Skip to content
Post Views: 13,300
“உள்ள வாடாம்மா” என்றார் கோபாலன்.
விஷ்ணுவர்தனை பார்த்து தயங்கி நிற்க, விஷாலினியின் அருகில் நின்றிருந்த மேகலையின் முகம் சந்தோசத்தில் இருக்க, எதோ சந்தோசமான விசயம் போல, அதான் தந்தையிடம் சொல்ல நினைக்கிறாள் என தனதறைக்குச் சென்றான்.
விஷ்ணு அகன்ற பின்னே, கோபாலன் வீட்டு ஜன்னல் அருகே வந்தவள், “மாமா வெளில வாங்க” என்றாள்.
கோபாலன் வெளியே வர, “மாமா, நீட்ல சிக்ஸ் எய்ட்டி மாமா, நல்ல காலேஜ்ல சீட் கிடைக்கும்னு ஃப்ரண்ட்ஸ் சொல்றாங்க” என்றாள் இன்முகத்தோடு.
Advertisement
மகிழ்ந்தவர், “காவ்யா டென்ஷன்ல இதை மறந்தே போய்ட்டேன்டா, ப்ளஸ்டூ ரிசல்ட் கூட வந்திருக்குமே? என்ன மார்க்?” என்றார் ஆர்வமாக.
“அதெல்லாம் முன்னவே வந்துடுச்சு மாமா, ஃபைவ் தர்ட்டி. அதுல கொஞ்சம் மார்க் குறைஞ்சிடுச்சு” என்றாள் பெரிய குற்றம்போல்.
“அது பரவால்லடா, நீட்டுக்கும் படிச்சிட்டு இவ்வளோ எடுத்ததே ரொம்ப பெரிய விசயம்” என பாராட்ட, “ஹாஸ்டல் சேருரேனு சொன்னா அம்மா வேணாம்னு” என்றாள் பாவமாக.
Advertisement
“ஏன்ம்மா? டாக்டருக்கு படிக்க வைக்கத்தான நீயும் விஷாலினியோடவே விடியகாலம் எழுந்துப்ப? இப்போ அனுபலனா எப்படி?” என்றார்.
Advertisement
“இன்னும் தலைகூட பின்ன தெரியறதில்லைண்ணா, ஹாஸ்டலுக்கு போனா அங்க உள்ள பிள்ளைங்களோட சீக்கிரம் கலந்துக்கமாட்டா. தனியா கிடப்பா. இங்க எம்.எம்.சிலயே சீட் கிடைக்கும்னு சொன்னாங்க. இங்கயிருந்து ஒரு மணிநேரம்தான் ஆகும். தினமும் போய் வரட்டும். நாம பார்த்து பார்த்து செய்யிற மாதிரி ஹாஸ்டல்ல கிடைக்காது” என்றார் மறுப்பாக.
மேகலையின் முகம் தவிப்பிலிருக்க, தனது மகள் செய்த செயலால், விஷாலினியை விடுதிக்கு அனுப்ப மறுக்கும் மேகலையின் தாயுள்ளம் புரிந்தது கோபாலனுக்கு.
ஆனால் காவ்யாவோடு ஒப்பிடுவது சரியில்லை என்பதோடு இத்தனை மதிப்பெண் வாங்க எத்தனை சிரமப்பட்டிருப்பாள் என்று விஷாலினியைப் பார்க்க, “அம்மாகிட்ட நீங்க சொல்லுங்க மாமா” என்றாள் சலுகையாக.
Advertisement
மேகலை மகளை முறைக்க, “அதைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம்” என்றவர், “பிரபா… விஷாலினிக்கு எதாவது ஸ்வீட் எடுத்துட்டு வா” என்றார் சத்தமாக.
வெளியே வந்த பிரபாவதி என்னவென்று விசாரிக்க, விஷாலினி விளக்க, சந்தோசித்து, “ப்ளஸ்டூ ரிசல்ட் வந்து எவ்வளோ நாளாகியிருக்கு? இன்னைக்குத்தான் உனக்கு சொல்ல தோணுச்சா?” என உரிமையாய் கடிந்து, ஃபிரிட்ஜில் உள்ள கேட்பரீஸை எடுத்து வந்து கொடுத்தார்.
பிரபாவதிக்கு நன்றி சொல்லி, கோபாலனை மட்டும் தயக்கமாக பார்த்தவாறே அன்னையோடு தனது வீட்டிற்கு சென்றிருந்தாள் விஷாலினி.
தனது உடல்நிலை குறித்து கவலையாக பார்த்துச் செல்கிறாள் என நினைத்த கோபாலன், “நீ பெரிய டாக்டராகி இந்த மாமாவை பார்த்துக்கோடா” என்றார் சத்தமாகவும் இன்முகத்தோடும்.
எட்டிப்பார்த்தவள், சரியென்பதாய் தலையசைத்தாள் பெருமையாக. பின்னே கோபாலன் வீட்டிற்குள் வந்தவர், மகனை ட்ரைனிங் செல்ல சம்மதிக்க வைக்கும் பணியில் இறங்கினார்.
** ** ** **
“விஷாலினி, ஹாஸ்டல் சேர கோபால் அண்ணாகிட்ட ரெகமண்ட் பண்ண சொல்லி என்னை சங்கடத்துக்குள்ளாக்காத. யார் ரெக்கமண்ட் செய்தாலும் உன்னை ஹாஸ்டல் சேர விடமாட்டேன்” என்றார் உறுதியாக.
“ம்மா, எனக்கு மட்டும் ஹாஸ்டல் சேர ஆசையா என்ன? என்னால நிம்மதியா வெளில போய் வர முடியலம்மா” என்றாள் தளர்வாக.
“ஏன்? யார் என்ன சொல்றாங்க?” எனப்பதறினார் மேகலை.
இனி மறைக்கக்கூடாதென “யார்னு தெரியலம்மா, ஆனா ஃபாலோ பண்றாங்க. என்னையே பார்க்குறாங்க. என் ஃப்ரண்ட் கூட லவ் பண்றான் போலடீனு சொல்றா. கஷ்டமா இருக்கும்மா” என்றாள் கலக்கமாக.
“என்னடீ சொல்ற? எப்போயிருந்து இது நடக்குது?” என்றார் பேரதிர்ச்சியோடு.
“ப்ளஸ்டூ எக்ஸாம்க்கு அப்புறத்துலயிருந்து, அதனாலதான் கம்ப்யூட்டர் க்ளாஸ்க்கு போறதை நிறுத்தினேன்”
“இவ்வளோ நாள் ஏன் என்கிட்ட சொல்லல?”
“சாரிம்மா. அப்போ சின்ன விசயமா தெரிஞ்சது, இப்போ பயமாயிருக்கு”
மகளை அணைத்துக்கொண்டவர், பள்ளி முடிந்த பின்னே மகளை எங்கு அனுப்பினோம்? என யோசிக்க, மளிகை கடை தவிர்த்து எங்கும் அனுப்பிய நியாபகமில்லை. “திரும்ப அவனைப் பார்த்தா என்கிட்ட சொல்லு” என்றார்.
விஷாலினி சம்மதிக்க, “உன்னைத்தான் பாலோ பண்றானு நல்லா தெரியுமா?” என்றார் மீண்டும்.
“நல்லா தெரியும்மா, நான் பேசாம வந்தும் கூட என் பின்னாடியே வந்து, அவன் பேரை சொல்லி, அடுத்து என்ன பண்ணப்போற? நல்லா படிப்பியாமே? ஃபர்ஸ்ட் இரண்டு ரேங்க்குள்ளதான் வாங்குவனு சொல்றாங்கனு என்னைப்பத்தி எல்லாமும் சரியா சொல்றான். அதுக்கப்புறம்தான் எனக்கு ரொம்ப பயமாகிடுச்சு” என்றாள் பயத்தோடே.
மேகலைக்கும் உள்ளுக்குள் கலவரமானது. மகள் சிறுபிள்ளை என்ற நினைப்பெல்லாம் மலையேறி, பருப்பெண்ணாக நினைக்க வைத்தது. இவ்வயது பிள்ளைகளை கையால்வதுதான் பெரும் சிரமம்.
ஆனால் கடவுள் கிருபையாக தன் மகள் எதையும் மறைக்காமல் தன்னிடம் சொல்லிவிட்டாள். இனி அவளுக்கு எடுத்து சொல்வதில் பிரச்சனையில்லை. தவிர தன் பேச்சை கேட்பாள் என்ற நம்பிக்கை இருந்தது.
“கடைக்கு போய் பால் வாங்கிட்டு வா” என்றார்.
“ம்மா” என விஷாலினி பதற, “நீ போ, சித்த கழிச்சு நான் பின்னாடி வரேன். நான் உன் அம்மான்ற மாதிரி காட்டிக்காத. நானும் கடைக்கு வரேன். அவன் வந்தான்னா யார் அவன்? என்ன கலர் சர்ட் போட்டிருந்தானு எனக்கு ஜாடை காட்டு” என்றார்.
சரியென்பதாய் தலையசைத்து, வழக்கமாய் கடைக்கு எடுத்துச்செல்லும் கூடையை எடுத்து வெளியேற, “விஷாலினி நில்லு” என்று துப்பட்டாவை எடுத்து கொடுத்து “இதை போடாம இனி வெளில போகக்கூடாது” என்றார் கட்டளையாக.
ஏதும் சொல்லாமல் வாங்கி அணிந்து வெளியேறினாள். ஐந்து நிமிடம் கழித்து மேகலையும் கடைக்கு கிளம்ப, யாருமறியா ஆராய்ச்சி பார்வையோடு கடைக்கே வந்திருந்தார் மேகலை.
கடையில் கூட்டம் அதிகமாக இருக்கவே, இன்னும் பாலை வாங்காத மகளருகே சென்று நின்று, “பார்த்தியா? வந்துருக்கானா?” என்றார் சன்னக்குரலில்.
இல்லை என்பதாய் தலையசைக்க, “சரி நான் வாங்கி வரேன், நீ போ” என்று மகளிடம் பணத்தை வாங்க, கூடையையும் நீட்டினாள்.
“பால்தான? கையில பிடிச்சிட்டு வந்திடறேன், நீயே எடுத்துட்டு போய்டு” என்று சொல்ல விஷாலினி வீட்டிற்கு கிளம்பினாள்.
அந்த சிறிய வளைவை கடந்ததும், கண்கள் மின்ன முன்னே வந்தவன், “என்னை தேடின போல” என்றான் இன்முகமாக.
இவனின் திடீர் வருகையில் அதிர்ந்தவள், இல்லை என்பதாய் தலையசைக்க, “கடைக்கு வந்துட்டு ஒன்னுமே வாங்கல” என்று வெறும் கூடையை காண்பித்தவன், “அப்போ கடைக்கு வர சாக்குல என்னைப் பார்க்கத்தான் வந்திருக்க” என்று வெற்றிப்புன்னகை புரிந்தான்.
யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? இந்த சிறிய சந்தில் இவனை கடந்து எப்படி செல்வது என்று இவள் தவித்திருக்க, “புதுசா துப்பட்டாலாம் போட்டுருக்க? நான் பார்க்குறேனுதான வெக்கம் வந்துருக்கு? என்கிட்ட எதுக்கு மனசை மறைக்கிற?” என்றான்.
இவளுக்கு கண்கள் கலங்கினாலும் கட்டுப்படுத்தியவள், “நீங்களா எதாவது நினைக்காதிங்க. இனி இப்படி பண்ணுனிங்க பிரச்சனை பெருசாகும்” என்றாள் மிரட்டலாக.
“ஹப்பா லென்த்தியா பேசிட்ட போல?” என்றான் மகிழ்வோடு.
“வழி விடுங்க” என்று இவள் சொல்ல, “நீட்ல நல்ல மார்க் வாங்கியிருக்க, ஆல் இந்தியா லெவல் கவுன்சிலிங்லாம் போடாத. என்னால அலைய முடியாது. இங்கயே ஸ்டான்லி, எம்.எம்.சி இப்படி போடு, புரியுதா? உன் மார்க்குக்கு கிடைக்கும்” என்றான்.
அவ்வழி விடுத்து மாற்று தெருவிற்கு சென்று வீட்டிற்கு சென்றிடலாம் என இவள் திரும்ப, “இப்படியே போ” என வழிவிட்டான். விட்டால் போதுமென வேக நடையோடு வீட்டிற்கு வந்தாள் விஷாலினி.
வரும் வழியில் யாரேனும் புதிதாக தென்படுகிறார்களா என்று ஆராய்ந்தபடி மேகலை வீடு வந்து சேர கால் மணிநேரம் ஆகியிருந்தது. மகளின் கலங்கிய முகம் கண்டு, “இன்னைக்கு வரலைனா என்ன? என்னைக்காவது கண்ல சிக்காமலா போய்டுவான்? நீ பயப்படாத. நானிருக்கேன்” என்றார் மேகலை.
“அவன் வந்தான்ம்மா” என்று அழுகையோடு விஷாலினி நடந்ததை விளக்க, பதைத்துப்போன மேகலை “இந்த ஊர் பையனா?” என்றார்.
“அது தெரியலம்மா, ஆனா அவனா வந்து பேசும் முன்ன நான் எப்போவும் பார்த்ததேயில்ல” என்றாள்.
இந்த ஊர் என்றாலும் மகளுக்கு பெரிதாக யாரையும் தெரியாதே, பள்ளி நாள் வரை பள்ளி உண்டு வீடுண்டு என்றிருந்தவளாகிற்றே? இங்கே சொந்தங்களும் யாரும் இல்லை ஆதலால், அக்கம்பக்கம் தெரிந்தவர் விஷேசங்களுக்கு கூட மேகலை மட்டுமே சென்று வருவார்.
பதினெட்டு வருடங்களாக இங்கிருக்கின்றனர். இதுவரை எந்த பிரச்சனையும் வந்ததில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னே அன்னைக்கு முடியாமல் போக, மேகலையின் அண்ணன் அவரின் வீட்டிற்கே அழைத்து சென்றிருந்தார்.
விஷாலினி பெரிய பெண்ணான சமையம் அது. அப்பொழுது மிகவும் பயந்தார் மேகலை. ஆனால் கோபாலன், பிரபாவதியின் அரவணைப்பு அனைத்து பயத்தையும் விரட்டியது.
எதுவானாலும் பிரபாவதியிடம் பகிர்வார் மேகலை. ஆனால் இவ்விசயத்தை சொல்ல மனம் வரவில்லை. காலை கோபாலன் வீட்டு வாக்குவாதம் பாதியாய் கேட்ட வரை விஷ்ணு வேறு வேலைக்கு செல்ல மறுப்பான் போல. காவ்யா பிரச்சனையோடு சேர்த்து இவனும் படுத்துவான் போல.
இதில் நாம் வேறு பிரச்சனை என்று போய் நின்றால் கஷ்டமாகிடும். தவிர கோபால் அண்ணாவிற்கு ஹார்ட் பிரச்சனை வேறு இருக்கிறது. நம் பிரச்சனையை நாம்தான் பார்த்தாகனும் என நினைத்துக்கொண்டார் மேகலை.
“ஹாஸ்டல் சேர்த்தினா மட்டும் வரமாட்டானா?” என தானா புலம்பினார் மேகலை.
“ஆனா தினமும் வழியில பார்த்து இதுபோல பேசினான்னா பார்க்குறவங்க தப்பா நினைப்பாங்கதானம்மா? அதுக்குத்தான் ஹாஸ்டல் போறேனு சொல்றேன்” என கெஞ்சினாள் விஷாலினி.
மேகலை முகம் தவித்திருக்க, “எந்த ஹாஸ்டல்ல சேருறேனு கோபால் மாமா தவிர்த்து வேற யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்மா. நானும் என் ஃபிரண்ட்ஸ்கிட்ட கூட சொல்லல. நான் எங்கயிருக்கனு தெரியலைனா அவனால ஒன்னும் பண்ண முடியாதுதான?” என்றாள் புத்திசாலியாக.
மேகலையால் சட்டென எந்த முடிவிற்கும் வர முடியவில்லை. மகளிடம் இத்தனை பேசியவன் அத்தனை எளிதாக விட்டுடுவானா? கரைப்பார் கரைத்தால் கல்லே கரையும். பதின்ம வயது பெண் எம்மாத்திரம்? யாரா இருக்கும்? இதே ஊராக இருந்தால் அவனின் பெற்றோரிடம் முறையிடலாம்… என்ற யோசனையில் மேகலை இருக்க,
“ம்மா நீ கவலைப்படாத. அவன் கண்ணிலயே படாதமாதிரி நாம ஐடியா பண்ணுவோம்” என தைரியமளித்தாள் அன்னைக்கு.
பெண்ணை தொடர்பவனுக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதை மகளுக்கு விளக்கியாக வேண்டிய நிலைக்கு வந்தார் மேகலை.
மகளின் கையைப் பிடித்து “விஷாலினி” எனும்போதே, “நீ பயப்படாதம்மா. ஒருத்தரை நம்பி நீ மோசம் போனது போல நான் இருக்கமாட்டேன்” என்றாள் பட்டென.
இதயம் சுருக்கென தைத்தாலும் மகளை பெருமையாக பார்த்து, “நீ சமத்துனு எனக்கு தெரியும்டா. ஆனாலும் அம்மா சில விஷயங்களை உன்கிட்ட சொல்லியாகனும்” என்று அருகே அமர்த்திக்கொண்டார் மகளை.
error: Content is protected !!