணவனுக்கும், பல மடங்கு வித்யாசம் இருக்க, கணவனை பெருமையோடு பார்த்திருந்தாள் தொலைக்காட்சியில்.
Advertisement
வீட்டில் ஒற்றை துண்டோடு பார்க்கும்போது கவனத்திற்குள் வராதிருந்த உடற்கட்டு, தற்போது காக்கி உடையில் தெரிய, அவனின் முரட்டு கைகளுக்குள் எப்போது சிறைபடுவோம்? திரண்ட தோள்களில் எப்போது துயில்கொள்வோம் என்ற ஏக்கத்தோடு காத்திருந்தாள் கணவன் வருகைக்காக.
** ** ** **
விஷ்ணுவர்தனை செய்திகளில் பார்த்த திவாகருக்கோ மேலும் மனம் கலங்கியது பயத்தில். ம்… தற்போதுதான் தெரிந்தது விஷ்ணுவர்தனின் உயரம். விஷ்ணு நினைத்திருந்தால் அன்றே என்மேல் கை வைத்திருக்கலாம். தங்கையை தன்னோடு சேர்த்து வைக்கும் எண்ணமில்லைதான். அதேநேரம் தன்னிடம் அதிகார பலத்தையும் காட்டவில்லை.
தனது லாயர் சொன்னதுபோல் வரதட்சனை கொடுமை என்று பெரிதாய் தன்னை பழி வாங்கவில்லை. பொய் காரணங்களை சொல்லி தன்னை சுலபமாய் பெரிய சிக்கலில் மாட்டிவிடலாம். அத்தனை அதிகார பலம் இருந்தும் அப்படி ஏதும் செய்யாமல் தன்னிடமிருந்து தங்கைக்கு விடுதலை மட்டுமே கேட்க வைத்திருக்கிறான்.
ஆழ்ந்து யோசித்ததில், காவ்யா எதிர்பார்த்த அவளின் பெற்றோருக்கான மரியாதையோடு, காவ்யாவை தனக்கு கேட்டால் சம்மதித்திடுவார்கள் என்ற நம்பிக்கை முளைத்தது.
அவளின் அன்னை கூட சம்மதித்திடுவார், காவ்யாவின் தந்தையும் விஷ்ணுவையும் நினைக்க மேலும் தன்னை அவமதிப்பார்களோ என்ற பயம் வந்ததுதான். ஆனால் அவமானத்தை பொறுக்கவில்லை என்றால் காவ்யா நிரந்தரமாக தனக்கு கிடைக்கமாட்டாள் என்ற பயம் தோன்ற, கோபாலன் வீட்டிற்கு செல்வதைப்பற்றி யோசித்தான்.
தனியாக சென்றால் மரியாதையாக இருக்காதென்றும், காவ்யாவின் தந்தை தன்னை வீட்டினுள் அனுமதிக்கமாட்டார் என்றும் பெற்றோரை அழைத்தான். திவாகரின் அன்னை வர மறுத்துவிட்டார்.
தற்போதும் காவ்யாவை பிடிக்கவில்லை என்றபோதும், விவாகரத்து பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து மகன் படும் அவஸ்த்தையில் வேதனை கொண்டார்கள்தான். காவ்யா மகனை ஏற்றுக்கொண்டால் பரவாயில்லை என்றும் நினைத்தனர். ஆனால் காவ்யாவின் வீட்டிற்கு செல்லும் அளவிற்கு மனம் வராமல் போகவே மகனோடு செல்ல மறுத்துவிட்டனர் திவாகரின் பெற்றோர்.
நீதி மன்றத்திற்கு செல்ல இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது. நீண்ட நாள் பிரிந்திருந்த காரணம் ஒன்றே திவாகருக்கு பாதகமாக அமைய, சட்டப்பிரிவு 142 ன் அடிப்படையில் உடனடியாக விவாகரத்து வழங்க காவ்யாவின் வக்கீல் வாதாடினார். நீதிபதியும் அதனை பரீசீலிப்பதாக சொல்லி, இவ்வழக்கின் தீர்ப்பு தேதியை அறிவித்தார்.
இன்னும் முப்பது நாள்களில் காவ்யாவிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் போவதை திவாகரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகவே, தனக்கு ஒத்துழைக்காத பெற்றோரை கடுமையாய் சாடி, காவ்யா வீட்டிற்கு கிளம்பினான்.
தொலைக்காட்சிகளில் பதினொரு பேர் கொலை வழக்கு பெரிதாய் பேசப்பட்டுக்கொண்டிருக்க, விஷ்ணு விழுப்புரத்தில் இருக்கிறான் என்பது உறுதியான நிலையில் அதுவே திவாகருக்கு பெரும் ஆசுவாசமாய் இருந்தது.
காவ்யாவின் அன்னையிடம் பேசி எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு காவ்யாவின் தந்தையையும் சமாதானம் செய்யும் நோக்கோடு காவ்யா வீட்டின் தெருவிற்குள் நுழைந்தான்.
தயங்கியபடி காவ்யா வீட்டினை நோட்டமிட்டான். அடுத்த நொடியே “யார்டா நீ? இங்க எதுக்கு வந்த? சார் வீட்டை எதுக்குடா நோட்டம் விட்ட? ஏறுடா வண்டியில” என்று மிரட்டியவர், திவாகர் என்ன சொல்லியும் கேட்காமல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தார்.
காவல் நிலையத்தில் அந்த நேரம் நாகநாதனும் இல்லாமல் போகவே திவாகர் யாரென்று அறியாத தன்னார்வல காவலாளி விஷ்ணுவர்தனுக்கு அழைத்தார்.
விஷ்ணுவர்தன் அழைப்பை ஏற்காமல் போகவே, மற்றொரு காவலாளியிடம், “இவன் விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி சாரோட வீட்டை நோட்டம் விட்டுட்டிருந்தான்” என்றவர், திவாகரின் போனை பறிமுதல் செய்து, தனியே அமர வைத்தார்.
இன்ஸ்பெக்ட்டர் வரவே, திவாகரை அழைத்து வந்த காரணம் சொல்லி, தன்னார்வல காவலாளி தன் பணியை தொடர விஷ்ணு வீட்டிற்கு சென்றார்.
“சார் என் பேர் திவாகர்”
இன்ஸ்பெக்ட்டர், “திவாகர்னா பெரிய திவான்னு நினைப்பா? சாரோட வீட்டை எதுக்கு நோட்டம் விட்ட?” என்று அதட்டி, “இன்னும் பத்து நிமிஷத்துல நீ யார்னு நான் சொல்றேன். அதுவரைக்கும் வாய தொறந்த… உடம்பெல்லாம் புண்ணாகிடும்” என்று எச்சரித்தார் கடுமையாக.
அடுத்த ஒரு மணி நேரத்தில் திவாகரின் பெற்றோர் காவல்நிலையம் வந்தனர். என் மகன் அப்படிபட்டவன் இல்லை என்று கெஞ்சினர். திவாகரைப் பற்றி விசாரித்ததில் சொந்தமாய் கம்பெனி நடத்துகிறான். கண்டிப்பான முதலாளி, ஆனால் தவறானவன் இல்லை என்று தகவல் வந்தது.
கம்பெனியில் விசாரித்த பின்னேதான் திவாகரின் நண்பன் அர்ஜுனுக்கு விசயம் தெரியவர, தனது லாயரை அழைத்துக்கொண்டு காவல்நிலையம் கிளம்பினான்.
தற்போதுதான் தவறவிட்ட அழைப்பை பார்த்த விஷ்ணுவர்தன், “இந்த ஸ்டேஷன்லயிருந்தா?” என்ற யோசனையோடு அழைப்பு விடுக்க, விபரம் சொல்லி, “சார்… திவாகரோட அம்மா திவாகர் உங்க மச்சானு சொல்றாங்க” என்றார் தயங்கியபடி.
“போனை அவன்கிட்ட கொடுங்க” என்றவன், திவாகர் இணைப்பில் வந்ததும் “என்ன நினைப்புலடா உன் அம்மா அப்படி சொல்றாங்க?” என்றான் அதீத கோபத்தோடு.
விஷ்ணு என்று சொல்ல வந்தவன், உடனே மாற்றி “சார்… எனக்கு காவ்யா வேணும், உங்கப்பாம்மாகிட்ட பேசத்தான் வீட்டுக்கு போனேன். சந்தேகப்பட்டு இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க” என்றான் பயத்தோடு.
“கூறுகெட்டவனே… நாட்டு நடப்பு தெரியுமா தெரியாதா? என் வீட்டுக்கு ப்ரொட்டக்ஷன் போட்டுருக்கேன். திருடன் மாதிரி பம்பிக்கிட்டு போனா சந்தேகப்படாம என்ன செய்வாங்க?” என்று அதட்டி, “உன்னை விட சொல்றேன், நேரா உன் வீட்டுக்கு போற. அதை விட்டுட்டு காவ்யாவை பார்க்க போகக்கிளம்பின… அவ்வளோதான் பார்த்துக்க” என்று எச்சரித்து ஆய்வாளரிடம் பேசி இணைப்பை துண்டித்தான்.
பிறகு தந்தைக்கு அழைத்தவன், விசயத்தை சொல்லி, “காவ்யா பிரச்சனை முடிவுக்கு வரவரைக்கும் வீட்லதானப்பா இருக்க சொன்னேன்? எங்க போனிங்க? வீட்டுல இருந்திருந்தா இவன் ஸ்டேஷன் வந்திருக்கமாட்டான்ல?” என்றான் கோபமாக.
வெளியே வந்தவர் “வீட்டுலதான் விஷ்ணு இருந்தோம். விஷாலினி டல்லா இருந்துச்சு, அதுகிட்ட பேசிட்டிருந்தேன். அசுரன் சத்தம் கூட கேக்கலயே, அடிச்சிட போறாங்க விஷ்ணு” என்றார் கவலையாக.
விசயத்தை சொல்லி, “ஒத்த வார்த்தை சொல்லியிருந்தேன்னா நல்லா கவனிச்சிருப்பாங்க. என்ன செய்து தொலைக்கிறதுனு விட சொல்லிட்டேன், அங்க வந்தான்னா நல்லா நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி கேட்டுவிடுங்க. இவனையெல்லாம் உடனே மன்னிக்கக்கூடாது” என்றான்.
“சரி நான் அவனை பார்த்துக்கிறேன், நீ மருமககிட்ட பேசு”
“இல்லப்பா, அவகிட்ட நைட் பேசிக்கிறேன், இப்போ வேலையிருக்கு” என்று இணைப்பை துண்டித்தான்.
இங்கே வீட்டிற்கு வந்ததும், “போலீஸ் உன்னை பிடிச்சிட்டு போனது தெரிஞ்சும் கூட அவ வரலை, இப்படிபட்டவளுக்காக எதுக்குடா தொங்கற?” என்று ஆற்றாமையோடு கேட்டார் திவாகரின் அன்னை.
“அவ ஊர்ல இல்ல. பெங்களூர்ல இருக்காளாம். சென்ட்ரல் கவர்மண்ட் வேலை கிடைச்சிருக்கு, லாயர் சொன்னார்” என்றதும் வாய் பிளந்தார் திவாகர் அன்னை.
மேலும் பத்து நாள் முடிந்திருக்க, மகனின் நடவடிக்கையில் மிகவும் பயந்தார் திவாகர் அன்னை. காலைலயிலிருந்து அறையை விட்டு வெளியே வராததால் மகன் அறைக்கு சென்றவர், “காபி வேணாம்னு சொல்லிட்டியாம், சாப்பிடவும் வரல. இன்னும் குளிக்கக்கூட இல்லை போல. உடம்பு சரியில்லையா திவா?” என்றார்.
இல்லை என்பதாய் தலையசைத்தான். மகன் அருகே சென்று நெற்றியை தொட்டுப் பார்க்க, தட்டிவிட்டவன், “சும்மா ஆக்ட்டிங் பண்ணாதிங்கம்மா” என்றான் எரிச்சலாக.
“திவா” என்றவர் கண்கள் கலங்கிட, “பொண்டாட்டி வந்த்தும் அம்மாவை அவமானப்படுத்தக் கூடாதுனு உங்களைப் பத்தி அவ என்ன சொன்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோனு சொல்வேன். ஆனா எனக்கு காவ்யாதான வேணும்னு நான் சொல்லியும் என்னோட நீங்க வரல. குடும்பமா போயிருந்தா நான் ஸ்டேஷன் போற நிலைமை வந்திருக்காது.
இப்போ வரை உங்க கொளரவம்தான் முக்கியம்னு நினைக்கிறிங்களே தவிர என் உணர்வுகளைப் பத்தி யோசிக்கவேயில்ல. காவ்யா மாதிரி ஒரு சாஃப் கேரக்டரோடவே என்னால வாழ முடியலனா வேற யாரோடவும் என்னால வாழ முடியாது.
என் பொண்டாட்டியை யாருக்கும் என்னால விட்டுத்தர முடியாது. அப்படி சூழல் வந்தா நான் யாருக்கும் கிடைக்கமாட்டேன். என் மனசுலயிருந்து அவளை யாராலயும் பிரிக்க முடியாது. அவ மனசுல இருக்க என்னை பிரிக்க எவனாவது வந்தான்னா அன்னைக்குத்தான் என்னோட கடைசி நாளா இருக்கும்” என்றான் உறுதியாக. ஸ்தம்பித்துப் போனார் திவாகரின் அன்னை.
மேலும் பதினைந்து நாள்கள் முடிந்திருக்க, திவாகர் காவ்யாவின் வழக்கிற்கு இன்னும் ஐந்து நாள்களே இருந்தது. அந்த நேரம் விஷ்ணுவால் வர முடியாதென்பதால் இன்று சென்னை கிளம்பினான்.
error: Content is protected !!