Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயம் எழுதும் கவிதை நீ

இதயம் எழுதும் கவிதை நீ 16

அத்தியாயம் 16

கந்தசாமி,சரோஜா, பிரியா மூவரும் அன்றிரவு ராஜீவனை காண வந்தனர்.
அம்பிகாவிடம் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டு, ஹாலில் அமர்ந்தனர்.

ரஞ்சிதா அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து தந்தாள்.கந்தசாமி தண்ணீரை வாங்கியபடி..அவளை பார்த்து,”வாம்மா நீயும் வந்து இங்க உட்காரு எவ்வளவு நேரம்தான் வேலையே செஞ்சிட்டு இருப்பே.எனக்கு நீ வேற பிரியா வேற இல்லம்மா.மித்ரா பிரியா மாதிரி நீயும் எனக்கு பொண்ணுதான்”என்றான்.

ஏனோ அந்த வார்த்தைகளை கேட்ட ரஞ்சிதாவிற்கு இது உண்மை முகம் அல்ல.இதற்கு பின்னால் இன்னொரு போலியான முகம் உள்ளது என தோன்றியது.தாய் தந்தை இறப்பிற்கு பிறகு அந்த உறவுக்கான ஏக்கம் அவளிடம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது.என்னதான் அலமேலு பாசத்தை கொட்டி வளர்த்திருந்தாலும் தாயின் அரவணைப்பையும் தந்தையின் பாதுகாப்பையும் தேடி தேடி சோர்ந்துதான் போனாள்.



Advertisement

ஒரு கட்டத்தில் அதை யாரிடமும் வெளிப்படுத்த முடியாமல் தனக்குள் புதைக்க ஆரம்பித்தாள்.திருமணத்திற்கு பிறகு ராம மூர்த்தி காட்டிய அன்பு அந்த ஏக்கத்தை மறக்க வைத்தது.அவரது இறப்பு ராஜீவனை பாதித்தை விடவும் இவளை அதிகமாக பாதித்தது.

அதற்கு மேலும் அவர்களின் போலியான அன்பையும்,அர்த்தமில்லாத
வார்த்தைகளையும் அவளால் கேட்க முடிய வில்லை.

எனவே சித்தார்த்திற்கு இரவு உணவை ஊட்டுவதாக சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.தட்டில் உணவை போட்டபட,”இவங்க பேசறதே ரெண்டு நிமிஷத்துக்கு மேல கேட்க முடியல. எல்லாமே பொய்னு அப்பட்டமா தெரியுது.இது ஏன் இவங்க ரெண்டு பேருக்கும் தெரிலே.”என யோசித்தாள்.

Advertisement

புதிதாக வந்திருப்பவர்களை வாயில் கை வைத்தபடி பார்த்திருந்த சித்து, ரஞ்சிதா உணவு எடுத்து வரவும்… இரண்டு கைகளையும் உயர்த்தி தன்னை எடுத்துக் கொள்ளச் சென்னான்.

Advertisement

இதற்கு மேலும் அவர்களை கவனிக்க விருப்பமில்லாததால் சித்துவை எடுத்துக் கொண்டு வாசல் அருகில் சென்றாள்.இருப்பினும் உள்ளே ஒரு இனம் புரியாத பதட்டம்.என்னதான் மகனுக்கு உணவை ஊட்டினாலும் அவர்கள் பேச்சில் கவனம் சென்றது.

ராஜீவா இனி என்ன பண்ணலாம்னு இருக்கே?-கந்தசாமி.

குஜராத்ல ஒரு பெரிய ப்ராஜெக்ட்  போய்ட்டு இருக்குங்க மாமா…அது முடிய எப்படியும் ரெண்டு வருஷம் ஆகும்.அது முடிஞ்ச அப்பறோம் அங்கேயே இன்னொரு ப்ராஜெக்ட் இருக்குங்க மாமா.

Advertisement

நான் உன்னோட வேலைய பத்தி கேக்கல.உன்னோட தனிப்பட்ட வாழ்க்கையே பத்தி கேக்கறே.

ஒரு நொடி ரஞ்சிதாவிடம் அவன் பார்வை சென்றது.அவள் சித்தார்த் மீது தன் கவனத்தை வைத்திருந்தாள்.

இரண்டு வருஷமா பிரியா, எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா தெரியுமா?” என்று சரோஜா மெதுவாக ஆரம்பித்தாள்.

இந்த வார்த்தையை கேட்ட ராஜீவனின் முகம் இறுகியது.

“நான் சுத்தி வலச்சு பேச விரும்பல, இவ்வளவு நாளா ராம மூர்த்தி மாமாவுக்காக நீயும் என் பொண்ணும் கஷ்டபட்டது எல்லாம் போது.நான் என்ன சொல்ல வரேனு உனக்கு புரியும்னு நினைக்கறே ராஜீவா.ஒரு நல்லா முடிவா சொல்லு.என் பொண்ணு உனக்காக இப்பவும் காத்துட்டு இருக்கா.”என்றான் கந்தசாமி

அதுவரை உணவை ஊட்டிக் கொண்டிருந்த ரஞ்சிதாவின் கை ஒரு நொடி அப்படியே நின்றது.அவன் என்ன பதில் சொல்வான் என்ற எதிர்பார்ப்போடு,ராஜீவனை நோக்கி தன் கூர்மையான பார்வையை வீசினாள்.

அந்த பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவன்.அடுத்த நொடி அவளை எதிர் கொள்ள முடியாமல் தவித்தான்.

புதுமணப் பெண் போல் தன்னை அலங்கரித்து வந்திருந்த பிரியாவிற்கு அவனின் செய்கை பெருத்த ஏமாற்றத்தை தந்தது.அவனது கவனத்தை தன் பக்கம் திருப்ப ஏதேதோ செய்து பார்த்து விட்டாள்.ஆனால் பலன்தான் இல்லை.

அடிக்கடி அவன் பார்வை ரஞ்சிதாவை தொட்டு வருவதை பார்த்தவளுக்கோ எதிரே கிடப்பதை எல்லாம் எடுத்து ரஞ்சிதாவின் மீது வீச வேண்டும் போல இருந்தது.பெரும் மெனக்கெட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

ராஜீவனின் மெளனம் வேறு ஆத்திரத்தை தந்தது.வாயைத் திறந்து “நான் பிரியாவை திருமணம் செய்து கொள்கிறேன்” என ஒரு வார்த்தை சொல்கிறானா பார் என மனதிற்குள் வெம்மினாள்.

ராஜீவனிற்கு இந்த நிலையை எப்படி கையாள்வது என தெரியவில்லை.
“எனக்கு குடும்பம் உள்ளது.பிரியாவை திருமணம் செய்ய முடியாது” என சட்டென கூற ஒரு நொடி போதும். ஆனால் அதன்பின் நடக்க போகும் விபரீதங்களை அவனால் நினைத்து பார்க்க முடியவில்லை.

ஏற்கனவே திருமணத்தின் போது பிரியா தற்கொலை வரை சென்றது அவன் எண்ணத்தில் வந்தது.மீண்டும் அதைப் போன்றொரு நிலை வந்தால் என்ன செய்வது என குழம்பினான்.

“மாமா நான் நாளைக்கு குஜராத் போறே, வீட்டுக்கு தேவையான பொருட்கள் கொஞ்சம் வாங்கி தரனும் நான் கிளம்பறே” என அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

தங்களுக்கு சாதகமாக எந்த பதிலையும் சொல்லாது அவன் சென்றதும் ஏமாற்றத்தோடு தாங்களும் கிளம்புவதாக அம்பிகாவிடம் விடைபெற்றனர்,கந்தசாமி குடும்பத்தினர்.

“முடியாது, எனக்கு குடும்பம் இருக்குனு ஒரு வார்த்தை வாயைத் திறந்து சொல்லி இருக்கலாம் இல்ல…”என்ற அர்த்தத்தோடு ரஞ்சிதா அவனை பார்க்க…அவனால் அவளது பார்வையை எதிர் கொள்ள முடியவில்லை.

இதற்காகதானே இரண்டு வருடம் யாரையும் பார்க்காமல் தவிர்த்தான். மீண்டும் அதே நிலை வர…யாரிடமும் எதுவும் சொல்லாமல் குஜராத் கிளம்பி விட்டான்.

அன்றிரவு ரஞ்சிதாவிற்கு விடியாத ஒரு நீண்ட இரவாகவே தெரிந்தது.என்ன வாழ்க்கை இது?ஏன் தனக்கு மட்டும் இப்படி?இனி எதிர்காலம் என்னவாகும்?என்ற எண்ணங்களோடு தூங்காமல் இரவைக் கழித்தாள்.

அதே சமயம் ட்ரெயினில்,தனக்கு எதிரே ஒரு குழந்தை சேட்டை செய்ய ராஜீவனுக்கு சித்தார்த்தின் நினைவு வந்தது.”எவ்வளவு சேட்டை?நல்ல புத்திசாலியான பையன்.என் பையன் பெரியவனா வளர்ந்ததும் அவனே நான் ஏரோப்ளேன் ஓட்ட படிக்க வைக்கனும்.. என்று எண்ணிய அடுத்த நொடி, வேண்டா வேண்டா என் பையன் பண்றே குறும்புக்கு ஏரோப்ளேன் எல்லா ஒத்து வராது.வேறே ஏதாச்சு அமைதியான வேலை அமைச்சு கொடுக்கனும்.இந்த வீடு அப்பா எனக்காக கட்டுன வீடு,நான் என் பையனுக்கு இதை விட பெரிய வீடு கட்டி தரனும்.”என எதிர்கால கனவில் மூழ்கினான்.

எதிரே அமர்ந்திருந்த குழந்தையின் தாய் “இவன் பிள்ளை பிடிப்பவன் போல, நம்ம குழந்தையவே பார்த்துட்டு இருக்கான்” என பயந்து தனது கணவனிடம் ஹிந்தியில் கூற ஒரு நொடி அதிர்ந்து போனான் ராஜீவன்.

எதற்கு இந்த வீண் வம்பு என தனக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் படுத்துக் கொண்டான்.”என்னமோ இந்த அம்மா மட்டும் உலகத்துல பையன் வெச்சிருக்க மாதிரி பேசுது.இந்த பையன விட என் பையன் எவ்வளோ அழகு..எவ்வளோ குறும்பு…”என மீண்டும் மீண்டும் மகனை பற்றியே நினைத்தான்.

முந்தரா துறைமுகத்தில் வழக்கம்போல தன் வேலையை தொடங்கினான் ராஜீவன்.மீண்டும் அதே கடல் காற்று…
அதே துறைமுகம்…அதே பரபரப்பு…

கிரேன் சத்தமும், லாரிகளின் இரைச்சலும், தொழிலாளர்களின் ஓட்டமும் நிறைந்த அந்த இடத்தில் அவன் மீண்டும் தன்னுடைய வேலைக்குள் மூழ்கியிருந்தான்.

ஆனால்…இந்த முறை அவனுடைய மனம் மட்டும் அங்கே இல்லை.அதில் இனம் புரியாத உற்சாகம் தன் மனைவியையும் குழந்தையையும் நினைத்து.ஆனால் அதே சமயம் எல்லா பிரச்சனைகளையும் முடித்து எப்போது அவர்களை சேர்வது என்ற கவலையும் இருந்தது.

அந்த எண்ணங்களில் மூழ்கியவன் வேலையில் கவனத்தை சிதற விட்டான். ஒரு பெரிய கல்லை தூக்கிக் கொண்டிருந்த கிரேனின் கைகளில் இருந்து விலகி,அந்த கல் சரியாக அவன் தலையை நோக்கி கீழே விழுந்தது.சக ஊழியர்கள் அவனை தள்ளி விட்டு காப்பாற்றினர். மயிரிழையில் உயிர் தப்பினான் ராஜீவன்.

அன்றிரவு உணவை முடித்துவிட்டு அறைக்கு திரும்பியவன்,ஒரு வேளை தனக்கு எதாவது ஆனால் ரஞ்சிதா எப்படி தன் மகனை தனியே வைத்து சமாளிப்பாள்? என்ற கற்பனை…அதை நினைக்கவே அவன் உடல் நடுங்கியது. இவ்வளவு நாள் எப்படியோ,இனி தன் மனைவிக்காகவும் மகனுக்காகவும் தன் உடல் நலனை பாதுகாத்தே ஆக வேண்டும் என உறுதி கொண்டான்.

ஃபோனை எடுத்து, ரஞ்சிதாவின் எண்ணிற்கு டையல் செய்யப் போனான். பின் வேண்டாம் என முடிவெடுத்தான்.

சோர்வாக இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று ஒரு சில ரீல்ஸ்களை ஸ்க்ரோல் செய்ய ஒரு நீல நிற சங்குப் பூ அவன் கண்ணில் பட்டது.

அதைப் பார்த்தவுடன்…தன் வீட்டு மொட்டை மாடி.நீல நிற சங்குப் பூக்கள். ஒரு கையில் பூக்கள் நிறைந்த கூடை… மறுகையில் சித்தார்த்தின் கை… “மெதுவா… படியில பார்த்து கால் வை…” என்ற ரஞ்சிதாவின் அந்தக் குரல் மீண்டும் அவனுடைய காதுக்குள்  ஒலித்தது.

ஒரு சில நொடிகளில் ஜெகன், நவீன், ஆர்த்தி,தீபா என நால்வரின் இன்ஸ்டா அக்கவுன்ட்களையும் அலசி ஆராய்ந்து இறுதியாக ரஞ்சிதாவின் அக்கவுன்ட்டை தேடிப் பிடித்தான்.

“சித்தார்த் புளூ புளூம்ஸ்”அதன் ப்ரோபைல் பிக்சரில் ஒரு நீல நிற சங்குப்பூ மட்டும் இருந்தது.அதைப் பார்த்ததும் ராஜீவனின் புருவம் சற்றே உயர்ந்தது.

அந்த அக்கவுன்ட்டில் வரிசையாக இருந்த வீடியோவைப் பார்த்ததும் அவனுடைய முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது.

மெதுவாக அந்த அக்கவுண்ட்டில் இருந்த வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தான். முதல் வீடியோவில் மொட்டை மாடியில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த சங்குப்பூ செடிகள் காற்றில் அசைந்தன.

அடுத்த வீடியோவில் மஞ்சள் வெயிலில் பூக்களை மெதுவாகப் பறிக்கும் இரண்டு கைகள்.பின் அதே கைகள் பறித்த பூக்களை சுத்தம் செய்து, ஒரு துணியில் பரப்பி வைத்தது.அதற்குப் பிறகு… வெயிலில் காய்ந்து  உலர்ந்த நீல நிற பூக்களை,சிறிய கவர்களில் அளந்து நிரப்பியது.எதிலும் முகம் காட்டப்பட வில்லை.

அதன் பின்னணியில்,இப்ப குழந்தைகள் சாப்பிடற உணவுல நிறத்திற்காக நிறைய செயற்கை நிறங்கள் பயன்படுத்தப்படுது.அது அவங்க உடல் நலத்துக்கு அவ்வளவு நல்லதல்ல.அதனாலதா இந்த மாதிரி இயற்கையான முறையிலே நீல நிறப் பூக்களை வளர்க்கறே.

இது மூலமா இயற்கையான முறைலே உணவுகளுக்கு நிறமூட்ட முடியும்.மேலும் இந்த சங்கு பூக்களால் நினைவாற்றல், மன அழுத்தம், இரத்தச் சர்க்கரை போன்ற விஷயங்கள்லே நிறைய நன்மைகள் கிடைக்குது.

இன்னொரு முக்கியமான விஷயம்… இந்தப் பூவை வீட்டுல வளர்க்கறது ரொம்ப எளிது. நல்ல வெயில் கிடைக்கிற இடம், படர்ந்து செல்ல ஒரு சிறிய ஆதரவு, சரியான நீர்ப்பாசனம் இருந்தால் இதை அழகா வளர்க்கலாம்.

அதனாலதான் ‘சித்தார்த் புளூ புளூம்ஸ்’ ல காய்ந்த சங்குப்பூக்கள் மட்டுமில்லாமல் விதைகளும் செடிகளும் கொடுக்கிறோம். நீங்க வாங்கி பயன்படுத்துறதோட நின்றுடாம, உங்க வீட்டிலேயே வளர்த்து பாருங்க…  அதுதான் எனக்கு பெரிய சந்தோசம்.” என அழகாக விளக்கம் கொடுத்து முடித்தாள் ரஞ்சிதா.

காணொளி முடிந்ததும்,ராஜீவன் சில நொடிகள் திரையைப் பார்த்தபடியே இருந்தான்.பிறகு கீழே விரலை நகர்த்தி கமெண்ட்டுகளை படிக்க ஆரம்பித்தான்.

அங்கே…நூற்றுக்கணக்கானவர்கள் ரஞ்சிதாவுக்கு தங்கள் கருத்துகளை
எழுதியிருந்தனர்.

“அக்கா, பூக்கள் ரொம்ப அழகா இருக்கு.”

“உங்க கிட்ட  வாங்கின காய்ந்த பூக்கள்ல இன்று நான் தேநீர் பண்ணிப் பார்த்தேன். நிறம் ரொம்ப அழகா வந்தது.”

“பூக்களை எப்படி காயவைக்கணும்னு நீங்க சொன்ன காணொளி ரொம்ப பயனுள்ளதாக இருந்தது.”

“என் வீட்டுத் தோட்டத்துல இப்போ உங்க சங்குப்பூ கொடி படர ஆரம்பிச்சிருக்கு. நன்றி.”

ஒவ்வொரு கருத்துக்கும் ரஞ்சிதா தனித்தனியாக பதில் அளித்திருந்தாள்.

ராஜீவன் கைபேசியை கையில் வைத்தபடியே சில நொடிகள் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.
அவன் மனதில் ஒரே ஒரு விஷயம்தான் ஓடியது.தான் இரண்டு வருடங்களாக அறிந்ததாக நினைத்த ரஞ்சிதா…

தனக்குத் தெரியாமலேயே இவ்வளவு விஷயங்களைக் கற்றுக்கொண்டு, தன் மகனின் பெயரில் ஒரு சிறிய உலகத்தையே உருவாக்கியிருக்கிறாள் என பெருமையாக நினைத்துக் கொண்டான்.

காலை ஐந்து மணி ரஞ்சிதா எழுந்து வாசலை சுத்தம் செய்ய வெளியே வந்தாள்.அவளுடன் சித்தார்த்தும் ஒட்டிக் கொண்டான்.வாசல் தெளித்து முடிப்பதற்குள் ஒரு குளியலே போட்டு விட்டான்.ஒரு வழியாக மகனை சமாளித்து கோலத்தை போட்டு முடித்து உள்ளே வந்தாள்.

“சித்து! அம்மா உனக்கு பால் காய்ச்சி எடுத்துட்டு வரே.அதுவரை குறும்பு பண்ணாம,இந்த பாலை வெச்சி விளையாடு” என சொல்லிச் சென்றாள்.

பாலை உதைத்து விளையாடியவன் அது கேட்டை விட்டு வெளியே போக,அவனும் வெளியே வந்தான்.பத்து தெரு நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அதைப் பார்த்த சித்தார்த்திற்கு உற்சாகம் பொங்கியது.

“லொள்… லொள்…” என்று அவனும் நாய்களைப் போல குரைத்தபடியே அவற்றை நோக்கி ஓடினான்.

அவன் அருகில் வந்ததும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நாய்கள் சட்டென அவனை நோக்கித் திரும்பின. சித்தார்த்தோ அதைக் கண்டு பயப்படாமல், இரண்டு கைகளையும் தட்டி சிரித்தான்.

அடுத்த நொடி…அவற்றில் ஒரு நாய் தன் பற்களைக் காட்டியபடி அவனை நோக்கிப் பாய்ந்தது.

–கவிதை எழுதும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!