Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 4.2

மாலை வீட்டிற்கு சென்றதும் நவீனாவிடம் “டிவோர்ஸ்க்கான காரணம் என்ன?” என்றான்.

“எனக்கு அவரோட வாழப்பிடிக்கல”

“டிவோர்ஸ் செய்து எத்தனை நாளுக்குள்ள மறு கல்யாணம் செய்துக்கப்போறிங்க?” என்றதும் அதிர்ந்து பார்த்தாள் பொற்செல்வனை.

நவீனாவின் அதிர்வு நிம்மதியை கொடுக்க, “சொல்லுங்க அண்ணி” என்றான்.



Advertisement

“அப்படி எண்ணம் எனக்கு இல்லை” என்றாள்.

விவாகரத்து கேட்பது அண்ணி அல்ல, அண்ணனாகத்தான் இருக்கும், அதிலும் அண்ணியாக கேட்கும்படி எதையோ சொல்லி வற்புறுத்தியிருக்கிறார் என்று நவீனாவின் முகமே சொன்னது. இவ்விசயத்தை நன்கு ஆலோசித்துதான் சரி செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

“உங்களுக்கு டிவோர்ஸ்தானே வேணும்? இன்னைலயிருந்து அண்ணனை டிவோர்ஸ் செய்ததா நினைச்சிக்கோங்க, இங்க உங்களுக்கு தனி ரூம் அரேன்ஜ் பண்ணிக்கலாம், அவர் முகத்திலயே முழிக்காத படி.

Advertisement

“இல்ல… அப்படிலாம் என்னால இருக்க முடியாது, லீகலா டிவோர்ஸ் பண்ணியாகனும்”

Advertisement

“ம்… யார் என்ன சொன்னாலும் டிவோர்ஸ் முடிவுல காம்ப்ரமைஸ் ஆகாத அளவுக்கு அண்ணா உங்களை நல்லா ட்ரைன் பண்ணியிருக்கார்” என்றான்.

கொழுந்தன் புரிதலில் நெகிழ்ந்தவளுக்கு இப்படி குடும்பத்தோடு வாழ கொடுத்து வைக்கவில்லையே என்று கண்ணீர் வெளிவந்ததே அன்றி உண்மையை சொல்ல மனம் வரவில்லை.

“உங்களை டிவோர்ஸ் பண்றது வேணும்னா அவர் இஷ்டத்துக்கு செய்யலாம். இந்த வீட்டை விட்டு வெளில போக சொல்ல அண்ணாக்கு உரிமை கிடையாது, அவர் ஒன்னும் விருப்ப கல்யாணம் செய்து உங்களை கூட்டிட்டு வரல, அப்பாம்மா, பெரியவங்க பார்த்து ஊரறிய செய்து வச்ச கல்யாணம்.

Advertisement

மொத்த குடும்பத்துக்கும் உங்க மேல அக்கறை இருக்கு, உங்க புருசனுக்கு உங்களை பிடிக்கலையேனு வருத்தப்படுறதை விட்டுட்டு உங்களை பெத்த மகளா நினைக்கிற என் அப்பாம்மாவை யோசிச்சு பாருங்க” என்றான்.

“எனக்கு இந்த குடும்பத்துல யார் மேலயும் வருத்தமில்ல, குறையும் இல்ல. அதுக்காக அவரை டிவோர்ஸ் பண்ணும் முடிவை என்னால மாத்திக்க முடியாது” என்றாள் மீண்டும்.

வாழ்க்கை பறிபோகும் நிலையிலும் கணவனை விட்டுக்கொடுக்காத அண்ணியின் மீது கோபம் வர, “டிவோர்ஸ் கடையில வாங்குற பொருளா? கேட்டதும்லாம் கிடைக்காது, உங்க மொபைல் கொடுங்க” என்றான் அதட்டலாக.

நவீனாவின் முகம் மறுப்பை காண்பிக்க, “அண்ணாகிட்ட பேசத்தான் கேட்குறேன், ஜஸ்ட் ஒரு ரிங், வேற ஏதும் பார்க்க மாட்டேன்” என்றான்.

“இல்ல, வேண்டாம், அவர் தப்பா நினைப்பார்”

“டிவோர்ஸ் பண்ணப் போறவர்தானே? தப்பா நினைச்சா நினைக்கட்டும், கொடுங்க” என்றான்.

நவீனா மீண்டும் மறுக்க, “உங்களுக்கு டிவோர்ஸ் வேணும்தானே?” என்றான்.

ஆமாம் என்பதாய் தலையசைத்தவளின் சிரம் தாழ்ந்து போனது வேதனையில். அது புரிந்தபோதும் “அப்போ கொடுங்க” என்று கையை நீட்டினான்.

நவீனா மொபைலை கொடுக்கவே, தேவராஜிற்கு அழைத்தான். தேவராஜ் அழைப்பை ஏற்காமல் போகவே, மீண்டும் அழைக்கப்போக, அதில் செந்தமிழ்செல்விக்கு நவீனா அழைத்திருப்பது தெரிந்தது.

அண்ணி சற்று இயல்பாக பேசுவது செந்தமிழ்செல்வியிடம் மட்டும்தான் என்று அன்னை சொன்னது நினைவு வர, “நேர்ல பேசிக்கறேன், இப்போ அட்டன் பண்ணமாட்டேங்குறார்” என்று மொபைலை நவீனாவிடம் கொடுத்து தனதறைக்கு சென்றான் பொற்செல்வன்.

அண்ணிக்கு அண்ணனை பிரிவதில் விருப்பமில்லை, ஆனாலும் டிவோர்ஸ் பண்றதுல ஸ்ட்ராங்கா இருக்காங்க, அண்ணாக்கு பிடிக்கலைனா அவர்தானே டிவோர்ஸ் கேட்கனும், அண்ணியை ஏன் கேட்க வைக்கிறார்? என யோசித்திருந்தான்.

“செல்வா…”

“என்னம்மா?”

தேவராஜின் விவாகரத்து விசயம் அறியாத அமிர்தவள்ளி, “வயிறுனு ஒன்னு இருக்கு, மறந்தே போய்ட்டியா? அப்படி என்னடா வேலை? உடம்பு என்னத்துக்கு ஆகுறது?” என்றார் கோபமாக.

“ம்ப்ச்…” என முணகியபடி வெளியே வந்தான்.

மகனை முறைத்த அமிர்தவள்ளியின் கண்கள் சில நொடிகளிலேயே கலங்கிவிட, “ம்மா என்னாச்சு? இப்படி வாங்க” என்று அன்னையின் அறைக்கே அழைத்துபோய் அமர வைத்து தானும் அருகே அமர்ந்தான்.

“மதியம் கொடுத்தனுப்பிய சாப்பாட்டையும் சாப்பிடல, இப்போவும் வீட்டுக்கு வந்ததும் உள்ள போய்ட்ட, சாப்பிட கூட நேரமில்லாமலாம் இருக்காது. சாப்பிட தோணாம இருக்க. என்னதான்டா பிரச்சனை? நீயும் தேவராஜ் மாதிரி அமுக்கமா மாறிட்டு வர” என்றார் பெரும் வேதனையாக.

“இப்போ நான் சாப்பிடனும், அவ்வளோதானே? இதுக்கு போய் அழுவிங்களா? வாங்க” என்றபடி ஹாலுக்கு வந்தான்.

பணியாள்கள் பதார்த்தங்களை எடுத்து வைக்க, மகனுக்கு பறிமாறினார். பொற்செல்வன் உண்டு முடிக்கும் தருணத்தில், “மருமககிட்ட பேசுனியா செல்வா?” என்றார்.

பேசினேன் என்பதாய் தலையசைக்க, “பொய் கூட பேசுவியா நீ” என்றார் வருத்தமாக.

அன்னையை ஊன்றிப்பார்த்தவன், “ஜெயப்ரதாக்கு கால் பண்ணுங்க” என்றான்.

“வேண்டாம், வேண்டாம்”

“பொய் செல்றேனு சொன்னிங்கள்ல? கால் பண்ணுங்க, உங்க முன்னாடியே பேசுறேன்”

“நீயே கால் பண்ணு, உன்கிட்ட நம்பர் இருக்கும்ல?”

இவன் ஜெயப்ரதாவிற்கு அழைத்து, “நாம மீட் பண்ணினோமா இல்லையா?” என்றான்.

“ம்” என்று சொல்ல, “நல்லா சத்தமா சொல்லுங்க, மொபைல் ஸ்பீக்கர்ல இருக்கு, என் அம்மா டௌட் கிளியர் பண்ணனும்” என்றான் கட்டளையாக.

“மீட் பண்ணினோம், பேசினோம்” என்றாள்.

இணைப்பை துண்டிக்கவும், “கட்டிக்கப்போறவகிட்ட அன்பா பேசனும், இப்படி விசாரணை போல பேசினா, பேசினாலும் பேசுலனுதான் சொல்லுவா” என்றார் முறைப்பாக.

பழைய காதலனோடான பிரச்சனையை சரி செய்யாமல் தன்னைப்பற்றி அன்னையிடம் குறை சொல்லியிருக்கும் ஜெயப்ரதா மீது மிகுந்த அதிருப்தி உண்டானது.

அன்னையோடு இந்த பேச்சினை தொடர பிடிக்காமல், “கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளோ பேசனுமோ அவ்வளோதான் பேச முடியும். அவனு இல்ல, யாரை கட்டிக்கிட்டாலும் கல்யாணத்துக்கப்புறம் சந்தோசமாத்தான் இருப்பேன், நீங்களா ஒன்னு நினைச்சிக்கிட்டு உங்களையும் வருத்திக்கிட்டு என்னையும் டென்ஷன் பண்ணக்கூடாது” என்று அன்னைக்கு கட்டளையிட்டு வெளியேறினான்.

*** *** *** ***

இன்று சனிக்கிழமை. அலுவலகம், தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்குத்தான் மாத சம்பளம். தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு வார ஊதியம்தான். வேலையை முடித்துக்கொண்டு அனுமதி பெற்று மதியமே வந்துவிட்டார் வீட்டிற்கு சாம்பவி.

மகள் அருகே இல்லாமல் இருப்பது சாம்பவிக்கு பெரும் வேதனையை உண்டாக்கியிருந்தது. இங்கேயே எங்காவது வேலைக்கு செல்வாள் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால் சென்னைக்கு செல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை.

சாம்பவி தற்போது வசிப்பது பொள்ளாச்சியில். கணவன் வீடு கோயமுத்தூர். ஆனால் சென்னையிலும் இரண்டு ஸ்டார் ஹோட்டல்கள் இருப்பதால் இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது சென்னை சென்று வருவார். செந்தமிழ்செல்வி சென்னைக்கு சென்றிருப்பது தெரிந்தால், என்னென்ன பிரச்சனைகள் வருமோ என்று அத்தனை பயம் கொண்டிருக்கிறார்.

கணவன் மேலுள்ள பயத்தோடு மகள் சென்னையில் தனியாக எப்படி சமாளிப்பாள் என்ற பயமும் சேர்ந்துகொள்ள, இங்கே எந்த வேலையிலும் கவனம் செலுத்தமுடியாமல் தவித்தார்.

மகள் சென்று இரண்டு வாரம் ஆகியிருக்க, தனிமை வேதனையை அதிகப்படுத்தியது. ஏதேதோ யோசனைகளுக்கு பிறகு, இனி என்ன ஆனாலும் சரி, மகளுக்கு வரன் பார்ப்பதே சரி. அவளின் தந்தை பிரச்சனை செய்தால் அதையும் சமாளித்துதான் ஆகவேண்டும்.

இப்படி அவள் ஒரு பக்கம் நானொரு பக்கம் என்று இருப்பதற்கு பதிலாக திருமணம் செய்து வைப்பது சிறந்தது என்ற முடிவிற்கு வந்த பின்னே டீ வைக்க எழுந்தார்.

“ம்மா எனக்கும் சேர்த்து வை” என்ற மகளின் குரலில் இன்ப அதிர்வோடு திரும்பிய சாம்பவியின் கண்கள் கலங்கியது. அனைத்து கோபமும் மறந்தவராய் பேரன்போடு அணைத்துக்கொண்டார் மகளை.

செந்தமிழ்செல்விக்கும் அன்னையை பிரிந்திருப்பது சிரம்மாகத்தான் இருந்தது. ஆனால் பொற்செல்வன் முகத்தில் விழிக்காமல் இருப்பது பெரும் ஆறுதலை தர, அன்னையின் பிரிவை தாங்கிக்கொண்டாள்.

தான் அருகில் இல்லாதது அன்னைக்கு மிகுந்த வேதனையளிக்கும் என்று அறிந்தவள் ஆகையால், “அதான் வந்துட்டேன்லம்மா? அழாத” என்று அன்னை முதுகை வருடிக்கொடுத்தாள்.

“காலைல கூட இன்னைக்கு வேலையிருக்குனு சொன்ன? எப்போ கிளம்பின? எப்படி இந்த நேரத்துக்கு வர முடிஞ்சது?”

“சென்னை ட்டூ கோவைக்கு இரண்டரை மணிக்கு ஃப்ளைட் இருந்தது. காலைல ஆஃபீஸ் போய் வேலையை முடிச்சிட்டு, ஒன்றரை மணிக்கு ஏர்போர்ட் வந்தேன், நாலு பத்துக்கு கோவை ரீச் ஆகிட்டு, அஞ்சரை மணிக்கு பொள்ளாச்சிக்கு டீ குடிக்க வந்துட்டேன்” என்று கண்ணிமைத்தாள் இன் முகத்தோடு.

“எப்படி லீவ் கொடுத்தாங்க?”

“லீவ்லாம் கொடுக்கல, நாளைக்கு சன்டே லீவ்”

“அப்போ நாளைக்கு கிளம்பிடுவியா?”

“ப்ச் ம்மா, நான் எப்படி இருக்கேனு கேட்காம மத்ததை கேட்டுட்டு இருக்கிங்க”

“நீ எப்படி இருப்ப? உன் விருப்பத்துக்கு போன, நல்லாத்தான் இருப்ப. நான்தான் இங்க அல்லாடிட்டிருக்கேன்” என்று கோபமாக சொன்னபோதும் “இங்கையே வந்துடு செல்வி, என்னால தனியா இருக்க முடியல” என்றார் கெஞ்சலாக.

“எனக்கும் கஷ்டமாத்தான்ம்மா இருக்கு, இந்த மந்த் முடிஞ்ச பின்ன ஒர்க் ஃப்ரம் ஹோம் கேட்டு பார்க்கிறேன், அலவ் பண்ணுவாங்கனுதான் சொல்றாங்க”

“நாளைக்கே போறதுக்கு எதுக்கு அலைச்சல் பட்டிட்டு இருந்த, ரெஸ்ட் எடுத்திருக்கலாமில்ல?”

“துணி துவைக்க கத்து கொடுக்காம விட்டுட்டிங்க, அப்புறம் எங்க அங்கயிருந்து ரெஸ்ட் எடுக்கிறது?”

“அப்போ துணி துவைச்சிட்டு போகத்தான் வந்தியா?” என சாம்பவி முறைக்க,

“ஃப்ளைட் பிடிச்சி வர செலவுக்கு ஒரு மெய்ட் வச்சி துவைச்சிக்க தெரியாதா? உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்” என இவளும் முறைக்க, சாம்பவி முகம் நிம்மதியானது.

“போய் முகம் கை கழுவிட்டு வா, டீ வச்சு எடுத்து வரேன்” என்று மகளை அனுப்பிவிட்டு டீ வைத்து எடுத்து வந்தார்.

மகள் வந்ததும் ஊற்றிக்கொடுத்தவர், அதீத சிந்தனையோடு தேநீர் பருகினார் அவசரமில்லாமல்.

“என்னம்மா யோசனை?”

“ஹம்… யோசனைதான், நாளைக்கே ஊருக்கு போற, அதனால முக்கியமான விசயங்களை பேசியாகனும். அதுக்கு முன்னாடி அங்க சாப்பாடு, தங்கற இடத்துலலாம் பிரச்சனை ஏதும் இல்லையில்ல?”

“நான் சென்னைக்கு போனதுலயிருந்து எத்தனை முறை சொல்லியிருப்பேனு கணக்கேயில்ல, நீ எதோ பேச நினைக்கிற, அதை சொல்லும்மா, அங்க நான் சேஃபாதான் இருக்கேனு உனக்கு தெரியாதா?”

“ம்… பேசறேன். உன் மனசுல உள்ளதை நீயும் மறைக்காம சொல்லனும்”

சரியென்பதாய் தலையசைக்க, “நீ எதோ முக்கியமான காரணத்துக்காகத்தான் இங்கயிருந்து போயிருக்க. ஆனா என்கிட்ட சொல்லல. முதல் முறையா என்னை அவாய்ட் பண்ணியிருக்க” என்றதும்,

“ம்மா அப்படி இல்லம்மா, உன்னை அவாய்ட் பண்ணிட்டு நான் எங்க போகப்போறேன்?” என்றாள் கலக்கத்தோடு.

மகளின் கலக்கத்தை போக்கவெல்லாம் தோன்றவில்லை சாம்பவிக்கு. “சுத்தி வளைக்காம விசயத்துக்கு வரேன். உனக்கு நான் மாப்பிள்ளை பார்க்கலாமா? இல்ல அப்பாகிட்ட சொல்லி ஏற்பாடு செய்யவா?” என்றார்.

தந்தையை தனக்கும் பிடிக்காது என்று அறிந்தும் அன்னையின் பேச்சு கோபத்தை உண்டாக்க, “எனக்கு கல்யாணமே வேண்டாம்” என வெடித்தாள்.

“உன்னை தனியா விட்டுட்டு என்னால இருக்க முடியல, புருஷனுக்கு அடங்காம பிள்ளையை கூட்டிட்டு போய், பிள்ளையையும் அவளை மாதிரியே வளர்த்தியிருக்கானு உங்க அப்பாகிட்டயும், தாத்தா பாட்டிகிட்டயும் பேச்சு வாங்க எனக்கு சக்தியில்ல.

அதைவிட முக்கியமா உன் மனசுல என்னவோ இருக்கு. அதுனால பிரச்சனை இல்லைனா பரவால்ல, எதாவது பிரச்சனை இருந்து அதுவே உனக்கு பெரிய தலைவலியா மாறிடுச்சுனா என்னால நிம்மதியா இருக்க முடியாது. என்ன பிரச்சனைக்காக வெளில வேலைக்கு போக முடிவெடுத்தனு புரியாம எனக்கு பைத்தியமே பிடிச்சிடும்போல”

செல்வி பதில் சொல்ல முடியாமல் தவிக்க, மகளின் தவித்த முகம் சாம்பவியை மேலும் அச்சமூட்டியது. இதெற்கெல்லாம் ஒரே வழி… மகளின் திருமணம்தான் என்று முடிவெடுத்து, “உனக்கு மாப்பிள்ளை நான் பார்க்கவா? இல்ல உன் அப்பா வசதிக்கு அவர் பார்க்கட்டுமா?” என்றார் மீண்டும்.

மீண்டும் தந்தையைப் பற்றிய பேச்சு கோபத்தை கொடுத்த போதும், பதில் சொல்லாமல் அன்னை விடமாட்டார் என்றுணர்ந்து, “நீயே பாரும்மா, ஆனா எனக்கு ஒரே ஒரு வருசம் டைம் கொடு, இந்த வேலைல கொஞ்சம் ஸ்டாண்ட் ஆகிடறேன்” என்றாள்.

சாம்பவி மனம் குளிர்ந்திட, “ஒரு வருசம்தான? தாராளமா எடுத்துக்கோ, பையன் கிடைச்சாலும், நல்லவனா? நல்ல குடும்பமானு விசாரிச்சு பொருத்தம் பார்த்து முடிவெடுக்க எனக்கும் டைம் தேவைப்படும்” என்றார் மகிழ்வோடு.

“கொஞ்சம் ஒர்க் இருக்கு, நான் போய் பார்த்துட்டு வரேன்” என்று இயல்பான முகத்தோடு உள்ளே சென்றவளுக்கு பொங்கிக்கொண்டு வந்தது அழுகை.

‘உன்னை உதாசினப்படுத்தலம்மா, பொற்செல்வனை சந்திக்க முடியாத கோழையாகிட்டேன். அதனாலதான் சென்னை போனேன்’ என கலங்கினாள் இயலாமையோடு.

பொற்செல்வன் மீது கோபம் கோபமாக வந்தது. ஆனாலும் நவீனா அக்காவிற்காக நாளை பொற்செல்வனை சந்தித்தே ஆக வேண்டும்.

யாரிடமும் சொல்லக்கூடாது என்று நவீனா அக்கா தன்னிடம் சொன்னதை, அவனிடம் சொன்னால் மட்டுமே நவீனா அக்காவின் பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் ஆகையால், பொற்செல்வன் மீதான தனிப்பட்ட கோபத்தை தள்ளி வைத்து நாளை காலை அவனை காண்பதில் உறுதியாக இருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!