ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூரில்தான் இளவரசனுக்கு வேலை கிடைத்திருந்தது. சாம்பவியும், செந்தமிழ்செல்வியும் ராஜஸ்தான் வந்து ஐந்து நாள்கள் ஆகியிருந்தது.
“வெளில போக எனக்கு விருப்பமா இல்லையானு கேட்டுட்டு ப்ளான் பண்ணியிருக்கனும், என் விருப்பப்படி இருக்கலாம்னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு இப்போ உங்க விருப்பப்படி இருக்க சொல்றிங்க” என்றவளுக்கு கண்களும் கலங்கியது.
உண்மையில் செல்விக்கு இந்த சூழல் பிடிக்கவேயில்லை. பொற்செல்வனின் காட்டினில் தங்கியிருந்த வீடு இரண்டு சிறிய படுக்கையறை, ஒரு ஹால், கிச்சன் என இருந்தது.
Advertisement
இங்கே அந்த வீட்டை விட வசதிகள் அதிகம். தங்கைக்கு பிடித்த வகையில் கட்டில், மெத்தை, டிரஸ்ஸிங்டேபிள் என அனைத்தும் உயர் ரகத்தில் வாங்கி போட்டிருந்தான் இளவரசன். ஆனாலும் தங்கை முகத்தில் பொலிவில்லை.
“இங்க உனக்கு பிடிக்கலதானே, வேற வீடு பார்க்கவா?” என்றான்.
“வீடு பார்க்க வேண்டாம், எனக்கு வேலை பார்த்துகொடு” என்றாள்.
Advertisement
அண்ணனோடு கிளம்பும் முடிவெடுக்கும்போதே தனக்கு வேலையை தேடினாள் செந்தமிழ்செல்வி. ஆனால் இன்னும் வேலை கிடைக்கவில்லை. இவளிடம் அனுபவச் சான்றிதழ் இருக்கிறது, அதை வைத்து தேடினால் வேலை கிடைக்கும். ஆனால் கூடவே பொற்செல்வனும் பயணிப்பான் என்பதால் தெரிந்த வேலையை தொடர மறுத்து, வேறு வேலை தேடிக்கொண்டிருக்கிறாள்.
தனது படிப்பிற்கேற்ற வேலை தேடினால் அனுபவம் கேட்கிறார்கள், சென்னையில் கிடைத்த வேலையை இவன் கெடுக்காவிட்டால் அங்கேயே தொடர்ந்து வேலை செய்திருக்கலாம், எல்லாம் அவனால் வந்தது என்று வேலை கிடைக்காததற்கும் பொற்செல்வனைத்தான் திட்டிக் கொண்டிருக்கிறாள்.
ஆமாம்ல? என உணர்ந்தவளுக்கு மீண்டும் கண்கள் கலங்கியது. “சாரிண்ணா” என்றாள்.
“ஹேய் செல்வி” என தங்கையருகே வந்தவன், “இங்க கம்ஃபர்டபிளா இல்லையா? இல்ல… என்னோட இருக்கிறது பிடிக்கலையா?” என்றான்.
“பிடிக்காமத்தான் வந்தேனா? அதுக்காக உன்மேல கோபம் இல்லைனு இல்ல”
“என்ன கோபம் என்மேல? சொல்லு… சரி பண்ண ட்ரை பண்றேன்”
“இனி ட்ரை பண்ணி என்ன யூஸ்? அம்மா லைஃபே முடிஞ்சு போச்சு”
அவளின் அப்பாவை மனதில் வைத்து பேசுகிறாள் என்றுணர்ந்து, “யார் சொன்னா என் லைஃப் முடிஞ்சு போச்சுனு? செல்வியோட தனியா இருந்தேன், இப்போ இளவரசன் வந்துட்டான். மருமகள், மருமகன், பேரன் பேத்தினு இனிதான் என் வாழ்க்கை ஆரம்பமாகப்போகுது” என்றார் சாம்பவி.
இளவரசனுக்கும் தங்கைக்கு வரன் பார்க்கும் எண்ணமிருக்க, “பார்டா, யார் பேரக்குழந்தை முன்ன வேணும்?” என்றான் தங்கையைப் பார்த்தபடி.
“வயசு பிள்ளையை வச்சிக்கிட்டு உனக்கு கல்யாணம் செய்ய முடியுமா? முதல்ல செல்விக்குத்தான் பார்க்கனும்” என்றார்.
செல்வி முகம் கோபத்தை காட்ட, “பார்த்துட்டா போச்சு. ஆனா அதுக்கு முன்னாடி நான் என் தங்கையோட ஒரு வருசமாவது என்ஜாய் பண்ணனும். அதுக்கப்புறம்தான் கல்யாண பேச்சு” என்றதும் செல்வியின் முகம் நிம்மதியை காட்டியது.
“என்னடா சொல்ற? இன்னும் ஒரு வருசமா? இப்போவே அவளுக்கு இருபத்திமூணு வயசு”
தங்கை இயல்பாக பேசியதில் மகிழ்ந்தவன், “சின்ன வயசுல உன்னைப்பத்தியும் அம்மாவைப் பத்தியும் யோசிக்காம விட்டுட்டேன்டா, அப்பாவைப் பத்தின விபரம் தெரியும்போது என்கையில பணம் இல்ல. நமக்குனு ஒரு வருமானத்தை தேடிக்கிட்டு உங்களை கூப்பிடனும்னுதான் இவ்வளோ நாள் கூப்பிடல. இனி எப்போவும் உங்களோடதான்” என்றான்.
முன்பே திருமணத்திற்கு சம்மதிக்கமாட்டாள், தற்போது இளவரசனும் தங்கைக்கு ஆதரவாக இருந்தால் செல்வி திருமணத்தைப் பற்றி யோசிக்கவேமாட்டாள் என்று, “அப்போ என் விருப்பம்லாம் ஒரு விசயமே கிடையாதா? நீங்களும் உங்க விருப்பத்துக்குத்தான் இருப்பிங்களா?” என்று அவ்விடம் விட்டு அகன்றுவிட்டார் சாம்பவி.
செல்வி தவிக்க, “அம்மாவை நான் சமாதானம் பண்றேன், கவலைப்படாத” என்று அன்னையிடம் சென்றான் இளவரசன்.
இளவரசன் அவனோடு வரும்படி கேட்கும்போது இளவரசனோடு செல்ல செல்விக்கு விருப்பமேயில்லை. ஆனால் தங்களோடு இருக்க வேண்டி, படித்து வேலை வாங்கி, அதன் பின்னே அழைக்கும்போது மறுக்க தோன்றவில்லை.
அதோடு இத்தனை வருடம் கழித்து மகனோடு வசிக்கும் வாய்ப்பு தன்னால் இழந்து விடக்கூடாது என்றும் தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தவில்லை.
கடந்த ஒரு வாரமாக தங்கள் மீதான இளவரசனின் அதீத அக்கறையில் இவனா இத்தனை நாள்கள் அன்னையையும் தன்னையும் பிரிந்திருந்தான் என நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஊரிலிருந்து தங்களை அழைத்து வர வந்ததிலிருந்து நேற்று வரை ஓய்வேயில்லை இளவரசனிற்கு. இன்றுதான் வீட்டிலிருக்கிறான். தனக்காகத்தான் வெளியே அழைத்து செல்ல திட்டமிட்டிருக்கிறான். ஆனால் தன்னால் எதிலும் லயிக்க முடியவில்லை.
பொற்செல்வனை விட்டு விலகியிருக்க முடிவெடுத்துதான் சென்னையில் வேலைக்கு சேர்ந்தாள். அவ்வூரை விட்டு சென்றது அப்பொழுது நிம்மதியாகத்தான் இருந்தது.
ஆனால் ராஜஸ்தான் கிளம்பும்போது இனி இவ்வூருக்கு எதற்காகவும் திரும்பி வரமாட்டோம் என்று நினைக்கையில் மனம் வலிக்க ஆரம்பித்தது.
அரண்மணை போன்ற வீட்டினில் இளவரசியாய் வளர்ந்ததை சுலபமாக மறக்க முடிந்தவளுக்கு, பொற்செல்வனின் காட்டில் உள்ள வீட்டினில் வாழ்ந்த சாதாரண வாழ்க்கையை மறக்க முடியவில்லை.
பத்து வருடங்களுக்கு முன்னே அனுபவித்த வாழ்க்கையை திருப்பித்தர முயற்சிக்கிறான் அண்ணன். ஆனால் ஏற்றுக்கொள்ள மனம் முரண்டுகிறது.
உயர்ரக பஞ்சு மெத்தை, உடை, அழகு சாதனப்பொருள்கள், ஆபரணங்கள் என எதுவும் செல்விக்கு நிறைவை தரவில்லை.
அங்கே வீட்டை விட்டு வெளியேறினால் சுகந்த மலர்களின் வாசனையோடு, சில்லென்ற தென்றல் உடலோடு சேர்த்து மனதையும் தழுவும். வீட்டைச் சுற்றி பசுமையான இயற்கை அழகு.
உழைத்தால்தான் உணவு என்ற நிலையிலிருப்பவர்கள் கூட, எந்த கவலையுமின்றி சிரித்து பேசியபடி காட்டில் வேலை செய்வார்கள். மரக்கிளையில் அன்னையின் சேலையில் உறங்குவார்கள் நடைபயிலத் தெரியாத குழந்தைகள்.
எத்தனைதான் வேலையிருந்தாலும் குழந்தையின் சிறு அசைவைக் கூட கண்டுபிடித்து உடனே தொட்டில் இருக்கும் இடத்திற்கு செல்லும் அன்னைகள். பாலூட்ட சென்றவரின் வேலையையும் கணக்கு பார்க்காமல் சேர்த்து செய்யும் உழைப்பாளிகள்.
கர்பினிகளுக்கும், குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்கு வரும் தாய்மார்களுக்கும் பொற்செல்வன் கொடுக்கும் சலுகைகள் என எதையும் மறக்க முடியவில்லை செல்வியால்.
காலை எழுந்ததில் ஆரம்பித்து, இரவு படுக்கும் நேரம் வரை இந்நேரம் அங்கே என்ன நடந்துகொண்டிருக்கும் என்ற நினைவேதான் மனதில் சுழன்றது. பகுதிநேர வேலையில் ஆரம்பித்து, ஆறு மாதம் முன்புவரை பழகிக்கொண்ட அத்தனை வேலைகளிலும் பொற்செல்வனின் பங்கிருக்க, அவனின் நினைவுகளை தவிர்க்க முடியாமல் தவித்தாள்.
பொற்செல்வன் சொன்னது போல முழுதாக அவனை வெறுக்க முடியவில்லை. அதேநேரம் அவனை ஏற்றுக்கொள்ளவும் பிடிக்கவில்லை.
தனக்கு அனைத்தும் கற்றுக்கொடுத்தவனும் உண்மையானவன்தான், தன்னிடம் காதல் சொன்னவனும் உண்மையானவன்தான். ஆனால் தனது விருப்பம் அறியும் முன்னே எப்படி முத்தமிடலாம்? அப்படி செய்யலாமா?
தனது விருப்பமின்மையை தெரிவித்தேன். அவனும் மன்னிப்பு வேண்டினான். அவனின் செயலிலிருந்து வெளிவர முடியாத நிலையில் எப்படி மன்னிக்க முடியும்? தான் மன்னிக்கும் வரைகூட காத்திருக்காமல் பெண் பார்க்க கிளம்பிவிட்டான் என்றால் அவன் உண்மையில் தன்னை விரும்பினானா?
அந்த நேரம் வந்த உணர்வென்றால், அதற்கு தன்னை பயன்படுத்தலாமா? கேட்போர் இல்லை என்ற காரணத்தால் வந்த துணிச்சலா? அனைத்திற்கும் மேலாக, விருப்பம் சொன்னேன், உனக்கு பிடிக்கவில்லை விட்டுவிட்டேன், கோபம் தள்ளி வைத்து பழையமாதிரி நண்பர்களாக இருப்போம் என்கிறான்.
என் அனுமதியின்றி தனதுடலில் அவனின் தீண்டலை ஜென்மத்திற்கும் மறக்க முடியுமா? எனது உணர்வுகள் கூட அவனின் எண்ணப்படித்தான் பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறானா?
தந்தையின் விருப்பத்திற்கு ஏற்றபடி அன்னை இருந்தவரை மனைவியாக நினைத்தார். தனது விருப்பமின்மையை தெரிவித்ததும் எப்படி இப்படி இருக்கலாம் என்று அன்னையிடம் மட்டுமல்லாது அவரின் பெற்றோரிடமும் சண்டையிட்டார்.
என்னை அழைத்துச் சென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று செல்வி அவளின் தந்தையை மிரட்டியதால்தான் அன்னையோடு என்னை விட்டுவைத்தார்.
அளவு கடந்த பாசத்தையும், அன்பையும் கொடுத்துதான் தன்னை வளர்த்தார் தந்தை. ஆனால் எனக்காக கூட மனைவியிடம் அவரால் இறங்கி வர முடியவில்லை.
தனது தந்தையைப் போலத்தான் அவனும். பொற்செல்வனால் நிறைய கற்றிருக்கிறாள், அதற்காக அவனை ஏற்றுக்கொள்வதை போல முட்டாள்தனம் வேறெதுவும் இல்லை என்று நினைத்தாள். ஆனால் அவனின் நினைவுகளை மறப்பதுதான் எப்படி என்று அறியாமல் தவிக்கிறாள்.
அன்னையிடம் பேசிவிட்டு தங்கையிடம் வந்தவன், “அம்மா ஒரு வருசம்லாம் டைம் கொடுக்கமாட்டாங்க போல, நம்ம கல்யாணத்துலதான் அவங்க நிம்மதி இருக்கு. நம்ம அப்பாவை கல்யாணம் செய்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்கடா, அம்மாக்காக நாம விட்டுக்கொடுக்கலாம்.
எப்போன்னாலும் கல்யாணம் பண்ணித்தான ஆகனும்? அது அம்மா விருப்பப்படி நடந்தா அவங்களுக்கு சந்தோசமா இருக்கும்தானே? அம்மா நம்மகிட்ட எதிர்பார்க்குறது இதை மட்டும்தான்” என்றான்.
அன்னையின் ஆசையை மறுக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் திண்டாடினாள் செல்வி.
“ஹம்… அதெல்லாம் அப்புறம் யோசிக்கலாம். இன்னைக்கு நான் ஃப்ரீ, திரும்ப எப்போ இப்படி டைம் கிடைக்கும்னு சொல்ல முடியாது. உனக்கு வெளில போக விருப்பமில்லைனுட்ட, சாப்பிட என்ன வேணும்னு சொல்லு, நான் சமைக்கிறேன்” என்றான்.
“என்ன?” என இவள் விழிக்க, “எதுக்கெடுத்தாலும் இப்படி அதிர்ச்சி பார்வை பார்த்தா எப்படிடா?” என சிரித்தவன், “ட்ரைனிங் பீரியட்ல ஹோட்டல் சாப்பாடு வெறுத்து போச்சு. வேற வழியில்லாம சமைக்க கத்துக்கிட்டேன். அப்புறம் அதுவே ரொம்ப பிடிச்சி போய்டுச்சு. சூப்பரா சமைப்பேன்னு சொல்ல முடியாது, ஆனா சாப்பிட முடியாத அளவுக்கு இருக்காது” என்றான்.
“எதாவது செய்”
“எனக்கு வெஜ்ல டேஸ்ட் கொண்டு வரது கஷ்டம், நான்வெஜ் சமைக்கட்டுமா?”
“ம்” என்றதும், சமைக்க தேவையான பொருள்களை வாங்கி வந்து, அன்னையின் உதவியையும் மறுத்து தானே செய்து அனைத்தும் எடுத்து வைத்து தங்கையை உண்ண அழைத்தான்.
செல்வி உணவை சுவைத்ததும் “எப்படியிருக்கு?” என்றான்.
“அம்மா சமைக்கிற அளவுக்கு இல்லதான், ஆனா நல்லாயிருக்கு” என்றபடி உண்டாள்.
கடந்த ஒருவாரமாக தங்கையை கவனித்து வருகிறான். யாரையும் காதலிப்பதற்கான அறிகுறி தெரியவில்லை. ஆனால் எதையோ நினைத்து மிகவும் வருந்துகிறாள். அவளின் வேதனை எதனால் என்று கண்டுபிடித்தால்தான் அவளை சரி செய்ய முடியும் என்று யோசித்தபடி உண்டான் இளவரசன்.