Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 13.2

தேவராஜிற்கும் நவீனாவிற்கும் நடந்த திருமணம் சட்டப்படி ரத்தாகி இரண்டு வாரம் முடிந்திருந்தது.

பழைய பிரச்சனைகளிலிருந்து விடுபட்டதாலும், அவ்வப்போது நவீனாவின் எதிர்காலத்தை பற்றி பேசியதாலும், கடைசி நேரத்திலாவது தேவராஜ் மனம் மாறுவானா என்று எதிர்பார்த்தான் பொற்செல்வன்.

ஆனால் தேவராஜ் மாறவேயில்லை. வழக்கின் கடைசி நாளன்று நவீனாவோடு பொற்செல்வன் மட்டுமே நின்றிருந்தான். நவினாவின் பெற்றோர் வருவதாகத்தான் சொன்னார்கள். நவீனா மறுத்துவிட்டாள்.

மகன் கடைசிவரை மனம் மாறவேயில்லை, பெரும் வேதனைதான், கணவனுக்கு நிகராக எதை கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது என்று அறியாதவரா அமிர்தவள்ளி? நவீனாவின் எதிர்கால வாழ்வு தன் மகனால் நிலைகுலைந்து விட்டதை எண்ணி பெரும் வேதனையில் உழன்றார்.



Advertisement

மனைவியின் ஆதங்கம் மிகச் சரியானது என்றும், தேவராஜ் மீதுள்ள கோபத்திலும் தேவராஜிற்கு சேர வேண்டிய சொத்தில் பாதி பங்கை நவீனாவிற்கு கொடுக்கலாம் என்றார் புருஷோத்தமன்.

சொத்து கொடுத்தால் அதன் காரணமாக அண்ணி நம்மோடு இருக்க வேண்டி வரும். இங்கே நம்மை பார்த்துக்கொண்டிருந்தால் வேறொரு வாழ்வை யோசிக்கமாட்டாங்க, முதலில் அவங்க வாழ்க்கையை சரி பண்ணிட்டு பிறகு சொத்தாக அல்லாமல் அதற்கு ஈடான பணத்தை கொடுக்கலாம் என்றுவிட்டான் பொற்செல்வன்.

மகன் சொல்வதும் சரி என்று யோசித்தபோதும், “வாழ வந்த பொண்ணை வெறும் கையோட எப்படிடா அனுப்பறது? இத்தனை கோடி இருந்து எதுக்கு புண்ணியம்?” என கலங்கினார் அமிர்தவள்ளி.

Advertisement

“வெறும் கையோடத்தான் அனுப்பனும். இந்த சொத்து கொடுக்க யோசிச்சது, பணம் கொடுக்க நினைக்கிறதெல்லாம் அண்ணாக்கு தெரிய கூடாது” என்றுவிட்டான் கட்டளையாக.

Advertisement

அதோடு, தேவராஜ் கேட்டால் எப்படி பதிலளிக்க வேண்டும் என்றும் தந்தைக்கு சொல்லிக்கொடுத்தான். வழக்கின் கடைசி நாளன்று பொற்செல்வன் நினைத்தது போலவே, நவீனாவின் ஜீவனாம்சம் பற்றி தந்தையிடம் பேசினான் தேவராஜ்.

“இது என் அப்பா சம்பாதிச்ச சொத்து, நமது வம்சத்திற்கு மட்டுமே உரிமையானது. அடுத்த வீட்டு பெண்ணிற்கு கொடுக்கமாட்டேன், வாழ வந்த பெண்ணை நாங்கள் யாரும் வேண்டாம் என்று நினைக்கவில்லை.

உனக்கு உன் மனைவி வேண்டாம் என்றால் அவளுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதும் உன் பொறுப்புதான்” என்று மனதை கல்லாக்கிக்கொண்டு பொற்செல்வன் சொல்லிக்கொடுத்தது போலவே சொன்னார்.

Advertisement

தந்தை அப்படிபட்டவர் இல்லை என்றும், இது என்மேல் உள்ள கோபத்தில் பொற்செல்வன் சொல்லிக்கொடுத்தது என்றும் அறிவான் தேவராஜ். நிச்சயம் நவீனாவை அப்படியே விடமாட்டான். ஆனாலும் இன்று அவளுக்கானது எதாவது கொடுக்க வேண்டும் என்று மனம் பதைத்தது.

தனது சேமிப்பிலுள்ள மொத்த பணத்தையும் எடுத்துக்கொண்டுதான் நீதிமன்றம் வந்தான். நீதி மன்றத்திற்குள் நுழைந்ததிலிருந்து யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை நவீனா.

இவர்கள் வழக்கிற்கான நேரம் வரும்போது அழைத்தார்கள். உள்ளே வந்த பின்னே, விவாகரத்திற்கான காரணங்களை விளக்கிய நீதிபதி, ‘இன்று உங்களுக்கு விவாகரத்து வழங்கப்போகிறேன், இருவருக்கும் சம்மதம்தானே?’ என்றார்.

தேவராஜ் நவீனாவைப் பார்க்க, அப்பொழுத்தான் நிமிர்ந்த நவீனா நீதிபதியைப் பார்த்து சம்மதமாய் தலையசைத்தாள். பின்னே கையொட்பமிட்டு வெளியேறினாள். தானும் கையொட்பமிட்டு பின்னோடு வந்தவன், “நவீனா” என்றான்.

விவாகரத்து ஆனபோதும் தேவராஜ் அழைப்பை நவீனாவால் உதாசினப்படுத்த முடியவில்லை. நடையோடு தனது கண்ணீரையும் கட்டுப்படுத்தி நின்றாள். தேவராஜ் அவளருகே வர, தற்போதும் நிமிரவில்லை. தனது கையிலிருந்த சிறிய பையை நீட்டியவன், “இதை வச்சுக்கோ. என்கிட்ட இவ்வளோதான் பணம் இருக்கு” என்று நீட்டினான்.

கடைசி நேரத்திலாவது மனம் மாறுவாரா என்று கையொட்பமிடுவதற்கு முன்னே மாங்கல்யத்தை கழற்றி தேவராஜிடம் கொடுக்க சொல்லியிருந்தான் பொற்செல்வன், அது தற்போதுதான் நவினாவின் நினைவிற்கு வந்தது.

அடைக்கும் தொண்டையையும், அழுத்தும் மனதையும் எச்சில் விழுங்கி சரிசெய்து, நடுங்கும் கை கொண்டு தனது கழுத்திலிருந்த தாலிச்சரடை கழற்றி, தேவராஜ் நீட்டிய பை மீது வைத்து வேக நடையோடு காருக்குள் சென்றிருந்தாள் நவீனா.

இதனை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை தேவராஜ். அவள் கொடுத்தது சாதாரண தங்க சங்கிலி இருந்திருந்தால் அவள் தேவைக்கு ஆகட்டும் என்று திருப்பி கொடுத்திருப்பான். ஆனால் எனது மனைவி என்பதற்கான அடையாளத்தை அல்லவா திருப்பிக் கொடுத்திருக்கிறாள். அதை மீண்டும் அவளுக்கு கொடுக்க முடியாத நிலையில், என்ன செய்வதென்று அறியாமல் அதிர்ந்து நின்றிருந்தான் தேவராஜ்.

“நீங்க ஆசைப்பட்டது கிடைச்சிடுச்சு, இனியாவது நிம்மதியா இருங்கண்ணா” என்று இறுகிய முகத்தோடு சொல்லி நவீனாவோடு கிளம்பினான் பொற்செல்வன்.

வீட்டிற்குள் வந்ததும் அறைக்குள் சென்றவள்தான் வெளியே வரவேயில்லை. இரண்டு மணிநேரம் வரை காத்திருந்து பின்னே அறைக்கதவை தட்டினான் பொற்செல்வன்.

நவீனாவிடமிருந்து பதிலில்லை. சமையலரிடம் பழரசம் எடுத்து வர பணித்து   “அண்ணி ப்ளீஸ் வெளில வாங்க” என்றான்.

பெற்றவர்களைப் போல் தனக்காக துடிப்பவனிடம் தனது கோபத்தை காட்ட இயலாமல் வெளியே வந்தாள் நவீனா. “வந்து உக்காருங்க” என்றவன் சமையலரைப் பார்க்க, அவர் பழரசத்தோடு வந்தார்.

“அங்க வச்சிட்டு வெளில போங்க” என்றான்.

பணியாள் வெளியே சென்றதும், பழரசத்தை நவீனாவிற்கு கொடுக்க, அவள் மறுத்தாள். “பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டு மூணுமணி நேரமாகுது, ப்ளீஸ் குடிங்க” என்றான்.

குடிக்க வைக்காமல் விடமாட்டான் என்று பழரசத்தை அருந்தினாள்.

“இப்போ நான் சொல்றது உங்களை ஆறுதல் படுத்த இல்லை” என்றவன், “அண்ணாக்கு உங்க மேல வெறுப்பெல்லாம் இல்லங்கண்ணி, கல்யாணத்துக்கு முன்னாடி இல்லீகல் பிஸ்னஸ் பண்ணியிருக்கார். அதுனால உங்களுக்கு ஆபத்து வருமோனுதான் இந்த முடிவை எடுத்தார்” என்றான்.

பொற்செல்வன் தனது மனதை தேற்ற முயல்வதாய் நினைத்து, விரக்தியாய் பார்த்தாள்.

“சத்தியமா நான் சொல்றது உண்மை” என்று தனது தலைமீது பொற்செல்வன் கை வைக்க, “சரி நம்பறேன், அவருக்கு என்மேல வெறுப்பில்ல. அதனால எனக்கு என்ன யூஸ்?” என்றாள்.

“இன்னைக்கு அவர் முகத்தை நீங்க பார்த்திருந்தா அதனால என்ன யூஸ்னு தெரிஞ்சிருக்கும், ஆனா நீங்க பார்க்காததும் ஒரு வகையில சரிதான். அவர் கேட்ட விவாகரத்தோட, அவர் கேட்காத தாலிச்சங்கிலியையும்  கொடுத்துட்டிங்கள்ல? நிராகரிப்போட வலி என்னனு இனி அவருக்கு புரியும்.

இப்போவும் சொல்றேன், ஒரு மாசமோ, இல்ல ஒரு வருசமோ… கண்டிப்பா அவரா உங்களைத் தேடி வருவார். அன்னைக்கு எப்படி வேணும்னாலும் அவரை தண்டிங்க. தயவு செய்து உங்களை தண்டிச்சிக்காதிங்க” என்றான்.

“நான் ஏதும் செய்துக்கமாட்டேன், என் அம்மா வீட்டுக்கு போறேன்”

“ஏன் இங்க என்ன ஆச்சு?”

“எனக்கு அவங்களோட இருக்கனும்”

“அவ்வளோதானே? அவங்களை இங்க வர சொல்றேன்”

“இல்ல வேண்டாம், எனக்கு சேன்ஜ் வேணும், நானே அங்க போறேன்”

“சேன்ஜ்தானே வேணும், நான் ஏற்பாடு பண்றேன், ஆனா அம்மா வீட்டுக்கு போக வேண்டாம்”

“என்னை ரொம்ப கண்ட்ரோல் பண்றிங்க” என்றாள் ஆற்றாமையோடு.

“அப்படி இல்லை அண்ணி, உங்க வாழ்க்கை என்னைக்கானாலும் அண்ணாவோடதான், இப்போ பேட் டைம், நீங்க அம்மா வீட்டுக்கு போனா ஆறுதல்ன்ற பேர்ல எல்லாரும் பரிதாபத்தை காட்டுவாங்க, அது உங்களுக்கு கஷ்டமா இருக்கும். சில மாசத்துலயே அண்ணன் உங்கள்ட்ட வந்துடுவார், அப்போ போய் எவ்வளோ நாள் வேணும்னாலும் அப்பாம்மாவோட இருந்துட்டு வாங்க” என்றான் தன்மையாக.

“தயவு செய்து என்னை ஒரு வாரத்துக்காவது தனியா விடுங்க”

“இப்போ தனியாத்தான் இருக்கிங்க, நான் மட்டும்தானே வரேன்? அப்போ என்னைத்தான் வர வேண்டாம்ன்றிங்களா?”

ஆமாம் என்பதாய் தலையசைக்க, “சரி வரல” என்றான்.

“இந்த வேலைக்காரங்களும் வேண்டாம்”

“அது முடியாது. அவங்க வரத்தான் செய்வாங்க, நீங்க சரியா சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க, அவங்க உங்களை தொல்லை பண்ண மாட்டாங்க, நானும் ஒரு வாரத்துக்கு வரல, நீங்க சாப்பிடல அப்படியிப்படினு போன் வந்தா உடனே வந்துடுவேன். ஒன் வீக் கழிச்சு ஆஃபீஸ்ல மீட் பண்ணலாம்” என்று கிளம்பினான்.

பொற்செல்வன் சென்றதும் அழுகையாக வந்தது நவீனாவிற்கு. செல்விக்கு அழைத்து பேசலாம் என்று நினைத்தாள். யாரிடம் பேசி என்னாகப் போகுது என்று அறைக்குள் அடைந்துகொண்டாள்.

இன்று விவாகரத்து கிடைத்துவிடும் என்று நவீனா வேதனையோடு சொன்னது செல்விக்கு மறக்குமா? நவீனாவிற்கு பக்கபலமாக பொற்செல்வன் இருந்தானே… ஏதாவது செய்து விவாகரத்தை நடக்க விடாமல் செய்தானா என்ற ஆவலில் இரவு ஒன்பது மணிபோல் செல்வியே அழைத்தாள் நவீனாவிற்கு.

பெரும் அழுகையோடு நடந்த நிகழ்வை அப்படியே நவீனா விளக்க, செல்விக்கும் மனம் உடைந்து போனது. என்ன சொல்லி தேற்றுவதென அவளுக்கும் புரியவில்லை.

“அழாதிங்கக்கா” என்ற வார்த்தையையே மீண்டும் மீண்டும் சொன்னாள்.

விவாகரத்துதான் ஆகிவிட்டது, பொற்செல்வன் சொன்னது போல இனி இவர்கள் சேருவது சுலபமில்லை என வருந்தியபோதும், “மனசை தளர விடாதிங்கக்கா, உங்களுக்கு வேற எதோ காத்திருக்கு. கண்டிப்பா நீங்க சந்தோசமா இருக்கப்போறிங்க” என்று சற்று நேரம் பேசியிருந்தவள்,

“இங்க ராஜஸ்தான் வரிங்களாக்கா? மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்” என்றாள்.

“வேணாம் செல்வி, நான் எங்கேயும் வரல” என்றவளிடம் எத்தனை பேசியும் செல்வியால் சம்மதிக்க முடியவில்லை. நாளை அழைப்பதாக சொல்லி  இணைப்பை துண்டித்தாள்.

இங்கே பொற்செல்வன் மிக மோசமான மனநிலையில் இருந்தான்.

நவீனா தேவராஜ் நிச்சயமாக சேர்ந்திடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்த போதும், இப்படி ஏதும் அசம்பாவிதம் ஆகிவிடக் கூடாது என்றுதானே அன்னை தன்னை சொந்த ஊருக்கு வர வழைத்தது. எத்தனை முயன்றும் விவாகரத்தை தவிர்க்க முடியவில்லையே.

பொற்செல்வனுக்கு தேவராஜை நினைத்து கவலையில்லை. அண்ணி மீது அவருக்கு காதல் இல்லையென்றபோதும், அண்ணன் மீது அண்ணிக்கு எத்தனை காதல் என்று அறிந்தவன் ஆதலால் நவீனாவை நினைத்துதான் மிகுந்த வேதனையடைந்தான்.

அண்ணியின் ஒரே தோழி செல்வி, அவள் இருந்தாலாவது ஆறுதலாக இருந்திருப்பாள் என்று செல்வியை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அவளுக்கு விருப்பமில்லை, விட்டுவிடலாம் என்ற எண்ணமெல்லாம் செல்வி ராஜஸ்தான் கிளம்பியதுமே மாறிப்போனது. ரோஜா தோட்டத்தில் செல்வி அழுத அழுகை செல்வனின் மனதை மாற்றியிருந்தது.

எப்படியாவது செல்வியை மணந்தாக வேண்டும். மீண்டும் காதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். என்ன செய்யலாம் என்று யோசித்தவன், அப்பொழுதே சாம்பவிக்கு அழைத்து பேசி, அடுத்தநாள் காலையிலேயே நவீனாவை காணச்சென்றான்.

“ஒரு வாரத்துக்கு வரமாட்டேனுதான சொன்னிங்க?”

“சொன்னேன்… ஆனா இன்னைக்கே வரும்படி ஆகிடுச்சு. வெளில வாங்க அண்ணி” என்று நவீனாவோடு இணைந்து நடந்தான் சற்று தூரம்.

“சாம்பவி ஆன்ட்டி உங்களை ராஜஸ்தான் வர சொன்னாங்க, போய்ட்டு வாங்க, கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்”

“இல்ல வேண்டாம், நான் போகல”

“உங்க ஃப்ரண்ட் கூட இருந்தா சேன்ஜ் கிடைக்கும், போய்ட்டு வாங்க” என்க, மீண்டும் மறுத்தாள்.

“ப்ளீஸ் போய்ட்டு வாங்க, கொஞ்ச நாள் மட்டும்தான்” என்றான்.

நவீனா கண்கள் கலங்கியது. “அழாதிங்க அண்ணி” என்றான் கெஞ்சலாக.

“என்னை அவரோட சேர்த்து வைக்கத்தான் இந்த ஊரை விட்டு அனுப்ப நினைக்கிறிங்கனு எனக்கு புரியுது, அவருக்கு ப்ரஸர் கொடுத்து அவரோட சேருறதுல எனக்கு விருப்பம் இல்ல. இப்படி வாழ்க்கைதான் அவருக்கு பிடிச்சிருக்குனா அவர் இஷ்டப்படி வாழட்டும்” என்றாள் கண்ணீரோடு.

“சரி ஓகே. உங்களுக்கு விருப்பமில்லைனா அண்ணாவோட சேர நான் எந்த ஸ்டெப்பும் எடுக்கமாட்டேன். தானா நடக்கும்போது நடக்கட்டும். ஆனா உங்களுக்குனு லைஃப் இருக்கு. உங்க அப்பாம்மாவை பார்த்துக்கிற பொறுப்பிருக்கு. அதைத்தேடி போக ட்ரை பண்ணுங்க, உங்களை பிஸியா வச்சுக்கோங்க, அப்போதான் சேன்ஜ் கிடைக்கும்” என்றான்.

நவீனா அமைதியாகவே இருக்க, “இராஜ்ஸ்தான்ல ஒரு பொட்டிக் ஓபன் பண்றேன், நீங்க அங்க இருக்கிறது நம்ம வீட்டுல யாருக்கும் தெரிய வேண்டாம். உங்களுக்குனு ஒரு தொழில், கஸ்டமர் வரப்போக இருக்கும்போது பெட்டரா ஃபீலாகும்.

தைரியம், தன்னம்பிக்கைக்கு பெஸ்ட் எக்ஸாம்ப்பிள் சாம்பவி ஆன்ட்டி. அவங்க  உங்களுக்கு பக்கபலமா இருப்பாங்க” என்று அரைமணி நேரம்வரை பேசி நவீனாவை சம்மதிக்க வைத்தான்.

அப்பொழுதே ராகுலை அழைத்து விபரம் சொல்லி, “இந்த வீக் எண்ட் ராஜஸ்தான் போறோம்” என்றான்.

“கடை சொந்தமா வாங்கனுங்களா?”

“அண்ணிக்காக ஆரம்பிக்கிற பிஸ்னஸ், ஒன் இயர் கூட ரன் பண்ணமாட்டோம்னு நினைக்கிறேன், அதனால வாடகைக்கு பார்த்தா போதும்”

“அப்போ சீக்கிரம் ஆரம்பிச்சிடலாம் சார்” என்றான் ராகுல்.

ராஜஸ்தான் வந்த முதல் நாளிலேயே கடை கிடைத்துவிட, அன்றே முன்பணம் கொடுத்தான் பொற்செல்வன். அதன் பின்னே பத்தே நாள்களில் விலையுயர்ந்த உடைகளை இறக்குமதி செய்திருந்தான்.

இதோ நவீனா, ராகுல், பொற்செல்வன் மூவரும் ஜெய்பூர் விமானநிலையம் வந்தடைந்தனர்.

கடை திறப்பு விழாவிற்கு சாம்பவிக்கு அழைப்பு விடுத்திருந்தான் பொற்செல்வன்.  செல்விக்கும் சாம்பவிக்கும் நவீனா அழைப்பு விடுத்திருக்க, நிறைந்த சந்தோசத்தோடு கடை திறப்பு விழாவிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார் சாம்பவி.

செந்தமிழ்செல்வியோ… நவீனாவின் அழைப்பை மறுக்கவும் முடியாமல், பொற்செல்வனின் சந்திப்பை ஏற்கவும் முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!