Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

08. சசிரேகா - ஆதலினால் காதல் செய்வீர்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே –27

அதிலும் கமலியின் பார்வை தன் மேனியை அளப்பதைக்கண்டு திடுக்கிட்டு அவசர அவசரமாக வீட்டிற்குள் நுழைந்து கதவை சாத்த அதைக்கண்ட கண்மணியோ அதிர்ந்து

”என்னாச்சி குணா ஏன் இப்படி பயந்திருக்க“

”அந்த கமலி என்னை திங்கற மாதிரி பார்க்கறா, அந்த கவின் என்னை கொலைவெறியோட பார்க்கிறான், அவங்க கண்ல படாம இருக்கதான் உடனே உள்ள வந்துட்டேன்”

”அதுசரி இப்படி அழகா கவர்ச்சியா போய் நின்னா கமலின்னு இல்லை யாரா இருந்தாலும் வைச்ச கண் வாங்காம பார்ப்பாங்க, இது சகஜம்தான் ஆனாலும் குணா சும்மா சொல்லக்கூடாது நீ ரொம்பவே அழகா இருக்க” என அவள் மென்மையாக சொல்ல குணாவிற்கு வெட்கம் வந்து உடலை நெளித்தபடியே



Advertisement

”கண்மணி”

”ம்”

”கண்மணி நான் ஒண்ணு சொல்லவா”

Advertisement

”தாராளமா சொல்லு” என அவனருகில் வர அவனோ சட்டென விலகி நின்று

Advertisement

”நான் ட்ரஸ் மாத்தனும் கொஞ்ச நேரம் வெளிய நிக்கறியா ப்ளீஸ்” என சொல்ல கண்மணி வியந்தாள்

”அப்படிப் பார்க்காத“

”அப்படியில்லை நான் என்ன யாரோவா உன் கண்மணிதானே“

Advertisement

”கரெக்ட்தான், பழைய உன் காதலன் குணாவா இருந்திருந்தா இந்நேரம் நடக்கறதே வேற, ஆனா இப்ப நான் உனக்கு பாதுகாவலனா இருக்கேன், அப்ப உனக்கு நான் பாதுகாப்பு தந்துதானே ஆகனும் அதான்”

”உன்னோட இந்த கன்னியம்தான் எனக்குப் பிடிச்சதே, இந்த கன்னியத்தை நான் வேற எந்த ஆம்பளைகிட்டயும் பார்க்கலை, என்னைப் பார்த்தாலே ஆசைப்படற ஆளுங்க மத்தியில என் மானத்தை காப்பாத்த நினைக்கற உன்னை நான் காதலிச்சது நான் செய்த பாக்கியம்” என சொல்லிவிட்டு மென்மையாக சிரித்தபடியே வீட்டை விட்டு வெளியேறி நின்றாள்.

கமலியோ கண்மணியைக் கண்டதும் ஏமாந்தாள், கண்மணியோ வேண்டுமென்றே அவளிடம் பேச சென்றாள்

”குட்மார்னிங் கமலி” என்றாள் அதைக்கேட்டு அவளும் ஈஈ என இளித்தபடியே

”குட்மார்னிங் கண்மணி“

”நைட் நல்ல தூக்கமா சீக்கிரமா எழுந்துட்ட போல“

”இல்லை புது இடம்ங்கறதால தூக்கம் வரலை“

”ஓ அப்படியா“

”ஆமா குணா ஏன் நைட் வெளிய படுத்திருந்தான்”

”அப்படியா“

”என்ன அப்படியாங்கற நான்தான் பார்த்தேனே, அவன் நைட் முழுக்க வெளியதான் படுத்திருந்தான்”

”ஓஹோ ஆமா நீ ஏன் நைட் முழுக்க குணாவை பார்த்துக்கிட்டு இருந்த”

”அதுவா அதுதான் சொன்னேனே, புது இடம் தூக்கம் வரலைன்னு, அதனால காத்து வாங்கலாம்னு பால்கனிக்கு வந்தா குணா வெளிய படுத்திருக்கறதை பார்த்தேன், அதான் ஏன்னு தெரிஞ்சிக்க கேட்டேன்”

”அதுவா”

”ஏன் வீட்ல இடம் இல்லையா”

”இருக்கே“

”அப்புறம் ஏன் நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா தூங்கறீங்க”

”எங்களோட படிப்பு முடியறவரைக்கும் இப்படித்தான் தனித்தனியா தூங்குவோம்“

”படிப்பா“

”ஆமாம் எங்க இரண்டு பேரோட ஒரே லட்சியமும் படிப்புதானே, இன்னும் 2 வருஷத்தில படிப்பு முடிஞ்சிடும் அதுவரைக்கும் இப்படித்தான் இருப்போம்”

”எப்படி இப்படி தனித்தனியா வாழ்றதுக்கு எதுக்கு கல்யாணம் செய்துக்கனும்” என கவின் பொங்க அதற்கு கண்மணியோ

”எல்லாத்துக்கும் காரணம் நீதான், உனக்கு நான் பயப்பட எனக்கு பாதுகாப்பு தர குணா எடுத்த முயற்சிதான் இந்த கல்யாணம்”

”கல்யாணம் ஆயிட்டா எல்லாம் முடிஞ்சிடுச்சின்னு நினைக்காத கண்மணி” என வில்லத்தனமாக பேசினான் கவின், அதைக்கேட்டு கமலியும் கண்மணியும் அதிர அந்நேரம் குணா வந்தான்

”இதப்பாருடா கண்மணி என் பொண்டாட்டி, அவள்கிட்ட நீ நெருங்கின கொன்னு புதைச்சிடுவேன், கமலி உன் அண்ணன்கிட்ட சொல்லி வை, அப்புறம் அவனுக்கு ஏதாவது ஆச்சின்னா என்னை கேள்வி கேட்காத” என கடுமையாக பேசியவன் கண்மணியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான்.

அவர்கள் சென்றதும் கமலியோ அண்ணன் என கூட பாராமல் கவினை நன்றாக அடித்து வெளுத்தாள், அத்தனை அடிகளை வாங்கி நொந்துப் போனான் கவின்

”முட்டாள் முட்டாள், ஏன்டா இப்படி என் உசுரை வாங்கற, அதான் கண்மணி தெளிவா சொல்றாள்ல, படிப்பு முடியறவரைக்கும்னு, அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு”

”அதுக்கில்லை ஏதாவது தப்பு நடந்துடுமோன்னு பயமாயிருக்கு கமலி”

”அடச்சீ, ஏன்தான் நீ இப்படி கண்மணி மேல சந்தேகப்படறியோ தெரியலை, அவங்க ரெண்டு பேரும் தெளிவா இருக்காங்க, படிப்புதான் அவங்களுக்கு முக்கியம், எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு, அவங்க படிப்பு முடியறதுக்குள்ள அவங்களுக்கு நடுவுல சண்டை மூட்டி விட்டு பிரிச்சி விடறேன்”

”தயவுசெய்து அதை முதல்ல செய் அப்பதான் என் கண்மணி எனக்கு கிடைப்பா“

”அட போடா பைத்தியக்காரா, அவங்க பிரிஞ்சாலும் கண்மணி உன்னை ஏத்துக்குவாள்ன்னு எனக்கு நம்பிக்கையில்லை, அவளுக்கு உன்னை சுத்தமா பிடிக்காது கவின்“

”ப்ச் குணாவை பிரிஞ்சி அவள் நிர்கதியா இருக்கறப்ப ஆதரவா நான் போய் நின்னு பேசினா நிச்சயம் அவள் என்னை சேர்த்துக்குவா”

”அப்படி நடக்கலைன்னா என்ன செய்வ” என கேட்டதும் கவின் குரூரமாக சிரித்து

”வேற ஒரு வழியிருக்கு, ஆனா அதுக்கு அவசியம் தேவைப்படாது, ஒருவேளை தேவைப்பட்டா நான் பார்த்துக்கிறேன், அவளை எப்படி என் வழிக்கு கொண்டு வர்றதுன்னு எனக்கு நல்லாவே தெரியும், அதை நினைச்சி நீ கவலைப்படாத”

”எக்கேடோ கெட்டுப் போ”

”ஒரு விசயம் சொல்லு“

”என்ன”

”அவங்க இரண்டு பேரையும் பிரிச்சிட்டு குணாவை நீ என்ன செய்யப் போற“

என கேட்டதும் அவள் குழம்பினாள் பதில் சொல்ல திணறினாள்

”ஏய் உன்னைத்தான் கேட்கறேன் அவங்களை பிரி்ச்சிட்டு என்ன செய்யப் போற”

”தெரியலை கவின்”

”இப்படி சொன்னா என்ன அர்த்தம், ஒண்ணு குணாவை கல்யாணம் செய்துக்கனும் இல்லையா பழிவாங்கின சந்தோஷத்தில நிம்மதியா இருக்கனும், இது இரண்டுத்துல நீ என்ன செய்யப் போற“

”செய்ற அன்னிக்கு நீயே பார்ப்ப, இப்ப வா ரெடியாகி காலேஜ்க்கு போகலாம்”

”என்னால முடியாது, உன் பேச்சைக் கேட்டு நைட்டெல்லாம் தூங்காம இருந்துட்டேன், இப்ப என் கண்ணு எரியுது நான் போய் தூங்கப் போறேன்”

”காலேஜ்ல அவங்களுக்குள்ள ஏதாவது ஆனா என்ன செய்றது“

”ஒரே வீட்ல இருக்கறப்பவே ஒண்ணும் ஆகலை, காலேஜ்ல போய் என்ன செய்வாங்க, நான் இப்ப தெளிவாயிருக்கேன், படிப்பு முடியற வரைக்கும் கண்மணி குணா பாதுகாப்புல பீரோ லாக்கர்ல பத்திரமா இருக்கற மாதிரி இருப்பா, எனக்கு அவளை நினைச்சி கவலையில்லை இப்ப எனக்கு தூக்கம் வருது, நான்  போய் தூங்கறேன் குட் நைட்” என கவின் கொட்டாவி விட்டு சொல்லியபடியே செல்ல அதைக்கேட்டு கமலிக்கும் தூக்கம் சொக்கியது, அவளும் உறங்கச் சென்றாள்.

குணாவும் கண்மணியும் சாப்பிட அமர்ந்தார்கள், உண்மையிலேயே கண்மணியின் கைபக்குவம் அபாரம் ஒரு வாய் சாப்பிட்ட குணாவின் கண்கள் கலங்கிவிட்டது, அந்த ருசி அவனுக்கு அவனின் தாயின் நினைவை தர அதைக்கண்ட கண்மணியோ

”அய்யோ குணா என்னாச்சி காரமா இருக்கா என்ன“

”இல்லை கண்மணி அப்படியே எங்கம்மா சமைச்ச மாதிரியிருக்கு”

”ஓ அப்படியா”

”சூப்பராயிருக்கு கண்மணி”

”அவ்ளோதானா”

”வேற என்ன ஓஓ சரி, அருமையா இருக்கு இப்படி அற்புதமா சமைச்ச கைக்கு தங்க வளையல் போடறேன், ஆனா இப்போ இல்லை, எனக்கு வேலை கிடைச்ச பின்னாடிதான் அதுவரைக்கும் வெயிட் பண்ணு“

”எனக்கு தங்கம்லாம் வேணாம்“

”வேற என்ன வேணும்” என அவன் கேட்க அவளோ மென்மையாக சிரித்து வெட்கப்பட அவனுக்கு விளங்கவில்லை

”என்ன சொல்லு இப்படி வெட்கப்பட்டா என்ன அர்த்தம்”

”நான் யாரு”

”கண்மணி”

”ப்ச் உனக்கு நான் யாரு”

”காதலி”

”அவ்ளோதானா“

”வேற என்ன”

”ப்ச் மனைவி“

”அது வெளி உலகத்துக்குதான்“

”கழுத்தில தாலியிருக்கு”

”அதை அவசரத்தில போட்டேன், அதுக்கு எந்த அர்த்தமும் இல்லை, அதையே நினைச்சி கவனத்தை தொலைக்காத, உன்னோட லட்சியத்தை மறந்துடாத”

”நான் எதையும் மறக்கலை அல்ப்ப சந்தோஷத்துக்கு அலையறவளும் நான் இல்லை”

”அப்புறம் என்ன”

”சின்ன சின்ன விசயங்கள் நம்ம இரண்டு பேரையும் இணைக்கும், அன்பின் வெளிபாடா நீ எதை தந்தாலும் அது எனக்கு சந்தோஷம்தான்”

”இப்பவும் ஒண்ணும் விளங்கலை தெளிவா சொல்றியா”

”மக்கு”

“திட்டாத கண்மணி“

”போ நேரமாகுது சீக்கிரம் ரெடியாகி வா” என சத்தம் போட குணாவோ குழம்பியபடியே சாப்பிட்டு ரெடியானான்.

இருவரும் காலேஜ்க்கு கிளம்பும் போது கீழ் போர்ஷன் பெண்கள் அவர்களிடம் நல்லவிதமாக பேசி வழியனுப்பி வைத்தார்கள், குணாவோ செல்லும் போதே கமலியின் வீட்டை நோட்டமிட்டான், வண்டி உள்ளே இருக்கவே நிம்மதியானான்

”அப்பாடா இன்னிக்கு நாம நிம்மதியா இருக்கலாம்“

”புரியலை எதை சொல்ற”

”கமலியோட வண்டி இங்க இருக்கு அவள் காலேஜ்க்கு வரல போல”

”ஏன் என்னாச்சி“

”என்னாகனும் விடிய விடிய தூங்காம கொள்ளாம என்னை நோட்டம் விட்டாள்ல, அதான் இப்ப குறட்டை விட்டு தூங்கறா போல, இன்னிக்கு அவள் காலேஜ்க்கு வரமாட்டா நிம்மதியா படிக்கலாம்” என சொல்லிக் கொண்டே வண்டியை ஓட்ட கண்மணியோ வழக்கமாக பைக்கின் கம்பியை பிடிக்காமல் உரிமையுடன் அவனது இடுப்பை வளைத்து அணைக்க அவனுக்கு ஒரு மாதிரி சிலிர்த்தது.

”கண்மணி கூச்சமாயிருக்கு ப்ளீஸ் கையை எடு” என சிணுங்கினான்

அவனது சிணுங்கலை வெகுவாக ரசித்த கண்மணியோ இப்போது இரு கையையும் சேர்த்து அவனது இடுப்பை வளைத்து அணைக்க அதில் தொலைந்தே போனான் குணா, அவனது வண்டியின் வேகம் குறையலானது, விட்டால் வண்டியே நின்றுவிடும் போல அவனை தாண்டி நடந்து சென்றவர்கள் கூட வேகமாக செல்வது போல இருக்க கண்மணி திடுக்கிட்டு சட்டென அவனின் தோளை போட்டு உலுக்க அதில் அவன் இயல்புக்கு வந்தான்

”குணா இந்த வேகத்தில போனா நாம நாளைக்கு காலையிலதான் காலேஜ்க்கு போவோம், சீக்கிரம் போ” என சொல்ல அவனோ

”சீக்கிரம் போகனும்னா அது உன் கையிலதான் இருக்கு கண்மணி நீ சும்மாயிருந்தாலே போதும்“

”ம்க்கும் ஒரே வீட்ல இருக்கறப்ப ஒதுங்கி ஒதுங்கி போக வேண்டியது, இப்ப மட்டும் என்ன சிணுங்கற”

”அது வேற இது வேற, தயவு செய்து தள்ளி உட்காரு, என்னால மூச்சே விட முடியலை மேல சாயாத கண்மணி”

”ஏன் சாய்ஞ்சா என்ன தப்பு” என வேண்டுமென்றே அவனின் முதுகில் நன்றாக சாய்ந்துக் கொள்ள அவனுக்குள் அடங்காத நெருப்பு எரியத் தொடங்கியது

கண்கள் மூடி சில நொடிகள் அந்த இன்பத்தை அனுபவித்தவன் சட்டென ஹாரன் சத்தம் கேட்கவும் விழித்து என்னவென பார்த்தான், அவனால் சின்னதாக ஒரு ட்ராபிக் ஜாம் ஏற்பட்டிருக்க சட்டென வண்டியை வேகம் எடுத்து ஓட்டிக் கொண்டு பறந்தான்.

அவனது வண்டியின் வேகத்திற்கு பயந்து அவள் இன்னும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொள்ள அவனது வண்டியின் வேகம் அதிகமாக ஒரு கட்டத்தில் அவளே பயந்து விலகி சமர்த்துப் பெண்ணாக அமர்ந்துக் கொள்ள அதன்பின்தான் குணா இயல்பு நிலைக்கு வந்தான், அதற்குள் காலேஜ் வரவே இருவரும் அமைதியாக உள்ளே சென்றார்கள்.

பைக்கை ஓரம் கட்டினான் குணா, கண்மணி இறங்கி நின்றதும்

”நீ க்ளாஸ்க்கு போ நான் இப்ப வந்துடறேன்”

”எங்க போற”

”ரெஸ்ட் ரூம்”

”இப்ப எதுக்கு அங்க போகனும்”

”எல்லாத்துக்கும் கேள்வி கேட்காத, இந்தா என் பையை பிடி போ” என விரட்டிவிட்டு அவசர அவசரமாக ரெஸ்ட் ரூம் நோக்கிச் சென்றான், அவனது அவசரத்தைக்கண்டு கண்மணிக்கு சிரிப்பே வந்தது, அவள் கலகலவென சிரிக்க அந்த சிரிப்பின் ஊடே இன்னொரு கர்ண கடூரமான சிரிப்பொலி கேட்டது.

அதில் அவள் திடுக்கிட்டு யாரென பார்த்தாள், அவளுக்கு எதிரே ஒருவன் நல்ல வாட்டசாட்டமாக நின்றுக் கொண்டிருக்க, அவளுக்கு அவன் யார் என்று கூட பிடிபடவில்லை

”யார் நீங்க” என அமைதியாக கேட்க அவனோ வியந்தான்

”என்னையா யார்ன்னு கேட்கற அதுக்குள்ள என்னை மறந்துட்டியா“

”சாரி எனக்கு நீங்க யார்ன்னு தெரியலை” என சொல்லிவிட்டு அவள் கிளம்ப முயல இன்னொருவன் அவளை மடக்கி பிடிக்க அவளுக்கு திக்கென்றது

”என்னையாவது உனக்கு யார்ன்னு தெரியுதான்னு பார்த்துச் சொல்லு” என கேட்க அவளோ வியந்து

”இல்லை தெரியலை“ என சொல்லும்போதே இன்னொருவன் வந்து நின்றான்

”என்ன நீ, அவனையும் தெரியலைங்கற இவனையும் தெரியலைங்கற என்னையாவது உனக்கு தெரியுதா” என கேட்க அவளோ பயந்தாள்

”இல்லை எனக்கு உங்க யாரையும் தெரியலை”

”அப்ப என்னையாச்சும் தெரியுதா” என கடைசியாக ஒருவன் வந்து நின்றதும் அவள் மிரண்டாள். அவளுக்கு அவர்கள் நால்வரும் யார் என்றுகூட தெரியவில்லை. அவர்களை சுற்றி சுற்றி பார்த்துவிட்டு

”வழியை விடுங்க நான் போகனும்” என்றாள் அதற்கு முதலாவதாக வந்தவனோ

”என்னவோ படிப்புதான் முக்கியம், அதை தாண்டி நான் வேற எதையும் யோசிக்க மாட்டேன், இந்த காதல் கீதல் எல்லாம் எனக்கு தேவையில்லைன்னு அன்னிக்கு வசனமா பேசிட்டு இப்ப ஒருத்தனை காதலிச்சி அவனை கல்யாணம் செய்து அவனோட தனியா வாழற போல, இப்ப மட்டும் உன் படிப்பு முக்கியம் இல்லையா, அன்னிக்கு படிப்பை காரணம் காட்டி என் காதலை ரிஜக்ட் பண்ணியே, அப்ப எனக்கு எப்படியிருந்திருக்கும்” என கோபமாகச் சொல்ல அவளோ திடுக்கிட்டாள், பலமாக யோசித்தும் அவன் யார் என அவளால் கண்டறிய இயலாமல் திகைக்க இரண்டாவதாக வந்தவன் அவளிடம்

”உனக்கு படிப்புதான் முக்கியம்னா தாராளமா படி, எத்தனை வருஷம்னாலும் நான் உனக்காக காத்திருப்பேன்னு சொல்லி உன் கால்ல விழுந்து கெஞ்சி இதோ என் கையை கூட பிளேடால அறுத்து ரத்தம் சொட்ட சொட்ட நின்னப்ப கூட கொஞ்சமும் இரக்கமில்லாம என் காதலை வேணாம்னு உதறி தள்ளிட்டு போயிட்டு, இப்ப எவனோ ஒருத்தனை காதலிச்சிருக்கியே சரியான சுயநலவாதி நீ” என சொல்ல அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது

மூன்றாவதாக வந்தவனோ அவளிடம்

”உன் பின்னாடி நான் 3 வருஷமா சுத்தி சுத்தி அலைஞ்சேன், நீ பார்க்கற இடத்தில எல்லாம் நான் நின்னேன், உனக்காகவே என்னோட கெட்ட பழக்கத்தை கூட விட்டேன், ஏன் உனக்காக என் குடும்பத்தோட கூட சண்டை போட்டிருக்கேன், நீதான் வேணும்னு அடம்பிடிச்சி தற்கொலை வரைக்கும் போய் வந்தேன்

ஆனா நீ சர்வ சாதாரணமா என்னை வேணாம்னு சொன்ன, அந்த குணாகிட்ட இருக்கறது எது என்கிட்ட இல்லாம போச்சி, அவனை போல நானும் நல்லவன்தான், படிப்பாளிதான், பணக்காரனும் கூட, நீ ஆசைப்பட்ட படிப்பை நானே படிக்க வைச்சிருப்பேனே, உன் காலடியில கோடி கோடியா பணத்தை கொண்டு வந்து கொட்ட கூட நான் தயாரா இருந்தேனே

இது எல்லாம் எதுக்கு நான் உன் மேல வைச்ச காதல்தான் காரணம், அதை போய் வேணாம்னு சொல்லிட்டு ஒரு அநாதை பயலை காதலிச்சி கைபிடிச்சிருக்கியே, ஏன் என்னைப் பார்த்தாலாம் உனக்கு காதல் வராதா, அவனை பார்த்துதான் வருமா என்ன, அப்படி என்ன அவன் செய்தான் உனக்கு சொல்லு, நானும் அதையே செய்றேன், என்கூடவும் வாழு வா” என அவளின் கையை பிடிக்க வர அவள் அதிர்ந்தாள்

அந்த கையை தட்டிவிட்ட நான்காவதாக வந்தவனோ

”உசுருக்குசுரா உன்னை நான் காதலிச்சேன், ஆனா என் காதலை கேவலமாக பேசி என்னை அவமானப்படுத்தி விரட்டிட்டு இப்ப அந்த குணாவை காதலிச்சி கல்யாணம் செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது, என்னைன்னு இல்லை என்னை போல எத்தனை பேரை நீ விரட்டியிருப்ப, அவங்க சாபம்லாம் உன்னை சும்மாவிடாது, உன்னால நிம்மதியா கூட வாழ முடியாது, நீ எப்படி வாழறன்னு நாங்களும் பார்க்கறோம், எங்க சாபம் உன்னையும் சரி அந்த குணாவையும் சரி, சீக்கிரமாவே பிரிச்சிடும் பாரு” என அவன் மிரட்டலாக சொல்லிவிட்டு கிளம்ப கூடவே மற்ற மூவரும் சென்றார்கள்

அவர்கள் சென்றதும் எதற்கும் கலங்காத கண்மணி கண்கள் கலங்கியபடியே நிற்க அவளை தேடிக் கொண்ட குணாவே வந்துவிட்டான்

”கண்மணி ஏன் இங்கயே இருக்க, உன்னை க்ளாஸ் முழுக்க தேடிக்கிட்டு வந்தேன், வா போகலாம்” என அழைக்க அவளோ தொண்டை அடைக்க

”குணா” என அழுதபடி அழைக்க அவனுக்கு திக்கென்றது

”கண்மணி என்னாச்சி, ஏன்மா அழற, உன்னை விட்டு நான் எங்கயும் போகலை, இதப்பாரு வந்துட்டேன் பாரு” என சொல்ல அவளோ அக்கம் பக்கம் சூழ்நிலையை கூட பாராமல் சட்டென அவனை கட்டியணைத்து தேம்பி தேம்பி அழ அவர்களை கடந்து சென்றவர்கள் அவர்களை விநோதமாக பார்க்க அதைக்கண்டு திடுக்கிட்ட குணாவோ அவளை தன்னிடம் இருந்து பிரித்து

”எல்லாரும் பார்க்கறாங்க அழாத ப்ளீஸ்” என சொல்லும் போதே அவள் அதிகமாக அழவும் நொந்துப் போய் அவளை மறுபடியும் தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு வீடு திரும்பினான், அவர்கள் வந்ததை கவின் கவனித்துவிட்டு அவசரமாக கமலியை எழுப்பிச் சொல்ல அவளோ திடுக்கிட்டு பால்கனிக்கு வந்து பார்த்தாள்.

குணாவோ கண்மணியை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தவன் அவளிடம்

”என்னாச்சி கண்மணி ஏன் இப்படி நடந்துக்கற, இங்கிருந்து போறப்ப நல்லாதானே இருந்த அதுக்குள்ள என்னாச்சி உனக்கு”

”குணா குணா என்னை மன்னிச்சிடு” என்றாள் அழுதுக் கொண்டே

”முதல்ல அழறதை நிறுத்து, என்ன நடந்ததுன்னு சொல்லு” என சொல்லியவன் தன் கையால் அவளது கண்ணீரை துடைத்துவிட்டு, அவளை ஒரு இடத்தில் அமர வைத்து, அவளுக்கு குடிக்க தண்ணீர் தர, அவளும் தண்ணீர் சிறிது பருகி தன் துயரத்தை குறைத்துக் கொண்டாள்

 அவளின் முன் அமைதியாக அமர்ந்த குணாவோ

”என்னாச்சி கண்மணி என்ன பிரச்சனை சொல்லு, அழாம சொல்லு” என சொல்ல அவளும் நடந்ததைக்கூற அவனோ திடுக்கிட்டான்

”யார் அவங்கன்னு காட்டு வா, அவங்களை வெளுத்து கட்டறேன்“

”வேணாம் அவங்களோட பிரச்சனை செய்ய வேணாம்”

”உன்னை அழவைச்சிருக்கானுங்க அவனுங்களை எப்படி சும்மா விடறது”

”ப்ளீஸ் குணா வேணாம் அவங்களை விட்டுடு, எனக்கு அவங்க மேல எந்த கோபமும் பயமும் இல்லை, ஆனா அவங்க விட்ட சாபத்தை நினைக்கறப்ப ரொம்ப பயமாயிருக்கு குணா, எங்க நாம ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவோமோன்னு தோணுது”

”சீய் பைத்தியம் செத்தாலும் நான் உன்னை விடமாட்டேன், என்னை நம்பு” என குணா சொல்லியும் அவளுக்கு நம்பிக்கை வரவில்லை, குழப்பத்தில் இருந்தவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டு அவளது தோளை தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தலானான்.

 

கண்மணியின் வருத்தத்தை போக்க குணா என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என முடிவு எடுத்தான், கண்மணியோ தனது லட்சியமான படிப்பை கூட குணாவிற்காக தியாகம் செய்யலாம் என்கிற அளவுக்கு இறங்கிவந்துவிட்டாள்.

காலேஜ் மட்டுமல்ல குணா கண்மணியை பார்க்கும் போதெல்லாம் அவளின் அழகான சிரிப்பில் கட்டுண்டு போனான், அவளும் அவன் தன்னை பார்க்கவேண்டும் என்பதற்காகவே காத்திருந்து அவன் ஒரு நொடி பார்த்தால் கூட போதும், அந்த நொடியில் கூட ஒரு சிரிப்பை உதிர்ப்பாள், அந்த ஒரு நொடி சிரிப்பில் குணாவும் உருகி அவளையே பார்க்கும் படி அவனது மனம் தூண்ட எவ்வளவு நேரம் ஆனாலும் அவளையே பார்த்தவண்ணம் இருந்தான்.

…. தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!