கூடைப்பந்து மைதானத்தில் கொளுத்தும் வெயிலில் தனியே விளையாடிக்கொண்டிருந்தான் பொற்செல்வன். இரண்டு மணிநேரமாக விளையாடிய போதும் அவனின் கோபமும் ஆதங்கமும் கொஞ்சமும் குறையவில்லை.
அது பொது மைதானம் அல்ல. மிகப்பெரிய மைதானமும் அல்ல, ஒரு ஏக்கர் காட்டில் பொற்செல்வன் தனக்காக உருவாக்கிய மைதானம். தான் மட்டுமே விளையாட முடியாதென்பதால் மற்றவர்களையும் விளையாட அனுமதித்திருந்தான்.
இம்மைதானத்தின் பொறுப்பாளர் தொண்ணூறுகளில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார். பொறுப்பாளர் பதவி மட்டுமல்லாது, பள்ளி படித்துக்கொண்டிருக்கும் இளம் வீரர்களுக்கு இங்கே தினமும் இலவசமாக பயிற்சியும் கொடுக்கிறார்.
Advertisement
பொற்செல்வனும் தினமும் வரமாட்டான். உள்ளூரில் இருக்கும்போது உடற்பயிற்சி செய்ய வருவான். சற்று நேரம் விளையாடிவிட்டு செல்வான். கூடைப்பந்து விளையாட்டில் தேர்ந்தவன்.
இன்று காலை வந்தவன் உடற்பயிற்சி மட்டுமே பலமணி நேரம் செய்துகொண்டிருந்தான். இவனோடு விளையாடும் சக வீரர்கள் வழக்கம்போல் ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பியிருந்தனர்.
மைதானத்தை சரி பார்த்து, சுத்தம் செய்யும் இருவரும் பொற்செல்வன் இன்னும் விளையாடிக்கொண்டிருப்பதை அலுவலகத்தில் சொல்ல, மைதானத்தின் பொறுப்பாளர் நேரில் வந்தார்.
Advertisement
“அவர்கள் சொன்னதுபோல பொற்செல்வன்தான்” என்று வியந்தபடி அருகே வந்து, “செல்வா” என்றார்.
Advertisement
பந்தை தட்டிக்கொண்டே கூடையருகே சென்றபடி, “யா…” என்றான்.
“இவ்வளோ நேரம் இங்க இருக்கமாட்டிங்களேனுதான் வந்தேன், டைம் பனெண்டாகிடுச்சு, எதாவது சாப்பிட வேணுங்களா?”
“இல்ல… ஏதும் வேண்டாம், கிளம்பறேன்” என்று இந்த கடைசியிலிருந்து அந்த பக்க கூடைக்குள் பந்தை சரியாக போட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பினான் பொற்செல்வன்.
Advertisement
செந்தமிழ்செல்வி வேலையிலிருந்து விலகி ஒருவாரம் கடந்துவிட்டது. அலுவலகத்தில் அவளின் வெற்றிடத்தை பார்க்க முடிவதில்லை.
தோட்டத்திற்கு சென்றால் அங்கும் அவள் நினைவுதான். தொழிற்சாலைக்கு சென்றால் அங்கும் அவள் நினைவுதான்.
பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து மதியம் முதல் மாலைவரை என பகுதிநேர வேலைக்கு வந்துகொண்டிருந்த சமயம் அது. கண்ணிற்கு எட்டியவரை பச்சே பசேலென இருக்கும் தோட்டங்களையும், வயல்வெளிகளையும் முதல்முறை நேரில் பார்த்தது பொற்செல்வனின் காட்டைத்தான்.
புதினா இலை எது? கொத்தமல்லி தழை எதுவென்று கூட அப்பொழுது தெரியாது செந்தமிழ்செல்விக்கு. தந்தை வீட்டில் இருக்கும்வரை காரில் பள்ளிக்கு சென்று வருவாள். சமையலறை பக்கமெல்லாம் சென்றதே கிடையாது.
தந்தையோடு இருக்கும்போது அவளறிந்த வெளி உலகம் ஷாப்பிங் மால், உயர்தர உணவகம், கோவில்களுக்கு செல்வது, அரையாண்டு, காலாண்டு விடுமுறை தினங்களில் மும்பை, ராஜஸ்தான் போன்ற சுற்றுலா தளங்களுக்கும், வருட விடுமுறை தினங்களில் வெளிநாட்டிற்கு செல்வதும் என்று சுகமாக வாழ்ந்தவள்.
அன்னையோடு தனியே வந்த பின்னே விடுமுறை தினங்களில் சாம்பவியோடு அலுவலகத்தில் மட்டுமே இருப்பாள். பகுதி நேர வேலைக்கு சேர்ந்த பின்னேதான் விவசாயம் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொண்டாள்.
அரிசி, காய்கறிலாம் இவ்வளோ கஷ்டப்பட்ட பின்னேதான் உண்ணக் கிடைக்கிறதா? என பிரம்மிப்பாக கேட்பது, வயல்வெளி பக்கம் சென்றால் ‘வாவ், செம்ம லொகேஷன்… இப்படி இடமெல்லாம் நேர்ல இப்போதான் பார்க்குறேன்’ என அதிசயிப்பது, பீட்ரூட் கேரட் போன்ற காய்கறிகளுக்கு தமிழ்ல என்ன பேரு? என்று கேட்பது என இவளின் செயல்களை அப்பொழுது சிறு பிள்ளைத்தனம் என்ற பாவனையில் பார்த்திருந்தவனுக்கு, தற்போது ரசனையாக நினைவில் நின்றது.
பகுதிநேர வேலையின் போது பலமுறை தலையில் செல்லமாக குட்டி அவளின் அறியாமையை போக்கியிருக்கிறான். கல்லூரி படிப்பு முடிந்து முழுநேர வேலைக்கு சேர்ந்த பின்னே குட்டு வாங்குவதில்லை. ஏனெனில் மூன்று வருட அனுபவத்தில் நிறைய கற்றிருந்தாள்.
பொற்செல்வன் சொல்ல வருவதை அவன் சொல்லி முடிக்கும் முன்னே புரிந்துகொண்டு செயல்படும் அளவிற்கு செந்தமிழ்செல்வி முன்னேறியிருக்கவே, குட்டு வாங்குவது நின்றுபோய் பாராட்டுதலாக அவ்வப்போது கன்னத்தில் தட்டிக்கொடுப்பது வழக்கமாகிப்போனது.
விஷேச தினங்களில் தனது வீட்டினை அலங்கரிக்க உதவுவது, அலுவலகத்திலும் தனது வேலையை அர்ப்பணிப்போடு செய்வது, ஓய்வு நேரத்தின் போது காய்கறி, மற்றும் பூந்தோட்டங்களை பார்வையிடுவது என்று இருந்ததால் செந்தமிழ்செல்வி மீது இன்னும் மதிப்பு அதிகமானது.
தொழில் விசயமாக பத்து நாள், ஒருவாரம் என்று வெளியில் செல்லும்போது கூட அவளின் நினைவு வந்துபோகும்தான். ஆனால் அதையெல்லாம் காதல் என்று நினைத்ததில்லை.
சிறு பெண்… சிறுவயது முதல் வசதியாக வாழ்ந்தவள். ஆனால் அப்படி பகட்டு ஏதும் இல்லாமல் தெரியாததை கற்றுக்கொள்கிறாள் என்று பெருமையாக நினைப்பதாக நினைத்திருந்தான்.
ஆர்வமாக தொழில் கற்றுக்கொள்ளும் மாணவி என்று நினைத்திருந்த பொற்செல்வனுக்கு தன்னோடு நிழலாக இருந்திருக்கிறாள் என்று தற்போதுதான் புரிந்தது. பதினைந்து நாள்களாக செந்தமிழ்செல்வி வராதது பெரிதாய் பாதித்திருக்க, அவளை இவ்வளவு தேடுகிறோமா என்று நினைத்தான்.
செந்தமிழ்செல்வியை மிகவும் பிடிக்கும் என்றபோதும், தன் மீது விருப்பம் இல்லை எனும் பெண்ணிடம் விலகியிருப்பதுதான் சரி என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டான்.
தற்போதும் கூட தனது செயல் சற்று அதிகப்படி என்று புரிந்ததே அன்றி, தவறென்று நினைக்கவில்லை. விருப்பம் சொன்னேன், அவளுக்கு பிடிக்கவில்லை, எனவே அதிலிருந்து வெளிவர நேரம் எடுத்துக்கொள்ளட்டும் என்று நினைத்திருந்தானே தவிர, வேலையை விட்டு செல்வாள் என்றெல்லாம் நினைக்கவேயில்லை.
அவளின் முடிவு அதீத கோபத்தை கொடுத்தபோதும், போடீ என்றெல்லாம் விட்டுவிட மனமில்லை. எப்படியாவது அவளை தன்னோடு வைத்துக்கொள்ளத்தான் நினைத்தது பொற்செல்வன் மனம்.
விளம்பரத்தில் நடிக்க வைத்து அவளை தக்க வைக்கலாம் என்று நினைத்தால், அதற்கும் பிடிகொடுக்காமல் சென்றுவிட்டாள். அன்று அன்னை முன்னே அவள் பேசிய பேச்சிற்கும், விதத்திற்கும் பொலீரென அறைந்து இழுத்து வைத்துக்கொள்ள துடித்தது மனம்.
அப்படி ஏதும் நடந்துவிடக் கூடாதென்றுதான் அன்று செந்தமிழ்செல்வி தன்னை காண அலுவலகம் வந்தும் அவளை காண்பதை தவிர்த்தான். ஆனாலும் தனது கோபத்தை அடக்க ஒரு வாரமாக பாடுபடுகிறான். ஆனால் முடியத்தான் இல்லை.
எத்தனை அன்பாக பழகினாள்? சின்ன விசயத்திற்கு இத்தனை பெரிய முடிவெடுப்பாளா? இவள் அழகிற்கு எங்கு சென்றாலும் ஆண்மகன்கள் காதலோடு அணுகத்தானே செய்வார்கள்? இதற்கெல்லாம் பயந்து வேலையை விட்டு சென்றால் எப்படி பிழைப்பாள்?
அதோடு அன்றைய நிகழ்விற்கு பின்னே அவளை எவ்விதத்திலும் தொல்லை செய்யவில்லையே, பிறகு ஏன் இப்படி முடிவெடுத்தாள்? இங்கு பாதுகாப்பில்லை என்று நினைத்துவிட்டாளா?
அவ்வளவு கேவலமானவனா நான்? பகுதிநேர வேலையில் மூன்று வருடமும், முழுநேர வேலையில் இரண்டு வருடம் என இந்த ஐந்து வருட பழக்கத்தில் என்னைப் புரியவில்லையா அவளுக்கு? என்று அவளையே நினைத்திருந்தான்.
“அம்மாயி…” என்ற குழந்தையின் கத்தலில் வெளியே வந்த அமிர்தவள்ளி, “எங்க செல்வா போன? போனும் எடுக்கல, சாப்பிடல, குளிக்கல, ஃபேக்டரிலயிருந்து கால் பண்ணினாங்களாம், நீ அட்டன் பண்ணலயாம், ராகுல் போன் செய்தான்” என புலம்ப, “ம்ப்ச்… வந்துட்டேன்ல? சின்னப் பையனா நானு?” என கடுகடுத்து குளிக்கச் சென்றான்.
ஒரு மணிநேரம் வரை ஷவரில் நின்ற பின்னே உடைமாற்றி வெளியே வந்து ஆயாசமாக சோபாவில் அமர்ந்தவனிடம், “சாப்பிட வா செல்வா” என்றார் அமிர்தவள்ளி.
“ஜூஸ் கொடும்மா”
“மணி ஒன்னாகுது செல்வா, காலைலயும் சாப்பிடல”
அன்னையை விடுத்து பணிப்பெண்ணிடம் பழரசம் கேட்டு வாங்கிக்குடிக்க, மெல்ல பொற்செல்வன் அருகே வந்தாள் ப்ரித்திகா.
“சித்தாக்கு டையர்டா இருக்கா? நான் பிடிச்சி விடட்டுமாப்பா?” என்று தனது பிஞ்சுக்கைகளால் செல்வாவின் கால்களை பிடிக்கப்போக, அள்ளி தனது மடியமர்த்திக் கொண்டவன், “சித்தாக்கு டையர்டா இல்லையே” என்றான்.
“அம்மாயி… சித்தாக்கு டையர்டா இல்லையாம்” என்று மகிழ்ந்து, “சித்தாவை பார்த்து அத்தனை டேஸ் ஆச்சு” என்று நாள்காட்டியை காண்பிக்க, ஆறு நாள்களுக்கு வட்டம் போட்டு வைத்திருந்தாள் சிறுமி.
வெளியூர் சென்றால் மகளிடம் சொல்லிவிட்டுத்தான் செல்வான். அப்பொழுதெல்லாம் தேடமாட்டாள் ப்ரித்திகா. ஆனால் இங்கேயே இருந்துகொண்டு பாராமல் இருந்ததில் சிறுமி ஏமாந்திருக்கிறாள் என்று புரிய, “ராணிம்மா சித்தாவை தேடுனிங்களா? கொஞ்சம் பிஸியாகிட்டேன், சாரிடா” என அண்ணன் மகளை கொஞ்ச, மனமும் லேசானது.
மகனின் கோபம் குறைந்திருப்பதை உணர்ந்து, “அப்பா உன்னை பார்க்கனும்ன்னார் செல்வா” என்றபடி உண்ண எடுத்து வைத்தார் அமிர்தவள்ளி.
“ம்மா, இப்போதான ஜுஸ் குடிச்சேன்? எனக்கு பசியில்ல” என்றபடி எழுந்தவன், “ராணிம்மா சாப்பிடுங்க, நான் தாத்தாவை பார்த்துட்டு வரேன்” என்று தந்தை அறையை நோக்கி செல்ல, “அப்பா வெளில போயிருக்கார்” என்றார்.
“எங்க போயிருக்கார்?”
“தெரியல, ஆனா முகம் வாட்டமா இருந்துச்சு, உன்னை கேட்டார், நீ இல்லைன்னதும் பெரியவன் வீட்டுல இருக்கான், கூப்பிடட்டுமான்னேன், வேணாம்னு கிளம்பிட்டார்” என்றார்.
தந்தைக்கு அழைத்தான். ஏற்றதும் “எங்க இருக்க செல்வா?” என்றார்.
“வீட்டுலப்பா”
“ஃபேக்டரிக்கு கிளம்பி வா, நானும் அரைமணி நேரத்துல வந்துடறேன்” என்று இணைப்பை துண்டித்தார் புருஷோத்தமன்.
இவன் தயாராக அறைக்குள் செல்ல, “அப்பா என்ன சொன்னார் செல்வா?” என்றார்.
“ஒன்னுமில்லைம்மா, ஆஃபீஸ் வர சொன்னார்” என்றபடி இரண்டே நிமிடத்தில் உடைமாற்றி வெளியே வந்தான்.
“சாப்பிட்டு கிளம்பு செல்வா”
“பசியில்லம்மா” என்றவன், அன்னை வருந்துவாரே என்று “பேக் பண்ணி கொடுத்தனுப்புங்க” என்று கிளம்பினான்.
அரைமணி நேரத்தில் அலுவலகம் வர, புருஷோத்தமன் இருக்கும் இடம் சொன்னார்கள் பணியாளர்கள். விரைந்து அவ்விடம் வந்தவன், “என்னப்பா இங்க உக்கார்ந்திருக்கிங்க? வாங்க ஆஃபீஸ் போலாம்” என்றான்.
புருஷோத்தமன் அமைதியாக அமர்ந்திருக்க, குடும்ப பிரச்சனை தவிர்த்து வேறு எதற்கும் தந்தை இத்தனை சோர்வாகமாட்டார். ஜெயப்ரதாவைப் பற்றி எதாவது தெரிய வந்திருக்குமோ என்று, “எந்த பிரச்சனையானாலும் பார்த்துக்கலாம்ப்பா, நானிருக்கேன்ல? வாங்க” என்றான் தன்மையாக.
“எல்லாம் கை மீறி போச்சு செல்வா” என்றார் வேதனையாக.
“முதல்ல என்னாச்சுனு சொல்லுங்க, நீங்க வேதனைப்படுற அளவுக்கு ஒர்த்தான விசயமா இல்லையானு நான் சொல்றேன்”
“சின்ன மருமகளுக்கு விவாகரத்து வேணுமாம்” எனும்போதே கண்கள் கலங்கிவிட்டது புருஷோத்தமனிற்கு.
“என்ன?” என்றான் பேரதிர்வாக.
“ஆமாம் செல்வா, விசயம் இன்னும் உன் அம்மாக்கு தெரியாது. ஏற்கனவே நவீனா பொண்ணு சந்தோசமா வாழலனு ரொம்ப வருந்துவா. இந்த விசயம் மட்டும் தெரிய வந்தா அவ்வளோதான்” என்றார் பெரும் வேதனையாக.
“நான் பார்த்துக்கிறேன், கவலைப்படாதிங்கப்பா”
“புருசன் பொண்டாட்டி விவகாரத்தை நீ எப்படி செல்வா பார்ப்ப?”
“விவாகரத்து புருசன் பொண்டாட்டி விவகாரம் இல்லைப்பா, குடும்ப விவகாரம். நீங்க கவலைப்படாதிங்க, நான் அண்ணிகிட்ட பேசுறேன்” என்றான்.
“உன் அண்ணனுங்களுக்கு கல்யாணம் ஆகவும்தான் உன் அம்மாக்கு பொண்ணு இல்லன்ற வருத்தமே கொஞ்சம் போச்சு. இரண்டு மருமகளுங்களையும் பெத்த புள்ளையாத்தான் பார்க்குறா.
உன் அம்மாவைப் போல மருமக பொண்ணுங்ககிட்ட அதிகம் பேசமாட்டேன்தான், ஆனா எனக்கும் அவங்க பொண்ணுங்க மாதிரிதான். எனக்கு தெரிஞ்சு மருமக மேல எந்த தப்பும் இல்ல.
அந்த பொண்ணு இதை சொல்லும்போது அது முகத்துல அவ்வளோ வேதனை. நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு வாழ பிடிக்கலனு வெளியே போறது எவ்வளோ பெரிய அசிங்கம், கேவலம்.
என்னால இதையெல்லாம் தாங்கிக்க முடியல செல்வா. இந்த விசயம் உன் அம்மாக்கு தெரியும் முன்னாடி சரி பண்ணனும். ஆனா எப்படினுதான் தெரியல. உனக்கு கல்யாணம் முடிவாகியிருக்க நேரத்துல இப்படியா நடக்கனும்” என்றார் வருத்தமாக.
“நான் பார்த்துக்கிறேன், வாங்க” என்று தந்தைக்கு ஆறுதல் கூறியபடி அலுவலகம் அழைத்துச் சென்றான்.