Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை அச்சம் நாணம்

ஆசை மீறும் நேரம் 3.1

அத்தியாயம் 3

சாம்பவி வீட்டிலிருந்து நடந்து வந்தாலே அரைமணி நேரத்தில் வந்திடலாம். கார் அனுப்பியும் இன்னும் வரவில்லை. பொற்செல்வன் வேறு ஒருமணி நேரமாக இங்கேயே அமர்ந்திருப்பது சாம்பவிக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கவே, மகளுக்கு அழைக்கலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் இருந்தார்.

சற்று நேரத்தில் பொற்செல்வனுக்கு அன்னையிடமிருந்து அழைப்பு வரவே, ஏற்றவன் “ஓஹ்… நான் வீட்டுக்கு வரேன், அவளை அங்கையே இருக்க சொல்லுங்க” என்று இணைப்பை துண்டித்து,



Advertisement

“ஆன்ட்டி, செல்வி எங்க வீட்டுக்கு போயிருக்கா. அம்மா கால் பண்ணினாங்க. வாங்க வீட்டுக்கு போவோம்” என்றான்.

“இங்க வர சொன்னா அங்க போயிருக்கா, நான் கால் பண்ணி இங்க வர சொல்றேன்”

“பரவால்லைங்க ஆன்ட்டி, அங்கையே பேசிடலாம், வாங்க” என்று சாம்பவியை அழைத்துக்கொண்டு கிளம்பினான் தனது வீட்டிற்கு.

Advertisement

இனி வேலைக்கு வரக்கூடாதென்று முடிவெடுத்திருப்பாள். தன்னிடம் பேசுவதை விட அன்னையிடம் பேசுவது சுலபம் என அங்கு சென்றிருக்கிறாள் என்று  புரிந்தது பொற்செல்வனுக்கு.

Advertisement

சாம்பவியை அழைத்துக்கொண்டு பொற்செல்வன் வீட்டிற்கு வர, “வா செல்வா, சாயங்காலம்தான் வருவேனு நினைச்சேன், பரவால்ல… இப்போவே வந்துட்ட, இந்த செல்வி என்ன சொல்றானு நீயே கேளு” என்றார் அமிர்தவள்ளி.

இரண்டு வாரம் கழித்து செந்தமிழ்செல்வியைப் பார்க்கிறான். எப்பொழுதும் போல அலங்காரமின்றி மிக அழகாக இருந்தாள். பல வருடங்கள் பார்க்காமல் இருந்தது போன்றிருந்தது. அவளில் இருந்து விலக மறுத்த விழிகளை பெரும் சிரமப்பட்டு விலக்கி, திரும்பிப் பார்க்க, “யாரைத் தேடுற செல்வா?” என்றார்.

சாம்பவிக்கு பெரும் பதட்டம். அங்கே வர சொன்னால் இங்கே வந்திருக்கிறாள். இவர்களிடம் என்ன சொல்லியிருக்கிறாளோ என்ற யோசனையோடு சாம்பவி வெளியிலேயே நின்றிருந்தார்.

Advertisement

“ஆன்ட்டியையும் கூட்டிட்டு வந்தேன்ம்மா” என்றவன், பணியாளிடம் சாம்பவியை அழைத்து வரும்படி சொல்லி, “முக்கியமான விசயம் பேசனும். அதுக்காகத்தான் ஆன்ட்டியையும் கூட்டிட்டு வந்தேன்” என்று தண்ணீர் எடுத்து பருகினான்.

சாம்பவி வர, அவரை வரவேற்ற அமிர்தவள்ளி, செல்வி சொன்ன விசயத்தை சொல்ல வர, “ம்மா, நான் பேசிடறேன்” என்று அன்னையை இடைமறித்தான் பொற்செல்வன்.

பின்னே சாம்பவியிடம் “நம்ம ப்ராடக்ட்டுக்கு ஆட் கொடுக்கலாம்னு இருக்கேன், உங்க பொண்ணு ஆக்ட் பண்ணினா நல்லா வரும்” என்றான்.

செந்தமிழ்செல்வி அதிர்ந்து விழிக்க, “ஆக்ட்டிங்கா? வேணாம் தம்பி, என்னை கொன்னே போட்டுருவாங்க” என்றார் சாம்பவி.

“நான் இருக்கும்போது உங்க மேல யார் கை வச்சிடுவாங்க?”

“இல்லங்க தம்பி, எனக்கே இதுல விருப்பமில்ல, உங்களுக்காக இதுக்கு சம்மதிச்சு, வேற யாரும் வாய்ப்பு கேட்டா என்ன பண்றது? மீடியா பக்கம் போய்ட்டா பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும், வசதியான வாழ்க்கை எங்களுக்கு வேண்டாம், நிம்மதியான வாழ்க்கை போதும்”

“மீடியா பக்கம் போனாத்தான பிரச்சனைகள் வரும்? நம்ம ப்ராடக்ட்டுக்கு மட்டும் ஆக்ட் பண்ணட்டும். வேற சான்ஸ் வந்தா அவாய்ட் பண்ணிடுங்க. பிடிக்காத விசயத்துக்கு நோ செல்றதுக்கு உங்க பொண்ணுக்கு நல்லாவே தெரியும்”

“எனக்கு ஆக்ட்டிங்லாம் தெரியாது, வராது” என்றாள் சன்னக்குரலில்.

“நீ ஆக்ட்டிங்கே பண்ண வேண்டாம், ஃபோட்டோ ஷுட் மாதிரிதான் இருக்கும், எனக்குத்தேவை உன்னோட க்ளீன் அண்ட் க்ளியர் ஃபேஸ்”

பொற்செல்வன் தன்னையே கூர்ந்து பார்த்திருப்பதை உணர்ந்தவள் விரைந்து இவ்விடம் விட்டு செல்ல நினைத்து “இல்ல, எனக்கு இதுல விருப்பம் இல்ல, என்னை விட உங்க ஃபியான்ஸே ரொம்ப அழகா இருக்காங்க, அவங்களை வச்சு ஆட் எடுத்துக்கோங்க” என்றவள்,

“ஆன்ட்டி எனக்கு பர்ச்சேஸ் பண்ணனும், நான் கிளம்பட்டுங்களா?” என்றாள் அமிர்தவள்ளியிடம்.

ஜெயப்ரதாவை வேண்டாம் என்று சொல்லவில்லை என்றபோதும், அவள்தான் மனைவியாக வேண்டும் என்ற நிலைபாடும் இல்லாமல் இருக்கும் நிலையில், தனது ஃபியான்ஸே என்று குறிப்பிட்டது, அதிலும் செல்வி சொன்னது சுத்தமாய் பிடிக்காமல் போக, “உன்கிட்ட பேசத்தான் வந்தேன், நான் இன்னும் பேசி முடிக்கல” என்றான் முறைப்பாக.

செந்தமிழ்செல்வி நின்றேயிருக்க, அவளிடம் அமரும்படி சோபாபுறம் கை நீட்டி, தானும் அமர்ந்தவன் “ம்மா, குடிக்க எதாவது கொண்டு வர சொல்லுங்க” என்றான்.

சாம்பவியும் செந்தமிழ்செல்வியும் சங்கடத்தோடு அமர்ந்திருக்க, “ஆக்ட்டிங்கு ஆளில்லாம உன்னை கேட்கல, ஜெயப்ரதா மட்டும் இல்ல… என் தாத்தாவோட ஒர்க் பண்ணினவங்களோட வாரிசுகள் நிறைய பேர் இன்னும் டச்லதான் இருக்காங்க.

எல்லார் ஃபேமலிலயும் பொண்ணுங்க இருக்காங்க. ஆக்ட்டிங் சான்ஸ்க்காக வெய்ட் பண்ணிட்டிருக்கவங்களும் நிறைய பேர் இருக்காங்க. ஆனா எனக்கு நீதான் ஆக்ட் பண்ணனும்” என்றான்.

சாம்பவி செந்தமிழ்செல்வி இருவரும் அமைதியாக இருக்க, “புது முகமா இருக்கனும். அதே நேரம் நம்ம ப்ராடக்ட்டுக்கு நடிச்ச பின்ன வேற ஆட் ஏதும் நடிக்காதவங்களாவும் இருக்கனும். ஜெயப்ரதா நல்ல அழகுதான். ஆனா நம்ம ஆட்க்கு சூட் ஆகமாட்டா. பார்லருக்கு போறது அவ ஃபேஸ்ல நல்லா தெரியும்.

உன் ஃபேஸ்தான் நேச்சர் பியூட்டி. நீ ஆக்ட் பண்ணினா மட்டும்தான் நம்ம ப்ராடக்ட் டெலிவிஷன்ல வரும். இல்லைனா ஆட் எடுக்கப்போறதில்ல. எனக்கு எந்த விளக்கமும் இனி வேணாம். ஸே… எஸ் ஆர் நோ” என்றான்.

‘விருப்பம் இல்லைனு கொஞ்ச முன்னதான சொன்னேன்? அதுக்கு பேர் நோதான? இவன் திரும்பவும் முதல்லயிருந்து ஆரம்பிச்சி கன்வின்ஸ் பண்ண பார்த்துட்டு, நம்மகிட்ட இனி விளக்கம் வேணாம்னு சொல்றான்’ என மனதில் கடுகடுத்தாள் செந்தமிழ்செல்வி.

தனது தயாரிப்பிற்கு விளம்பரம் செய்யும் எண்ணமெல்லாம் எப்பொழுதும் இருந்ததில்லை பொற்செல்வனுக்கு. தற்போதே வியாபராம் நன்றாகத்தான் இருக்கிறது.

அந்நிகழ்விற்கு பின்னே இவளை எவ்விதத்திலும் நான் தொல்லை செய்யவில்லையே, பிறகு ஏன் தன்னிலிருந்தும் பணியிலிருந்தும் விலகப்பார்க்கிறாள்? என்ற கோபத்தில், இவளை எப்படியாவது தங்கள் குழுமத்தோடே தக்க வைக்கும் எண்ணம் தீவிரம் பெற, அதற்கான வழிமுறையாக விளம்பரம் எடுக்கும் யோசனைக்கு வந்தான்.

இத்தனை சொல்லியும் சம்மதிக்காமல் அழுத்தமாக அமர்ந்திருப்பவளையே உறுத்துப்பார்த்திருந்தான் பொற்செல்வன்.

தான் வெளியே வேலைக்கு செல்வது அன்னைக்கு பிடிக்கவில்லை, நீங்கள் எடுத்துரைத்தால் அம்மா சம்மதிப்பார்கள் என்று அமிர்தவள்ளியிடம் கோரிக்கை வைத்திருந்தாள் செந்தமிழ்செல்வி.

“செல்வி வெளில வேலைக்கு போறது உனக்கு பிடிக்கலனு சொன்னியாமே, இந்த காலத்துல யாரையும் நம்ம முடியாதுனுதான் அப்படி சொல்லியிருப்ப. நம்ம கம்பெனிக்கு செல்வி நடிச்சா, அவ பக்கத்துல நெருங்க யாருக்கும் தைரியம் வராது சாம்பவி. அதுக்கப்புறம் நீ பயமில்லாம வெளில அனுப்பலாம். செல்விக்கு சொல்லி புரிய வை” என்றார் அமிர்தவள்ளி.

“அம்மா சொன்னாலும் நான் சம்மதிக்கமாட்டேன் ஆன்ட்டி. நான் யாருக்கும் பயப்படல. ஆனா இந்த ஆட் வந்தா கண்டிப்பா என் அப்பா சும்மா இருக்கமாட்டார். என்னை திட்டினா பரவால்ல, அம்மாவை டார்ச்சர் பண்ணுவார். சண்டை போட கூட அவர் என் அம்மாவை பார்க்குறது எனக்கு பிடிக்காது. ப்ளீஸ் ஆன்ட்டி. என்னை மன்னிச்சுடுங்க” என்றாள் பணிவாகவே.

“அப்படி பிரச்சனை வராம நான் பார்த்துக்கிறேன்” என்றான் பொற்செல்வன்.

“எந்நேரமும் எங்கம்மா பின்னாடி உங்களால இருக்க முடியுமா? அதோட என் அப்பா பத்தி உங்களுக்கு தெரியாது. நான் ஆக்ட் பண்ணினா அப்பா மட்டுமில்ல, மற்ற சொந்தங்களும் கூட என் அம்மாவைத்தான் திட்டுவாங்க.”

“அதைத்தான் நான் பார்த்துக்கிறேனு சொல்றேன்” என்றான் மீண்டும்.

இத்தனை சொல்லியும் மீண்டும் கேட்கிறானே என்று கோபம் வர, “நீங்க எதுக்கு பார்க்கனும்? என்னயிருந்தாலும் அவர் என் அப்பா. பதிமூணு வயசு வரை என்னை ராணி மாதிரி பார்த்துக்கிட்டவர். நான் எந்த துறையில போகனும்னு முடிவெடுக்க அவருக்கு உரிமை இருக்கு. அவர் உரிமையை நான் ஏத்துக்கிறேனா இல்லையான்றது எங்களோட தனிப்பட்ட விசயம்” என்றாள் படபடவென.

செல்வி இப்படி பேசி பார்த்ததில்லை அமிர்தவள்ளி. “ஆன்ட்டி ஆஃபீஸ் போலாம் வாங்க” என்று விருட்டென வெளியேறினான் பொற்செல்வன்.

செய்வதறியாது திகைத்திருந்த சாம்பவி, மகள் பேசியதற்கு அமிர்தவள்ளியிடம் இருகை கூப்பி மன்னிப்பு வேண்டியபடி செய்கை செய்து பொற்செல்வன் பின்னே சென்றார் வேகமாக.

செல்வி “என்னை மன்னிச்சுடுங்க ஆன்ட்டி” என்றாள் கண்ணீரோடு.

“நீ இப்படி பேசுற பொண்ணு கிடையாது, விளம்பரத்துக்கு நடிக்க விருப்பமில்லைன்றது மட்டும்தான் பிரச்சனைன்ற மாதிரி எனக்கு தெரியல, செல்வா உன்னை எதாவது கோபமா பேசிட்டானா செல்வி? அவன் மேல ரொம்ப கோபமா இருக்க மாதிரி எனக்கு தோணுது” என்றார் அமிர்தவள்ளி.

“அப்படிலாம் ஏதும் இல்லைங்க ஆன்ட்டி”

“ஹம்… உன் அம்மா நல்லா வாழ்ந்தவ, உனக்காகத்தான் இப்படி உழைச்சிட்டிருக்கா. அவ மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்துக்காத. ஏற்கனவே உன் அப்பாவால ரொம்ப நொடிஞ்சு போயிருக்கா” என்றார்.

செந்தமிழ்செல்வி அதிர்வாக பார்க்க, “எனக்கு எல்லாம் தெரியும். எதுனாலும் என்கிட்ட சொல்லிடுவா” என்றார்.

தனக்கு தெரிந்த விசயம் அன்னைக்கும் தெரிந்திருக்குமோ என்று செந்தமிழ்செல்விக்கு இன்னும் மனம் வலித்தது. செந்தமிழ்செல்வியின் வருந்திய முகம் கண்டு, “கொஞ்ச நாளாவே நீ வீட்டுக்கு வரதை குறைச்சிக்கிட்ட. எங்களை விட்டு விலகுற மாதிரி தெரிஞ்சது. எதோ மனவருத்தத்துல இருக்க… சரியாகிடுவனு நினைச்சேன்.

நீ வெளில வேலைக்கு போவேனெல்லாம் நினைச்சே பார்க்கல. இங்கயிருந்து போறதுனா அது உன் புகுந்த வீடாத்தான் இருக்கும்னு நினைச்சேன். இங்க இருக்க பாதுகாப்பு, சம்பளமும் சரியாத்தான் இருக்குனு எனக்கு நம்பிக்கை இருக்கு.

அதையும் தாண்டி வெளில போறேனு சொல்லும்போது ரொம்ப வருத்தமா இருக்கு செல்வி. என்ன காரணமா இருக்கும்னு ரொம்ப அதிர்ச்சியாவும் இருக்கு.

எனக்கு ஒன்னே ஒன்னும் மட்டும் சொல்லு. நீ போறதுக்கு என் மகனோ, இல்ல அங்க வேலை செய்யிறவங்களோ காரணமில்லைதானே?” என்றார் பரிதவிப்பாக.

“இல்ல ஆன்ட்டி” என்றாள்.

செந்தமிழ்செல்வி சொன்ன விதம் திருப்தியில்லாமல் போக, “வேற யாராவது தொல்லை கொடுக்குறாங்களா?” என்றார்.

“இல்ல ஆன்ட்டி”

“வேற என்ன காரணத்துக்காக வெளில வேலை பார்க்க நினைக்கிற? இங்க என்ன பிரச்சனை உனக்கு?”

உன் மகனால்தான் என்றா சொல்ல முடியும்? ஏதும் சொல்லாமல் செல்ல அமிர்தவள்ளி விடமாட்டார் என்றும் அறிவாள். “எனக்கு என் அப்பாவை கொஞ்சம் கவனிக்க வேண்டியது இருக்கு ஆன்ட்டி. அம்மாவோட இருந்துட்டு அப்பாவை மீட் பண்ணினா, இதான் சாக்குனு அம்மாவை அவரோட இழுக்கப் பார்ப்பார்” என்றாள்.

சாம்பவியின் பிரச்சனைகள் அனைத்தும் அறிந்தவர் அமிர்தவள்ளி. இப்படி சொன்ன பின்னே என்ன சொல்வார்? செந்தமிழ்செல்வியின் தந்தை கோடீஸ்வரன் என்றறிவார். இவள் எதோ முயற்சி எடுக்கிறாள், அதன்மூலம் இவளுக்கு உரிமையான சொத்தோ, பணமோ கிடைத்தால் செல்வியின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லதுதானே என்று அமைதியாகிவிட்டார்.

“இதுக்காகத்தான் வெளில வேலைக்கு போறேன்னு அம்மாக்கு தெரியாது ஆன்ட்டி”

“நான் சொல்லமாட்டேன் கவலைப்படாத. உன் முயற்சி நல்லதா முடியட்டும்,  அதேநேரம் எதாவது பிரச்சனைன்னா எனக்கு கால் பண்ண யோசிக்காத.” என்றார் அக்கறையாக.

பிறகு, எங்கு வேலை செய்யப்போகிறாள்? சம்பளம், பாதுகாப்பு என அனைத்தும் கேட்டறிந்து அனுப்பி வைத்தார் செந்தமிழ்செல்வியை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!