Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆதவனின் அனிச்சமலரே

ஆதவனின் அனிச்சமலரே 3 (1)

பாலாவிடம் பேசிய பிறகு மனம் லேசாய் இருந்தது மீராவிற்கு அதுவே இரவு நிம்மதியான உறக்கத்தை அளித்தது. மூர்த்தி எழும் முன்பே எழுந்து கொண்டவள் முறைவாசல் செய்துவிட்டு உள்ளே வர மூர்த்தியும் எழுந்திருந்தார்.

“குட்மார்னிங் ப்பா” என்ற மகளின் உற்சாகம் நிரம்பிய குரல் கேட்டு மூக்கு கண்ணாடியை சரியாய் பொருத்தி விழிகள் விரித்து பார்த்தார் மூர்த்தி.

அவரின் அதிசய பார்வை அவளுக்கு சிரிப்பை வரவழைக்க, கிளுக்கி சிரித்தவள் அவரின் பார்வைக்கான அர்த்தம் புரிந்து அமைதியாக இருந்தாள்.

“வெரி குட் மார்னிங்டா” என்றவர் “எனக்கு முன்னாடியே எந்திருச்சிட்டயா.அச்சச்சோ இப்டின்னு தெரிஞ்சிருந்தா நைட்டே துணிய துவைச்சிருப்பேன் இன்னைக்கு முடியாதா?” என்று சிரியாமல் சொன்ன தந்தையை முறைத்து பார்த்தாள் மீரா.



Advertisement

“கிண்டல் பண்றிங்களா? அஞ்சு மணிக்கு எந்திரிச்சதை அதிசயமா சொல்றிங்க!”.

“பின்ன எப்பவும் ஆறு மணி இல்லன்னா எட்டு மணி. இது தானே உனக்கு கோழி கூவுற நேரம்” என்றார் மூர்த்தி.

“ப்ச் அப்பா கிண்டல் பண்ணாதிங்க நைட் சீக்கிரமே தூங்கிட்டதால அஞ்சு மணிக்கெல்லாம் முழிப்பு தட்டிருச்சு. அது மட்டுமில்ல இனிமே, நா உங்களுக்கு முன்னாடியே எந்திரிச்சு வீட்டு வேலை எல்லாத்தையும் செய்ய போறேன்” என்று உற்சாகம் ததும்ப கூறியவள்,

Advertisement

“உக்காருங்க ப்பா உங்களுக்கு காஃபி கொண்டு வறேன்” என்று நகர,

Advertisement

“இல்லடா தண்ணி மட்டும் கொடு போதும் அப்பா கொஞ்ச தூரம் நடந்துட்டு வறேன்” என்றார் மூர்த்தி.

“சரி நானும் உங்க கூட வறேன் பேச்சு துணைக்கு ஆள் வேணுமில்லையா?” என்றதும் மகளை குழப்பத்துடன் பார்த்தார்.

“நீ என்னோட பொண்ணு தானே. உனக்கு ஒன்னும் ஆகலையே மீராம்மா. நல்லா தான இருக்க?”,சீரியஸாக கேட்க,

Advertisement

“ஏம்ப்பா இப்டி கேக்குறிங்க?”.

“இல்ல குளிர் ஒத்துக்காது உடம்பு நடுங்கும் பீவர் வரும் சளி பிடிக்கும். அன்னைக்கு நீ தானே சொன்ன!. அதான் அப்டி கேட்டேன். ஒரு நைட்ல இவ்ளோ பெரிய மாற்றத்தை எதிர்பாக்கலைடா”.

“அது போன மாசம் ப்பா நா சொல்றது இந்த மாசம். ‘மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது’ன்னு பெர்னார்ட் ஷாவே சொல்லிருக்காரு. மாற்றம் எப்ப வேணாலும் வரலாம் அது நல்வழி படுத்துற மாதிரி இருக்கணுமே தவிர, வேற மாதிரி இருக்க கூடாது. நானும் உங்க கூட வறேன் எனக்கு ஆசையா இருக்கு சூரிய உதயத்தை ஒரு முறையாவது பாக்கணும்னு” என்று தத்துவம் பேசியவளை ஆச்சர்யம் குறையாமல் பார்த்தார் மூர்த்தி.

“நா பாக்குறது கனவா இல்ல நிஜமா?. தேவகி பெத்த தேவதை தான் இப்டியெல்லாம் பேசுறதா?” என்று அதிசயித்து கிண்டல் பேச,

“சாட்சாத் நானே தான். திரு மூர்த்தி தேவகியின் தவ புதல்வியே தான்” என்று அசரீரி போல கூறியவள் “தங்களுக்கு வேறு ஏதேனும் ஐயம் உள்ளதா தந்தையே” என்று கேட்க,

“இல்லை மகளே ஐயம் தீர்ந்தது நீ என் புதல்வியே தான்” என்று பழைய படங்களில் பேசுவது போல உணர்ச்சி ததும்ப பேசியவர்,

“ரொம்ப நல்லாவே பேசுற வாலு” என்று தோளில் தட்டி கொடுத்து சிரித்தார்.

“நன்றி தந்தையே” என்று குனிந்து வணங்கியவள் “சரி இருங்க தண்ணி கொண்டு வறேன்” என்று சமையல் அறை சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, குடித்து முடித்தவர் காலி செம்பை அவளிடம் நீட்டினார்.

“வாங்கப்பா போலாம் விட்டா இன்னைக்கு முழுக்க பேசிட்டே இருப்பேன். இந்த நாள் ரொம்ப புத்துணர்ச்சியா இருக்கு” என்று கைகளை விரித்து உடல் சிலிர்த்தவள் மூர்த்தியோடு அதிகாலை ஆதவனை காண ஆவலோடு சென்றாள்.

ராவெல்லாம் நீண்ட சிந்தனையில் உழன்றவனை நித்திரை தேவி ஆட்கொள்ள நீண்ட நேரமானது. என்ன தான் சிந்தனைகள் கட்டவிழ்த்துவிட்ட காளையை போல தறிகெட்டு ஓடினாலும் விடை மட்டும் அவனுக்கேற்ற விதமாய் கிடைக்கவில்லை.

விழிகள் காந்தியதில் சிந்தனையை புறம் தள்ளி நித்திரை தேவியை தழுவ அனுமதித்தவன் மணி எட்டை தாண்டியும் அயர்ந்த உறக்கத்தில் தலையணையை அணைத்தபடி உறங்கி கொண்டிருந்தான் விஷ்வாமித்ரன்.

தேநீர் கோப்பையுடன் அவன் அறைக்குள் வந்த பூங்கோதை அறையின் இருப்பை கண்டு முகம் சுளிக்க,

“ஃபாரின் போய் படிச்சிருக்கான்னு தான் பேரு ரூம எப்டி வச்சுக்கணும்னு கூட தெரியல. என்ன படிச்சு என்ன பிரயோஜனம் சுத்தம் கொஞ்சம் கூட இல்ல சொன்ன கோபம் மட்டும் வந்துருது” என்று புலம்பி கொண்டே கலைந்த உடைகள் புத்தகங்கள் இன்னும் பிற பொருட்களை எடுத்து அதனதன் இடத்தில் வைத்தார்.

உறக்கத்தில் கூட சுள்ளென முகத்தை சுண்டி வைத்தபடி உறங்குபவனை பார்த்தவருக்கு சிரிப்பு பொங்கியது.

“டேய் விஷ்வா எந்திரிடா மணி என்ன ஆகுது இன்னும் தூங்கிட்டு இருக்க” என்று உரத்த குரலில் எழுப்பினார் பூங்கோதை.

“போங்கம்மா தூக்கமா வருது என்ன டிஸ்டப் பண்ணாதீங்க” என்றவாறே புரண்டு படுத்தவனின் அருகில் அமர்ந்து பரிவாக மகனின் தலையை வருடி கொடுத்தவர்,

“எந்திரிடா அப்பா உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்காரு உன்ன பாத்துட்டு தான் ஆபிஸ் போகணும்னு சாப்டாமா உக்காந்துட்டு இருக்காரு. எந்திரிச்சு முகத்தை கழுவிட்டு வா டீ ஆறிட போகுது” என்று மென்மையாய் தாய்மை கலந்த குரலில் எழுப்பினார்.

தணிகாசலம் உண்ணாமல் அமர்ந்திருக்கிறார் என்றதும் உறங்க மனம் வரவில்லை அவனுக்கு. இமைகளை பிரிக்காமல் சோம்பலுடன் எழுந்து அமர்ந்தவன் இரு கைகளையும் பரபரவென தேய்த்து உள்ளங்கையில் பார்வையை பதிய வைத்து பின் பூங்கோதையின் முகத்தில் விழிக்க,

மஞ்சள் பூசிய முகம், நெற்றியிலும் வகுட்டிலும் பெரிதாய் செஞ்சாந்து நிற குங்குமம், மங்களகரமான மஞ்சள் நிற புடவை, முகத்தில் எப்போதும் குடியிருக்கும் அளவில்லா புன்னகை என்று அன்னபூரணியாய் எதிரில் அமர்ந்திருந்தவரை கண்டு மெய் சிலிர்த்தான் விஷ்வா.

சிலிர்ப்பை அடக்கியவன் “குட்மார்னிங் ம்மா” என்று புன்னகை ததும்ப கூற,

“போடா நா உன்கிட்ட பேச மாட்டேன்” என்று பூங்கோதை முறுக்கி கொள்ள,சிரிப்பு மேலோங்கியது அவனுக்கு.

“நேத்து வேகமா பேசுனதுக்கு இன்னைக்கு பனிஸ்மெண்டா சூப்பர் ம்மா இப்டி தான் சுறுசுறுப்பா வேகமா இருக்கணும் சூப்பர் பாஸ்ட் எக்பிரஸ் மாதிரி” என்று கேலி பேச,

“சீக்கிரம் கிளம்பி வா” என்று விட்டு கோபமாக எழுந்து செல்ல முற்பட்டவரை கைபிடித்து அமர வைத்தான் விஷ்வா.

“கொஞ்சம் ஓவரா தான் போயிட்டேனோ” கண்களை சுருக்கி கேட்க,

“கொஞ்சம் இல்ல ரொம்பவே” என்று முகம் வாட கூறியவர் “உன்னோட அப்பா மேல கோபம்னா நா என்னடா பண்ணேன் என்கிட்ட எதுக்குடா அப்டி பேசுன”.

“சாரிம்மா ஏதோ ஒரு வேகத்துல பேசிட்டேன் ஆனா அதை நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ணேன் தெரியுமா?. என்னோட கியூட் அம்மா முகம் சுருங்கி போச்சேன்னு நைட்டு தூக்கமே வரலை. சாரி ம்மா இது தான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் இனி அந்த மாதிரி பேச மாட்டேன் ஓகே” என்று பூங்கோதையின் முகவாயை பிடித்து ஆட்டினான்.

“போதும் கொஞ்சினது இப்ப கொஞ்சுவ உங்கப்பா ஏதாவது சொன்னாருன்னா மொத்த கோபத்தையும் என்மேல காட்டுவ. எத்தனை முறை இந்த மாதிரி பாஸ்ட் அண்ட் லாஸ்ட்டுன்னு சொல்லிருக்க போதும்டா உன்னோட சமாதான பேச்சு. ரெண்டு நாளைக்கு உன்கிட்ட பேச மாட்டேன் உன்மேல கோபமா இருக்கேன்” என்று வெடுக்கென முகத்தை திருப்பி கொள்ள, அவரின் பாவனையில் அவுட்டு சிரிப்பு சிரித்தான் விஷ்வா.

“ம்மா செம்மையா பண்றிங்க நிஜ உலகின் சாவித்ரின்னு பட்டமே கொடுக்கலாம்” என்ற மைந்தனை முறைத்து பார்த்தவர்,

“எல்லாமே உனக்கு விளையாட்டு தான் போடா” என்று மகனின் தோளில் லேசாய் தட்டியவர் அவன் கேலியில் சிரித்து விட்டார்.

“எந்திரிச்சு போய் முகத்தை கழுவிட்டு வா டீ ஆறிட போகுது. ரொம்ப நேரமா உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்காரு சீக்கிரம்” என்று அவசரப்படுத்தினார் பூங்கோதை.

“எனக்காகவா..” என்று இழுத்தவன் “என்ன விஷயம்?”.

“எனக்கு என்ன தெரியும் உன்ன வர சொன்னாரு உன்கிட்ட பேசனுமாம். இப்டியே வந்துடாத குளிச்சிட்டு நீட்டா டிரெஸ் பண்ணிட்டு வா அவருக்கு சுத்தம் ரொம்ப முக்கியம் எனக்கும் தான்” என்று கூறிவிட்டு சென்றுவிட,

இருகைகளையும் தலைக்கு மேல் தூக்கி சோம்பல் முறித்தவன் சன்னமாய் ஆவி பறக்கும் தேநீரை கண்கொட்டாமல் பார்த்தான்.

ஏசியின் குளிரில் ‘நான் உறைந்துவிட போகிறேன் சீக்கிரம் என்னை பருகு’ என்று கூறுவது போல, அந்தோ பரிதாபமாக காட்சியளித்தது பால் கலந்த தேநீர்.

பருக மனமில்லாமல் அதனை புறம் தள்ளியவன் பூந்துவாலையை எடுத்து கொண்டு குளியலறைகுள் புகுந்து கொண்டான்.

suganya mahesh

House wife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!