Skip to content
Post Views: 256
கடவுள் சன்னிதானமே காலியாக இருந்தது, இன்னும் சிறிது நேரத்தில் நடை சாத்துவதால் பெரிதாக பொதுமக்கள் யாரும் இல்லை
”கடவுள் சாட்சியா சொல்றேன் உன்னை கைவிடமாட்டேன் நீதான் என் உலகம், என் வாழ்க்கை, என் உசுரு எல்லாமே, இது சத்தியம்” என கடவுள் முன்பு குணா சத்தியம் வைக்க கண்மணியோ
”இதுக்குதான் என்னை கூட்டிட்டு வந்தியா” என்றாள்
Advertisement
”நீ நம்ப மாட்டேங்கற நான் என்ன செய்றது“ என்றான் குணா
”இப்படி சத்தியம் செய்தா மட்டும் நான் நம்புவேன்னு எப்படி தோணுது உனக்கு”
”வேற என்ன செய்யனும்னு சொல்லு செய்றேன்”
Advertisement
”நீ ஒண்ணும் செய்ய வேணாம்”
Advertisement
”இப்படி நம்பிக்கையில்லாம பேசினா நான் என்னதான் செய்றது” என குணா கேட்க கண்மணியோ அதற்கு பதில் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.
அவள் பின்னாடியே கோபத்துடன் அவனும் சென்றான் வழியில் ஒரு திருமண ஜோடி இருக்க அதில் கணவன் தன் மனைவியின் நெற்றி வகிட்டில் குங்குமம் இடுவதைக்கண்டான் குணா, அதை கண்மணியும் கவனித்து நகர்ந்துச் சென்றாள், குணாவோ அதைக்கண்டு நேராக கண்மணியை பிடித்தான்
”என்ன செய்ற குணா விடு நான் போகனும்”
Advertisement
”எல்லாம் போகலாம் வா என்கூட” என அவளை அழைத்துக் கொண்டு அம்மன் சன்னதிக்கு சென்றான், அங்கு யாருமே இல்லை, அவ்விடத்தில் குங்குமம் இருந்ததைக் கண்டவன் சட்டென தன் விரலில் குங்குமத்தை எடுத்து அதை கண்மணியின் நெற்றியில் வைக்க முயல அவளோ தடுத்தாள்
”பைத்தியமா உனக்கு என்ன செய்ற இது தப்பு”
”இது தவிர வேற வழி தெரியலை கண்மணி, என்னை நீ நம்பனும்லயா”
”சரி சரி நான் உன்னை நம்பறேன் அதுக்காக இப்படியெல்லாம் செய்ய வேணாம்”
”ஏன் செய்யக்கூடாது”
”ஏன்னா கல்யாணம் ஆனவங்கதான் இப்படி குங்குமம் வைச்சிப்பாங்க”
”உன்னை எப்ப நான் விரும்பினேனோ அப்பவே நீதான் என் மனைவின்னு முடிவு பண்ணிட்டேன், படிப்பு முக்கியம், படிச்சி வேலைக்கு போய் கைநிறைய சம்பாதிச்சி அப்புறமா கல்யாணம் செய்துக்கலாம்னு ஆசைப்பட்டேன், ஆனா அதுவரைக்கும் நீ என்னை நினைச்சி நம்பிக்கையில்லாம ஒவ்வொரு நாளும் பயந்துக்கிட்டு இருப்ப, அது நல்லதில்லை”
”அதான் நான் இப்ப நம்பறேன்னு சொல்றேன்ல அப்புறம் என்ன விடு குணா வா போலாம்”
”முடியாது கண்மணி எனக்கும் ஒரு சின்ன பயம் இருக்கு, எங்க ஏதாவது சின்ன விசயத்துக்காக நீ என்னை விட்டு போயிடுவியோன்னு தினம் தினம் பயந்து பயந்து சாக முடியாது”
”அப்போ நீயும் என் மேல சந்தேகப்படறியா“
”பின்ன சந்தேகம் இல்லாமலா இருக்கும், நான் என்ன பெரிய ராஜகுமாரனா இல்லையே, ஒரு அநாதை, என்னை நேசிக்க யாரும் இல்லை, நானே விட்டேத்தியா சுத்திக்கிட்டு இருக்கேன், வாழ்க்கையை எதுக்கு வாழனும்னு பிடிக்காமலே வாழ்ந்துக்கிட்டு இருக்கற என் வாழ்க்கையில தேவதை போல வந்தவ நீ, உன்னை இழக்க என்னால முடியாது, உன்னை இழக்கறதும் உசுரை விடறதும் ஒண்ணுதான், எங்க சின்ன விசயத்தில நமக்குள்ள பிரிவு வந்துடுமோன்னு பயமாயிருக்கு கண்மணி” என்றான் குணா அதற்கு கண்மணியோ
”அதுக்குன்னு நாம காதலிக்க ஆரம்பிச்சி ஒரு மாசம் கூட ஆகலையே“ என்றாள்
”அதனால என்ன என் காதல் உண்மையானது அதை உனக்கு நான் புரிய வைக்கிறேன்“
”எப்படி இப்படி குங்குமம் வைச்சா, இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா”
”குங்குமம் வைச்சி நான் உனக்கானவன்னு உறுதிப்படுத்தறேன், படிச்சி முடிச்சி வேலை கிடைச்சி லைப் செட்டில் ஆனபின்னாடி உனக்கு தாலி கட்டி மனைவியா நீ சொந்தம் ஆகறவரைக்கும் நாம எதுக்காகவும் பிரியக்கூடாது“
”இது ஒண்ணும் சாதாரண விசயம் இல்லை குணா, நான் உனக்காக எத்தனை வருஷம்னாலும் காத்திருப்பேன்”
”நானும் காத்திருப்பேன் அதுக்கு அத்தாட்சியா இது இருக்கட்டுமே“
”எனக்கென்னவோ நீ அவசரப்படறியோன்னு தோணுது”
”இல்லை முன்னாடியே நம்ம வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்பு தரேன்”
”எனக்கு இதுல விருப்பம் இல்லை”
”உன் விருப்பத்தை நான் மதிக்கிறேன்”
”அப்ப வா போலாம்”
”இரு இந்த குங்குமத்தை வைச்சி விடறேன்”
”வேணாம்”
”இதை வைக்கறதால நான் உன்கிட்ட தப்பா நடந்துக்க மாட்டேன் என்னை நம்பு“
”ப்ளீஸ் குணா ப்ளீஸ்” என அவள் கைகூப்பி கெஞ்சவும் அவன் நிதானித்தான்
”இனிமேல என்மேல சந்தேகப்பட மாட்டியே“
”மாட்டேன் போதுமா, வா கிளம்பலாம் நடை சாத்திடப்போறாங்க” என சொல்ல அவனும் அவளை அழைத்துக் கொண்டு கோயிலை விட்டு வெளியேறினான்
பைக்கிடம் வந்த இருவரும் என்ன தோணியதோ ஒருவரை ஒருவர் பார்த்து கலகலவென சிரித்துக் கொண்டார்கள்
”ஒரு நிமிஷம் நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் தெரியுமா, இப்படியா என்னை பயமுறுத்துவ“
”அடிப்பாவி நல்லாயிருந்தவனை கதிகலங்க வைச்சவ நீ, இப்ப வந்து இப்படி பேசற”
”எனக்குத் தெரியாது அந்த பொண்ணுங்ககிட்டயிருக்கற உன்னோட வீடியோவை டெலிட் பண்ற இல்லன்னா அவ்ளோதான் பார்த்துக்க”
”உத்தரவு வா போகலாம்” என அவளை அழைத்துக் கொண்டு மறுபடியும் கல்லூரிக்கு வந்தான்.
அதற்குள் பெல் அடித்து அனைவரும் மதிய லன்ச் சாப்பிட செல்ல அவனோ தேடிப்பிடித்து அந்த பெண்களிடம் கேட்டு தனது வீடியோவை டெலிட் செய்து விட்டு கண்மணியை தேடி வந்தான், அவளோ அவனின் வருகைக்காக காத்திருந்தாள் அவன் வரவும்
”எவ்ளோ நேரம் பசிக்குது வா சாப்பிடலாம்“
”நான் அந்த வீடியோவை டெலிட் பண்ணிட்டேன் போதுமா“
“என்னை நீ தப்பா நினைக்க வேணாம், உன் மேல உசுரையே வைச்சிட்டேன்ல, உன்னை எதுக்காகவும் இழந்துடக்கூடாதுன்னுதான், அது மட்டுமில்லை, அந்த பொண்ணு அந்த வீடியோவை வைச்சி ஏதாவது பிரச்சனை பண்ணிட்டா, அதனால உன் எதிர்காலத்தில பிரச்சனை வரக்கூடாதுன்னுதான் அப்படி கடுமையா நடந்துக்கிட்டேன்”
”எல்லாம் எனக்குப் புரியுது கண்மணி, அதுக்காக என்கிட்ட இனிமேல கோபமா நடந்துக்காத, என்னால அதை தாங்க முடியலை, உன் கண்ல அழுகையை பார்த்தாலே என் மனசு தாங்க மாட்டேங்குது, இனி எப்பவும் நீ அழக்கூடாது கண்மணி”
”அதுஉன் கையிலதான் இருக்கு குணா, நீ என்னை நல்லா பார்த்துக்கிட்டா நான் ஏன் அழப்போறேன் சொல்லு” என சொல்ல அவனோ தலையை பலமாக ஆட்டிவிட்டு அவள் தந்த டிபனை சாப்பிடலானான் அவளும் சாப்பிடலானாள்
”அப்பப்பா இன்னிக்கு நடந்ததை நான் என்னிக்குமே மறக்க மாட்டேன், நல்லவேளை நீ என் நெத்தியில குங்குமம் வைக்கலை, அப்படி மட்டும் நீ வைச்சிருந்தன்னு வையேன், நீதான் என் புருஷன்னு நான் முடிவு பண்ணி உன்கூட வாழவே ஆரம்பிச்சிருப்பேன் தெரியுமா” என இயல்பாக சொல்லிவிட அவனோ அதைக்கேட்டதும் அவளை ஆசையாக பார்த்து
”சே மிஸ் பண்ணிட்டேன், நீ தடுத்ததை பெரிசா நினைக்காம குங்குமத்தை வைச்சிருந்தா இந்நேரம் நீ என் பொண்டாட்டியா இருந்திருப்ப, நான் உனக்கு புருஷனா இருந்திருப்பேன், இன்னிக்கே நமக்கு புது வாழ்க்கை ஆரம்பிச்சிருக்கும் சே சொதப்பிட்டேன்“ என புலம்ப அவளோ முதலில் அதிர்ந்து பின் கலகலவென சிரித்தாள், அவனும் சேர்ந்து சிரித்தான்
”நல்லாயிருக்குல்ல”
”எது”
”ம் இப்படி புருஷன் பொண்டாட்டின்னு பேசறது”
”ம் நல்லாதான் இருக்கு கண்மணி ஒண்ணு கேட்கவா”
”சொல்லு குணா“
”ஒருவேளை நான் குங்குமம் வைச்சிருந்தா நிஜமாவே நீ என்கூட வாழ வந்திருப்பியா“
”ஆமாம் வந்திருப்பேன்”
”நிஜமாவா”
”இதுல என்ன சந்தேகம், நீ குங்குமம் வைச்சதும் நான் உனக்கு மனைவியாயிடுவேன், அப்புறம் நான் கூடதானே வாழ்ந்தாகனும்” என சொல்ல குணாவோ மென்மையாக சிரித்து
”ஒரு நாள் இல்லை ஒருநாள் உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகத்தான் போகுது கண்மணி, அன்னிக்கு உரிமையோட உன் நெத்தியில நான் குங்குமம் வைச்சி உன்னை என் மனைவியா ஆக்கிக்குவேன்”
”நானும் அந்த நாளுக்காக காத்திருக்கேன், ஆனா அதுக்கு முன்னாடி படிப்பு முக்கியம், மன்த்லி டெஸ்ட்ல நீ எப்படி மார்க் எடுக்கறேன்னு வைச்சிதான் தொடர்ந்து காதலிக்கலாமா வேணாமான்னு நான் முடிவு பண்ணப் போறேன்”
”அய்யோ என்ன சொல்ற”
“ஆமா முதல்ல நம்ம காதலை காப்பாத்தற வழியைப் பாரு, அதுக்கு அப்புறம் கல்யாணத்தை பத்தி கனவு காணலாம்” என சொல்லி முடிக்க பெல் அடிக்க சரியாக இருந்தது
அவளின் பேச்சைக் கேட்ட குணாவின் தலையில் இடி விழுந்தது போலானது, தற்சமயம் தனது காதலை காப்பாற்றுவதுதான் முக்கியம், அதற்கு படிப்புதான் ஒரே வழி என நினைத்தவன் அப்போதே படிக்கலானான், அவன் படிப்பதைக்கண்ட கண்மணிக்கு மனநிம்மதி ஏற்பட்டது.
அடுத்து வந்த நாட்களில் பரிட்சைக்காக அனைவரும் படித்துக் கொண்டிருந்தனர், இதில் ஒரு வாரம் சஸ்பெண்ட் கழித்து கவினும் கமலியும் கூட கல்லூரிக்கு மிக ஆர்வமாக வந்தார்கள்.
”கவின் எனக்கு ஒரே பதட்டமா இருக்கு, குணாவும் கண்மணியும் என்ன ஆனாங்கன்னே தெரியலை”
”ஒண்ணும் ஆயிருக்க மாட்டாங்க, நாம அவங்களை எப்படி பார்த்தோமோ அப்படியேதான் இருப்பாங்க”
”ஒருவேளை அவங்களுக்குள்ள காதல் வந்திருந்தா”
“வந்தா என்ன? அதை கெடுக்கவா நமக்கு தெரியாது, டென்ஷன் ஆகாத, எனக்கு கண்மணியை பத்தி நல்லாவே தெரியும், அவள் கண்டிப்பா குணாவை திரும்பி கூட பார்க்க மாட்டா” என சொல்ல கமலிக்கும் குணா மீது நம்பிக்கையிருந்தது, ஆனாலும் சின்ன பயத்துடன் வகுப்புக்குள் சென்றாள்
அங்கோ அனைவரும் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தார்கள், குணா பின் வரிசையில் அமர்ந்திருந்தான், கண்மணி முன்வரிசையில் அமர்ந்திருந்தாள், கவினும் கமலியும் தங்கள் இடத்திற்கு வந்தார்கள் அக்கம் பக்கம் மாணவர்களிடம் விசாரித்து டெஸ்ட் பற்றி தெரிந்துக் கொண்டார்கள், அவர்களுக்கோ ஒரே ஷாக் ஒரு வாரம் என்ன பாடம் நடத்தினார்கள் என்று கூட தெரியவில்லை, சக மாணவர்களிடம் கேட்டு நோட்ஸ் வாங்கி எழுதிக் கொண்டார்கள்.
அதற்கே அவர்களுக்கு இரண்டு நாட்கள் பிடித்தது, அந்த இரண்டு நாட்களிலும் குணாவும் கண்மணியும் சின்னதாக கூட பார்க்கவில்லை, குணா முழுமூச்சில் படிக்க இறங்கிவிட்டான், அவனை தொந்தரவு செய்யக்கூடாதென கண்மணியும் விலகியிருந்தாள், அதைக்கண்ட கமலியும் கவினும் அவர்களுக்குள் எதுவும் நடக்கவில்லை என நினைத்து நிம்மதியானார்கள்.
மறுநாள் பரிட்சை முதல் நாள் மாலையில் கமலியோ கவினிடம்
”கவின் அவங்க பையில இந்த கிப்ட் பாக்ஸ் வைச்சிடு”
”இப்ப எதுக்கு இதெல்லாம் டெஸ்ட் முடியட்டும்”
”ப்ச் சொன்னதை செய், அவங்க டிஸ்டர்ப் ஆகனும், அதனால அவங்க கவனம் சிதறனும், டெஸ்ட் சரியா எழுதக்கூடாது”
”ஏய் எதுக்கு இப்படி சைக்கோ மாதிரி பேசற, அவங்க படிப்பில ஏன் விளையாடற”
”படிப்பை காரணம் காட்டிதானே நம்ம காதலை வேணாம்னு சொன்னாங்க, அந்த படிப்பு அவங்களுக்கு கிடைக்க கூடாது”
”வேணாம் கமலி இது சரியா படலை“
”எனக்காக இதை செய்ய மாட்டியா கவின்” என அவள் உருக்கமாக பேச கவினும் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டான்.
குணாவும் கண்மணியும் அசந்த நேரத்தில் அவர்களின் பையில் கிப்ட் பாக்ஸை வைத்துவிட்டார்கள், பெல் அடிக்கவும் அனைவரும் கிளம்பிச் சென்றார்கள், கவினோ கமலியிடம்
”ஆமா அந்த கிப்ட் பாக்ஸ்ல என்ன இருக்கு”
”எதுக்கு கேட்கற”
”சொல்லு”
”ப்ச் வேணாம் விடு”
”ஏய் வில்லங்கமா எதையும் வைக்கலையே“
”விடுங்கறேன்ல”
”ஏய் எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு என்ன விசயம் சொல்லு“
”அது எதுவாயிருந்தா என்ன இப்ப அவங்களால நாளைக்கு டெஸ்ட் ஒழுங்கா எழுத முடியாது”
”இப்ப என்னன்னு சொல்லப்போறியா இல்லையா” என அவன் கோபத்தில் கத்த அதில் அவள் தான் எதை வாங்கி கிப்டாக வைத்தோம் என சொல்ல கவினோ கோபத்தில் அவளின் கன்னத்தில் விட்டான் ஒரு அறை அதில் கமலி அதிர்ந்தேப் போனாள்.
”பொண்ணாடி நீ பிசாசு, யாராவது இப்படி செய்வாங்களா தப்பில்லையா, சே என்னையும் இதுல இழுத்துவிட்டியே மனசாட்சியே இல்லையா உனக்கு” என கவின் கோபத்தில் கொந்தளிக்க
”போதும் பழிவாங்க இறங்கியாச்சி, எப்படி பழிவாங்கினா என்ன, நான் செய்தது தப்பில்லை” என சொல்லிவிட்டு கமலி சென்றதும் கவின் உண்மையாகவே வருந்தினான்
ஹாஸ்டலுக்கு சென்ற கண்மணியோ தனது பையில் இருந்த கிப்டை கண்டு மகிழ்ந்தாள்
”இந்த குணாவுக்கு வேற வேலையில்லை, நாளைக்கு டெஸ்ட் வைச்சிக்கிட்டு இப்ப இந்த கிப்ட் தேவையா, இவன் காதலுக்கு நேரம் காலம் இல்லை போல, சரி என்னதான் இருக்குன்னு பார்க்கலாம்” என சொல்லிக் கொண்டே அதை பிரித்துப் பார்த்து உள்ளே இருப்பதைக்கண்டதும் அதிர்ந்து ஏதோ கையில் ஆசிட் பட்டதுபோல தனது கையை உதறினாள்.
அவளின் கண்கள் கலங்கிவிட்டது, குணாவா இப்படி என நினைத்து நம்பமுடியாமல் தவித்தாள், மறுபக்கம் குணாவின் நிலைமையும் படுமோசமாக இருந்தது
”கண்மணி எதுக்கு இப்படி என்னை நம்ப மாட்டேங்கறா, திரும்ப திரும்ப என்னை டெஸ்ட் பண்ணிக்கிட்டே இருக்காளே, இதுக்கு என்ன அர்த்தம், நான் என்ன அவ்ளோ கெட்டவனா இல்லை பொண்ணுங்களை பார்த்து அலையறவனா, சே இன்னுமா இவள் என்னை நம்பலை, இன்னும் நான் என்ன செய்தாதான் என்னை நம்புவாளாம்
இதை போய் கிப்டா தந்திருக்காளே, இதை நான் என்னன்னு நினைச்சிக்கறது, இல்லை இதை இப்படியே விடக்கூடாது, அவள்கிட்ட இப்பவே இதைப்பத்தி கேட்டே ஆகனும் அதுதான் சரி” என நினைத்தவன் இரவு மணி பத்தரையிருக்கும், அந்நேரம் ஹாஸ்டல்க்கு சென்றான்
வெளியே இருந்தபடியே கண்மணியை எப்படி அழைப்பது என தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்க கண்மணியே அறைக்குள் இருக்க பிடிக்காமல் வெளியே வந்தாள்.
அவள் வரவும் குணா பார்த்தான், அவளை தன் பக்கம் பார்க்கும் படி கையை அசைத்து சைகை செய்தான், அவளோ கலக்கத்துடன் இருந்ததால் எதையும் கவனிக்கவில்லை, அவனோ தனது பைக்கின் ஹாரனை விடாமல் அடிக்க முதலில் அதை அவள் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை, பி்ன் சத்தம் அதிகமாகவும் பொறுக்க முடியாமல் என்னவென பார்த்தாள், அங்கு குணா இருக்கவும் அதிர்ந்தாள்
அவனோ அவளை தன்னிடம் வருமாறு அழைக்க அவளுக்கோ கோபம் வந்துவிட்டது, கோபத்துடன் அவன் தந்த கிப்டை எடுத்துக் கொண்டு வெளியே வர வாட்ச்மேன் நிப்பாட்ட அவரிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டு குணாவிடம் வந்தவள் சற்றும் எதிர்பார்க்காமல் அவனின் கன்னத்தில் விட்டாள் ஒரு அறை, அதில் அவனே அரண்டுப் போனான்
”மனுஷனா நீ, என்ன நினைச்சி என்கூட நீ பழகினேன்னு இதுல இருந்தே தெரியுது, என்ன இது, இதை போய் கிப்ட்டுன்னு எனக்கு தந்திருக்க, லூசா நீ, இதுதான் உன் காதலா சொல்லு, இதுவா உன்காதல், சே நீ காதலிச்சது என் மனசைன்னு நினைச்சி ரொம்ப பெருமைப்பட்டேன்
ஆனா நீயும் மத்த ஆம்பளைங்க மாதிரி என் உடம்பைத்தான் ஆசைப்பட்டிருக்க, எங்க நான் அதுக்கு சம்மதிக்க மாட்டேன்னு நினைச்சி திட்டம் போட்டு என்னை காதலிக்க வைச்சிருக்க, நானும் உன்னை முழுசா நம்பின பின்னாடி என்னை அடைய இப்படி ஒரு வழியை பார்த்திருக்க
சீய் உன்னைப் போய் நான் காதலிச்சேனே என்னை சொல்லனும், உன்னை பார்த்தாலே எனக்கு வெறுப்பா இருக்கு, என் கண்முன்னாடி நிக்காத போ என்னை விட்டு போ” என அவள் கோபமுடன் சொல்ல அவனோ உடனே புரிந்துக் கொண்டு அவளிடம் தான் கொண்டு வந்த கிப்டை தந்தான்
”என்னது இது?”
”நீ எனக்கு தந்தது“ என சொல்ல அவளோ அதை பிரித்துப் பார்த்து அதிர்ந்து தரையில் விட்டெறிந்தாள்
”இல்லை இதை நான் உனக்கு தரலை இதைபத்தி எனக்குத் தெரியாது”
“யாரோ விளையாடறாங்க கண்மணி, நானும் உனக்கு கிப்ட் தரலையே, நீ சொன்ன மாதிரி நான் டெஸ்ட்டுக்கு படிச்சிக்கிட்டு இருந்தேன், எப்படியாச்சும் என் காதலை காப்பாத்திக்கனும்னு நானே போராடிக்கிட்டு இருக்கேன், நீ என்னடான்னா என் மேல சந்தேகப்பட்டு அடிச்சிட்டியே கண்மணி
நானா இப்படி ஒரு காரியம் செய்வேன், என்னை நீ எப்பவுமே நம்ப மாட்டியா, நான்கூட நீ என்னை டெஸ்ட் பண்றதுக்காகதான் இப்படி கிப்ட் தந்திருக்கேன்னு நினைச்சி உன்கிட்ட சண்டை போட்டு நியாயம் கேட்கலாம்னு வந்தேன், ஆனா இங்க வந்த பின்னாடி பார்த்தா நீ எனக்கு இதை அனுப்பலைன்னு தெரியுது, அப்புறம் இதை யார் நமக்கு அனுப்பியிருப்பாங்க” என கேட்க அவளோ வருந்தினாள்
”என்னை மன்னிச்சிடு குணா உண்மை தெரியாம நான் உன்னை அடிச்சிட்டேன்”
”தப்பில்லை எந்த பொண்ணா இருந்தாலும் இதைதான் செய்திருக்கனும், நீ அடிச்சது எனக்கு வலிக்கலை, ஆனா இதை பார்த்து என்னை நீ தப்பா நினைச்சதுதான் ரொம்ப வலிக்குது, இன்னுமா என்னை நீ நம்பலை”
”அது நான் உன்னை நம்பறேன் ஆனா இதை பார்த்ததும் கோபத்தில யோசிக்க தவறிட்டேன் குணா சாரி“
”வேணாம் சாரி சொல்லாத, அப்படிப்பார்த்தா நானும் கோபத்தோட உன்னை இப்படி இந்நேரம் வந்து பார்த்ததும் தப்புதானே, இதுக்காக நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கறேன் சாரி கண்மணி”
”இது யாரோட வேலையா இருக்கும்”
”தெரியலையே”
”முன்ன நீ அனுப்பின கிப்ட் போலவே இதுவும் இருந்ததால இதை நீதான் தந்தேன்னு நினைச்சேன் குணா, அதனால சந்தேகப்பட்டேன்”
”முன்ன அனுப்பின கிப்ட்டா புரியலையே”
”என்ன தெரியாத மாதிரி பேசற“
”நான் உனக்கு எந்த கிப்ட்டும் இதுவரைக்கும் தந்ததில்லையே” என சொல்ல அவளோ குழம்பினாள்.
”இரு இதோ வரேன்” என சொல்லியவள் அவசரமாக ஹாஸ்டலுக்குள் சென்று தனது அறையில் குணா தனக்கு தந்ததாக தான் மறைத்து வைத்திருந்த காதல் கடிதங்களையும் கிப்டையும் கொண்டு வந்து அவனிடம் தந்தாள்
”பாரு இதெல்லாம் நீ எனக்கு தந்ததுதானே மறந்துட்டியா என்ன” என சொல்ல அவனோ அவற்றையெல்லாம் பொறுமையாக பார்த்துவிட்டு தலையில் பட்டென அடித்துக் கொள்ள அவளோ குழம்பினாள்
”ஏன் உன்னை நீயே அடிச்சிக்கற”
”அய்யோ கண்மணி இதெல்லாம் பொய் நான் உனக்கு எந்த கடிதமும் தரலை”
”என்ன சொல்ற நீ, அப்போ இது நீ எனக்கு தந்ததில்லையா”
”சத்தியமா இல்லை நான் உனக்கு ஒரே ஒரு கடிதம்தான் எழுதினேன் அதை உன்கிட்ட தந்தேன், அன்னிக்கே அதை நீ என் முன்னாடி படிச்சிக்காட்டின, அப்ப கூட நான் உன்கிட்ட ஐ லவ் யூன்னு சொன்னேனே, அது மட்டும்தான் நான் உனக்கு தந்தது, இதெல்லாம் எனக்கு தெரியாது”
”குணா விளையாடாத“
”நான் விளையாடலை கண்மணி சத்தியமா சொல்றேன் நான் உனக்கு எந்த கடிதமும் தரலை”
”அப்படியா” என அவள் கலங்க அவனோ எதையோ யோசித்து
”கண்மணி இதே போல கடிதங்கள் நீ எனக்கு தந்திருக்க“
”எது நானா? நான் என்னிக்குமே கடிதம் எழுதினதில்லையே”
”என்ன சொல்ற கண்மணி, அப்ப உன் பெயரில என்கிட்டயிருக்கற காதல் கடிதங்கள் கிப்ட் அதெல்லாம் என்ன”
“சத்தியமா சொல்றேன் நான் எந்த கடிதமும் எழுதலை எந்த கிப்ட்டும் வாங்கி உனக்கு தரலை” என சொல்ல குணா குழம்பினான்.
…. தொடரும்
error: Content is protected !!