பொற்செல்வன் வீட்டை விட்டு வெளியே வந்தவள், டிரைவரிடம் “கார் வேண்டாம், ஆட்டோவில் செல்கிறேன்” என்று சொல்ல, “உங்கம்மா கால் பண்ணி ஆஃபீஸ்க்கு கூட்டிட்டு வர சொன்னாங்கம்மா” என்றார் டிரைவர்.
அன்னைக்கு அழைக்க, “உன் பாஸ் உன்னை கூப்பிட்டாரில்ல? வந்து என்னனு கேளு. இல்ல… மரியாதையா இருக்காது” என்று இணைப்பை துண்டித்துவிட்டார். மீண்டும் அழைத்தால் அழைப்பை ஏற்கமாட்டார் என வேறு வழியின்றி அன்னையை காண கிளம்பினாள்.
அலுவலகம் வந்ததும், “இங்க எதுக்கு வந்த? உன் முதலாளியைத்தான பார்க்க சொன்னேன்” என கடுகடுத்தார் சாம்பவி.
வழக்கமாக தன்னிடம் பேசும்போது செல்வா தம்பி என்றுதான் சொல்வார். இன்று என்னவோ முதலாளி, பாஸ் என்று பேசுவது புதிதாக இருக்க, தன் மீதுள்ள கோபத்தின் வெளிப்பாடு மட்டுமல்லாது, பொற்செல்வனை உயர்த்திப் பேசுகிறார் என்றும் புரிந்தது.
Advertisement
“அவர் இந்த நேரம் ஆஃபீஸ்ல இருக்கமாட்டார், தோட்டத்துக்கு போயிருப்பார்” என்றாள்.
“பரவால்ல, வெய்ட் பண்ணி பார்த்துட்டு வா”
“ம்ப்ச் ம்மா, அதான் வீட்டுல வச்சு பேசியாச்சே. ஆட் பண்ண வைக்கத்தான் கூப்பிட்டிருக்கார். நாம மறுத்துட்டோம். இனி பேச என்ன இருக்கு?”
Advertisement
“வேலையை விட்டு போகப்போறயில்ல? முறைப்படி சொல்ல வேண்டாமா?” என முறைத்தவர், “அவர் கேட்டு நாம மறுத்தது தப்பில்ல. ஆனா அதை அவ்வளோ ஹார்ஸா சொல்ல வேண்டிய அவசியமென்ன? நீயும் அப்படி பேசுறவ இல்ல. என் பொண்ணைப் பத்தி எனக்கு தெரியாதா?
Advertisement
உனக்கும் செல்வாக்கும் தனிப்பட்ட பிரச்சனையா? இல்ல… வேற யார் முன்னாடியாவது நீ செய்யாத தப்புக்கு கடிஞ்சிட்டாரா தெரியல, அவர் பண்ணின எதோ ஒன்னு உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்குனு தெளிவா தெரியுது.
செல்வா நமக்கு முதலாளி மட்டுமில்ல, புருசன் வேணாம்னு வந்த பொம்பளைக்கு, அதுவும் வயசு பிள்ளையோட வந்த எனக்கு வேலையும் கொடுத்து, தங்க பாதுகாப்பான இடமும் கொடுத்து இத்தனை வருசமா கண்ணியமா நடத்தியிருக்காங்க.
“வேலை கொடுத்தாங்க ஒத்துக்கிறேன், உங்களுக்கு திறமை இருக்கப்போய்தானே இத்தனை வருசம் கன்டினிவ் பண்றிங்க, தங்கறத்துக்கு வீடு சும்மாவா கொடுத்திருக்காங்க? அதுக்கு வாடகை கொடுக்குறோம்தானே? கண்ணியமா நடந்துக்கிறதெல்லாம் பெருமை இல்ல, கடமை” என பொற்செல்வன் மீதான அன்னை பாராட்டுதலை ஏற்க முடியாமல் பதிலளித்து,
“நான் எந்த தப்பும் செய்யல, எனக்கென்ன தயக்கம்? போறேன். இங்க வேலை செய்ய இஷ்டமில்லை, எனக்கு பிடிச்ச மாதிரி வேலையை தேடிக்கிட்டேனு சொல்லிட்டே ரிலீவ் ஆகறேன்” என்று கிளம்பினாள் நடைப் பயணமாகவே.
பொற்செல்வனோடு பிரச்சனை வந்தபோதும், வெளியில் வேலைக்கு செல்வதில் அன்னையை சம்மதிக்க வைப்பது பெரிய சவாலாக இருக்க, அதனை இன்று நடந்த நிகழ்வு சாத்தியப்படுத்திவிட்டது.
பொற்செல்வனை தனியே சந்திப்பது பெரும் தயக்கம் என்றபோதும் அதையும் உடைத்து, அவனை நேரில் சந்தித்துவிட்டே சென்றிடலாம், பொற்செல்வனை சந்திக்காமல் சென்றால் அன்னையின் மனம் நிம்மதியடையாது என்று துணிந்துவிட்டாள்.
மகள் கோபத்தில் இன்னும் துடுக்காக பேசிவிடுவாளோ? அமிர்தாம்மா முன்னிலையிலேயே அப்படி பேசினாளே என்று தவித்தபடி அவசரமாக இருக்கையை விட்டு வெளியேறிய சாம்பவி, “செல்வி, நில்லு… எவ்வளோ தூரம் நடப்ப? என் வண்டியை எடுத்துட்டு போ” என்று கத்தினார்.
செல்வி நிற்காமல் செல்லவே, தன்னோடு வேலை செய்பவரின் டியோவை கேட்டு வாங்கிக்கொண்டு இரண்டே நிமிடத்தில் மகள் முன்னே போய் வழி மறைத்து நின்றார்.
“நாலு ஏக்கரா பக்கம் நடக்கனும், அப்புறம் நைட் வந்து கால் அமுக்கிவிட சொல்லி என் உயிரை எடுப்ப. எதுக்கு இவ்வளோ வெட்டி கோபம் உனக்கு?” என முறைத்தபடி வண்டியிலிருந்து இறங்கினார்.
“வெட்டிக்கோபம் இல்ல, உண்மைக்கோபம். அவங்க வீட்டுல பொண்ணுங்க இல்ல? நவீனா அக்கா, இல்ல கட்டிக்கப்போறவளை வச்சு ஆட் எடுக்க வேண்டியதுதானே? எவ்வளோ திமிர் இருந்தா என்னை ஆக்ட் பண்ண சொல்லுவார்? அதுவும் நான் மறுத்தும் கம்ப்பல் பண்றார்” என்றாள்.
“நாமதான் ஒத்துக்கலையில்ல, அப்புறம் எதுக்கு அந்த பேச்சு?” என்று மகளிடம் சாவியை நீட்டி, “பார்த்துட்டு வந்து இங்க வண்டியை விட்டுடு” என்றார்.
“அவர் ஆஃபீஸ்க்கு எப்போ வருவார்னு தெரியாது, நான் வர நைட் ஆனாலும் ஆகும். அதுவரை அந்தண்ணா வெய்ட் பண்ணுவாரா?”
அன்னை சொல்வது உண்மைதான். என்னை காக்க வைக்க மாட்டான்தான், ஆனாலும் அவன்மேல் உள்ள கோபத்தில் நான் ஏன் அவ்வளோ தூரம் நடக்கனும்? என்று தோன்ற, “கொடுங்க” என்று சாவியை வாங்கி அன்னையை அவரிடத்தில் விட்டுவிட்டு கிளம்பினாள்.
இப்படி காட்டுப் பகுதியில் பகலிலும் கூட தனியாக நடந்து வரக்கூடாது என்று வேலைக்கு சேரும்போதே பொற்செல்வன் அறிவுருத்தியிருந்தது நியாபகம் வர, ‘இவனைத் தவிர வேறு யாருக்கும் இங்கே பயம் தேவையில்லை’ என்று பொற்செல்வனை திட்டியபடியே பயணித்தாள்.
திட்டியபோதும் வண்டி வேகமெடுக்கவில்லை. பொற்செல்வன் மீது கோபம் இருந்த போதும், அவனை நேரில் பார்த்தால் உடலும் மனமும் ஏதோ செய்கிறது. எங்கே அவன் முன்னே அழுதிடுவோமா? அழுதால் அவன் தேற்றுவானோ? காதல் சொன்னதற்கு மீண்டும் மன்னிப்பு வேண்டுவானோ? தன்னை சரிசெய்ய முயற்சிப்பானோ? அதில் நாம் இளகிடுவோமா?
இல்லை விளம்பரத்தில் நடிக்க மறுத்த கோபத்தில் திட்டுவானோ? வேலையை விட்டு நிற்பதற்கு என்ன சொல்வானோ? இப்படி பல சிந்தனைகள் ஓடியது.
பொற்செல்வனோடு வாக்குவாதம் செய்யவும் பிடிக்கவில்லை. அவனோடு நேரம் செலவிடவும் பிடிக்கவில்லை. ஆனால் இங்கே வேலை செய்துவிட்டோமே, வேலையை விட்டு நிற்பதை அவனிடம் சொல்லித்தானே ஆக வேண்டும் என்று நிதர்சனத்தை நினைத்தபடி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தாள்.
“வா செல்வி, எவ்வளோ நாள் ஆச்சு உன்னை பார்த்து… ஆன்ட்டி ஃபீவர்னு சொன்னாங்க. இப்போ உடம்பு பரவால்லையா? இப்போவும் டல்லாத்தான் இருக்க. லீவ் எக்ஸ்டண்ட் பண்ணப்போறியா?” என்றாள் உடன் வேலை செய்யும் ப்ரியதர்ஷினி.
பொற்செல்வன் இருந்தால் இத்தனை சத்தமாய் பேசமாட்டாள் என்றுணர்ந்து, “சார் வெளில போயிருக்காரா?” என்றாள்.
“ம், எப்படி கண்டுபிடிச்ச? வந்து ஊக்காரு, சார் எப்போ வருவாருனு ராகுல்சார்கிட்ட கேட்கலாம்” என்றாள்.
“ம்” என்று அமர, மற்றவர்கள் நலம் விசாரித்தனர். ராகுலிடம் விசாரக்க, “எனக்கும் சார்கிட்ட பேச வேண்டியிருக்கு. எப்போவும் சொல்லிட்டுத்தான் போவார், இன்னைக்கு ஏதும் சொல்லல, கால் பண்ணினாலும் ரீச் ஆகல. அவரா கூப்பிடுவார்னு வெய்ட் பண்ணிட்டிருக்கேன்.
“ப்ரிஸவ் செக்ஷன்ல ஒரு மிஷின் ரிப்பையர் ஆகிடுச்சு, அதை சரி பண்ண வந்தவன் அநியாயத்துக்கு அமௌண்ட் கேட்குறான், கேட்டா சார்கிட்ட அமௌண்ட் பேசிட்டுத்தான் வந்தேனு சொல்றான், சார்கிட்ட கேட்காம எப்படி அவ்வளோ பணம் கொடுக்குறது?”
“எவ்வளோ சொல்றாங்க? உங்களுக்கு எவ்வளோ கொடுத்தா சரியா இருக்கும்னு தோணுது?” என விசாரித்து, ராகுல் நியாயமாக சொன்ன பணத்தை கேட்டுக்கொண்டவள், “அவருக்கு போன் செய்து சார் இவ்வளோதான் கொடுக்க சொன்னார், நீங்க சொன்ன அமௌண்ட் வேணும்னா, சார் வந்ததுக்கப்புறம் கால் பண்றேன், வந்து வாங்கிக்கோங்க. வர முடியலைனா ஜிபே பண்றேன்னு சொல்லி நம்பர் வாங்கிக்கோங்க” என்றாள்.
“சார்கிட்ட கேட்டுட்டுத்தான் வந்தேன். இன்னொரு இடத்துக்கு வேற ரிப்பையர் பார்க்க போகனும், பணம் வாங்காம போனா அவன் வேலை போய்டும்னு சொல்றான்”
“அந்தாள் நம்பருக்கு கால் பண்ணி கொடுங்க, நான் பேசுறேன்” என்று செல்வி சொல்ல, அந்த நேரம் ராகுலுக்கு பொற்செல்வனிடமிருந்து அழைப்பு வந்தது.
“சார்” என்றதும், “எதுக்கு கால் பண்ணியிருக்க?” என்றான்.
எதோ கோபத்தில் இருக்கிறான் என்று பொற்செல்வன் குரலே சொன்னது. ஆனாலும் விசயத்தை சொல்லியாக வேண்டுமே என்று பிரச்சனையை சொன்னவன், பொற்செல்வனின் கோபத்தை தணிக்க, “செல்வி வந்துருக்காங்க, உங்களை பார்க்கனுமாம் சார்” என்றான்.
கட்டுக்கடங்காத கோபம் அவள் மீது இருந்தபோதும், அதை ராகுலிடம் காட்ட விரும்பாமல், ராகுலுக்கு தேவையான விளக்கத்தை மட்டும் சொல்லி இணைப்பை துண்டித்தான்.
“சார் ரொம்ப டென்ஷன்ல இருப்பார் போல செல்வி, நீங்களும், உங்க அம்மாவும் சாரோட ஃபேமலி மெம்பர்ஸ் மாதிரி. இத்தனை நாள் கழிச்சு வந்துருக்க, ஆனாலும் நீ இங்க இருக்கனு சொன்னது அவர் மனசுல பதியல போல, மெக்கானிக்கிட்ட நான் பேசிக்கறேனு சொல்லிட்டு கட் பண்ணிட்டார், இன்னைக்கு ஆஃபீஸ் வரமாட்டாராம், வெளில இருக்காராம்” என்றான் ராகுல்.
பொற்செல்வன் தன்னை சந்திக்க வராதது செந்தமிழ்செல்விக்கு பெருத்த நிம்மதிதான். நான் போனேன், அவர் வெளில இருக்காராம் என்று அன்னையிடம் சொல்லிவிடலாம்.
“என்ன செல்வி யோசனை? கவனம் இங்க இல்ல போல” என ராகுல் கேட்க, “அவர்கிட்ட சொல்லிட்டு ரிலீவ் ஆகலாம்னு நினைச்சேன் சார்” என்றாள்.
“என்ன? வேலையை விட்டு போகப்போறிங்களா?”
ஆமாம் என்பதாய் தலையசைத்தவள், “பர்சனல் ரீசன்க்காகத்தான், வேற ஏதும் கேட்காதிங்க சார். செல்வா சார் வந்தார்னா சொல்லிடுங்க” என்றாள் கிளம்பும் தோரணையில்.
“எவ்வளோ பெரிய விசயம்? சார் இதை அக்ஸப்ட் பண்ணுவாரா என்னனு தெரியல. இன்னைக்கு இல்லைன்னா என்னம்மா? நாளைக்கு நேர்ல வந்து சொல்லிட்டு போங்க” என்றான்.
பிடிக்கலனு ரிலீவ் ஆக நினைச்சா அக்ஸப்ட் பண்ணித்தானே ஆகனும் என்று ராகுலுக்கு பதில் கொடுக்கத்தான் தோன்றியது, அப்படி சொன்னால் பொற்செல்வனுக்கும் தனக்கும் எதோ பிரச்சனை என்று தெரிய வரும், இவரிடம் எதற்கு வாக்குவாதம் என்று சரியென்பதாய் தலையசைத்து கிளம்பினாள் செந்தமிழ்செல்வி.