Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 6.2

அண்ணனின் நிலை வேதனை அளித்தபோதும், அமைதியாக உள்ளே வந்தவன், ராகுலைத் தவிர மற்றவர்களை வெளியேறும்படி செய்கை செய்தான்.

உடனிருந்த மூவரும் வெளியேற, கதவை அடைத்து, தன்னிடமிருந்த பேப்பரை ராகுலிடம் கொடுத்து, அதிலிருக்கும் கேள்விகளை கேட்க பணித்தான்.

“எதுக்காக இனி ஸ்மக்லிங்க்கு வரமாட்டேனு சொல்றிங்க?” என்று கேட்டு, தேவராஜின் வாயிலிருந்த கட்டை அவிழ்த்துவிட்டான் ராகுல்.

“ஆம்பிளையா இருந்தா என் கண்கட்டை அவிழ்த்துவிட்டு பேசுடா” என் தேவராஜ் கர்ஜிக்க, ராகுல் பொற்செல்வனை பார்க்க, “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு” என்பதாய் மொபைலில் டைப் செய்து காண்பித்தான்.



Advertisement

ராகுல் அவ்வாறு கேட்க, “நான் ஸ்மக்லிங் பண்றேன்ற வரைக்கும் தெரிஞ்ச உனக்கு, என்ன கேட்டாலும் என்கிட்ட பதில் வாங்க முடியாதுனு தெரியாம போச்சே” என்றான் எள்ளலாக.

சில நொடி அமைதியில் கழிய, பொற்செல்வனின் உத்தரவின் படி, “ஸ்மக்லிங் பத்தி கேட்டா பதில் வாங்க முடியாதுனு தெரியும், உன்னை கடத்தின மாதிரி உன் வீட்டாளுங்களை கடத்தினா பதில் சொல்வல்ல?” என்றான்.

“டேய்” என கோபத்தோடு தேவராஜ் எழ முயல, பாசம் இருக்கிறதே என்று நிம்மதியான பொற்செல்வன், அடுத்தடுத்த கேள்வியை கேட்க பணித்தான்.

Advertisement

“நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லாம எத்தனை நாள் ஆனாலும் இங்கயிருந்து போக முடியாது. பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்”

Advertisement

“உன் கேள்வில இருந்தே நீ எங்க கேங் இல்லைனு தெரியுது, கடத்தல் சம்மதப்பட்ட ஆள்களா இருந்தா இந்நேரம் என்னை கொன்னுருப்பாங்க, குறைந்த பட்சம் அடிக்கவாவது செய்திருப்பாங்க.

என் பின்னாடி இருக்க ஆபத்தை உணராம விளையாடிட்டிருக்க. என்னைத் தேடி வரவங்ககிட்ட நீ மாட்டிக்குவடா முட்டாள். ஒழுங்கா என்னை அவிழ்த்து விட்டுடு. இல்ல, மீண்டு வர முடியாத அவஸ்த்தையில சிக்கிடுவ”

“எப்போயிருந்து இதை பண்ணிட்டிருக்கிங்க?”

Advertisement

“முன்ன மரியாதை இல்லாம பேசிட்டு இப்போ மரியாதையா கேட்குற? நாம இருக்கிறதும் எங்களோட இடமாத்தான் இருக்கும். செல்வா அனுப்பின ஆளாடா நீ?” என்றான் சரியாக கணித்து.

ராகுல் அதிர்ந்து விழிக்க, அடுத்து கேட்க வேண்டிய கேள்வியை மொபைலில் டைப் செய்து காண்பித்தான் பொற்செல்வன்.

“செல்வாவா? அது யாரு? நம்ம இடம்னு சொல்ற, அப்போ செல்வா உனக்கு நெருங்கின சொந்தமாத்தான் இருக்கும். உன் மொபைல் பார்த்தா தெரிஞ்சிடும்ல? ம்… அந்த செல்வாவோட போன் நம்பர் இதுதானே?” என்று செல்வாவின் எண்ணை ராகுல் சொல்ல, என் மொபைல் பாஸ்வேர்ட் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று தேவராஜ் முகத்தில் சிறு பதற்றம் உண்டாகி மறைந்தது.

ஆனாலும் பயப்படவில்லை தேவராஜ். “ஆமாம்டா, அந்த நம்பர்தான். செல்வாக்கு போன் செய்து இங்க வர சொல்லு, அவன் வந்தா உன் கதி என்னாகும்னு தெரியும்” என்றான்.

“என்னை அண்டர் எஸ்டிமேட் பண்ற. அந்தாளை எதுக்கு இங்க வர சொல்லப்போறேன்? உன்னை கட்டி வச்சமாதிரி அவனை கட்டி வச்சு உதைச்சா, உன்னைப் பத்தி நீ சொல்லாத விசயத்தை அவன் சொல்வான்ல?” என்று வேறொரு எண்ணுக்கு அழைத்து, செல்வாவின் எண்ணைச் சொல்லி,

“இந்த நம்பர் வச்சிருக்க ஆள் பேரு செல்வா, யாரு? எங்கயிருக்கானு தேடி பிடிச்சு கட்டி வச்சிட்டு என்னை கூப்பிடுங்கடா” என்று உத்தரவிட்டு இணைப்பை துண்டிக்க, தற்போதும் கூட பதறவில்லை தேவராஜ்.

மாறாக பெரும் எரிச்சல் உண்டானது. யாராக இருப்பான்? என் அவசரம் தெரியாமல் கட்டி வைத்திருக்கிறானே, தற்போதே மிகவும் தாமதமாகிவிட்டது. பொற்செல்வனிடம் விசயத்தை சொல்லவில்லை என்றால் தேவையில்லாமல் அந்த பெண் மாட்டிக்கொள்வாளே என்று தவிப்பிற்குள்ளானாள்.

தேவராஜ் முகத்தினில் இருந்த தவிப்பு சிறு உற்சாகத்தை கொடுக்க, “என் ஆளுங்க செல்வாவை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள பிடிச்சிடுவாங்க, அதுக்குள்ள பதில் சொல்லிட்டினா அவன் தப்பிப்பான்” என்றான் ராகுல்.

செல்வாவிடம் விசயத்தை சொல்ல வேண்டுமே என, “ஒரு மணி நேரம்லாம் வெய்ட் பண்ண வேண்டாம், என் மொபைல்லயிருந்து அவனுக்கு கால் பண்ணு, செல்வாவே இங்க வருவான்” என்றான்.

ராகுல் பொற்செல்வனைப் பார்க்க, வெளியே வர சொல்லி பணித்து பொற்செல்வன் வெளியேற, ராகுலும் வெளியேறினான்.

“என்னை உன் ஆளுங்க பிடிச்சிட்டதா சொல்லு, அண்ணனைப் பத்தி விசாரிச்சு அடிக்கிறதாவும் சொல்லு, அவர் எதுக்காக இந்த தொழிலுக்கு போனார்? அண்ணனோட ஹெட் யாரு? இப்போ எதுக்காக தொழிலை விட நினைக்கிறார்னு தெரிஞ்சா போதும்.

அவர்கிட்ட பதில் வாங்க முடியலைனா நான் பேசறேன்” என்று இருவரும் உள்ளே சென்றனர்.

காலடி சத்தம் கேட்ட தேவராஜ் “செல்வா வந்தா நீ கேட்டதுக்கு பதில் சொல்றேன்” என்றான்.

கால் மணி நேரம் வரை விதவிதமாக விசாரித்தபோதும் தேவராஜிடம் எந்த பதிலும் வாங்க முடியாமல் போகவே, சில நொடிகள் யோசித்து, “அண்ணா” என்றான்.

பொற்செல்வன் குரல் கேட்டதும் பதறிப்போனான் தேவராஜ். “யார்ணா இவனுங்க?” என்றான் அடிவாங்கி களைத்த தோரணையில்.

“டேய், செல்வாவை என்னடா செய்திங்க? உங்கள்ல ஒருத்தனையும் விடமாட்டேன்டா” என கர்ஜித்தான் தேவராஜ்.

பொற்செல்வன் அடிவாங்குவது போல சப்தமிட, “அவனை அடிக்காதிங்கடா, அவன் தாங்கமாட்டான்” என்றவன், “நான் ஏன் கடத்தலுக்கு போனேனு தெரியனும், அவ்வளவுதானே? சொல்லிடறேன்.

பெருசா எந்த காரணமும் இல்ல, என் அப்பாவும் தாத்தாவும் எனக்கு பாக்கட் மணி கொடுக்க மறுத்தாங்க, அந்த கோபத்துல ஆரம்பிச்சதுதான். அப்போ ரொம்ப சின்ன வயசு, இதோட பின் விளைவு தெரியாம ஆரம்பிச்சிட்டேன். இப்போ இது பிடிக்கல, அதனால நிறுத்த நினைச்சேன். சத்தியமா இதுதான் காரணம்” என்றான் தேவராஜ்.

இன்னைக்கு உன் தம்பி எவ்வளோ அடி வாங்கப்போறானோ என்று ராகுல் சொல்ல, “சத்தியமா இதுதான் உண்மை, அவனை விட்டுடுங்கடா” என்று கெஞ்சினான் தேவராஜ்.

“உன்னோட பாஸ் யாரு?” என்றான் ராகுல்.

“என் பாஸ் யாருனு தெரிஞ்சா உங்களுக்குத்தான் ஆபத்து” என்றவன்,

“முட்டாள், நீ எப்படிடா இந்த முட்டாள் கூட்டத்துக்கிட்ட மாட்டின?” என பொற்செல்வனை திட்டி, “என் பாஸ் பேரு மார்டின்லூர்து, டெல்லில இருக்கார். நானே இன்னும் அவரை பார்த்ததில்ல, முடிஞ்சா போய் பாருங்கடா, உங்க உயிர் அவர் கையில இருக்குனும்போது யாரால மாத்த முடியும்” என்றான் கோபமாக.

அறையில் மௌனம் நிலவ, “நான் சொன்னது உண்மை. ஒழுங்கா என்னையும் என் தம்பியையும் விட்டுடுங்க. ஒரு நாள் என்னை இங்கே வச்சிருந்தாலும் உங்க உயிருக்கு நான் பொறுப்பில்ல” என்றான்.

பொற்செல்வனின் கண்களால் கட்டளையிட, தேவராஜின் கண்ணில் உள்ள கட்டை அவிழ்த்தான் ராகுல்.

பொற்செல்வன் கம்பீரமாக நின்றிருக்கவும், நிம்மதியானவன், பின்னே ராகுலையும் பார்த்தபடி இருவரையும் முறைத்தான்.

ராகுல் தேவராஜின் கை கால் கட்டை அவிழ்த்துவிட, தம்பி அருகே வந்தவன், ஓங்கி அறைந்தான் கன்னத்தில்.

“முட்டாள்… நீ என்னைப் பத்தி விசாரிச்சது மார்டின் ஆள்களுக்கு தெரிஞ்சுடுச்சுடா, அவனுங்க உன்னை பிடிக்க ட்ரை பண்ணிட்டிருக்கானுங்க. நேத்து ஹார்ஸ்ரைடிங் பண்ணியிருக்க, அப்போ யாரோ ஒரு பொண்ணோட பேசிட்டிருந்திருக்கன்ற வரைக்கும் தெரிஞ்சு வச்சிருக்காங்கடா. எதுக்குடா என்னைப் பத்தி விசாரிச்ச?” என கத்தினான் கோபமாக.

செல்விக்கு பிரச்சனை வருமோ என்று பதறிய போதும், “நீங்க அண்ணியை டிவோர்ஸ் பண்றேம்பிங்க, பெத்தவங்களோட நிலைமையைப் பத்தி யோசிக்கமாட்டிங்க, குடும்பத்துல யாரோடவும் ஒட்டமாட்டிங்க, ஆனா நான் உங்களைப் பத்தி விசாரிக்கக்கூடாதா?” என இவனும் கோபமாக கேட்டான்.

கோபம் வந்தபோதும், “நேத்து யார் கூட பேசிட்டிருந்த? கண்டிப்பா நம்ம ரிலேட்டிவா இருக்கமாட்டாங்க, ஒர்க் பண்றவங்களாத்தான் இருக்கும். உன்னைப் பத்தி அவங்ககிட்ட விசாரிச்சா, அவர் என்னோட பாஸ், ஆஃபீஸ் விசயமா பேசிட்டிருந்தோம்னு சொல்ல சொல்லிடு. பெருசா பிரச்சனை வராது, ஆனாலும் ஒரு மாசம் அவங்களை லீவ் எடுத்துக்க சொல்லு” என்றான்.

“ஒரு மாசம் கழிச்சு பிரச்சனை வராதா?”

“வராது” என்றான்.

தேவராஜின் த்வணியிலிருந்தே எதோ செய்து கொண்டிருக்கிறான் என்று புரிய, இன்னும் பயமானது பொற்செல்வனுக்கு.

பொற்செல்வனை ராகுலைப் பார்க்க, ராகுல் வெளியேறினான்.

“என்னண்ணா பண்ணி வச்சிருக்கிங்க? தயவு செய்து என்கிட்ட சொல்லுங்க, உங்களுக்கு அண்ணி மேல இன்ட்ரஸ்ட் இல்லைனு அம்மாப்பா வேணும்னா நம்பலாம். நான் நம்ப மாட்டேன், அவங்க மேல உள்ள அக்கறையிலதான் டிவோர்ஸ் பண்ண நினைச்சிருக்கிங்க” என்றான்.

தேவராஜின் முகம் சில நொடி வேதனையை காண்பித்தபோதும், “டிவோர்ஸ் நான் கேட்கல, அவளுக்குத்தான் வேணுமாம்” என்றான்.

“அண்ணியும் அப்பாகிட்ட அப்படித்தான் சொல்லியிருக்காங்க, ஆனா அவங்க முழுமனசோட சொல்லலைனு எனக்கு தெரியும். எதோ ப்ளாக்மெயில் பண்ணித்தான் அவங்களை கேட்க வச்சிருக்கிங்க. தயவு செய்து என்கிட்ட சொல்லுங்க.

“நீங்க கடத்தல் பண்ணிட்டிருக்கிங்கனும், எத்தனை வருசமா செய்திட்டிருக்கிங்கனும் கண்டு பிடிச்சிருக்கேன், இன்னும் கொஞ்ச நாள் டைம் எடுத்துக்கிட்டா மொத்தத்தையும் கண்டு பிடிப்பேன்.

ஆனா அதுக்கெல்லாம் இப்போ நேரமில்ல, உங்களை சுத்தி எதோ பெரிய ஆபத்திருக்கு. நீங்க கொஞ்சம் கோவப்ரேட் செய்தா சுலபமா எல்லாத்தையும் முடிச்சிடலாம். ப்ளீஸ் சொல்லுங்கண்ணா”

“வேணாம் செல்வா, இது என்னோட போகட்டும். நீ தலையிடாத”

“உங்களை இப்படி விட்டுட்டு என்னால நிம்மதியா இருக்க முடியுமா? ஃப்யூச்சர்ல உங்களுக்கு எதாவது ஆகிட்டா என்ன பண்ணுவேன்? அப்படிலாம் விட முடியாது, நீங்களா சொன்னா வேலை கொஞ்சம் ஈஸியா முடியும், இல்லைனா நானே கண்டுபிடிப்பேன்” என்றான் உறுதியாக.

“வேணாம் செல்வா, உன்னை கொன்னுடுவாங்க”

“செத்தா சாவறேன்” என்றான் கோபமாக.

தேவராஜின் முகம் வேதனையை காண்பிக்க, “உங்களுக்கு எதாவது ஆனது… எத்தனை வருசமானாலும் ஒருத்தன் விடாம கூண்டோட அழிச்சிட்டுத்தான் ஓய்வேன். நீங்க ஹெல்ப் பண்ணினா இரண்டு பேரும் சேர்ந்து போராடலாம், இல்லைனா நானே பார்த்துக்கறேன்” என்றான் மீண்டும்.

“என் பிரச்சனை என்னோட போகட்டும்” எனும் சொல், இம்முறை விரக்த்தியாக வந்தது.

“ஓ… சாகப்போறிங்களா? சூப்பர்ண்ணா. அதான் அண்ணியை டிவோர்ஸ் பண்ண முடிவெடுத்திருக்கிங்க. சரி விடுங்க, நானே பார்த்துக்கிறேன்” என்று கோபமாக வெளியே எத்தனிக்க, தம்பி இதனை விடமாட்டான் என்றுணர்ந்து, “நில்லு செல்வா” என்று பின்னோடு வந்தான்.

பொற்செல்வன் நிற்கவே, “என் பிரச்சனையை நைட் சொல்றேன், பெரிய ப்ளாஷ்பேக்லாம் இல்ல, பின்விளைவு தெரியாம ஆரம்பிச்சதுதான். இதை அப்புறம் பேசலாம். ஹார்ஸ்ரைடிங் அப்போ உன்கூட பேசிட்டிருந்தவங்களுக்கு முதல்ல போன் செய்” என்றான்.

“போன் பேசி முடிச்சதும் நாம பேசனும்” என்க, சரியென்பதாய் தலையசைத்தான் தேவராஜ்.

பொற்செல்வன் செல்விக்கு அழைக்க, அவள் அழைப்பை ஏற்கவில்லை. நான்கைந்து முறை அழைத்துப் பார்த்தவன், “அன்னைக்கு ஹார்ஸ்ரைடிங் அப்போ செல்விகிட்டதாண்ணா பேசிட்டிருந்தேன், போன் செய்தா அட்டன் பண்ணமாட்டேங்குறா” என்று தவித்த பொற்செல்வன், செல்வி வீட்டிலிருக்கிறாளா என்று அறிந்து கொள்ள ராகுலுக்கு அழைத்தான்.

மனைவியின் நெருங்கிய தோழி என்பதாலும், செல்வி மீது அன்னைக்கு தனி பாசம் என்பதாலும் செல்வி மீது தேவராஜிற்கும் நல்ல மதிப்புதான். செல்விக்கு பிரச்சனை என்றால் தனக்கும் வருத்தம்தான்.

ஆனால் செல்வன் பதறுவதைப் பார்த்தால் அக்கறையை மீறிய ஆசை இருப்பதாய் தோன்ற, ஆராய்ச்சியாக பார்த்தான் தம்பியை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!