ஒரு மணி நேரம் கழித்து பொற்செல்வன் வந்தான். செல்வன் உள்ளே வந்தது கூட அறியாமல் அமர்ந்திருந்தார் சாம்பவி.
“ஆன்ட்டி”
“வாங்க தம்பி” என்று எழுந்து நின்றார்.
Advertisement
“செல்வி எங்கே?”
“ரூம்ல தூங்குறா, எனக்கு பயமா இருக்கு”
“பயப்படாதிங்க ஆன்ட்டி” என்று நடந்ததை கேட்டறிந்தவன், “அப்புறமென்ன? இனி செல்வியோட ஸ்ட்ரெஸ் குறைஞ்சிடும்” என்றான்.
Advertisement
பொற்செல்வன் குரல் கேட்டதும் செல்விக்கு தூக்கம் களைய, எழுந்து வந்தாள்.
Advertisement
“என்ன நல்ல தூக்கமா?” என்றான்.
“ம், கொஞ்ச நேரம் தூங்கிட்டேன், என் அப்பா போய்ட்டார். அவர் செய்தது தப்புனு ஒத்துக்கிட்டு போய்ட்டார், கல்யாணத்துக்கு வர மாட்டேனு சொல்லிட்டார்” என்றாள் வெற்றி பெற்ற தோரணையோடு.
செல்வியின் பாவனையில் கவலையான போதும், “பிரச்சனையை ஃபேஸ் பண்ணினாத்தான் சொல்யூஸன் கிடைக்கும். பயப்படுறது, அழறதுனு இருந்தா ஒன்னும் பண்ண முடியாது” என்றான் பாராட்டுதலாக.
சாம்பவி பழரசம் கொடுக்க, வாங்கிக்கொண்டவன், செல்விக்கு எப்பொழுது நலங்கு வைப்பிங்க என்று கேட்டுக்கொண்டு, “கால் பண்றேன்” என்று செல்வியிடம் சொல்லி கிளம்பினான்.
அன்று மதியம் ஒரு பண்டில் வந்தது பார்சலாக. சாம்பவிக்கு அழைத்தவன், “ஆன்ட்டி, அதுல செல்வி நலங்குக்கு தேவையான டிரஸஸ் இருக்கு. ப்ளொஸ்லாம் சரியா இருக்கானு செக் பண்ணிக்க சொல்லிடுங்க. மேரேஜ் டிரஸ் இன்னும் இரண்டு நாள்ல வந்திடும்” என்று இணைப்பை துண்டித்தான்.
சாம்பவி, “உன் அப்பாதான் எதையாவது அனுப்பியிருப்பார்னு அதுக்குள்ள பயந்துட்ட, அப்படியே அனுப்பினாலும் திரும்ப அனுப்பிடலாம். இல்லைனா தீ வச்சு எரிச்சு விட்டுடலாம் செல்வி. நீ டென்ஷன் ஆகாத” என்றார் மன்றாடலாக.
பொற்செல்வன் அனுப்பியிருக்கிறான் என்ற பின்னேதான் நிம்மதியானது செல்விக்கு. “சாரிம்மா, இனி இப்படி யோசிக்கமாட்டேன்” என்று புத்தாடைகளை பார்ப்பதில் கவனமானாள்.
“நான் வைக்கிறேன்” என்று இணைப்பை துண்டித்தவளுக்கு உடலெலாம் சிலிர்த்து சிவந்தது.
“ஒரு ப்ளொஸ் போட எவ்வளோ நேரமாகும்? சரியா இருக்கானு சொல்லு செல்வி, இந்த அளவு வச்சித்தான் கல்யாண ப்ளொஸ் தைய்ப்பாங்களாம், டெய்லர் கால் பண்ணினாங்க” என்றார் சாம்பவி.
சாம்பவியின் பெற்றோர் வந்திருந்தனர். பெரிய பையை பார்த்ததும் தங்கும் எண்ணத்தோடு வந்திருக்கிறார்கள் என்று புரிய, “பத்திரிக்கை வைக்கும் முன்னாடியே வந்துட்டிங்க, அவர் சொன்னாரா?” என முறைப்போடே வரவேற்றார்.
தாமோதரன் சொல்லித்தான் இன்றே வந்தார்கள் என்றாலும், “என் பேத்தி கல்யாணத்துக்கு நாங்க வந்துருக்கோம், எல்லாத்தையும் சந்தேகமாவே பார்க்காத” என்றபடி உள்ளே வந்தனர்.
இவர்களைப் பொறுத்தவரை, சற்று திமிர் பிடித்த மருமகன் என்றாலும் மகளை செழிப்பாக பார்த்துக்கொண்டவர், வரதட்சனை கேட்டு தொல்லை கொடுக்காத மனிதர், மனைவி மீதுள்ள கோபத்தில் இத்தனை வருடங்கள் தனித்திருந்தாலும் மகள் திருமணத்திற்கு செய்ய நினைக்கிறார்.
உறவுக்குள் சண்டை வருசது சகஜம்தான், இப்படி நல்லது கெட்டதுகளில் உறவாடுவதும் சகஜம்தான். மருமகன் இறங்கி வந்துவிட்டார். இனியாவது மகள் கணவனோடு வாழ வேண்டும் என்று பெற்றோர் நினைத்தனர்.
செல்விக்கு தெரியாமல் இரண்டு நாள்களாக சாம்பவியிடம் சொல்லிப்பார்த்தார் சாம்பவியின் அன்னை. சாம்பவி மனம் இறங்கவில்லை. அவரைப் பத்தி பேசுறதா இருந்தா கிளம்புங்க என்றுவிட்டார்.
இரண்டு நாள் கழித்து இளவரசன் வந்தான். பேரனிடம் மருமகனை திருமணத்திற்கு அழைப்பது பற்றி பேசினார் சாம்பவியின் அன்னை.
“அம்மாவைத்தான் தனியா விட்டார் பாட்டிம்மா, ஆனா அவர் தனியா இல்ல” என்றான் இளவரசன்.
அதிர்ந்த போதும் அப்படி இருக்காது என்று, “என்ன சொல்ற கண்ணு? பெத்தவங்களை பார்த்துக்கிறதை தப்புனு சொல்வியா?” என்றார் தவிப்போடு.
“நான் என் தாத்தா பாட்டியை சொல்லல, அப்பா இன்னொரு பொண்ணோட வாழ்ந்துட்டு இருக்கார் பாட்டிம்மா, இது அம்மாக்கும் செல்விக்கும் தெரியும்ன்றதாலதான் தணிஞ்சி போனார். இல்லைனா அவர் அடங்குற ஆளா?” என்றான் இளவரசன்.
“என்ன சொல்ற இளவரசா?” என பெரியவர்கள் அதிர்ந்து போயினர்.
“எனக்கு இது ஒன்பது வருசம் முன்னாடியே தெரியும், ஆனா நான் சொன்னா நீங்க நம்பமாட்டிங்க, அதோட செல்வி இருக்கும்போது எதாவது உளறி வைப்பிங்கனுதான் சொல்லாம இருந்தேன்.
இப்போ எல்லாமும் வெளிப்படையா பேசியாச்சு. செல்விகிட்ட இது பத்தி பேசி கல்யாண மூடை ஸ்பாயில் பண்ணிடாதிங்க, அவளை தேத்துறது சாதாரண விசயமில்ல” என்றார் கண்டிப்போடு.
சாம்பவியின் பெற்றோர் இதனை எதிர்பார்க்கவேயில்லை. மகள் எப்படி இதை தாங்கியிருப்பாள்? என்று கலங்கினார்கள். “அதுதான் என்னைக்குமில்லாம நேத்து அவ்வளோ பதிவிசா பேசினாரா?” என்றார் ஆற்றாமையோடு.
“இப்போவும் இதை உங்ககிட்ட சொல்லனும் நினைக்கல, அவரைப் பத்தின உண்மை உங்களுக்கு தெரியலைனா அவர் மாறிட்டார், போய் வாழப்பாருனு அம்மாக்கு அட்வைஸ் பண்ணுவிங்க, செல்வி டென்ஷன் ஆகுவா. அதனாலதான் சொன்னேன். இதைப் பத்தி பேசாதிங்க” என்றான் இளவரசன்.
“சரி கண்ணு” என்றவருக்கு அழுகை வர, “ம்ப்ச், அழாதம்மா, கல்யாண வீட்டுல நல்லதை நினைங்க. என் பொண்ணுக்கு இப்படி ஒரு வரன் அமையும்னு நான் நினைச்சே பார்க்கல. இப்படி ஒரு குணமான பையனை அவரால கண்டிப்பா பார்த்திருக்க முடியாது. தனியா வந்தாலும் சாம்பவி சாதிச்சிட்டேன்” என்றார் பெருமையாக.
நலங்கிற்கு தயாராகி செல்வி வெளியே வர, பேத்தியைப் பார்த்ததும் பூரித்து போனார்கள் சாம்பவியின் பெற்றோர். அத்தனை வசதி படைத்த பெண் என்றாலும் தன் மகளுக்காக அத்தனையையும் இழந்திருக்கிறாள்.
நலங்கு வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்க, நவீனாவும் பொற்செல்வனும் வந்தனர்.
“தம்பி…” என தடுமாறினாலும் “வாங்க” என வரவேற்றார்.
“நான் வரக்கூடாதுனு அம்மா சொன்னாங்க ஆன்ட்டி, என் செல்விக்கு நலங்கு வைக்கிறதை நான் பார்க்கலைனா எப்படி?” என்றான் சிரிப்போடு.
இளவரசன் “நல்லாயிருக்கியாம்மா?” என்றான் நவீனாவிடம்
“நல்லா இருக்கேன் ண்ணா” என்று செல்வியை காணச் சென்றாள்.
“நவீனாக்கா, வாங்க வாங்க” என்றாள் மகிழ்வோடு.
“ம்… சின்னவரும் வந்துருக்கார்” என நவீனா கிசுகிசுக்க, செல்வி முகம் மலர்ந்தது.
செல்வி வரும்வரை பொற்செல்வன் இளவரசனோடு பேசிக்கொண்டிருந்தான். பின்னே நலங்கு வைக்கும் வைபவம் நடந்தேற, தந்தையை நினைக்கிறாளா? பயப்படுகிறாளா? என்ற நினைப்பிலிருந்த பொற்செல்வக்கு, கோபமில்லாத செல்வியின் மலர்ந்த முகத்தை பார்த்த பின்னேதான் நிம்மதியானது.
செல்வியின் கைகளில் சந்தனம், முகத்தில் மஞ்சள் பூச்சு, பின்னிய சிகையை நிறைத்திருந்த மல்லிகை, கண்ணாடி வளையல்கள், வழக்கத்தில் இல்லாமல் பெரிதாய் அணிந்திருந்த கொலுசு, நேர்த்தியாக கட்டியிருந்த சேலை என முற்றிலும் மாறுபட்ட செல்வியைக் கண்டு இதமான மனநிலைக்கு மாறினான்.
“வீட்டுக்கு வந்துருக்கேன், உன் தங்கை என்ன பார்க்கக்கூட மாட்டேங்குறா?” என இளவரசனிடம் பொய் கோபம் காட்டினான் பொற்செல்வன்.
“நீங்க வீட்டுக்கு வந்ததே தப்புனு புரிய வைக்கத்தான்” என சிரித்தான் இளவரசன்.
பொற்செல்வன் முறைக்க, “ம்… ம்… பயந்துட்டேன்” என இளவரசன் சிரிக்க, பொற்செல்வனும் சிரித்தான்.
நலங்கு வைத்து முடித்த பின்னே, அனைவருக்கும் தேநீர் கொடுக்க ஆரம்பித்தார் சாம்பவி. செல்வியை இம்சை செய்யாமல் தேநீர் அருந்தி கிளம்பினான் பொற்செல்வன்.
பிற்பகல் போல் செல்விக்கு அழைத்தவன், “இன்னைக்கு ஸேரில எப்படி இருந்த தெரியுமா? பார்ட் பார்ட்டா ரசிச்சேன்” என்றவன், “போனை கட் பண்ணிடாதடீ” என்றான் அவசரமாக.
இப்படியாக தந்தை நினைவு வராதபடி எதையாவது பேசிக்கொண்டிருந்தான் செல்வியிடம். தினமும் மாலை வேளைகளில் நவீனாவை அனுப்பி வைத்தான் செல்வி வீட்டிற்கு. இரவு உணவு செல்வி வீட்டில் உண்ட பின்னேதான் தனது வீட்டிற்கு செல்வாள் நவீனா.
இதோ… வந்துவிட்டது திருமண நாளும். நாளை அதிகாலை பொற்செல்வனின் மனைவி ஆகிடுவாள் செந்தமிழ்செல்வி.
தேவராஜும் நவீனாவும், நிறைந்த சொந்தங்களோடு பெண்ணழைப்பிற்கு வந்திருந்தார்கள். இளவரசனின் நண்பர்கள் பத்து பேர் வரை வந்திருந்தனர். சிலர் மனைவியோடும் வந்திருந்தனர். அவர்கள் தங்கவும் வீட்டை ஏற்பாடு செய்திருந்தான் பொற்செல்வன். சாம்பவி வீடு விருந்தினர்களால் நிறைந்திருந்தது. பெண்ணழைப்பிற்கான விருந்து அமர்க்களப்பட்டது.
பெரிய கூட்டத்தோடு மண்டபம் வந்து சேர்ந்தாள் செல்வி. செல்வியின் அலங்காரத்தில் சொக்கிப்போனான் பொற்செல்வன்.
அடுத்தடுத்து சம்பிரதாயம் நடந்துகொண்டிருக்க, பொற்செல்வனோடு சொந்தங்களும், நண்பர்களும் உடன் இருக்க, ஒரு நிமிடம் கூட செல்வியிடம் பேச முடியாமல் போனது. செல்வியை பார்க்க விடாமல் கலாட்டா செய்தனர் சொந்தங்கள்.
பொற்செல்வன் குடும்பத்தின் வழக்கப்படி பரியப்பணம் கொடுத்து, பெரியோர்கள் முன்னே பொற்செல்வனுக்கு செந்தமிழ்செல்வியை நிச்சயம் செய்தனர்.
பின்னே புகைப்படம் எடுத்து முடித்து அறைக்குள் செல்வி வர இரவு பதினொரு மணி ஆகியிருந்தது. பொற்செல்வன் செல்விக்கு அழைக்க, பேசியது இளவரசன்.
“டேய், உன்னை யாருடா பேச சொன்னது?” என செல்வன் கோபம் கொள்ள, “நான்தான் பேசுவேன்” என சிரித்த இளவரசன், “ரொம்ப டையர்ட் ஆகிட்டா, வேற கால்ஸ் வந்தா டிஸ்டர்ப் ஆகும். நீங்க கால் பண்ணினா கொடுக்குறேனு சொல்லித்தான் போனை வாங்கினேன். கொடுக்கட்டுமா?” என்றான்.
ஏமாற்றம்தான் என்றாலும், “சரி விடு தூங்கட்டும், காலைல நேரமா எழுப்புவாங்க” என்று தானும் உறங்க நினைக்க, விட்டால்தானே செல்வனின் நண்பர்கள்.
அறைக்குள்ளே வந்து அமர்க்களம் பண்ண ஆரம்பித்திருந்தார்கள். நள்ளிரவு வரை தூங்கவில்லை என்றாலும் அன்றைய விடியல் மிக அழகாய் இருந்தது பொற்செல்வனுக்கு.
பின்னே இருக்காதா? “நைட் ஏன் கால் பண்ணல?” என்று அதிகாலையிலேயே அழைத்து விட்டாள் செல்வி.
“டையர்டா இருப்பனுதான் பண்ணல” என்றவன், “பண்ணினா மட்டும் நான் சொல்றதை செய்திருப்பியா? போன்ல கூட முத்தம் கொடுக்க மாட்டேங்குற” என குறைப்பட்டான்.
“எத்தனை முறை கட்டிப்பிடிச்சிருக்கேன்?” என்றவளுக்கு வெக்கம் வந்துவிட, “ம்ப்ச் போங்க” என இணைப்பை துண்டித்தாள்.
அரை மணி நேரத்திற்கு பின்னே, அலங்காரம் ஏதுமின்றி, கூரைப் பட்டில் வந்தமர்ந்தாள் பொற்செல்வன் அருகே.
மகிழ்வின் உச்சத்தில் செந்தமிழ்செல்வி அமர்ந்திருக்க, ஐயர் சொன்ன மந்திரம் கூட மனதை எட்டவில்லை. எதோ அரைகுறையாய் முணுமுணுத்தாள்.
நாதஸ்வரம், மேளங்கள் முழங்கிய போதும், “என்னைப் பாரேன்டீ” என்ற செல்வனின் முணுமுணுப்பு துல்லியமாய் காதில் விழ, இன்னும் தலை குனிந்தாள் சிவந்த முகத்தோடு.
பின்னே “நீயும் எதாவது சொல்லுடீ” என கிசுகிசுக்க, மறுப்பாய் தலையசைத்தாள் செல்வி.
செல்வி கழுத்தில் மாலை அணிவித்தவன், “செல்வனை அடக்கி கைக்குள்ள வச்சிக்கப்போறேனு சொல்லி எனக்கு மாலை போட்டுவிடு” என்று மனைவி முன்னே சிரம் தாழ்த்தி நின்றான் சிரிப்போடு.
பட்டு வேஷ்டி சர்ட்டில் கம்பீரமாக இருந்த கணவனைப் பார்த்ததும் சொக்கிப்போனவளுக்கு பேச்சு வரவில்லை. ஏதும் சொல்லாமல் செல்வி செல்வனுக்கு மாலை அணிவிக்க, செல்லமாய் முறைத்தவன், பின்னே அமிர்தவள்ளி புருஷோத்தமனிற்கு பாத பூஜை செய்து வரம் பெற்று, சாம்பவிக்கு செய்ய, சந்தோசக் கண்ணீரோடு மணமக்களை ஆசிர்வதித்தார் சாம்பவி.