Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 12.2

கணவன் சொன்னதை போலவே இரண்டு உடையை எடுத்து வந்தவள் ஒன்றை பைரவியிடம் கொடுக்க அவன் சொல்வதன் அர்த்தம் அப்பொழுது தான் புரிந்தது பைரவிக்கு.

நல்ல குணம் தான் இவளுக்கும். ஏதோ தன்னோடு ஏற்பட்ட ஒரு மன கசப்பில் தான் தன்னோடு ஒன்ற பிடிக்காமல் விலகி நிற்கிறாள் என புரிந்து கொண்டாள்.

வந்த வேலை முடிந்து வீடு செல்ல புறப்பட்ட வாகனம் வீட்டு வாசலில் நிற்காமல் மஹேந்திரா ஷோ ரூம் முன்னால் நின்றது.

“ஆனந்த்…” அவன் நோக்கம் உணர்ந்து மகிழ்வதா, உணர்ச்சிவச படுவதா என தெரியாமல் விழித்திருக்க அவள் மகிழ்வையும் சேர்த்து காட்டிவிட்டாள் அவன் தங்கை.



Advertisement

சந்தோசமாக, “டேய் தேவா கார் வாங்க போறோமா?” சகோதரனிடம் ஆசையாக கேட்டவள், “புதுசா XUV ஒரு மாடல் வந்துருக்காம். அத வாங்கலாம் சரியா?” என்றவள் ஏதோ நினைவோடு,

“ஆமா நீ தான் கியா வாங்கணும் சொல்லுவ இப்ப என்ன மஹேந்திரா ஷோரூம் வந்துருக்க?” என்றாள் கேள்வியாக.

“லூசு, ஒளறிட்டே இரு” சகோதரியை மதிக்காமல் கீழே இறங்கி மனைவிக்காக காத்திருந்தவன் அவள் வந்ததும் உள்ளே செல்ல, “டேய் xuv தானே வாங்க போறோம்?”

Advertisement

சகோதரன் கையை சொரிந்துகொண்டே கேட்டாள். அவள் தொல்லை தாங்காமல், “நீ எது கேக்குறியோ அத தவற வேற என்ன வேணாலும் நான் வாங்குவேன்” பற்களை காட்டி சிரித்த சகோதரனை சுற்றம் மறந்து அடிக்க வெறியேறியது இஷாவிற்கு.

Advertisement

வரவேற்பு பலமாக கிடைத்தது தேவாவிற்கு. காரணம் அந்த ஷோரூம் ஓனர் தேவாவின் நண்பன். அனைத்து வாகனத்தையும் காட்டி அதன் சாராம்சங்களை விளக்கி முடித்து மீண்டும் ஆபீஸ் வர, “என்னடா டிசைட் பண்ணிருக்க?” என்றான் அவன் நண்பன்.

“XUV XUV” என்றாள் அவன் தங்கை வேகமாக.

“அவளுக்கு கல்யாணம் ஆகி போனாலும் அவ புருஷன் காசுல எதையும் செலவழிச்சிட கூடாதுன்னு என் பர்ஸை எம்ட்டி ஆக்குறா” அவளை கிண்டல் செய்வதே என் முதல் வேலை என்பது போல் இருந்தது தேவாவின் செயல்க.

Advertisement

 “ஹிஹி… வீட்டுக்கு வா உனக்கு இருக்கு” சகோதரனுக்கு சிரிப்போடு பதில் தந்தாள் இஷா.

“டேய் நான் ஸ்கார்பியோ எடுத்துக்குறேன்” எனவும் பைரவிக்கு விழிகள் விரிந்தது இன்ப அதிர்ச்சியில். மனைவியை பார்த்து திரும்பிய தேவா கண்ணடித்து மீண்டும் நண்பனிடம் பார்வியை செலுத்த அவனது சிறிய அசைவில் சொல்ல முடியாத உணர்வுகள் பைரவியினுள்.

அவளுக்கு பல வருடங்கங்களாக ஸ்கார்பியோ தான் வாங்க வேண்டும் என ஆசை. அத்தை வாங்க தந்தையோ அண்ணனோ பெரிதும் விருப்பம் காட்டாத காரணத்தினால் அவளும் கேட்டு, பிறகு கேட்பதையே விட்டுவிட்டாள்.

வரி முதல், லோன் வரை வாகனம் சார்பாக தனக்கு இந்த சந்தேகங்களை தீர்க்கவே தேவாவிற்கு ஒரு மணி நேரம் பிடித்தது. அதன் பிறகு டெஸ்ட் டிரைவ் சென்று அதையே பதிவு செய்துவிட்டான்.

“சரி டா ஒரு மாசத்துல டெலிவரி எடுத்துக்கலாம். நான் வண்டி வந்ததும் தகவல் சொல்றேன். அப்றம் கல்யாணத்துக்கு கூப்பிடவே இல்ல” என்றான் அவன் நண்பன்.

“விருதுநகர்ல நடந்தது, வைக்கலாம் ஒரு நாள் பார்ட்டி” இரண்டு பெண்களை வைத்து பேச்சுகளை பெரிதாக வளர்க்கவில்லை தேவா, அளவோடு பேசி விடைபெற்று வந்தான்.

சகோதரியிடமும் மனைவியிடமும் கார் பற்றிய எந்த பேச்சையும் வீட்டில் பேசவே வேண்டாம், அன்னைக்கும் தந்தைக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமென பல முறை பாடம் எடுத்தான்.

ஷோரூமில் சொன்னதை விட பத்து நாட்கள் அதிகம் தான் ஆகியிருந்தது வாகனம் வர. எடுத்தவுடன் வீட்டினரை அழைத்து சென்று கோவிலில் வைத்து பூஜை போட்டு மன நிறைவோடு வீட்டிற்கு வந்தான் தேவா. அவன் முன்னேற்றத்தை எண்ணிய அவன் அன்னை எதுவும் பேசவில்லை.

அவன் தந்தை தான், “வாங்குறது எல்லாம் சரி தான். ட்யூ கட்ட முடியுமா?” என்றார் எடுத்த எடுப்பிலே.

“ட்யூ கட்ட என்னால முடியும். அப்டியே முடியாளானாலும் வண்டிய விப்பேனே தவற உங்ககிட்ட வந்து நிக்க மாட்டேன்” கத்திவிட்டு அறையை நோக்கி சென்றுவிட்டான்.

“அவனும் எத்தனை நாள் ப்பா உங்க வண்டிய எடுத்துட்டே இருப்பான்? அவனுக்கும் ஆசை இருக்கும்ல?” இஷா சகோதரனுக்காக தானே முன் வந்து பேசினாள் முதல் முறையாக.

“என்ன அவனுக்கு சப்போர்ட்?” மகளிடம் சண்டைக்கு நின்றார்.

“ப்பா ரியாலிட்டி ப்பா” தந்தையின் பேச்சில் திருப்தியடையாத மகள் தலையை ஆட்டி சென்றுவிட்டாள்.

மகன் இரவு உணவை உண்ணாமல் செல்வதை கவனித்த அவன் அன்னை பைரவி கையில் அவனது உணவை திணித்து எதுவும் பேசாமல் சென்றவேளை பார்த்து பைரவிக்கு அதிர்ச்சி.

அவளும் ஒரு மாதமாக கவனித்து தான் வருகிறாள், அவரிடம் மொத்தமும் மாற்றம் இல்லை என்றாலும் தன்னை அதிகம் வார்த்தைகளால் வதைக்கவில்லை. அதை விட தேவாவை அதிகம் பேசுவதில்லை. அதே சமயம் கணவன் பேசுவதையும் தடுக்கவில்லை.

கணவன் உணவோடு தனக்கும் உணவை எடுத்து அறைக்கு சென்றாள். ஷோரூமில் இருந்து வாங்கி வந்த பில்லை பார்த்துக்கொண்டிருந்தவன் மற்றொரு கையில் கேள்குலேட்டர் இருந்தது.

அதை வாங்கி ஓரமாக வைத்து அவன் கையில் உணவை திணித்தாள். மறுக்காமல் உணவை உண்டு மீண்டும் அதே வேலையை செய்ய அவன் அருகில் அமர்ந்திருந்த பைரவி கண்கள் கணவனை விட்டு அகலவில்லை.

“என்ன பார்வை?” என்றான் அவளை பார்க்காமல்.

“சும்மா பாக்குறேன்” என்றாள் கன்னத்தில் கை வைத்து.

ஓரப்பார்வை பார்த்தவன், “போய் படு” என்றான்.

அவளோ நகரவில்லை இரண்டு மாதங்களாக அவனை பேச விட்டு கேட்டவளுக்கு இன்று அவன் பேச்சு இல்லாமல் தூக்கம் வரவில்லை.

“என்னடி உனக்கு வேணும்?” மனைவியின் குறுகுறு பார்வையில் தேவாவிற்கு வெட்கம் வந்துவிட ஒரு கை வைத்து முகத்தை மறைத்தான்.

மனைவியின் குறுகுறு பார்வையை தவிர்க்க அவன் காட்டும் வெட்கம் பெண்களின் வெட்கத்தை விழுங்கி உண்ணும் அளவு அளப்பரியதாய் இருந்தது.

மீசையை முறுக்கிக்கொண்டு செல்லும் கணவனின் முகத்தில் குறுஞ்சிரிப்பு கலந்த வெட்கத்தில் சிவந்திருக்கும் அவன் செவிமடல் கூட பைரவிக்கு குதூகலத்தை தந்தது.

“ஹே அப்டி பாக்காதடி. ஒரு மாதிரி இருக்கு” என்றான் மேலும் சிரித்தவாறே.

“ஆனந்த் நீங்க வெக்கப்படிங்க” என்றாள் மகிழ்ச்சி செய்தியாக.

கன்னத்தை தேய்த்து காதுமடலை சொரிந்தான், “இல்லையே. கொசு கடிச்சா எனக்கு அப்டி தான் சிவந்துகுமாம். அம்மா சொல்லுவாங்க” என்றான்.

அவன் சமாளிப்பு அழகாய் தான் இருந்தது, “ஏன் திடீர்னு கார்? அதுவும் ஸ்கார்ப்பியோ?” கேட்டாள் கணவனிடம்.

தோளை குலுக்கினான் சர்வ சாதாரணமாக, “சும்மா தான். எனக்கு புடிக்கும்” என்றான்.

மீண்டும் மீண்டும் ஒரே கணக்கை போடுபவன் கையிலிருந்த பொருட்கள் அனைத்தையும் ஓரமாக ஒதுக்கி வைத்து, “எனக்கு தெரியும் உங்களால இந்த கார் மட்டும் இல்லை. இதே மாதிரி பத்து சார் ட்யூ கூட கட்ட முடியும்”

மனைவி சொன்ன அந்த ஒரு வார்த்தை போதாதா கணவனுக்கு? யானையையே தூக்கி சுழற்றும் தைரியம் வந்தது தேவாவிற்கு.

“மாமா பேசுனது வருத்தமா உங்களுக்கு?” அவன் கையை பற்றி ஆறுதலாய் கேட்டாள் பைரவி. இல்லை என தலையை அரை மனதாய் ஆட்டிய தேவா நன்றாக அவள் முகம் பார்க்கும்படி திரும்பி அமர்ந்தான்,

“இந்த ரூம் உள்ள அம்மா அப்பா இஷா யாருமே வர வேணாம். நீயும் நானும் மட்டும் தான். நமக்கான பேச்சு மட்டும் தான் இருக்கனும்” என்றவன் விரல்கள் அவள் கையின் மென்மையை சோதித்தது.

“அது மிஸ்டர் தேவானந்த்க்கும் பொருத்தம் தானா?” தலை குனிந்து அவன் விழிகளை பார்த்து அவள் கேட்ட தினுசில் தேவா சிரித்துவிட்டினான்.

“சும்மா கணக்கு பாத்துட்டு இருந்தேன் சக்கரை” என்றான்.

“ம்ம்ஹ்ம் இந்த தேவா நல்லா இல்லை. எனக்கு என்கிட்ட முதல் நாள் சண்டை போட்ட தேவானந்த் தான் வேணும்”

“அவன் கோவக்காரன் ஆச்சே” – தேவா

“இருந்துட்டு போகட்டும்” சாதாரணமாக தோளை குலுக்கினாள் பைரவி.

“அவன் முரடன் சக்கரை” சக்கரை மிகவும் தித்திப்பாக வந்தது தேவாவின் குரலில்.

“இருக்கட்டும்” என்றாள் அதற்கும்.

“சரி எங்கையாவது வெளிய போகலாமா நம்ம கார்ல?” ஆசையாக கேட்டான்.

“ம்ம்ம் ம்ம்ம்” அவனை விட ஆசையாய் தலையை ஆட்டிய பைரவி, “என்ன உங்க தோப்புக்கு கூட்டிட்டு போறிங்களா?” என்றாள்.

“அவ்ளோ தானே? நாளைக்கு மூணு நாள்க்கு டிரஸ் எடுத்து வச்சு ரெடியா இரு. நம்ம தோட்டத்துக்கு போகலாம்” நம்ம தோட்டத்தில் என தேவா கொடுத்த அழுத்தம் அவளுக்கு எச்சரிக்கை செய்தி அவனது அனைத்தும் அவளுடையதென.

எப்பொழுதும் தேவா இன்பமாக சுற்றி திரிய அன்று இரவு பைரவிக்கு அத்தனை மகிழ்வு, நகரத்தின் காற்றை மட்டுமே சுவாசித்த மக்களுக்கு கிராமங்களின் சாயல் கூட சொர்கமாய் தான் தெரியும்.

அது போல் தான் பைரவிக்கு எங்கு திரும்பினும் பச்சை செடிகளை பார்த்து கண்கள் மூலம் பூக்கள் பூத்து குலுங்கிட வேண்டும்.

காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து சென்று சமையல் வேலையை முடித்து ஏழு மணிக்கு தயாராகி நிற்க, அவள் கணவனோ தன்னுடைய அறையில் இருக்கும் ஸ்பீக்கரை உயிர்ப்பித்து எந்த பாடலை போடலாம் என சிந்தனையோடு நின்றான்.

“ஆனந்த் வேகமா” அவள் அவசரப்படுத்த, “இருடி காலைல சில்லுனு பாட்டு கேக்க வேணாம்?”

இளையராஜாவின் இசை பின்னணியில் தவழ, “இந்த பாட்டு வைப் பண்ணிட்டு இரு சக்கரை. மச்சான் அரை மணி நேரத்துல வந்துடுவேன்” என கூறி குளியலறையினுள் மறைந்து கொண்டான்.

என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா…
தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…

கணவனுடைய உடைகளையும் சில எடுத்து வைத்து ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை, “குளிச்சிட்டிங்களா?”

“போகலாமா?”

“வண்டில பேக் வச்சிடவா?”

“பிரஷ் எடுக்கல அங்க வாங்கிக்கலாமா?” கேள்வி மேல் கேள்வி கேட்டு கேட்டு தேவாவை கால் மணி நேரத்தில் வெளியே இழுத்து வந்திருந்தாள்.

“ஏன்டி உனக்கு இந்த அவசரம்? எப்போ போனாலும் அந்த ஊர் அதே மாதிரி தான் இருக்கும்”

தலையை கூட சரியாக துவட்டாமல் இருக்க, “டிரஸ் மாத்துங்க மாத்துங்க” கையில் துணியை திணித்து அவசரப்படுத்த அவனோ அவளை மதிக்காமல் அவள் கையை பிடித்து உல்லாசமாக சுற்றிவிட்டு, பின்னால் பாடும் பாடலை ஆசையாக பாடினான் சிரிப்போடு.

கைகள் இடைகளில்
நெளிகையில் இடைவெளி

“ஆனந்த்…” பைரவி வெட்கத்தை மறைத்து அவனை தடுக்க, அவனோ மனைவியின் நாடியை ஒற்றை விறல் கொண்டு ஸ்பரிசித்து குனிந்து அவளிடம் மீண்டும் பாடலை பாடினான்.

குறைகையில் எரியும் விளக்கு
சிரித்து கண்கள் மூடும்

பனிவிழும்
மலர்வனம் உன்
பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம்

வசந்த காலத்தின் பூக்களை தலையில் கொட்டியது போல் உற்சாகம் நிற்காமல் அவளை சுற்றி சுற்றி ஆடியவன் ஆட்டத்தை தடை செய்ய ஸ்பீக்கரை நிறுத்திவிட்டாள் பைரவி.

“சக்கரை…” ஏமாற்றத்தில் சிணுங்கினான். “என்ன தோட்டத்துக்கு கூட்டிட்டு போங்க. அங்க போனதும் தாராளமா இப்டி ஆடுவீங்களாம் அதை நான் ரசிச்சிட்டே பாப்பேனாம் சரியா?” என்றாள்.

“கொடுமைக்காரி” மனைவியை திட்டி சிகையில் சொட்டும் நீரை வேண்டும் என்றே அவள் முகத்திற்கு நேராக வைத்து ஆட்டினான்.

“ஆனந்த்…” என்று அவன் சேட்டையில் மெல்லிய சத்தத்தோடு சிரித்தவள் அவன் முகம் பற்றி திருப்பிவிட்டு தன்னுடைய முகத்தையும் மறு பக்கம் திருப்ப முனைய அவளே எதிர் பாராமல் தன்னுடைய பலம் கூட்டி தேவாவை தள்ளியிருந்தாள்.

மனைவியை சுற்றிவிட்டு தானும் சுற்றி ஆடி இருவரும் அறையின் மத்தியில் நிற்க மனைவி தள்ளியதில் பிடிமானம் இல்லாததை உணர்த்த தேவா, தன்னுடைய ஒரே பிடிமானமாய் காட்சிதரும் செப்பு சிலையவளின் இடது பக்க இடையை வலக்கரம் கொண்டு யோசிக்காமல் அழுத்தமாய் பற்றிட சிலையாய் உறைந்து நின்றுவிட்டாள் பைரவி.

முகத்தை சுவற்றை நோக்கி திருப்பி வைத்திருந்தவள் அவன்தொடுகையையும் நெருக்கத்தையும் சடுதியில் உணர்ந்து தீயை தீண்டியவள் போல் தேவாவின் முகத்தை அதிர்ந்து பார்க்க, தேவாவின் பார்வையோ தன்னுடைய நெஞ்சமதை சூடேற்றும் மனைவியின் மோகனங்களில் காதலோடு கலந்திடத் துடித்தது.

அதில் மென்மேலும் அனலிட்ட புழுவாய் துடித்து நொடி பொழுதில் கணவனை உதறி தள்ளியவள், கரைகாணாது வடியும் கண்ணீரையும் கட்டுப்படுத்த முயன்று தோற்று ஓடோடி குளியலறைக்குள் நுழைந்து, “நான் நான் அசிங்கம் தேவா, உங்க கை என்மேல படக்கூடாது” என்று வாய்விட்டே கதறலானாள் ஆனந்தின் பைரவி.

“பைரவி…” தேவாவின் மென்மையான அழைப்பு அவளை மேலும் குற்றஉணர்ச்சியில் ஆழ்த்தியது.

“மன்னிச்சிடு சக்கரை” வெளியில் கேட்ட தேவாவின் குரலில் அவன் மனநிலையையும் கெடுத்திட கூடாதென வெளி வந்தாள், “கெளம்பலாமா?” என்று.

வேதனை படிந்த முகத்தை பார்த்தவன் சரி என கூறி அவள் எடுத்து வைத்திருந்த உடையை அணிய குளியலறை சென்ற சில நொடிகளில் அவன் கைபேசி அலறியது.

யார் என பார்க்க சென்ற பைரவி தொடுதிரையில் குணா என்ற பெயரை பார்த்ததும் அழைப்பை ஏற்று காதில் வைக்க அந்த பக்கம் காரமாக வார்த்தைகள்.

“டேய் மயிறு போன் எதுக்கு வச்சிருக்க? போன் பண்ணா எடுக்காம என்னடா பண்ற?” எடுத்த எடுப்பிலே உச்சக்கட்ட கோவத்தில் கத்தினான் குணா.

மேலும் அவன் பேசும் முன்பு, “அண்ணா நான் பைரவி” முந்திக்கொண்டு விழித்தாள்.

“சாரி சாரிம்மா. தேவா இருக்கானா?” என்றான் சங்கடமாக.

“டிரஸ் மாத்…” சரியாக தேவா வர, “தோ குடுக்குறேன் ண்ணா” அவனிடம் கைபேசியை கொடுத்து கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.

“சொல்லு குணா” என்றான் தேவா சட்டையின் பட்டனை மாறிக்கொண்டே.

“மாப்பிள்ளை, செந்தில் அண்ணே இறந்துடுச்சுடா” என்றான் குணா.

“என்னடா சொல்ற? எப்படி? நேத்து கூட பாத்தேனே மாப்பிள்ளை” பதட்டமாக பேசியவன் அணிந்துகொண்டிருந்த சட்டையை அவிழ்த்து சாதாரண டீ-ஷர்ட் ஒன்றை அணிந்தான்.

“எவ்வளவோ முயற்சி பண்ணியும் காப்பாத்த முடியல தேவா” கசப்பான செய்தியை தாங்க முடியாமல் குணாவிற்கு பேச்சு அடைத்தது.

ஊரில் உள்ள பெரிய புள்ளிகளில் அவரும் ஒருவர். உதவி என சென்று கேட்டால் தட்டாமல் செய்யும் குணமுடையவர் குணாவின் பள்ளி படிப்பு மொத்தத்தையும் ஏற்று உலகை கண்ணாடி கூண்டிற்கு வெளியில் வைத்து பார்க்க பழக்கியவர் இன்று இல்லை என்னும் பொழுது தாங்கி கொள்ள முடியவில்லை.

“சரி கிளம்பிட்டேன். எப்படி ஆச்சு?” என்றான் மெதுவாக நண்பனின் உணர்ச்சிகள் புரிந்து.

“குளத்துல விழுந்துடுச்சு டா” தடுத்து பார்த்தும் குணாவால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் போக அழுகை வெடித்து கதறியவனை அமர்த்தி வெற்றி தான் சாந்தப்படுத்தினான்.

“நான் பாத்துக்குறேன்டா. நீ கெளம்பி வா”

வெற்றி பேசி முடித்ததும் மனைவியிடம் திரும்பியவன், “பெரிய காரியம் பைரவி” அவள் ஆசையாய் கிளம்ப அந்த ஆசையாய் நிறைவேற்ற முடியவில்லை என வருத்தம் தேவாவுக்கு.

“நான் வரட்டுமாங்க?” தேவாவின் வேதனை அவன் முகத்திலே தெரிய அவன் ஆறுதலுக்கு கேட்டாள்.

“இல்லடா இந்த நேரத்துல உன்ன அங்க கூட்டிட்டு போக எனக்கு மனசு வரல. நான் கிளம்புறேன்” என்றான் அவளை சாந்தப்படுத்தும் சிரிப்பை காட்டி.

கணவன் கை பற்றி, “பாத்து நிதானமா வண்டி ஓட்டுங்க” என்றாள் கலக்கமாக.

“நைட் வந்துடுவேன்” என்றவன் உடனே வெளியில் சென்றிருந்தான்.

Hi how is the chapter?

Comments sollunga plzz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!