Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

08. சசிரேகா - ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே –23

”இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்” என்றாள் கமலி அதற்கு கண்மணியோ

”காதலுக்கு அழகு, பணம், வசதி, வாய்ப்பு இதெல்லாம் தெரியாது, நல்ல மனசு இருந்தா போதும்“

”அப்படின்னா மத்த பொண்ணுங்களுக்கு நல்ல மனசு இல்லைன்னு சொல்ல வர்றியா” என கமலி கோபமாக பேச கண்மணி அதிர்ந்தாள். ஆனாலும்



Advertisement

”குணா நினைக்கற அளவுக்கு அவங்க இல்லையோ என்னவோ”

”இதை நம்பற மாதிரியில்லையே, உண்மையை சொல்லு கண்மணி, எதைப் பார்த்து நீ குணாவை காதலிக்க ஆரம்பிச்ச, அந்த லெட்டர்ஸ் கிப்ட்ஸ் இதெல்லாம் பார்த்தா” என கேட்க கண்மணியோ

”இல்லை”

Advertisement

”பின்ன வேற எதனால அவனை உனக்கு பிடிச்சிருந்தது”

Advertisement

”குணாவை நான் முதல் முறை நேர்க்கு நேரா பார்த்தேன், பார்த்த உடனே எனக்கு பிடிச்சிப் போச்சி, கோபம் வரலை, வெறுப்பு வரலை, ஒரு மாதிரி என்ன சொல்றது பிடிச்சிருந்தது, அவ்ளோதான், அதுக்கு அப்புறம் காதல் வந்தது, அவன்தான் உலகம், என் உசுருன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டேன், உசுரே போனாலும் குணாவை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்” என சொல்லவும் அதிர்ச்சியில் கமலி வண்டியை பிரேக்கிட்டு நிறுத்தவும் சரியாக இருந்தது, அதில் கண்மணி தடுமாறி வண்டியை விட்டு இறங்கிவிட்டாள், கமலி உடனே தன்னை சுதாரித்துக் கொண்டு

”சாரி சாரி கண்மணி அடி பட்டிடுச்சா”

”இன்னும் இல்லை சரி காலேஜ் கிட்ட வந்துடுச்சி, நான் இனிமேல நடந்தே போறேன்” என சொல்லிய கண்மணி விறுவிறுவென காலேஜ் நோக்கி நடந்துச் செல்ல கமலிக்கு அவள் மீது கோபமும் ஆத்திரமும் வந்தது.

Advertisement

அந்நேரம் குணா பைக்கில் வந்தான், அவர்கள் செல்லும் போதே பின்னால் ஃபாலோ செய்து வந்தவன் இப்போது ஒன்றும் அறியாதவன் போல கமலியிடம்

”ஹாய் கமலி” என அழைக்க அவளும் புன்னகையுடன்

”ஹாய் குணா“

”வாவ் புது வண்டியா”

”ஆமாம் பிடிச்சிருக்கா”

”சூப்பராயிருக்கு ஆமா இங்க ஏன் நிக்கற காலேஜ்க்கு வரலையா“

”வரனும் உனக்காகதான் காத்திருந்தேன்“

”எனக்காகவா எதுக்கு“

”இந்த வண்டியை எல்லாரும் பார்க்கறதுக்கு முன்னாடி நீ பார்க்கனும்னு ஆசைப்பட்டேன் அதான்”

”நைஸ் சரி வா போகலாம் ஆமா கவின் எங்க”

”அவனை பத்தி பேசாத குணா“

”ஏன் என்னாச்சி“

”அவனை எனக்கு அண்ணன்னு சொல்லிக்கவே எனக்கு வெறுப்பா இருக்கு”

”அந்தளவுக்கு இப்ப என்ன நடந்துப்போச்சி”

”கண்மணி விசயத்தில கவின் செய்தது ரொம்ப தப்பு, அப்பவே அவனை நல்லா திட்டி விரட்டிட்டேன், இனி அவனுக்கு நான் தங்கச்சியும் இல்லை, எனக்கு அவன் அண்ணனும் இல்லை”

”ஆத்திரத்தில எந்த முடிவும் எடுக்காத கமலி, கண்மணி விசயத்தை தள்ளி வை, அவளுக்குதான் எதுவும் ஆகலையே, இதுக்காக நீ உன் அண்ணனோட சண்டை போடனும்னு அவசியம் இல்லை, ஃப்ரீயா விடு”

”இல்லை குணா என்னால முடியாது”

”சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உன் விருப்பம்” என சொல்லிவிட்டு கிளம்ப முயன்றவனை தடுத்தாள்

”ஆஆ ஒரு நிமிஷம் குணா”

”ம் சொல்லு“

”நான் ஒண்ணு கேட்பேன் அதுக்கு நீ உண்மையை மட்டும் சொல்லனும்”

”நான் என்னிக்காவது பொய் சொல்லி நீ பார்த்திருக்கியா என்ன“

”அதுக்கில்லை ரொம்ப பர்சனல் கேள்வியாச்சே அதனால“

”பர்சனலா அப்படியென்ன கேட்கப் போற“

”உனக்கு ஏன் கண்மணியை பிடிச்சிருக்கு”

என கேட்க அவனோ கலகலவென சிரித்தான்

”எதுக்கு இந்த சிரிப்பு, சொல்லு நீ எத்தனை பொண்ணுங்களை ரிஜக்ட் பண்ணியிருக்க, அழகான பொண்ணுங்க, பணக்கார பொண்ணுங்க, ஏன் என்னை கூட நீ ரிஜக்ட் பண்ண, அப்படியிருக்கறப்ப கண்மணிகிட்ட என்ன இருக்குன்னு அவளை நீ காதலிக்கற”

”அவசியம் இதுக்கு நான் பதில் சொல்லனுமா“

”ஆமாம் ரொம்ப நாளா என் மண்டையை குடையற கேள்வி இது, ப்ளீஸ் பதில்  சொல்லு”

”ஏன் கண்மணி மேல பொறாமைப்படறியா”

”சே சே இல்லை தெரிஞ்சிக்கலாம்னுதான்”

”கண்மணியை பார்த்த உடனே எனக்குப் பிடிச்சிப் போச்சி அதனால காதலிக்க ஆரம்பிச்சேன்“

”அதான் ஏன்? எப்படி, அப்படி என்ன அவள்கிட்ட பார்த்துட்ட, என்கிட்ட இல்லாதது அவள்கிட்ட என்ன இருக்குன்னு அவளை காதலிச்ச” என அவள் கோபத்தில் வார்த்தைகளை விட அவனோ வியந்து

”ரிலாக்ஸ் எதுக்கு இப்படி பட்டாஸ் போல வெடிக்கற“

”சாரி”

”இங்க பாரு கமலி, தயவு செய்து உன்னையும் கண்மணியையும் கம்பேர் பண்ணி பேசாத, அவள் வேற நீ வேற, கண்மணியை பார்த்த உடனே இவள்தான் உன் வாழ்க்கைன்னு என் உள் மனசு சொல்லிடுச்சி, இது போல வேற எந்த பொண்ணை பார்த்தும் எனக்கு அப்படி தோணலை, என் உள்மனசு எப்படி அவளை காதலிக்க வைச்சதோ அதே போல கண்மணிக்கும் நடந்திருக்கு

இது வெறும் சாதாரண விசயம்தான், மத்தபடி கண்மணி அழகியா, கருப்பா, பணக்காரியா, ஏழையா, புத்திசாலியா, முட்டாளா இதையெல்லாம் நான் யோசிக்கவேயில்லை, அவளை எனக்கு பிடிச்சிருந்தது, காதலிக்கிறேன் அவ்ளோதான், முடிஞ்சிடுச்சி, அங்க பாரு பெல் அடிச்சிட்டாங்க, நான் போறேன், சீக்கிரமா வா” என சொல்லிவிட்டு குணா சென்றுவிட கமலிக்கு கோபம் தலைக்கேறியது, அந்நேரம் கவின் தன் பைக்கில் வந்து அவளிடம் நின்றான்

”என்கூட வரப்பிடிக்காம தனியா வண்டி வாங்கிட்டல்ல, பரவாயில்லை ஆமா குணாவோட என்னத்த பேசிக்கிட்டு இருந்த”

”ம் ரொம்ப நாளா என் மனசை அரிச்சிக்கிட்டு இருந்த கேள்வியை நான் கேட்டேன்”

”அப்படி என்ன கேள்வி“

”உனக்கு ஏன் கண்மணியை பிடிச்சிருக்குன்னு கேட்டேன்”

“அதுக்கு அவன் என்ன சொன்னான்”

”ஆமா சொன்னான், முட்டாள்தனமா உளறிட்டு போறான், அவன் சொன்னது நம்பற மாதிரியா இருக்கு நான் நம்ப மாட்டேன்”

”சரி வா நேரமாச்சு காலேஜ்க்கு போகலாம்“

”என்கூடவே வராத, அப்புறம் குணாவுக்கு சந்தேகம் வந்துடும், இப்பதான் அவனை நான் நம்ப வைச்சிருக்கேன், அதை கெடுத்துடாத, நீ முன்னாடி போ நான் பின்னாடி வரேன்” என அதட்ட அதில் அவனும் அங்கிருந்து சென்றுவிட கமலியோ எப்படி குணாவை தன் பக்கம் இழுப்பது என பலமாக யோசித்தபடியே வண்டியை ஓட்டிக் கொண்டு கல்லூரிக்குள் வந்தாள்.

வகுப்புக்குள் குணா வந்ததும் கண்மணி அவன் இருந்த இடத்திற்கு சென்று கமலி செய்தது பேசியதை என அனைத்தையும் அவசரகதியில் சொல்லிவிட்டு மூச்சிரைக்க அவனோ அவளை ரசித்தான்

”குணா எனக்கு பயமாயிருக்கு“

”எனக்கும்தான்“

”அந்த கமலி நம்மளை பிரிச்சிடுவாளோன்னு அச்சமா இருக்கு”

”உன் அழகால நல்லபிள்ளையா இருக்கற என்னை தப்பு செய்ய வைச்சிடுவியோன்னு அச்சமா இருக்கு” என சொல்ல அவளோ வியந்தாள்

பின் என்னவென பார்க்க அவ்வளவு நேரமும் அவனது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு அவள் பேசிக் கொண்டிருந்தாள், உடனே வெட்கப்பட்டு தனது கைகளை எடுத்துக் கொண்டாள்

”பரவாயில்லை வைச்சிக்க நல்லாதான் இருக்கு”

”சீய் போ” என சிணுங்கிவிட்டு அவள் தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள்

வாத்தியார் வந்து பாடம் எடுக்க அதன் பின் கவின் வந்தான், அவன் வந்து 5 நிமிடம் கழித்து கமலி வந்தாள், எதுவும் நடக்காதது போல முகத்தை வைத்துக் கொண்டு வந்து இருக்கையில் அமர்ந்து குணாவை பார்க்க அவனோ அவள் தன்னை பார்க்கிறாள் என தெரிந்தும் வேண்டுமென்றே பாராமல் பாடத்தை கவனிக்கலானான்.

மதிய இடைவேளை வரவும் கமலி வேண்டுமென்றே கண்மணிக்கும் குணாவுக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வந்திருக்க அதை அவர்களிடம் தந்து சாப்பிட சொல்லி வற்புறுத்த அவர்களும் வேறு வழியின்றி சாப்பிட்டு முடித்தார்கள்

மதியத்திற்கு மேல் வாத்தியார் ஒருவர் நடந்து முடிந்த பரிட்சைக்கான ரிசல்ட்டுடன் வந்தார், அதை அனைவரும் ஆர்வமாக இருந்தார்கள், கமலிக்கோ திக்திக்கென இருந்தது, குணாவும் சரி கண்மணியும் சரி ஆசையாக இருந்தார்கள், அவர்களின் ஆசையே நிறைவேறியது, வகுப்பிலேயே முதலாவது அதிலும் அதிக மதிப்பெண் பெற்ற குணாவை வாத்தியார் பாராட்ட அனைவரும் கைதட்டினார்கள்.

கண்மணி கூட அசந்துவிட்டாள், இரண்டாவது இடத்தில் கண்மணி வந்தாள், அவளுக்கும் அனைவரும் கைதட்டினார்கள், அந்நேரம் கூட குணாவோ கண்மணியை  ஆசையாக பார்க்க அவளுக்கு புரிந்துப் போனது, அழகாக அர்த்தமுள்ள புன்னகையை பூத்துவிட்டு தன் இருக்கையில் சென்று அமர இதை அனைத்தையும் கண்ட கமலிக்குதான் வயிறு எரிந்தது.

மாலை நேரம் கல்லூரி முடிந்ததும் குணா அவசர அவசரமாக கண்மணியிடம் வர அவன் எதற்காக வருகிறான் என தெரிந்துக் கொண்டு அவளோ வெட்கப்பட கமலி இவ்விருவருக்கும் நடுவில் வந்து நின்றாள்

“போலாமா கண்மணி, உனக்கு வேற வேலைக்கு நேரமாச்சில்ல, வா நான் உன்னை ட்ராப் பண்றேன்” என அழைக்க கண்மணி திடுக்கிட்டாள் குணாவோ

”கண்மணியை நானே கூட்டிட்டுப் போறேன் நீ கிளம்பு கமலி“

”இது நல்லாவாயிருக்கு, இன்னும் உங்களுக்குள்ள கல்யாணம் ஆகலை, இப்படி நீங்க ரெண்டு பேரும் பைக்ல சுத்தினா பார்க்கறவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா, தேவையில்லாத கெட்ட பேரு வரும், அப்புறம் காலேஜ்க்கு தெரிஞ்சா உங்களுக்குதானே அசிங்கம், அப்புறம் உங்களை பிரின்சிபால் கூப்பிட்டு திட்டுவாரு, சஸ்பெண்ட் பண்ணுவாரு, அதனால உங்க படிப்புதானே பாதிக்கும், இதையெல்லாம் யோசிச்சிதான் நான் கண்மணியை கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்”

”கமலி இந்தளவுக்கு நீ என் மேல அக்கறையோட பேசறது நினைச்சா எனக்கு புல்லரிக்குது” என கண்மணி சொல்ல குணாவோ

”கண்மணி இன்னிக்கு வேலைக்கு போகலை அதனால கமலி நீ கிளம்பு”

”வேலைக்கு போகலையா ஏன் என்னாச்சி” என கமலி கண்மணியைப் பார்த்து அதிர்ச்சியுடன் கேட்க அவளோ வியந்து குணாவிடம்

”நான் ஏன் வேலைக்கு போக கூடாது, இத்தனை நாளும் வேலைக்கு போகலை இன்னிக்கும் போகலைன்னா தப்பாயிடும்”

”பரவாயில்லை கண்மணி உன்னை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்“

”எங்க”

”வந்தா உனக்கேத் தெரியும் வா” என அழைக்க கமலி விடவில்லை

“நானும் வரேன்“

”நீ எதுக்கு”

”ப்ச் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுல்ல அதுக்குதான்”

”சந்தேகப்படற அளவுக்கு தப்பான இடத்துக்கு அவளை கூட்டிட்டு போகலை போதுமா, நீ கிளம்பு கமலி, கண்மணி என்கூட வா” என கண்மணியின் கையை கமலி பார்க்க வேண்டும் என்பதற்காகவே உரிமையுடன் பற்றி இழுத்துக் கொண்டு செல்ல கமலி கோபத்தில் பொங்கினாள், ஆனாலும் அவர்களை தனியாக விட மனமில்லாமல் பின் தொடர்ந்தாள்

பைக்கில் கண்மணியை குணா அழைத்துக் கொண்டுச் செல்ல பின்னால் ஒரு பத்து அடி தொலைவில் கமலி வந்துக் கொண்டிருக்க அவளுக்கு பின்னால் 5 அடி இடைவெளியில் கவின் பின் தொடர்ந்துக் கொண்டிருந்தான்

கமலி வருவதைக்கண்டுக் கொண்ட கண்மணியோ குணாவிடம்

”குணா“

”ம்”

”கமலி பின்னாடியே வர்றா“

”அவள் வர்றதை நான் முன்னாடியே பார்த்துட்டேன் நீ கண்டுக்காத அமைதியா இரு“

”ப்ச் எங்கதான் கூட்டிட்டுப் போற”

”ஷ்ஷ் அது சர்ப்ரைஸ்”

”நாமளே பிரச்சனைக்கு நடுவில இருக்கோம், இப்ப இந்த சர்ப்ரைஸ் தேவையா”

“எனக்குத் தேவை, நீ என்ன சொன்ன, பரிட்சையில நல்ல மார்க் எடுத்தா சமைச்சி போடுவேன்னு சொன்னல்ல”

”ஆமாம் அதுக்கென்ன இப்ப“

“அதுக்காகதான் நான் வாடகை வீட்டை பார்த்து வைச்சிட்டேன், அதை உனக்கு காட்டலாம்னு நினைச்சி கூட்டிட்டுப் போறேன்”

”அதுக்குள்ள வீட்டை பார்த்தாச்சா என்ன அவசரம் இப்ப”

”அதுசரி நிதானமா இருந்தா கமலி ஒருத்தி போதும் நம்மளை பிரிக்கறதுக்கு”

”ஆமா எப்படி வீடு கிடைச்சது”

”கஷ்டப்பட்டு தேடி பிடிச்சேன்“

”தனியாளுக்கு எப்படி வீடு தந்தாங்க”

”எனக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு சொல்லியிருக்கேன்”

”அய்யோ யார்கூட”

”உன்கூடதான்“

”விளையாடாதீங்க”

“விளையாடலை இப்படி சொன்னதாலதான் வீடு கிடைச்சது என்ன செய்றது”

”அய்யோ உண்மை தெரிஞ்சா என்னாகும்”

”எதுவும் ஆகாது, உன் அப்பா அம்மாவுக்கு இந்த விசயத்தை சொல்லிட்டேன், அவங்களும் வீட்டு புரோக்கர்கிட்ட பேசிட்டாங்க, அதனால எந்த பிரச்சனையும் இல்லை“

”ப்ச் கமலிக்கு மட்டும் தெரிஞ்சா என்னாகும் தெரியுமா”

”அவள்கிட்டயிருந்து உன்னை காப்பாத்ததான் இவ்வளவும் செய்றேன்”

“என்ன சொல்ற”

”பின்ன அவள் உன்னை தினமும் பிக்கப் ட்ராப் பண்றேன்னு பேசி பேசியே உன் மூளையை சலவை செய்து நீயே என்னை விட்டு போற மாதிரி ஆக்கிடுவா”

”சே என் மேல நம்பிக்கையில்லையா உனக்கு”

”உன் மேலயா சத்தியமா இல்லை”

”என்ன இப்படி சொல்ற”

”பின்ன அப்பா அம்மா சொன்னாங்கன்னு என்னை விட்டுட்டு அந்த கவினை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சவதானே நீ“

”நான் என்ன விரும்பியா சம்மதிச்சேன்” என்றாள் அழுகையுடன்

”அதெல்லாம் எனக்குத் தெரியாது, நீ எனக்கு வேணும், உன்னை என்னால இழக்க முடியாது, நானாவது உஷாரா இருக்கப் பார்க்கிறேன், உன்னை தனியா விட்டாதானே இப்படி எல்லாம் நடக்கும், என்கூடவே இரு, அப்புறம் யாரு நம்மளை பிரிக்கறாங்கன்னு பார்க்கலாம்”

“உன்கூடவேன்னா அதுக்கு என்ன அர்த்தம்”

”ம் ஒரே வீட்ல வாழ போறோம்”

”அய்யோ“

”ஷ்ஷ் கத்தாத, ஒரே வீட்ல வாழ்ந்தாலும் நான் உன்கிட்ட கன்னியமா நடந்துக்குவேன், அந்த வீட்டை நீ ஹாஸ்டலாவே பாரு தப்பில்லை”

”எனக்கு இது சரியாப்படலை”

”எனக்கு இதுதான் சரியான வழியா தெரியுது கண்மணி, உன்னை என்னால இழக்க முடியாது, நீ என்னைப்பத்தி தப்பா நினைச்சிக்கிட்டாலும் பரவாயில்லை, என் பார்வைக்குள்ள நீ இருந்தா போதும்“

”இது அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க”

”எல்லாம் அவங்ககிட்ட நான் சொல்லிட்டேன், அவங்களும் இதுக்கு சம்மதிச்சிட்டாங்க, வேணும்னா நீயே உன் அப்பா அம்மாகிட்ட பேசு“ என சொல்லி அவளிடம் புதிதாக வாங்கிய மொபைல் போனை தர அவளோ வியந்தாள்

”புது போனு ஏது“

”புதுசா வாங்கினேன் இதுல உன் அப்பா அம்மா நெம்பர் இருக்கு பாரு“

”அவங்களுக்கு எப்படி போன்“

“அவங்களை கோவைக்கு ஷிப்ட் பண்ணப்பவே போன் வாங்கித்தந்துட்டேன்”

”இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லலை“

”ஆமா எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு செய்றதுக்கு நான் என்ன அன்னியமா, உன் காதலன், வருங்கால புருஷன், என் மனைவி குடும்பத்துக்கு என்னென்ன வசதி செய்து தரனும்னு நினைச்சேனோ அதையெல்லாம் நான் செய்றேன், இதுல உனக்கென்ன பிரச்சனை“

”அப்படியில்லை”

”போதும் சும்மா என்னை கேள்வி கேட்காத, வீடு வந்தாச்சி இறங்கு” என சொல்லி வண்டியை நிப்பாட்ட அவளும் இறங்கினாள்.

போர்ஷன் வீடு பார்த்திருந்தான், கீழே மேலே என வரிசையாக மூன்று மூன்று என 6 போர்ஷன் வீடுகள் இருக்க அவளோ திடுக்கிட்டாள்.

 

”தனி வீடு பார்த்திருக்கலாம்ல, இப்படி போர்ஷன் வீட்ல எப்படி தங்கறது, அக்கம் பக்கம் இருக்கறவங்க நம்மளை தப்பா நினைப்பாங்க“ என கண்மணி கோபம் கொள்ள அதற்கு குணாவோ

”ப்ச் இப்படி பாதுகாப்பா இருக்கறதுதான் உனக்கு நல்லது, நான் இல்லாதப்ப இவங்க உன்னை பார்த்துப்பாங்க”

”ஆனா நமக்கு கல்யாணம் ஆகலைன்னு இவங்க ஈசியா கண்டுபிடிச்சிடுவாங்க“

”அதுக்கு என்கிட்ட ஒரு வழியிருக்கு வா என்கூட”

”ஆமா இதுல எந்த வீடு நம்ம வீடு“

”நம்ம வீடு மொட்டை மாடியில இருக்கு”

”மொட்டை மாடியிலயா”

”ஆமாம் அதுதான் காலியாயிருக்கு வா வா” என அவளை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டில் ஏற அவளும் ஏறினாள்.

குணாவோ கண்மணி பின்னால் வருகிறாளா என பார்ப்பது போல கமலி வருகிறாளா என்றும் பார்த்தான், அவன் நினைத்தது போல கமலி தனது வண்டியுடன் வேறொரு வீட்டின் முன் நின்று இவர்களை கண்காணிப்பதை அறிந்தவன் உஷாராகி கண்மணியிடம்

”கண்மணி திரும்பி பார்க்காத”

”ஏன்”

”கமலி இருக்கா, நீ அவளை பார்த்தன்னா அவள் உஷாராயிடுவா நீ அமைதியா வா” என சொல்ல அவளும் அமைதியாகவே அவனுடன் சென்றாள்

மொட்டை மாடியில் சிறியதாக வீடு கட்டப்பட்டு இருந்தது, அதன் சாவி கொண்டு திறந்தான், உள்ளே இருவரும் சென்றார்கள், இருவர் தங்கும் அளவு கச்சிதமாக இருந்தது, ஒரு கிச்சன் ரூம், ஒரு பெட்ரூம், பாத்ரூம், சிறிய ஹால் அவ்வளவுதான்

”வீடு சின்னதா இருக்கு”

”சின்னதா இருந்தாலும் நமக்கு இதுவே பெரிசுதான்“

”நல்லாயிருக்கு நான் இதுல அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன்”

”இது போதும் எனக்கு”

”சரி எந்த பொருளும் இல்லையே எப்படி இங்க தங்கறது“

”வரும் அவசரப்படாத, இப்பதானே உனக்கு வீட்டை காட்டினேன், இனிமேலதான் ஒவ்வொண்ணா வாங்கி வைக்கனும், நல்லநாள் பார்த்து இந்த வீட்டுக்குள்ள குடிபோகனும், அன்னிக்கி பாரு எல்லா பொருளும் இங்க இருக்கும்“

”இனி இதுதான் நமக்கான வீடா“

”ஆமாம் கல்யாணம் ஆகறவரைக்கும்தான், ஆன பின்னாடி கோவைக்கு போயிடலாம்”

”சரி”

”ஆஆ மறந்தே போயிட்டேன் இந்தா இதை வாங்கிக்க“ என சொல்லி அவன் தாலியை தர அதைக்கண்டு அவள் திடுக்கிட்டாள்

”குணா இது”

”ம் உனக்கும் கவினுக்கும் ஏற்பாடு செய்தப்ப எடுத்த தாலியிது, அன்னிக்கு இருந்த கலவரத்தில யாரும் இதை கவனிக்கலை, தன்னால என் கைக்கு வரவும் என்னிக்காவது இதோட தேவையிருக்கும்னு நினைச்சி எடுத்து வைச்சேன், அது இப்ப பயன்படுது”

”சரி இப்ப எதுக்கு இதை காட்டற, அப்பா அம்மா இல்லாம கல்யாணம் செய்றது தப்பு“

”ஏய் அவசரப்படாத, நான் ஒண்ணும் உன்னை கல்யாணம் செய்துக்க வரலை, இந்த தாலியை நீயே உன் கழுத்தில போட்டுக்க“

”எதுக்கு?”

”இங்க தங்கறவரைக்கம்தான்“

”ப்ச் இது தேவையா“

“தேவைதான்மா இது உனக்கு அரணா இருந்து காப்பாத்தும்“

“காலேஜ்லயும் இப்படித்தான் வரனுமா என்ன“

”சே சே வேணாம், அங்க நார்மலா வா இங்க மட்டும் இப்படியிரு போதும்“

”எனக்கு இது பிடிக்கலை“

”வேற வழியில்லை, உன் சேப்டி எனக்கு முக்கியம், இங்க இருக்கறவரைக்கும் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சி, நீ என் மனைவி அவ்ளோதான்”

”இல்லை குணா இது என்னமோ தப்பாயிருக்கு“

”நான் உனக்கு தாலி கட்டினாதான் தப்பு, உனக்கு நீயே கட்டிக்க தப்பில்லை”

”இல்லை குணா எனக்கு மனசு வரலை, பயமாயிருக்கு, தாலி புனிதமானது, அதை இப்படி தப்பா பயன்படுத்தறது உறுத்தலா இருக்கு”

”காதல் கூடதான் புனிதமானது, அந்த காதலை காப்பாதிக்க இந்த தாலியாலதான் முடியும், கண்மணி சொன்னாக் கேளு, இதைப்பத்தி உன் அப்பா அம்மாகிட்ட கூட பேசிட்டேன், சந்தேகம் இருந்தா நீ பேசு” என சொல்ல அவளோ போனில் தனது அப்பாவிற்கு தொடர்பு கொண்டு பேசினாள்

அவரும் குணா சொல்வதுதான் சரி என்பது போலவே பேசினார், அதில் அவளும் சற்று அமைதியானாளே தவிர தாலி அணிந்துக் கொள்ள தயங்கினாள்

அந்நேரம் கீழ் போர்ஷனில் இருந்து பெண்கள் சிலர் வருவதைக்கண்ட குணாவோ அதிர்ந்தான்

”அய்யோ போச்சி, கீழ் போர்ஷன்ல இருந்து ஆளுங்க வராங்க, அவங்க பார்க்கறப்ப நீ தாலியோட இருக்கனும் இல்லைன்னா வம்பாயிடும், சீக்கிரமா தாலியை கட்டிக்க” என அவசரப்படுத்த அவளோ தயங்கினாள், கை உதறியது, தாலியை சுமக்க முடியாமல் சுமப்பது போல நின்றாள், அவனோ

”இந்த வீட்டை பார்க்கறப்பவே அவங்க ஆயிரம் கேள்வி கேட்டாங்க, எல்லாத்துக்கும் உன்னை நம்பி நான் பதில் சொல்லி வைச்சேன், இப்ப மட்டும் நீ தாலியை கட்டிக்கலைன்னா அவங்க என்னை காலி பண்ணிடுவாங்க, ப்ளீஸ் கண்மணி, தாலியை நீயே கட்டிக்க, அதான் உன் அப்பா அம்மாவும் சொல்லிட்டாங்கள்ல, ஆபத்துக்கு பாவம் இல்லை சீக்கிரம்” என அவன் அவசரப்படுத்த அவளோ அப்போதும் தயக்கத்துடனே இருந்தாள்.

…. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!