Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்களை வாடுவதில்லை 12

நிஷாவுக்கு பசிப்பது போலிருந்தது.  இராத்திரியிலிருந்து தூங்காமல் கண் முழித்திருந்தது வேறு தலைவலியை உண்டு பண்ணியிருந்தது.  தானும் சாப்பிட்டு, பிரேமாவிற்கும் சாப்பிட ஏதாவது வாங்கி வருவதற்காக கேன்டீன் சென்றாள்.

அதிகாலையாக இருந்ததால் கேன்டீனில் காபி டீயைத் தவிர வேறேதும் இல்லை என்றிருந்தனர்.  நிஷா இரண்டு காபியை மட்டும் வாங்கிக்கொண்டு வந்து, பிரேமாவிடம் ஒன்றை கொடுத்து, குடிக்க சொன்னாள்.  அவர் வேண்டாம் என மறுத்தார்.

அவரை வற்பறுத்தி காபியைக் குடிக்க வைத்தவள், திரும்பவும் அவருடனேயே உட்கார்ந்துவிட்டாள்.  அப்படியே ஒரு மணிநேரம் சென்றது.

பிரேமா நிஷாவைத் திரும்பி பார்த்தார்.  உட்கார்ந்த வாக்கிலேயே நாற்காலியின் பின்பக்கமாக சுவற்றில் தலையை சாய்த்து, கண்களை மூடியிருந்தாள்.  கருவிழிகளின் அசைவிலேயே அவள் தூங்கவில்லை என தெரிந்தது.



Advertisement

நேற்றிலிருந்து தூங்காமல் அவருடனேயே உட்கார்ந்திருந்தது…. பிரேமாவுக்கு சங்கடத்தைக் கொடுத்தது.  பாவம் அவளையும் கஷ்டப்படுத்துகிறோமே என வருந்தினார்.  ஆனால் அவருக்கும் இங்கு தனியாக இருக்க பயமாக இருந்தது.

அவர் மனதில்…, இவ மட்டும் நேத்து இல்லைன்னா…. கடவுளே… என்ன ஆகியிருப்பனோ… தெரியாது?  சரியான நேரத்துல கடவுள் மாதிரி காப்பாத்துனா… என அவளையே பார்த்துகொண்டு உட்கார்ந்திருந்தார்.

அஞ்சனாவோட இவளும் ஊருக்கு போயிருந்தா… ஐயோ… நினைக்கும்போதே அவருக்கு நெஞ்சு பதறி…, உடல் பயத்தில் தூக்கிப் போட்டது.

Advertisement

அவர்கள் இப்போது இருக்கும் இடத்தில் வீடு கட்டி வந்து நான்கு வருடம்தான் ஆகிறது.  பெரிதாக பக்கத்திலிருப்பவர்களோடு எந்த நெருக்கமும் இல்லை.  அதுவும் அக்கம் பக்கமிருப்பவர்கள் கன்னட மொழி பேசுபவர்களாக இருந்ததால் பிரேமா அவர்களோடு பெரிதாக பழக முயலவில்லை.

Advertisement

முதலில் அவர்கள் வசித்த பகுதியில் நிறைய தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் இருந்ததால், அவருக்கு அங்கு எந்த மாற்றமும் தெரியவில்லை.

இங்கு பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் வேலைக்கும் செல்பவர்களாக இருந்ததால்….. அவர்களுடன் பேசவோ…. பழகுவதற்கோ சந்தர்ப்பம் பெரிதாக அமையவில்லை பிரேமாவிற்கு.

அந்த நட்ட நடு இரவில்… நாச்சியப்பன் பேச்சு மூச்சற்று மயங்கியிருந்ததைப் பார்த்ததும்…. பிரேமாவிற்கு பதற்றத்தில் மூளையும் செயலற்று நின்று போனது போல.   அடுத்து என்ன செய்வது… என்ற பிரக்ஞையே இல்லாமல் செயலிழந்து போயிருந்தார்.

Advertisement

ஆனால் அவர் செய்த ஒரே நல்ல காரியம் டக்கென்று தன்னை சுதாரித்து… நிஷாவைப் போய் எழுப்பி கூட்டி வந்ததுதான்.

சிறிய பெண்ணாக இருந்தாலும்… அதிகப் பதட்டப்படாமல்… ஆம்புலன்ஸிற்கு போன் செய்து வரவழைத்து, அவரையும் கிளப்பி…  தைரியமாக அழைத்து வந்திருந்தாள் மருத்துவமனைக்கு.

இந்த பொண்ணுக்கு… எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது… என கண்கள் முழுவதும் நன்றி கலந்த வாஞ்சையுடன் அவளையே பார்த்திருந்தார்.  நிஷா இரவே அஞ்சனாவிற்கும் மெசேஜ் செய்திருந்தாள்.

காலையில் விடிந்ததும்….. மெசேஜை பார்த்த அஞ்சனா நிஷாவிற்கு  உடனடியாக போன் செய்துவிட்டாள்.  நிஷாவுடன் பேசி நிலைமையை அறிந்த அடுத்த நிமிடமே தந்தையிடம் சென்று நின்றாள் அஞ்சனா.

“என்னடா…” என்றவரிடம் கலக்கத்துடனே நாச்சியப்பனை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கும் விவரத்தை  கூறியவள், தான் உடனே பெங்களூர் கிளம்புவதாக கூறி தயாராக ஆரம்பித்தாள்.

வேல்முருகனுக்கும் நாச்சியப்பனை பற்றின தகவல் அறிந்ததும் அதிர்ச்சிதான்.  “இரு… இரு… தனியா போகாத மா.  நானும் வரேன்டா…..’’ என அவளுடன் அவரும் புறப்பட ஆயத்தமானார்.

உடனடியாக ட்ரெயின் டிக்கெட் கிடைக்காது.  பஸ் பிடித்து செல்வதும் கடினம் என உணர்ந்த வேல்முருகன்… தனது காரிலேயே போவது என முடிவெடுத்தார்.  இவர்கள் காரில் கிளம்புவதைப் பார்த்த ரோகிணியும் “நானும் வரேங்..க….” என அவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்.

“அம்மாவும் வரட்டும்..பா…  அங்க பிரேமா ஆன்ட்டி எப்படியிருக்காங்கன்னு தெரியாது.  ஒருவேளை அவங்க ஹாஸ்பிட்டல்ல அங்கிளோட இருக்கற மாதிரி இருந்ததுன்னா… அம்மா வந்தா அவங்களுக்கும் ஹெல்பாயிருக்கும்….” என்றாள் அஞ்சனா.

‘’சரிடா…..’’ என மகளின் வாய்மொழிக்கு சம்மதித்த வேல்முருகன், “சீக்கிரம் கிளம்பு ரோகிணி” என மகள் மனைவியுடன் புறப்பட்டு விட்டார் பெங்களூருக்கு.

உமாபதி மும்பையிலிருந்து வந்து சேரவும், இவர்கள் பெங்களூர் வந்தடையவும் சரியாக இருந்தது.  மகனைப் பார்த்ததும்தான் பிரேமாவுக்கு உயிர் வந்தது.  அதுவரை கண்டதையும் நினைத்து, மனதை போட்டு குழப்பிக் கொண்டிருந்தவர்…., உமாபதியைப் பார்த்ததும் தெம்பானார்.

இராத்திரியிலிருந்து அவரும் நிஷாவும் உட்கார்ந்த இடத்தைவிட்டு நகராமல் அங்கேயேதான் அமர்ந்திருந்தனர்.  காலையில் எத்தனை வற்புறுத்தியும் பிரேமா சாப்பிடவில்லை.  அவர் சாப்பிடாமல் தான் மட்டும் சாப்பிட நிஷாவுக்கு மனதில்லாமல் பசியோடு உட்கார்ந்திருந்தாள்.  ஆச்சர்யம்தான்…!  ஒருவேளை பசி தாங்க மாட்டாள்.  எது எப்படியோ…?  வயிற்றுக்கு வஞ்சம் இல்லாமல், வாய்க்கு வக்கணையாக சாப்பிடுபவள்… இன்று பசி பொறுத்தது அதிசயமே.  அது… பிரேமாவுக்காக பொறுத்துக் கொண்டிருந்தாள் போல…

அன்று மதியம் வரை பசியை ஓட்டியவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை.  ஹாஸ்பிட்டலில் இருந்த கேன்டீன் சென்று, இருவருக்கும் தயிர் சாதம் வாங்கி வந்தாள்.

பிரேமா சாப்பிடுவதற்கு மறுத்து பிடிவாதம் பிடித்தும்.  நிஷா விடாமல் அவரை வற்புறுத்தி கொஞ்சமாக தயிர் சாதம் சாப்பிட வைத்து விட்டாள்.  இரவு முழுவதும் கண்விழித்தது, காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்தது என அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது.

“ஆன்ட்டி… நீங்க சாப்பீட்டீங்கனா…தான் நான் சாப்பிடுவேன்.  இல்லை எனக்கும் வேண்டாம்” என பிடிவாதம் செய்து… அவருடனே உட்கார்ந்து விட்டாள்.

தனக்காக அவளும் சாப்பிடாமல் இருந்ததைப் பார்த்ததும்தான் பிரேமா கொஞ்சம் இறங்கி வந்தார்.  அப்போதும் காபி பிஸ்கட் மாதிரி ஏதாவது இருந்தா போதும் என்றிருந்தார்.

அவள்தான் விடாமல் “கொஞ்சமா தயிர் சாதமாவது சாப்பிடுங்க.  அப்புறம் நீங்களும் படுத்துடுவீங்க.  அங்கிள பார்க்க உங்களுக்கு தெம்பு வேண்டாமா….” என அவரை தேத்தி, சமாதானம் சொல்லி…, சாப்பிட வைத்தாள்.

சாப்பிட ஆரம்பித்ததும்தான் அவருக்கும், அவருடைய பசியே தெரிந்தது.  சாப்பிட்டு தலைவலிக்கான மாத்திரையை கேட்டு வாங்கி போட்டவர் அப்படியே அங்கேயே நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார்.

உமாபதி வந்து சேருவதற்கு மாலை நான்கு மணி ஆகியிருந்தது.  அவனும் எத்தனை முயன்றும் உடனே எல்லாம் பிளைட் டிக்கெட் கிடைக்கவில்லை.  பெங்களூரில் மூன்று மணிக்கு வந்து இறங்கியவன், டிராபிக்கில் மாட்டி ஹாஸ்பிட்டல் வந்து சேரவே நான்கு மணி ஆகியிருந்தது.

காலையிலிருந்து அவனும் சாப்பிடவில்லை.  தந்தையைப்பற்றின தகவல் கேள்வி பட்டதிலிருந்து மனவுளைச்சல்…, டென்ஷன்…, அலைச்சல்… என கசங்கிய காகிதமாய் சோர்ந்துபோய் வந்து சேர்ந்தான்.

அவனைப் பார்ப்பதற்கே நிஷாவுக்கு பாவமாக இருந்தது.  வந்தவன் நேராக தாயைப் பார்த்து ஆறுதல் கூறி பேசியிருந்துவிட்டு….. தந்தையை பார்க்க முயன்றான்.  நாச்சியப்பன் ஐ.சி.யு வில் இருந்ததால்….. அவரைப் பார்க்க நர்ஸ் அனுமதிக்கவில்லை.

“இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க ஸார், டாக்டர் வர நேரம்தான்.  அவர் வந்ததும் அவர்கிட்ட கேட்டுட்டு விடறேன்….” என அவனை பார்க்க நர்ஸ் அனுமதிக்கவில்லை.

அங்கேயே டாக்டரைப் பார்ப்பதற்காக உட்கார்ந்துவிட்டான்.  நிச்சயம் அவன் எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டான்… என புரிந்த நிஷா கேன்டீன் சென்று காபி….. வாங்கி வந்து கொடுத்தாள் அவனுக்கும்.  அப்படியே பிரேமாவுக்கும் சேர்த்து வாங்கி வந்து கொடுத்தாள்.

“நீ…. ஏன் கஷ்டப்படற நிஷா….. ?  நான் வாங்கிட்டு வர மாட்டேன்னா…..?” என்றவன் மறுப்பு ஏதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டான்.  பிரேமாவுக்கும் தலைவலி இருந்ததால் மறுப்பு சொல்லாமல் வாங்கி குடித்தார்.

மாலை ஐந்து மணி போல அஞ்சனா….. பெற்றோருடன் வந்துவிட்டாள்.  தோழியைப் பார்த்ததும்தான், நிஷாவுக்கு புதுத்தெம்பு வந்திருந்தது.  ஹப்பா வேல்முருகன் அங்கிள் வந்துட்டாங்க.  இனி அவங்க பார்த்துப்பாங்க… என அவளுக்குள்ளே பெருத்த ஆசுவாசம்.

அடுத்த அரைமணி நேரத்தில் வந்த டாக்டர் நாச்சியப்பனின் உடல்நிலையை பரிசோதித்து… “இப்போ… ஓகே.  நார்மலாகதான் இருக்கார்.  இருந்தாலும் இன்னும் ஒரு நாள் ஐ.சி.யு விலேயே வைச்சு பார்த்துட்டு… அப்புறம் அறைக்கு மாத்தலாம்…” என கூறிச்சென்றார்.

உமாபதி தனியாக மருத்துவரை சென்று பார்த்து பேசிவிட்டு வந்திருந்தான்.  பிரேமாவின் எதிரில் எதையும் வெளிப்படையாக கேட்க பயந்து மருத்துவரை  தனியாக சென்று பார்த்து வந்தான்.

இரவு ஒன்பது மணி வரை எல்லோரும் அங்கிருந்தவர்கள்…. அதன்பிறகு வீட்டிற்கு கிளம்பி வந்திருந்தார்கள்.  உமாபதி பிரேமாவையும் வற்புறுத்தி அஞ்சனா குடும்பத்துடன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தான்.

இப்படியே சிகிச்சைக்காக… அந்த வாரம் முழுவதும் மருத்துவமனையில் இருந்த நாச்சியப்பன், இன்றுதான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருந்தார்.  நான்கு நாட்கள் இவர்களுடனே மருத்துவமனையில் இருந்து கொண்ட வேல்முருகனும் ரோகிணியும் நேற்றைக்கு முன்தினம்தான் அவர்களது ஊருக்கு திரும்பியிருந்தனர்.

பிரேமாவிற்கும், உமாபதிக்கும் வேல்முருகனும் ரோகிணியும் வந்து… கூடவேயிருந்து உதவி செய்தது உற்ற உறுதுணையாக இருந்தது.  இவர்களது சொந்தங்கள் எல்லாம் தமிழகத்தில் இருந்தனர்.  யாருக்கும் தாயும் மகனும் தெரியப்படுத்தவில்லை.  ஆனால் அழையாமலேயே உற்ற நேரத்தில் உறுதுணையாக வந்து நின்ற நட்பை எண்ணி மெச்சாமல் இருக்க முடியவில்லை நாச்சியப்பனால்.

நாச்சியப்பனை மருத்துவமனையில் சேர்த்த முதல் நாள் இரவு பிரேமா இவர்களுடன் வீட்டிற்கு வந்திருந்தாலும், அடுத்தடுத்த நாள் ஹாஸ்பிட்டலிலேயே கணவருடன் இருந்து கொண்டார்.

நாச்சியப்பனை அறைக்கு மாற்றியிருந்ததால் அவருடனே அவரை கவனித்துக் கொண்டு கணவருக்கு உதவியாக தங்கி விட்டார் மருத்துவமனையிலேயே.  உமாபதியும் இரவில்கூட இவர்களை விட்டு வீட்டுக்கு வர மனமின்றி, ஹாஸ்பிட்டலில் அவர்களுடனே தங்கிகொண்டான்.

குளிப்பதற்கு மட்டும் வீட்டிற்கு வருபவன்…, மற்ற நேரங்களில் எல்லாம் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தான்.  பிரேமா கணவரை நினைத்து மிகவும் பயந்திருந்ததால்…, அவரை விட்டு எங்கும் நகரவில்லை உமாபதி.

ரோகிணி இருந்தவரை அவரே அவர்களுக்கு சமைத்து எடுத்துகொண்டு வேல்முருகனுடன் மருத்துவமனைக்கு எடுத்து வந்துவிடுவார்.  உமாபதியும் பிரேமாவும் எத்தனை மறுத்தும்… ரோகிணி கேட்கவில்லை.  அவர் இருந்தவரை மூன்று வேளையும் மருத்துவமனைக்கு சாப்பாடு கொடுத்தனுப்பி விடுவார்.

இதோ இன்று டிஸ்சார்ஜ் ஆகி நாச்சியப்பன் வீடு திரும்பியதும்தான்… பிரேமாவின் முகத்தில் தெளிவே வந்திருந்தது.  உமாபதிக்கும் கொஞ்சம் தைரியம் வந்தது மனதில்.

பழையபடி நார்மலாவதற்கு நாட்கள் எடுத்தது.  நிஷாவும் அஞ்சனாவும் எப்பவும்போல் வேலைக்கு சென்றுவர துவங்கியிருந்தனர்.  நாட்கள் அதன்போக்கில் சென்றது.

அலறிபிடித்து வேர்த்து வழிய…. எழுந்து உட்கார்ந்தாள் அஞ்சனா.  இவளது அலறல் சத்தத்தில் பதறி எழுந்த நிஷா லைட்டைப் போட்டு…. “என்ன அஞ்சு…?  என்னாச்சு…..?”  என அவளை உலுக்கினாள்.

அஞ்சனாவின் உடம்பு முழுவதும் வேர்வையில் நனைந்திருந்தது.  முகம் முழுவதும் பதட்டம் அப்பி…, உதடு துடிக்க…, கண்ணை இறுக்க மூடிய நிலையில் உட்கார்ந்திருந்தவள், தன் புறங்கையால் நெற்றியின் வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டேயிருந்தாள்.

“ஏசி குளிர்லயும்…., இப்படி உனக்கு வேர்த்திருக்கு….?” என அஞ்சனாவின் பக்கத்தில் வந்தவளை நிமிர்ந்து பார்த்த அஞ்சனா பேச முயன்றும் குரல் வெளியே வராமல் இருப்பதைப்போல உணர்ந்து, தொண்டையை தடவிக் “தண்ணீ… தண்ணீ…” என்றால் சைகையில்.

“என்ன ஆச்சு இவளுக்கு…?” என யோசனையுடன் பக்கத்திலிருந்த பாட்டிலை எடுத்து நீட்டினாள்.  நிஷா கொடுத்த பாட்டிலைத் திறந்து தண்ணீர் மொத்தத்தையும் தொண்டையில் சரித்தாள்.  அவள் குடித்த வேகத்தில் உடை மேலும் பாதி நீர் வழிந்து துணியெல்லாம் ஈரமாகியது.

“மெதுவா…டி… ஏன்… இவ்வளவு அவசரம்?  துணியெல்லாம் நனையுது… “

முழு பாட்டிலை குடித்து முடித்தும் அவளுக்கு தாகம் தீரவில்லைபோல.  அங்கிருந்து பாட்டலுடன் எழ முயன்றவளை கையைப் பிடித்து தடுத்த நிஷா, “ஏய்… என்ன…?  என்னாச்சு…? ஏன் இப்படி பேயறைஞ்ச மாதிரி இருக்க….?” என கேள்வி கேட்டாள்.

அஞ்சனாவும் அப்படிதான் இருந்தாள்.  நிஷா கேட்ட எதற்கும் பதில் கூறாமல்… முகமெல்லாம் கலங்கி பயத்தில் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தாள்.  நிஷாவுக்கும் ஒன்றும் புரியவில்லை.  என்ன ஆச்சு இவளுக்கு…? என குழம்பியவள்…, “என்ன…டி…?  ஏதும் உடம்புக்கு முடியலையா….?” என்றாள் இன்னும் கையை விடாமல்.

அதற்கும் பதிலில்லை அஞ்சனாவிடமிருந்து.

“என்னாச்சு….. அஞ்சு…..?”  நிஷா பிடித்திருந்த அஞ்சனாவின் கைகூட சில்லிட்டு இருந்தது.  கண்கள் எல்லாம் கலங்கி, விட்டால் அழுதுவிடுபவள்போல் உட்கார்ந்திருந்தாள் அஞ்சனா.

ஒன்னும் இல்லை… என மறுப்பாக தலையசைத்தாள் நிஷாவிடம்.

“அப்படியே ஒன்னு வச்சேன்னா… தெரியும்.  நானும் அப்போத்திலிருந்து என்ன என்னன்னு கேட்டிட்டிருக்கேன்… ஏதாவது வாயத் திறயேன்டி…” என எகிறியவள்…, “உடம்ப ஏதாவது பண்ணுதா…., முடியலையாடி…, ஹாஸ்பிட்டல் போலாமா…?”

இவள் இறைந்த இறைச்சலில் கொஞ்சம் தெளிந்த அஞ்சனா, “ஒன்னும் இல்….லடி…. அ…து…. ஒரு க….னவு கண்டே…ன்.  அதா….ன் பயந்துட்டேன்” என்றாள்.

இரவு படுப்பதற்கு முன் இருவரும் திரில்லர் மூவி பார்த்துவிட்டு படுத்திருந்தனர்.  ஒருவேளை அதை நினைத்துதான் கனவில் பயந்திருப்பாளோ என நினைத்து அஞ்சனாவையே விழியெடுக்காமல் பார்த்திருந்தாள் நிஷா.

சற்று நேரத்தில் தன்னை நிதானப்படுத்தியவள், நிஷாவைப் பார்த்து “நீ தூங்கு…” என்றாள் அஞ்சனா.

“ம்ம்… நீயும் படு.  லைட் எரியட்டும்.  படுத்து தூங்கு…” என அஞ்சனாவின் கையை விடாமல், பிடித்து கொண்டே அவளுக்கு பக்கத்திலேயே படுத்துக் கொண்டாள்.

சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்த  அஞ்சனா… பின்பு அவளும் படுத்துவிட்டாள்.  கண்களை மூடினாலே சற்று முன் கண்ட கனவுதான் கண் முன்னே விஸ்வரூபம் எடுத்தது.  அதற்கு பயந்து கண்ணைத் திறந்தே படுத்து இருந்தாள்.

மனதின் சிந்தனைகள் கட்டுக்கடங்காமல் தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது அஞ்சனாவுள்.  கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் கண்ட கனவை பற்றிய சிந்தனையில் தன்னை தொலைத்தவளுக்கு எங்கே அது பலித்துவிடுமோ… என நெஞ்சு பயத்தில் பதறியது.

திரும்பி பார்த்தாள் நிஷாவை.   நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.  இன்னும் இவளது கையை இறுக்கமாக பிடித்திருந்தாள் தூக்கத்திலும்.

மெல்ல அவளது கையைப் பிரித்தெடுத்து எழுந்து உட்கார்ந்தவள், நேராக எழுந்து சென்று சாமிபடத்தின் முன்பு நின்று கையைக் கூப்பி கண்ணை மூடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள்.

அவளது வாய் முணுமுணுவென்று கந்தசஷ்டி கவசத்தை சொல்லிக் கொண்டிருந்தது.  முழுவதுமாக கந்தசஷ்டியை சொல்லி முடித்தவள் பூஜை மாடத்தில் இருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு வந்து படுத்தாள்.

கண்களை மூடினாலும் தூக்கம் வருவேனா என அடம்பிடித்தது.  கடந்த  இரண்டு நாட்களாகவே உச்சபட்ச குழப்பத்தில் இருந்தாள்.  வேல்முருகன் நாச்சியப்பனுக்கு உடல்நிலை சரியில்லாத போது இங்கு வந்து தங்கியிருந்தப்பவே அஞ்சனாவிடம் அவளுடைய திருமணத்தைப் பற்றி நைச்சியமாக பேசி, அதற்கு சம்மதமும் வாங்கியிருந்தார் அவளிடமிருந்து.

ஆமாம்.  முதலில் அஞ்சனாவின் விருப்பம் போல் அவள் வேலைக்கு செல்லட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருந்தவர், என்று செல்வதுரை வந்து பெண் கேட்டு சென்றாரோ…, அன்றிலிருந்து தனது எண்ணத்தை மாற்றியிருந்தார்.

அவரையும் அறியாமல்… செல்வதுரையின் மீது அவர் கொண்ட அடிமனதின் பயமே அவரை அவசரப்படுத்தியது என கூட சொல்லலாம்.  அஞ்சனாவுக்கு நல்ல வரனாக பார்த்து விரைவில் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என முடிவு செய்து கொண்டார் உள்ளுக்குள்ளேயே..

அதன்படி மகளிடம் பெங்களூர் வந்திருந்த சமயத்தில் திருமணத்தைப் பற்றி பேசி அஞ்சனாவிடமும் ஒப்புதல் பெற்றிருந்தார்.  இதோ அதன் பலனாக அலசி ஆராய்ந்து நல்ல வரனை தேர்ந்தெடுத்து…. அஞ்சனாவை பெண் பார்க்கவும் வரவைத்திருந்தார்.

மாப்பிள்ளை தனியார் வங்கியில் மேனஜராக பணியில் இருந்தான்.  நல்ல வருமானம்.  ஒரே பையன்.  எதிர்பார்த்த அளவு சொத்து சுகமும் இருந்ததால் பேசி முடிவு செய்து, பெண் பார்க்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

அஞ்சனாவும் லீவ் எடுத்து ஊருக்கு சென்றிருந்தாள்.  பெண் பார்க்கும் படலம் முடிந்து… அடுத்த ஒரு வாரத்திலேயே மாப்பிள்ளை வீட்டினர் வேண்டாம் என மறுத்திருந்தனர்.

காரணம் கேட்டதற்கு திடீரென ஃபாரின் செல்லும் ஆஃபர் மாப்பிள்ளைக்கு வந்திருப்பதாகவும்.. இப்போதைக்கு திருமண ஐடியாவை தள்ளி போடுவதாகவும் காரணம் சொல்லி விட்டனர்.

அஞ்சனாவின் தந்தையும் மேற்கொண்டு ஏதும் கிளறாமல் விட்டிருந்தார்.  அடுத்த மாதமே வேறு ஒரு நல்ல வரனை தேடிப் பிடித்திருந்தார் வேல்முருகன்.  என்னவோ இந்த முறை அஞ்சனாவுக்கு பெண் பார்க்க ஊருக்கு செல்வதற்கு முன்பிருந்தே மனதிற்குள் உறுத்தல்தான்.

முதல்முறை பெண் பார்த்துவிட்டு செல்லும்போது அவளுக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை.  இந்த முறை என்னவோ உள்ளுக்குள் நெருஞ்சிமுள் போல ஏதோ ஒன்று நெருடிக் கொண்டேதான் இருந்தது.

அஞ்சனா ஊருக்கு சென்று பெண்பார்க்கும் சம்பவமும் முடிந்து திரும்பி பெங்களூர் வந்து இரண்டு நாட்களாகிறது.  ஆனால் மனது தான் ஒருநிலையில் இல்லாமல் தவிக்கிறது.  யாரையோ அவள் ஏமாற்றுவது போல…. அவளது மனமே, அவளை வதைத்துக் கொண்டிருந்தது.

ஊருக்கு சென்று வந்த இந்த இரண்டு நாட்களில் அவளால் சரியாக எதிலேயும் மனதை செலுத்த முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.  இது ஓகேவா….?  நீ பண்றது சரியா…..? என அவள் மனமே அவளை கேள்வி கேட்டு துளைத்து கொண்டிருந்தது.

காரணம் ரோகிணிதான்.  அவரது பார்வைதான்.  வாய் திறந்து மகளிடம் ஏதும் சொல்லாவிடினும்… அவரது அந்த முகவாட்டமும், வார்த்தையால் வடிக்காமல் பார்வையால் இறைஞ்சும் செய்தியும், அதில் தெரிந்த வேண்டுதலும், மன்றாடலும் அவளை அலைகழித்தது ஒரு நிலையில் இருக்க விடாமல்.

ஒருவேளை அவர் விருப்பத்தை  வெளியே சொல்ல பயந்து, மனதுக்குள்ளேயே மறுகிறாரோ…?  தந்தைக்கு பயந்து வெளிப்படையாக பேச தயங்குகிறாரோ…? என பலவாறாக எண்ணி தனக்குள்ளேயே குழம்பி  அலைபாய்ந்து கொண்டிருந்தாள் அஞ்சனா.

அவரது எண்ணம்… அவளுக்கு புரிந்தது போலவும் இருந்தது.   புரியாதது போலவும் இருந்தது.  தான் நினைப்பதை ரோகிணியிடம் வாய் திறந்தும் அவளால் வெளிப்படையாக கேட்க முடியாமல் என்னவோ தடுத்தது.  தான் நினைப்பது சரியா…?  இல்ல நாமதான் ஓவரா கற்பனை பண்ணிக்கறமா… என அவளுக்குள்ளேயே ஆழ்ந்த சிந்தனைகள் இம்சித்து கொண்டிருந்தது, நிலைகொள்ள விடாமல்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!