Skip to content
Post Views: 13,346
அத்தியாயம் 4
பதினைந்து நாள்கள் கடந்திருந்தது. விஷ்ணுவின் பிடிவாதத்தை தளர்த்த அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தார் கோபாலன். “அப்பா, குரூப் ஒன் எக்ஸாமும் எழுதியிருக்கேன், கண்டிப்பா கிடைச்சிடும், அந்த வேலையும் குறைஞ்சது இல்ல” என்றான் பிடிவாதமாக.
கோபாலன் தளர்வாய் அமர, “உங்களை தனியா விட்டுட்டு என்னால போக முடியாதுப்பா, இரண்டு வருஷம் ட்ரைனிங் போடுவாங்க, மோஸ்டா டெல்லிலதான் போடுவாங்க, ஜாபும் ஆல் இந்தியா லெவல்ல எங்கன்னாலும் போடுவாங்க. குடும்பத்தை விட்டுட்டு சம்பாதிக்கிற பணமும் பதவியும் எதுக்கும் ப்ரியோஜனமில்ல” என்றான் திடமாக.
“இந்த பரிட்சை எழுதும்போது இதெல்லாம் உனக்கு தெரியாதா? இப்போ ஏன்டா வேணாம்ங்கிற?” என்றார் வேதனையாக.
Advertisement
“அப்போ இருந்த நிலைமை வேறப்பா” என்றான் காவ்யா மேலுள்ள கோபத்தோடு.
“அவ போனதுக்காக உன் வாழ்க்கையை பாழாக்கிக்கனுமா? இதுதான்டா அவகிட்ட நாம தோத்தமாதிரி காட்டும்” என்றார் ஆற்றாமையோடு.
“ஏற்கனவே அவகிட்ட தோத்துதான்ப்பா போய்ட்டோம்” என இறுகிய முகத்தோடு சொன்னவன், “இனி யாரையும் ஜெயிக்க வேணாம். எனக்கு உங்களோட இருந்தா போதும்” என்றான் மீண்டும்.
Advertisement
“ஆனா எனக்கு நீ அந்த வேலைக்குத்தான் போயாகனும்” என்றார் பிடிவாதமாக சொல்லி, “பொண்ணுனால வந்த தலைகுனிவை நீதான் போக்கனும். இப்படிபட்ட உயர்பதவி வேலைக்குப் போனாதான் அது நடக்கும்” என்றார் கோரிக்கையாக.
Advertisement
வாக்குவாதம் செய்து தந்தைக்கு ப்ரஸ்ஸர் அதிகமாகிடுமோ என தனதறைக்கு சென்றுவிட்டான் இயலாமையில் வந்த கோபத்தோடு.
இரண்டு நாள்களுக்கு முன்பே யு.பி.எஸ்.சி தேர்வு இரண்டாம் நிலை தேர்வு முடிவுகள் வந்திருந்தது. தொலைக்காட்சி செய்தி பார்த்துவிட்டு மகனிடம் விசாரித்தார் கோபாலன். தேர்வில் தோல்வி அடைந்ததாக சொல்லியிருந்தான் விஷ்ணுவர்தன்.
மகன் பொய்யுரைப்பான் என்று நினைக்கவில்லை கோபாலன். இரண்டு வருடமாக காலை மாலை என இரு நேரமும் மைதானம் சென்றிடுவான். ஐ.பி.எஸ் என்பதை மறைத்து டி.எஸ்.பி ஆவது லட்சியம் என்றுதான் சொல்லியிருந்தான். சித்தார்த்தோடு சேர்ந்து படிக்கிறேன் என்று தினமும் காலை பத்து முதல் மதியம் இரண்டு மணிவரை கான்ஸ்டபிள் நாகநாதன் வீட்டில்தான் இருப்பான்.
Advertisement
டிகிரி முடித்துவிட்டு ஏன் வேலைக்கு போகவில்லை? ஒரு வருடம் வேலைக்கு போனான்தானே? அந்த வேலை என்ன ஆனது? என சக நண்பர்கள் கேட்கும்போது… அந்த வேலை மகனுக்கு பிடிக்கவில்லையாம், பிடிச்ச வேலை கிடைக்கும்போது போவான் என சுலபமாய் பதிலுரைப்பார் கோபாலன்.
மகன் டி.எஸ்.பி ஆன பின்னே பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் நினைத்திருந்தார். தற்போது அதற்கும் மேலே ஐ.பி.எஸ் ஆகும் வாய்ப்பை சுலபமாக வேணாம் என்கிறான்.
அப்படி சுலபமாக தேர்ச்சிபெறும் தேர்வில்லையே… இதற்காக இரண்டு வருடமாக உடலளவிலும், மனதளவிலும் எத்தனை உழைத்திருப்பான்? தனது உடல்நிலை கருதிதான் இம்முடிவெடுத்திருக்கிறான். கிடைத்த அரிய பெரிய வாய்ப்பு தன்னால் நழுவிப்போகக்கூடாது. எப்படியாவது மகனை ஒப்புகொள்ள வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் கோபாலன்.
நேற்று சித்தார்த் விஷ்ணுவிற்கு அழைத்தான். விஷ்ணு குளித்துக்கொண்டிருக்கவே கோபாலன் அழைப்பை ஏற்றார். மெயின்ஸ்ல விஷ்ணுவும் நானும் பாஸ் பண்ணிட்டோம் அங்கிள். ஆனா விஷ்ணு உங்ககிட்ட அதை மறைக்க சொல்லிட்டான்.
இரண்டு பேரும் சேர்ந்துதான் ஹார்ட்ஒர்க் பண்ணினோம். இப்போ விஷ்ணு இன்டர்வியுக்கு வரமாட்டான் போல. உங்க ஹெல்த்தை காரணம் சொல்றான். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அங்கிள். எப்படியாவது அவனை கன்வின்ஸ் பண்ணுங்க’ என்றிருந்தான்.
இச்செய்தி கேட்டதும் கோபாலனுக்கு தலைகால் புரியவில்லை. மகள் செய்த அவச்செயலை மறந்து மனைவியிடம் உற்சாகத்தோடு பேசினார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதெல்லாம் காரணமா? வயசானா எல்லாம் வரத்தான் செய்யும். இதுக்கு பயந்துட்டு இவன் வாழ்க்கையை தொலைக்க நினைக்கிறான் என்று மனைவியிடம் புலம்பினார் இன்முகமாக.
தன் மகனை சம்மதிக்க வைத்திடுவோம் என்ற நம்பிக்கை இருக்கவே விஷ்ணுவின் வெற்றியை முழுமனதோடு கொண்டாடிக்கொண்டிருந்தார் மனைவியோடு. பிரபாவதியும் மிகுந்த சந்தோசம் கொண்டார்.
ஆனால் விஷ்ணுவை சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதானது இல்லை என்பதை நேற்றிலிருந்து உணர்ந்திருந்தார் கோபாலன். ஆனாலும் விடுவதாக இல்லை. விஷ்ணு போக்கிற்கு இவ்விசயத்தை விட்டால் காலம்வரை வேதனைதான்.
அதோடு மகனை காக்கி சீருடையிலும், அரசாங்க வாகனத்தில் கம்பீரமாக ஏறும் காட்சியையும் கற்பனை செய்ய மனம் ஆகாயத்தில் பறந்தது. இப்பதவியை நிகர் செய்ய எந்த பதவியாலும் முடியாது எனும் அளவிற்கு ஐ.பி.எஸ் பதவியை நேசித்தார்.
மகன் அறைக்கு வந்த பிரபாவதி “விஷ்ணு… எதுக்கு இவ்வளோ பிடிவாதம்? ஆசைப்பட்டுத்தான படிச்ச? உடம்பையும் தயார் படுத்தியிருக்க? இந்த வேலை வேணாம்னுட்டு எந்த வேலைக்கு போனாலும் தன்னாலதான் பையன் வாழ்க்கை கெட்டுடுச்சுனு காலத்துக்கும் குற்றவுணர்வா இருக்கும் விஷ்ணு.
ஏற்கனவே பட்ட கஷ்டத்துக்கெல்லாம் அர்த்தமில்லாம பண்ணிட்டா உன் தங்கை. நீயும் இப்படி இருந்தா நான் எப்படி தேறிவரட்டும்? உங்கப்பாவை எப்படி தேத்தட்டும்? உங்களை படிக்க வைக்க எவ்வளோ கஷ்டப்பட்டிருக்காருனு தெரியும்தான?
பூர்வீக இடத்திலயிருந்து வந்து இருபது வருசம் பக்கம் ஆகிடுச்சு, இன்னும் நமக்குனு ஒரு வீடு கட்ட முடியல. ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்தபின்ன இனிமே அவரை வேலைக்கு அனுப்ப கூடாதுனு நினைச்சேன். உங்கப்பாகிட்ட சொன்னா கேட்கல.
உக்கார்ந்து சாப்பிடற அளவுக்கா சொத்து சேர்த்திருக்கோம்? விஷ்ணுக்கு நிலையான வேலை கிடைக்கும்வரை ஓடித்தான ஆகனும்ங்கிறார். என்னாலயும் மறுத்து பேச முடியல. அவர் சொல்றதும் நியாயம்தான? குடும்பத்தை ஓட்டனும்ல? முந்தாநாள் கூட வேற ஒரு பில்டிங்க்கு பெயிண்ட்டிங் பண்ணித்தரேனு பேசிட்டிருந்தார்.
டாக்டர் அவர் உடல்நிலை சொன்னதுக்கப்புறம் உயிரை பணையம் வச்சி நமக்காக ஓடனுமானு வேதனையா இருக்கு விஷ்ணு” என்றார் வேதனையாக.
“ம்மா இந்த வேலைதான் வேணாம்னு சொல்றேன், குரூப் ஒன் எக்ஸாமும் நல்லா எழுதியிருக்கேன்ம்மா, கண்டிப்பா கிடைச்சிடும், அது தமிழ்நாட்டுக்குள்ளதான் போடுவாங்க. அப்பாவை பக்கத்துல இருந்து பார்த்துக்கலாம். நான் இல்லாத நேரம் அன்னைக்கு மாதிரி ஆகிடுச்சுனா நீ ஒத்த ஆளா என்ன பண்ணுவ? எதாவது அசம்பாவிதம் ஆகிடுச்சுனா என்னாலயே என்னை மன்னிக்க முடியாதும்மா. புரிஞ்சிக்கோ ப்ளீஸ்” என்றான்.
“நீ நினைக்கிற வேலை கிடைச்சா மட்டும் பக்கத்துல இருந்து பார்த்துப்பியா? எந்த வேலைக்கு போனாலும் எல்லா நேரமும் பக்கத்துலயே இருக்க முடியாது விஷ்ணு. உங்கப்பாவோட ஆரோக்யம் நீ பக்கத்துல இருக்கிறதுல இல்ல, வாழ்க்கையில மேல மேல உயர்ந்து காட்டுறதுலதான் இருக்கு. அவரை நான் பார்த்துப்பேன். நீ உன் முடிவை மாத்திக்கோடா” என்றார் மன்றாடலாக.
“அப்பா உடம்பு மட்டும் காரணமில்லம்மா, காவ்யா செய்த துரோகத்துலயிருந்து இன்னும் முழுசா வெளி வரல, நம்பி போனவன் நல்லவனா? காவ்யாவை உண்மையா நேசிக்கிறவனா? இல்ல ரௌடியானு ஆள் யாருனே தெரியாது.
கல்யாணம் செய்துக்கிட்டாங்களா? அப்படி ஆகியிருந்தா அந்த பையன் வீட்டுல இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சாங்களா? இல்ல கேஸ் கொடுப்பாங்களானும் தெரியாது. இப்படி ஏதும் தெரியாம நான் பாட்டுக்கு கிளம்பி போனபின்ன எதாவது பிரச்சனைனா என்ன பண்ணுவிங்க? அன்னைக்கு ஒருநாள் ஸ்டேஷன்ல இருந்ததுக்கே அப்பாவால முடியல”
“இன்னும் என்ன வெளி வரனும்? இங்க அக்கம்பக்கம் எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு. உன் பெரியப்பாக்கு உங்கப்பாவே போன் போட்டு சொல்லிட்டார். எழவு வீட்டுக்கு வந்துட்டு போற மாதிரி ஒருத்தர் மாத்தி ஒருத்தர்னு பத்து நாளா துக்கம் விசாரிச்சுட்டாங்க. வேற என்ன இன்னும் நடக்கனும்? மீறிப்போனா என்னைக்காவது ஒருநாள் அம்மானுட்டு வரப்போறா. அதை அப்போ பார்த்துக்கலாம். அவ செய்த வேலைக்கு உன் வாழ்க்கை பாழாகனுமா?” என்றார் பிரபாவதி.
சற்று நேரம் யோசித்தவன், “சரி அப்போ அப்பாவும் நீயும் ஊருக்கே போய்டுங்க. இந்த வேலைக்கு நான் போறேன். அங்க ஒன்னுனா ஒடியார சொந்த பந்தம் இருக்காங்க. இங்க தனியா விட்டுட்டு போக மாட்டேன்” என்றான்.
ஒருவழியாக சம்மதித்தானே என்று சந்தோசித்த பிரபாவதி, “அப்பாகிட்ட பேசிப்பார்க்குறேன்” என்று வெளியேறினார்.
தந்தை இதற்கு சம்மதிக்கமாட்டார் என்று விஷ்ணுவிற்கு நன்றாக தெரியும். அதனாலேயே அன்னையிடம் அப்படி சொன்னான். விஷ்ணுவிற்கும் தன்நிலையை எண்ண மனம் வலித்ததுதான். ஆனால் வேறு வழியில்லையே.
தங்கை எங்கிருக்கிறாள் என்று இன்னும் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் தங்களை கண்காணித்துக்கொண்டிருப்பாள் என்ற எண்ணம் இருக்கவே, நிச்சயம் இரண்டொரு மாதத்திற்குள் வருவாள். அப்பொழுது என்னென்ன நடக்குமோ? என அந்த சம்பவமே மனதை அலைக்கழித்தது.
இந்த நிலையில் இரண்டு வருடமெல்லாம் இவர்களை தனியே விட்டு ட்ரைனிங் செல்வது நடவாத காரியம் என்றுதான் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றிருந்தான்.
இன்னும் ஒரு இருபது நாள் மறைத்திருந்தால் இன்ட்டர்வியு செல்லும் நாள் முடிந்திருக்கும், இனி ஒன்றும் செய்ய முடியாது என்றிருக்கலாம், இரண்டு நாள் கத்திவிட்டு தந்தை அமைதியாகியிருப்பார். இந்த சித்தார்த்தால் எல்லாம் மாறிப்போனது, தன் சூழ்நிலை தெரிந்தும் தந்தையிடம் சொல்லிவிட்டான், என அவன்மேலும் கோபமாய் இருந்தான்.
பிரபாவதி சொன்னதை கேட்டதும் ஆத்திரம் தாளவில்ல கோபாலனுக்கு. மகனை உரக்க அழைத்தார். விஷ்ணு வெளியே வந்ததும், “உனக்காக வாங்கின நிலத்தையும், காவ்யாக்காக வாங்கின நகைகளையும் வித்துட்டு, பத்தாத்துக்கு லோன் போட்டு நாம இந்த வீட்டையே வாங்கிக்கலாம்” என்றார்.
எதோ வேலை விசயமாக பேசுவார் என வந்தால், வேண்டுமென்றே தனக்கு பிடிக்காது எனத்தெரிந்தும் இதை சொல்கிறார் என, “என்னப்பா உங்க பிரச்சனை?” என்றான் சலிப்பாக.
“நீ ட்ரைனிங் போகனும், ஐ.பி.எஸ் ஆகனும். இல்லைனா எனக்கு என்ன தோணுதோ அதை மட்டும்தான் செய்வேன்” என்றார் முடிவாக.
“ட்ரைனிங்க்கு முன்ன இன்ட்டர்வியு இருக்கு, அதை சரியா செய்வேன்ற மனநிலையில நான் இல்ல, அதுக்கப்புறம்தான் ட்ரைனிங்ப்பா” என்றான் தன்னை புரிய வைக்கும் நோக்கோடு.
“சரி இன்ட்டர்வியு போ” என்றார்.
விஷ்ணு அமைதியாக இருக்கவே, “நீ பக்கத்துல இருந்தா என்னை காப்பாத்திடுவியா? மாத்திரை ஒழுங்கா குடிக்கலனாலும் காப்பாத்திடுவியா? திரும்ப நெஞ்சுவலி வந்தா சொல்லாம விட்டுட்டேன்னாலும் காப்பாத்திடுவியா?” என்று தானும் முறைத்தார் மகனை.
“ப்பா…” என தலையில் தட்டிக்கொண்டவன், “உங்க உயிரைவிட இந்த வேலை முக்கியமாப்பா?” என்றான் ஆற்றாமையோடு.
“அப்படியில்ல, ஆனா இந்த வேலைக்கு போகலைனா ரொம்ப நாள் இருக்கமாட்டேன், தற்கொலைலாம் பண்ணிக்க தேவையில்லை, தானாவே போய்டும்” என்றார் வேதனையோடு.
“ப்பா” என விஷ்ணு பதற, “என் ஹெல்த்தை நினைச்சு நீ ட்ரைனிங்க்கு போக மறுக்கறதை என்னால தாங்க முடியல விஷ்ணு” என பொறுமையாக சொல்லி, “எதோ ஒருமுறை நெஞ்சு வலி வந்திடுச்சு, அதுக்காக உன் அப்பனுக்கு வயசாகிடுச்சுனு நினைக்கிறியா? எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நிற்பான்டா உன் அப்பன்” என்றார் உயர்ந்த குரலில்.
தந்தையின் தோரணையில் பெருமையாகிட, சின்னதாய் சிரித்தவன், “அப்போ எதுக்கு ஸ்டேஷன்ல அழுதிங்களாம்?” என்றான் இயல்பாக.
“அது… அன்னைக்கு அப்படிலாம் நடக்கும்னு என் கனவுல கூட நினைச்சு பார்த்ததில்ல, அதனால அந்த சூழலை என்னால எதிர்கொள்ள முடியல. ஆனா இப்போ அப்படியில்ல, பாராங்கல்லே தலை மேல விழுந்தாலும் பார்த்துக்கலாம்ன்ற அளவுக்கு நெஞ்சுரம் வந்துடுச்சு.
என்னை நம்பு விஷ்ணு, என் உடம்பை நான் நல்லபடியா பார்த்துப்பேன். எனக்கு ஒன்னும் ஆகாது. சாதாரண பெயிண்ட்டரோட மகன் ஐ.பி.எஸ்னு எல்லாரும் பெருமையா சொல்லனும்.
என் தங்கைக்காக பூர்வீகத்தை விட்டுட்டு வந்தேன், இன்னைக்கு என் பொண்ணு கொடுத்த அவமானத்தை சுமந்துட்டு அந்த ஊருக்கு என்னால போக முடியாது. நீ ஜெயிச்சு வா. உன் பின்னாடி எங்க வேணும்னாலும் வரேன்” என்றார் கோரிக்கையாக.
தனது நலன் கருதும் தந்தையின் வேண்டுதலான குரலுக்கு வருந்தினான் விஷ்ணு. ஆனாலும் தனியாக எப்படி சமாளிப்பார்கள் என்ற கவலையோடு திரும்ப, விஷாலினி கண்ணில் பட்டாள்.
இந்த வேடிக்கை பார்க்குறதை என்னைக்குத்தான் நிறுத்துவாளோ என நினைத்தவன் முகம் இறுக்கமாக, “மாமா” என வெளியிலிருந்து அழைத்தாள் கோபாலனை.
error: Content is protected !!