அதிகாலை திருமணத்தின் போது நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் தற்போது அத்தனை பெரிய அரங்கம் போதவில்லை என்பது போல இருந்தது.
சொந்தங்கள் நிறைந்த அரங்கத்தில், பழம்பெரும் நடிகர்களின் வாரிசுகள், பொற்செல்வனின் தொழில் முறை நண்பர்கள் போன்ற செல்வந்தர்களும், கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள், பொற்செல்வன் காட்டில் வேலை செய்பவர்கள், தேவேந்திரனிடம் வேலை செய்யும் தொழிலாளிகள் என நடுத்தர வர்கம், கீழ்த்தட்டு மக்கள் என அனைவரும் பாகுபாடின்றி அரங்கத்தில் கலந்திருந்தனர்.
தந்தையின் பணச்செருக்கால் வாழ்விழந்த அன்னையை நினைத்து மனஉளைச்சலுக்கு ஆளான செல்வியின் மனம் பாகுபாடில்லாமல் கலந்திருக்கும் மக்களை பார்த்து நிறைந்திருந்தது.
இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் பாடிக்கொண்டிருந்தனர்.
Advertisement
செல்வனுக்கும் செல்விக்கும் விருந்தினர்களிடம் பேசவே நேரம் போதவில்லை. ஆனாலும், ‘டையர்டா இருக்கா? கொஞ்ச நேரம் உக்காருறியா?’ என்று தன்மேல் அக்கறை காட்டும் பொற்செல்வனிடம் இன்னும் மயங்கினாள் செல்வி.
பிடித்தமான பன்னீர்ரோஜா நிறத்தில் பட்டு, அதற்கேற்ற நகை, சிகை அலங்காரம் என மணக்கோலத்தில் ஜொலித்தாள் செந்தமிழ்செல்வி.
நண்பர்களின் கலாட்டா, மணமக்களுக்கான சடங்குகள், பழைய விளையாட்டுகள் என்றாலும் குடத்திலிருந்து மோதிரம் எடுப்பது ஸ்வாரஸ்யமாகத்தான் இருந்தது மணமக்களுக்கு.
Advertisement
“ஒருவாய்தான் ஊட்டிவிடனும்னு ரூல்ஸ் இருக்கா? மொத்தமும் ஊட்டிவிடு” என கட்டளையிட்டான் சிரிப்போடு.
Advertisement
இரண்டு முறை ஊட்டியவள், “வீட்டுக்கு போன பின்னாடி தினமும் ஊட்டி விடறேன், இப்போ நீங்களே சாப்பிடுங்களே, எல்லாரும் சிரிக்கிறாங்க” என முணுமுணுத்தாள் சங்கடமாக.
“சரி நீ ஊட்டாத, நான் ஊட்டிவிடறேன்” என்று செல்வியின் வயிற்றை செல்வனே நிரப்பிவிட்டான்.
மண்டபத்திலிருந்து நண்பகலில் சாம்பவி வீட்டிற்கு வந்திருந்தனர் மணமக்கள். நவீனாவை தன்னோடு அழைத்து வந்திருந்தார் சாம்பவி.
Advertisement
மணமக்களுக்கு ஆரத்தி எடுப்பது, பால் பழம் கொடுப்பது என அனைத்தையும் நவீனாதான் செய்தாள்.
தான் உண்டு இயல்பாக செல்விக்கு கொடுத்தவன், “கல்யாணத்துல வெட்டியா சுத்திட்டிருந்தியா? இல்ல யாரையாவது செலக்ட் பண்ணுனியா?” என இளவரசனை வம்பிளுத்தான்.
“இந்த ஐடியா தோணாம போச்சே” என இளவரசன் வருந்த,
“அண்ணா ஆல்ரெடி ஒரு பொண்ணை பார்த்து வச்சிருக்கார்” என்றாள் நவீனா.
பொற்செல்வன், செல்வியோடு இளவரசனும் அதிர்ந்து பார்க்க, “என்னண்ணா இப்படி முழிக்கிறிங்க? ஏர்போர்ட்ல ஒரு பொண்ணை பார்த்தேன், அடுத்த முறை பார்த்தா ப்ரப்போஸ் பண்ணிடுவேனு ராஜஸ்தான்ல இருக்கும்போது சொன்னிங்கள்ல? நீங்க மறந்த மாதிரி நடிச்சாலும், நான் மறக்கல” என்றாள் நவீனா.
“நீ வேற ஏன்மா? அப்படிலாம் யாருமில்ல, லவ் மேரேஜ்க்கு அம்மா சம்மதிப்பாங்களானு தெரிஞ்சிக்க நான் சொன்ன பொய்ம்மா அது” என்றான் இளவரசன்.
மகனின் தேர்வு நன்றாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையோடு, “நான்லாம் ஒன்னும் சொல்லமாட்டேன், உனக்கும் இருபத்தி எட்டு முடியப்போகுது, சீக்கிரம் பொண்ணை தேடு” என காதலுக்கு சம்மதம் தெரிவித்து,
“சரி தம்பி, நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் மதியத்துக்கு சமைக்கப்போறேன்” என்று சாம்பவி சமையலறை செல்ல, நவீனாவும் சாம்பவியோடு இணைந்துகொண்டாள்.
இளவரசனும் வெளியே சென்றிட, பொற்செல்வனும் செல்வியும் செல்வி அறைக்குள் சென்றனர்.
“டிரஸ் சேன்ஜ் பண்ணிக்கிறியா?” என்றான்.
“இல்ல, இந்த ஸேரியோடதான் புகுந்த வீட்டுக்கு போகனுமாம். அம்மா மாத்த வேண்டாம்னு சொன்னாங்க”
“சரி, நகைகளையாவது கழட்டிடு, கொஞ்சம் ஃப்ரீயா இருக்கும்” என்று தனது மாலையை கழற்றி வைத்து, செல்வியின் மாலை, ஒட்டியானம், நெத்திச்சூடி என பெரிய நகைகளை அகற்ற உதவி, அணைத்துக்கொண்டான் மனைவியை.
பல முறை செல்வனை அணைத்திருக்கிறாள். ஆனாலும் இன்று செல்வி முகம் படபடப்பை காண்பிக்க, அணைப்பை கூட்டியவன், செல்வியின் திருத்தமான புருவத்தை வருடியபடி இதழில் முத்தமிட்டான் மென்மையாக.
சில நிமிடம் கழித்து விடுவித்து, “படு கொஞ்ச நேரம்” என்று கட்டிலில் அமர்ந்தான்.
“நீங்க” என்றவள் பொற்செல்வனை பார்க்கவில்லை.
“சின்ன முத்தத்துக்கே வெக்கப்பட்டு என்னை பயமுறுத்தாதடீ”
“இது சின்ன முத்தமா?” என செல்வி முணுமுணுக்க, அதில் சொக்கிப்போனவன், “நான் இருந்தா உன்னை தூங்க விடமாட்டேன், கொஞ்ச நேரம் வெளில இருக்கேன்” என்று வெளியேறினான்.
கிச்சனருகே சென்று, “இளவரசன் எங்க ஆன்ட்டி?” என்றான்.
“வெளில போனான், கால் பண்றேன்”
“நீங்க சமையல் பாருங்க, நான் பார்த்துக்கிறேன்” என்று வெளியே வர, அங்கே இளவரசன் இல்லை. மாடிக்கு சென்று பார்க்க, அங்கே அமர்ந்திருந்தான் திட்டின் மீது.
“இளவரசா” என அழைத்த பின்னேதான் பொற்செல்வன் வரவை உணர்ந்தான்.
முகத்தை இயல்பாக்கி, “என்ன இங்க வந்துருக்கிங்க? ரெஸ்ட் எடுக்கலையா?” என்ற இளவரசனின் கண்கள் கலங்கியிருக்க, “என்ன பிரச்சனை? உன் அப்பா எதாவது சொன்னாரா?” என்றான்.
“செல்வி… ம்க்கூம், செல்வியோட டச்சே இல்லாம போச்சு, சின்ன வயசுல என்னோட செம்ம ஜாலியா இருப்பா. என்னோட பழைய செல்வியை பார்க்கவே முடியல, அவளோட இருந்தது எனக்கு பத்தல” என்றான் பாவமாக.
“லூசாடா நீ? என்னவோ வாழ்ந்து முடிச்ச மாதிரி பேசுற, இப்போ என்ன கெட்டுப்போச்சு? உனக்கு லீவ் கிடைக்கும் போதெல்லாம் இங்க வந்துடு, இல்ல செல்வியை நீ இருக்க இடத்துக்கு கூட்டிட்டுப்போ. உன்னை யார் தடுப்பா?”
‘ச்சு.. என்ன இப்படி உளறிட்டிருக்கேன்’ என தனக்குள் கேட்டு தெளிந்தவன், “யாரும் தடுக்கமாட்டாங்க, உங்களை விட்டுட்டு செல்வி வரமாட்டா, என் தங்கையை அப்படி மயக்கி வச்சிருக்கிங்க” என்றான் இலகுவாக.
“இப்போ எதுக்குடா அழுதுட்டே சிரிக்கிற? பார்க்க சகிக்கல”
“சகிக்கிலனா பார்க்காதிங்க, கிளம்புங்க”
பொற்செல்வன் முறைக்க, “ஈஸியா சொல்லிட்டிங்க, நானும் நேத்து வரை ஈஸியாதான் இருக்கும் நினைச்சிருந்தேன், ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல எங்க செல்வி இன்னொரு வீட்டுக்கு கிளம்பிடுவா, இனி அந்த வீட்டைத்தான் என் வீடுனு சொல்லுவான்றதை எல்லாம் யோசிக்க முடியலை. செல்விக்கு சட்டுசட்டுனு கோபம் வரும், நீங்க ஹேண்டில் பண்ணிடுவிங்கதான். ஆனாலும் உங்க விசயத்துல ரொம்ப சென்ஸிட்டிவா இருக்கா. அதான் பயமா இருக்கு”
பொற்செல்வன் அமைதியாக பார்த்திருக்க, “தேங்க்ஸ், செல்வியை ச்சூஸ் பண்ணினதுக்கு, உங்களைத் தவிர வேற யாராலயும் செல்வியை பார்த்துக்க முடியாது” என்று அணைத்துக்கொண்டான் பொற்செல்வனை.
தங்கை பிரிவை தாங்க முடியாமல் தவிக்கிறான் எனப் புரிந்து தானும் அணைத்து விடுவித்தவன், “அவ கிடைக்கலனா நான் என்னாகியிருப்பேனு எனக்குத்தான் தெரியும். என்னவோ தேங்க்ஸ் சொல்லிட்டிருக்க. வாடா டேய்” என கைப்பிடித்து கீழே அழைத்து வந்தான்.
பிறகு அனைவரும் பேசிக்கொண்டிருந்து மதிய உணவு உண்ட பின்னே, “அமிர்தாம்மா போன் பண்ணினாங்க செல்வி, உங்களை அழைச்சிட்டு போக அமிர்தாம்மாவும் தேவராஜ் தம்பியும் வராங்களாம். முகம் கழுவிட்டு வா, தலை பின்னிவிடறேன்” என பரபரத்தார் சாம்பவி.
திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத கோபத்தில் பொற்செல்வன் வீட்டிற்கு போன பின்னே அன்னையிடம் சண்டையிட அப்பா வருவாரோ? அண்ணனும் இன்றிரவு ராஜஸ்தான் சென்றிடுவானே என்ற பதட்டம் தொற்றிக்கொள்ள, முகம் கழுவி வந்த செல்வியின் முகத்தில் மகிழ்வில்லை.
ஆனால் சாம்பவிக்கு அப்படியில்லை. பொற்செல்வன் மருமகனாக கிடைத்ததில் பெரு மகிழ்வு. மகளை கணவன் வீட்டிற்கு அனுப்பும் தாய்மார்களுக்கு இருக்கும் கவலை, பயம், பிரிவுத்துயரம் என ஏதும் இல்லை.
மகளின் முகத்தை பார்த்ததும் கோபம் வர, “என்ன மூஞ்சு இது? புருஷன் வீட்டுக்கு முதல்முதலா போற புள்ள இப்படித்தான் இருப்பியா?” என கடுகடுத்தார் பொற்செல்வனுக்கு கேளாதபடி.
“அம்மா… நான் நல்லாத்தான் இருக்கேன்” என முகத்தை இயல்பாக்கினாள்.
சாம்பவி முறைக்க, “உன்னை விட்டுப் பிரிய போறேன், கஷ்டமா இருக்காதா?” என சமாளித்தாள்.
“ஓஹோ… என்னை விட்டு பிரியறதுல உனக்கு கஷ்டம், இதை நான் நம்பனும், செல்வா தம்பியை பார்க்க முடியாம ராஜஸ்தான்ல நீ பண்ணின அலப்பறையை மறந்துட்டேன்னு நினைசிட்டிருக்கியா?” என சாம்பவி சிரிக்க,
“செல்வி… பார்த்து ஒரு வாரம் ஆச்சுடீனு புலம்புவல்ல? அப்போ இருக்கு உனக்கு” என்றாள்.
மகளின் கோபத்தை ரசித்தவர், “நானெதுக்கு புலம்பப்போறேன், பார்க்கத் தோணினா ஃப்ளைட்டை பிடிச்சி வந்துடுவனே” என்றபடி செல்விக்கு ஒப்பனை செய்ய ஆரம்பித்தார்.
செல்வி பாவமாக பார்க்க, “சும்மா சொல்றாங்க செல்வி, அவங்க முறைக்கு செய்ய வேண்டிய பொருள்களை வாங்கிட்டு வரப் போய்ட்டு இப்போதான் வந்தாங்க. வயசான காலத்துல எதுக்கு அலைச்சல்னு நான் மறுத்தாலும் கேட்கல” என்று தனது அன்னைதந்தை வாங்கி வந்ததை காண்பித்து செல்விக்கான பெரிய பெட்டியில் வைத்தார்.
“இது வாங்க ஏது பாட்டி காசு?” என செல்வி விசாரிக்க,
“உன் அப்பாகிட்ட வாங்கிட்டேனு நினைக்கிறியா செல்விம்மா? இதுநாள் வரைக்கும் உன் அப்பாக்குத்தான் சப்போர்ட் பண்ணினேன். ஆனா இனிமே பண்ணமாட்டேன். மருமகன் முன்கோபி, பெரிய தொழில் பண்றார், பல டென்ஷன் இருக்கும், நீ அனுசரிச்சு போன்னு சாம்பவிகிட்ட சொல்வேன்.
குடும்பத்துக்காகத்தான உழைக்கிறார்ன்ற நம்பிக்கையிலயும் பெருமையிலயும் இருந்தேன். வப்பாட்டி வச்சிருப்பார்னு நினைச்சே பார்க்கல, இளவரசனைத் தவிர வேற யார் சொல்லியிருந்தாலும் உன் அப்பா அப்படினு நம்பியிருக்கவே மாட்டேன். மருமகன் மேல இருக்க நம்பிக்கையில சாம்பவியை திட்டிட்டு இருந்திருக்கோம். எவ்வளோ வேதனையோட இருந்திருப்பா என் பொண்ணு.
இனிமே அவர் யாரோ நாங்க யாரோ. மனசுல தெம்பும், உடம்புல வலுவும், கையில கொஞ்சம் பணமும் இருந்திருந்தா கேஸ் போட்டு உள்ள தள்ளியிருப்பேன், ஆனா அதுக்கெல்லாம் வக்கில்லாத இருக்கோமே… விலகியிருக்கிறதை தவிர வேற என்ன பண்றது?” என்றார் வேதனையாக.
“ஹப்பா… இனி என் அம்மாக்கு அட்வைஸ் பண்ணி அவரை நியாபகப்படுத்தமாட்டிங்க, நீங்க தனியா இருக்க வேண்டாம் பாட்டி, அம்மாவோட வந்துடுங்களே”
பின்னே தேவராஜிம் அமிர்தவள்ளியும் வர, அவர்களை உபசரித்து மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைக்க ஆயத்தமானார் நிறைந்த மனதோடு.
செல்விக்கு உரிமையான சொத்துகளும், பொன்னகைகளும் கொட்டிக்கிடக்கிறது. அத்தனை சொத்துகளும் தங்கைக்கு விசமாகிப்போன நிலையில், தற்போது தங்கைக்கு கொடுத்த சீர் வரிசையெல்லாம் பத்தவேயில்லை இளவரசனுக்கு.
இளவரசன் முகம் கவலையிலிருக்க, “என்னதான்டா பிரச்சனை உனக்கு?” என பொற்செல்வன் கடுப்பாக கேட்டான்.
“ஒன்னு… ஒன்னுமில்ல” என்றவனுக்கு கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
“டேய்…” என இளவரசனை தனியே அழைத்துச் சென்றான் பொற்செல்வன்.
“ஊஃப்…” என கண்களைத் துடைத்துக்கொண்டவன், “சாரி, சாரி… ம்ப்ச் என்னவோ இன்னைக்கு பார்த்து இப்படி அழறேன், இப்படிலாம் நான் அழுததே இல்ல, ச்சு…” என அழுகையை கட்டுப்படுத்தி, “ரியலி ஐயம் வெரி ஹாப்பி, செல்விக்கு பிடிச்ச வாழ்க்கை அமைஞ்சிருக்கு, நல்ல ஃபேமலி கிடைச்சிருக்கு, என் தங்கையை எப்படிபட்ட இடத்துல கல்யாணம் செய்து கொடுக்கனும்னு ஆசைப்பட்டேனோ அதேபோல நீங்க இருக்கிங்க” என்றான் பெருமையாக.
பொற்செல்வன் முறைத்துக்கொண்டிருக்க, தன்னை இப்படி அழுத முகத்தோடு பார்த்தால் தங்கை கவலைப்படுவாள் என்பதால் கோபப்படுகிறான் எனப்புரிந்த இளவரசன் முகம் வெகு சிரமத்திற்கு பிறகு இயல்பிற்கு வந்தது.
“அம்மா கூப்பிடுறாங்க, இரண்டு பேரும் உள்ள வாங்க” என்றாள் நவீனா.
“இன்னைக்கு ஊருக்கு போகக்கூடாது, நாளைக்கு பேசனும்” என்ற கட்டளையோடு பொற்செல்வன் உள்ளே வர, “ரியாலிட்டி புரியுது. நௌ ஐயம் ஆல்ரைட்” என்றபடி உள்ளே வந்தான் இளவரசன்.
“ஆன்ட்டி, இளவரசன் இருந்தாதான் நாளைக்கு விருந்துக்கு வருவோம்” என்றான்.
“நீ இல்லைனா மரியாதையா இருக்காதுனு நானும் சொல்லிட்டுதான் தம்பி இருக்கேன்” என்றார் சாம்பவி.
செல்விக்கும் இளவரசன் இங்கிருக்க வேண்டும் என்று தோன்ற, “நாளைக்கு இரேன் இளவரசா, நீ இருந்தா அம்மா தனியா இருக்க மாட்டாங்கள்ல” என்றாள்.
“இருக்கேன்… இருக்கேன். நல்ல நேரம் முடியறதுக்குள்ள கிளம்புங்க” என்றான் இளவரசன்.
புதுவிதமான உணர்வுகளோடு பொற்செல்வனின் வீட்டிற்கு கிளம்பினாள் செந்தமிழ்செல்வி.