Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 25.2

“வாங்க சார்” என பணிப்பெண் வரவேற்க, உள்ளே வந்த இளவரசன் “எதுக்கு என்னை வர சொன்னிங்க? நிம்மதியா இருக்க விடமாட்டிங்களா?” என முறைத்தான் தாத்தா பாட்டியை.

“இளவரசா… உன் அப்பாக்கு உடம்பு சரியில்லடா, காலைல மயக்கம் போட்டு விழுந்துட்டான்” என கண்ணீர் விட்டார் தாமோதரனின் அன்னை.

கோபம் வெறுப்பு என இருந்த போதும் பதறித்தான் போனான். “டாக்டர் வந்தாங்களா?” என்றான்.

“வந்தாங்க, லோ பிபியாம், எங்களை உள்ள வரவேணாம்னுட்டான்”



Advertisement

ஏதும் சொல்லாமல் தந்தை அறைக்கு சென்றான். கண்மூடிப் படுத்திருந்த தாமோதரன் கையினில் டிரிப்ஸ் போடப்பட்டிருந்தது. இளவரசன் கட்டிலில் அமரவே, கண்விழித்த தாமோதரன், “நீ ஏன் இளவரசா வந்த? கிளம்பு, செல்விக்கும் உன் அம்மாக்கும் நீ மட்டும்தான இருக்க?” என்றவர் கண்களில் கண்ணீர் வந்தது.

இளவரசன் வேதனையோடு பார்த்திருக்க, “எனக்கு ஒன்னுமில்லைடா, பிபி கொஞ்சம் லோ ஆகிடுச்சு, இப்போ நல்லா இருக்கேன், நீ கிளம்பு” என்றார்.

தாமோதரன் மொபைல் ஒளிர்ந்தது, “ஃபோன் சைலண்ட்ல போட்டுருக்கிங்களா?” என ஆச்சர்யமாக கேட்டவன், அதனை எடுத்துக்கொடுக்க முயல, “வேண்டாம் இளவரசா” என்றார்.

Advertisement

“எதாவது சாப்பிடுறிங்களாப்பா?”

Advertisement

“வேண்டாம், டிரிப்ஸ் போய்ட்டிருக்குல்ல? பசியில்ல, நீ சாப்பிட்டியா?”

“ம் சாப்பிட்டேன். ஃபோனை எப்போவும் சைலண்டல போடமாட்டிங்களே, அதோட அட்டன் பண்ணாம இருக்கிங்க, முப்பது மிஸ்டு கால் இருக்கு” என்றான் சந்தேகத்தோடு.

“என் பிஸ்னஸ் டென்ஷன், அதை விடு, உன் அம்மாக்கு ஒத்தாசையா இருக்குறதை விட்டுட்டு நீ எதுக்கு வந்த?”

Advertisement

“தாத்தா போன் பண்ணிட்டே இருந்தார். அப்படி பண்ணமாட்டாரே, நீங்க வீட்டுல இல்லாத நேரம் எதாவது எமர்ஜன்ஸியா இருக்கப்போகுதுனு வந்தேன்”

“பிஸ்னஸ் டென்ஷன்னா என் அப்பா இப்படி இருக்கமாட்டார், எந்த பிரச்சனையா இருந்தாலும் என் அப்பாக்கு ஃபேஸ் பண்ணித்தான் பழக்கம், அந்த மிஸ்டு கால்ஸை நீங்க அவாய்ட் பண்ண நினைக்கிறிங்களாப்பா?” என்றான்.

மகன் அறிந்துதான் கேட்கிறான் என்று ஆமாம் என்பதாய் தலையசைத்தார்.

“இது எப்போ எடுத்து முடிவு? முடிவுல ஸ்ட்ராங்கா இருக்கிங்களா?”

மீண்டும் ஆமாம் என்பதாய் தலையசைக்க, “அப்போ அட்டன் பண்ணி அதை சொல்ல வேண்டியதுதானே” என்றான்.

‘சொல்லிட்டேன், விடமாட்டேங்குறா’ என்பதை மகனிடம் சொல்ல முடியாமல், “சொல்றேன்” என்றார்.

“நீங்க சொல்லியும் விடமாட்டேங்குறாங்க, அப்படித்தானப்பா?”

“ப்ளீஸ் இளவரசா, இதைப் பத்தி உன்கிட்ட என்னால பேச முடியாது. நீ இதை யோசிக்காத”

“யோசிக்காம எப்படிப்பா இருக்க முடியும்?” என்றவன், தந்தையின் உடல்நிலையை நினைத்து, “ரெஸ்ட் எடுங்கப்பா, டாக்டர்கிட்ட பேசிட்டு வரேன்” என்று வெளியேறினான்.

தனது பெற்றோரை பராமரிப்பதற்காகவே செவிலிப்பெண் ஒருவரும், தனியாக மருத்துவரையும் நியமித்திருந்தார் தாமோதரன். மருத்துவர் வீடும் பக்கத்தில்தான் என்பதால் இளவரசன் அழைத்ததும் ஐந்து நிமிடத்தில் வருவதாக சொன்னார்.

“நர்ஸ் எங்க பாட்டி?”

“இங்கேதான் சார் இருக்கேன். நீங்க பாட்டிம்மாகிட்ட பர்சனலா பேசுவிங்கனு உள்ளே போனேன்” என்று அவளுக்காக ஒதுக்கப்பட்ட அறையிலிருந்து வெளியே வந்தாள்.

“டாக்டர் என்ன சொன்னார்? அப்பா ஹெல்த் எப்படியிருக்கு?”

“ஒன் வீக்கா ஃபுட் சரியா எடுக்காம இருந்திருக்கார், ஹெல்த் வீக்காதான் இருக்கு”

சமைக்கும் பெண்ணிடம் “சாப்பிடலைனா விட்டுடுவிங்களா?” என கத்த, “அவர் வீட்டுக்கே வரதில்லைங்க சார்” என்றார்.

இளவரசன் தாத்தா பாட்டியை முறைக்க, “நாங்க போன் பண்ணினா வேலையிருக்குனு சொல்லிட்டு வச்சிடறான் இளவரசா” என்றனர்.

“அதையாவது என்கிட்ட சொல்லியிருக்கலாமில்ல?” என முறைக்க, மருத்துவர் வந்தார்.

“ஃபுட் சரியா எடுத்துக்கல, சரியா தூங்கவும் இல்ல, அதனாலதான் இப்படி ஆகியிருக்கு” என்றார்.

மருத்துவர் சென்றபின்னே, “நீ தொழில் பார்த்துக்கிட்டா தாமுக்கு பாரம் குறையுமில்ல இளவரசா?” என்றார்.

“தொழில் போனா போகட்டும் பாட்டி, யாருக்காக தொழிலை காப்பாத்தனும்?” என்றான் கோபமாக.

“எதுக்குடா இவ்வளோ கோபப்படுற? நான் என்ன சொல்லிட்டேன்?”

“அப்பா தொழிலை பார்க்கனும்னா என் வேலையை விடனும், அது பரவால்லையா?”

“இளவரசா” என தாமோதரன் உள்ளிருந்து குரல் கொடுக்க, பயந்தனர் தாமோதரனின் பெற்றோர்.

இளவரசன் வேலைக்கு போவது முன்பு தாமோதரனிற்கும் பிடிக்காமல்தான் இருந்தது. ஆனால் தற்போது அப்படியில்லை. மகள் மகனிடமாவது வாங்கிக்கொள்கிறாளே என்ற நிம்மதி இருக்கவே, இளவரசனின் சம்பாதனை மிக முக்கியம் என்பதை உணர்ந்திருந்தார். தனது பெற்றோரிடத்தும் இளவரசன் வேலைக்கு செல்வதை மறுத்து பேசக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார்.

ஆனால் இளவரசன் வெளியே வேலைக்கு செல்வதால் அவனும் வீட்டிற்கு வருவதே அரிதாகிப் போயிருக்க, சிதைந்த குடும்பம் இப்படியே போய்விடுமோ என்ற பயம் வந்தது தாமோதரனின் பெற்றோருக்கு.

செல்வி இளவரசனை ஏற்றிருக்கும் நிலையில் இளவரசன் குடும்பத் தொழிலை பார்த்தால் அவனை வைத்து சாம்பவியிடம் பேச வேண்டும். நீ வராவிட்டால் நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என்று இளவரசனை சொல்ல வைக்க வேண்டும்.

மகனுக்காக சாம்பவி வந்தால் பின்னாநாளில் செல்வியையும் வர வைத்திடலாம் என்ற எண்ணமிருக்க, தாமோதரனிற்கு முடியாமல் இருக்கும் இந்த நேரத்தில் இளவரசனிடம் சொன்னால் தந்தையின் தொழிலை கவனிக்க சிறிதேனும் யோசிப்பானோ என்று பேசினர்.

“அப்பா நீங்க எதுக்கு வரீங்க?” என்று விரைந்து தந்தையின் கையைப் பற்றியவன், “டிரிப்ஸை எடுத்துவிட்டுட்டு பேசுற அளவுக்கு என்ன வந்தது? உடம்பை பார்த்துக்கமாட்டிங்களா?” என்றான் கோபமாக.

“எதுக்கு இளவரசனை வேலையை விட சொன்னிங்க? இரண்டு நாள் முன்னதான அவ்வளோ சொன்னேன்? புரியலையா உங்களுக்கு?” என்றார் கோபமாக.

“முயற்சி பண்ணினா சாம்பவி வந்துடுவா தாமு. இப்படியே எவ்வளோ நாளைக்கு இருக்கிறது” என்றார் வேதனையாக.

“நீ போடுற ப்ளான்லாம் வேலைக்காகாதும்மா, என்ன செய்தாலும் சாம்பவி இங்க வரமாட்டா, இளவரசனுக்காக சாம்பவி வர நினைச்சா செல்வி அவங்கம்மாவையும் ஒதுக்கிடுவா, என்பொண்ணு பைத்தியம் ஆகிடுவாம்மா” என்றார் வேதனையோடு.

“இதை இப்போதான் சொல்றிங்களாப்பா?”

“முன்னாடியே சொல்லிட்டேன்டா, இவங்களுக்கு புரியவேமாட்டேங்குது”

“தாத்தா பாட்டிகிட்ட நான் பேசிக்கிறேன், நீங்க எதாவது சாப்பிடுங்க, கையெல்லாம் ஷிவர் ஆகுது” என்று பணிப்பெண்ணை உணவு எடுத்து வர பணித்தான்.

“எனக்கு வேண்டாம் இளவரசா, தொண்டைக்குள்ள போகமாட்டேங்குது”

“இப்போ வருந்தி ஒன்னும் ஆகப்போறதில்ல, நான் ஏற்கனவே நிறைய டென்ஷன்ல இருக்கேன். தயவு செய்து உடம்பை பார்த்துக்கோங்கப்பா” என்றான் கோபமாக.

சற்று நேர அமைதிக்கு பின்னே “சரி நான் கிளம்பட்டுமா?” என்றான் கோபம் குறைத்து.

“எவ்வளோ நாள் கழிச்சு வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம கூட கிளம்பறன்ற” என்றார் தாமோதரனின் அன்னை.

தாமோதரன் மொபைல் ஒளிரவும், அந்த பெண்ணாகத்தான் இருக்கும் என்ற கோபத்தோடு தந்தையிடமிருந்து மொபைலை பிடுங்கிப் பார்த்தான்.

மருமகன் என்று ஒளிர்ந்த போதும் பொற்செல்வனாக இருக்கும் என்று நினைக்க தோன்றவில்லை. அந்த பெண்ணிற்கு வேண்டப்பட்டவராக இருக்கும் என நினைத்து, அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டு கொடுத்தான் இளவரசன்.

“அடங்கவே மாட்டிங்களா நீங்க?” என்ற பொற்செல்வனின் குரலில் அத்தனை கோபமிருருக்கவே, இவரா? என அதிர்ந்தான் இளவரசன்.

“நான்… நான் ஒன்னும் பண்ணலையே” என்று தாமோதரன் சொல்ல,

“நீங்க சொல்லாமத்தான் மோகன், சுகன்யா, சந்தீப் மூணுபேரும் ஃபோட்டோஸ், வீடியோ எடுத்தாங்களா?” என்றதும் தடுமாறிப்போனார் தாமோதரன்.

“பதில் சொல்லுங்க” என பொற்செல்வன் கத்த, “இல்ல… பொண்ணு கல்யாணத்தை வீடியோவிலயாவது பார்க்கலாம்னு” என்ற தாமோதரனுக்கு அதற்குமேல் குரல் வரவில்லை.

“மன அழுத்தத்தோட எட்ஜ்ல இருக்கா செல்வி. உங்களை கல்யாணத்துக்கு வரவிடாம பண்றதைதான் அவளோ வெற்றியா பார்க்குறானு நான் அவ்வளோ சொல்லியும் இப்படி பண்ணியிருக்கிங்க.

செல்விக்கு இது தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுங்களா? கல்யாணத்தை நினைக்கும்போதெல்லாம் உங்க ஆளுங்க வீடியோ எடுத்ததும் நியாபகம் வரும். அதை நினைச்சே மெண்ட்டல் ஆகிடுவா. என் பொண்டாட்டியோட ஹெல்த்தான் எனக்கு முக்கியம், இனி உங்ககிட்ட பேசி பிரியோஜனம் இல்ல, செய்து காட்டினாத்தான் அடங்குவிங்க” என்று இணைப்பை துண்டித்தான்.

“செல்வா… நான் அப்படிலாம் நினைக்கல” என்று தாமோதரன் அலர, “அவர் கட் பண்ணிட்டார்” என்றவன் தந்தையை முறைத்தான்.

“இளவரசா… செல்விக்கு இப்படி ஆகனும்னு நான் நினைப்பேனாடா?”

“தயவு செய்து அழாதிங்கப்பா, வீடியோவும், ஃபோட்டோவும் நான் காட்டமாட்டேனா? செல்வன் சொன்னமாதிரி நடந்துட்டா நம்மளால செல்வியை அப்படி பார்க்க முடியுமா? கொஞ்சம் கூட யோசிக்கமாட்டிங்களா? என்கிட்டயாவது கேட்டிருக்கலாமில்ல?”

“நீயும்தான என்னை அவாய்ட் பண்ணின? நீ செய்யமாட்டேனு நினைச்சேன், வீடியோல கூட பொண்ணு கல்யாணத்தை பார்க்க முடியாதுன்ற பயத்துலதான் அவங்களை அனுப்பினேன், செல்வா கண்டுபிடிப்பான்னு நினைக்கல”

“இருபத்திநாலு மணி நேரமும் அவர் செல்வியோட ஹெல்த்தை பத்தி மட்டும்தான் யோசிக்கிறார். எப்படி கண்டுபிடிக்காம இருப்பார்?”

சுபாஷ்னியைப் பற்றி பொற்செல்வன் சொன்னதை செய்திடுவானோ என்ற பயம் வர, அதனை இளவரசனிடம் சொல்ல முடியாமல் தவித்தார் தாமோதரன்.

“டோன்ட் வொரிப்பா, பொற்செல்வன் உங்களை ஏதும் பண்ணமாட்டார்” என்றான்.

“இல்லடா, அது…” என தயங்க, “உங்களை எதோ ப்ளாக்மைல் பண்ணியிருக்கார்னு புரியுது. இல்லைனா நீங்களாவது செல்வி கல்யாணத்துல கலந்துக்காம இருக்கிறதாவது, கோபத்துல எதோ கத்திட்டார். யோசிக்காம எதையும் பண்ணமாட்டார், ஆனா இந்த மாதிரி முட்டாள்தனமா இனி யோசிக்காதிங்க” என்றான்.

இளவரசனுக்கு அழைப்பு வர, “செல்வாதான்” என அழைப்பை ஏற்றதும், “எங்கேடா இருக்க? இன்னைக்கு வீட்டுலதானே இருக்க சொன்னேன்?” என்றான்.

“அப்பாக்கு லோ பிபி ஆகி காலைல மயக்கம் போட்டுட்டாராம், பார்க்க போய்ட்டிருக்கேன், ட்டூ ஹார்ஸ்ல வந்துடறேன்” என்றான்.

“ஓ… அப்படியா? ம்ப்ச், நான் வேற… சரி நீ பாரு” என இணைப்பை துண்டித்தவன், மீண்டும் அழைத்து, “நீ வரனும்னு இல்ல, உன் அப்பாவை பாரு” என்றான்.

“கேட்டிங்களாப்பா? ஏதும் பண்ணமாட்டார்னு நான் சொன்னேன்ல? மறுவீட்டு விருந்துக்கு நான் இல்லைனா வரமாட்டேனு சொன்னவர், இப்போ உங்களை பார்த்துக்க சொல்றார். இதான் பொற்செல்வன். இப்போவாவது நிம்மதியா இருங்க” என்றான்.

தாமோதரன் முகம் அவமானத்தில் வாடிப்போனது. இப்படியெல்லாம் ஒருவர் முன்னே தலைகவிழ்ந்து நிற்போம் என்று கனவிலும் நினைத்ததில்லை. அதுவும் மருமகனிடம் எனும்போது அவமானம் தாளமுடியாமல் போக, “நீ சாப்பிடு நான் கொஞ்ச நேரம் படுக்கறேன்” என்றவர் மொபைல் மீண்டும் ஒளிர்ந்தது.

அழைப்பை துண்டித்தபடி தாமோதரன் அவர் அறைக்கு போக, பின்னோடு சென்றவன், “மொபைல் கொடுங்கப்பா” என்றான்.

“வேணாம் இளவரசா, இதுல தலையிட்டு நீயும் என்னை கொல்லாத, நான் பார்த்துக்கிறேன்”

“ஒரு பத்து நாளைக்கு பிஸ்னஸ்லாம் ஒதுக்கி வைங்க, கொஞ்ச நாளைக்கு அவுட் ஆஃப் ஸ்டேஷன் போகாதிங்க, தினமும் வீட்டுக்கு வந்திடுங்க. டேக் கேர்ப்பா, செல்வி என்னை தேடுவா, திரும்ப டைம் கிடைக்கும்போது வரேன்” என்று வெளியேறியவன், செவிலியர், பணிப்பெண்கள் தாத்தா பாட்டி என அனைவரிடத்தும் தந்தையை கவனித்துக்கொள்ள பணித்தான்.

பின்னே “எதுக்கு பாட்டி அம்மாவை வர வைக்க பார்க்குறிங்க? இத்தனை வருசமா இல்லாத பாசம் இப்போ வந்துடுச்சாக்கும்?” என்றான்.

“மருமக மாமியார்னா எங்க காலத்துல அப்படித்தான் இருந்தாங்க, நாங்க சொல்றதை கேட்குறத்துக்கும், எங்களைப் பார்த்துக்கிறதுக்கும்தான் மருமகள்னு நினைச்சோம். இத்தனை வேலைக்காரங்க இருக்கும்போது சும்மா நம்மளோட பேசிட்டிருக்கிறதுக்கு கூட வலிக்குமானு நினைச்சேன். சாம்பவி போன பின்னாடிதான் எங்களுக்காக எவ்வளோ பார்த்திருக்கானு புரிஞ்சது.

செல்வி இருந்தப்போ எங்க சின்ன வயசுல நடந்ததை பத்தி கேட்பா, கதை சொல்லு பாட்டினு பொழுது போறதே தெரியாது. அவளும் இல்ல. நீயும் வரதேயில்ல, தாமுவும் எப்போ வரான்? எப்போ போறானே தெரியமாட்டேங்குது. வேலைக்காரி சொன்னாத்தான் தெரியுது. வீட்டுக்குள்ளயே அநாதையா இருக்கோம்டா” என்றார் வேதனையோடு.

“இப்போவும் என் அம்மா செய்த வேலையை மிஸ் பண்றிங்களே தவிர்த்து, இல்லாதவன் பொண்ணுனு சொல்லி சொல்லியே வாழ வந்த பொண்ணை அவமானப்படுத்தினோம்ன்ற குற்றவுணர்ச்சி இல்ல.

உடம்புக்கு முடியாம அம்மா வீட்டுக்கு போனவங்களை ஒத்த வார்த்தை நல்லா இருக்கியானு கேட்டிருந்தா எங்களுக்காகவாவது அப்போவே வந்துருப்பாங்க. செல்விக்காகவும் எனக்காகவும் கூட என் அம்மாவை கூப்பிடனும்ன்னு தோணல. அவ்வளோ பணத்திமிரு ஆணவம்.

என் அப்பா கோடிகோடியா சம்பாதிக்கிறார்ன்றதுக்காக என் அம்மா தங்கத்தை சாப்பிடல, அவங்கப்பா வீட்டுல சாப்பிட்டதை போல இங்கேயும் மூணுவேளை சோறுதான் திண்ணாங்க.

இங்கயிருந்து போன பின்னாடி அந்த சோத்துக்கு இல்லாம இல்ல. தாத்தாபாட்டி கொடுத்த படிப்பை வச்சு கௌரவமான வேலை பார்த்து நிம்மதியா சாப்பிட்டுகிட்டு தன்மானத்தோட வாழ்றாங்க.

நீங்க இல்லாம என் அம்மாவால வாழ முடியும்னு காட்டிட்டாங்க, ஆனா என் அம்மா இல்லாம உங்களால இருக்க முடிஞ்சதா? யாரை நம்பி யார் இருந்தாங்கனு இப்போ புரியுதா?

பத்து வேலைக்காரங்க இருக்காங்க, என்ன பெருசா வேலை செய்திட்டானு கேட்பிங்களே… இன்னும் பத்து பேரை கூட வேலைக்கு வச்சுக்கோங்க. இனி என் அம்மாவை கேட்காதிங்க”

“இளவரசா… எங்களை மன்னிச்சிடுடா”

“என் அம்மாவை குறை சொல்லும்போது கண்மூடித்தனமா உங்களுக்கு சப்போர்ட் பண்ணாம, தப்பு எது நியாயம் எதுனு என் அப்பா யோசிச்சிருக்கனும். அப்பா தப்பான வழில போறார்னு தெரிஞ்ச பின்னாடியாவது அவரை நீங்க கண்டிச்சிருக்கனும். பொண்டாட்டி இங்க இருந்திருந்தா என் மகன் எதுக்கு தப்பு பண்ணப்போறானு அதுக்கும் என் அம்மாவைத்தான் திட்டுனிங்க.

என் அம்மா வாழ்கை உங்களாலதான் போச்சு, அதனால உங்களை மன்னிக்கவே முடியாது. ஆயிரம் தப்பு உங்க மேல இருந்தாலும் என் அப்பாவை பெத்துட்டிங்களே… என்ன பண்றது? என்னால உங்களை தண்டிக்கவும் முடியல” என்று வெறுப்போடு சொல்லி கிளம்பினான் இளவரசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!