Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

08. சசிரேகா - ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே –13

”சரி சரி வா உட்காரு” என குணா சொல்ல கண்மணியும் ஆசையாக அவனது பைக்கில் ஏறிக் கொண்டு அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ள அவனுக்கு கூச்சம் எழுந்து உடல் நெளிந்தான்

”ஏய் ஏன் நெளியற”

”எதுக்கு இப்படி கட்டிப்பிடிக்கற, எனக்கு ஒரு மாதிரியா இருக்கு கண்மணி” என அவன் இழுத்துச் சொல்ல அவளோ அவனின் தோளில் அடிபோட்டு

”ஒழுங்கா வண்டியை ஓட்டு இல்லை வண்டியை விட்டு இறங்கிடுவேன்” என சொல்ல அவனோ வண்டியை ஓட்டினான், அவளுடன் இருக்கும் பயணத்தை கூட அனுபவிக்க எண்ணி மெதுவாக ஓட்ட அவளோ அலறினாள்



Advertisement

”இவ்ளோ மெதுவா போறதுக்கு நான் பேசாம நடந்தே போவேன், வேகமா போ நேரமாகுது” என அதட்ட அவனும் வேகமாக வண்டியை ஓட்ட அவளோ பயத்தில் அவனை இன்னும் அதிகமாக கட்டியணைக்க அந்த சுகத்தில் இன்ப வேதனையில் முனகினான் குணா

அவனின் முனகல் அவளுக்குள் ஒரு தனி ஈர்ப்பு தந்தது, அதை அனுபவிக்க எண்ணி அவனை இன்னும் அதிகமாக அணைத்துக் கொண்டாள், சூப்பர் மார்க்கெட் வரவும் இருவரும் இயல்புக்கு வந்து தங்கள் வேலை செய்யும் இடத்திற்குச் சென்றார்கள், ஆனாலும் அந்த பயணத்தால் இருவருமே மனம் தடுமாறியிருந்தார்கள்

வேலை செய்துக் கொண்டிருக்கும் போது கூட குணாவிற்கு தனி வீடு எப்படி கிடைக்கும்? யார் தருவார்கள் நமக்கு, என்றுதான் பலமாக யோசித்துக் கொண்டிருந்தான், வேலை முடிந்ததும் கண்மணியை தேடி வந்தான், அவளோ தனது வேலையை முடித்துக் கொண்டு வந்தாள்

Advertisement

”வேலை முடிஞ்சிடுச்சா போலாமா” என குணா அழைக்க அவளோ

Advertisement

”எங்க போலாமா“

”வா உன்னை ஹாஸ்டல்ல இறக்கிவிடறேன்”

”நீ என்ன பப்ளிக் பேருந்தா பிக்கப் ட்ராப் பண்றதுக்கு, ஏதோ அவசரம்னு சொன்னேன், கூட்டிட்டு வந்த, அதுக்காக அதுவே பொழைப்பா இருக்கலாமா, நான் உன்கூட வர்றது பார்த்தா ஹாஸ்டல் வார்டன் என்னை திட்டுவாங்க”

Advertisement

”சரி அப்ப நான் கிளம்பறேன்“

”என்ன அவசரம், நான் ஹாஸ்டல் போறவரைக்கும் தனியா போகனுமா, இந்த இருட்டுல தனியா ரோட்ல போறது எவ்ளோ ரிஸ்க் தெரியுமா, எனக்கு யார் மூலமாவது ஆபத்து வந்தா என்ன செய்றது, என் மேல உனக்கு அக்கறையே இல்லை குணா” என்றாள் கோபமாக

”எனக்கா இல்லை, அக்கறையிருக்கறதாலதான் உன்னை ட்ராப் பண்றேன் வான்னு கூப்பிட்டேன்”

”ம்க்கும் அதெல்லாம் வேணாம் என்கூட நடந்து வா”

”அப்ப பைக்கை என்ன செய்றது”

”பைக்கை தள்ளிக்கிட்டு வா, அங்க கையேந்தி பவன்ல ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடலாம்” என சொல்ல அவனும் சரியென்று அவளுடன் பைக்கை தள்ளிக் கொண்டே நடந்தான்

”அப்புறம் இன்னிக்கு வேலையெல்லாம் எப்படி போச்சி“

”ம்”

”ம்னா என்ன அர்த்தம்”

”பெரிசா எதுவும் இல்லை கண்மணி, எல்லாருக்கும் டெஸ்ட் கொடுத்துட்டு நான் தனியா உட்கார்ந்து பலமா யோசிக்கிட்டு இருந்தேன்“

”எதைபத்தி யோசிச்சிக்கிட்டு இருந்த”

”அதான் வீடு எடுத்து தங்கறதை பத்தி”

”ஏன் இந்த ஊர்ல வீடு தேடறது கஷ்டமா என்ன”

”தனியாளுக்கு வீடு தரமாட்டாங்க கண்மணி”

”அப்போ என் கையால உனக்கு சமைச்சி போட முடியாதா”

”இல்லை அவசரப்படாத பொறு பார்க்கலாம் ஏதாவது வழி கிடைக்கும்”

”இந்தா நோட்ஸ்” என அவள் அவனிடம் நோட்டை தர அவனோ அதை வாங்கிக் கொண்டு

”எதுக்கு இது”

”நீதான் பாடத்தையே கவனிக்கலையே, இதைதான் இன்னிக்கு வகுப்புல நடத்தினாங்க, நான் நோட்ஸ் குறிச்சி வைச்சேன், அதை படி, நாளைக்கு சார் கேள்வி கேட்டா நீ பதில் சொல்லனும்ல“

”ம் சரி அப்புறம் கண்மணி உனக்கு நல்லா சமைக்க வருமா”

”நல்லா சமைப்பேன் சந்தேகப்படாத“

”சந்தேகப்படலை உனக்கு நான்வெஜ் சமைக்க தெரியுமா“

”நல்லா தெரியும்”

”அப்புறம் உனக்கு வேற என்னெல்லாம் பிடிக்கும் உன் ஹாபி என்ன“

”படிக்கறதுதான் என்னோட ஹாபியே, எனக்கு பிடிச்ச விசயம் கூட அதுதான்”

”வேற இல்லயா”

”இதுவரைக்கும் இல்லை இனிமேல தெரியலை“

”புரியலை“

”இதுவரைக்கும் நான் சிங்கிளா இருந்தேன் அதனால படிப்புதான் என்னோட பார்ட்னரா இருந்தது, ஆனா இப்ப நீ வந்துட்டல்ல அதனால என் லைப்ல நிறைய மாற்றங்கள் வரும், அப்ப பிடிச்ச விசயங்கள் மாறும்ல, அதை சொன்னேன்” எனும் போதே தள்ளுவண்டி கடை வர இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடித்து கிளம்பினார்கள்.

”சரி உன் போன் நெம்பர் கொடு ஏதாவது எமர்ஜென்சின்னா போன் பண்றேன்”

”போன்லாம் இல்லை”

”இல்லையா“

”இல்ல எனக்கு தேவைப்படலை சரி உன் போன் நெம்பர் கொடு குறிச்சிக்கறேன்“

”என்கிட்டயும் போன் இல்லை“

”இல்லையா ஏன்”

”ஏன்னா யார் இருக்கா எனக்கு போன் பண்ணி பேசறதுக்கு சொல்லு”

”அதுவும் சரிதான் இப்ப எமர்ஜென்சின்னா எப்படி உன்னை பிடிக்கறது“

”பேசாம இரண்டு போன் வாங்கிடவா”

”அப்போ நான் இரண்டு சிம் வாங்கிடவா”

”ம் சரி நாளைக்கே போன் வாங்கறேன்”

“அவசரப்படாத எதுவாயிருந்தாலும் டெஸ்ட் ரிசல்ட் வந்தாதான், நீ மட்டும் ஒழுங்கா டெஸ்ட் எழுதலைன்னு வையேன்” என அவள் மிரட்டலாகச் சொல்ல அவனோ பயந்தான்

”இல்லை இல்லை நான் நல்லா எழுதுவேன் போதுமா”

“எல்லாமே ரிசல்ட் வந்த பின்னாடிதான்” என முடிவாகச் சொல்ல அவனோ நொந்துப் போனான் அதற்குள் ஹாஸ்டல் வரவே அவளோ அவனிடம் டாட்டா சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

அவள் சென்றதும் தனது லாட்ஜ்க்கு வந்தவன் கூட தங்குபவனிடம் வீட்டை பற்றி விசாரிக்க அவனோ சந்தேகப்பட்டான்

”வேலை வேணும்னு கேட்ட வாங்கித்தந்தேன், இப்ப வாடகைக்கு வீடு கேட்கறியே என்ன விசயம்”

”இதுல என்ன பிரச்சனை”

”இல்லை உனக்குதான் யாருமில்லையே தனியாளு உனக்கெதுக்கு தனி வீடு”

”இந்த இடத்தில தங்க பிடிக்கலை“

”ஏன்”

”இங்க நிம்மதியா படிக்க முடியலை சரியா தூங்க முடியலை, முக்கியமா சாப்பாடு சரியாயில்லை”

”ம் புரியுது அதுக்குன்னு தனி வீடு எப்படி கிடைக்கும், நீ வேற படிக்கற பையன் யாரும் தரமாட்டாங்களே“

”அண்ணா ப்ளீஸ் அண்ணா எனக்காக அண்ணா கொஞ்சம் உதவி செய்ங்கண்ணா” என கெஞ்சினான்

“இரு பொறு பார்க்கலாம் எனக்கு ஒரு வாரம் டைம் கொடு அதுக்குள்ள வீடு கிடைச்சிடும்”

”தாங்ஸ் அண்ணா” என சந்தோஷமாகச் சொல்லிவிட்டு கண்மணி தந்த நோட்ஸ் படிக்கலானான். படித்து முடித்ததும் நிம்மதியாக உறங்கிப் போனான்.

கண்மணியோ தனது அறையில் குணாவை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தாள். அவனின் அணைப்பு அவளை உறங்க விடாமல் செய்தது.

”என்னம்மா கட்டிபிடிக்கறான், ப்பா இதே போல இன்னொரு முறை அவன் என்னை கட்டிப்பிடிச்சா என்னோட உறுதியெல்லாம் தூள் தூளாயிடும் இல்லை படிப்புதான் முக்கியம், படிக்கனும், நல்லபடியா படிக்கனும், குணாவும் படிச்சி பெரியாளாகி வீடு நகைநட்டுன்னு வாங்கனும்னு சொன்னான், அதே போல நானும் படிச்சி பெரிய வேலைக்குப் போய் குணாவுக்கு ஏதாவது செய்யனும், கார் வாங்கித் தரலாம், ஆமா நல்லாயிருக்கும்” என நினைத்தபடியே ஒரு சந்தோஷ பெருமூச்சுவிட்டு உறங்கிப் போனாள்

மறுநாள் கல்லூரிக்கு பாவாடை தாவணியில் வந்தாள் கண்மணி, அவள் அணிந்திருந்த உடைக்கு ஏற்ற நிறத்தில் குணாவும் உடை அணிந்திருந்தான், அதைக்கண்டு கண்மணி வியந்தாள்

”ஐ சேம் பின்ச் எப்படி இதெல்லாம்“

”டெலிபதின்னு வைச்சிக்கயேன்“

”வாய்ப்பேயில்லை இன்னும் அந்தளவுக்கு நமக்குள்ள காதல் வளரலை, உண்மையை சொல்லு எப்படி என் ட்ரஸ் கலர்ல நீயும் கலர் ட்ரஸ் போட்டிருக்க சொல்லு குணா”

”ஓ அதுவா காலையில உன் ஹாஸ்டல் பக்கம் வந்தேன், நீ அழகா குளிச்சிட்டு ஈரம் சொட்ட சொட்ட பாவாடை தாவணியில உன் ரூம் பக்கம் போனதை பார்த்தேன், அப்பவே உன் ட்ரஸ் கலர் நோட் பண்ணி அதே போல நானும் அதே கலர்ல ட்ரஸ் பண்ணிட்டு வந்துட்டேன், எப்படி நல்லாயிருக்கா”

“அதுசரி ஒருவேளை என்கிட்டயிருக்கற கலர்ல ட்ரஸ் உன்கிட்ட இல்லாம போயிருந்தா என்ன செய்திருப்ப”

”இன்னிக்கு போல கடையில போய் புது துணி வாங்கியிருப்பேன்”

”அப்போ இது புது துணியா“

”ஆமாம் நல்லாயிருக்கா”

”எவ்ளோ விலை”

”விலையெல்லாம் எதுக்கு நல்லாயிருக்கா இல்லையா அதை சொல்லு“

”முதல்ல விலையை சொல்லு” என்றாள் கடுமையாக

”வெறும் 950தான்”

”என்னது? என்ன நீ இந்தளவுக்கு செலவாளியா இருக்கியே, உன்னை நம்பி நான் இருக்கேன், ஆனா நீ இப்படி பொறுப்பில்லாம இருக்கலாமா, வாங்கற சம்பளத்தில இப்படி தாராளமா பணத்தை செலவு செய்தா எப்படி குடும்பம் நடத்தறது” என அவள் படபடவென பேச அவனுக்கு சிரிப்பே வந்தது

”என்ன சிரிப்பு“

”இல்லை நீ சொல்றது உனக்கே ஓவரா தெரியலை இன்னும் நாம ஒண்ணா குடும்பமாவே ஆகலை, அதுக்குள்ள  செலவு பத்தி பேசலாமா”

”ப்ச் இப்ப இருந்தே பொறுப்பா இருக்கனும், நீ என்ன சொன்ன, வீடு வாங்கனும், எனக்கு நகை நட்டு வாங்கனும்னு சொன்னியே“

“ஆமாம் கண்டிப்பா வாங்கித்தரேன், ஆனா அதுக்கு படிக்கனும். வேலை கிடைக்கனும், அதுவரைக்கும் பொறுமையா இரு”

”அதுவரைக்கும் இப்படி தாராளமா செலவு செய்யலாம்னு யார் சொன்னது, இப்பவே சிக்கனமா இருக்கனும், நான் கூட உனக்கு கார் வாங்கித்தரனும்னு ஆசைப்படறேன்“

”காரா எதுக்கு”

”நீ எதுக்கு எனக்கு வீடு தரேன்னு சொன்ன“

”அது நாம ஒண்ணா வாழறதுக்கு”

”இதுவும் அப்படித்தான் ஒண்ணா கார்ல போகலாம்ல“

”ஏன் பைக்ல போறதும் நல்லாதானே இருக்கு”

”இருக்கு ஆனாலும் கார் போல பாதுகாப்பு வருமா” என்றாள்

அதைக்கேட்டு குணாவிற்கு சிரிப்பு அதிகமாகி கலகலவென சிரிக்க அவளோ குழம்பினாள்

”எதுக்கு இந்த சிரிப்பு”

”இல்லை பைக்ல வசதி வரலைன்னு கார்ல வசதியாயிருக்கும்னு நீ நினைக்கறது எனக்குப் புரியுது, பைக்ல போனா எல்லாரும் பார்ப்பாங்க அதுவே கார்னா வெளிய இருக்கறவங்களுக்கு நம்மளை தெரியாது, காருக்குள்ள நாம என்ன வேணும்னாலும் செய்யலாம் அதானே, கட்டிப்பிடிக்கலாம், முத்தம் கொடுக்கலாம், அதுக்கும் மேல” என அவன் இழுக்க அவளுக்கு வெட்கமே வந்தது சட்டென கன்னம் சிவந்து அவள் தவிப்புடன் புன்னகையை வீசி அமைதியாக அவனோ அவளின் வெட்கத்தை வெகுவாக ரசித்து

”ஏய் என்ன வெட்கப்படற, அப்ப நான் சொன்னதுதான் உண்மையா, இதை நினைச்சிதான் நீ கார் வாங்கலாம்னு சொன்னியா, சூப்பர் கண்மணி நீ வேற லெவல்” என சொல்ல அவளோ

”சீய் போ குணா, நீ ரொம்ப மோசம் உன்கூட நான் சேரவே மாட்டேன் போ” என சிணுங்கிவிட்டு தன் இடத்தில் அமர்ந்துக் கொள்ள அவளின் சிணுங்கல் அவனை பாடாய்படுத்தியது

”அப்பப்பா உடம்பு சிலிர்த்துப் போச்சி கண்மணி, இப்படியே நீ சிணுங்கிக்கிட்டே இருந்தேன்னு வையேன் என் கன்ட்ரோலை நான் இழந்துடுவேன்னு பயமாயிருக்கு, அம்மா தாயே படிப்பு முடியறவரைக்கும் என்னோட உறுதியில விளையாடாத” என சொல்லி குறுநகை புரிய அவளோ மென்மையாக சிரித்தாள்.

அந்நேரம் பெல் அடிக்க வகுப்புகள் ஆரம்பமானது, முதலிலேயே அடுத்த வாரத்திற்குன்டான மன்த்லி டெஸ்ட் பற்றி தகவல் சொல்ல அதை கவனமாக எழுதிக் கொண்டார்கள், டெஸ்ட் என்பதால் அனைவரையும் படிக்க சொன்னார்கள், அதில் மாணவர்கள் பெரிதாக படிக்காமல் கதை பேசிக் கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்க அதில் கண்மணியால் படிக்க இயலாமல் போக அவளோ குணாவிடம்

”என்னால இங்க படிக்க முடியலை நான்  லைப்ரரிக்கு போறேன்”

”இரு நானும் வரேன்”

”நீ எதுக்கு அங்க வந்து என்னை படிக்க விடாம செய்றதுக்கா”

”இல்லை நானும் படிக்கறேன் உன்னை தொல்லை செய்ய மாடடேன் வா போலாம்” என அழைக்க அவளும் சரியென கிளம்பினாள்.

லைப்ரரியில் அப்படியொரு அமைதி, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேஜை நாற்காலியில் இருவரும் சென்று அமர்நதார்கள், கண்மணி டெஸ்ட்டுக்கு படிக்கலானாள், அவளை பார்த்தபடியே குணா அமர்ந்தான், அவன் எதுவும் படிக்கவில்லை, படிப்பவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க எதேச்சையாக அதைக்கண்டவள்

”குணா படிக்கலையா” என மெதுவாக கேட்க

”படிச்சிக்கலாம் என்ன இப்ப”

”விளையாடாத படிப்பு முக்கியம்”

”படிப்பு முக்கியம்தான் யார் இல்லைன்னு சொன்னா, ஆனா உன்னை பார்க்கறதே அபூர்வமா இருக்கு, அதனால நீயிருக்கறப்ப நான் உன்னைத்தான் பார்ப்பேன், நீயில்லாதப்ப படிக்கிறேன்”

”இந்த கதையே வேணாம் பொழுதுக்கும் என்னை பார்க்கற போதாதா, இங்கயும் பார்க்கனுமா என்ன, எப்படி பார்த்தாலும் நான்தானே மாறிடவா போறேன்”

”அப்படியில்லை கண்மணி எவ்ளோ நேரம் பார்த்தாலும் திகட்டாதது உன் முகம்தான், பார்த்துக்கிட்டே இருக்கனும்னு தோணுது, உன்னை நான் தொல்லை செய்யலை, நான் பார்க்கிறேன் உனக்கென்ன நீ படி, ஒழுங்கா படி, என்னை படி படின்னு சொல்லிட்டு நீ டெஸ்ட்ல மார்க் எடுக்காம விட்டுட போற”

”ஹலோ எனக்கேவா, நான் எல்லாம் நல்லபடியாதான் பரிட்சை எழுதுவேன், நீ முதல்ல படி என்னை பார்க்காத”

”முடியாது நீ படி நான் உன்னை பார்க்கிறேன்”

”நீ என்னை பார்த்துக்கிட்டே இருந்தா என்னால நிம்மதியா படிக்க முடியாது குணா ப்ளிஸ் புரிஞ்சிக்க” என கெஞ்ச அவன் சோகமானான்

”ஓகே நீ படி, நான் க்ளாஸ்க்கு போறேன்” என சொல்லிவிட்டு குணா கிளம்பிச் சென்றுவிட கண்மணி நிம்மதியாக படிக்கலாம் என ஆரம்பித்தாள்

5 நிமிடம் கூட ஆகவில்லை, அவளால் படிக்க இயலவில்லை, குணா இருந்த போதாவது சரி துணைக்கு இருக்கிறான் என்பதில் அவள் படித்தாள், ஆனால் இப்போது குணா இல்லாமல் அந்த வெறுமை அவளை வெறுப்பேற்றியது, லைப்ரரியின் அமைதி அவளை சலிப்படைய வைக்க குணாவை தேடி வகுப்புக்குச் சென்றாள்.

குணாவோ சோகமாக வகுப்புக்கு வந்தான், அங்கு மாணவ மாணவிகள் கதைகள் பேசிக் கொண்டு கலகலப்பாக இருப்பதைக்கண்டு தனது சோகத்தை நீக்க எண்ணி அவர்களுடன் பேச சென்றான், அதிசயமாக அவன் தங்களிடம் பேச வரவும் அனைவரும் ஆர்வமானார்கள்

அவனோ அவர்களுக்கு பிடித்த வண்ணம் கலகலப்பாக பேசினான், ஜோக் சொன்னான், பெண்கள் கேட்டதற்காக இரண்டு வரியில் பாட்டு பாடினான், பாட்டிற்கு ஏற்ப  சின்னதாக நடனம் வேறு, அனைவருக்கும் அவனை பிடித்துவிட்டது.

மாணவர்கள் மாணவிகள் என அனைவரும் அவனுடன் நட்பு பாராட்டிவிட்டார்கள், அவர்களுடன் ஜாலியாக இருந்தவன் எதேச்சையாக வாசலில் பார்க்க அங்கு கண்மணி பத்ரகாளி போல நின்றுக் கொண்டிருந்தாள், அவளைக்கண்டதும் அவனின் மொத்த சந்தோஷமும் ஓடிவிட்டது, அவளோ அவனை முறைத்துவிட்டு வேறுபக்கம் சென்றுவிட அவனோ பதட்டமாகி அவளை தேடி ஓடினான்.

லைப்ரரிக்கு கோபமுடன் வந்த கண்மணியின் பின்னால் வந்து மூச்சிறைக்க நின்றான் குணா

”கண்மணி” என்றான் அவளோ அதை காதில் போட்டுக் கொள்ளாமல் படிப்பது போல பாசாங்கு செய்ய அவளின் கோபத்தை புரிந்துக் கொண்டு அமைதியாக அவளின் பக்கம் அமர்ந்தவன்

”கண்மணி என்னாச்சி? ஏன் இந்த கோபம், ஓ நான் அவங்களோட ஜாலியா இருந்தது உனக்கு பிடிக்கலையா, இனிமேல நான் யார்கூடவும் பேசலை பழகலை, உன்கூட மட்டும் பேசறேன் பழகறேன் போதுமா, ப்ளீஸ் கண்மணி இப்படி கோபமா இருக்காத, என்னால தாங்க முடியலை” என சொல்ல அதற்கு கண்மணியோ

”நான் அதுக்காக கோச்சிக்கலை, தாராளமா நீ யார் கூட வேணும்னாலும் பேசு பழகு, எனக்கு அதைபத்தி எந்த கவலையும் இல்லை“

”வேற எதுக்காக இப்படி கோபமா இருக்க”

”நீ அவங்களோட பழகினது எல்லாம் சரி ஆனா அவங்க உன்னை பார்த்த விதம் இருக்கே”

”யாரை சொல்ற”

”அதான் அந்த பொண்ணுங்க”

”எந்த பொண்ணுங்க”

”ஏய் தெரியாத மாதிரி பேசாத”

”நிஜமாவே எனக்குப் புரியலை யாரை பத்தி சொல்ற”

”3வது வரிசையில இருப்பாங்களே 3 பொண்ணுங்க அவங்களைதான்”

என சொன்னதும் அவனோ யோசித்துவிட்டு

”ஆமாம் அவங்களுக்கு என்ன நான் எந்த பொண்ணுகிட்டயும் பேசலை பசங்களோடதான் பேசிக்கிட்டு இருந்தேன், பொண்ணுங்கதான் நான் பேசறதை கேட்டுக்கிட்டு இருந்தாங்க“

”அது தெரியும்”

”வேற என்ன எனக்குப் புரியலை கண்மணி தெளிவா சொல்லு”

”அந்த பொண்ணுங்க நீ பாட்டு பாடி டான்ஸ் ஆடினதை அவங்க செல்போன்ல வீடியோ எடுத்துக்கிட்டாங்க தெரியுமா” என கலக்கத்துடன் சொல்ல அவனுக்கே அந்த விசயம் அதிர்ச்சியை தந்தது

”என்ன சொல்ற நிஜமாவா”

”ஆமாம்”

”ப்ச் சரி நான் போய் அவங்ககிட்ட பேசறேன்“

”என்னன்னு பேசப் போற“

”எதுக்கு வீடியோ எடுத்தீங்க அதை டெலிட் பண்ணுங்கன்னு சொல்றேன்”

”ஆமா நீ சொன்னதும் அவங்க கேட்பாங்களா என்ன, அதுலயும் அதுல ஒருத்தியிருக்கா பாரு அவள் உன்னை அப்படியே திங்கற மாதிரி பார்த்தா, எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சி” என அவள் கண்கள் கலங்க சொல்ல அவனுக்கு அவளின் அன்பு மிகவும் பிடித்திருந்தது உரிமையுடன் அவளின் கைகளை பற்றினான்

”கண்மணி பயப்படாத, நான் உனக்குதான் உன்னை விட்டு நான் போகமாட்டேன், நிழல் போல உன்னையே சுத்தி வருவேன்” என சொல்ல அவளோ சட்டென தனது கைகளை எடுத்துக் கொள்ள அவனுக்கு மனது வலித்தது

”ஏன் கண்மணி நான் உன்னை தொடக்கூடாதா”

”என்னை விட எல்லாத்திலயும் சிறப்பான ஒருத்தி வந்தா தன்னால நீ மாறிடுவ”

”ஏய் சீ என்ன பேச்சு இது, நீ என் உசுரு, என் வாழ்க்கையில வந்த தேவதை நீ, என் குலசாமியா நான் உன்னை பார்க்கிறேன், எவள் வந்தாலும் எனக்கென்ன, நான் ஏன் மாறனும், கண்மணி நான் உன்னை காதலிக்கிறேன், என் காதல் உண்மையானது”

”ம்க்கும்”

”என்ன அலுத்துக்கற, நான் உண்மையை சொல்றேன், இதுவரைக்கும் எத்தனை பொண்ணுங்க என்னை விரும்பினாங்க, ஆனா நான் யாரையும் ஏறிட்டுப் பார்க்கலை, உன்னை மட்டும்தான் நான் பார்த்தேன், விரும்பினேன், இனிமேலயும் நீ மட்டும்தான் என் வாழ்க்கை நம்பு”

என சொல்லியும் அவள் இன்னும் கண்கள் கலங்கிக் கொண்டிருக்கவே அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.

”சரி கிளம்பு வா“

“நான் வரலை“

”வான்னு சொன்னேன்”

“போ நான் வரமாட்டேன் நான் ஏன் வரனும்”

”வான்னா வரனும்”

”ஏன்”

”கூப்பிடறது நான், வா எழுந்து வா கண்மணி” என அவளை இழுத்துக் கொண்டு சென்றான்.

 தனது பைக்கிடம் சென்றவன்

“ஏறு”

”எங்க கூப்பிடற நான் வரலை இன்னும் காலேஜ் முடியலை”

”ரொம்ப முக்கியம் ஏறு”

”ப்ச் எங்க”

”வான்னா வரனும் வா” என அவன் அதட்ட அதில் அவள் அடங்கிப் போனாள்.

பைக்கில் ஏறிக் கொண்டாள், அவனோ அவளை அழைத்துக் கொண்டு கல்லூரியை விட்டு வெளியேறிச் சென்றான், மணி அப்போதே 11.30 அந்நேரம் கோட்டை கோயிலுக்குச் சென்று ஒரு இடத்தில் வண்டியை நிப்பாட்டி இருவரும் இறங்கி நின்றார்கள்.

”இப்ப போய் எதுக்கு கோயிலுக்கு கூட்டிட்டு வர்ற இன்னும் கொஞ்ச நேரத்தில கோயில் நடை சாத்திடுவாங்க குணா“

”பேசாம இருக்கியா ப்ளீஸ்” என அவளை அதட்டிவிட்டு கோயிலுக்குள் அவளை அழைத்துச் சென்றான்.

…. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!